13.03.2020 அன்று நாடாளுமன்றத்தில், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான, தென்சென்னை மக்களவை உறுப்பினர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உரை அவைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய அம்மையீர் அவர்களே! சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மானியக் கோரிக்கையின் மீது நடைபெறும் விவாதத்தில் பங்கு கொள்வதற்கு என்னை அனுமதித்ததற்குத் தங்களுக்கு, நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமூகநீதி மற்றும் அனைத்து மக்களுக்கும் அதிகாரமளிப்பது என்ற நற்பண்புகள் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே நிலை நாட்டப்பட்ட முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவளான நான் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன். அம்மையீர்! புகழ் பெற்ற ஜெர்மன் நாட்டு நாடக ஆசிரியரும், கவிஞருமான பெர்தோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) அவர்களின் புகழ் பெற்ற ஒரு பொன்மொழியுடன் எனது வாதத்தைத் தொடங்குவதற்கு நான் விரும்புகிறேன். “பல குற்றங்களைப் பற்றி பேசாமல் மவுனமாக இருக்கிறது என்பதால் மட்டுமே, அந்த மரத்தைப் பற்றி பேசுவதே குற்றம் என்று கூறப்பட்டால், இது எந்த மாதிரி காலம்?” என்று அவர் கேட்டிருந்தார். அவரது இந்தக் கூற்று இன்றைக்கும் பொருத்தமானதாகத் தோன்றவில்லையா? கிழக்கு டில்லி வன்முறைக் கலவரங்களினால் ஏற்பட்ட அழிவுகளையும், எந்த விதமான அநீதிகளுக்கும் எதிராகவும் வாய் திறவாமல் மவுனமாக இருந்ததன் மூலம் சமூகநீதிக்கு எதிராக நீங்கள் மறுபடியும் அநீதி இழைத்திருக்கிறீர்கள் என்பதையும் காணும்போது, இந்த வரிகள் வெகு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றவில்லையா? அம்மையீர்! மாவீரன் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ போரில், ஈடோனியர்களால்தான் ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டியது என்று சொல்லப்படுவதுண்டு. லண்டன் மாநகரில் உள்ள ஈடோன் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றவர்கள்தான் இந்த ஈடோனியர்கள். அது போலவே, சமூக நீதிக்கான போர் தமிழ்நாட்டின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்னும் மூன்று திராவிட இயக்க வரலாற்றில் புகழ் பெற்ற சரித்திர சீர்திருத்த நாயகர்களால் முன்னர் வென்றெடுக்கப்பட்டது. அம்மையீர்! சமூகநீதி என்பதற்கு விளக்கம் அளிக்க நான் முன்வரும்போது, இத்தகைய மதிப்பீடுகளை நிலை நாட்டிய இந்த மூன்று வரலாற்றுப் புகழ் பெற்ற சமூக சீர்திருத்தக்காரர்களைப் பற்றிய நினைவும், அத்தகைய சமூகநீதி என்னும் கொள்கைச் சுடரை இப்போதும், முன்னை விட மிகுந்த ஆர்வத்துடனும் வேகத்துடனும் பெருமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், அம்பேத்கர், பாபுராவ் பூலே போன்ற முன்னோடி இயக்கங்களின் தன்னிகரில்லாத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட அனைத்துச் செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பது என்று உறுதி எடுத்துக் கொண்டு, செயல்படும் எங்கள் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய நினைவும்தான் எனக்கு வருகிறது. சமூகநீதி என்பதற்கான விளக்கம் என்ன என்பதைப் பார்க்கும்போது, அதன் விளக்கம் என்ன கூறுகிறது என்பதைச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். நாட்டின் ஒட்டு மொத்த செல்வம், அனைத்து மக்களின் உடல் நலம், அனைத்து மக்களுக்குமான சம நீதி மற்றும் சம வாய்ப்புகள் அனைத்தும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கவேண்டும் என்னும் ஓர் அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாடுதான் சமூகநீதி என்பது. அம்மையீர்! கிழக்கு டில்லி வன்முறைக் கலவரங்களின் மோசமான பின்விளைவுகளைக் காணும்போது, உங்கள் மூலம் இந்த அரசை நான் கேட்டுக் கொள்ள விரும்புவதெல்லாம், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான சமவாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தனவா என்பதையும், டில்லியின் அனைத்துக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கப்பட்டதா என்பதையும் மட்டுமே. சமூகநீதி என்பதற்கான அடையாளங்கள் நியாயத் தன்மை, சமத்துவம், நேர்மை மற்றும் நாணயம் ஆகியவையே. முதன்மையாக நான் கேட்க விரும்புவது எல்லாம், டில்லியின் அனைத்துக் குடிமக்களுக்கும் நியாயத் தன்மையுடன் கூடிய நீதி வழங்கப்பட்டதா என்பதைத்தான். அம்மையீர்! இந்த விவாதத்தின்போது மானியக் கோரிக்கை பற்றி மட்டுமே பேசவேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அதே நேரத்தில், சமூகநீதி என்ற சொற்றொடரைப் பற்றி இந்த நேரத்தில் நாம் பேசவேண்டிய முக்கியமான தேவை உள்ளது. இதன் காரணம் நாட்டின் முன்னேற்றத்தில் தாங்கள் அளித்த ஒத்துழைப்பின் அடிப்படைப் பயன்களை அனைத்து மக்களையும் பெறச் செய்யும் ஒரு சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் மீது அதற்கான உரிமைகளையும், கடமைகளையும் இந்த சமூகநீதி என்னும் கோட்பாடு விதிக்கிறது என்பதால்தான். நம் சமூகத்திலும், நாட்டிலும் நிலவும் பன்முகத் தன்மையைப் போற்றிக் கொண்டாடுவதற்கு சமூகநீதி உதவுகிறது. நம் நாட்டில் இப்போது உண்மையாகவே இத்தகைய பன்முகத் தன்மையை நாம் போற்றிக் கொண்டாடி வருகிறோமா? ஜனநாயகப் போராட்டங்கள் மற்றும் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகளின் குரல்கள் அடக்கப்பட்ட, வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க ஒரு சூழ்நிலையே இன்று நம் நாட்டில் நிலவுகிறது. அம்மையீர்! தங்கள் நாட்டு மக்களை விழப்புணர்வு பெறச் செய்து, ஒரு புரட்சிக்கு அவர்களைத் தயார் செய்வதற்கு மாபெரும் ஐரோப்பிய புரட்சியாளர்களான வால்டருக்கும், ரூஸோவுக்கும் 50 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் நம் நாட்டில் சமூகநீதி என்ற கோட்பாட்டினை செயல்படுத்த வைப்பதற்கு தந்தை பெரியாருக்கு 20 ஆண்டு காலமே போதுமானதாக இருந்தது. ஆனால், மற்ற நாடுகளில் எல்லாம் இத்தகைய சீர்திருத்தங்களையும், உன்னதமான நோக்கங்களையும் எட்டுவதற்காகப் பாடுபட்ட அனைத்து சீர்திருத்தவாதிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராட வேண்டியதாக இருந்தது. அம்மையீர்! சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் என்ற களத்தில், தமிழ்நாடு மாநிலம் செய்து முடித்துள்ள சாதனைகளை எல்லாம் ஆவணத்தில் பதிவு செய்ய நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் 1950 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத போராட்டம் காரணமாக கல்வியில் இடஒதுக்கீட்டு நடைமுறையை நடைமுறைப் படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முதல் அரசமைப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பிரிவு 15(4) உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒட்டு மொத்த 69 சதவிகித இடஒதுக்கீட்டு அரசமைப்பு சட்டப்படியான உரிமையை தொடர்ந்து டாக்டர் கலைஞர் பாதுகாத்து வந்தார். அருந்ததியர் சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார். எங்கள் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, அருந்ததியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட உள் இடஒதுக்கீட்டின் கீழ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்த அனைத்துக் காலியிடங்களையும், குறிப்பாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை பயன் மிகுந்த வழியில் நிரப்புவதற்குக் காரணமாக இருந்தார். கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு இடஒதுக்கீட்டை முதன் முதலாக அளித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களில் 33 சதவிகித அளவிலும், அரசுப் பணி நியமனத்தில் 30 சதவிகித அளவிலும் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அவர் அளித்தார். அவரது ஆட்சிக் காலத்திலும், இப்போதும் தமிழ் நாட்டில் ஒட்டு மொத்தமாக 69 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதற்கு அப்போது முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களே பெரிதும் காரணமாக இருந்தார். அம்மையீர்! அனைத்து மக்களும் சமமானவர்கள் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மற்றவர்களை விட அதிக அளவில் சமமானவர்களாக இருக்கின்றனர். நியாயமான, சமன்படுத்தப்பட்டதொரு சமத்துவம் மக்களிடையே ஏற்பட வேண்டுமென்றால், இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவு மக்களுக்கான ஒருங்கிணைந்த இடஒதுக்கீட்டு சட்டம் ஒன்றை இயற்றி அதனை அரசமைப்பு சட்ட 9 ஆவது அட்டவணையில் பாதுகாப்புக்காக வைக்க வேண்டும் என்று அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்காக ஒரு தனி அமைச்சகம் 1969 ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அரசினால்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்டது. மிகமிக அவசரமானதும், முக்கியமானதுமான ஒரு விவகாரத்தை இந்த சான்றோர் அவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நான் விரும்புகிறேன். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்பு பற்றி ஆய்வு செய்யும் மூன்று உறுப்பினர் கொண்ட வல்லுநர் குழு தேவையற்ற ஒன்றாகும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் விவகாரங்களை, பிரச்சினைகளைக் கவனிப்பதற்கென்றே அரசமைப்பு சட்டப்படியான அமைப்பான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்கனவே உள்ளது என்பதே இதன் காரணம். அந்த மூன்று உறுப்பினர் குழுவில் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கூட இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. பணியாளர்கள் பெறும் ஊதியத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படுவதும், ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்கள் இடஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று நீக்கப்படுவதும் சற்றும் நியாயமற்ற செயலாகும். இதனால் நியமனம் சேர்க்கைக்குத் தகுதி உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நியமனம் அல்லது சேர்க்கைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுவர். அதனால்தான் எங்கள் அருமைத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் இது க்ரீமி லேயர் (Creamy Layer) அல்ல, கிருமி லேயர் (Kirumi Layer) என்று மிகச் சரியாகவே அழைத்தார். இந்த ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் நோய்க்கிருமி என்பதாகும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 09-03-2020 நாளிட்ட அறிக்கையை அரசு ஒட்டு மொத்தமாக கவனிக்காமல் அலட்சியப் படுத்தியுள்ளது. (குறுக்கீடுகள்) அம்மையீர் ! எங்கள் கட்சியில் இருந்து பேசும் ஒரே உறுப்பினர் நான் மட்டும்தான். எனவே, இந்த மூன்று உறுப்பினர் வல்லுநர் குழுவை நிராகரித்துவிட்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறுபட்ட பணியாளர் நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இடஒதுக்கீடு அளிப்பது மற்றும் க்ரீமி லேயர் (Creamy Layer) பிரச்சனையை பரிசீலனை செய்யும்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று நான் அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு இடத்தில் அநீதி நேர்ந்தாலும், அது அனைத்து இடங்களிலும் உள்ள நீதிக்கு அச்சுறுத்தல் விடுவது போன்றதேயாகும். எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் மாநிலங்களில் இருந்து பெற்று தொகுக்கப்படும் மத்திய அரசின் தொகுப்பில் மாணவர் சேர்க்கை செய்யப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இங்கே பதிவு செய்ய நான் விரும்புகிறேன். இந்த பிரச்சனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தது என்ற போதிலும், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை விவாதத்தின்போது இதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இது சமூகநீதியை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய ஒரு பிரச்சனை என்பதே இதன் காரணம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அரசு அளித்துள்ள 27 சதவிகித இடஒதுக்கீடு இந்திய மருத்துவப் பேரவையால் அகில இந்திய அளவிலான இடஒதுக்கீட்டு இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது பற்றியதொரு முடிவை மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் அது பற்றிய பதில் ஒன்றை அரசு பதிவு செய்ய வேண்டும். இடைநிலைக் கல்விக்கு முந்தைய, பிந்தைய நிலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் படிப்பு உதவித் தொகைகள் வழங்குவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது பற்றிய புள்ளி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். இத்திட்டங்களின் கீழ் போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததன் காரணம், சமூகநீதி அமைச்சகம் முடிவு செய்த நிதி ஒதுக்கீட்டுக்கும், நிதித்துறை ஒப்புதல் அளித்த ஒதுக்கீட்டுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். அம்மையீர்! தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியேயாகும். மத்திய அரசின் நிதி உதவியில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பாகுபாடு சரி செய்யப்பட வேண்டும். டாக்டர் அம்பேத்கர் மையம் ஒன்றை உருவாக்கியுள்ள சமூக நீதித்துறை அமைச்சகம் அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இது ஒரு வரவேற்க்கத் தக்க செயல்பாடு என்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அது போலவே, தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடுகள் மற்றும் செய்திகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தந்தை பெரியார் மையம் ஒன்றை அரசு நிறுவவேண்டும். அம்மையீர்! பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது என்ற பிரச்சினைக்கு வரும்போது, இந்த ஆயிரமாண்டு சகாப்தத்தில் நாம் அதனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், கி.மு.4 ஆம் நூற்றாண்டிலேயே, அறிஞர் அரிஸ்டாட்டில் தனது மாணவர்களுடன், பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்கள், ஆண்கள்தான் ஆட்சி செய்பவர்கள்; பெண்கள் ஆட்சி செய்யப்படும் குடிமக்கள் என்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆண் போல் வேடமணிந்த பெண்ணான அகஸ்டின்தான், உலகின் முதல் பெண் மருத்துவரானனார். பிளாட்டோவின் ஆசிரியர் யார் தெரியுமா? ஏதென்ஸ் நகரின் முதல் பெண்மணி என்று கொண்டாடப்பட்ட மிலட்டோசிய அஸ்பேசியா (Aspasia Miletus) என்ற பெண்தான். ஆனால், இங்கு நம் நாட்டிலோ, பெண்கள் உரிமை ஆண்டு என்று 2001 ஆம் ஆண்டிலேயே அரசு அறிவித்துள்ள போதிலும், பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக பாராளுமன்ற, சட்டமன்றங்களில் நாம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். இது நமக்கு வெட்கக் கேடல்லவா? இடஒதுக்கீடு என்பது பெண்களுக்கு ஒரு சலுகையோ அல்லது கருணையுடன் போடும் பிச்சையோ அல்ல என்பதைப் பதிவு செய்ய நான் விரும்புகிறேன். அது எங்கள் பிறப்புரிமை. 50 சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். முதலில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகர்மன்ற, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார். இந்தியா முழுவதிலுமே இவ்வாறு செய்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். அம்மையீர்! உரிமை என்பது தனக்கான சொந்த பாதுகாப்பைப் பெற்றதாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று உங்கள் மூலம் இந்த அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். நம் நாட்டில் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக 330 கோடி ரூபாய் மட்டுமே நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகப்படுத்த வேண்டும். மேலும், தீனதயாள் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் உயர்த்தப்பட வேண்டும். பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் சித்தாலப்பாக்கம் என்ற ஒரு கிராமத்தை நான் தத்தெடுத்துள்ளேன். அதற்கான போதிய நிதி உதவிக்கு மாநில அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். நிர்பயா திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி முழுவதையும், முறையாகப் பயன்படுத்தாமல், தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அது போன்ற நிதி ஒதுக்கீடுகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற நிதி ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு முழுமையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அளிப்பது வெட்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். மறுபடியும் பெர்தோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) என்ற அறிஞரின் கூற்றுடன் எனது உரையை நான் முடித்துக் கொள்கிறேன் - “மேஜையில் இருந்து இறைச்சியை எடுத்துக் கொள்பவர்கள் மனநிறைவைப் பற்றி போதிக்கின்றனர்; வரிகள் விதிக்கப்பட வேண்டியவர்கள் என்று விதிக்கப்பட்டவர்களிடமிருந்து தியாகம் எதிர்பார்க்கப்படுகிறது; தங்கள் வயிறு முட்ட உணவு உண்டவர்கள், அற்புதமான எதிர்காலம் காத்திருப்பது பற்றி பசித்தவர்களிடம் பேசுகின்றனர். நாட்டை அதள பாதாளத்திற்கு வழிநடத்திச் செல்பவர்கள் ஆட்சி செய்வது என்பது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல என்று கூறுகின்றனர்.” VIDEO LINK: https://sansad.in/getFile/AVDebatesclips/videogallery/videos/video3255.mp4?source=memberslsmedia
No comment