தி.மு.க சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் – 25.01.2010

25.01.2010 அன்று,  தஞ்சாவூர் - கொண்டிராஜபாளையத்தில்,
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் தனி மனிதர் அல்லர், தமிழ் இனம் முழுமையும் பற்றிக்கொள்ள வேண்டிய தத்துவம். தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெறுவதுற்கும், இயங்குவதற்குமான அடையாளம்.
யாரும் அறியா வைகறை இருளில் முதல் ஒளியாய் அதிகாலையில் எழுந்து, எழுது கோல் எடுத்துக் கொண்டு, ஒரு இனத்தின் விடியலுக்காக தினமும் எழுதிக் கொண்டிருக்கிற தமிழினத்தின் ஒரே தலைவர், என்றென்றைக்கும் எங்களுடைய இதயங்களில் வாழ்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய முதல் வணக்கம். """"புண்படா உடம்பும், புரை படா மனமும், பொய்படா ஒழுக்கமும் பொருந்தி, கண்படா இரவும் பகலும், நின்னையே கருத்தினில் வைத்து ஏத்துதற்கு  இசைந்தேன்; உண்பனே எனினும், உடுப்பனே எனினும், உலகரை நம்பிலேன்; எனது ஒரே தலைவா, நலஞ்சார் பண்பரே உனையே நம்பினேன்!"" என்று தலைவர் கலைஞர் அவர்களை எக்காலமும் நம்பிக் கொண்டிருக்கிற, தஞ்சை நகரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று சிறப்புரை வழங்கி அமர்ந்திருக்கிற என்னுடைய தமையனார்அனைய மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அவர்களே, வரவேற்புரையாற்றியிருக்கின்ற மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு. கணேசமூர்த்தி அவர்களே, முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிற திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை.சந்திரசேகரன் அவர்களே, திரு.கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர் அவர்களே, நகர்மன்றத் தலைவி தேன்மொழி ஜெயபால் அவர்களே, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சிவஞானம் அவர்களே, திரு.சி.இறைவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்களே, மாவட்ட வேளாண்மைக் குழு தலைவர் செல்வம் அவர்களே, மொழிக் காவலர்களாக இங்கே அமர்ந்திருக்கிற, என்னை அன்போடு வாழ்த்திய மொழிப்போர் தியாகிகளே, எனக்கு முன்பாக இங்கே உரையாற்றிய தலைமை கழக பேச்சாளர் குமரி. இராபி அவர்களே, மாவட்ட பொறுப்பாளர்களே, நகர்மன்ற உறுப்பினர்களே, நன்றியுரை வழங்க இருக்கிற மெடிக்கல் ராஜா, மணிவண்ணன் அவர்களே, எனக்கு முன்னால் இங்கே குழுமியிருக்கிற இயக்கத்தின் உடன் பிறப்புகளே, மயில் போல் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் உறுதியான எண்ணத்தோடு வருகை தந்திருக்கிற எனது அருமை தாய்மார்களே, பெரியோர்களே, தஞ்சை நகர பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். 
இந்த முன்னிரவுப் பொழுதில், இந்த தஞ்சை மண்ணில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திலே பேசும் பொழுதிலே எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிய, இந்த இயக்கத்தை தன் சுவாசக் காற்றாக கடைசி வரை நெஞ்சிலே சுமந்திருந்த என்னுடைய தந்தையார் தங்கபாண்டியன் அவர்களை நான் என் நெஞ்சில் நிறுத்துகிறேன். இந்த பகுதியில் மிகப்பெரிய தூணாக இந்த இயக்கத்தை கட்டிக்காத்த பெரியவர் மன்னை அவர்களை பெருமையோடு நான் நினைவு கூறுகிறேன். அதோடு மட்டுமல்ல, இன்றைக்கு, இந்த விழாவிலே எனக்கு முன்பாகப் பேசி அமர்ந்திருக்கிற குமரி. இராபி அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகளைச் சொல்லி என்னுடைய உரையை ஆரம்பிக்கிறேன். திருவாரூரில் பிறந்தவர்களுக்கும், சிதம்பரம் நடராஜரை தரிசித்தவர்களுக்கும், காசியில் இறந்தவர்களுக்கும் முக்தி கிடைக்குமென்று சொல்லப்படுவது உண்டு. எங்களுக்கு முக்தி மீதும், பக்தி மீதும் நம்பிக்கை கிடையாது. ஆனால், திருவாரூரில் பிறந்தவர் மீது எங்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு. நம்பிக்கையோடு அதிமுகவிலிருந்து, திமுகவிற்கு வந்திருக்கிறேன் என்று அவர் பேசினார். எங்கள் தலைவர் என்றென்றைக்கும் உங்களை கைவிடமாட்டார்  என்று நான் சொல்லிக் கொள்கிறேன். ஆறு வித்தியாசங்கள் என்று பத்திரிகையில் படம் போடுவது போல் அதிமுகவிற்கும், திராவிட முன்னேற்ற கழகமான எங்களது இயக்கத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களைச் சுட்டினால், சொல்லிக் கொண்டே போனால், ஆயிரமாயிரம் வித்தியாசங்கள் இரண்டிற்கும் உண்டு. நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த மொழிப் புரட்சியை இங்கே எனக்கு முன்பு பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். தமிழ்நாடு என்ற பெயரை மொழிக்காக கட்டிக் காத்த பெருமை நமக்குண்டு.  தமிழ்நாடு என்று பெயர் வைக்கலாமா? அல்லது கூடாதா?  என்கிற விவாதம் சட்டமன்றத்திலே வந்த போது, சிலப்பதிகாரத்திலே "இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்" என்ற குறிப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவது சாலச் சிறந்தது என்பதை சுட்டிக் காட்டியவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள். 
இந்த தஞ்சை மண்ணிலே, இந்த வீரவணக்க நாள் கூட்டத்திலே, வீர வணக்கம் என்றால் என்ன? மொழிக்காக உயிர் நீத்தவர்களின் தியாக வரலாறு என்ன? என்பதை நினைவுபடுத்தி, உங்கள் முன்னால் நிற்கும்போது எனக்கு இரண்டு வித பெருமித உணர்வுடன் கூடிய மனோநிலை தோன்றுகிறது. ஒன்று, எத்தகைய மண்ணில் நான் இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பது! பூமிப் பந்தின் மீது இயற்கை அன்னையின் கொடையாக ஓடுகிற ஆற்று நீரைத் தேக்கி, அணை கட்டி வறட்சியைப் போக்கலாம் என எடுத்துக்காட்டி, உலக வரலாற்றிலே, அவனியெல்லாம் போற்றுகிற அடையாளமாக முதல்முதலாக அணை கட்டிய கரிகாற் பெருவளத்தானும், மாமன்னன் ராஜராஜனும் தோன்றிய மண் இந்த மண். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டிடக் கலையில், தமிழன் உலகின் எந்த இனத்திற்கும் தலை தாழ்ந்தவன் அல்ல என்பதை நினைவுபடுத்தும் வகையில், அற்புதமாக பெரிய கோவிலை நிர்மாணித்திருக்கிற நகரம் இந்த தஞ்சை நகரம். இன்றைக்கும், இந்த கோபுரத்தின் விமானம் என்பது 80 டன் எடையுள்ளது என்பதை உலகோர் பிரமிப்புடன் நோக்குகின்றார்கள். கங்கைகொண்டான், கடாரம் வென்றான் என்ற பெருமையைக் கொண்ட ராஜேந்திரசோழன் தோன்றிய மண் இது. இந்த தஞ்சை சரஸ்வதி மஹாலின் கண்காட்சியகத்திலே இருக்கின்ற ஓலைச் சுவடிகள் தலைசிறந்தவை. அரிய பொக்கிஷங்கள். அங்கே இருக்கிற ஓவியங்கள் தாமரை இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறுகளில் இருந்து மட்டுமே வரையப்பட்டவை என்பது ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்பட வைக்கிறது. அது மட்டுமல்ல, செம்மொழி அந்தஸ்து பெற்றிருக்கின்ற தமிழுக்கு என்று தனி பல்கலைக்கழகம், உலகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது இந்த தஞ்சை மண்ணில் மட்டும்தான். சோழ நாடு சோறுடைத்து எனும் முதுமொழிக்கு ஏற்ப, இன்றும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் இந்த தஞ்சை மண்தான். தஞ்சை என்றால் தட்டு, பாரம்பரியம் மிக்க தலையாட்டி பொம்மைகள் என்று பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். 
ஆனால் தோழர்களே, அத்தனைக்கும் மேலாக உலகப் புகழ் பெற்ற கீர்த்தி ஒன்று இந்த மண்ணுக்கு உண்டு. முதன்முதலில் நிலவிலே ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைக்கும்போது ஒரு வாசகத்தைச் சொன்னார். "இது மனிதனுக்கு ஒரு சிறிய காலடிதான் - ஆனால் மனித குலத்திற்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்"" என்பதே அது.  மனித குலத்தின் பாய்ச்சல் என்று அவன் சொன்னது போல் ஒரு நிகழ்வு இந்த பூமியில் நடைபெற்றிருக்கிறது.  தமிழர்களுக்கு தலைவர் கலைஞர் அவர்களைக் கொடுத்திருக்கிற பூமி  இந்த புண்ணிய பூமிதான். ஒரு மிகப் பெரிய பாய்ச்சலாக, தமிழினத்திற்கு மிகப் பெரிய பாய்ச்சலாகத் திகழ்ந்த தங்கத் தலைவனை பெற்ற பூமி இந்த பூமிதான். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த பூமியில், இன்று வீரவணக்கம் செலுத்துவது எனக்கும் பெரும் பெருமை. அது மட்டுமல்ல நண்பர்களே,  அதுவரை தஞ்சை காங்கிரசின் கோட்டை என்று இருந்த நிலையை மாற்றி, இந்த தஞ்சை பூமிதான் நமது தலைவர் கலைஞரை சட்டமன்றத்திற்கு அனுப்பி பெருமைப்பட்டது. 1962-ல் அந்த வெற்றி நிகழ்ந்தது. 1972ல் ராஜராஜன் திருவுருவச் சிலையை பெரிய உடையார் கோவிலில் தலைவர் திறந்து வைத்தார். இந்த தஞ்சை நகரம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலே சோதனை வந்தபொழுது திருப்புமுனையாகவும் இருந்திருக்கிறது. மிக முக்கியமாக கழகத்திற்கும், கழக சின்னத்திற்கும், கழக கொடிக்கும் உரிமை கொண்டாடி வைகோ வழக்குமன்றம் சென்றபோது, துரோகத்தின் ஈட்டி பாய்ந்து தலைவர் கலைஞர் துயரம் உற்றபோது, அவருக்கு அரணாக, ஆறுதலாக இருந்து, 1993ம் ஆண்டு பொதுக் குழு கூட்டி இந்த இயக்கத்தைப் பாதுகாத்த சிறப்பு மிக்க மண் இது. 1994ம் ஆண்டு, தேர்தல் ஆணையம் தலைவர் கலைஞர் அவர்களும், அவர் தம் வழி நடப்பவர்களும்தான் உண்மையான திமுக என்கின்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆணையினைப் பிறப்பித்தது. இது குறித்து தன்னுடைய நெஞ்சுக்கு நீதி நான்காம் பாகத்தில் 501 வது பக்கத்தில், உயர்வாகப் பெருமிதத்தோடு தலைவர் கலைஞர் குறிப்பிடுகிறார், "வானிலே உயர்கின்றான் உதயசூரியன் வாழ்க நன்றே" என ஆடிப்பாடும் நாள் இந்நாள் என்று சொல்லியிருக்கிறார். அத்தனை பெருமையுடைய இந்த தஞ்சை நகரில், நான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்பது எனக்கு இன்னுமொரு பெருமை. நினைவுபடுத்திப் பார்க்கிறேன், இந்த நகரத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் உள்ள உறவை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய வாழ்வில் இம்மாவட்டம் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை. உங்களுக்கெல்லாம் தெரியும் திருவாரூரில் இருந்து 24 மைல் தொலைவில் இருக்கிற திருக்கோளியி என்கிற திருக்குவளையிலே தலைவர் பிறந்தார்.  அவர் பிறந்த 1924ம் ஆண்டு, மாவீரன் லெனின் மறைந்த ஆண்டு. டிராட்ஸ்கிய சித்தாந்தம், அதாவது இரத்தப் புரட்சி கைவிடப்பட்ட காலம். அந்த ஆண்டுதான் மைசூருக்கும், தமிழகத்திற்கும் காவிரியில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்றும் தன்னுடைய நெஞ்சுக்கு நீதியில் தலைவர் குறிப்பிடுகின்றார். அவருடைய தந்தை முத்துவேலனார் அவர்களை நாம் அனைவரும் அறிவோம் அத்தகைய மாணிக்கத்தை நமக்கு பெற்றுத்தந்த அந்த பெரியவர் முத்துவேலனார் அவர்கள் சிறந்த வித்வான். கவி எழுதும் ஆற்றல் பெற்றவர்.  வடமொழிக் கிரந்தங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களிலே நடைபெறுகின்ற உண்மையான நிகழ்ச்சிகளை வைத்து பல்வேறு கதைகளாக அவர் எழுதியிருக்கிறார். கிராமிய மெட்டுக்களில் அவர் இயற்றிய கேலிப் பாடல்கள் இன்றும் திருக்குவளையில் பலரால் பாடப்படுகின்றது என்பது என்போன்ற இளைய தலைமுறையினருக்கும், இன்பம் அளிக்கிற செய்தி. அந்தப் பெருமகனார் பெற்றெடுத்த தலைவர் கலைஞர் அவர்கள் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் என்பது வரலாற்றிலே பதியப்பட்டிருக்கிற ஒன்று. 
ஆனால், இந்த மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் 
இந்த இடத்தில், மொழிப் போராட்டத்திலே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே தஞ்சை மாவட்டத்தில் பிறந்த தலைவர் அவர்கள், இந்த மண்ணிலே எத்தகைய போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டும். 1938ல் தஞ்சை மண்ணிலே பிறந்த பட்டுக்கோட்டை அழகிரி தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக திருச்சியிலிருந்து சென்னை வரை நடந்தே பேரணி மேற்கொண்டவர். பேரறிஞர் அண்ணாவால் "சொற்செல்வர், சோர்வற்ற உழைப்பாளி, அறியாமை என்னும் இருளை அகற்ற அஞ்சா நெஞ்சத்தோடு அவனி சுற்றி வந்த ஆண்மையாளன்" என்று பாராட்டப்பட்டவர் அவர். அவரது தலைமையிலே, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மணவை திருமலைசாமி முதலியோர் ஊர்வலமாகச் செல்கின்றனர். அந்த ஊர்வலத்தை திருக்குவளையிலே 14 வயதுடைய நம்முடைய தலைவர் அவர்கள் பார்க்கிறார். ஊர்வலம் போகிற இடங்களிலெல்லாம் எதிரணியின் எதிர்ப்பு மிகத் தீவிரமாக இருந்தது. சில இடங்களிலே கல்லடி, பல இடங்களிலே சொல்லடி, இன்னும் பல இடங்களிலே செருப்புக்களை கூடத் தோரணமாக கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். எதற்கும் அஞ்சாத பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் அந்த தோரணங்களின் அடியில் நின்று அஞ்சாமல் பேசுகிறார். தோரணங்களை கட்டியவர்கள் மனம் மாறுகிறார்கள். மன்னிப்பு கேட்கிறார்கள். மாலை அணிவிக்கிறார்கள். இதை பார்த்துக்கொண்டே இருக்கிறார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். உடனே தன்னுடைய ஊருக்குச் செல்கிறார், அங்கே மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்துகிறார். அதற்கு முன்பாக, மாணவர்கள் ஊர்வலம் என்பது நடைபெற்ற ஒன்றுதான். ஆனால், அப்பொழுதெல்லாம் தமிழ் கொடி பிடித்து தமிழ் வாழ்க! என்கிற கோஷத்தோடு மட்டும் தான் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் அந்த மாணவர்கள் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றபோது என்ன நடந்தது தெரியுமா? தமிழ் தாயின் படம் வரைந்து, அந்த தாயின் நெஞ்சிலே ராஜாஜி இந்தி என்கிற ஒரு கத்தியை எடுத்து குத்துவது போல் ஒரு படம் வரைந்து எடுத்துச் செல்கிறார்கள். இந்த மாற்றம் ஏற்பட்டது 
14 வயது சிறுவனாக, பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய குன்றாத கற்பனை வளத்தாலும், இலக்கியத்  திறத்தாலும்.  அதுமட்டுமல்ல,  மாணவர்கள் ஒரு பாடலையும் பாடி செல்கிறார்கள். அது என்ன பாடல் தெரியுமா? "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம், வந்திருக்கும் இந்தி பேயை விரட்டித் திருப்பிடுவோம்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 14ம் வயதிலே எழுதிய பாடல்தான்.  நாள்தோறும் இந்த ஊர்வலம் திருவாரூரிலே நடக்கும்.  அப்படி ஒரு மாலையில் நடந்த ஊர்வலத்திலே தலைவர் கலைஞரின் இந்தி வகுப்பாசிரியர் வருகிறார். எதற்கும் அஞ்சாத தலைவர் அல்லவா நம்முடைய தலைவர் அவர்கள். ஒருமுறை ஒரு பேட்டியிலே தலைவர் கலைஞர் அவர்களிடம், "14 வயதிலே பொது வாழ்க்கையிலே அடியெடுத்து வைத்த நீங்கள் உங்களை எப்படி வர்ணித்துக் கொள்வீர்கள், எப்படி சொல்லிக் கொள்வீர்கள்?" என்று கேள்வி கேட்கப் படுகிறது.  அதற்கு, அவர் பதில் சொல்கிறார், நான் ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன் என". அத்தகைய நம் தலைவர், இந்தி வகுப்பு ஆசிரியருக்கு, தன் கையில் வைத்திருந்த இந்தி எதிர்ப்பு கண்டன அறிக்கையைத் தருகிறார். அதனை வாங்கிப் படித்த ஆசிரியர் பேசாமல் சென்றுவிடுகிறார். அடுத்த நாள் பள்ளியிலே இந்தி வகுப்பு வருகிறது. தலைவர் வகுப்பில் அமர்ந்திருக்கின்றார். கரும்பலகையிலே இந்தி வார்த்தைகள் சிலவற்றை எழுதிப் போடுகிறார் இந்தி ஆசிரியர். கலைஞர் அவர்களைப் பார்த்து "இதைப் படி" என்று சொல்கிறார். கலைஞர் எழுந்து நிற்கிறார். "இதைப் படிக்கிறாயா, இல்லையா?" என்று ஆசிரியர் மிரட்டுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று வகுப்பே கலங்கி நிற்கிறது. மிக துணிச்சலோடு நம்முடைய தலைவர் சொல்லுகிறார் "எனக்குப் புரியவில்லை" என்று. உடனே ஆசிரியர் மாணவர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். அந்த அறையையே உரமாக ஏற்று மொழிப்போரை முன்னிலும் முனைப்போடு தீவிரமாக முன்னெடுக்கிறார் நம்முடைய தலைவர் கலைஞர். எப்பேர்பட்ட தலைவர் அவர். உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் சேகுவாரா ஒருமுறை தன்னுடைய பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் "நொய்ந்து போன என்னுடைய கால்களையும், ஓய்ந்து போன நுரையீரலையும் மன வலிமையால், ஒரு கலைஞனுடைய நுட்பத்தோடு சரிசெய்து வைத்திருக்கிறேன்" என்கிறார். இன்றைக்கும், இளைஞனைப் போல, தமிழினத்தினுடைய எழுச்சிக்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிற நம் தலைவரின் மன வலிமையினை என்னவென்பது! ஒரு தலைவன் மிகச் சிறந்த தலைவனாக எப்போது உருவாகின்றான் தெரியுமா? அவன் தன்னுடைய சிந்தனைகளை, கருத்துக்களை தன்னுடைய குருதிக்குள், தன் உடம்பிற்குள், தன் ஆன்மாவிற்குள் வைத்து வாழ்ந்து பழகுவான். பிறகே, ‘அதைத்தன் மக்களுக்கு வழங்குவான்’. இன்றைக்கும் இதனைத் தன்னுடைய மனதாலும், செயலாலும், வாக்காலும் கடைபிடித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரே தலைவர் உலகத்திலே கலைஞர் மட்டும்தான். தலைவர் கலைஞர், முத்தமிழ் அறிஞர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் தமிழினம் முழுமையுமே பற்றிக்கொள்ள வேண்டிய தத்துவம். தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெறுவதற்கும், எப்போதுமே நம்பிக்கையோடு இயங்குவதற்குமான ஒரு அடையாளம்தான் அவர். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர், அன்றைக்கு முன்னெடுத்த மொழிப்போர் போராட்டத்திலே, தஞ்சை இன்னுமொரு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மத்திய அரசிலே உயர் பதவி வகிக்கின்றவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று நம் கழகம் முடிவெடுத்து, அவ்வாறே செயல்படுத்தப்படுகிறது.  1951ம் ஆண்டு, அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஹரிகிருஷ்ணன் மகதாப்பிற்கும் சென்னையிலே கருப்புக் கொடி காட்டப்படுகிறது, கோவையிலே காட்டப்படுகிறது. திருச்சியிலே காட்டப்படுகிறது, மதுரையில் காட்டப்படுகிறது. எங்கும் பலர் கைதாகிறார்கள். தஞ்சையில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் மிகவும்  கவலை அடைகிறார். மனக்கலக்கத்தோடு, நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று தம்முடைய தோழர் பெரியவர் மன்னை அவர்களை அழைத்துக்கொண்டு, அன்றைக்கு மாவட்ட செயலாளராக இருந்த பெரியவர் ஐயா கே.கே.நீலமேகம் அவர்களைக் குடந்தையில் சந்திக்கிறார். பொதுச் செயலாளர் பேரறிஞரின் அனுமதியோடுதான் சந்தித்தார் என்றாலும், மாவட்ட செயலாளருக்கு இந்த போராட்டத்தை நாம் சிறப்பாக நடத்த முடியுமா என்று சந்தேகம். """"முழு பொறுப்பும் என்னுடையது, மிகத் திறம்பட நான் நடத்திக்காட்டுவேன்"" என்று சொல்லிச் சென்ற தலைவர் கலைஞர் அவர்கள், அதற்குப் பிறகு, 26 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தஞ்சை மாவட்டம் முழுவதும் பயணம் செய்கிறார். "கல்லணை முதல் காரைக்கால் வரை"- "அணைக்கரையில் இருந்து அறந்தாங்கி வரை", அவர் சுற்றித் திரிந்து பட்டிதொட்டியெங்கும் சூறாவளி பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது அந்த வழியாக இரயிலில் செல்கிற ராஜாஜிக்கு தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்திலே கருப்புக் கொடி காட்ட வேண்டுமென்று முடிவு செய்யப்படுகிறது. தலைவர் கலைஞர், தோழர் மன்னை அவர்களோடு திருவாரூரிலிருந்து  புறப்பட்டு தஞ்சை  புகைவண்டி நிலையம் வருகிறார். இறங்கிய உடன் காவல் துறையினர் கைது செய்யலாம் என்றதொரு நிலை இருந்ததால், கூட்டத்தோடு கூட்டமாக வேறுபக்கமாக வெளியேறி, சட்டையை கழற்றி விட்டு, தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ரயில் தண்டவாளத்தின் மீதே ஒரு மைல் தூரம் நடந்து சென்று, பின்னர் ஒரு மாட்டு வண்டியை பிடித்து கரந்தையில் இருக்கின்ற தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று விடுகின்றார். புகைவண்டி நின்றபோது அதிலிருந்து இறங்கிய பெரியவர் மன்னையையும், கழக கண்மணிகளையும் காவலர்கள் கைது செய்கிறார்கள். காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற பிறகு அவர்களிடம் தலைவர் கலைஞர் எங்கே? என்று கேட்கிறார்கள். ஒருவரும் பதில் சொல்லவில்லை. அவரை கேளுங்கள், இவரை கேளுங்கள், பெரியவர் பதியை கேளுங்கள் என்று சால்சாப்பு சொல்லப்படுகின்றது. எப்படியோ, எதனையோ மோப்பம் பிடித்த காவல் துறை கரந்தைக்கு வருகிறது. நம் இயக்கத்தின் முன்னணி  வீரராக அன்று இருந்த பெரியவர் ஏ.கே.வேலனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வீடு வீடாக செல்கிறார்கள். பெரியவர் பதி வீட்டிற்கு செல்கிறார்கள், பெரியவர் பட்டு வீட்டிற்கு செல்கிறார்கள். பெரியவர் பெத்தண்ணன் வீட்டிற்கு செல்கிறார்கள். எங்கேயும் தலைவர் கலைஞர் இல்லை. மறுநாள் காலை நேரத்தில், ராஜாஜி பள்ளியக்ரஹாரம் வரும்போது, அங்கே திரளாக கழக கண்மணிகள் கூடியிருக்க, ஒற்றையடி பாதை வழியாக, கரந்தையிலிருந்து தலைவர் அவர்கள் வந்து சேர்கிறார். 
மிக மிக சிறப்பாக, விண்ணதிரக் கோஷங்கள் முழங்க ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது அன்றைக்கு இந்த மண்ணில்தான். அன்றைக்கு அதனை வெற்றிகரமாக செய்து காட்டிய தலைவர் நம்முடைய கலைஞர்தான். அன்றைய தினம் கருப்புக் கொடி காட்டிய போராட்டத்திலே தஞ்சை மாவட்டத்தில் பங்கு கொண்ட மூத்த முன்னோடிகளை எல்லாம் நினைவு கூறுவது சால பொருத்தம். மொழிப் போராட்டத்தின் போது தஞ்சாவூரில் திமுக சார்பாக கலந்து கொண்டவர்கள் எம்.எஸ்.இளங்கோ (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர்), எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர்), திரு.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (முன்னாள் தஞ்சை நகர செயலாளர்), வழக்கறிஞர் திரு. மாணிக்கவாசகம், திரு. பட்டு அவர்கள், வழக்கறிஞர் சாமிநாதன் அவர்கள், திரு.சேவியர் அவர்கள், திரு.ஏ.வி.பதி அவர்கள், திரு.வையாபுரி அவர்கள், திரு.சுல்தான் (முன்னாள் நகர்மன்ற தலைவர்) அவர்கள், திரு.பெத்தணன் நாடார் அவர்கள், திரு.டி.பி.கண்ணன் அவர்கள், திரு.டி.கே.கோவிந்தன் அவர்கள், திரு. மையூரநாதன் அவர்கள். இத்தனை பேரையும் இன்றைக்கு நாம் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட கழகத்தில் இருந்தபோது ஒருங்கிணைந்த  தஞ்சை மாவட்டத்தின் தலைநகரான  தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்து செல்வார் என்றாலும், அவர் நடத்தியிருக்கிற மிக முக்கிய போராட்டங்களை தஞ்சை நகரத்திலேதான் திமுக சார்பாக முன்னெடுத்து சென்றிருக்கிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 
1960க்கு முன்பு, தஞ்சாவூரிலே அப்போது செயல்பட்டு வந்த  எஸ்.எம்.டி. டிரான்ஸ்போர்டில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் உரிமைக்காக, நலனுக்காக தஞ்சை மாவட்ட திமுக ஒரு மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அதை வெற்றிகரமாக தலைமையேற்று செய்து முடித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல, தமிழுக்காக கலைஞர் தலை வைத்துப் படுத்த அந்த தண்டவாளத்தில்தான் இன்று வரை திராவிட ரயில் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது என்று  நாம் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோமே, அந்த கல்லக்குடி போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது தஞ்சை மாவட்ட திமுக சார்பாகத்தான். திருச்சி மாவட்டத்தில் டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்ததால், டால்மியாபுரம் என்று  அமைந்த பெயரை மாற்றி, தமிழில் கல்லக்குடி என்று அழைக்க  வேண்டுமென்ற வரலாற்று சிறப்பு மிக்க அந்த போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தஞ்சை மாவட்ட திமுகவைச் சார்ந்தவர்கள் என்பதை நாம் மறக்க இயலாது. அதுமட்டுமல்ல தோழர்களே, இந்த மாநகரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே மிகப் பெரிய திருப்பு முனையை வகுத்திருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே மாணவர்களும் ஈடுபட வேண்டுமென்று  முடிவு செய்து, போராட்ட முறையினை திட்டமிட்டது இந்த தஞ்சை மண்ணில்தான். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக்காக மிகப் பெரிய மாநாடு ஒன்று இந்த மண்ணில் நடைபெற்றது. அந்த மாநாட்டிலே தலைவர் கலைஞர் வருவதற்கு முன்னாலே பேரறிஞர் அண்ணா அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார். கலைஞர் வருவதனைப்  பார்த்தவுடன் "நான் விட்ட இடத்திலிருந்து என் தம்பி தொடருவான்" என்று சொல்லி அமர்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பிறகு கலைஞர் அவர்களை பேசச் செய்த பெருமை இந்த மண்ணிற்கு உண்டு. இத்தனை சிறப்புக்களோடு தஞ்சை மண் தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலே இன்று மொழிப் போர் தியாகிகளை நினைவு கூறுவது ஒரு தமிழ் பெண்ணாக, தமிழ் மொழியின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத காதல் கொண்டிருக்கிற பெண்ணாகிய எனக்குக் கிடைத்திருப்பது பெறும்பேறு. எந்த மொழிக்காக இத்தகைய தியாகங்கள் நடந்திருக்கிறது, எப்பேர்பட்ட மொழி நம் தமிழ் மொழி!  சமீபத்திலே, இணையதளத்திலே ஒரு செய்தி. அந்தமான் தீவிலே வசித்துக் கொண்டிருக்கிற ஒரு பெண்மணி இறந்து விட்டதாக அந்த குறிப்புக் கூறுகிறது. அந்தமான் தீவிலே இருக்கிற ஒரு பெண்மணியின் இறப்பு என்பது பல நூறு இறப்புக்கள் நடைபெறுகிற இவ்வுலகில் ஒரு சாதாரண செய்திதான். அதற்கு முக்கியதுவம் கொடுத்து இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதே என்று பார்த்தால், ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி பேசுகிற கடைசி பெண்மணி அவர். அவர் இறந்ததோடு அந்த இனத்தின் மொழியும் அழிந்துவிட்டது. ஆகையால் அவரது இறப்பு அங்கே பதியப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்தேன். ஆக, மொழி என்பது ஒரு இனத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட மொழியை பேசுபவர்கள் நாம். எப்படிப்பட்ட சிறப்பை உடையவர்கள் தமிழர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. உலகத்தில்  வேளாண் முறையையும், கடல் வாழ்வையும் முன்னெடுத்தவர்கள் தமிழர்கள்தான். முதன்முதலில் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும், கலைகளும் பிற கூறுகளும்  வகுத்தவர்கள் நாம்தான். உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் தாய்மையாக, முன்னோடியாக இருப்பது நம்முடைய திராவிட நாகரிகம்தான்.  ஹோசேனா என்ற ஜெர்மானிய அறிஞர் மேற்கு ஆசியாவிலும், ஐரோப்பா கண்டத்திலும் இருக்கிற இடங்களில் உள்ள பெயர்கள் பெரும்பாலும் தமிழ் பெயர்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். வியன்னாவிலே உள்ள அருங்காட்சியகத்தில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர் ஒருவரின் வணிகம் பற்றிய குறிப்பு இருக்கிறது. உலகத்தில் அனைத்து மொழி குடும்பத்திற்கும் (இந்தோ, ஆரிய மொழிகள் அனைத்தும்) தாய்மையானதாக, முன்னோடியாக இருப்பது நம்முடைய தமிழ் மொழி என்பதால் தான்,  இன்றைக்கும் நாம் செம்மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்படுகிறோம். ஹீராஸ் என்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் சொல்கிறார் - "கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் பிறந்த திராவிட நாகரிகம்தான் பின்னாளில் சிந்து சமவெளி நாகரீகமாக விரிந்து, சுமேரிய நாகரிகமாகப் பரந்தது" என்று. இத்தகைய சிறப்பு மிக்க திராவிட இனத்தின், அந்த மொழியின் பெருமையை அறிந்து கொண்டவர் அவர் என்பதால்தான் "நான் ஸ்பெயின் நாட்டிலே பிறந்திருந்தாலும், என்னை ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்" என்றார். ஜப்பானில் ஒரு பல்கலைக்கழக முகப்பில், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்கிற அந்த நம் புறநாநூற்று வரி, ஜப்பானிய மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியிலே ‘நல்வரவு’ என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. ஜெருசலேம் நகரை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த ஜெருசலேம் நகரிலே இருக்கிற ஒலிவ மலையின் கிருஸ்த்துவ தேவாலயத்திலே, கிருஸ்த்துவின் போதனைகள் 68 மொழியிலே எழுதி வைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. இந்திய மொழியிலே எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு, தமிழ் மொழிக்கு என்று முடிவெடுக்கப்பட்டு, தமிழிலே கிருஸ்த்துவின் போதனைகள் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘தமிழ் படிப்பதற்காக நான் ஒரு தமிழனாக பிறக்கவில்லையே’ என்று மகாத்மா காந்தி கவலைப்பட்டதாக அறிகிறோம். என்னுடைய கல்லறையிலே தமிழ் படித்த மாணவன் இங்கு உறங்குவதாக எழுதுங்கள் என்றார் ஜி.யு.போப்.  புத்தர் கூட, தமிழை கற்பதிலே ஆர்வமாக இருந்தார் என்று "ரத்தின விகாரம்"" என்ற வடமொழி நூல் சிறப்பாக எடுத்துச்சொல்கிறது. சீகன்பாகு என்ற ஒரு மேல்நாட்டு அறிஞர் இருந்தார். தரங்கம்பாடியிலே தங்கியிருந்து தமிழ்ச் சொற்களுக்கான புதிய அகராதி தயாரித்தவர் அவர். அவருடைய தமிழ்ப்பணியை பாராட்டி, இங்கிலாந்து சார்லஸ் மன்னன் அரசவையிலே ஒரு பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது. அந்த பாராட்டுப் பத்திரத்தை அளித்தவர் அந்த அரசின் ஆர்ச் பிஷப் ஆப் கேண்டர்பரி என்று அழைக்கப்படுகின்ற மத போதகர். அவர் சொல்லுகின்றார், "இந்த பாராட்டுப் பத்திரம், உலகின் தலைசிறந்த மொழியான லத்தீன் மொழியிலே எழுதப்பட்டு, வாசிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது" என்று. பெற்றுக்கொண்டு "மிக்க நன்றி" என்று சொல்லி சீகன்பாகு தொடர்கிறார், "உலகின் தலைசிறந்த மொழியான தமிழ் மொழியில் நான் என் நன்றி உரையினை சொல்லப்போகிறேன்" என்று சொன்னார். காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இருந்த நட்பினை நாம் அறிவோம். டால்ஸ்டாய்க்கு காந்திஜி அவர்கள் ஒரு கடிதம் எழுதுகிறார். "உங்களுடைய இலக்கிய படைப்பினில் நீங்கள் முன்வைக்கிற அன்பு, கனிவு, பரிவு  மனிதம் இவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண் எது? எதிலிருந்து இதன் கருவை நீங்கள் எடுக்கிறீர்கள்?" என்று. காந்திக்கு டால்ஸ்டாய் பதில் எழுதுகிறார் "இந்தியாவில் இருக்கிற, தமிழ்நாட்டின் மொழியான தமிழ் மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த இலக்கியமான திருக்குறளில் இருந்துதான் அத்தனை கருவையும் எடுக்கிறேன்," என்று. இத்தனை பெருமையுடைய தமிழ் மொழியை பேசுகிற நாம், தமிழ் மொழியை செம்மொழி என்று குறிப்பிடுகிற நாம்,  இதுகுறித்த பெருமிதத்தோடு இருக்கிறோமா?  திரையரங்க வாசல்களிலும், பன்னாட்டு தூதரக வாசல்களிலும், வேலைவாய்ப்பிற்காக பன்னாட்டு நிறுவனங்களிலும் மிகப் பெரிய வரிசையில் காத்திருக்கிற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நம்முடைய மொழி குறித்தும், நம்முடைய இனம் குறித்தும், நம் ஐந்து வகைத் திணைப் பண்பாடு குறித்தும் வரலாறு தெரியுமா? எத்தகைய தியாகம் செய்து, இத்தகைய ஒரு உயரிய இடத்தை தமிழ் பெற்றிருக்கிறது என்ற அடிப்படை வரலாறு தெரியுமா? இந்த வரலாற்றை நீங்கள் அவர்களுக்கு சொல்ல வேண்டும். வானொலி பெட்டியிலும், திரைப்படங்களிலும், இன்றைக்கு  இருக்கின்ற "நான் அன்று இந்த புடவை கட்டியிருந்தேன்" என்று சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கின்றவர்கள் நடுவே, உண்மையான தலைவர் யார்? உண்மையாக மொழிக்காகவும், இனத்திற்காகவும் பல போராட்டங்களை செய்து வந்திருக்கிற இயக்கம் எது? என்பதை நாம் அவர்களுக்குச் சுட்ட  வேண்டும். நமது  திமுக இயக்கம் குறித்தும், அதன் பங்களிப்பு பற்றியும் அவர்களுக்கு விளக்க வேண்டும்.  கோவில்பட்டி மாநாட்டிலே நம்  ஒப்பற்ற திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி, தலைவர் கலைஞர் இவ்வாறு  சொல்கிறார் - "கல்லடியும், சொல்லடியும்  பட்டபோது, கரையாது இருந்த இயக்கம்; பணக்காரர்களின் செல்வாக்கு என்ற ஈட்டி எறியப்பட்ட போது இறவாமல் இருந்த இயக்கம்; மடாதிபதிகள் எதிர்ப்பு,  மகந்துகள், ஜீயர்களின்  கொதிப்பு  இவைகளால்  மாண்டு போகாத இயக்கம்; சுயநலமும், சொந்த வாழ்வுமே பெரிதென்று இருந்தவர்கள் மத்தியிலிருந்து விடுபட்ட இயக்கம்; பதவிக்காகவும், பட்டத்திற்காகவும் மட்டுமே பாசக்கயிறை வீசியவர்கள் பிடியிலிருந்து தப்பித்த இயக்கம்; கொள்கைக்காக வாழ்ந்த நாகை மணியை, மாயவரம் நடராஜனை, ஆரூர் ராமனை, அழகிரிசாமியை அணைத்திருந்த இயக்கம்; மொழிக்காக உயிர் விட்ட தாளமுத்து நடராஜன்களை கொண்டிருந்த இயக்கம்; கொள்கைக்காக மரத்திலே பிணமாக ஊஞ்சலாட்டப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதங்களை உள்ளடக்கிய இயக்கம்;  மதுரை மாநாட்டுத் தீயை கண்டு மனம் கலங்காத இயக்கம்; குடந்தை தெருவில் கண்ட குருதியை பார்த்து குலை நடுங்காத இயக்கம்; ராமகாவியம் இழுக்குடையது என எடுத்துக்காட்டி பாரதியார்களை, சேதுபிள்ளைகளை சொற்போரிலே வெற்றி கண்ட இயக்கம்; "ஆறிலும் சாவு, நூறிலும் சாவுதான், ஆனது ஆகட்டுமே"  என்று  பாடிவரும் ஆயிரம் ஆயிரம் பட்டாள தம்பிகளை பெற்றுள்ள இயக்கம்; தம்பிகளுடைய நெஞ்சிலே தட்டிப் பார்த்து உறுதியானதுதானா என்பதை உணர்ந்து கொண்டு, அறப்போருக்கு  உரிய காலம்  பார்த்திருக்கும், உலக அறிஞர்களில் ஒருவரான அண்ணாவை தலைவராகப் பெற்றிருக்கும் இயக்கம்; குள்ள நரிக் கூட்டத்தின் குடல் கிழிக்கும்  கூற்றம்; குமுறும் எரிமலை புதுவைக் கவிஞர் பாரதிதாசனை பெற்றுள்ள  இயக்கம்; ஆரியம் ஒரு மாயை அது  பல உருவில் நடமாடும் என்பது கண்டு கலைத் துறையிலே, நாடகத் துறையிலே, இலக்கியத் துறையிலே ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்க ஆயிரமாயிரம் அணுகுண்டுகளை உலாவவிட்டுருக்கின்ற இயக்கம்;" என 1950ல் கோவில்பட்டி மாநாட்டிலே  தன் தலைமை உரையில் முழங்கினார் தலைவர் கலைஞர். இதனை, நாம், நம்முடைய இளைஞர்களுக்கு  யுவதிகளுக்கு மொழி குறித்தும், மொழிக்காக நம் இயக்கம் நடத்திய போராட்டம் குறித்தும் எடுத்துச் சொல்லும் போது சுட்டவேண்டும். கடந்த கால வரலாற்றைத் தவறின்றி, திரிபின்றி இன்றைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டும். வரலாறு என்றாலே இளைய தலைமுறைக்கு சற்றே சலிப்பு ஏற்படும் நிலை இன்று இருக்கிறது. வரலாறு என்றால் என்ன? கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையேயான உரையாடல். அதுதான் நிகழ்காலத்தை தீர்மானம் செய்கிறது. மார்க் பிளான்க் என்ற ஒரு பிரஞ்ச் வரலாற்று ஆசிரியர் சொல்கிறார் "வரலாற்று ஆசிரியன் என்பவன் தேவதைக் கதைகளில் வருகின்ற பூதம் மாதிரி. எங்கே ரத்த வாடை அடிக்கிறதோ, எங்கெல்லாம் மனிதம் சம்பந்தமான நிகழ்வுகள் நடந்திருக்கிறதோ, அங்கே தான் அவனுக்கு வேலை என்கிறார்" அவர். ஆக, நம் இனம், நம் இனத்தின் மொழி, நம் மொழிக்காக நடத்தப்பட்ட போராட்டம் ஆகியவற்றை வரலாற்று செய்திகளாக கழுகு பார்வை போல் நினைவு கூற இங்கு விரும்புகிறேன். தொலைக்காட்சி, நுகர்வு கேளிக்கைகளில் சிக்கியிருக்கின்ற இளைஞர்களுக்கு இதனைச் சொல்லுங்கள்: 1937ல் காங்கிரஸ் மந்திரி சபை முதன்முதலாக சென்னை மாகாணத்தில் பதவியேற்கிறது. 1938ல் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள், இந்தியை கட்டாயப் பாடமாக கொண்டு வருகிறார். அன்று ஆரம்பமாகிறது இந்தி எதிர்ப்பிற்கான முதல் கட்டப் போர். அந்த முதல் கட்டப் போரிலே பங்கேற்று சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நடராஜன், 5 நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறக்க, அவர்தான் முதல் பலி. இரண்டாவது  களப்பலி 12.3.1938ல் மரணம் தழுவிய தாளமுத்து.  இந்தி கட்டாய பாடமில்லை என்ற அறிவிப்பு அடுத்து வர, போராட்டம் கைவிடப்படுகிறது. இது தற்காலிக நிறுத்தம்தான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 1942ல் மறுபடியும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு வருகிறது.  மறுபடியும் இந்தி எதிர்ப்பு.  மறுபடியும் ஆணையை  கைவிடல்.  கிளர்ச்சி நிறுத்தப்படுகிறது. 1946ல் பிரகாசம்காரு அவர்கள் சென்னை ராஜதானி முதலமைச்சர். அவினாசிலிங்கம் செட்டியார், கல்வி அமைச்சர். மீண்டும் இந்தி கட்டாயம் என்ற ஆணை. மீண்டும் போராட்டம், கைவிடல் எனத் தொடர்கிறது வரலாறு. சுதந்திரத்திற்குப் பிறகு, 1963ல், இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டும்  இருக்கும், அதற்கு துணை மொழியாக ஆங்கிலம் மட்டும்  என்ற அறிவிப்பு வருகிறது.  உடன் முதலில் பொங்கி எழுந்த இயக்கம் நம்முடைய திமுகதான். இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்ற அரசியல் சட்டத்தின்  17வது பிரிவு நகலை பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில் கொளுத்தி, நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று திமுக பொதுக்குழு தீர்மானிக்கிறது. அந்த போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தியவர் நம் ஒப்பற்ற தலைவர் கலைஞர். நவம்பர் 17ல் அறிவகத்திலிருந்து  நடந்தே ஊர்வலமாக சென்னை கடற்கரைக்கு சென்று, பொதுமக்கள் முன்னிலையிலே  அரசியல் சட்டத்தின் 17வது பிரிவு நகல் எரிக்கப்படுகிறது.  தமிழகம் எங்கும் நடந்த அந்த போராட்டத்திலே பலரும் கைதாகிறார்கள். உலக வரலாற்றிலே, தம்முடைய  மொழிக்காக, தமிழ்மொழி மீது கொண்டிருக்கிற அசாதாரண பற்றுக்காக, சாதாரண இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்தி  அழித்துக்கொண்ட வரலாறு, உலகத்திலே, தமிழகத்தில் மட்டும் தான் நடைபெற்றது.  இன்று ஜனவரி 25 ஆம் நாள்; 1963 ம் ஆண்டு,  இதே நாளில் அதிகாலை 04.30 மணிக்கு கீழப்பழூர் சின்னச்சாமி,  திருச்சி ரயில்  நிலையத்திலே  தன் மேல் தீயிட்டுக் கொண்டு கரிக்கட்டையாக இறந்து போகிறார். 1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டப்படி, இந்தியை ஆட்சி மொழியாக அமுல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.  உடன்  திமுக கழகம் அறிவிக்கிறது. 
1964 ஜனவரி 26ஐ துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என. கருப்புத் துண்டு அணியுங்கள். ஊரெங்கும் கண்டன கூட்டங்கள் நடத்துங்கள். நம்முடைய கண்டனத்தை தெரிவியுங்கள் என்றார் தலைவர். அந்த 26ம் நாள், இன்னும் ஒரு இளைஞன் - தென்னாற்காடு மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்ட  சிவலிங்கம் என்ற இளைஞர், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதி விட்டு தீக்குளித்துத் தன்னுடைய உயிரை விடுகின்றார்.  சிவலிங்கத்தின் கருகிய உடலைப் பார்த்துக் கதறிய, அஞ்சல் துறையிலே வேலை செய்கிற அரங்கநாதன் என்பவர், அடுத்த நாளே தனக்குதானே தீயிட்டு இறக்கிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே நடைபெற்ற போராட்டம் மிக முக்கியமானது. அந்த போராட்டத்திலே காவல்துறை துப்பாக்கி சூட்டிலேயே இறந்த மாணவன் பெயர் ராஜேந்திரன். அவருடைய தந்தையும்  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு  காவல்துறையில் பணிபுரிந்தவர்.  அவர் பெயர் முத்துக்குமார். அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு பிறகு தமிழகம் எங்கும் தீக்குளிக்கும் போராட்டமும், தாய்மொழிக்காக தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டமும், உலகின் கவனத்தை அன்று ஈர்த்தது. ஐ.நா. சபையின் அன்றைய பாகிஸ்தான்  பிரதிநிதியாக இருந்த  ஹம்சத் அலி என்பவர் தமிழகத்திலே திமுக சார்பாக நடைபெற்ற மொழி போராட்டத்திலே எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பதை உள்ளம் உருக ஐ.நா. சபையிலே பேசியிருக்கிறார். உலகம் முழுதும் உற்று நோக்கும் போராட்டமாக நம்முடைய போராட்டம் இருந்தது என்ற இந்த வரலாற்றை நாம் மறந்து விடக்கூடாது. அதற்குப் பிறகு எத்தனையோ  இறப்புகள் நடைபெறுகின்றன. சிதம்பரத்திற்குப் பிறகு, பொள்ளாச்சியில் பொது வேலை நிறுத்தம், உண்ணா நோன்பு, தடியடி, துப்பாக்கி சூடு. பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த தண்டபாணி என்ற பொறியியல் கல்லூரி மாணவன் விஷமருந்தி இறக்கிறார். பிப்ரவரி மாதம், இரண்டாவது வாரம் குமாரப்பாளையத்தைச் சேர்ந்த முத்து என்ற மாணவன் தீக்குளித்து இறக்கிறார். அதோடு முடிந்ததா? அய்யம்பாளையத்தை சேர்ந்த ஆசிரியர்  வீரப்பன் கணக்கற்ற தூக்க மாத்திரைகளை விழுங்கி, கூடவே பெட்ரோலும் ஊற்றிக் கொண்டு இறந்து போகிறார். இதோ இருக்கிற அறந்தாங்கி பக்கத்தில் உள்ள சின்னசுனைக்காடு என்ற கிராமத்திலே இருந்த முத்து என்பவர் மூட்டைப் பூச்சி மருந்தை அருந்தி, கீரனூர் பஸ் நிலையத்தில் தன்னுடைய உயிரை விடுகிறார். இதைக் கேட்டு மனம் கலங்கிய பேரறிஞர் அண்ணா, இளைஞர்களே இன்னும் உயிர் தியாகம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறார். கேட்டாரா விராலிமலை சண்முகம்? விஷமருந்தி உயிர் துறக்கிறார் விராலிமலை சண்முகம்.  கேட்டாரா மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி? தீயிட்டுக் கொண்டு இறக்கிறார். அன்றைக்கு நடந்த போராட்டங்களிலே எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டிலே இறந்திருக்கிறார்கள் தெரியுமா? 69 பேர். துப்பாக்கி சூட்டில் களப்பலியானோர் எண்ணிக்கை இதோ -  சென்னை - 1, திருவொற்றியூர்-1, வெள்ளக்கோயில்- 3, கோவை குமாரபாளையம்- 6, பொள்ளாச்சி-13, திருப்பூர்-4, உக்கடம் -2, சென்னிமலை-1, வாலாஜாபாத்-1, மதுரை கூடலூர்-5, கம்பம் - 2, திருவண்ணாமலை ஆரணி-6, சேலையார்பேட்டை - 1, சிதம்பரம்-1, செஞ்சி-1, பேரணாம்பட்டு-3, திருச்செங்கோடு - 4, திருச்சி-4, கரூர்-3, மணப்பாறை-1, ஆற்காடு -1, புதுவை-5  ஆக மொத்தம் 69. வெறும் எண்ணிக்கை அல்ல இவை. மனித உயிர்கள். நாம் பேசுகிற தமிழ் மொழியை, பிரச்சார மொழியாக, இலக்கிய மொழியாக, செம்மொழியாக உயிரூட்டித் தந்தவர் தலைவர் கலைஞர்.  இன்றைக்கு தமிழ் செம்மொழி நிலை எய்தி உள்ளது.  தமிழ் இணையதளம் சென்று  அறிவியல் முகம் பெற்றுள்ளது.  தமிழ் கற்றே தமிழ்நாட்டில் பயில வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. தமிழ் கோவிலுக்குள் நுழைந்து, இழந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. இன்றைக்கும் தமிழ் மொழிக்காக எண்பேராயம், அய்ம்பெருங்குழு என உயராய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறன. தமிழும் மத்தியில் ஆட்சி மொழியாகும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்திலே வழக்காடு மொழியாக தமிழ் மொழி வரும் என்ற நிலை இருக்கிறது. இத்தனை மாயாஜாலத்திற்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா? திருக்குவளையிலே பிறந்து, கையெழுத்துப் பிரதியாய் அடியெடுத்து வைத்து, இன்றைக்கு கல்வெட்டு சிற்பமாக நிலைத்து நிற்கின்ற தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக பாடுபடுகிற நம்முடைய தலைவர்தான்.  நேற்று டில்லிக்குப் போன  அம்மா பகல் கனவு கண்டால் நமக்கென்ன? என்றென்றைக்கும் டில்லி நம் பக்கம்தான் என்பதை நாம் அறிவோம். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திற்கே தமிழ்நாட்டின் வரைபடத்தை எழுதிக் கொண்டிருக்கிற ஒப்பற்ற தலைவர் கலைஞர் ஆட்சியில் வாழ்கிற பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்ல, தமிழன் சுபிட்சமாக வாழ்வதற்கும்  வழி செய்தவர் அவர்.  எத்தனை திட்டங்களை தீட்டியிருக்கிறார்! தமிழர்கள்  வளமாக வாழவும்,  சமூக நீதிக்காகவும்,  எத்தனை திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு அருந்ததியினர் இனத்தை சேர்ந்தவர்கள் உள்ஒதுக்கீட்டில் பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி பெறலாம். பட்டதாரியே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பெற நிதியுதவி அளிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு கடன் ரத்து, தாட்கோ கடன் ரத்து செய்யப்படுகிறது.  இலவச வீட்டுமனைப் பட்டா, நலிவடைந்தோர் நலவாரியம், இப்படி பலப் பல. பொங்கலையொட்டி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 50ம், கரும்பின் விலையும் உயர்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாய்மார்களுக்கு பொங்கல் கொண்டாட பொருட்களும், 50 ரூபாய்க்கு மளிகை சாமான்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்படி இனம், மொழி, தமிழர்களின் நலம் என்று அனைத்துத் தரப்பிலும், அனைவரும் பயன் பெறும் வகையில் இனத்தையும், மொழியையும், இரு கண்களாக பாவித்து, நல்லாட்சி செய்கிற கலைஞர் அவர்களுடைய நல்லாட்சி, ரோமப் பேரரசின் அகஸ்டஸ் ஆட்சி என ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது. தூங்குகிற நேரத்தில் கூட குதிரையில் உட்கார்ந்து தூங்கி, நேரத்தை பொன்னென செயல்பட்ட நெப்போலியன் போல், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று மக்கள் நலனுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் நம் தளபதி, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள். இத்தகைய பொற்காலத்தில் வாழ்கிற நாம், நம்முடைய தமிழக இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் நம்முடைய மொழி, இனம் குறித்தும், பண்பாடு குறித்தும், இதற்காக பாடுபட்டு வந்திருக்கிற இயக்கம் திமுக என்பதையும் இன்று நினைவுபடுத்துவோம். மிக அருமையான ஒரு வாய்ப்பாக இந்த மாலை அமைந்தது என்று நினைவு கூறி, ஒரு ரஷ்ய கவிதையோடு என் உரையை முடிக்கிறேன். 
"இந்த கை ஒரு நெம்புகோலை அழுத்தும் போது  வலிமை கொள்ளும்
	இந்த கை ஒரு ஆப்பிளை எவ்வளவு அற்புதமாக ஏந்துகிறது.
	இந்த கை குழந்தையை கொஞ்சும் போது  மென்மை கொள்ளும்.
	பிச்சைக்காரர்களை விரட்டும் போது நாணம் கொள்ளும்.
	உள்ளங்கையில் நீருற்றிப் பாருங்கள் - உலகையே தலை கீழாகப் 	பார்க்கலாம். 
ஆகையால் இந்த கையை கறை படியாமல் வைத்திருங்கள்" என்று அந்த கவிதை சொல்கிறது. இன்றைக்கு கறை படியாத பொற் கரத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் கலைஞர் மட்டுமே, அவர் தலைமையில் இருக்கிற இந்த இயக்கம் மட்டுமே என்று சொல்லி, மேடையில் அமர்ந்திருக்கின்ற மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அவர்களுக்கும், இங்கு என் முன்னே அமர்ந்திருக்கிற மக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பிற்காக நன்றி கூறி விடை பெறுகிறேன், 
நன்றி,  வணக்கம்.
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *