தனிமைத் தளிர் – சூடாமணியின் சிறு கதைகள் குறித்த ஒரு பார்வை

"எனக்குக் சுயசரிதை இல்லை, அதை நான் எழுத ஆரம்பித்தபோது, என்னையே நான் பார்த்துக் கொள்ள முடியவில்லை" என்றார் பிரஞ்சு சமூக, இலக்கிய விமர்சகர் ஒருவர். ஆனால், சூடாமணியின் இத் தொகுப்பு ஏறக்குறைய அவரது சுயசரிதை போலத்தான். ஒரு பெண்ணாகத் தன் இருப்பு குறித்த தெளிவான புரிதல், சுயநிர்ணயம், குழப்பமற்ற வெளிப்பாடு - இவற்றின் மூலமாகத் தன் படைப்பு வெளியைக் கட்டமைக்கின்ற சூடாமணியின் பாத்திரங்கள் வழியாக - அவைகள் முன்வைக்கின்ற சித்திரங்கள் வாயிலாக வெளிப்படுவர் சூடாமணியே தான். தன்னிலிருந்து தன் ஆன்மாவினையும், புறத்திலிருந்து அது கிரஹிக்கின்ற விஷயங்களின் விளைவினையும், அனுபவங்களின் தனித்தன்மையிலிருந்து, உலகளாவிய பொதுத்தன்மைக்குக் நடத்துகின்ற ஒரு அபூர்வமான படைப்பாளியாகவே இக்கதைகள் சூடாமணியைச் சுட்டுகின்றன.
உலகை உரத்து குரலில் விமர்சித்தவர் அல்ல அவர். பெருத்த மிகையோடு கோஷங்களை முன்வைத்தவர் அல்ல அவர். மாறாக விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தில் நடுத்தர தமிழ்க் குடும்பங்களின் நாளாந்திர வாழ்வை, பெரிய குடும்பங்களின் சிதைவை, மரபுகளின் விடைபெறுதலை வரவேற்று, நவீன மனதின் விகசிப்பை முன்னிறுத்தி, மிக நுணுக்கமான மனோவியலாளாரின் பார்வையோடு, குழந்தைகள், பெண்கள், குடும்பம் - இவற்றானூடகச் சமூகம், முதலியவற்றை மிகக் கூர்மையாகப் பதிவு செய்தவர். அப்பதிவில் கத்தியின் கூர்மையை விடக் கழைக் கூத்தாடியின் லாவகமான, ஊடுபாவும் மனோவியல் சாகஸங்களையே பெரிதும் காணலாம். அதுவே அவரது பலமும் - அவரிடம் என்னை ஈர்த்ததுவுமாகும்.
"கலையின் பணி உலகத்தைப் பற்றி விவரித்துக் கூறுவதல்ல மாறாக, உலகை விமர்சிப்பது, கேள்விக்குள்ளாக்குவதும் மட்டுமே" என்பதை நாமறிவோம். சூடாமணியின் கதைகள் விவரிப்புக்கள் அடங்கியவை - கைதேர்ந்த மனோதத்துவ நிபுணரின் மாயக் கண் அவருக்குக் கை கூடி வந்திருப்பதால் - தமது பாத்திரங்களை, நிகழ்வுகளைச் சித்திரம் போல் விவரிக்கின்ற நேர்த்தி அவருக்கு உண்டு. ஆனால், அதனூடே மிகச் சன்னமான கேள்விகளையும், மிகக் கூர்மையான விமர்சனப் பார்வையையும் சேர்த்தே அவர் முன்வைக்கிறார். குறிப்பாகப், பெண்களும், குழைந்தைகளும், அவர்கள் வாழ்வினுடாக ஆண்கள் மீதான கேள்விகளும் - அவரது அனைத்துக் கதைகளிலும் விரவிக்கிடக்கின்றன.
மிக முக்கிய ஆளுமைகளான இரண்டு பெண்கள் இக்கதைகளைத் தொகுத்திருக்கின்றார்கள். நான் மிகவும் மரியாதை வைத்திருக்கின்ற, எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்களும், அன்பிற்குரிய பேராசிரியர், எழுத்தாளர் கே.பாரதி அவர்களும் - அயர்ச்சியின்றிச் சூடாமணியின் கதைகளைப் படித்து தெரிவு செய்து தொகுப்பது என்பது தரமான இலக்கியப் படைப்பின்பால் இவர்கள் கொண்ட காதலால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. இந்த இரண்டு ஆளுமைகளது ரசனையும், விழுமியங்களும் அவர்களது இந்தப் பணியினுடே வெளிப்பட்டுள்ளது. தெளிவு மிக்க, கலாபூர்வமான, Artistic Sensibility யின் அழகான வெளிப்பாடு அவர்களது முன்னுரை. மூத்த படைப்பாளிகளை முன்னிறுத்துதலும், கெளரவித்தலும், அவநம்பிக்கையும், அவலச்சிதைவும் நிரம்பிய இந்நவீனக் காலக்கட்டத்தில் மிக முக்கியமான பணி என்பதை மட்டுமல்ல, அதனை objectve ஆக, ஒரு படைப்பு அறத்துடன் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் அவர்களது இந்தப் பணி முன்னிற்கிறது. மிகக் சரியான நபராகப் பேராசிரியர் கே.பாரதியைத் தம் அறங்காவலராக இனம் கண்டு கொண்டு இருக்கிறார் சூடாமணி - அவர் தமது 11 கோடி பெறுமான சொத்துக்களைத் தானமாகப் பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எழுதி வைத்திருந்தார் என அறியும் போது, காந்திஜி குறித்து ஐன்ஸ்டீன், "Generations to come will hardly believe that such a creature like this ever walked on earth in flesh in blood" எனும் வாசகமே நினைவிற்கு வருகிறது.
நான் அதிகம் மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார், டிம் ஓ பிரியென் (Tim O'Brien) எனப்படும் அமரிக்க நாவலாசிரியர். ஒரு ராணுவ வீரராகச் சில காலங்கள் வியட்நாமில் கழித்தார். அவருடைய எழுத்து, "போர் பற்றிய உண்மைக் கதையை" சொல்வதன் சாத்தியங்கள், சாத்தியமின்மைகள் மற்றும் உண்மைக்கதையென்பது என்னவாக இருக்கலாம் என்பவற்றுடன் போராடுகிறது. அவரது புகழ்பெற்ற வாசகம் "கதைகளால் நம்மைக் காப்பாற்ற முடியும்".
மொத்தம் 63 கதைகளடங்கிய இத்தொகுதி அதனை நிருபித்துள்ளது. "கதைகளால் நம்மைக் காப்பாற்ற முடியுமென்பதைப்” பெண்கள், குழந்தைகள் (ஆண்கள்) அடங்கிய, தனக்குத் தெரிந்த, தான் வாழ்ந்த ஒரு உலகின் மூலமாக மெய்ப்பிக்கிறார் சூடாமணி.
இன்றைக்கு இங்கு நிகழ்த்து கலையாக நிகழ்த்தப்பட்ட அவரது நான்காம் ஆசிரமம் கதை அன்றைய காலகட்டத்தில், மற்ற பெண் எழுத்தாளர்கள் - அனுத்தமா, லஷ்மி போன்றோர் - தொடாத, மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய கதை.
நான்காம் ஆசிரமம் (1972) என்னும் கதை, 'இலக்கிய சிந்தனை' பரிசு பெற்ற சிறுகதையாகும். "கனவுகள் நிறைந்த கன்னிப் பருவம், உடலின் புதிர்களைத் தேடும் இளமைப் பருவம், அறிவு சார்ந்த தேடலை முன்னிறுத்தும் மூன்றாம் பருவம் என வாழ்வின் பல நிலைகளைக் கடக்கும் ஒரு பெண், மூன்றாம் பருவத்தின் நுகத்தடியில் கிக்கிக்கொள் விரும்பாமல், தன்னை உணரத் தனிமை தேடிப் புறப்படுவதாக எழுதப்பட்டுள்ளது இக்கதை. இன்று கூடப் பலரும் எழுதத் தயங்குன்ற ஒரு கதையை 40 ஆண்டுகளுக்கு முன் சூடாமணி எழுதியிருப்பது வியப்பளிப்பதாய் உள்ளது. 'கலாசார அதிர்ச்சியைப் போதுமான அளவில் இலக்கிய வட்டத்தில் எழுப்பிய கதை என்று இதனைச் சொல்லலாம். கதைகளில் ஒரு பெண் எவ்வாறு படைக்கப்படல் வேண்டும் என்ற மரபான கட்டமைப்புகளை இக்கதையில் சூடாமணி உடைக்கிறார்". என்கிறார் ஆய்வாளர் ப.கல்பனா. அவர் மேலும் சொல்வதாவது: (உயராய்வு 2012:104)
நான்காம் ஆசிரமம் கதையில் வருகிற பெண் (சங்கரி) அத்தகைய விடுதலை பெற்ற வாழ்க்கையையே விரும்புகிறாள். ஆனால் அவள் துறவியல்லை. இது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு. கட்டுகளுக்குள் சிக்காமல் அவற்றிலிருந்து வெளியே செல்ல விரும்பும் பெண்மனம், வாழ்வைக் கொண்டாடும் பெண்மனம் என்ற இரு நிலைகளில் இக்கதாபாத்திரம் வடிவம் பெறுகிறது. உணர்வு நிறைவு, உடல் நிறைவு, சிந்தனை நிறைவு இவற்றோடு சுதந்திரமும் ஒரு பெண் உயிருக்கு அடிப்படைத் தேவை என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.
நீட்சேவைப் படிக்கின்ற ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல சங்கரி அதனை வாழ்விலும் பா£ட்சித்துப் பார்ப்பவள் தான் - "This story one must expect, cuts against the grain of Hindu orthodoxy and promises us some familiar siberationist motifs, among others" என்று "Mirror to Mirror post modernity in South Asian fiction" என்ற நூலின் மூன்றாம் இயலான "How art works" எனும் பகுதியிலும் இக்கதை சுட்டப்படுவதையும் கூடுதலாகப் பதிவு செய்துள்ளார் ஆய்வாளர் ப.கல்பனா. இங்கு "பெண்களும் கதையாளர்களும்" எனும் விவாதத்தில் 1950-2000 கால கட்டத்தின் தமிழ்ச் சிறுகதை குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்தொன்றையும் ப.கல்பனா பதிந்துள்ளதை நான் சுட்டிக்காட்டி எனது மாற்றுக் கருத்தைப் பதிய வைக்க விரும்புகிறேன்.
"உலக அளவிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெண் கதையாளர்கள் புதிய புனைவுலகினை உருவாக்க முயன்றது போலத் தமிழில் சீரிய முயற்சிகள் அதிகம் நடைபெறவில்லை" என்றுரைக்கின்றார். எஸ்.ராமகிருஷ்ணன். மேலும், "வெகுஜனக் கதைகளின் கதையாளர்களுக்குப் போட்டியாகக் கண்ணீர்க் கதைகளை எழுதத் துவங்கிய பெண் கதையாளர்களே அதிகமிருந்தார்கள். பெண்களின் அகவுலகமோ, அவர்களுக்கான எழுத்து முறைகளோ தீவிரமான மனநிலையில் மேற்கொள்ளப் படவேயில்லை. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, கிருத்திகா போன்ற 1950-70களின் கதையாளர்கள் பெண்களுக்கான சமூக உரிமை வேண்டி எதிர்ப்புக் குரலை மட்டுமே எழுப்பியிருக்கிறார்கள். கதை எழுத்தில் தனித்துவம் எதுவும் இவர்களிடத்தில் இல்லை" (எஸ்.ராமகிருஷ்ணன், 2000:174) என்றும் அவர் கருத்துரைக்கின்றார். அம்பை, காவரி ஆகியோரைப்போல, பெண்களின் கதைகளுக்கான தனிமொழியோ கதையாடல்களோ சூடாமணி போன்ற எழுத்தாளர்களிடம் இல்லை, சமூக உரிமை வேண்டி எதிர்ப்புக்குரலை மட்டுமே அவர்கள் எழுப்புகின்றனர்” என்றும் குறிப்பிடுகின்றார்.
"பெண்களின் கதைக்கான தனிமொழி" என்பதன் அளவுகோல் என்ன? ஒருபோதும் கழிவிரக்கம் கோராத, தன் இருப்பை உறுதி செய்து கொள்கின்ற கோபம், பிடிவாதம் இவற்றோடு கூடிய, பெண் நிலை வாதத்தை மிகத் திடமாக வாழ்வியல் பண்பாக முன்னெடுத்த பல பெண்கள் - நான்காம் ஆசிரமம் சங்கரி, சோபனா, சோபனாவின் வாழ்வு - கண்பார்வையற்ற தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகத் திருமணமின்றி, ஒரு ஆண் நண்பரோடு உறவுகொண்டிருக்கின்ற முதிர்கன்னி சோபனா, அரும்பு மீசை மகனது பாலுணர்வை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோமதி "செயலை அதை உந்தும் நோக்கத்தினால் மதிப்பிட வேண்டுமே தவிர, விளைவைக்கொண்டு அல்ல" எனத் தீர்க்கமுடன், தனது சகோதரரின் ஓவியக் கனவிற்கு தான் ஒரு ஊனமுற்ற சகோதரியாகச் சுமையாக இருக்கக் கூடாது என்று இளவயதில் அம்மாவின் மறைவிற்குப் பின் வீட்டை விட்டு ஓடிப்போகின்ற வள்ளி, இப்படி சூடாமணியின் பெண்கள் அழுத்தமாக முன் வைப்பது பெண்நிலைவாதமே! இறப்பிற்குப் பின், மகன் கொள்ளிவைக்கையில் குமைகின்ற கணவனைக் காட்டி விட்டுச் சூடாமணி கேட்கிறார்:
"ஒரு பெண் ஆயுளெல்லாம் கணவனுடையவளாக இருந்துவிட்டு, ஆயுள் முடிந்ததுமே மகனுடையவளாகி விடுகிறாளா? தாம்பத்திய வாழ்வினூடே ஒரு பெண்ணின் அடி உணர்வில் அவளே அறியாமல் தோன்றி மூடிக்கிடக்கும் எதிர்ப்புக்கெல்லாம் பழிவாங்கும் விதமாகக் கடைசியில் கணவனுக்கு அவள் தந்துவிடும் நுட்பமான தண்டனையா இது?" இது ஒரு அழுத்தமான பெண்நிலைவாதக் குரலன்றி வேறென்ன?
அவள் வீடு எனும் கதையில் கணவன் இறந்த பின்பு அவனது வீட்டிற்குத் தங்கச் செல்லும் வாணி வரவேற்கப்படாமலிருக்கையில், வாணியின் கொழுந்தன் குமரன் குரலில், "ஏன் எதுக்குப் போகனும் அவளோட பிறந்த வீட்டிற்கு? செத்தவனோட பந்தம் போகவே போகலேன்னு ஒரு பெண்ணை ஆயுசுக்கும் அலங்கோலமாய் நசுக்கிறாங்களே. அப்போ அந்தப் பந்தத்தைப் புகுந்த வீட்டுக்காரங்க மட்டும் உதறி எறிஞ்சடறது என்ன நியாயம்?" எனச் சூடாமணி கேட்பது பெண்ணியக் குரலில்லையா?
கே.பாரதி சொல்வது போல, "பெண் நிலைவாதம் என்ற சொல்லப்படாமல் பிரபலமாவதற்கு முன்பே பெண் நிலை நோக்கி முற்போக்கான சிந்தனையுடன் நிறைய கதைகள் எழுதியிருக்கின்ற" சூடாமணியிடம், வெறும் எதிர்ப்புக் குரல் மட்டுமல்ல, மிக ஆழமான, வாழ்வின் புரிதலோடு கூடிய சுயப்பிரக்ஞையின் தேர்வும் பெண்களுக்கு உண்டு, வேண்டும் என்கிற பார்வை உண்டு. தனது இளவயதுக் கொழுந்தனோடு அண்ணி தனியே அன்பின் நிமித்தம்
நேசமுடன் வாணி வாழ முடிவெடுப்பது அந்த 50களில் எவ்வளவு பெரிய பாய்ச்சல்? 
இங்கு புதுமைப்பித்தனும் நினைவிற்கு வருகிறார். "பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணிவைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. இவையாவும் கலை உதாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள்" என்று தனக்கே உரிய கேலியும் கிண்டலுமாக காஞ்சனை தொகுப்பு முன்னுரையில் 1943இல் எழுதுகிறார் புதுமைப்பித்தன். (உலக இலக்கிய வாசக சாலை 14) ஆக, எஸ். ராவின் மேற்சொன்ன கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். பெண்களின் கதைகளுக்கான தனிமொழியென எதை, எப்படி வரையறுக்க?
வாழ்நாள் முழுவதும் நெகிழ்வான அன்பை, மனிதர்களாய் அதனை நிபந்தனையின்றிப் பகிர்வதை முன்னிறுத்துவதால் அவரிடம் பெண்ணியக் கதை பாடல்கள் இல்லை எனச் சொல்ல முடியாதல்லவா! 
"மிஸஸ் நடேசன்" என்று தன்னை அழைக்க வேண்டாம், 'சுகந்தி' என்றே தன்னைச் கூப்பிடலாம் என வயதான கணவரைப் பெற்ற சுகந்தி, சமவயது இளைஞன் செந்திலின் பாராட்டிற்குக் கன்னம் சிவப்பதும், பிரத்யேகமா அலங்கரித்துக் கொள்வதும், அவளது உல்லாசமும், கிளுகிளுப்பும் உணர்த்துவது, எவ்வளவு உயிர்த்துடிப்பான, ஜீவிதமான பெண் மனது!
அம்பை இதனைத்தான் தன் 'மனதிற்கினிய தோழி' எனும் கட்டுரையில், "கூச்சலோ கூக்குரலோ இல்லாமல் எந்த விதப் பிரகடனங்களும் இல்லாமல் மெல்லத் தனக்கென இலக்கியத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டாள். சில சமயம் யதார்த்தத்தை மீறி இயங்குபவர்களாத் தோன்றினாலும் தன் கவிதை தோயும் மொழியாலும் அதீத மென் உணர்வுகளையும் எளிதாக வெளிக்கொணரும் தேர்ச்சியாலும் (அப்)பெண்களை பூமியில் கால்களை உறுதியாக ஊன்றி நிற்பவர்களாக்கிக் காட்டியது அவளுக்கே கை வந்த கலை". (உயராய்வு 2012:96) என்கிறார்.
புதுமைப்பித்தன் குறித்து "நீச்சல் குளத்திற்குள் ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக் கொண்டிருப்பது போல" என்று சுரா சொல்வது சூடாமணிக்கும் பொருத்தமே. 50 களில் நிலவிய அக்கால குறுகிய வட்டத்தில், நடுத்தர வாழ்க்கையின் சகல இடுக்குகளையும், லாவகமானதொரு கதை சொல்லும் உத்தியோடு கையாண்டவர் சூடாமணி.
ஆங்கில நாவலாசிரியர் Jane Austin உடன் இவரை ஒப்பிட்டுச் சொல்லி இருப்பார் பேராசிரியர். கா. சிவத்தம்பி. "நுண்ணிய உணர்ச்சி நிலைகளைச் சித்தரித்துக் காட்டுவதில் கைதேர்ந்த இவருடைய கதைகளில் உணர்வு நிலை யதார்த்தபூர்வமான சம்பவத்தினடியாகவே தோன்றும்" என்பது அவரது கருத்து. எனக்கென்னவோ, சூடாமணியின் ஆழ்ந்த மனோதத்துவ நுட்பமும், பார்வையும், அவரைச் சமயங்களில் Virgina Woolf ஒரு ஒட்டிநோக்கிப் பார்க்கவே தூண்டுகிறது. அழுத்தமான பெண்ணியவாதியான வர்ஜினியாவிற்கும் சூடாமணிக்குமான மிகப்பெரிய வேறுபாடு வர்ஜினியா கடுமையான மன அழுத்த நோய்க்கு ஆளாகித், தற்கொலைக்கு அடிக்கடி முயன்று, இறுதியில் அதில் வென்றவர். ஆனால், சூடாமணியோ தனது உடல்நலக் குறையைக் சற்றும் பொருட்படுத்தாத, வாழ்வின் மீது தீராத நேசமும், சக மனிதர்கள் மேல் மாறாத அன்பின் பொழிவும் சுமந்து, மிகக் கண்ணியத்துடன், நிறை வாழ்வு வாழ்ந்தவர்.
