யாரும் அரசியலுக்கு வரலாம்

அரசியல் என்பது நம்மை விட்டுப் பிரிக்க முடியாதது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.

விருதுநகரில் உள்ள வே.வ. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில், வள்ளுவர் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதாவது: மாணவிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். மானம்தான் மனிதனுக்கு அழகு. மதத்துக்கு மண்டியிடாதீர்கள்.

திருக்குறளை மனப்பாடம் செய்யாமல் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் வாழ்வியல் நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவர். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க முடியும். வள்ளுவம் சொல்லாத மேலாண்மைக் கருத்துகளை எந்தக் கல்லூரியிலும் சொல்லிக் கொடுக்க முடியாது. அரசியல் என்பது நம்மை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்று. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசன் தவறுசெய்யும்போது அதை தட்டிக்கேட்காத அமைச்சர் இருந்தால், நாடு அழிவை நோக்கிச் செல்லும் என்கிறார் வள்ளுவர். மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு ஓபிசி ரத்து செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அது சமூக நீதிக்கானது. சுய மரியாதை வரலாறுகள் குறித்து வாரம் ஒரு வகுப்பாவது மாணவர்களுக்கு எடுக்கப்பட வேண்டும். பெண்கள் வரலாற்றை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, நாம் கற்பதை சம காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.