விரிசலுக்கு பிறகு – பத்மநாபபுரம் அரவிந்தன்

	"மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி என்றால் ஒரு கவிஞனுக்கு அதற்குள்ளே இன்னுமொரு சுயமொழி கிளைத்து அவனை மேலும் தனிமைப்படுத்தி விடுகிறது. அவனது தனித்துவமான புஷ்பக விமானமும், சிலுவையும் அம்மொழிதான்.
	"மொழி என்பது உலகளாவிய மனித குலத்தின் வலி" என்றதுவும் லக்கானே. அவ்வலியை தனக்கே தனக்கான தன்வய, தன்மையப் பிரதேசமாகச் சுயமாக அறிவித்துக் கொண்டு, அதன் வழிப் பயணப்படுவன் கவிஞன் மட்டுமே. வலியையும், இன்பத்தையும் தனக்கானதொரு புனைவு மொழியில் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகையில் ஃபிராய்டும், லக்கானும் கலந்த கலவைதான் அவன். ஏனென்றால் ஈடிபஸ் சிக்கலுக்கு அடிப்படை புனைவு என்று ஃபிராய்ட் சொல்கையில், லக்கானோ அதற்கு மொழிதான் அடிப்படை என்கிறார். ஏனிந்த உளவியல் அறிஞர்களது அறிமுகம் ஒரு கவிதைப் புத்தகம் குறித்துப் பேசுகையில் எனும் கேள்வி எழலாம். ஏனென்றால் - கவிதைகளுக்குள் பயணப்படுமுன் அக்கவிஞனின் உளப்பாங்கு மிக முக்கியம் எனக்கு. மனித மனம் பிரவேசிக்கின்ற புதிய பகுதிகள், பழைய சுவடுகளின் நினைவினை முற்றிலுமாகத் தொடர்பறுத்துவிடுவதில்லை. இவற்றைப் பிணைக்கின்ற மாய முடிச்சை முன்வைத்து அதன் சூட்சுமத்தில் இயங்குகின்றன அரவிந்தனின் கவிதைகள். அவற்றூனூடான எனது பயணத்திற்கு அவரது உளப்பாங்கை, உளவியலைக் கொஞ்சம் அறிந்து, புரிதலும் அவசியமல்லவா?
	தனது கவிதைகள், கோட்பாடு அல்லது புனைவு சார்ந்ததா எனத் தெரியாது என்று சொல்கின்ற அரவிந்தன் எந்த எளிமைக்காகவே கவனித்துப், படிக்கப்பட வேண்டியவருமாவார். கவிதையில் மட்டும் அர்த்தம் மொழியால் தீர்மானிக்கப்படுவதில்லை அல்லவா? அதைத் துய்க்க இரண்டு 'அகனிலைகள்' - கவிஞன், வாசகன் - வேண்டுமல்லவா? அதிலும், மனிதனின் அகனிலையானது மொழி - அர்த்தம் ஆகிய இரண்டு விஷயமாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் - அவனது கலை வெளிப்பாடு - குறிப்பாகக் 'கவிதை வெளிப்பாடு' என்பேன் நான்.
	பத்மநாபபுரம் அரவிந்தன் எனத் தனது ஊரைப் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கின்ற அரவிந்தன், சென்னையில், கடலில், கப்பலில் எங்கு இருந்தாலும் தனிமையில், தனது வேரைத், தான் தொலைத்த ஊரைத் தான் சுமந்து கொண்டிருக்கிறார். அவரது யாழ் இழந்த பாணன் அதன் வெளிப்பாடே, அதன் குறியீடே.
	"கதை, கவிதை, கட்டுரை - ஒரு பொருளின் வடிவத்தை எப்படித் தீர்மானிப்பீர்கள்" என்ற கேள்விக்குக் கல்யாண்ஜி "இந்தக் கதைக்கு இது வடிவம். இந்தக் கவிதைக்கு இன்னும் கொஞ்சம் பாலைச் சுண்டக் காய்ச்ச வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதில்லை. ஆச்சி மசாலா இல்லையே, அம்மாச்சி அரைக்கிற மசாலா. மிஷின் பக்குவம் வேறு. கைப்பக்குவம் வேறு இல்லையா? கண் அளக்காததையா கை அளக்கும்?" என்று சொல்லியிருப்பார். ஆமாம் கண் அளப்பதுதான் முக்கியம் கவிதைக்கும் - அகக்கண் அளப்பது. அவ்வகையில் அரவிந்தன் கவிதைகளில் Craftness செய்நேர்த்தி இல்லை - கண் அளந்ததை எழுத்தில் பகிருகின்ற ஒரு இளைப்பாறல் - வட்டமா, சதுரமா, சரியா, தப்பா இவை பற்றிய அலட்டலோ கவலையோ இல்லாமல் பாண்டி விளையாடுகின்ற ஆர்வமும், அவ்விளையாட்டு தருகின்ற திருப்தியும் போதுமென்கிறார் போலக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவரது கூடுதேடி, வர்ணங்களால் மட்டுமல்ல ஓவியங்கள், அது ஒரு மழை நாள், இழப்பு - இவை பெரிதான அனுபவக் கிளர்வைத் தராத மேம்போக்குக் கவிதைகளாகப் பட்டாலும், அவரது அகக் கண்ணின் அவதானிப்பும், அதன் பதிவும் "புரிந்து கொள்ளேன் என் இந்தச் சிறு பதைபதைப்பை, தேடலை, பரிதவிப்பை" என்று உண்மையின் சுட்டுவிரல் தொட்டு நம் முகவாயிலில் கெஞ்சுகையில், "கவிதை மூடுண்ட அறைகளை மட்டுமே பாடக் கூடாது. சாளரங்களைத் திறந்து வெளியே வர வேண்டும். விசாலமான இந்த வாழ்க்கையைப் பாட வேண்டும். மனித வாழ்க்கைக்கு நெருக்கமானதாகத்தான் கவிதை இருக்க வேண்டும்" என்ற நெரூடாவை நினைத்துக் கொண்டேன். அரவிந்தனின் (அகக்) கண் அளந்ததை அப்படியே உள்வாங்கிப் பயணிக்கிறேன்.
	"லோரன்ஸ் என்பவர் ஒரு விசித்திரமான பரிசோதனை செய்தார். அது லக்கானைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு வாத்து தனது முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் சமயம் பார்த்து, தாய் வாத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதன் இடத்தில் தன் பூட்ஸ்களை வைத்தார் லோரன்ஸ். முட்டையை விட்டு வெளியே வந்த குஞ்சுகளின் கண்களில் முதலில் பட்டது பூட்ஸ்கள்தான். அந்த வாத்துக் குஞ்சுகள் பூட்ஸையே சுற்றிச் சுற்றி வந்தன. லோரன்ஸ் அந்த பூட்ஸ்களை அணிந்து கொண்டு எங்கே போனாலும் அவை பின்தொடர்ந்தன. அந்த பூட்ஸ்களைத் தங்கள் தாயாக அவை நினைத்துவிட்டன. மேலும், முதன்முதலாக அவற்றின் கண்களில் பட்டவை அந்த பூட்ஸ்கள்தான். எனவே, அவை குஞ்சுகளின் மனத்தில் பிம்பமாகப் பதிந்துவிட்டன. அந்த பிம்பத்தை அவை பின்தொடர ஆரம்பித்துவிட்டன. இதை 'அடிமைப்படுதல்' (கேப்டிவேஷன்) என்கிறார் லக்கான்." (லக்கான் - எம்.ஜி.சுரேஷ் : 11)
	மாற்றங்கள் கொன்ற என் மனக்கதைகள் எனும் கவிதையைப் படித்தபோது. பத்மநாபபுரமே அரவிந்தன் எனும் வாத்துக் குஞ்சிற்குத் தாய்மடி எனப் பிடிபட்டது. லோரன்ஸின் பூட்ஸை அவை தாய்மடியெனத் தொடர்ந்தது போல அவ்வூரைத் தொடர்கிறார் அரவிந்தன். அவ்வூரில் தனது வீட்டின் காரைச் சுவர், புளிய மரம், மாமரம், செண்பகப்பட்சி, கதை கேட்டுத் தூங்கிய கட்டில், முயல்கள் வளர்த்த பெருங்கூடு இவையெல்லாம் பழங் கதையாய் ஆனபின்பும், பத்மநாபபுரத்தை கடற்காற்றின் உப்பு மணமென உள்ளிழுத்தும், தன் உயிர்ச் சூட்டைத் தக்கவைத்துப் பாலூட்டும் உணர்வுத் திசைமானியாயும் சுமந்திருக்கிறார் அவர்.
	இவரது பெரும்பான்மையான கவிதைகளிடையே ஊடுபாவும் சரடு - உலகமயமாக்க, தாரளமயமாக்க, தனியார்மயமாக்கலின் தாக்கமே. 21ம் நூற்றாண்டின் இந்த கோர பசிக்கு முதல் பலி நமது மரபு சார் வேளாண்மை, வளம் சார் நீர்நிலைகள், பசுமை சார் சுற்றுச் சூழல் என்பதே. மிக உணர்வுப் பூர்வமாக இதனைச் சிதைத் தொழித்தல் எனும் கவிதையில் பதிந்துள்ளார். இதைப் படித்தவுடன்.
	"இன்றைய உலகச் சுற்றுச்சூழல் சிதைவிற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் செயல்களே" என்று சொன்ன ஜான் வோக்லர் (John Woglar) எனும் முதலாளித்துவ அறிஞரின் அபத்தமான, மிகச் கண்டிக்கத்தக்க கூற்று நினைவிற்கு வந்தது. இந்தியா இப்போது வளர்ந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைந்து விட்டதாகவும், வல்லரசு குறித்துக் கனவு காண வேண்டுமெனவும் தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உலகத்தைக் குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதும், சுமத்தப் படுவதும் இன்னமும் நமது சிறுபான்மையினர் மீது தான். 

	எதற்காக ஒரு கவிதைப் புத்தகம் குறித்த பகிர்வினிடையே மேற்சொன்ன கூற்று  என்று நீங்கள் கேட்கலாம் - வெறும் அகத்தின் வழி ஊடுறுவிய உள்வழிப் பயணமாகக் கவிதை இருப்பின் அது அர்த்தமற்ற சவம். புறத்தின் தாக்கத்தை, தான் வாழும் காலத்தின் சமூக நிகழ்வுகளை, அவலங்களை, பிரச்சாரத்தின் தொனியோடு அப்பட்டமாக இல்லாது, பொதுமையானதொரு அனுபவமாக அதனைக் கடத்துகின்ற ஓர்மையும் ஒரு கவிஞனுக்கிருக்க வேண்டும்.

பிச்சைக்காரர்கள்
	வயோதிகக் கூனால்
	வளைந்த நடையுடன்
	பஞ்சடைத்த கண்களும்
	நடுங்கும் உடலுமாய்...
	கந்தல் உடையுடன்
	கையேந்தி நின்ற
	அந்தப் பிச்சைக்காரனுக்கு
	தேனீர் வாங்கித் தந்து
	கையில் பத்து ரூபாய் கொடுத்தபோது...
	நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது...
	மின் விசிறியின் கீழே சுழல் நாற்காலியில்
	அமர்ந்தபடி மூன்றுமுக இணைப்பிற்காய் ரூபாய்
	ஐயாயிரம் லஞ்சமாய் வாங்கிய
	அந்த மின்வாரியப்
	பிச்சைக்காரனுக்கு...
	நானிட்ட பிச்சையும்
	முழுக் குப்பி விஸ்கியும்
	எத்தனை நினைத்தும்
	கனக்கிறது மனதுள் அழியாமலேயே...
(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 125,126)
	திறம்படப் பேசியவன்
	ஏற்ற இறக்கங்களுடன்
	திண்மையான குரலில்
	அவன் பேசிக் கொண்டிருந்தான்
	சில இடங்களில்
	ரகசியம் சொல்வதுபோல்
	மென்னிறகு கட்டி
	வழிந்தோடியது வார்த்தைகள்...
	சில சொற்கள்
	வாள் வீச்சின் வேகத்தில் வந்திறங்கியது
	கண்டங்கள் கடந்து வரும்
	வேற்று தேசப் பறவைகளின்
	சிறகொலி போல்
	ஆழ்ந்த உந்தலுடன் வந்தன சில
	வார்த்தைகளின் இடையே அவன்
	மெல்லிய நூலிழையை
	ஊசியில் கோர்த்து
	தைப்பது போல் தைத்திறக்கினான்...
	கூட்டம் சுயம் மறந்து லயித்துக் கிடந்தது
	சில நேரம் சொற்கள்
	பாறைகள் உடைபடும்
	ஓசையுடன் தெறித்து விழுந்தன
	அவனுள் உறைந்த
	எண்ணத்தின் வெளிப்பாடு
	மனதுள் இருந்து குரல்வளை நுழைந்து
	நாக்குச் சுழற்சியில்
	மழைபோல் பொழிந்தது
	கூட்டம் நனைந்தபடி நினைத்தது
	'பேச்சு நன்றாக இருக்கிறது...
	செயலிலும் வருமா
	தடையற்ற இந்நிலை?
	போட்டுத்தான் பார்ப்போமே'
	என்று அழுத்தி வைத்தனர்
	அவனுக்கான சின்னத்தில்
	தங்களின் விரல்கள்...
	(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 31,32)

அகதிக் காலம்
	நீண்டதோர் கடற் பயணத்தின்
	மூன்றாம் நாள் அதிகாலை
	கண்ணில் பட்டது முன்புறக் கொடிமர
	உச்சியில் அமர்ந்திருக்க அக்காகம்...

	சென்னை - ஆஸ்திரேலியா
	விசாவின்றி வந்தடைந்து 
	கரைகண்ட களிப்பினில் 
	வேகமாய் எம்பி சுய குரலில்
	கத்திவிட்டு கரை நோக்கிப் 
	பறந்தது, மறுநாள்...
	உடலெங்கும் கொத்துக் காயங்களுடன்
	கப்பல் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி
	அமர்ந்திருக்கக் கண்டேன் நான்
	தலை சாய்ந்து எனை நோக்கிக் கத்தியது இப்படியோ?
	'அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும்
	வெளிநாட்டு மோகமது கூடாதென்றும்...'
	(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 43,44)
போன்றவை இத்தொனியுடைய கவிதைகள்தாம்.
	19 டி.எம்.சாரோனில் தான் பெரிதும் மதித்து வியக்கின்ற பிஷப் கிடியன் தேவநேசனுக்கும் அவரது காரோட்டிக்கும் நடந்த உரையாடல் ஒன்றைப் பின்வருமாறு பதிவு செய்திருப்பார் பவா.
	"ஒரு மழை இரவில் மலைப்பயணத்தில் காலின் முன்சீட்டில் தூங்கிய கிடியன் தேவநேசன் ஓட்டுநரின் தீடீர் பிரேக்கால் தலைமோதி அடிபட்டு விழிக்கின்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதுமில்லை ஏனெனக் கேட்டதற்குத் தலை திருப்பாமலே நிதானமாகப் பதில் சொல்கிறார் வயதான ஓட்டுநர்:
	"ரோட்டை ஒரு கீரிப்புள்ள க்ராஸ் பண்ணுச்சுங்க'
	'கீரிதான, அடிச்சுட வேண்டியதுதான?'
	அப்புறம் மரணம் எனக்கு மரத்துப் போயிடும் அய்யா"
	பவா எனும் கதை சொல்லிக்குள்ளிருக்கும் இறவாக் கவிஞனை நான் தரிசித்த இடம் அது. பொதிகைச் சித்தரது பதிவொன்றில் இந்த நிகழ்ச்சிக் குறிப்பாகச் சுட்டிக்காட்டிவிட்டு, இதுகுறித்து அவர், 
	"இத்தகைய மரணம் பற்றிய அந்தப் பெயர் தெரியாத ஓட்டுநரின் பதிவு கிடியன் தேவநேசனின் மரணம் பற்றிய முக்கிய உரைகளைக் காட்டிலும் உன்னதமானது தானே" எனவும் சிலாகித்துக் சொல்லியிருப்பார்.
	இந்தக் கவிமனம், "கவிதை, தான் கவிதையாவதற்கு வார்த்தைகளைக் காட்டிலும், அர்த்தங்களைக் காட்டிலும் வாழ்க்கையையே நம்பியிருக்கிறது" எனும் ஈரோடு தமிழன்பனின் கூற்றை மெய்ப்பிக்கின்றது. இக்கவிமனம் அரவிந்தனுக்கும் வாய்த்திருக்கிறது –
	அவரது மறதி கவிதையைப் பாருங்கள் -
	உயரத் தென்னை மரங்களிடை
	நின்ற குட்டை மரத்தின்
	இளநீரில் மட்டும்
	பால்மணம் கொண்ட
	புதுச்சுவை இருந்தது

	காலங்கள் கடந்தபோது
	அனைவரும் மறந்தனர்
	இரண்டே வயதில் இறந்துபோன
	குழந்தையின் உடல் புதைத்த
	இடத்தில் நட்ட தென்னங்கன்று
	அதுவே என்பதை
	(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 71)
	நாம் தொலைத்துவிட்ட கரகாட்டம், கூத்து, புலிவேசம், ஒயிலாட்டம் - இவையோடு அறவே அருகிவிட்ட நாட்டார் மரபுச் சடங்குகள், அதன் எதிரொலியாய்ப் பிழைப்பின்றப் போன எளிய மனிதர்களின் துயரம் குறித்துப் பேசுகின்ற கோமறத்தாடியின் மறுநாட் கவலை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று.
	இதன் தலைப்பு கோமறத்தாடி என்றே இருந்திருக்கலாம். ஒரு கவிதைக்கான தலைப்பு சற்று கோடிட்டுக் காட்டுதல் அல்லது குறியீட்டுத் தன்மையுடன் இருந்தாலே போதும். அதன் அர்த்தத்தினை விளக்குகின்ற உரைநடைத் தன்மை அவசியமில்லை. மேற்சொன்ன கவிதை கோமறத்தாடியின் உருவில் குறி சொல்லும் மாடனனின் மன உணர்வைத் 
	"தண்ணீர் தெளித்து புதுத்துணி உடுத்தி
	கறிச் சோறு தின்னும் பொழுதில் நினைப்பார்
	என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்!"
	என்று சொல்லி
	...நாளைமுதல் கோவில் சாப்பாடு ஒரு வேலை...
	இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள்
	நாளை மீண்டும் சொல்வார்கள், 
	'சும்மா கோவில்ல கெடந்து எளவெடுக்காமே...
	ஏதாவது சோலி மயிருக்குப் போவும் ஓய்!
	என்று முடியும்.
இதனைப் படித்தவுடன் எனது தொலைதல் எனும் பின்வரும் கவிதை முன்வந்தது-
	கழைக் கூத்தாடிகள் ஜிகினா உடையில்
	கோவில் திருவிழாக்களுக்கு வந்துவிட்டார்கள்.
	சர்க்கஸ் கோமாளிகள்
	திருமண வீட்டில் வரவேற்றுக் கை குலுக்குகிறார்கள்.
	கிடாய் வெட்டி ரத்தப் படையலிடும் பூசாரிகள்
	தெருமுனைக் கோயிலில்
	இரண்டு நேரம் விளக்குப் போடுகிறார்கள்.
	அடவு வைத்து கூத்து கட்டுபவர்கள்
	திரைப்படங்களில் தலைகாட்டும் வயதான
	அப்பாக்களாகிவிட்டார்கள்.
	சேலைகளுக்கு அடியில்
	மொண்ணைக் கை மரப்பாச்சியைப் பத்திரப்படுத்திவிட்டு
	'டம்பப்' பையோடு நானும். 
	"கவிதையானது பாட்டிலில் அனுப்பட்ட செய்தி - எப்பொழுதோ எங்கேயோ அந்தச் செய்திக்குக் கடலிலிருந்து நிலத்தை நோக்கிய பாதை கிடைக்கலாம் - ஒருவேளை" என்றார் பால் ஸெலான். பாட்டிலில் அல்ல ஒரு புத்தக வடிவில், கடலிலிருந்து நிலத்திற்கு, உள்ளதை உள்ளவாறு, அவை கவிதையா என்ற கவலையின்றிக் கடத்தியிருக்கிறார் அரவிந்தன்.
	அவரது கடற்புயல் நாட்கள் மிக மிக வழமையான கவிதைதான் - வெண்ணலைக் குதிரைகள், மின்னல் மரங்கள், சமுத்திர சாமுராய்கள், பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல்' என்று தேய்ந்துபோன உவமைகளைக் கொண்டதுதான் - ஆனால் கவிதையின் முடிவில் சாதாரண மனிதனது (உள்மனம் vs நடப்பு நிலைக்கான மனம்) பயத்தை, பீதியை, அதனை மீறி நிற்பேன் என்கிற ஊசலாட்டமான சமாதானத்தைப் படம் பிடிக்கிறது.
	அப்பா என்கிற உறவை ஆளுமையை முற்றிலும் வேறு கோணத்தில், எவ்விதப் புனிதப்படுத்துதலும், romanticism உம் அற்றுத் தப்புக்கணக்கு கவிதையில்
	"நான் கூட்ட நீங்கள் கழிக்க
	நீங்கள் கூட்ட நான் கழிக்க
	வகுத்தலும், பெருக்கலும் 
	கணமும், விகிதமும்
	மொத்தமாய்ப் புரியவில்லை
	எனக்கென்றும் கணக்கு"
என்று எழுதியுள்ளார். பாசாங்கற்ற பார்வையுடன், ஒரு உறவைப் பதியவைப்பதும், அந்த objective disection ஐக் கவிதையாக்குவதும்... சரிதான் - இது ஒரு வகைப் பாணிதானே.
	மிகப்பிடித்த - வார்த்தை விளையாட்டுப் போலத் தோற்றமளிக்கின்ற ஒரு கவிதை தலைமுறைகள் 
	மருதநாயகம் பிள்ளை
	சிவன் பிள்ளையைப் பெற்றார்
	சிவன் பிள்ளை
	மருதநாயகம் பிள்ளையைப் பெற்றார்
	மருதநாயகம் பிள்ளை
	ஷிவக்குமாரைப் பெற்றார்
	ஷிவக்குமார்
	யாஷிக் ராகேஷைப் பெற்றார்
	யாஷிக் ராகேஷ்
	இம்மானுவேல் மேத்யூவைப் பெற்றார்
	இம்மானுவேல் மேத்யூ
	முஜீப் ரஹ்மானைப் பெற்றார்
	முஜீப் யாரைப் பெறுவானோ?
	மருதநாயகம்பிள்ளையும்
	சிவன்பிள்ளையும்
	எங்கே போனாரோ?
	(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 116)
	கவிதை சிக்கல் நிறைந்து இருக்க வேண்டியதில்லை - பகடியோடு நாம் தொலைக்கின்ற வேர்த்தடங்களை மேற்சொன்ன கவிதையை விட வேறெப்படிச் சொல்ல?
	தூக்கமால் போன துக்கி என்றொரு கவிதை - தன் தாத்தாவின் பிணத்தைச் சுமக்க முடியாத பேரனின் துயரப் பதிவு அது. ஆனால் துக்கி என்ற சொல் புதிது எனக்கு.
	அது போலவே எதிர் அழகியல் கவிதையான யதார்த்தம் எனும் கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. 
	நட்சத்திரங்கள் பிடித்து
	நெற்றிப் பொட்டு வைப்பேனென்று
	சொல்ல மாட்டேன்
	பக்கத்துக் கடையில்
	ஒட்டுப் பொட்டு வாங்கித் தருவேன்
	வானவில் கசக்கி உன்
	கூந்தலில் சூடேன்
	ஒரு முழம் மல்லி தினமும் தருவேன்
	நிலவு வதனம் உனக்கென
	வர்ணிக்க மாட்டேன்...
	தினமும் கண்ணாடி நீயே பார்க்கிறாய்
	மேகத்தைப் போர்வையாக்கி
	அதனுள் கூடுவோமெனப்
	புழுகுரைக்க மாட்டேன்
	கோரைப் பாயில் நானேயுன்னை
	குளிராமல் போர்த்துகிறேன்...
	இவையெல்லாம் சம்மதமெனில்
	தொடர் உன் காதலை என்னுடன்...
	(விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 65)
	'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' என்ற திரைப்பட பாடலை என்னையறியாமல் இதனைப் படித்தவுடன் முணுமுணுத்துக் கொண்டேன். கூடவே கலாப்பரியாவின் பின்வரும் கவிதையும் நினைவிற்கு வந்தது. 
	
தோல்வி
	யாராவது இவளை உடனே
	மீட்டுதலில் உடையும்
	வீணைத் தந்தியென -
	மிக மென்மையாய்க்
	கொலை செய்யுங்கள்.
	இன்னொரு பிறவியில் 
	நீங்கள் தேவதாஸ்
	ஆகும் போது
	உங்கள் கடைசிக் காலத்தில் 
	வண்டியோட்டி -
	நன்றிக் கடன்
	செலுத்துகிறேன்.
	உயிரிக்காதலை மிக எதிர்மறையானதொரு உணர்வுடன் juxtoppose செய்து, அழகியலின் சாயலோடு அதனை எதிர்க்கின்ற இக்கவிதை காதலைப் பற்றி எவ்வளவு கனமாக, ஆழமாகச் சொல்கிறது! இதனைச் சற்று மாற்றி யதார்த்தமாக காதலெனும் உணர்வினைச் சொல்வது அரவிந்தனின் கவிதை!
	மரணம், மழை, போதை, உறவின் நிழலாட்டம், ஒரு பூனையின் இருப்பும், மறைவும், நட்பு, மனைவி, காகம், சிகரெட் புகை, - எல்லாமும் இருக்கின்ற இத் தொகுப்பில் தன்னிலை குறித்த கவிதைகளைத், (தன் விளக்கமாயிருக்கின்றவற்றைத்) தவிர்த்திருக்கலாமே எனத் தோன்றியது.
	'இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து
	புதுத் தெரு புகுந்தவன்'
என்கிற விமர்சனத்திற்கு
	"மூடிவை மாமாங்கம் கழியட்டும்
	அர்த்தம் காட்டாது அழியாமல்
	நிற்குமென் இறவாக் கவிதை
	என் கவிதையைப் புரிய
	வேறென்ன வேண்டும்?"
என்கின்ற தெளிவுத் திமிர் இருக்கின்ற கவிஞன் நீங்கள் அரவிந்தன் - உங்களுக்கு உங்கள் கவிதைகளைப் புரிந்துகொள்ள ஒரு 'என் குழு' கூட வேண்டாமே –
	"ஊர்ந்து தான் செல்கிறேன்
	நிஜமானவையைத் தேடி
	இப்போது... ஆனாலும்
	நானாக நான் ஊர்வதில்
	யாராகவோ நான் பறந்ததை விட சுகம்... சுகம்..."
என்பவருக்கு யாருமே வேண்டாம் - மனதின் உணர்வினைப் பகிர்ந்து கொண்ட காகிதமும், பேனாவும் போதுமல்லவா?
	வால்ட் விட்மனின் (Walt Whitman) கவிதைகளை முதலில் அசிங்கமான வரிகளென டால்ஸ்டாய் இகழ்ந்து நிராகரித்தார். பின்னர்,
	"விண்ணில் ஊர்வலம்
	போகும் நட்சத்திரங்களை விடச்
	சின்னப் புல்லிதழ்கள்
	எவ்வகையில் தாழ்ந்தவை?"
என்று கேட்ட விட்மன், அமெரிக்க டால்ஸ்டாய் எனப் புகழப்பட்டது வரலாறு.
	என்னைப் பொருத்தவரையில், ஒரு கவிதையை அணுகும் போது அது எந்தப் பின்னணியில், எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது எனக்கு மிக முக்கியம். கவிதையின் எதிரியான பின்நவீனத்துவ விமர்சகர் (Roland Paarth) ரொலாண் பார்த்திற்கு ஜப்பானிய ஹைக்கூ கவிதை மட்டும் எப்படிப் பிடித்தது?
	ஜப்பானின் கலாச்சாரப் பின்னணியில் வைத்து மட்டுமே அதனைப் பார்க்காது, ஜப்பானையே ஒரு பிரதியாக்கிப் பார்த் பார்த்ததால் தான் அவருக்கு ஹைக்கூ பிடித்துப் போகின்றது என்கிறார் எம்.ஜி.சுரேஷ். "அர்த்தம் என்ற அரிப்புடன் திரியும் மேற்கத்திய பார்வையாளனுக்கு ஜப்பான் தரும் அர்த்தங்களிலிருந்தான விடுதலையைக் கண்டுகொள்வதே பார்த்தை ஈர்க்கிறது. ஜப்பானில் வெறுமையான மொழியும், வெறுமையான குறிகளும் இயல்பான தன்மையுடன் நிலவுகின்றன. ஜப்பானியர்களின் ஹைக்கூ கவிதை ஆழமற்ற சமப்பரப்பில் இயங்குகிறது. மறைமுகமான அல்லது வரையறுக்கப்பட்ட குறிப்பீடுகள் அதில் இல்லை. மையமற்ற தன்மை மட்டுமே அதில் இருக்கிறது.
	ஜப்பானையே ஒரு பிரதியாக்கி வாசித்துப் பார்க்கிறார் பார்த். ஜப்பான் என்கிற அந்தப் பிரதி மேற்கத்திய மனத்தின் தெளிவான, நிலையான ஒற்றை அர்த்தத்துக்கு எதிராக இயங்கும் வெளியாகும். ஜப்பானியத் தலைநகரமான டோக்கியோவில் ஜப்பானியப் பேரரசரின் இல்லம் இருக்கிறது. அந்த இல்லம் நகர்த்தின் ஓரத்தில், மையம் தகர்க்கபட்டதாக இருக்கிறது. அதேபோல் டோக்கியோ நகரத் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை. பார்வையாளர்கள் தெருக்களில் குறிக்கப்பட்டுள்ள சித்திர வடிவங்களை வைத்தே அந்தந்தத் தெருக்களை அடையாளம் காணமுடியும். ஜப்பானைப் பொறுத்தவரை, குறிச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. பிற கற்களால் தாங்கி நிறுத்தப் பட்டிருக்கும் மையக்கல் (கீ ஸ்டோன்) எதுவும் இல்லை." (பார்த் - எம்.ஜி.சுரேஷ் : 51)
	ஆக பின்னணியைப் புறந்தள்ள முடியாது என்கின்ற தெளிவோடு, தன் தொழிற்பாற்பட்டு கடல் வாழ்வைப் பெரும்பகுதி உய்க்கின்ற அதே போழ்தில் தனது வலிய வீட்டையும், பத்மநாபபுரத்தையும், பெருவுடையாரையும் மனதில் சுமக்கின்ற அரவிந்தனின் கவிவெளிப்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே நியாயம். அவரவளவில், அகக்கண் கண்டதை, தத்துவத் தேடலோ, ஞானத்தின் முகிழ்த்தலோ இதோ எனும் தம்பட்டம் அற்றுத் துரோகம், நட்பு, காதல், பிரிவு, பால்யத்தின் மீட்டுருவாக்கம், இவற்றைச் சமகாலப் பார்வையாளனாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.
	நீண்ட நாள் கடல் பயணத்தில் 
	எதிர்பாராமல் பயணம் நீளும் சூழலில்
	சிகரெட்டுகள் தீர்ந்து போகலாம், - அரவிந்தன். ஆனால், ஒரு போதும் உங்கள் கவிதைகள் தீராது. 
	கப்பல் கரையடைந்த பின்பு அவை எங்களைச் சேரும் - காற்றில் உயரும் சிகரெட்டின் புகை போல அல்ல. வெகுநாட்கழித்து வீடு திரும்புகின்ற மகனுக்கு ஆசையும், பரிவுமாய்ப் பரிமாறச் சமைக்கின்ற எம் பாட்டிமார்களின் புகை போக்கியிலிருந்து எழும்புகின்ற நாற்றப் புகைபோல்!
	காத்திருக்கிறோம் அடுத்த தொகுப்பு இன்னும்
	காத்திரமாகக் கைவர - வாழ்த்துக்கள்!

உதவிய நூல்கள்:
	லக்கான் - எம்.ஜி.சுரேஷ்
	பார்த் - எம்.ஜி.சுரேஷ்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *