20.07.2026 அன்று, புதுடெல்லி – மக்களவையில், தமிழ்நாட்டின் நிறுவன வரி பங்களிப்புடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) செலவினம், CSR விதிமுறை மீறல்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு CSR ஊக்கத் திட்டம் குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்…
அதன் விபரம்:-
கேள்வி
(அ) கடந்த மூன்று நிதியாண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது தலைமையகம் கொண்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட மொத்த நிறுவன வரி (Corporate Tax) எவ்வளவு? மேலும், இந்த அளவுகோலில் மாநிலங்களுக்கிடையில் தமிழ்நாட்டின் நிலை என்ன?
(ஆ) அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்குள் செலவிடப்பட்டதாக நிறுவனங்கள் அறிக்கையிட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) செலவினத்தின் விவரங்கள் என்ன?
(இ) மாநிலத்தின் வரி பங்களிப்புடன் ஒப்பிட்டு இந்த CSR செலவினத்தை மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளதா? செய்திருந்தால் அதன் விவரங்கள் என்ன?
(ஈ) நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 135-இன் கீழ் கட்டாய CSR செலவினத்தை மேற்கொள்ளத் தவறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எத்தனை? அவற்றின் மீது எடுக்கப்பட்ட அபராத நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
(உ) 16-வது நிதிக் குழுவின் அறிக்கையில், தமிழ்நாடு தனது நிதி பங்களிப்பை விட குறைவான நிதிப் பகிர்வைப் பெறும் மாநிலமாக மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துள்ளதா? அவ்வாறு பரிசீலித்திருந்தால் அதன் விவரங்கள் என்ன?
(ஊ) விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா போன்ற தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய தமிழ்நாட்டு மாவட்டங்களுக்கு CSR நிதி செலவினத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் திட்டம் (Weighted CSR-direction Incentive) கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்கள் என்ன?
பதில்
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்த பதில்:
(அ) 2023-24 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் தமிழ்நாட்டில் வசூலிக்கப்பட்ட மொத்த நிறுவன வரி தொடர்பான விவரங்கள் இணைப்பு – I-ல் வழங்கப்பட்டுள்ளன.
(ஆ) MCA21 பதிவேட்டில் நிறுவனங்கள் தாக்கல் செய்த ஆண்டு அறிக்கைகளின் அடிப்படையில், 2022-23 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மாவட்ட வாரியான CSR செலவின விவரங்கள் இணைப்பு – II-ல் வழங்கப்பட்டுள்ளன.
(இ) இல்லை. நிறுவனங்கள் சட்டம், 2013-ன் படி, CSR செலவினப் பொறுப்பு என்பது நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு (Net Worth), ஆண்டு வருவாய் (Turnover) அல்லது நிகர லாபம் (Net Profit) ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் வரி பங்களிப்புடன் தொடர்புடையதல்ல.
(ஈ) CSR விதிமுறைகள் மீறப்பட்டதாக தகவல் கிடைக்கும் ஒவ்வொரு முறையும், பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2023-24, 2024-25, 2025-26) தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்த அபராதத் தொகை ₹2.36 கோடி ஆகும்.
(உ) இந்திய அரசு 16-வது நிதிக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விளக்கக் குறிப்புகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதிக் குழு பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு வரி பகிர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து நிதியாண்டுகளில், எந்த மாநிலத்திற்கும் நிதிக் குழு பரிந்துரைத்த பங்கைவிட குறைவான வரி பகிர்வு வழங்கப்படவில்லை.
(ஊ) தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களான விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளுக்கென தனிப்பட்ட CSR ஊக்கத் திட்டம் கொண்டுவரும் எந்த முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
-
PreviousPrevious Post
-
Next20.07.2026 அன்று, புதுடெல்லி – மக்களவையில், தமிழ்நாட்டின் நிறுவன வரி பங்களிப்புடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) செலவினம், CSR விதிமுறை மீறல்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு CSR ஊக்கத் திட்டம் குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்…
No comment