“பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா” கவியரங்கம் 22.11.2008 – சிதம்பரம்

`ஏழைகளை உயர்த்திய யேல் பல்கலைக்கழகம் - அண்ணா’

எல்லா அரங்கத்திலும்
என் தலைவர் கலைஞருக்கே
முதல் வணக்கம்.

சுயமரியாதை மண் எடுத்து,
தமிழென்னும் நீர் பிசைந்து,
இனமென்னும் அச்சிலே
மானமென்னும் கலயம் வனையும்
பகுத்தறிவுச் சூரியனே
என் தலைவா -

கழகத்தின் படைக்கலன்கள் பலருண்டு அதில்
கடைக்கோடியில் எனக்கும் ஒரு இடமுண்டு என
இக் குயிற் குஞ்சை அடைகாத்த
திருக்குவளைத் தமிழ்க் கூடே!

அம்பறாத் தூளியை இதுகாறும்
காலியாய் வைத்திருந்த
அகல் விளக்காம் இத் தமிழச்சியைத் 
திசையெல்லாம் தமிழ் பேசப் பணித்த
திருவாரூர்ப் பெருஞ் சுடரே!

தமிழ்மண் குவளையினைச் சுடாத
குளிர்நெருப்பு நீ!

உன் மண்ணில் உதித்ததினால்
தண் மலர்க் குவளையெல்லாம்
தமிழ்க் கண் திறந்து பூப்பதைக்
கண்டு ‘ஒரு தாமரையும்’ ‘இலை இரண்டும்’
கூம்பிச், சருகாகத்,

திருவாரூர் தேர் பார்த்துக்,
கான மயிலாடக் கனவு கண்ட கதையாய்த்
தாவிக் குதித்த ‘பம்பரமோ’, பாவம் -
சூரியனைச் சுற்றித்தான் தமிழ்க்கயிறு
சுழன்றியங்கும் என்பதறியாது
குடைசாய்ந்து கிடக்கின்றது.

வெள்ளித்திரை கை விட்டு
தராசைக் கையிலேந்தி
‘கண்கட்டி’ வித்தை காட்டும்
செப்படி வித்தைக்காரர்
கண் திறந்து பார்க்கட்டும் -

குற்றத்தின் எடை காட்டும்
தராசின் இரும்பு முட்கள்
எந்நாளும் ‘காந்தத்தின்’ பக்கம்தான் என்பதனைக்
கண் திறந்து பார்க்கட்டும்.

இங்கிருக்கும் ஏழைகளின் இதய உண்டியல்
உன் ஒரே ஒரு ரூபாயில் 
ததும்பி நிறைந்து விட்டதே!

முகுகொடிய விறகு சுமந்த
பாட்டாளிப் பெண்ணின் அடுப்படியில்
வியர்வை விடைபெற்றுக் கொண்டதை 
கடற்கரையில் கேட்கின்ற 
கவலையற்ற வளையோசை
காற்றோடு சேதி சொல்ல,
நீ கோட்டைக்கு போகும்
வழி நெடுக அது வெண்சாமரம் வீசுகிறது.

ஏழைக் குடிசைகளில் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள்
நம் கழகத்தின் இரு வர்ணக்கொடிக்கம்பகளாய்
இன்று இடம் பெயர்ந்து உயர்கின்றன.

இந் நூற்றாண்டின் இணையற்ற வள்ளலே -

எம் மண்ணில் சிந்தினாலும் அது
நம் இரத்தம் எனில்
கண்கள் பஞ்சமுறக்
கரையற்றும் பெருகும்
தமிழ்க் கண்ணீர் நீ!

இடையறாப் போரில் எரிநட்சத்திரங்களாய்ச்
சீறிப் பலியாகும் ‘நடுக்கற்களைத்’
தவித்துத் தாங்கிக் கொள்ளும்
தமிழ் நிலம் நீ!

நிலமற்றுப் போவாரோ
நம்மினத்தார் என்று
இதயம் கனமுற்றுக்
கவலைச் சூலுற்றுப் பிரசவிக்கும்
தமிழ்ப் பெருமூச்சு நீ!

நம் மண்ணைக் காவு கேட்கும்
இனவாதச் சிம்மத்தின் வால் நுனியில்
எரிதழலைக் கட்டிய
தமிழ் நெருப்பு நீ!

வழியற்றுப் புலம் பெயரும்
வளைகுடா விண்கலனுக்கெல்லாம்
தனி இடமுண்டு
இங்கு வாரீர் எனும்
தமிழ்ப் பால்வீதி நீ!

கையகல நிலப்பரப்பாய்க்
கடல் மீது கிடக்கும்
நம் ‘ஆறாவது விரலைக்’
காணிக்கையாகக் கேட்கும்
ஆச்சார்ய துரோணர்களுக்கு
எக்காலும் அடிபணியாத
இக்காலத்து ‘ஏகலைவன் நீ!’
என் தலைவா -
உம்மை, என் உயிர் மூச்சாய்,
நெஞ்சில் நிறுத்துகின்றேன்!

எல்லா அரசர்களும் போர் முனைக்குச் செல்வதில்லை
ஆனால்,
தளபதிகள் இன்றி இதுவரை
எந்தப் போரும் வெல்லப்படவில்லை.
கழகத்தின் வெற்றிக்கெல்லாம் 
காரணமாய் இருக்கின்ற
‘காயகல்ப’ தளபதியே -

முதல் கவியரங்கத்திலே
முத்தமிழ் அறிஞரால் 
கூர்தீட்டப்பட்ட ‘தமிழச்சியின் கத்தி’யினை
இவ்விரண்டாம் அரங்கத்திலே
சற்றுப் புடம் போட்டு,
ஓர் கூரம்பாய்ப் பார்ப்போம் எனும்
பேரன்புடன் இவ் வாய்ப்பளித்தீர்!

கூர் தீட்டிப் பார்த்தவர் தலைவர்-
அதனைப் பார் அறிய நெல்லையிலே
நாணேற்றச் செய்தவரும் நீர் தானே?

நீ அமைத்திட்ட `சுயஉதவிக்’ குழுக்கள் -
பெண்களைச் சுயம்புவாய் உருமாற்றிச்
சுதந்திர வெளிக்கு அனுப்புகின்ற
அற்புத விண்கலன்கள்!

நீ உருவாக்கிய பூங்காக்கள் -
அடித்தட்டு மக்களுக்கான
அத்தியாவசிய அரண்மனைகள்!

நீ கட்டிய மேம்பாலங்கள்-
நகரவாசிகளின் நாட்களை
அதிவிரைவில் நகர்த்துகின்ற ஆகாய விமானங்கள்!

முன்பு நிலவைக் காட்டிச் சோறூட்டிய அன்னையரெல்லாம்
இச் `சந்திராயன்’ காலத்திலே,
`முன் மாதிரி உள்ளாட்சி’யை உருவாக்கி இருக்கின்ற
உன் மாதிரி வரவேண்டும் என
இளைய தலைமுறைக்கு இயம்புவதைப்
பெருமையோடு பார்க்கிறது-
எங்களின்,
தளர்வறியாத் `தலைவரெனும்’ தனிச் சூரியன்.

எமக்கெல்லாம் நம்பிக்கை உரம் தந்து
வழி நடத்தும் எஃகுக் கரமே-

ஒப்பற்ற எம் தலைவர்
பெற்றெடுத்த பெரு வரமே-
உம்மை வணங்குகிறேன்!

அன்பர்கள் பலருண்டு அவனியிலே,
மண்ணுக்கு அன்பர்,
பொன்னுக்கு அன்பர்,
பெண்ணிற்கு அன்பர்-
என்பாரை எல்லாம் பின் தள்ளித்

தமிழைக் காண்பவன்
தமிழைக் கேட்பவன்
தமிழை முகர்பவன்
தமிழை உண்பவன்
தமிழால் உயிர்ப்பவன் என்பதால்
தமிழுக்குத் தான் அன்பன் எனும்
பெயர் சூடிக் கொண்ட
கவி அரங்கத் தலைவரே,

ஈரோட்டு மண்ணை
பெயருக்கு முன் வைத்துத்,
தான் `அன்பன்’ மட்டுமல்ல-
தமிழைச் சீண்டினால்,
`வம்பனும்’ கூடத்தான் என்கிறீரோ-
`ஹைகூ’ சட்டமிட்ட தமிழ்க் கண்ணாடிக்கு என் வணக்கம்.

ஆரம்பிக்கிறேன்-`ஏழைகளை உயர்த்திய யேல் பல்கலைக்கழகம் அண்ணா’

17.09.1879க்கு முன்பு வரை
மேடும், பள்ளமுமாயிருந்த
தமிழ்நாட்டின் பட்டி தொட்டிக்கெல்லாம்
 ஈரோட்டிலிருந்து
ஒரு பகுத்தறிவுத் தார் ரோடு
போட்டது சுயம்புவாய்த் தோன்றிய
ஒரு சுயமரியாதைக் கனல்.

வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை-
திராவிடத்தின் தமிழ்ப் பாதங்களுக்குத் தரு நிழல்;
ஆரியத்தின் அதிகாரத் தலைப்பாகைக்கோ கொடுங் கானல்;
வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை-
தன் தடிக்கொரு கைப்பிடியாய்
ஒரு பகுத்தறிவு நெசவாளரையும்
காஞ்சீபுரத்தில் கண்டெடுத்தது!

அதுவரை,
பட்டுக் கனவிலும், பஞ்சுப் பொதியிலும்
அமிழ்ந்திருந்த தமிழகத்தின்
பாமரத்துத் தறியை
இடம் பெயர்த்து, ஈரோட்டிற்கு
எடுத்து வந்த அந்தக்
காஞ்சீபுரத்துக் கலைக் கரம்,

இனமான ஆடையொன்றைத்
தமிழருக்குத் தனியாகத் தயாரித்துத் தர,
அதுவரை ஆட்சி செய்த,
மேல்சாதி ஆயத்த ஆடைகள் ஒழிந்து போய்,
அன்று முதல்,
தோளிலே நீண்ட துண்டு அணிந்த
கம்பீர உடை அமுலுக்கு வந்தது!

“இமயத்தில் புலி பொறித்து,
கடாரத்தை வென்று
ரோம் நகருக்குப் பொன்னாடை
விற்றவன் தமிழன்”
என முழங்கிய அண்ணா
மூத்த தமிழ்ப் பெருங்குடியை
உலக அறிவெனும்
விரிகடற் பால்
சாதுர்யமாய்த் திசைதிருப்பிய திராவிடப் பாய்மரம்!

புத்தகங்களைத் துடுப்பாக்கிப்
பிறவிப் பெருங்கடலைக்
கடந்த பேரறிஞர்-
“அறிவாலும் ஆற்றலாலும்
ஆகாத காரியமில்லை,
எவரெஸ்டின் உச்சிக்கு எவரும் ஏறலாம்”
என ஏழைக்கு எழுத்து
உரமூட்டிய நன்னம்பிக்கைத் திசைமானி!

ஆரிய சுழற்சியில் சிக்காமல்,
உயர் சாதியத் திட்டுக்களில் தட்டாமல்,
வைதீகக் கரை(றை) தொட்டு நிற்காமல்,
தமிழினக் கப்பலை உலகின்
அனைத்து அறிவுத் துறைமுகங்களுக்கும்
அழைத்துச் சென்ற சமத்துவ மாலுமி!

எரவாணத்தில் பதுக்கிய
ஏவுகணையாய் ஏழையின் குடிசையில்
கல்வியைச் சொருகிய சமூகநீதிப் போராளி!

வைரமறியா ஏழைப்பிள்ளை
எவ்வாறு அறியும்,
“Like a diamond in the sky”
எனும் ஆங்கிலப் பாடலை?
என உருகிக் குமைந்த திறந்தவெளிப் பல்கலைக்கழகம்!

சாலையிலே நாம் நடந்து செல்வோம்,
ஆனால், ஒரு சாலையே நடந்து செல்லுமா?

ஆம்-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு
ஒரு வாசக சாலையே அன்று
நடந்து சென்று
`ஆற்றோரம்’ என உரை ஆற்றியதே!

எந்தக் கடலாயினும் சேர்கின்ற நதிகளின்
தோற்றுவாய் அறியாது.
தேற்றுவார் இல்லாது தேம்பி
அழுதிருந்த தமிழினத்தின்
ஆற்றுவாயாக வந்த
அறிவுக் கடல் அண்ணாவோ,
உலகின் அனைத்து நதிகளையும்
ஒரு சேர அறிந்து,
அவற்றின் பிள்ளை நாகரிகங்களையும்
பெயர் சொல்லிக் கூப்பிட்ட
பேரதிசயம் கண்டு
மலைத்துப் போனது ‘அண்ணாமலை’ அன்று!

அட,
சாலை பறந்தும் செல்லுமா?

ஆம்-
அமெரிக்காவின் `யேல் பல்கலைக்கழகத்திற்குப்’
பறந்து சென்ற இத் தமிழ்ச்சாலை
அணிந்திருந்ததோ ‘ஆங்கில’ இறக்கையினை.

அங்கே
`வெள்ளிக் கரண்டியோடு’ பிறந்த
வெள்ளைப் புருவங்களை
ஒரு கருப்புத் தமிழ்க் கண்ணாடி
கரவொலியால் உயர்த்திற்று!

அவர்தம் மூக்கின் மேலமர்ந்த
வெளுத்த விரல்களை
சிலையாய்ச் செதுக்கிற்று-
தமிழ் வெற்றி(லை)ச் சாயம் படர்ந்த
அண்ணாவின் ஆங்கில உளி!

விழிமூடி துயிலும் எங்களின்
விலைமதிப்பற்ற இன்பத் திராவிடமே-

வெள்ளை மாளிகையின் கதவுகளை
ஒரு கறுப்புக் கைப்பிடி திறக்கின்ற
அந்தத்
தொலைநோக்குக் கனவொன்றை
உன் இதயத்தில்,
தம்பிமார் அமர்ந்திருக்கும் இடம்போக
எஞ்சியிருக்கும் விளிம்பொன்றில்
பத்திரமாகப் பொதிந்திருந்தாய்-

பலித்தது அது இன்று!

`ஒளியின் பிம்பங்களாய் நாம் திகழுகிறோம்’ என்றுரைத்த நீ
`ஒபாமா’ ஒளிர்வதை
இங்கிருந்தே இமைமூடி இரசிக்கின்றாயா?

“வைதீகம் எனும் நோயின்
மருத்துவர்கள்-வாலிபப் பருவத்தில்
உள்ள மாணவர்கள்தான்”
எனத்,
திடமாக நம்பியிருந்த தீச்சுடரே, எம் அண்ணா,
திரும்பிப் படுத்திருப்பீர் அன்று-
சட்டக்கல்லூரியில் மாணவரின்
அடிதடியைக் கண்டு!

கறுப்புச் சலவை மொட்டுக்குள் கண் உறங்கும்
தமிழ் வண்டே எம் அண்ணா,

நீ,

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றாய்”
நானோ
ஏழையின் சிரிப்பில்
உன் உருவாய் இன்றிருக்கும்
என் தலைவரைக் காண்கின்றேன்!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *