மனம் திறந்த தமிழச்சி தங்கப்பாண்டியன்

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாழ்ந்த அந்த நாள்கள்…” மனம் திறக்கும்கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

“`உங்களைப் பிறர் அவமானப்படுத்த விரும்பினால், அது நீங்கள் அனுமதி தந்தால் மட்டுமே நடக்கும்’ என்கிற புரிதல் எல்லாம் எனக்குப் பின்னர்தான் வந்தது. ஆனால், அந்தச் சம்பவத்தின்போது எனக்குப் போதிய பக்குவம் இல்லை. என்னுடைய தன்மானத்துக்கு இழுக்கு என்பதுபோல உணர்ந்த நான், வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் அழுதுகொண்டே வந்தேன்.”

`எஞ்சோட்டுப் பெண்’, `வனப்பேச்சி’, `பேச்சரவம் கேட்டிலையோ’, `மஞ்சணத்தி’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர். ராணி மேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். வாழ்க்கையில் தனக்கு மனஅழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும் அதைக் கடந்த விதத்தையும் இங்கே பகிர்கிறார்.

 

 

“நான் முழுக்க முழுக்க கவலைகள் இல்லாத கிராமத்துப் பெண்ணாகவும், ஒரு தந்தையின் செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்தவள். அதேமாதிரி திருமணமும் நல்ல சூழலில் அமைந்தது. பாட்டு, நடனம், கவிதை, இலக்கியம், வேலை என்று எந்தவிதமான தடைகளும் இல்லாமல் மகிழ்ச்சியும் உற்சாகமுமாகத்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

அப்படியான ஒரு சமயத்தில்தான் என் அப்பாவின் மரணம் மிக மிகத் துயரமானதாகவும் தனிப்பட்ட முறையிலான இழப்பாகவும் அமைந்தது. அப்போது நான், ராணி மேரி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்தச் சூழலில்தான் என் தந்தையின் மரணம் நிகழ்ந்தது. அது எனக்கு மன அழுத்தத்தைத் தந்தது. அதற்கு முன்னர் மரணம் என்பது அறிமுகமில்லாத ஒரு விஷயமாகத்தான் இருந்தது. உறவினர், நண்பர்களின் மரணத்துக்கெல்லாம் என் பெற்றோர்களே சென்று வருவார்கள். எந்தவொரு விஷயமும் நமக்கு நடக்கும்போதுதானே தெரிய வரும். அப்படியாக, என் தந்தையை இழந்தபோதுதான் முதன்முதலில் மரணத்தின் வலியை உணர்ந்தேன்!

அவரின் இழப்பை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் இறந்த பின்னர் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மிகுந்த மனஅழுத்தத்தில் வாழ்ந்தேன். அப்போது, எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும். அவளுக்குச் சரியாகப் பாலூட்டக்கூட என்னால் முடியவில்லை என்பதையெல்லாம் பின்னர் உறவினர்கள் சொல்ல அறிந்துகொண்டேன். இரு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். இப்படியெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் என்று கற்பனைகூடச் செய்து பார்த்ததில்லை.

என்னுடைய அப்பா வணிக வரித்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜபாளையத்தில் இறந்தார். அவருடைய  மறைவுக்குப் பிறகு, அந்த ஊர்ப் பக்கம் போவதையே தவிர்த்தேன். அந்த ஊர் பேரைச் சொல்லக்கூட மாட்டேன். அந்த ஊரில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் பங்கேற்க மாட்டேன். பேச அழைத்தாலும் மறுத்துவிடுவேன். அதேபோல, அவர் இறப்பதற்கு முன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கான குடியிருப்பில்தான் அவரை இறுதியாகப் பார்த்தேன். ஆகவே, அந்தச் சாலை வழியாக சுமார் மூன்று வருடங்கள் வரை பயணிப்பதைத் தவிர்த்தேன். அந்தப் பக்கமாகச் செல்ல வேண்டுமென்றால்கூட, சுற்றிக்கொண்டுதான் செல்வேன். அந்தளவுக்கு என்னுடைய தந்தையின் மரணம் என்னைப் பாதித்திருந்தது!

`மரணம் என்பது வாழ்க்கையினுடைய ஓர் அங்கம். அதை நீங்கள் தவிர்க்கவே முடியாது’ என்பதை ஓஷோவின் எழுத்துகள் எனக்குச் சொல்லித் தந்தன. மரணத்தை ஜென் குருமார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பிறகு, நம்முடைய சித்தர்கள் காட்டிய வாழ்க்கை நெறியும், மரணம் குறித்த அவர்களது பார்வையும் எனக்கு வெளிச்சமானது. இப்படியாக, பல புத்தகங்களின் வழியே மரணத்தைப் புரிந்துகொண்டேன். பிறகு, தந்தையின் நினைவுகளின் வழியே அவரின் மரணத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கும் வந்துவிட்டேன்.

இப்போதுகூட, உடலில் பொக்குக் கட்டிய தழும்பாகத் தந்தையின் மரணம் என்னோடுதான் இருக்கிறது. அதை முழுமையாக என்னால் கடக்க முடியவில்லை. எனக்கு இரண்டு சொட்டு கண்ணீர் வருகிறதென்றால், அது அப்பாவின் மரணம் இன்னும் வலிப்பதால்தான். அப்பா என்கிற ஒருவரை வேறு யார் வந்தாலும் ஈடு செய்யவே முடியாது. என் கணவரை என் குழந்தைகள் `அப்பா’ என்று அழைக்கும்போதுகூட, நான் அப்படிக் கூப்பிட அப்பா உயிரோடு இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன்.

வாழ்வின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது அப்பா இல்லாததுதான். ஓர் ஆறுதலான மடி என்பது அவருடையது மட்டுமே. வேறு யாராலும் அதைத் தர முடியாது என்றாலும், அந்த இழப்பை ஓஷோவும் தாவோவும் புத்தரும் இட்டு நிரப்பியிருக்கிறார்கள்.

எனக்கு மனஅழுத்தம் தந்த மற்றொரு சம்பவம், நான் மேடைகளில் பங்கேற்கத் தொடங்கியபோது நடந்தது. மேடை எனக்குப் புதிதல்ல. நான் பிறந்ததே தி.மு.க குடும்பத்தில்தான். தி.மு.க என்பது ஒரு ஜனநாயகபூர்வமான கட்சி. பெண்களுக்கு முழு முக்கியத்துவமும் சுதந்திரமும் அளிப்பது. இலக்கியரீதியாக, மாற்றுக் கட்சி பிரமுகர்களோடும் மேடையைப் பகிர்ந்துகொள்ளலாம். இந்தச் சூழலில் மேடை என்பது எனக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயம். ஆனால், இலக்கிய மேடைகள், சமூக நிகழ்வு சார்ந்த மேடைகள் அனைத்தும் எல்லாச் சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லையே…

 

ஒரு சமயம், ஒரு நிகழ்ச்சியில் நான் பேசுவதாகப் பெயர் போட்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன், எனக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரமாகியும் என்னைப் பேச அழைக்கவில்லை. நன்றியுரை கூறுபவரும் பேசிவிட்டார். ஆனால், கடைசிவரை என்னைப் பேச அழைக்கவேயில்லை. அதை அவமானமாக உணர்ந்தேன். அது நிறைய வலியைத் தந்தது. அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஆனால், அப்போது எனக்கு அது மிகுந்த மனஅழுத்தத்தையும்  வலியையும் தந்தது.

`உங்களைப் பிறர் அவமானப்படுத்த விரும்பினால், அது நீங்கள் அனுமதி தந்தால் மட்டுமே நடக்கும்’ என்கிற புரிதல் எல்லாம் எனக்குப் பின்னர்தான் வந்தது. ஆனால், அந்தச் சம்பவத்தின்போது எனக்குப் போதிய பக்குவம் இல்லை. என்னுடைய தன்மானத்துக்கு இழுக்கு என்பதுபோல உணர்ந்த நான், வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் அழுதுகொண்டே வந்தேன். வீட்டுக்கு வந்தபோது எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அவர்களை எழுப்பி, என் வலியைப் பகிர விரும்பவில்லை. அது அவர்களையும் பாதிக்கும்தானே… அதைக் கடப்பதற்கு இருந்த ஒரே வழி எழுதுவதுதான். அந்த இரவில் அந்த வலியைக் `கணப்படுப்பு’ என்கிற கவிதையை எழுதியதன் வழியே கடந்தேன்.

வீட்டிலிருந்த படிக்கட்டுகளும் வீட்டின் சுவரும் ஊஞ்சலும்தான் என்னைத் தேற்றின. அதுவரை வீடு என்பது எனக்கொரு ஸ்தூல வடிவமாகத்தான் இருந்தது. ஆனால், அன்று எல்லாமே உயிர்கொண்டு என்னுடன் பேசி, என்னைத் தேற்றுவதை உணர்ந்தேன்.

வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளும் என்னிடம் ஆறுதலாகப் பேசுவதாகவும், என்னைத் தழுவி சமாதானம் செய்வதாகவும் உணர்ந்தேன். அதையே அந்தக் கவிதையில் பதிவு செய்திருந்தேன். கவிதையை எழுதி, முடித்தவுடனே பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போன்று மிக ஆறுதலாக இருந்தது.  எழுத்தும் புத்தகமும் இசையுமே என் மன அழுத்தத்தை நான் கடக்க உதவுகின்ற ஊன்றுகோல்கள்..!” என்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

ORIGINAL ARTICLE