ஒரு போதும் சூடாமணியின், "வாழ்க்கை ரொம்ப அருமையான பொருள்னு நான் நினைக்கிறேன் அண்ணி. ஆனா கஷ்டங்களும் தீமைகளும் மரணங்களும் அதைச் சுத்திக்கிட்டே இருக்குது. அதுங்களையெல்லாம் மீறிக்கிட்டு நல்லதை எடுத்துக்க முடியறதுதான் வாழ்க்கைக்கு நாம் காட்டக்கூடிய நன்றி" எனும் அதி அற்புதமான உணர்வை, வர்ஜினியா எழுதிவிட முடியாது. ஆனால், Technique, writing style எனப்படுகின்ற Craft இல், செய்நேர்த்தியில் மனித மனங்களின் இயங்குதலை, அபத்தத்தைப், புதிர்களை இருவருமே மிக அற்புதமாகப் படம் பிடித்தவர்கள்- வர்ஜினாவின் புதினங்களில் வருகின்ற Stream of consciousness, நனவோடை உத்தியின் நேர்த்தியைச் சூடாமணியின் சிறுகதை ஓட்டத்தில் நாம் அவதானிக்க முடியும்.
"வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும்" என்று ஜார்ஜ் லூயி போர்ஹேயைப் பற்றி பிரம்மராஜன் சொல்வது போல, மிகப் பெரிய புரிதல்களை, "நல்லது என்கிறபோது, வாழ்க்கையில் எல்லாத்தையும் விடப் பெரிய நல்லது மனுஷங்க ஒருத்தர்கிட்ட ஒருத்தர் காட்டக்கூடிய பாசமும் அன்பும் தான் எல்லாச் சந்தர்ப்பமுமே கடைசியில் அன்புக்கு ஒரு வியாஜ்யம் தான் - மனித அன்பு என்கிறது வந்தப்புறம் எந்தக் காரணமாய் முதல்லே சம்பந்தம் தோணிச்சு. யாருக்கு யார் என்ன உறவு என்கிறதெல்லாம் அநாவசிமாயிடுது" என ஒரு வாக்கியத்தில், ஒரு கதாபாத்திரத்தில் உட்கார வைத்துவிடுகிறார் சூடாமணி.
1954 துவங்கி 2004 வரை தொடர்ந்து எழுதிய, அவற்றில் 574 சிறுகதைகள் பிரசுரமான சூடாமணியின் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் மனைவிகள், அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள் என்றாலும் அவை அடிப்படையில் ஆதிப்பெண் மனோபாவத்தையுடையவை. அன்பின் நெகிழ்வில் தம்மைப் பறிகொடுப்பதால் மட்டும் அவர்களை சுய இருப்பு அற்றவர்கள், கண்ணீருக்கே நேர்ந்து விடப்பட்டவர்கள், தியாகத்திரு உருவங்கள், ஆண்களுக்கு முழுவதுமாய் அடிபணிந்து போகிறவர்கள் என்று நாம் முத்திரை குத்தி விடமுடியாது. அவை மேம்போக்காகப் 'பெண்மைத் தன்மை' உடைய கதைமாந்தர்களாகத் தெரிந்தாலும் அடிப்படையில் பெண்ணிய நிலைப்பாடு கொண்ட, பெண் நிலை வாதம் பேசுகின்ற, பொதுவான ஆண்மையைக் கருத்தைக் கேள்வி கேட்கின்ற நுட்பம் வாய்ந்தவர்களே.
மன்னிப்புக்காக எனும் சிறுகதையில் வருகின்ற "அவளும் நானுமாக இருக்கும்போது நாங்கள் அன்பர்கள் மட்டுமல்ல - இரு நண்பர்கள். அதைவிட முக்கியமாக, இரு மனிதர்கள்" என்கின்ற வரிகள் முன்வைக்கின்ற மனிதமே அந்தப் பெண்கள் - அவர்களது உலகம் - அவர்களது சிரிப்பு - அவர்களது கண்ணீர் - அவர்களது அறம்.
பெருமையின் முடிவில் என்றொரு கதை - பிறந்த வீட்டாரோடு கணவனின் கட்டளைக்கு இணங்கிப் பல வருடங்களாத் தன்னைத் துண்டித்துக் கொண்ட விமலை, தனது தம்பி வேலுவின் மரணச் செய்தி அறிந்தும், தனது கணவனுடன் அதனைப் பகிராமல் கடைசிவரை, தனக்கு மறுக்கப்பட்ட அந்த பக்கத்தைக் கணவனுக்கு காட்டாமல் வைராக்கியமாக, ஒன்றுமே நடவாதது போலக் கணவனோடு சகஜமாக உரையாடி, இயல்பாக இருக்கிறாள் - அந்த மறைப்பு ஒன்றையே தனக்கு எஞ்சிய தன்மானமாகக் கடைப்பிடித்திருக்கிறாள் எனத் திடீரென உணர்ந்த கணவருக்குத் தன் மடமை புரிகிறது. அவரது அந்த பரிதாப நிலை குறித்துச் சூடாமணி "எத்தகைய ஏழை அவர்! அவளது முழுமையைத் தமக்கு வேண்டாம் என்று உதறிவிட்ட பரம ஏழை!" என்கிறார்.
'தெற்கத்தி இடைவெட்டு' என்று அழைக்கப்படுகின்ற கெளரியம்மாள் எனும் மேதையின் மனைவி கதையில் கெளரி சொல்கின்ற நெத்தியடி வாசங்கள் பின்வருபவை:
"அந்த அனுபவங்கள் யாவுமே அவளுடைய ரககிய நகரம். அவரை நினைக்கும் போதெல்லாம் எழும் ஆத்திரம். வசமிழந்த அன்பு, ஒரு மனைவியின் பொறாமை, கணக்கற்ற பெண்களிடம் வெறுப்பு.." இத்தனையும் கொண்ட, உணர்ந்த கெளரியம்மாள் அந்த மேதையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கேட்பவர்களிடம், "மேதைகளை அவளோட தெய்வீகமான நேரங்களை மட்டும் வச்சுத்தான் மதிப்பிடனும். அந்த நேரங்கள்தான் அவாளுடைய நிஜமான வாழ்க்கை, நிஜமான அர்த்தம். அவா உலகத்தில் வந்து போறதுக்கு ஒரு நியாயமே மத்தவாகிட்ட இருந்து அவாளத் தனிமைப்படுத்திக் காட்டற அந்த வெளிச்சமான நேரங்கள் தான். மத்த நேரங்களைப் பத்தி நாம் கவலைப்பட வேணாம்". என்கிறார் மிகத் தெளிவாக.
இந்திய உரைநடை இலக்கியத்தின் மேதைகள் என்று மூன்று பேரை மதிப்பிட வேண்டுமானால் அவர்களில் ஒருவராக மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் இருப்பார். தன் வாழ்நாளில்கணிசமான பகுதியை மன நோயாளியாக மனநோய் மருத்துவமனையில் கழித்த பஷீர் இலக்கியம் படைப்பதன் மூலம் வாழ்வின் உண்மைகளைத் தேடினார் என்றுதான் சொல்ல வேண்டும். (உலக இலக்கிய வாசக சாலை 1) அவருடைய பால்யசஹி எனும் புதினத்தில் எனக்குப் பிடித்த மறக்க முடியாத வரி ஒன்று உண்டு.
மஜீதினுடைய இளம்பருவத்துத் தோழி சுஹரா. சிறுவயதில் இவர்கள் நட்பு மாமரத்திலிருந்து விழும் மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்ற சண்டையில் ஆரம்பமாகிறது. அப்போதெல்லாம் தன் கையில் இருக்கும் கூர்மையான நகங்களால் சுஹரா பிறாண்டி விடுவாள். மஜீதின் கனவுகளில் அவன் ராஜ குமாரனாக இருக்கும்போது சுஹராதான் அரசகுமாரி. பிறகு அரசகுமாரி பிறாண்டக் கூடாது என்ற விதி முறையினால் மஜீத் தப்பிக்கிறான்.
"ஒன்றும் ஒன்றும் எத்தனைடா?" என்று கணக்கு ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மஜீத் சொல்லும் பதில் நாவலில் பல இடங்களில் சுஹராவால் கிண்டல் செய்யப்படுகிறது. 'இரண்டு சிறு நதிகள் ஒன்றாகஸ் சேறும்போது சற்றே பருமனான பெரிய நதியாக உருவெடுக்கிறது' என்பது மஜீதின் நினைவுக்கு வரவே அவன் பதில் சொல்கிறான். "கொஞ்சம் பெரிய ஒன்று" (உலக இலக்கிய வாசக சாலை 2)
இதனைத் தூக்கிச் சாப்பிடுகின்ற, என் மனதில் என்றென்றும் நிற்கும்படியான, முன்னோடியான ஒரு வாசகத்தைக் கெளரியம்மாள் மிக அநாயமாகக் சொல்கிறாள்:
"ஒருத்தன் சராசரிக்கு மேல் உயர்ந்து மேம்பட்டவனாய் இருந்தால் அந்தரங்கங்களை வச்சுக்கிற உரிமை அவனுக்குப் பறி போயிடுமா? அவனுடைய பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், சுக துக்கங்கள், எல்லாமே பொதுச் சொத்தாயிடுமா? சிறப்புக்குத் தண்டனையா?" என்று கேட்டு விட்டு இன்னொரு கேள்வியும் கேட்கிறாள் - "சாதாரணம், அசாதாரணத்தை இப்படித்தான் பழிவாங்குமா?" இவ்வாக்கியம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது!
உலக இலக்கியத்தில் சிறந்த நாவல் ஆசிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்று பார்த்தால் பத்துப் பேருக்குமேல் இல்லை என்பதுதான் உண்மை. 'சிறுகதை' அவ்வளவு கடினமான, ஆழமான வடிவம்.
கடவுள் மீது ஆணையாக என்ற சிறுகதை மாண்ட்டோவின் அற்புதமான ஒரு சிறுகதை. மிகவும் உருக்கமான சிறு காவியம். இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட காலத்தில் ஒரு கிழவி பைத்தியம் பிடித்தவள் போல அழகான தன் மகளைத்தேடி அலைகிறாள். முதலில் ஒரு அதிகாரி அவளிடம், 'உன் மகள் கொல்லப்பட்டிருக்கலாம்' என்கிறார். தாய் நம்பவில்லை. சில மாதங்கள் கழித்து அதே அதிகாரி மீண்டும் அந்தத்தாயை சந்திக்கிறார். இன்னும் மோசமான நிலையில் தாய் - "உன் மகள் செத்துப்போய்விட்டாள்" என்று சொல்கிறார் அவர். தாய் நம்பவில்லை. மூன்றாவது தடவையாக அந்தத் தாயை அந்த அதிகாரி சந்திக்கும்போது அவள் தன் மகளைப் பார்த்து விடுகிறாள். ஆனால் மகளோ தன் தாயைப்பார்த்ததும், "வா இந்த இடத்தை விட்டு போயிடலாம்" என்று உடனிருந்த சீக்கிய இளைஞனோடு போய்விடுகிறாள். அந்த அதிகாரி அந்தத் தாயிடம், "கடவுள் மீது ஆணையாகச் சொல்கிறேன். உங்க பொண்ணு செத்துட்டா" என்று சொல்கிறார். அதைக்கேட்டு அந்தக் கிழவி ஒரு குவியலாக வீதியில் விழுந்தாள் - என்று கதை முடிகிறது.
இதனைப் போன்ற, ஆனால் இன்னும் உறுதியான, நிபந்தனையற்ற தாய்மையை முன்னிறுத்துகின்ற பாகீரதியை யோகம் சிறுகதையில் படம்பிடிக்கிறார் சூடாமணி. வயதானாலும், வளர்ந்த பிள்ளைகளிலிருந்தாலும் ஒரு வீட்டின் சமையல்காரியாய் உழைத்து சம்பாதிக்க வேண்டிய நிலையிலிருக்கின்ற பாகீரதி, அந்த நிலையிலும், தனது பணதிற்காக வெகு காலத்திற்கும் பிறகு தன்னை தேடி வருகின்ற மகனுக்கு, மனம் கோணாமல் தனது சம்பளப் பணத்தைத் தருகிறாள். "ஏன், இப்படி" எனக் கேட்கிற செல்லத்திடம், நம்மைக் காப்பாற்ற "நம் எல்லாரையும் பெற்ற ஜெகன்மாதா இல்லையா?" என்கிறாள். ஆனால், கதை அதோடு முடியவில்லை- "அந்த ஜெகன்மாதா காப்பாற்றுவாளா? எனும் சூடாமணியின் கேள்வியோடு முடிகிறது. கடவுளின் இருப்பை இதுபோலவே நாமாவளி எனும் கதையிலும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
பத்திரிக்கைப் பிரபலம், பேட்டிகள், விற்பனைகளை மேம்படுத்தும் நோக்கில் பெருவாரியான ஜனரங்கமான வாசகர் வட்டம் - இவற்றையெல்லாம் மிகக் கவனமாகத் தவிர்த்தவர் சூடாமணி. "வீடுகளுக்கும், தெருக்களுக்கும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடல்கள் இவரது கதைகள். அவை அசட்டு லட்சியங்கள் பேசாத அறவலு கொண்ட நவீன நீதிக்கதைகள் என்கிறார் சங்கராமசுப்ரமண்யன்.
பல பழைய மரபுகள் விடைபெறுவதை இவரது பெரும்பாலன கதைகள் நிலைக்களனாகக் கொண்டிருந்தாலும், அவை பற்றிய பெருமிதமான புலம்பல்கள், Nostalgia, வறட்டு கெளரவங்கள் கொஞ்சமும் அற்றவை இவரது எழுத்துக்கள். மாறாக பொதுவிதி மீறலையும், கடவுள், விதி, சடங்கு, சம்பிரதாயம், கட்டுப்பெட்டி மனப்பான்மை, பொதுப்புத்தி பெண்மை வாதம் - இவற்றைத் தகர்ப்பவை இவரது கதாபாத்திரங்கள்.
சூடாமணியினை அவரது சமகால படைப்பாளிகளிடமிருந்து தனித்து நிற்கச் செய்பவை - குழந்தைகள் குறித்த அவரது சிறுகதைகள். பலரும் கவனிக்க விரும்பாத அல்லது கவனிக்கத் தவறிய குழந்தைகளின் தனிப்பட்ட மனோவுலகில் மிக இலகுவாக, அவர்களுக்குச் சமமாக, அவர்களது உணர்வுகள், உரையாடல்கள் இவற்றூடாகச் சுலபமாக ஒன்ற முடிகிறது சூடாமணிக்கு! சான்றாகத் தொகுப்பில் இருக்கின்ற நோன்பின் பலன், இரண்டின் இடையில், அந்த நேரம் உள்ளிட்ட பல கதைகளைச் சுட்டலாம். வெகுளித்தன்மை மட்டுமல்ல, குரோதம், வன்மம் இவையெல்லாம் குழந்தமையின் அம்சங்களே என்பவை இக்கதைகள்.
மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒரு கூறு - இக்கதைகளில் எவ்விடத்திலும், ஒரு கதாபாத்திரத்தின் குரலாகத், தன்னை வெளிப்படுத்துகையில், மேல்தட்டுப் பார்வையை அவர் வெளிப்படுத்தியதே இல்லை.
செல்வம், கல்வி வளம், அரவணைப்பான குடும்பச் சூழல் இவை எல்லாவற்றிலும் துய்த்த, கலாபூர்வமான ஒரு உயிர் ஒரு போதும் தன்னை ஒரு உயரத்தில் உயர்த்திக் கொண்டதில்லை. மாறாக மனிதர்கள் மீது கரிசனமும், அன்பைப் பகிர்தலும், நெகிழ்ந்து நிற்பதுவுதுமான ஒரு வாழ்க்கையை யாசித்தபடி, கொடுத்தபடியே இருக்கிறது. வாழ்வின் தரிசனம் கண்ட ஒரு நிறைவான பூரணத்தன்மையின் கனிவில் ஒளிர்கிறது இவர்தம் வாழ்வும், படைப்புக்களும்.
அறிவுசார் பார்வையை, நியாயத்தை இவர் முன்வைப்பதாகவே பின் வரும் இவரது கூற்று நமக்குக் சுட்டுகிறது - இது பெரிது எனும் கதையில் சூடாமணியின் கூற்று:
"அன்பு எல்லா இடங்களுக்கும் படர முடியாது. அது சிறு பொருள். ஆனால், நியாயம் என்பது உலகம் முழுவதற்கும் ஒரே நெறியாய் விஷ்வரூபம் எடுத்து வியாபிக்க முடியுமே! அது, படைப்புக்கெல்லாம் பொதுவான தாய்ப்பாசத்தைப் போல் வெறும் நுண்ணுனர்வல்ல. அது ஊனிலிருந்து பிறப்பதல்ல. நியாய உணர்வு என்பது ஊனின் குறுகல் அனைத்தையும் தாண்டிய பெருக்கம். பண்பட்ட அறிவில் தோன்றும் தலையாய லட்சியங்களின் சாரம். மானிடத்தின் பாற்கடலினின்று எழுகின்ற அமுதம்". ஆனால், திருமதி. சீதாவும், கே. பாரதியும் சொல்வது போல - சூடாமணியின் படைப்பை நகர்த்துவது வெறும் நியாய உணர்வு அல்ல - நிபந்தனைகளற்ற அன்பு - மானுடத்தின் பேரில் கொண்ட ஆழ்ந்த நேசம் என்பதே உண்மை.
"நாப்பத்தஞ்சு வயசுல ஒருத்தி பாட்டியாகலாம் அருண்! கிழவியாக முடியாது" என்று மாமி அருணின் அம்மாவிற்காக வாதாடுகையில் சூடாமணி "துகள் செய்து கிடத்துவள் தாய்" என்றாலும் அவளொரு தனிமனுஷியே என்பதைச் சொல்கையில், மிகச் கறாரான பெண்நிலைவாதியாகவும் வெளிப்படுகிறார்.
அடிக்கடி வருகிறான் எனும் கதையில் மகளுக்கு மாப்பிள்ளையாக வருபவள் என நினைத்த முகுந்த், தன்னை விரும்புவதை, மேலுக்கு வெறுத்தபடி அவன் கொடுத்த புத்தகத்தை விட்டெறியும் 43 வயது கஸ்தூரியின் விரல்கள் அதனைக் கடைசியில் மெல்லத் தடவிக் கொண்டிருப்பதை சொல்லிவிட்டு.
"நீர் ததும்பும் விழிகளைக் கஸ்தூரி மூடிக்கொண்டாள் தன் இதழ்கள் புன்னகை செய்து கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது", எனச் சூடாமணி முடிக்கும்போது, நியாயங்களை விட நிபந்தனையற்ற அன்பின் நேர்வழியே அவர் பயணப்பட்டிருப்பது துலங்கும்.
"நான் ஒரு கதையை வாகிக்கும் போது அதில் நான் அனுபவிப்பது அதன் உள்ளடக்கத்தையோ, வடிவத்தையோ அல்ல - அதில் உள்ள என்னச் சிராய்த்துக்கொண்டு போகும் ஒரு அம்சத்தை மட்டுமே நான் ரசிக்கிறேன்" - என்பார் பின் நவீனத்துவ விமர்சகர் ரோலாண்ட் பார்த்.
சூடாமணியின் சிறுகதைகளில் என்னை அப்படிச் சிராய்த்த அம்சங்கள் ஏராளம். கனத்த குரலற்று, சரிகை வேலைப்பாடுகளின் பகட்டற்று, மிருதுவான இசையெனவும், சட்டென்று சீறும் கருநாகத்தின் மயிர்க் கூச்செறியும் ஒற்றைக் கேள்வித் தீயெனவும் - அந்த அம்சங்கள் என்னைச் சிராய்த்த இந்த இருபது நாட்களும் மிக அர்த்தபூர்வமானவை. ஒரு படைப்பாளியை, இந்த இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் இயங்கிய மிக முக்கியமானதொரு பெண் மனதை, நான் உணர்ந்து துய்த்தபின் உங்களுக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு வாசகம் மட்டுமே எனக்குள்ளது - தன் வாழ்க்கை போலவே தன் படைப்புக்களிலும் கம்பீரத்துடன், சமரசமற்று வாழ்ந்து, அன்பின் சுடரைப் பேதமின்றி ஏற்றிய அகல் விளக்கு - ஒரு அபூர்வ மனுஷி -சூடாமணி.

                                                                           * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *