வா. மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவியை முன்வைத்து ஒரு உரையாடல்:

“கவிதை சொற்களால் அமைவதே ஆயினும் மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. மொழி வேறு, கவிதை வேறு.”     -    அபி.

ஒரு கவிதைப் புத்தகத்தை அச்சுவடிவில் நெருங்குவதென்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். “கவிஞன் சொற்களைக் கொண்டு கவிதையின் சொற்களை உருவாக்குகின்றான்” என்று அபி சொல்லும் போது அதன் அர்த்த மதிப்பை விட அனுபவ மதிப்பினை அவர் அடிக்கோடிடுவதைப் புரிந்து கொள்ளலாம்.  அவ்வகையில் கைக்கு வருகின்ற ஒவ்வொரு கவிதைப் பிரிதியும் எனக்கு அளிக்கின்ற அனுபவங்கள் மிகவும் தனிப்பட்டவை.  ஒரு உரைநடைப் பிரதியை விடக் (சிறுகதை, புதினம், நெடுங்கதைகள்) கவிதைப் பிரதி எனக்குள் கிளர்த்தும் உணர்வு நிலை மிக அலாதியானது.  கவிஞன் ஒருவனை மிக அந்தரங்கமான அவனது அக உலகை, மிக நெருக்கத்தில் கொண்டு வந்து தருகின்ற கவிதைப் பிரதி, எனக்கொரு சவலைக் குழந்தை போல. கூடுதல் கவனமும், அடிக்கடி கொஞ்சுவதும், தன்போக்கில் விளையாடுகையிலும் ஒரு கண் வைத்திருக்கும் தாய்மையுமாய் எப்போதும் அதனைத் தூக்கி வைத்துக் கொள்வதும், இடுப்பில் இடுக்கிக் கொள்வதுமுண்டு. எத்தனைதான் மொழியின் துலக்கமும், வடிவநேர்த்தியும் கூடி வந்தாலும், வாசகனது சொற்களைக் கூடுதலாக இட்டு நிரப்பக் கோருகின்ற, தன் இடைவெளி மௌனத்தில் அவனைப் புனைவுச் சித்திரங்களை வரைய அனுமதிக்கின்ற, நெகிழ்தன்மையுடனும், அறுதியாகச் சட்டமிட்டு விடமுடியாத, இழுபடக் கூடிய வரைகோடுகளுடன் இருப்பதாலாயே ஒரு கவிதைப் பிரதி எனக்குக் கூடுதல் அணுக்கம்;  கூடுதல் நெருக்கம்;  சவலைப் பிள்ளையாக இருத்தலே அதன் சிறப்புத் தகுதியும் கூட - ஏனெனில் முழுமை, பூரணம் போன்ற சொற்களை மறுதலிப்பதே ஒரு கவிதைப் பிரதியின் உருவமும், உள்ளடக்கமும்.  அவ்வகையில் மணியின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி படிப்பதற்கும், உள்வாங்குவதற்கும், உரையாடுவதற்கும் எனக்கு மிகுந்த விருப்பத்தைத் தந்த ஒரு பிரதி.
	 “விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது” என்பதை விரித்து, விழித்திருப்பவனுக்குப் பகலும் நீண்டது என்பதைச் சொல்வதாயிருக்கிறது மணியின் அக உலகம்.  அந்த விழித்திருக்கும் நிலையைத் தான் T.S.Eliot ‘Still Point’ எனவும், சித்தர்கள் ‘தூங்காமல் தூங்கும் நிலை’ எனவும் சொல்வதுண்டு.  மணியின் கவிதை படைக்கின்ற மனோநிலை இந்த ‘Still Point’ என்பதுதான் அனுபவங்களின் மனப்பதிவை அவர் பகிர்ந்து கொள்வதற்கு சிக்கல்களற்ற ஒரு Laser மொழி அவருக்கு வாய்த்திருக்கிறது.  காட்சியும், தன்னுணர்வும், விலகி நின்று பார்த்தலுமான ஒரு முப்பரிமான கோணத்தை, அதிக நகாசுகளற்ற புழங்கு சொற்களின் மேல் ஒரு புதுக்கத்தை ஏற்படுத்துகின்ற மணியின் நடை இக் கவிதைகளை மிக முக்கியமான, பேசப்படும்படியான படைப்பாக்குகின்றன.
	கவிதைப் புத்தகத்தின் தலைப்பினை ஒரு தவிட்டுக்குருவி தேர்வு செய்கிறது.  அங்கு துவங்கி, தொகுப்பு முழுக்கக் கடவுள் கேள்விகளுடனும், எள்ளல்களுடனும், “என்ன மாமு, இன்னுமா கீர?”  என்று பந்தாடப்படுகிறார்.  மணியின் பலம்; இதுதான் - அதீதக் கசப்பு, தீவிரமான சோகம், கரைபுரண்டோடும் காமம், கொலை வெறி தூண்டும் துரோகம் - இவையெல்லாவற்றையும் அலட்டல் இல்லாததொரு விவரணைகளில்,  “இப்படியாகத்தான் இருக்கிறது எல்லாமும் - இருக்கிறோம் நாமும்” என்கிற தொனியில் சுட்டுபவை - ஆனால் விரக்தியின் எல்லை அறிந்தவை.  புலம்பலின் பாரமற்றவை.  தீர்ப்புக்களோ நியாயத் தராசோ இல்லாதவை ‘ஒரு மெஷீன் துப்பாக்கியின் கிசுகிசுத்த செய்தியைப் போல’ (பிரேட்டன் பிரேடன்பாஹின் கவிதை வரி) 
‘தலை நிறைய ஆணிகள்
ஆனால், எனக்கல்ல 
நான் என்றுமே வலி தருவதில்லை
அல்லது புகார் செய்வதில்லை’
என்று சொல்பவை.
	தொகுப்பின் தலைப்புப் தேர்வு ரமேஷ்: பிரேமினை நினைவு படுத்துகிறது - “பறவைக்குப் பெயரிடுவதிலிருந்து தான் ஒரு மொழியில் கவிதைக்கான சொல் தேர்வு பயன்று வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.  இந்தப் பறவைக்குப் பெயரிடுவதன் மூலம் எனது மொழிக்கு ஒரு கவிதையைக் கொண்டு வருகிறேன்” எனச் சொல்கிறார்கள் அவர்களென்றால், தவிட்டுக்குருவியின் மூலம் அருமையான கவிதைகளைப் பெயரிட்டுத் தந்திருக்கிறார் மணி. ‘பஞ்சமகாகவிகள்’ என்று கரிச்சான், வானம்பாடி, குயில், மணிப்புறா, மைனா ஆகியவற்றைக் கொண்டாடிய, மஹாகவிகள் என்று அவைகளுக்காக ஒரு காவியம் இயற்றிய ந.பிச்சமூர்த்தி துவங்கி பறவையைச் சுமந்தேதான் எல்லாக் கவிஞர்களும் இளைப்பாறுகிறார்கள்.  ந.பிச்சமூர்த்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பொதியவெற்பன் பதிந்து இருக்கிறார்.  அவரது மொழியிலேயே அதனை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் - ஒருமுறை தாமும் எம்.வி.வி.யும் அவரைக் காணச் சென்றபோது சாலியமங்கலத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறே காவிரிக்கரையில் ஒருபறவையைச் சுட்டிக்காட்டி வியந்ததை விவரிப்பார் தஞ்தைப்ரகாஷ், “ராவையா... ப்ரகாஷ்ரா... ச்சூஸ்திவா...த்தேனிபேரு முக்குளித்தான்.  இது ஒரு அபூர்வமான பறவை நீங்க பாத்திருக்கேளா வெங்கட்ராம்.  இதுதண்ணிக்குள்ள மீன்மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்துல மழைபெய்யிற நேரத்துல ஆகாய வானத்துல பறக்கும் பாருங்க.  அற்புதமான சிருஷ்டி தண்ணீர் மழையில் கலங்கினா இதுக்குப் பிடிக்காது.  தண்ணீர் அடிமட்டத்திலிருந்து நீந்தி வரும் மரத்துமேல போய் உட்காந்துக்கும், வானத்துலயும் பறக்கும்…” எனத் தொடங்கும் ந.பிச்சமூர்த்தி அப்பறவைக்கு ‘முக்குளித்தான்’ எனப்பெயர்வைத்த கிராமவாசியை ‘அவன் அல்லவா கவிஞன்’ என வியப்பார். 
ஆகத், 
“தன் அழகின்மையின் துக்கத்தைக் 
கண்களில் சேகரித்திருக்கும் 
தவிட்டுக்குருவியை” 
உருவாக்குகின்ற மணி, 
“சின்னஞ்சிறு மஞ்சள் அலகில் 
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும் 
என் குருவி 
தன் தலையைச் சிலுப்பி, ஒரு நதியை இடம் மாற்றும்” 
என்கையில் எனக்கு கோஃபி அவூனோர் எனும் கானாவில் பிறந்த கவிஞரது 
“எப்போதாவது நீ பார்க்கிறாய் ஒரு கடல் காக்கை
உயர்ந்து எரிக்கும் சூரியனுக்கு எதிராய் விசையுடன் எழுவதை”
எனும் வரிகள் நினைவிற்கு வந்தன.  கோஃபியின் தூக்கணாங்குருவி கவிதை மிகப்பிரபலமானது.  தான் வந்து தங்கிக் கூடுகட்டுகின்ற, தனக்கு விருந்தோம்பிய மரத்தையே தூக்கணாங்குருவி அழித்து விடுவதை, Western Imperialism இற்கு ஒரு படிமமாக ஒப்பிடச் சொல்லி, அதில் கையாண்டிருப்பார் கோஃபி.  
“தூக்கணாங்குருவி எங்கள் வீட்டில் கூடு கட்டியது
எங்களின் ஒரே மரத்தில் முட்டையிட்டது.
அதைத் துரத்த நாங்கள் விரும்பவில்லை.
கூடு கட்டப்படுவதை நாங்கள் கவனித்தோம்.
முட்டையிடுவதைக் கண்காணித்தோம்.
குருவி திரும்பியது எஜமான்; ரூபத்தில்
வீட்டை வைத்திருந்த எங்களுக்கு மீட்பைப் போதித்தது
அது மேற்கிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்”
எனப் போகும் அக்கவிதை. ஆனால் மணியின் தவிட்டுக்குருவி எளிமையை, வல்லமைக்கு எதிராக முன்னிலைப்படுத்தி, வெற்றியையும் ஊர்ஜிதப்படுத்துகிறது. மழைத் துளியின் உதவியோடு அவநம்பிக்கையும், சிதைவும் நிறைந்த நகரத்தின் அதிகாரியான கடவுளுக்குச் செருப்படி தருகின்ற அறமுடையது அழகற்ற இந்த தவிட்டுக்குருவி.
	“காற்றைப் போல் எங்கும் வியாபித்திருக்கிறது அதிகாரம்” எனும் கிராம்ஸியின் கூற்றைப் போல, அதிகாரத்தின் படிமமான, அனைத்திலும் நிரம்பிய காற்றைப் போன்ற கடவுளின் ஆதிக்கத்தை மறுதளிக்கும் தவிட்டுக் குருவியினைப் பற்றிய விவரிப்பு மிக அற்புதம்.  “பாசிசம் அரசியலை அழகியல் ஆக்குகின்றது.  கம்யூனிஸம் அழகியலை அரசியற் படுத்துகின்றது” என எங்கோ படித்த நினைவு.  அழகற்ற இத்தவிட்டுக் குருவியை மணி உருவாக்குவதே ஒரு எதிர் அழகியல் உத்தியோடுதான்.
அதன் சாம்பல் நிறத்திற்கு 
இந் நகரத்தின் இல்லாத வனங்களைப் பொசுக்குகிறார்
அலகிற்கு - சோடியம் விளக்கின் செம்மஞ்சு 
ஒளியைச் சேகரிக்கிறார். 
சீரற்ற அதன் பாடலுக்கு - 
வாகன இரைச்சலைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
‘கடவுளுக்கும் சிற்பிதானே கண்ணைத் திறந்து வைக்கிறான்’ என்பது போல மணிக்கு இந்தத் தவிட்டுக் குருவியின் மூலமாக ஏராளமான கவிதைகள் வாய்க்கின்றன.  “நகுலன் ஒரு பூனை போல வாசகங்களுக்கு ஊடே அலைந்தபடி தாளிருக்கிறார்” என்பார் எஸ்.ரா. ஒரு பகடிக்காக மணி ஒரு mouse ஐப் போல அலைகிறார் என்று சொன்னாலும் - உண்மையில் அவர் ஒரு தவிட்டுக் குருவியைப் போலத்தான் ஊடாடிக் கொண்டிருக்கிறார்.
தொகுப்பின் பல கவிதைகள் மேற்சொன்ன கவிதையினைப் போலத் தனித்த கவனிப்பும், வாசிப்பும் கோருபவை.
	“தன் மனைவியின் நிர்வாணத்தோடு, அவளோடு வேறொருவரின் நிர்வாணத்தையும்” பார்த்துக் கொண்டு நீந்துகின்ற சாதுவான பொன்னிற மீன், ஜப்பானியக் கவிஞரான ஹன்டாரோ தனிக்காவாவின் தங்க மீன் அல்ல.
	“பெரிய மீன் பெரிய வாயுடன்
தின்கிறது மத்திய தரத்து மீனை
மத்தியதர மீன் தின்கிறது சின்ன மீனை
சின்ன மீன்
தின்கிறது அதைவிடச் சிறிய மீனை
வாழ்க்கை வாழ்க்கைக்காகத் தியாகம் செய்யப்படுவதால் வெளிச்சம் ஒளிர்கிறது.
சந்தோஷம் சந்தோஷமின்மையால் ஊட்டி வளர்க்கப்படுகிறது.
பூக்கள் கருவுறுகின்றன
கடலின் ஆழ்ந்த சந்தோஷத்திலும் கூட
ஒரு துளி கண்ணீர்
உருகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட வேண்டும்.
ஆனால் மணியின் கவிதைகள் பல ஒரு சந்தோஷம் எப்படி நைச்சியமாக மற்றொரு சந்தோஷமின்மையால் கொழுக்கிறது எனச் சுட்டுபவைதான்.  செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம் எனும் கவிதை அதனைத்தான், 
“இந்தப் பகுதியின் வல்லவர்கள் 
தங்களின் பிரியமானவர்களைப் புதைத்த இடத்தின் மீது
கான்கிரிட்டால் ஒரு சதுரக் கட்டடத்தை எழுப்புகிறார்கள்
சாமானியர்கள் 
துலுக்கமல்லிப் பூவையோ 
செவ்வந்திப் பூவையோ தூவி விட்டுச் 
செல்கிறார்கள்” என்று சொல்கிறது.
	புலம்புதலோ, கழிவிரக்கமோ, உரத்த கோபமோ, குற்றஞ்சாட்டுதலோ அற்ற ஒரு unromantic மொழி மணியுடையது.  அதுவே அவரது கவிமொழியின் தனித்தன்மையும், ஈர்ப்பும்.  தொகுப்பு முழுவதுமே ஹர்லிக்ஸ் பாட்டிலில் அடங்கும் மழை யைப் போல ஒரு ஷீணித்த குரல் - நகர மனிதனின் சிதைவை, அதனூடகவும், எளிய அறமென ஒரு தவிட்டுக் குருவியைப் பற்றிக் கொண்டிருக்கின்ற அவனுடைய உயிர்ப்பை - நமக்குச் சொல்லிக் கொண்டே செல்கிறது. அது அடுத்தவர்களின் கருணையை வேண்டாத நகரத்தின் ஒதுக்கத்தையும், நம் துக்கம் நமக்கேயானது என்கின்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்ட சமகாலத் துக்கத்தின் குரல், அந்தத் தனிமையையும், கைவிடப்படுதலையும், நம்பிக்கையின்மையையும், கவிதைகளின் வழியே கண்டு கொண்டு, நைலான் கயிறுகளிலிருந்து மீண்டு வர வழிதேடுகின்ற சமகாலக் கவிஞரின் குரல்.
“உண்மை மிக நுட்பமானதும் எளிதில் சிதைந்து விடக்கூடிய நொய்மையானதும் கூட.  அதன் தாத்பர்யம் மகத்தானது.  அத்தகையதை வெளிப்படுத்தத் தகுந்ததோர் மொழி வேண்டும்.  அதுவே கவிதை” எனும் தேவதேவன் கூற்று எவ்வளவு உண்மை.  அப்படிப்பட்டதொரு மொழிவாகு, (உரைநடைத் தன்மையின் கூறுகளே அதிகமென்றாலும்), மணிக்கு வாய்த்திருக்கின்றது.  கறார்த்தன்மையைக் கவிதையில் லாவகமாகக் கையாளுகின்ற கலை மணியின் மொழிநடை.  “எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை” எனும் இத்தாலியின் பாஸோலிணியின் தொனியே அவரது கவிதைகளின் அடிநாதம் இந்த கறார்த்தன்மையோடு, தனது இருப்பு, காதல், அன்பு, நட்பு, மழைத்துளி இவற்றின் மீதான நம்பிக்கையையும், நேசத்தையும் சேர்ந்து சொல்கின்ற ஒரு மொழிநடை அவருடையது. அதாவது - உணர்ச்சியினை அறிவின் தாக்கம் கொண்டு கத்தரித்தாலும், சிறு தளிர் ஒன்று போன்சாயின் கிளையில் துளிர்க்கையில், புன்னகையோடு அதற்கு முத்தம் தருகின்ற ஒரு நெகிழ் மொழி வேண்டுமல்லவா - அதுவே மணியின் கவிதை நடை. 
“போக்கிடமில்லாத மழை 
முறிந்த பிரியமென 
நகரச் சாலையின் குட்டைகளில் கொஞ்சமாகவும் 
தங்க மீன் நீந்தும் 
இந்த ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் 
மீதமாகவும் அடைந்து கொண்டது” 
என்பது இரக்கம் கோராத, ஆனால் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிற மொழிதான்.
	இன்னொரு சிறப்புக் கூறு - கவிதைகளில் பெயர்களையும், நேரம், நாள் பற்றிய குறிப்புக்களையும் இணைத்தபடி எழுதியிருப்பது.  பொதுவாக நவீனக்கவிதைகள் தன்மை, முன்னிலை இவற்றை வெளிப்படையாகச் சுட்டுவதில் நம்பிக்கை கொள்வதில்லை எனும் கோட்பாட்டைப் போட்டு உடைக்கிறார் மணி - இந்தப் புது உத்தியினால்.  பேச்சு வழக்கில் பெயர் சுட்டிப் பேசுகின்ற சகஜ பாவத்துடனான இவ்வகைக் கவிதை மொழி கவிஞனை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தாமல், வாசகனைச் சட்டென இழுத்துக் கொள்கின்ற நுட்பம் வாய்ந்தது.
“யாரோ பறக்கச் செய்த 
பட்டத்தின் கயிறு 
வெங்கடேஷின் கழுத்தை அறுத்திருக்கிறது”
“கௌசிக் துப்பாக்கி வாங்கியிருப்பதாகச் சொன்னான்
ஸ்ரீலதாவின் குடும்பத்தைத் தீர்க்கப் போகிறானாம்”
“மார்க்கெட் சாலையின் 
மூன்றாவது திருப்பத்தில் 
ஷோபனா விழுந்துகிடந்த இடத்தில் 
வட்டத்தினை வரைந்து கொண்டிருந்தார்கள்” 
“துடைக்க எந்தக் கையும் 
நீளாத வெறுமையில் 
ஈரம் காய்ந்த கண்களுடன் 
ஏங்கிக் கொண்டிருக்கிறான் நவ்நீத்”
அதைப் போலவே எண்கள் - நிமிடத்தை, நேரத்தை, இருக்கையைச் சுட்டுகின்ற எண்கள் தேதிகள்; - சம்பவங்களை, அதன் நினைவினை மறுபடி எழுப்புகின்ற தேதிகள்; ஒரு தவிர்க்கவியலாத செய்தியினைப் போன்ற பாவனையுடன் இவரது கவிதைகளில் பதியப்படுகின்றன.
	“8:25 க்கு திருப்பூரை வந்தடைய வேண்டிய தொடரூர்தி
இன்று 35 நிமிடங்கள் தாமதமாக... 
S7 பெட்டியின் 
35 வது இருக்கையில் 
நளினமாகப் பாப்கார்ன் 
தின்று கொண்டிருக்கிறாள் ப்ரவீனா 
36 வது இருக்கையில் இருந்தவன் 
ஒரு புத்தகத்தில் 217 வது பக்கத்தின் நுனியை 
மடித்துவிட்டு 
உறங்க எத்தனிக்கிறான்.”  
(35 நமிடங்கள் காலதாமதாமாக வந்த சேர்ந்த தொடரூர்தி)
“இரவே வராத 
இந்நகரத்தின் 
இரண்டாவது 12 மணியின் 32வது நிமிடத்தில் 
அவன் 
கரியநிறப் பறவையொன்று 
நசுங்கிக் கிடந்த சாலையில் 
நடந்து கொண்டிருக்கிறான்” (மழைக் காலம்) 
“இரண்டாவது வாரத்தின் 
ஆறாம் நாளில் 
நம் 
முதல் முத்தத்தைப் 
பரிமாறிய போது 
பீடி மணக்கிறதென சிரித்தாய்” (புனிதக் காதல்)
	இப்படி ஒரு வசனத்தை உங்கள் காதலியிடம் பிற்பாடு சொல்வீர்கள் என்றால் எவ்வளவு துயர் மிகுந்த, தொல்லை தருகின்ற, ஞாபகப் பிசாசினைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றவனாக அவன் இருப்பான் என்று காதலி ஓடிப்போகலாம்!
கவிதையை “The Bloodiest of the Art” என்று சொன்ன துருக்கியக் கவிஞர் நஹீம் ஹீக்மெத் சுயசரிதம் என்றொரு கவிதையை இதுபோல எண்கள், தேதிகள், நாட்கள் - இவற்றின் குறிப்புக்களோடு எழுதிருக்கிறார். 
“நான் பிறந்த வருடம் 1902 
பிறந்த இடத்திற்கு ஒரு தடவைகூடத் 
திரும்பிச் செல்லவில்லை…”
எனத் தொடங்கும் அக்கவிதை, 
“லெனினை நான் என்றும் பார்க்கவில்லை 
24 இல் அவரின் சவப்பெட்டிக்கருகில் நின்று கவனித்தேன்
61 இல் நான் பார்க்கும் சமாதி அவரது புத்தகங்களே 
52 இல் நான் நான்கு மாதங்கள் மல்லாக்கக் கிடந்தேன்
21 இலிருந்து பெரும்பான்மையோர் 
செல்லும் இடங்களுக்குச் சென்றதில்லை.
மசூதிகள், தேவாயலங்கள், கோயில்கள் -
ஆனால் குடித்து முடித்த காபியின் மிச்ச வண்டல்களைப் பார்த்து குறிகேட்டிருக்கிறேன்…
எனத் தொடர்கின்ற அக்கவிதை, 
“நானொரு மனித ஜீவன் போல் வாழ்ந்தேன் என்று சொல்லவியலும் 
மேலும் யாருக்கு தெரியும் 
எவ்வளவு நாள் வாழ்வேன் 
இன்னும் என்னென்ன நடக்குமென்று”
என்று முடியும்.
	மணியின் இந்தத் தகவல்கள் அனைத்தும் அவரொரு மனித ஜீவன் போல் வாழ்ந்தார், வாழ்கிறார் என்பதற்கான தரவுகள் மட்டுமல்ல - அந்தப் பதிவுகளில் ஒரு தனித்துத் தெரிகின்ற சகஜபாவம் ஒன்று இருக்கிறது.  ஒரு உருவக மொழிவகையினைத் தவிர்த்துவிட்டு, தன்மை விளித்தலோடு, நிகழ்வுகள், மனிதர்கள் பற்றிய குறிப்புக்களைப் புகுத்துவது என்பது ப்ரக்டின் கவிதைச் சாயல் கொண்டதுதான்.  “ப்ரக்ட் கவிதையில் ‘தன்மையில்’ பேசும்போது கூட எல்லோருக்குமாகவும், அரசியல் பூர்வமாகவும் பேச முடிந்திருக்கிறது.  உருவகங்கள், உவமைகளைத் தேடிச் செல்லாதிருத்தலையும், ஆடம்பர சுய மொழியியல் துணைச் சேர்க்கைகளைத் தவிர்த்தலை தம் நோக்கமாகக் கொண்டு தம் கவிதைகளில் சாதிக்கவும் செய்தவர் ஃபரக்ட்” என்னும் பிரம்மராஜனின் கூற்று (சமகால உலகக் கவிதை:93) இங்கு நினைவு கூறத் தக்கது.  மணியும் அவ்வகைப் புரிதலற்று, அல்லது அதற்கான யத்தனங்களின்றி மிக இயல்பாக இவற்றை எழுதியிருந்தாலும், அவை மனிதன் ஞாபகங்களின் பிரதியாக அலைவதனையும், அதே பொழுதில், இந்த நாட்கள், தேதிகள் இவை மாற்றப்பட்டாலும் நிகழ்வுகள் ஒரே மாதிரி வெவ்வேறு மனிதர்களுக்கு காலந்தோறும் நடைபெறுகின்ற யதார்த்தத்தினையும் சுட்டுவதாக அமைந்துள்ளதனையும், அவற்றில் நான் மேற்சுட்டிய ப்ரக்டின் “தன்மையில்” பொதுவாகப் பேசுகின்ற சாயல் இருப்பதனையும் மறுக்க முடியாது. 
	இந்தக் கவிதைகளின் இன்னொரு மிக முக்கியமான பாடுபொருள் - தற்கொலை. Tagore ஐப் பற்றித் தான் எழுதிய ஒரு கட்டுரையில் சத்யஜித்ரே Tagore ஐ - அவரது தொனியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஒரே ஒரு சொல்தானுண்டு - அது மழை என்கிறார்.  மணியின் தொனி - இக்கவிதைகள் மூலமாகத் துலங்குவது - தற்கொலைக்கான ஏக்கமும், செய்து கொள்ளமுடியாமையின் யதார்த்தமும்தான். 
மௌனத்தின் விஷம்:
“நேற்று நிகழ்ந்த மரணத்தையொத்திருக்கிறது
இந்த எதிர்பாராத மழை
இந்தச் சில்லிடும் பிரியம்
இந்த இதழ் உலர்ந்த முத்தம்

இன்று நிகழும் கொலையை முடிவு செய்கிறது
இந்தக் கோடையின் புழுக்கம்
இந்த இரவின் மௌனம்
இந்தக் கணத்தின் பதட்டம்
நாளை நிகழவிருக்கும் தற்கொலையை
உறுதியாக்குகிறது
இந்தச் சொல்லின் வன்மம்
இந்த மௌனத்தின் விஷம்
இந்த துரோகத்தின் சிரிப்பு”
மேற்சொன்ன கவிதை ஏறத்தாழ அனைத்துப் படைப்பாளிக்குமான அனுபவக் கொடை.
	“உறங்கச் செல்கிறீர்கள் 
	இரவின் பெருமை உங்களை விழிக்கச் செய்கிறது
	அருகில் கிடக்கிறது
	ஒரு நைலான் கயிறு”.  (நைலானில் சிதையும் பிம்பம்)
இந்த நைலான் கயிறுதான் -
	“என்னால் என்ன செய்ய முடியும்…
	இவ்வளவு அபரிமிதங்களுடன்
	ஒரு அளவிடப்பட்ட உலகத்தில்”
என்று கேட்ட, தனது 48 வயதில், தற்கொலை செய்து கொண்ட ரஷ்யக் கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவாவிற்கும் அருகில் இருந்து.  இந்த நைலான் கயிறுதான் “மரணம் வருகிறது ஒரு எஜமானாக ஜெர்மனியிலிருந்து” என்று தனது பிரசித்தி பெற்ற மரணத்தின் ஃபியூக் இசை எனும் கவிதையில் எழுதிய, செயின் (Sein) நதியில் மூழ்கித் தற்கொலை செய்த கொண்ட பால் ஸெலானுக்கு அருகில் இருந்தது.
	இதே நைலான் கயிறுதான் “ஒரு நாள் இந்த நூற்றாண்டு தெலூஸியின் நூற்றாண்டு என்று அழைக்கப்படும்”. என்று ஃபூக்கோவால் புகழப்பட்ட, தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட தெலூஸிற்கும் அருகில் இருந்தது.
	நிராகரிப்பைப் போர்த்திக் கொண்டவன் (கவிதையில்லாத பகிரல் மட்டுமே அது)
“ஓருவன் கொதிக்கும் சுடுமணலில் 
மென்பாதங்கள் வதங்கிப் போக 
வழி தெரியாமல் அலையும் 
பூனையென இறக்கத் துவங்கினான்”
என மணி எழுதுகையில் காற்றாடியையும், வேப்பமரக்கிளைகளையும், சூரிய ஒளியையும், பப்பாளியையும் ரசித்த, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துக் கொண்ட ஆத்மாநாமும், பதட்டமில்லாமல் ஒரு தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தனது சட்டைப்பைகளில் கற்களை நிரப்பிக் கொண்டுத் தன் வீட்டின் பின்புறம் ஓடிய நதியில் இறங்கித் தற்கொலை செய்து கொண்ட வர்ஜினியா வுல்ஃபும், இன்னும் எமிலி டிக்கன்ஸன், ஸில்வியா ப்ளாத், மாயாகாவ்ஸ்கி - எல்லோரும் அதே நைலான் கயிறு மிக அருகிலிருக்கத் தோன்றுகிறார்கள்.  இப்படித்தான் - ஒரு கவிதைத் தொகுப்பில் நீங்கள் அந்தக் கவிஞனை மட்டும் பார்ப்பதில்லை - தற்கொலையின் ருசி கண்ட பலரையும் நினைவூட்டிய ஒரு தொகுப்பாக இது எனக்கு அமைந்துவிட்டது.  
	மற்றுமொறு தொடர்கின்ற குறீயிடு மழை - காலம், மரணம், புலன்கள், அறிவு - இப்படி எல்லாவற்றையும் மழை எனும் ஒரு சொல்லில் மணிக்குச் சொல்லிவிட முடிகிறது. விதவிதமான வார்ப்புக்களில் மழையை ஊற்றித் தர முடிகின்றது அவருக்கு.  ஒருவகையில் மணியின் ஆன்மா இந்த ‘மழை’ தான்.  ஆன்மாவைப்பற்றி 
“எல்லாச் சாலைகளும் உனக்காய் ஏகுகின்றன 
ஆனால் அவற்றில் எதுவுமே உன்னை எட்டுவதில்லை”
எனப் படித்த நினைவு.
மணிக்கு மழை தான் ஆன்மா எனச் சொல்வேன் நான்.  ஆனால் ஒரு grotesque தன்மையுடன் கூடிய மழை - வழமையான romanticising மிகைபுனைவு மழையல்ல அது.
“என்னிலிருந்தே வெளியேறினேனினேன்
நான் என் பின்னாலிருந்த 
கதவை அடைக்காமலே”
“என்னிடமிருந்து நான் வந்துகொண்டு 
போய்க் கொண்டிருக்கிறேன்”
என்ற நகுலனின் வரிகளை ‘சுயம்நசித்தல்’ (T.S.Eliot ம், பிரம்மராஜனும் முன்னவருக்கும் de personalisation) எனும் கவிதைக் கோட்பாட்டிற்கு உதாரணமாகச் சொல்வார்கள்.  மணி இந்த சுயம்நசித்தலை தனது ஆன்மாவை மழைக்கு நகர்த்துவதன் மூலம் நிகழ்த்தி, வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருக்கிறார்.  ஓயாதமழை, பெருமழை, அதீதமானது மட்டுமல்லாமல் மூர்க்கமுமான காதல், காம மழை, துரோகமும், அவநம்பிக்கைகளின் கசப்புக்களும் வழியும் அவரது வீட்டின் மீது பெய்யும் கடவுளின் மழை, கான்கிரிட் கட்டிடங்கள் தன் இசையைத் தின்றுவிட்ட வெறுப்பில் நகரத்தின் ஜன்னல்களை ஓங்கி அறையும் மழை, திரைகள் விலகிய ஜன்னல்களில் டிவி ஒளிரத் துவங்கிய போது தன் தோல்வியின் துக்கத்தில் துவண்டு அமைதியடைகின்ற மழை, கடைசியில், போக்கிடமில்லாமல், முறிந்த பிரியமென, ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் மீதமாக அடைந்து கொள்ளும் அந்த மழை - அது மணியின் ஆன்மாவேதான்.
	சிக்னலில் சலனமுறும் புறா எனும் கவிதை ஒரு Surreal கவிதைக்கான மிகச் சிறந்த உதாரணம்.  பொதுவான கண்கள் பார்க்காததைக் காண்கின்ற பார்வை ஒரு நுட்பமான கவிஞனாக மணிக்கு வாய்த்திருக்கிறது என்பதற்கு சலனமில்லாத வெறும் பகல், சுழன்று விழும் இலை டைனொசர்களுடன் வாழ்பவன் என்று பல கவிதைகளைச் சொல்லலாம்.  ஐந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட ஐம்பதிற்கும் குறைவான இந்தக் கவிதைகளின் எண்ணிக்கை ஏழ்மையே மணியை ஒரு ராஜாவாக்கியிருக்கின்றது.
	இந்த வருடத்தின் முதல் தற்கொலை செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம் - இவை இரண்டு போதும் மணி மிக முக்கியமான கவிஞராக உங்களை ஊர்ஜிதப்படுத்த இந்த இரண்டு கவிதைகளே போதும் - நீங்கள் ராஜாவேதான்!
	எனக்குக் கூடுதல் அணுக்கமான ஒரு கவிதை சாயல்களோடு வாழ்தல் ஏனெனில் நினைவுகளில், ஞாபகங்களில் வாழ்ந்து, உயிர்ப்பவள் நானென்பதால் ‘சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை’ என்பதால் -
“மறக்கப்பட வேண்டியவர்கள் 
ஏதாவதொரு சாயலில் 
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாராத பொழுதில் 
நம்மைக் கடக்கிறார்கள்”
எனும் வரிகள் என்னைத் தம்மோடு இழுத்துக் கொள்கின்றன.  இது போல இத்தொகுப்பில் என்னைச் சட்டென ஈர்த்து இழுத்துக் கொண்டன பல தெரிப்புக்கள்.
உதாரணத்திற்குச் சில:
“தன் குழந்தை இறந்ததன் 
ஆழ்ந்த துக்கத்திற்குத்
தயாராகும் ப்ரனீத்துக்கும்
தெரியலாம்
காமத்தின் நித்யம் ஓ அநித்யம்”
“எப்பொழுதும் 
ஒரு சொல்
அல்லது
ஒரு வாக்கியம்தான் 
உறவின் விரிசலுக்குக் காரணமாகிறது”
“எதிர்க்கவே முடியாத மனிதனிடம் 
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை 
கூகிளில் தேடி 
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன”
“மழைக்கும் அவனுக்குமான 
பந்தம் அறுந்து போனது 
தீராத காமமும் 
ஓயாத மழையும் 
பொய் என்று அவள் சொன்னபோது”
“பொம்மைகள் கிறுக்கப்பட்டிருக்கும்
அறையின் சுவர்களில்
வழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் குளிர்”
“எந்த நடிகையும் 
அழுவதில்லை என் அறைச் சுவர்களில்”
“மரணத்திற்கும் 
உடல் சிதறலுக்குமான இடைவெளியில்
நிகழ்ந்த விபத்தொன்றில் 
சிவப்புச் சாயத்தில் விழுந்த
துணியெனக் கிடந்தவனை
நிலம் உரச இழுத்தார்கள்”
“துளி விஷம் கூரிய கத்தி
கொஞ்சம் வன்மம்
போதுமானதாயிருக்கிறது
உங்களின் பிரியத்திற்கும் என் காமத்திற்கும்”
“சொல் பொருள் நிறைந்தது அது
சூல் கொண்டு உயிர்களால் நிரம்பி இருக்கிறது”  
என்று நெரூடா சொன்னது உண்மைதான்.  வெறும் சொற்கள், கவிதையாகும்போது உயிர்களால் நிரம்பித் ததும்புவதை இத்தொகுப்பின் கவிதைகள் எனக்கு உணர்த்தின.
	சமகாலக் கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்குக், கவனம் தர வேண்டியதொரு படைப்பாளியாக மணிகண்டன் வந்திருக்கிறார் என்பதற்கு இத் தொகுப்பு ஒரு ஸ்தூல காட்சி.  நைலான் கயிறு, பனிக்கட்டி, பேய்மழை - இவைகளை அணைத்தபடி, இவைகளோடு பயணிக்கின்ற இந்த கவிஞனை நான் கூடுதலாக விரும்புவது - இத்தனைக்கும் பின்பான, வாழ்வின் மீது அவனுக்கிருக்கின்ற இந்த நேசத்திற்கும், நம்பிக்கைக்காகவும்தான் - பின்வரும் இக்கவிதைக்காகத்தான் -
“இந்த அடர்வனத்தின்
ஓவ்வொரு பறவையும்
உங்கள் 
அம்பு நோக்கியே 
வரும் என்கிறீர்கள்
உங்களைவிடவும் அந்தப்
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
வானம் பெரிதென”
அந்த வானம் பெரிதென தெரியாதவர்களல்ல தெலூஸிம், ஆத்மாநாமும், அன்னா கரீனானாவும், மாயாகாவ்ஸ்கியும், ஸில்வியாவும்.  ஆனாலும், அம்பை அவர்கள் காதலித்துவிட்டார்கள். நமக்கும் காதலுண்டு என்றாலும், வானம் பெரிதாக வசீகரிக்கவில்லை என்றாலும்,
வாழ்ந்துதான் தொலைப்போமே என்றில்லாமல்
வாழ்ந்துதான் பார்ப்போமே -  மணி! வாழ்த்துக்கள் என்று சொல்லி இக் கவிதை தொகுப்பினை வரவேற்கின்ற சம்பிரதாய உரை அல்ல இது.  தமிழ்க் கவிதை படைப்புலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப் பேசப்படவேண்டியவர் மணி என்பதற்கான சாட்சிகளுடான ஒரு பகிரல்!
ஒரு சோறு பதமாகப் பின்வரும் மிக முக்கியமான சாட்சி, இக்கவிதை:

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *