தி.மு.க. ஈரோடு மண்டல மாநாடு – ஈரோடு – 24,25.03.2018

தி.மு.க. ஈரோடு மண்டல மாநாட்டில், 25.03.2018 அன்று, 
“திருக்குறளும் திராவிட வாழ்வியலும்” என்ற தலைப்பில்
தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை 

	மாமழை போற்றுதும் மாமமழை போற்றுதும்
	நாமநீர் வேலி உலகுக்கு அவனளிபோல
	மேனின்று தான் சுரத்தலால்
	மாமமழை போற்றுதும்!
	தமிழின் மாமழை 
	தண்ணளி மாமழை -
	தனிப்பெரும் தலைவரே
	முத்தமிழ் அறிஞரே!
கொங்கு நாட்டை மதுரை நாயக்கர்கள் ஆண்டபோதும் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் குறளைப் போற்றி உயர்த்தினர்.
	மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வீரமுடியார் சார்பாக எழுப்பப்பட்ட மடமொன்றில் அதனைக் கட்டியவரை, பழனி வீரமுடியார் செப்பேடு இப்படிச் சொல்கிறது -
வள்ளுவர் மரபு காத்து
	முப்பால் மொழியின் படிக்கு
	அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
	ஆறிலொன்று கடமை கொண்டு
	அசையா மணி கட்டி
	அரசாள்பவர் என்று!
அப்படித்தான் ஐந்துமுறை அரசுக் கட்டிலில் அமர்ந்த போதும் ஆட்சி செய்தவர் - நீங்கள்!
	மதுரை முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில், கொங்குப் பகுதியிலுள்ள பூந்துறை நாட்டார் மேலோலை இப்படிச் சொல்கிறது -

அன்புடைத் தாயே போல்
அனைத்து உயிர்கட்கும்
இனிமை நல்கி
வள்ளுவர் உரைத்த
முப்பால் மொழியின் படியே
செங்கோல் நீதி வழுவாமல்
ஆட்சி நடத்தியவர் என்று!
அப்படித்தான் அத்தனை முறையும் ஆட்சி நடத்திய - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் நீரெமக்கு!
உலகிலேயே எந்த ஓர் இலக்கிய ஆசிரியருக்கும் இது போன்ற பெரிய சிலை எடுக்கப்பட்டதில்லை எனும் பெருமையுடன் - வாழை மரத் தண்டின் அமைப்பைத் தழுவிச் செய்திட்ட கதலிகரணம் எனும் நுட்பமுடன், மெச்சிகோ மாயர் கட்டட நிர்மாணத்தின் சாயலுடன், வள்ளுவர் பெருந்தகைக்கு குமரியிலும், திராவிடத் திருநாட்டின் அனைத்து நிலப்பரப்புகளிலும் வள்ளுவர் தம் பெருமை பறைசாற்றப்பட வேண்டுமெனப் பெங்களூருவிலும் சிலை அமைத்த பெருந்தகை நீங்கள்!
	குறளுக்கு உரையும், குறளோவியமும் தீட்டிய முத்தமிழ் அறிஞருக்கு முதல் வணக்கம்!
	“பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த
	சாமிதனை, முதன் முதலில் தொழுதிடுவோம்! ராம
	சாமிதனை, முதன் முதலில் தொழுதிடுவோம்! பெரியார்
	இராம சாமிதனை, முதன் முதலில் தொழுதிடுவோம்”
என முத்தமிழ் அறிஞரால் போற்றப்பட்டாலும், 
“புத்துலகத் தீர்க்கதரிசி - தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பேரறிஞரால் பெருமையாக அழைக்கப்பட்டாலும், 
தன்னை ‘அழிவு வேலைக்காரன்!’, ‘கலகக்காரன்’ என்று அறிவித்துக் கொண்ட தந்தை பெரியாரை, 
திருக்குறளைப் பரப்புவதில் பெருமுனைப்புக் கொண்டு, மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி, ‘குறள் நெறியை’ப் பரப்பிய நெடுந்தாடிப் பகலவனை,
	‘கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று காந்திஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டபோது - ‘அது என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கின்ற இரு பெண்களின் கைகளில் இருக்கிறது - என்று நாகம்மையாரையும், கண்ணம்மையாரையும் சுட்டியதால், இப்பகுதியை உலக வரைபடத்தில் உற்று நோக்கும் பகுத்தறிவுப் பாகமாக வரையறுத்த எரிமலையை,
‘இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் திருக்குறள் எப்போதும் இருத்தல்’ வேண்டுமென்ற தந்தை பெரியாரை நினைவில் நிறுத்துகின்றேன்!
'இதயத்தைத் தந்திடு அண்ணா' எனும் பேரறிஞருக்கான இரங்கல் கவிதையில் 
“தமிழன்னையிடம்,
	அமுத மொழி வள்ளுவனும் 
	அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்;
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
	நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள். 
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
	அறிவு மன்னனாக...” 
என்று போற்றப்பட்ட பேரறிஞரை இக்கணம் நினைக்கிறேன். 
	1964ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது திருக்குறள் உரை எழுதும் முயற்சியில் பேராசிரியப் பெருந்தகை ஈடுபட்டிருந்தார் எனத் தன் சிறைச்சாலைக் குறிப்புக்களில் எழுதிய பேரறிஞர் அண்ணா சொன்னார் -
	“பேராசிரியரை சுற்றி ஒரே வள்ளுவர் மயம்! ஆமாம்! பரிமேலழகரின் வள்ளுவர், பரிதியாரின் வள்ளுவர், வரதராசனாரின் வள்ளுவர், இலக்குவனாரின் வள்ளுவர், குழந்தையின் வள்ளுவர், மணக்குடவர் வள்ளுவர், நாமக்கல்லார் வள்ளுவர் இப்படிப் பலப்பல!” அத்தனை வள்ளுவரிலும் ஆய்ந்து, தோய்ந்தாலும் தந்தை பெரியாரின் வள்ளுவரைத் தேர்ந்து, முத்தமிழ் அறிஞரின் வள்ளுவரைத் தன் மனதில் வரித்துக் கொண்ட, பேராசிரியப் பெருந்தகைக்கு வணக்கம்!
	செயல் மானுடனே சிறந்த மானுடன் என்றவர் வள்ளுவர். வள்ளுவரின் செயல் வள்ளுவம் என்றால் தலைவர் கலைஞரின் செயல் வடிவம், வைதீகக் கோட்டைகள் மீது வெடிகுண்டு வீசித் தகர்க்கின்ற பலம் பொருந்திய டார்பீடோ நமது தளபதி.
	இம் மண்டல மாநாட்டிற்கு, இது பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறுகின்ற மாநாடு எனும் தனிச் சிறப்பினைக் காட்டிலும், முதல் சிறப்பொன்று உண்டு. அது, முதன்முறையாக நம் செயல்தலைவர், தமிழகத்தின் நாளைய முதலமைச்சர், எழுச்சியுரையாக நிறைவுரையாற்றுகின்ற சிறப்பைப் பெற்றிருக்கின்ற மாநாடு இது என்பதேயாகும். 
	1938இல் தந்தை பெரியாரை நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்தபின் அறிவிக்கப்பட்ட மாநாடு நீதிக்கட்சியின் 14வது மாநில மாநாடு.
	அப்போது தந்தை பெரியார் இந்திப் எதிர்ப்பு போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறையிலிருந்தார். சென்னைத் தீவுத் திடலில், மாநாட்டில் பெரியாருக்கு மாற்றாகச் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமைதாங்கிப், பெரியாரின் நீண்ட தலைமையுரையைப் படித்தார். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்றதொரு காட்சியமைப்பு புதுமை வடிவில் ஒப்பனை செய்யப்பட்டு மேடையின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. பெரியாரின் தலைமையுரையைப் படித்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தமக்கு அணிவிக்கப்பட்ட பெரிய மாலையைக் கழற்றி, பெரியார் உருவச் சிலையின் காலடியில் சூட்டினார்.
	அந்தக் காட்சியை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “தோளுக்குத் தந்த மலர் தூய பெரியாரின் தாளுக்குத் தந்திட்டான் அத்தகவுடையோன்” என்றார். அதுபோலத் தன் தோள் மாலையைத் தனயனாக அல்ல திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனாகத் தலைவருக்கு சூட்ட இருக்கின்ற எங்கள் தளபதி,
	மக்கள் எல்லாரும் T.M.நாயராக 
	மக்கள் எல்லாரும் தியாகராயராக
	மக்கள் எல்லாரும் பனகல் வீரராக வேண்டும் என்று அறிவித்த பெரியாரின் கனவை மெய்ப்பிக்கும் வண்ணம் உருவெடுத்திருக்கிற தளபதி,
	இங்கிலாந்து நாட்டில் பேசுவதற்கு தடைவிதிக்கப்பட்டபோது ‘எனது வெடி மருந்தை இந்தியா செல்லும் வரை நனையாமல் வைத்திருப்பேன்’ என்று சொன்ன T.M.நாயரின் நனையாத திராவிட வெடி மருந்து தளபதி,
‘தியாகராயர் களத்தில் தூவிய விதை நன்றாக விளைந்து செயலாற்றுகிறது’ எனும் பேரறிஞரின் பெருமிதத்தின் அச்சொட்டாகச் செயலாற்றும் வீரிய விதையான தளபதி, 
மருத்துவத் துறையில் இந்தியர்களை அதிக அளவில் பங்குபெறச் செய்ய, முதன் முதலில் சட்டமியற்றிய போது, பெரும் எதிர்ப்பு வருகையில்,	
	‘எதிர்ப்பு எந்தப் பக்கத்தில் இருந்து
	வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மையை
	விளைவித்தால் அதை வரவேற்க தயாராய்
	இருக்கிறேன் தீமை விளைவிக்குமானால்
	அதை எதிர்த்து முறியடிப்பேன்’ 
என முழங்கிய பனகல் அரசர்போல், பெரு நெருப்பாய்த், 
தமிழகத்தை இன, மானப், பகுத்தறிவுப் பாதையில், மதவாத சக்திகளுக்கு எதிராக வழி நடத்துகின்ற திராவிடப் போராளி தளபதிக்கு வணக்கம்!
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்
		விண்ணோடும் உடுக்களோடும் 
	மங்குல் கடல் இவற்றோடும்
		பிறந்த தமிழுடன் பிறந்தோம்
ஆனால் அதைவிடச் சிறப்பாய்,
	பெருமைமிகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன் பிறப்புக்களாய்ப் பிறந்தோம் எனும் பெருமிதமுடன் இங்கு கூடியிருக்கின்ற கழக உடன்பிறப்புகளே, தோழியரே, 
ஒரு நாட்டின் முக்கிய அரண்கள் மூன்று, மலையரண், காட்டரண், நீர் அரண். அவை போலக் கழகத்தைக் கட்டிக் காக்கின்ற மூத்த முன்னோடிகளே, நிர்வாகிகளே - வணக்கம்!
இந்தக் கொங்கு மண் வள்ளுவரைக் கொண்டாடிய மண்!
15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழகத்தின் மிகப் பழமையான திருக்குறள் கல்வெட்டைப் பெற்ற மண்!
சேலம் மாவட்டம் பொன்சொரிமலையில், தாமரைப்பாழியின் பாறையில், திருக்குறளின் 251ஆவது குறளைக் கல்வெட்டாய்ப் பொறிக்கப்பட்ட மண்!
இராசிபுரம் திருக்குறள் கல்வெட்டும், குறள் ஓலைச் சுவடிகளும் கொண்ட மண்! 
பரமத்தி பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவன் அல்லாள இளைய நாயக்கன், திருச்செங்கோடு, பழனி ஆகிய ஊர்களில் திருவள்ளுவருக்கு மடங்கள் அமைத்தும், கபிலமலையில் நூறு கொத்தர்களைக் கொண்டு, ஒரு லட்சம் வராகன் செலவில், வள்ளுவருக்கு மடம் கட்டிய பெருமையும் கொண்ட மண்!
200 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஈரோடு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட திருக்குறள் ஓலைச்சுவடியில் - வலப்புறம் திருக்குறள், கீழே பரிமேலழகர் உரை, இடப்புறம் உத்தமம், மத்திமம், அதமம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு, முன் மாதிரி குறிப்பைக் கொண்ட ஓலைச் சுவடியைப் பெற்ற மண்!
அது மட்டுமல்ல - பிற்காலக் கொங்கு நாடு மிகத் தனித்துவமானது! ‘மனுகுல தீபன்’ எனப்பட்ட முதல் குலோத்துங்கன், ‘மனுவாறு விளங்கியவன்’ எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் பார்ப்பனிய மனுதரும, ஆட்சி நூல், அற நூலை அது ஏற்கவில்லை! மாறாகத் திருக்குறளைத் தன் அற, ஆட்சி நூலாக அது ஏற்றுப் போற்றியது.
கொங்கு நாட்டுத் திருக்குறள் ஆவணங்களால், அம் மக்களின் 15ம் நூற்றாண்டிற்குப் பின்பான வாழ்க்கைப் பதிவுகளில், “அனைத்து மக்களுக்கும் பொதுவான அறம்” எனும் கோட்பாடே முக்கியமென அறியலாம். அப்படிப் பண்பாட்டுத் தனித்தன்மை வாய்ந்த இக்கொங்கு மண்ணில் “திருக்குறளும் திராவிட வாழ்வியலும்” என்பது குறித்து பேசுவது பெரு மகிழ்ச்சி.
‘தமிழரது மெய்யறம்’ என வ.உ.சி. யாலும்,
‘திருக்குறள் ஒரு கண்டன நூல்’ எனத் தந்தை பெரியாராலும்,
‘வள்ளுவர் செய் திருக்குறளை 
மறுவற நன்குணர்ந்தோர் 
உள்ளுவரோ மனுநீதி
ஒரு குலத்துக்கொரு நீதி’ என மனோன்மணியம் சுந்தரனாராலும்,
‘நான் உடலால் என் தந்தையின் மகன், உள்ளத்தால் திருவள்ளுவரின் மகனாக இருக்கிறேன்‘ என டாக்டர் மு.வரதராசனாராலும்,
“அறிவை முதன்மையாகப் போற்றும் குறளைப் பாராட்டுகிறேன்” எனப் பகுத்தறிவுவாதி இங்கர்சாலாலும்,
அண்ணல் காந்திக்கு ‘திருக்குறளின் மாண்பை’ எடுத்துச் சொல்லிய லியோ டால்ஸ்டாயாலும்,
“வள்ளுவர் பிற்பட்ட மக்களின் குரு” எனப் போற்றிய ஜி.யு.போப்பாலும்,
பலவகைகளில், பலமொழிகளில் பாராட்டப்பட்டது, மொழிபெயர்க்கப்பட்டது திருக்குறள்.
குறளுக்கு எத்தனையோ பெருந்தகைகள் உரை எழுதியுள்ளார்கள் மனக்குடவர் முதல் சுஜாதாவரை ஆனால், யார், யார், அவர்கள் எம்மனாராக இருப்பினும் எக் கண்ணோட்டத்தில் குறளைப் பார்த்தார்கள், படித்தார்கள், தெளிவுற்றார்கள் என்பதல்லவா முக்கியம்?
திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதுவதற்கு முன்பு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைச் சந்திக்கிறார். டாக்டர் மு.வ. “என்ன பாங்கில் உரை எழுதுவதாக உத்தேசம்” என மு.வ.விடம் கவிஞர் கேட்கிறார். அதற்கு மு.வ. “பரிமேலழகர் உரையை அடிப்படையாக வைத்து எளிய நடையில் உரை எழுதுவதாகக் கூறினார்”. உடனே பாவேந்தர், “அதற்குப் பரிமேலழகர் உரையையே படித்து விடலாமே? உம்முடைய உரையை ஏன் படிக்க வேண்டும்?” என்றாராம்.
“ஊழ்” எனும் வள்ளுவரின் சொல்லிற்கு “Ooz is the Tamil word for the law of Karma” என்றெழுதினார் மூதறிஞர் ராஜாஜி.
இவையெல்லாம் பரிமேலழகரை வழிமொழிகின்ற பணிகளே, “வள்ளுவர் உள்ளம்” ஆகிவிட முடியாது என்கிறார்கள் திராவிட இயக்க ஆய்வாளர்கள்.
1948இல் தந்தை பெரியார் திருக்குறள் மாநாடு நடத்திய பின்பே, காஞ்சி சங்கராச்சாரியார் 1949, 1950 ஆண்டுகளில் குறளுக்கு உரை எழுதச் செய்து வெளியிடுகிறார். திருக்குறள் வேதஞ்சார்ந்தது எனும் பொய்யான பரப்புரைக்காகத் தானே அது? எனக் கேட்டதும் திராவிட இயக்க ஆய்வாளர்கள் தான்! 
	“இனத்தைச் செய்தது மொழிதான்,
	இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்”
என்பதற்கிணங்க தமிழ் மொழியில், திராவிடர்களது வாழ்வியலை அவர்தம் அரசியல், சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுச் சித்திரத்தை ‘உலகப் பொதுமுறையென’ உணர்த்தி நிற்பது திருக்குறள்.
	உலகெங்கெங்கும் நிலவுகின்ற எதிரெதிர்த் துருவப் பண்புகள் (Binaries) நம் மண்ணிலும் உண்டு.
	தென்மொழி, வடமொழி,
	திராவிடர், ஆரியர்
	தமிழர் நெறி, ஆரிய வைதிக மதம்
	திருக்குறள், பகவத்கீதை
எனும் binaries இல் திராவிட வாழ்வியலை உலகத்திற்கு எடுத்து இயம்பியது குறள் என்பதால் தான் தந்தை பெரியார், “குறளின் உயர்வைப் பற்றி அதன் வழிகாட்டுதலைப் பற்றி நான் வற்புறுத்தும் போது, ஒரு சுயமரியாதைக்காரன், பகுத்தறிவு வாதி, திராவிட இயக்கத் தலைவன் என்ற முறையில் தான் வற்புறுத்துகிறேனே அல்லாமல் வேறில்லை” என்கிறார்.
	மதுரைத் தமிழ் நாகனாரின் 
“எல்லாப் பொருளும் இதன் பால் உள; 
இதன் பால்
இல்லாத எப்பொருளும் இல்லை”
எனும் வியப்பிலிருந்து, ஆய்வாளர் குணாவின், ‘’வள்ளுவத்தின் இடிபாடுகளின் மீதே இன்றைய பார்ப்பனீயம் வானளாவி நிற்கிறது” எனும் கூற்றுவரை, எத்தனை கண்ணோட்டங்களைக் கண்டிருக்கிறது, நம் உலகப் பொதுமுறை!
	திராவிடர்களுக்கு நீதி நூல் ஒன்றே, அது திருக்குறள் எனத் தந்தை பெரியார் அறிவித்தார். எப்படி என்றால், ஒரு நாத்தீகனாக அதனை ஆய்ந்தறிந்து! நாத்தீகன் என்றால் அறிவைக் கொண்டு ஆராய்வது, கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி, சாஸ்திரங்கள் பற்றி, பெரியோர் என்று சொல்லப்பட்டவர்கள் சொன்ன கருத்துக்கள் பற்றி அறிவைக் கொண்டு ஆராய்பவனே நாத்தீகன். அவன் வெறும் கடவுள் மறுப்பாளன் மட்டும் அல்லன்!
	வள்ளுவர் வர்ணாஸ்ரமத்திற்கு எதிரான சமதர்மவாதி! உழைக்கின்ற உழவனின் சுழல்கின்ற ஏர் பின்னது உலகம் என்கின்ற பொதுவுடமைவாதி! மதத்திற்கெதிரானதொரு பொது நெறியை முன்வைத்தவன்! மனுவின் தர்மத்திற்கும், ஆரியத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான ஆதி திராவிடப் பூட்டன் அவன்!
	சோவியத் அரசின் அதிகார பூர்வமான பத்திரிகையான 'பிராவ்தா' முன்னொருமுறை கலைஞரிடம் ஒரு கேள்வி கேட்டது:
	கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்நெறி, இலட்சியம் என்னவென்று கூறுவீர்களா?
கலைஞர்: சமுதாயத்தில் சமத்துவம் - பகுத்தறிவு; பொருளாதார துறையில் சமதர்மம்; அரசியலில் ஜனநாயகம். 
வள்ளுவம் காட்டுவது இதைத்தான்.
	“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் வர்ணாஸ்சிரமத்திற்குச் சம்மட்டி அடி இது. யார் எத்தொழிலைச் செய்தாலும், மக்கள் பிறவியில் யாவரும் சமம் என்கிறது அக்குறள்!
	“வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
	உள்ளத்து அனையது உயர்வு” என்றதும் குறளே!”
	உழவு, மருத்துவம், துணிவெளுத்தல், முடிதிருத்துதல், ஓடம் செலுத்துதல் முதலான தொழில்களைத் தருமசாத்திரங்கள் இழிவானவை என ஒதுக்கியுள்ளன. பிற்காலச் சோழப் பேரரசில் விளை நிலங்களைத் தானம் பெற்று நில உடைமைச் சமூகத்தினராகப் பார்ப்பனர்கள் உருவான நிலையிலும் கூடப் பார்ப்பனர்கள் ஏர்பிடித்து நிலங்களை உழுதல் கூடாது என்று ஊரவை முடிவு செய்ததைக் கல்வெட்டு ஒன்று குறித்துள்ளது.
	காந்தியடிகள் தமிழகம் வந்திருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்று இதனை உறுதிப்படுத்தும் என்கிறது ‘சமூகநீதி’ எனும் புத்தகம். 
“தஞ்சை மாவட்டத்தில் 1921 ஆம் ஆண்டில் இரண்டு பிராமண சகோதரர்கள் உழவுத் தொழிலை மேற்க் கொண்டார்கள். இதற்காகப் பிராமண வகுப்பைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களைச் சாதியிலிருந்து தள்ளி வைத்து விட்டார்கள். காலம் சென்ற காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் அப்பகுதிக்கு வந்தபோது பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். ஆனாலும் இந்த இரு சகோதரர்களும் சளைக்கவில்லை. தொடர்ந்து தங்கள் உழவுத் தொழிலைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள். இவர்களில் ஒருவர், காந்திஜிக்குத் தங்களுடைய நிலையை விளக்கிக் கடிதம் எழுதவே, அண்ணல், அவர்களுடைய அஞ்சா நெஞ்சத்தைப் பாராட்டினார். 
ஆனால் உழவின் மேன்மையை, அன்றைய வேளாண் சமூகத்தை உயர்த்திப் பிடித்து சனாதனத்திற்கு எதிரானவராக தம்மை நிறுத்துகிறார் வள்ளுவர்!
	“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
	மெய்வருத்தக் கூலி தரும்!”
இதிலே ‘மெய்வருத்தம்’ என்பதே உடலுழைப்பு. தன் உடல் உழைப்பின், வியர்வையின் கூலி பெருமைக்குரியது, யாராலும் தட்டிப் பறிக்க முடியாதது எனும் வள்ளுவர் ஆரியப் பண்பாட்டின் எதிரி அல்லவா?

	“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!”
என்கையில் பொதுவுடமை வாதியாகவும்,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்கையில் பகுத்தறிவுவாதியாகவும்
	அறம், பொருள், இன்பமோடு நிறைவு செய்து ‘வீடு’ எனப்படுகின்ற, சனாதனவாதிகள் 	‘மோட்சம்’ என நிறுவுகின்ற ஒன்றைத் தவிர்த்து, மூட நம்பிக்கையற்றவராகவும், ‘எழுமை’ என்றால் ஏழு பிறவிகள் அல்ல, ஏழு தலைமுறைகளால் போற்றப்படுவன் எனச் சுட்டி, ‘கடவுள்’ எனும் சொல்லைச் சொல்லாமல் - ‘வாலறிவன், மலர்மிசை ஏகினான், மானடி சேர்ந்தார், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - என மனிதனது பண்புநலன்களைக் காட்டுகின்ற சொற்றொடர்களை புகுத்தியதால் இருத்தல் வாதியாகவும், சாங்கியமெனும் தத்துவச் சார்பு இருப்பினும், மதமெனும் சங்கிலியால் பிணைக்கப்படாதவராக புரட்சியாளராகவும், திராவிட வாழ்வியலைப் படம்பிடிப்பவராக, அதன் முன்னோடிப் படைப்பாளியாகத் திருவள்ளுவர் உயர்ந்து நிற்கிறார்.
	18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்ததால், மாணவர்களிடையே அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துக்காட்டுவார் தனஞ்செய்கீர். பள்ளிக்கு ஆய்வாளராகச் சென்ற அதிகாரி, வகுப்பறையில் குச்சிகளும் சில மண்கட்டிகளும் வைத்திருந்ததைப் பார்த்து 'இவற்றை இங்கே வைத்திருப்பதற்கான காரணம் யாது' எனக் கேட்க வகுப்பாசிரியரான, பார்ப்பனப் பண்டிதர்,
சாதி இந்துக்களைக் கண்டிக்கும் போது நான் இந்தக் குச்சியைப் பயன்படுத்துவேன். இதே குச்சியின் மூலம் தீட்டு என்னைத் தாக்கிவிடுமே, அதனால் என் உடம்பு முழுதும் தீட்டாகிவிடுமே. அதனால்தான், ஒரு மகார் மாணவன் சரியான விடைகளைச் சொல்லாதபோது அவன் மீது வீசி எறிவதற்காக இந்த மண்கட்டிகளை வைத்திருக்கின்றேன். 
என விடையளித்தார்.
இதுதான் மனுதர்மம் - பிறவியினாலேயே பார்ப்பனர் உயர்ந்த ஜாதியார் என்பது. ஆனால் திருக்குறளில் ஓரிடத்தில் கூட பிராமணன், சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத் தீண்டாமை சமூகத்தின் எல்லாச் சாதியமட்டங்களிலும் இருந்தது 19ஆம் நூற்றாண்டுத் துவக்கம் வரை!
அண்ணல் அம்பேத்கர் மும்பை 'எல்பின்ஸ்டன் கல்லூரி' மாணவனாக இருந்தபோது, ஒரு முடி திருத்தும் தொழிலாளியிடம், முடி திருத்தச் சொன்னார். அதற்கவர் "ஓர் எருமை மாட்டுக்கு முடி மழித்தாலும் மழிப்பேனே தவிர, உனக்கு மழிக்க மாட்டேன். போ" என்று விரட்டினார். தன்னுடைய விடுதலைக்கும் சேர்த்துத்தான், அந்த மாமனிதன் வட்டமேஜை மாநாட்டிலே முழங்கப் போகிறான் என்பது அப்போது அந்த மனிதனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 
	இன்று நாம் பார்ப்பனர்களுக்கு எதிரிகள் அல்ல - பார்ப்பனியத்திற்குத்தான் எதிரிகள் எனும் புரிந்துணர்வு, நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம்! பாபுராவ் புலேயும், அண்ணல் அம்பேத்காரும், தந்தை பெரியாரும் காலப் போக்கிலே அறிவின் வழி ஆராய்ந்து கலை, இலக்கியங்களைப், பண்பாட்டை மீட்டுறுவாக்கம் செய்ய நமக்குக் கற்றுத்தந்துள்ளார்கள்!
	தொல்காப்பியரைப் பார்த்து,
	“அச்சமும், நாணும், மடனும், முந்துறுதல் நிச்சமும்
பெண்பாற்குரிய” எனப் பெண்களுக்கு இலக்கணம் வகுத்த நீர் ஏன் ஆண்களுக்கு அவ்வாறு வகுக்கவில்லை என்கின்றோம்! தொல்காப்பிய சமுதாயத்தில் பெண்களுக்கு கற்பே உயிர் - ஆனால் ஆண்களுக்கு ‘காமக்கிழத்தி’ என்றும், பலதாரமணமுண்டே அது ஏன் எனக் கேட்கிறோம்!
புரட்சிக் கவிஞரின்,
“நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் 
முழங்கு சங்கே!”
எனும் வரிகளை மாற்றி
	நாங்கள், பெண்
	சிங்கத்தின் கூட்டமென்று
	முழங்கு சங்கே! என்கிறோம்
(ஏனெனில் ஆண் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்வதில்லை பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடி இரையெடுத்து வருகின்றன என்பது அறிவியல் பூர்வமான உண்மை!)
	தந்தை பெரியாரும் அவ்வாறே வள்ளுவரின் “வாழ்க்கைத் துணைநலம்”, “பெண்வழிச் சேரல்” ஆகிய அதிகாரங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக் காட்டி, அவற்றை நீக்கிவிட்டுப் பாடத்திட்டத்தில் வைக்கவேண்டும் என்றார். அவர் தான் பெரியார்! பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள் - “பெண்ணைப் பரத்தையராக்கிய குறள், ஆண்மகனைப் பொதுமகன் ஆக்கி இழிவுபடுத்தவே இல்லை. கற்புடைய பெண்ணைப் போற்றும் குறள் குணம் கெட்ட கணவனைக் ஏன் கும்பிட வேண்டும் எனக் கேட்கவில்லை. பெண் சமூகத்தின் ஒரு பகுதியினரை நிலையான ஒழுக்கம் கெட்டவர்களாக ‘வரைவின் மகளிர்’ ‘பொது மகளிர்’ எனப் பிரித்த வள்ளுவர், ‘கீழ்மகன், ஊரியன்’ என்று குணம் கெட்ட ஆண்மகனை தனியராகத் தான் சாடுகிறார். பரத்தையரைச் சேரும் அவர்களை, இகழ்ந்து, ஒரு பிரிவாக ஏன் தனித்துச் சுட்டவில்லை?” 
	அதனால்தான் தந்தை பெரியாரும் கூட, 
	“நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதின்மூலம், குறள் முழுவதையும் ஒப்புக்கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதிவிடாதீர்கள் எனக்கு - எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம் அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு - எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன. அதுபோலவே ஒழுக்கவாதிகளுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் வேண்டியவைகள் எல்லாம் அதில் இருக்கிறது, எடுத்து கொள்ளுங்கள்” என்கிறார்.
ஆறாம் வகுப்பு CBSE பாடத் தேர்வில் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சூத்திரன் எந்தப் படிநிலையில் உள்ளான் எனக் கேள்வி கேட்கப் படுகின்ற அவல நிலை இருக்கின்ற இன்று, திருக்குறள் கிழக்கில் திராவிடருக்குக் கிடைத்த கடல் முரசு! திராவிடர்களாகிய நாம் காப்புக் கடவுளையும், ஏற்புடைக் கடவுளையும் விட்டுவிட்டுத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும் மரபுடையவர்கள்! ஞாயிற்றை, திங்களை, மாமழையைப் போற்றி வணங்கும் மரபுடையவர்கள்! இவற்றுடன் இணைத்துக் குறளைப் பாடியும், ஆடியும், கலையின் வழிப் போற்றுவோம்! அதன் மூலம் நம் அடுத்த தலைமுறைக்கு இதனை அறிவோடு கையளிப்போம்!
மார்க்ஸ் சொல்லுகிறார்:
	"பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப்புரட்சி தன்னுடைய கவித் திறனைப் பழங்காலத்திலிருந்து பெறமுடியாது; எதிர்காலத்திலிருந்து தான் பெறமுடியும்.  அன்று (பழைய நூற்றாண்டுகளில்) உள்ளடக்கத்தைக் காட்டிலும் சொற்கள் முக்கியமானவை; இன்றோ (இந்நூற்றாண்டில்) சொற்களைக் காட்டிலும் உள்ளடக்கம் முக்கியமானது." 
	அவ்வகையில் பொருண்மையிலும், சொற்சிக்கனத்திலும் சரிசமமாகச் செறிவாகப் பொலிவது திருக்குறள். என்றாலும் சமகாலப் பொருத்தப்பாடு எனும் கண்ணாடி கொண்டும் அதனை ஆய்ந்தறிவோம்!
	கலையோ, இலக்கியமோ நம் காலத்து வாழ்வை, நம் இனத்தின், மொழியின் இருப்பை பண்பாட்டின் தொடர்ச்சியை அடையாளப்படுத்துகிறதா, நம் மண்ணின் தற்காலச் சிக்கல்களுக்கான மீட்சி அதன் வழி புலப்படுகிறதா எனும் கேள்வியையும் முன்வைப்போம்!
	"யாராவது ஒரு குறும்புக்காரன், இரண்டிலே ஒன்றைச் சொல், இந்தியனா? தமிழனா? இதிலே நீ எதுவாக இருக்க விரும்புகிறாய்? இரண்டிலே ஒன்றைத்தான் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கேட்பானேயானால் நான் அப்போது சொல்வேன்; நான் தமிழனாகத்தான் இருக்க விரும்புகிறேன்" என்றார் கலைஞர்!
	நான் சொல்லுவேன் - நீ இந்தியனா தமிழனா என்றால், தலைநிமிர்ந்து - நானொரு திராவிடத் தமிழச்சி என்று! திருக்குறளைப் போற்றும் திராவிடத் தமிழச்சி என்று!

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *