சொல் ஒளிரும் பால்வீதி

"சப்தங்கள் அடங்கிய 
			ஒரு காலை மீண்டும் 
			மெல்லப் புலர்ந்தது" - பிறேமினி (-1993)

எனும் இக்கவிதை வரிகள் பிறேமினி தவிர வேறு யாராலும் எழுதப்பட்டிருந்தால் அதில் பெரிய சிறப்பேதுமில்லை. தினமும் எழுதப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான கவிதை வரிகளில் இவையும் ஒன்றாயிருந்திருக்கலாம் - அவை ஒரு போராளிப் பெண் கவிஞரால் எழுதப்பட்டிருக்கவில்லை என்றால். 
	"ஒரு நிழல் என் கவிதை மீது / விழும்போது / நான் அங்கே காண்கிறேன் / ஒரு மங்கலான பிடிவாதமான வெளிச்சம் / வாழ்வு" - எனும் போலந்துக் கவிஞர் ரோஸ்விட்சட் இன் கவிதையும், "கவிதையை சிருஷ்டித்த மனிதர்கள் இறந்துபோன பின் கவிதை இன்னும் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" (‘சமகால உலகக்கவிதை’ - பிரம்மராஜன்) எனும் அவரது வாக்கியமும் நினைவிற்கு வருகிறது - ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பிற்குள் நுழைகையில். 
ஊடறு + விடியல் வெளியீடான ஈழப் பெண் போராளிகளின் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பினைப் படிக்கையில் இன்னமும் இருக்கின்ற இவர்களின் கவிதை, இக்கவிதைகளை எழுதிய போராளிப் பெண்களின் வாழ்க்கை, ஸ்தூல வடிவமாக அப்பெண்கள் நம்மிடையே இல்லையெனும் உண்மை, களமாடித் தம்மைக் காவு தந்த அந்த அர்ப்பணிப்பு, அவர்தம் நம்பிக்கை, பெருமூச்சு, கானல், காதல், விசுவாசம், தோழமை, தியாகம் - அனைத்தும் பேரலைகளாய் நம்முன் எழுகின்றன. இவையனைத்தும் கவிதைகளாகப் பதியப்பட்ட இத்தொகுப்பினைப் பிற கவிதைத் தொகுதிகளைப் போல ‘என்ன இருக்கிறது’ என்பதற்காக வாசித்துவிட முடியாது. அழகியல், உத்திகள், அனுபவமும், அறிவும் பிணைந்த நுட்ப வெளிப்பாடு - இன்னபிற - கவிதையின் இலக்கணத்திற்கான அளவுகோலோடு இவற்றிற்குள் நுழையவோ, துய்க்கவோ, ஆராயவோ முடியாது. ஏனெனில் - அதன் ஒவ்வொரு எழுத்திலும் இரத்தமும், சதையுமான ஒரு போராட்டமும், ஒடுக்கப்பட்ட இனமும், குறிப்பாக இதுவரை அபூர்வமாகவே பெண் பயணித்திருந்த களங்களும், ஒரு கண்ணீர்த் துளியென உறைந்திருக்கிறது. 
போரைத் தாண்டியும், மரணம் கடந்தும், வாழ்வு குறித்த தாகமும், கண்முன்னே கடக்கின்ற கணம் குறித்த கண நேர மகிழ்வுமாய்ப் பல கவிதைகள் பேசுகின்றன. 
"ஆயினும் / ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில் / எனை மறக்கவும் / ஒரு குழந்தையை மென்மையாகத் தாலாட்டவும் / என்னால முடியும்... / எனது மரத்துப் போன கரங்களுள் / பாய்வது துடிப்புள்ள இரத்தம். / வெறும் / இடியும் முழக்கமுமல்ல நான். / நான் இன்னமும் மரணிக்கவில்லை / எப்பொழுதும்! /" எனும் அம்புலியின் (-2004) வார்த்தையில் வாழ்வின் மீதான நேசம் வழிகிறது.
	"எந்த மகனுக்காய் என் / கால்களை நகர்த்த? / நேற்று விதையுண்டு போன / மூத்தவனுக்கா? இல்லை / இப்போதுதான் விதைக்கப்பட்ட என் / இளைய குஞ்சுக்கா? /" எனக் கேட்கும் அ.காந்தாவின் (-2001) வார்த்தையில் வலியும், இயலாமையும் பிழிகின்றன. 
	ஒரு பண்டிகையின் போது தன் கிராமம் ஷெல் வீச்சில் முற்றிலுமாய் இரையானதை, 
	"இங்கேதான் இந்தியன் ஆமி குடியிருந்தது /கதிரை ,மேசை / கதவு, ஜன்னல் எல்லாம் உடைத்து / சப்பாத்தி சுட்டது"/ …… / இந்தியா என்கின்ற இமாலயம் / எங்கள் மனப்பரப்பில் இடிந்து / நொருங்குகின்றது /" எனும் ஆதிலட்சுமியின் (-1998) வரியில் தெறிக்கும் வரலாற்றுப் பெரும் பிழை நெஞ்சில் அறைகின்றது. 
	ஆனையிறவுச் சமரில் குழு ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் சென்று, வீரமரணம் அடைந்த கப்டன் வானதியின் (-1999) இறுதிக்கவிதையான ‘எழுதாத கவிதை’ யினை, வெறும் கவிதையாக மட்டுமே உள்வாங்க முடியுமா என்ன? ஒரு உன்னத லட்சியத்திற்காக தியாகம் செய்த போராளியின், 
	"மீட்கப்பட்ட எம் மண்ணில் / எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் / அவை / உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ / அன்றேல் மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல. / எம் மண்ணில் மறுவாழ்வுக்கு / உங்கள் மனவுறுதி / மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே. / எனவே / எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் /" எனும் வரிகளை அவரற்ற இந்தக் கணத்தில் வாசிக்கையில் கவிதையின் உணர்தல் தளமே வேறாகி, இன்றும் அந்தக் கவிதை எழுதப்படவே இல்லையோ எனும் பெரும் துக்கம் நெஞ்சடைக்கிறது. 
	புரட்சிகா (-2001), கஸ்தூரி (-1989), மலைமகள் (-2001), நாமகள் (-1995), பாரதி (-1993), சுதாமதி (-1998), தூயவள் (-1997) எனப் போராளிப் பெண்கள் பலரின் பெயர்களுக்குப் பின் இருக்கின்ற அடைப்புக் குறிகளில் இருக்கின்ற அவர் தம் இறந்த ஆண்டு குறித்த பதிவு தாண்டி அவர்களுடைய கவிதைகளுக்குள் பயணிப்பதே பெரும் பாடு. பிறந்த தேதி பற்றிய குறிப்பற்று மரணமடைந்த ஆண்டு மட்டுமே அறிந்து கொண்டு எம் தோழிகளை, சகோதரிகளை, சக தொப்பூள் கொடி மனுஷிகளை - அவர் தம் கவி வெளிப்பாட்டை, உணர்வதென்பது, ஒரு (தமிழ்ப்) பெண்ணாகப் பெரும் குற்ற உணர்வைக் கொடுக்கின்றது. பெயரிடாத நட்சத்திரங்களென இப்பால் வீதியெங்கும் வலம் வரும் அவற்றின் பிரகாசம், வாழ்வு மீதான அத்தனை காதலுடனும், மரணம் பற்றிய அச்சமற்றும் இத்தொகுப்பு முழுவதிலுமே ஒளிர்கின்றது. 
	போரும், அதன் அவலமும் பற்றிய பதிவுமட்டுமல்ல இத்தொகுப்பு. போராளியாய்ச் சமர் கற்று, உடல் உறுதியாக்கி, ஆணின் சம பலம் பெற்று, அறிவுச் சுடருடன், ஒரு இலக்கு நிர்ணயித்து, இலட்சியத்திற்காகப் பயணித்த பெண்களின் காதலும், நட்பும், நேசமும், பூரிப்பும், எதிர்பார்ப்பும், போர்ச் சூழலிலும் சற்று ஆசுவாசிக்க முற்படும் இயல்பும், எல்லை காக்கும்போதும் வண்ணத்துப் பூச்சியொன்றினைக் கடைக்கண்ணால் ரசிக்கும் ரசனையும் ததும்பி வழியும் கவிதைகள் நிரம்பியது. "காதலின் புதிய பரிமாணம்" எனும் நாமகளின் பின்வரும் இக்கவிதை, 
	"எப்போதாவது தெருவில் / அவசர இயக்கத்தில் / கண்டுவிட நேர்கையில் / சந்திப்பை வரவேற்பதாய் அவன் கண்கள் / ஒரு முறை விரியும், / மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும். / 	அவனுக்குத் தெரியும் / எனக்கு அது போதுமென்று /" கண்முன் நிறுத்தும் இரத்தமும், சதையுமான பெண் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவளின் சொல் சுமந்து திரியும் நான் இனி ஒரு காதலைச் சுகிக்கையிலும், நேசத்தைப் பகிர்கையிலும் அவளற்று அதிலே மூழ்கமுடியுமா? 
	இக்கவிதைகளைப் படித்த பின்பும் நாம் கடைகளுக்குச் சென்று புதுத் துணிகள் வாங்கலாம்; வயிறு நிறைய விருந்துண்ணலாம்; அன்பானவர்களின் அணைப்பையும், அம்மாக்களின் தாலாட்டையும் அனுபவிக்கலாம்; இசையிலும், கேளிக்கையிலும், கலைகளிலும் மாய்ந்து மாய்ந்து கரைந்து போகலாம் - ஆயின், தொடரும் சுடு நிழலென நம் இனப் பெண்களின் பெருமூச்சும், ஆன்மாவின் தாகமும், நம்மைத் தொடர்ந்து வருவதை,  அவற்றின் கேள்விகளைப் புறந்தள்ளி ஒரு போதும், ஒரு துர்க்கனவற்று நிம்மதியாக உறங்கி விட முடியாது. தனித்திருக்கும் இரவொன்றின் ஏதாவதொரு கணத்தில் பெரும் குற்றவுணர்வுடன் நம்மை அக்கனவு பலி கேட்கும். முழுமனதுடன் அதற்கு ஒப்புக் கொடுக்கும் வரை, அற்பசுகங்களில் திளைத்திருக்கின்ற அற்பமான பெண் நானும் தான்! அந்த அவமானமே இத்தொகுப்பு எனக்களித்த துர்க்கனவு. 
                                                                                 * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *