பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா – கவியரங்கம் – 15.09.2008

‘அணையா விளக்கு - அண்ணா’

கவி அரங்கத் தலைமை தாங்கும் 
தமிழ்த் தாயின் ஒப்பு உவமையற்ற தலைமகனே !
ஐந்தமிழ்க் கவிஞர்களின் படையிடையே
ஒரு ‘தமிழச்சியின் கத்தியும்’
இருக்கட்டும் என்று தான்,
அரசரே புலவராய் அரங்கத் தலைமை  வகிக்கும்
இவ்வரிய மேடையில், 
இளம்பிறை நான் பங்கேற்கும் வாய்ப்பை,
சூரியனே,
எனக்களித்தீரோ?

தமிழச்சியாய் இருந்த என்னை,
தமிழச்சி தங்கபாண்டியனாய்க் கூர்
தீட்டிப் பார்த்தவரும் நீர் தானே?

இன்று,
இச்சிறு விதைக்குத் தமிழ் வாய்க்கால் நீர் பாய்ச்சி,
என்றும்
எனை வாழ வைக்கும் கவிதைப் பச்சயமும்
                         உன் தமிழ் வேர்  தானே  !

இங்கு வீற்றிருக்கும் இந்தத்
திருவாரூர்த் தேரை
இளம் பிராயத்திலேயே
பகுத்தறிவுக் குஞ்சமிட்டு
ஈரோட்டுப் பட்டறைக்கு
இழுத்து வந்தது
அந்தக்
காஞ்சிபுரத்துத் தண்டுவடம் !
என் தலைவா!
பெரியார், அண்ணா எனும்
தண்டவாளங்களின் மடியில்
தலைவைத்துப் படுத்தவன் நீ !
இடையில் ‘காந்தம்’ வந்தால்
இந்தக் கல்லக்குடி ரயிலென்ன
கவிழ்ந்துவிடவா போகின்றது?

கண்ணனுக்கு ஒரு போர்ச் சங்கு
அர்ச்சுனனுக்கு ஒரு வில்
ராமனுக்கு ஒரு சொல்
இவை எல்லாவற்றையும்,
வாரிச் சுருட்டிய பாயாய்
மடித்து எறிந்தது
உன் ஒரு ‘ரூபாய்’ !

ஆண்டவர்களை விட,
உனக்கு முன்
ஆண்டவர்களை விட,
அந்த ஒரு ரூபாயை
அட்சய பாத்திரமாக்குகின்ற அதிசயம்
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது !

அந்த அட்சய பாத்திரத்தின் முன் 
தாருகா வன
‘மாம்பழம், பலாப்பழமெல்லாம்’ எம்மாத்திரம் !

உலை கொதிக்கும் ஒவ்வொரு
                     நெல் மணியும்
உன் பெயர் சொல்லும் சரித்திரம் !

புடம் போட்ட பகலவனாய்க்
களம் பல கண்ட உனக்கு
அரசும், அரசியலும்
இரு சக்கரங்கள் என்றால்
இலக்கியமும், கலையுமே அதன் கடையாணி;

தேர்தல் போரினிலே 
தேர்ச் சக்கரங்கள் பழுதுபட்டு
அரசு கட்டிலில் நீ அமராது இருந்திருக்கலாம் சில காலம்.
ஆனால்,
கடையாணியைக் கழற்றி வைத்து 
ஓய்வெடுத்ததில்லை நீ ஒருக்காலும்.
சமூக நீதி, பகுத்தறிவு எனும் பாதையிலே
கடைக்கோடித் தமிழனும் பயணம் போக
அக் கடையாணியையே,
கடவுளுக்குப் பதில் 
கடவுச் சீட்டாக்கினாய் !

உன் நாடகங்கள் -
பண்டிதத்தில் மரத்திருந்த மேட்டுக்குடியின்
பிடறியைப் பலம் கொண்டு உலுக்கின !
பாமரனாய்ப் புதைந்திருந்த கீழ்க்குடியின்
கை தூக்கிப் பரிவோடு உசுப்பின !

உன் வசனங்கள் -
வெடி மருந்துக் கிடங்கில் விழுந்த தீக் கங்குகள் !

உன் பாடல்கள் - 
வலியோர்க்கு, 
நெஞ்சுறுத்தும் நெருஞ்சி முள் !
எளியோர்க்கு, 
பஞ்சென வலி தீர்க்கும் பனை மரத்துக் கள் !

உன் மேடைப் பேச்சு -   
நாடி நரம்பெல்லாம் சூடேற்றும்
சுதந்திரப் போர் வீரனின் சுடு மூச்சு !     

உன் கவிதையோ,
சில சமயம், 
தமிழென்னும் தலைவியைவிட 
அழகாய் இருக்கும் சேடிப் பெண் !

பல சமயம்,
தமிழென்னும் செவிலி 
உச்சி முகர்கின்ற படு சுட்டிப் பெண் !

எச் சமயமும்,
தமிழென்னும் அன்னை 
மெச்சிக் காக்கும் கன்னிப் பெண் !


என் உயிர் மூச்சே, 
உம்மை வணங்குகிறேன் ! 

மேடையிலிருக்கும் மூத்தோர்க்கும்,
அவையோர்க்கும் வணங்கி,
ஆரம்பிக்கின்றேன் -  

‘அணையா விளக்கு - அண்ணா’

அது ஒரு இருண்ட காலம்.
ஆர்யத்தின் மாயை, வைதீகத்தின் சாயை,
வடமொழியின் போதை,  உயர்சாதியின் காதை, 
எனும் வரலாற்றுக் கசடுகளால்
களிம்பேறி, 
களப்பிரர் காலமெனத் தமிழகம் மங்கித் 
தூங்கியிருந்த காலம் !
தமிழன் சற்றே பின்தங்கிச்
சோம்பியிருந்த காலம்.

முயலின் தூக்கமே ஆமையின் வெற்றி எனில்,
புலியின் தூக்கம் -  
தமிழ்ப் புலியின் தூக்கம்
ஆர்யத்தின் வெற்றி அல்லவா?

தூங்கும் புலியைத் தள்ளாடும்
தடியொன்று தட்டி எழுப்பிற்று.


வெண்தாடித் திரி ஒன்று
வெளிச்சம் வர
‘அண்ணா’ எனும்
அற்புத விளக்கொன்றைத் தூண்டிற்று !

ஈரோட்டுப் பாசறையில்
தடியும், தாடியும் மட்டுமல்ல 
பகுத்தறிவுப் படைக்கலன்கள் -   
பொடியும், வெற்றிலையும் கூடத்தான்.

சொக்குப் பொடி போடும்
அண்ணாவின் பேச்சில்
தும்மி, துள்ளிப் பறந்தது தமிழனின் தூக்கம் !

அவர் தம்
வாய் பதுக்கி இருந்த வெற்றிலையின் தமிழ்ப் பற்றில்
பம்மிப் பதுங்கியது, 
வாய்ப்பற்று - பகைப் புற்று.

வெற்றிலை - இனம்;
பாக்கு -  மொழி:
சுண்ணாம்பு -  மானம்:
இம்மூன்றும் காக்க 
தமிழன்
அன்று சிந்திய இரத்தம் தானே
அண்ணாவின் அந்த வெற்றி (லை)ச் சிவப்பு !

இன்று,
முளைத்து ‘இரண்டு இலை’
விடாதவர்கள் கூட,
இனமென்றும், மொழியென்றும்
அவர் பெயரால் கதை பேசி
பக்கத்து இலைப் பாயசத்திற்குப்
‘பம்பரமாய்’ முந்துகிறார்களே என்பதே நம் கவலை!

‘தமிழன் யாருக்கும் தாழாமல்,
யாரையும் தாழ்த்தாமல் தலை நிமிர்ந்து
வாழவேண்டும்’ என்ற
அந்தச் சுயமரியாதைச் சுடர் விளக்கு,
ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களை
அனலூட்டி,
அரசியலுக்கு இழுத்து வந்த 
‘ஆக்டோபஸ்’ அகல் விளக்கு !
கனலூட்டிக் கட்சி வளர்த்த
தமிழ்க் காற்றாலை மின் விளக்கு !

பெரியார் துலக்கிய அந்தத் திராவிட விளக்கு,
ஓடி வந்த இந்திப் பெண்ணிடம்,
தமிழ், ஆங்கிலம் எனும் இரு விழி இருக்கையில்
மூன்றாவதாய் நீ எதற்கு?
‘முக்கண்ணில்’ நம்பிக்கையில்லை எமக்கு
என விளக்கி, வீட்டிற்கு அனுப்பியது.

வாதாபியை வென்ற தமிழனுக்கு
‘தமிழ்நாடெனும்’ வரலாற்றுப் பெயரை
வாதிட்டுப் பெற்ற அந்த
பல்லவ நாட்டு பாஸ்பரஸ் விளக்கு
பட்டி தொட்டியெல்லாம் பகுத்தறிவுச் சொக்கப்பனை பரத்திற்று !

‘கலைஞர்’ எனும் அக்கினிக் குஞ்சொன்றை அடைகாத்த
அந்தக் காஞ்சிபுரத்துக் கந்தக விளக்கு,
சுயமரியாதைத் திருமணங்களுக்கு
சட்டப் புத்தகத்தில் அரியாசனம் தந்தது.

ஆழிசூழ் கடலோரம்
அயர்ந்துறங்கும் தமிழ்ச் சங்கே, எம் அண்ணா!

‘கண்ணீர்த் துளிகளை’ ஒன்று சேர்த்து
எரிமலைக் குழம்பு ஒன்றை,
ஒரு மூன்றெழுத்து இயக்கமாக
உருவாக்கியவன் உலக சரித்திரத்தில் நீ மட்டுமே !

நீ தமிழில் பேசினாய் - 
தன் வேலை அனைத்தையும் விட்டுவிட்டுத்
தமிழ்த்தாய் வந்து
முன்வரிசை அமர்ந்து
முனைப்போடு குறிப்பெடுத்தாள்.

நீ ஆங்கிலத்தில் பேசினாய் -    
அயல் மொழி வல்லுநர் கூட வியக்கின்ற
இதயத்தின் மொழியாய் இருந்தது அது !

நீ நாடாளுமன்றத்தில் முழங்கினாய் -   
தென்கோடித் தமிழனும் தலை நிமிர்ந்திருந்த
தங்கத் தருணமாய் இருந்தது அது !

நீ எழுதுகோலை எடுத்தாய் - மையல் கொண்டு,
தமிழ்மை வந்து தானாய் நிரம்பியது.
செல்லமாய் அதை நீ
சில சமயம் தட்டும் பொழுது,
சிதறும் துளிக்காய்
அங்கே,
ஆங்கிலம் வந்து கையேந்தி நின்றது !

மூடி வைக்காத உன் மேல்
கோபம் எனக்கு என்று
ஊடிக் கொண்டிருக்கையில் மட்டுமே,
உன் சட்டைப்பையில் வைத்து
அதனை சமாதானப் படுத்தி இருக்கிறாய் !

நீ நாடகங்கள் எழுதினாய் -  
தாடியில்லாத தமிழ்ப் பெர்னாட் ஷா என
உலகம் உன்னை உற்றுக் கவனித்தது !  

கதை, கட்டுரை, புதினங்களில் எல்லாம் 
தொடுவானம் வரை பெரும் புயலாய்ச் சென்ற நீ,
கவிதைக் கடலில் மட்டும் காலடி
நனைத்து விட்டுத் தென்றலாய்க்
கரையோரம் நின்றதேன்?
உன் தம்பி,
என் தலைவர், 
அதில் வெகுதூரம் நீந்தி
வெற்றிக் கொடி நாட்டியதை
தமிழ்த் தாயோடு சேர்ந்து நின்று
தானும் வியப்பதற்கா?

எப்போதும் புத்தகங்களைத் தூக்கிச் சுமந்த
எங்களின் தூண்டா மணி விளக்கே,
நீள் உறக்கம் கொள்ளும்
நெடும் பயணம் முன்பு வரை
ஒரு புத்தகத்தைப் படித்திருந்த மங்கா ஒளி விளக்கே,

தமிழ்ச்சுரங்கம் தோண்டும் பொழுதெல்லாம்
எம் தலை அணியும் தற்காப்பு தனி விளக்கே !

உன் ஆட்காட்டி விரலின்
அருங்கொற்றக்குடையின்கீழ்
இன்று
ஆட்சி செய்யும் எங்கள்
‘குலவிளக்கை’ வார்த்த
தமிழ்குன்றின் கனிமப் பெருவளமே !

நீ,
இப் பூவுலகில் தங்காது
எமைப் பிரிந்தாலும்,
பிரியாது, அணையாதிருக்கிறாய்
என் 
‘தலைவரெனும்’ தனி உருவில் இன்று !

இங்கிருக்கும்
ஆறு கோடித் தமிழர்கள் மட்டுமல்ல,
கடல் கடந்த உடன்பிறப்பும் கண்ணுறங்கக் காத்திருக்கும்
கலங்கரை விளக்காய் நின்று !

நன்றி!!!     வணக்கம்!

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *