10.08.2026 அன்று, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்திய பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை மீட்டு வருவது, கோஹினூர் வைரம், அமராவதி பளிங்குச் சிற்பங்கள் உள்ளிட்ட இந்திய பாரம்பரியப் பொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
கேள்வி:-
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து திருடப்பட்ட 610 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவா?
அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? கோஹினூர் வைரம், அமராவதி பளிங்குச் சிற்பங்கள் மற்றும் இடைக்காலத்தைச் சேர்ந்த பல்வேறு சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகள் போன்ற பழங்காலப் பொக்கிஷங்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவரப்படாமல் உள்ளனவா? அவற்றின் விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன? மேலும், இந்தியாவில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள, இன்னும் மீட்கப்படாத தொல்பொருட்களின் பட்டியல் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த தரவுகள் மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறையிடம் (ASI) உள்ளதா? என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் :-
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளிலிருந்து இதுவரை மொத்தம் 662 இந்திய தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவிலிருந்து 589 தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலிருந்து 51, இங்கிலாந்திலிருந்து 21, நெதர்லாந்திலிருந்து 1 தொல்பொருள் என மொத்தம் 662 தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காலனித்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீட்பது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகிறது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள், ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பரிசீலித்து, பொருந்தக்கூடிய தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் அரசுகளுக்கு இடையேயான பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இத்தகைய பொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கோஹினூர் வைரம், அமராவதி பளிங்குச் சிற்பங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்பது தொடர்பாக எழுப்பட்டப்ப கேள்விக்கான பதிலை மத்திய அரசு தனது பதிலில் குறிப்பிடவில்லை. காலனித்துவ காலத்தில் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீட்பது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் இந்திய தொல்பொருட்கள் உள்ளன. மேலும், தனிநபர்களிடமும் இத்தகைய பொருட்கள் உள்ளன. ஆனால், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொல்பொருட்கள் குறித்த முழுமையான பட்டியல் அரசிடம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தொல்பொருள் இருப்பது குறித்து தகவல் கிடைக்கும்போது, அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியத் தூதரகப் பணியகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன..
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
PreviousPrevious Post
-
Next11.08.2026 அன்று, முந்திரி, கோகோ மற்றும் கொட்டை வகை பயிர்கள் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் செயல்பாடு மற்றும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கான நிதி தொடர்பாக மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
No comment