பெண்கள் அரசியலுக்கு வர தயங்கக் கூடாது

பெண்கள் அரசியலுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டக் கூடாது என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.

கோவை, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இணை அமைப்பான இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் கோவை தலைவர் அருணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் மலர்விழி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கோவை துணைத் தலைவர் ஆர்.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, காக்னிஸன்ட் நிறுவனத்தின் கோவை தலைவர் மாயா ஸ்ரீ குமார், ஸ்னூக்கர் சாம்பியன் வித்யா பிள்ளை, பரதநாட்டியக் கலைஞர் திவ்யா அருண் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதாவது:

அதிக வேலை நேரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராடிய நாளைத்தான் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியச் சமூகம் காலம் காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வருகிறது. பெண்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறும் நிலையானது மாறி அவர்களுக்கான உரிமைகளை அவர்களே எடுத்துக் கொள்ளவேண்டும்.
21-ஆம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்கிறது. பெண்களுக்கு எதையும் தாங்கும் மனப் பக்குவம் அதிகரிக்க வேண்டும். மகளிர் தங்களுக்காக தினமும் 5 மணி நேரத்தை ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தை தங்களின் முன்னேற்றத்துக்காகவும், தனக்குப் பிடித்ததைச் செய்வதற்காகவும் செலவிட வேண்டும்.

எந்தக் காலத்திலும் பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் சுய விருப்பங்கள், உணர்வுகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர்களின் தொடர் போராட்டங்களால்தான் பெண்கள் உயரிய நிலைகளுக்கு வந்துள்ளனர்.

பெண்கள் சுய மரியாதையுடன், சொந்தக் காலில் நிற்பவர்களாக வளரவேண்டும். அரசியலுக்கு வருவதற்கு தயங்கக் கூடாது. அச்சத்தைக் கைவிட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்றார்.