11.08.2026 அன்று, முந்திரி, கோகோ மற்றும் கொட்டை வகை பயிர்கள் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் செயல்பாடு மற்றும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கான நிதி தொடர்பாக மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
கேள்வி-
முந்திரி, கோகோ மற்றும் கொட்டை வகை பயிர்கள் போன்ற இந்தியாவின் அதிக மதிப்புள்ள வேளாண் பயிர்களின் உற்பத்தி மற்றும் விளைச்சலை அதிகரித்து, அவற்றை உலகளவில் உயர்தர பிராண்டுகளாக மாற்றுவதற்கு வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள் என்ன? ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில வாரியாக இதுவரை எத்தனை வேளாண் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன? குறிப்பாக தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் எத்தனை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயிற்சி பெற்றுள்ளனர்? மேலும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண்மையை ஊக்குவிக்கும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை விரிவுபடுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?
என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஓன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில் :-
முந்திரி, கோகோ மற்றும் கொட்டை வகை பயிர்கள் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தை (Mission for Integrated Development of Horticulture – MIDH) மத்திய அரசு 2014-15ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாற்றங்கால்களை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சாதாரண மற்றும் அதிக அடர்த்தி முறையில் சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்துதல், வயதான தோட்டங்களைப் புதுப்பித்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளைப் பின்பற்றுதல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் MIDH திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு, முந்திரி, கோகோ மற்றும் கொட்டை வகை பயிர்களுக்கு செலவின வரம்புகள் உயர்த்தப்பட்டதுடன் கூடுதல் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் (ICAR-DCR), மேம்படுத்தப்பட்ட முந்திரி ரகங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அதிக அடர்த்தி நடவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. நேத்ரா கங்கா, நேத்ரா ஜம்போ-1, நேத்ரா உபயா மற்றும் நேத்ரா ஜம்போ-2 உள்ளிட்ட முந்திரி ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், ICAR-CPCRI மூலம் கோகோவின் உற்பத்தி, தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் 2023-24ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ட்ரோன் தீதிகளுக்கு 1,094 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் அனைவரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர விமானி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் 44 நமோ ட்ரோன் தீதிகள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்ற 44 பேருக்கும் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில வாரியான பட்டியலில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 145, உத்தரப் பிரதேசத்தில் 128, ஆந்திரப் பிரதேசத்தில் 108, ஹரியானாவில் 102 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு அளித்த தகவலின்படி, சிறுதானிய மேம்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த மாநிலத்தில் 26 சாத்தியக்கூறுகள் கொண்ட மாவட்டங்கள் இரண்டு சிறப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023-24 முதல் 2025-26 வரை தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.178.49 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரூ.164.73 கோடி செலவிடப்பட்டுள்ளது. சிறுதானிய சாகுபடியை ஊக்குவித்தல் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண் நடைமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சுமார் 10.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
2026-27ஆம் ஆண்டுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் (NFSNM) ஊட்டச்சத்து தானியங்கள் – ஸ்ரீ அன்னா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பை சேர்த்து ரூ.43.94 கோடி (ரூ.4,394.197 லட்சம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Previous10.08.2026 அன்று, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்திய பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை மீட்டு வருவது, கோஹினூர் வைரம், அமராவதி பளிங்குச் சிற்பங்கள் உள்ளிட்ட இந்திய பாரம்பரியப் பொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
-
NextNext Post
No comment