05.08.2026 அன்று, எல் நினோ பருவநிலை மாற்ற நிகழ்வின் தாக்கம், இந்தியப் பருவமழை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் மீதான அதன் விளைவுகள், கடல்நிலை முன்னறிவிப்பு, புயல் அலை மற்றும் உயரமான அலைகளுக்கான முன்எச்சரிக்கை அமைப்புகள், ஆழ்கடல் இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவ சமூகங்களுக்காக INCOIS மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
கேள்வி-
இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS), எல் நினோ மற்றும் பருவநிலை சுழற்சி நிகழ்வுகள் இந்தியப் பருவமழை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து என்ன மதிப்பீடு செய்துள்ளது? கடல்நிலை முன்னறிவிப்பு, புயல் அலை மற்றும் உயரமான அலைகளுக்கான முன்எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? நடப்பு நிதியாண்டில் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் கடல்வள வரைபடத் தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மேலும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவ சமூகங்களுக்காக INCOIS வழங்கி வரும் சிறப்பு ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் :-
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INCOIS, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான உள்நாட்டு எல் நினோ–தெற்கு அலைச்சல் (ENSO) முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்திய கடல் தரவுகளின் அடிப்படையில், 2026 மே மாதத்தில் எல் நினோ உருவாகியுள்ளது. 2026 ஜூன் முதல் 2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும் வாய்ப்பு 70 முதல் 90 சதவீதம் வரை இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
எல் நினோவின் தாக்கத்தால் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் வளிமண்டல மற்றும் கடல்சார் சூழலில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் இந்திய தென்மேற்கு பருவமழை பலவீனமடைய வாய்ப்புள்ளதுடன், கடல் வெப்ப அலைகள், பவளப்பாறைகளுக்கு வெப்ப அழுத்தம், கடல் ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் உற்பத்தித் திறனில் மாற்றம், மீன்களின் பரவல் மற்றும் கிடைக்கும் அளவில் பாதிப்பு, மேலும் அலை மற்றும் கடல் வீக்கம் காரணமாக கடல்சார் போக்குவரத்து மற்றும் கடலோர நடவடிக்கைகளிலும் தாக்கம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்நிலை முன்னறிவிப்பு மற்றும் கடல்சார் பல்வேறு பேரிடர் முன்எச்சரிக்கை சேவைகளை வலுப்படுத்தும் வகையில், புயல் அலை, உயரமான அலை, கடல் வீக்கம் மற்றும் வலுவான நீரோட்டங்களுக்கான உயர் துல்லிய முன்னறிவிப்பு மாதிரிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடல் கிளைடர்கள், மிதக்கும் கருவிகள், அலைமானிகள், ஆர்கோ மிதவைகள், செயற்கைக்கோள் கண்காணிப்பு, 24 மணி நேர கண்காணிப்பு, பல்வேறு தகவல் பரிமாற்ற தளங்கள் மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கடலோர மக்களின் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் கடல்வள வரைபடத் தயாரிப்பிற்காக ரூ.145.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் 32 கடலடி மலைகளில் உயிரினப் பன்முகத்தன்மை ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 கூடுதல் கடலடி மலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தன்னாட்சி நீர்மூழ்கிக் கருவிகள் மூலம் நான்கு செயல்பாட்டிலுள்ள ஹைட்ரோதெர்மல் வெப்பத் துவாரங்கள் மற்றும் இரண்டு சல்பைடு கனிமவளப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் கனிமம், பாறை, படிகட்டி மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க ROV ஆய்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்காக INCOIS, 10 நாட்கள் வரை, 3 மணி நேர இடைவெளியில் அலைகள், காற்று, கடல் வீக்கம், நீரோட்டம், கடல் மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்ட கடல்நிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், உயரமான அலை, கடல் வீக்கம், புயல் அலை மற்றும் வலுவான நீரோட்டம் குறித்த எச்சரிக்கைகள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், எண்ணூர், சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அலைமானி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடலோர அலை கண்காணிப்பு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. சுனாமி முன்எச்சரிக்கை, தொழில்நுட்பப் பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒத்திகைப் பயிற்சிகள் மற்றும் UNESCO-IOC Tsunami Ready திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவ சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த INCOIS தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *