இந்திக்கு எதிரானவர்கள் அல்ல

”இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, திணிப்பை தான் எதிர்க்கிறோம்,” என , தி.மு.க. , மாநில கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கோரி தி.மு.க., சார்பில் விருதுநகரில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியை தேசிய மொழி என்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் நேஷனல் என்ற வார்த்தை இல்லை. ஆங்கிலம் அலுவல்மொழியாக இருக்கும் என முன்னாள் பிரதமர் நேரு கூறிய பிறகும், இந்தியை திணிப்பது ஏன். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பது வேறு. ஒற்றுமையாக இருப்போம். சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இரு மொழிக் கொள்கை உள்ளபோது இந்தி திணிப்பிற்கு இடமில்லை, என்றார்.

துணைபோகிறது : திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், ”ரூபாய் நோட்டுகள் மட்டும் செல்லாது என்பதில்லை நீங்கள் படித்த பிளஸ் 2 தேர்ச்சி ‘நீட்’ தேர்விற்கு செல்லாது என மறைமுகமாக கூறிவிட்டனர். உள்ளாடையை சோதித்து சட்டையை கிழித்து நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஜல்லிக்கட்டிற்கு இருந்த வேகம் இதற்கு இல்லையே . வடமாநிலத்தவர்களை இங்கு படிக்க வைக்க சதி தான் நீட் தேர்வு என சந்தேகம் வருகிறது. மத்திய அரசிற்கு மாநில அரசு துணைபோகிறது. இது ஒரு அரசாங்கமே இல்லை,” என்றார்.

தமிழக எம்.பி., க்கள் : தி.மு.க., துணைபொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ”தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் உள்ளது. நாங்கள் உணர்ந்துவிட்டோம், மாணவர்கள் உணரவேண்டும். லோக்சபா, ராஜ்ய சபாக்களில் தமிழக எம்.பி., க்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் இந்தியில் தருகின்றனர். சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயாவில் இந்தியை கட்டாயமாக்கிவிட்டு மற்ற பள்ளிகளிலும் திணிக்க பார்க்கின்றனர். இந்தியை மட்டும் படித்த வடநாட்டவர்கள், தமிழகத்திற்கு வந்து கூலி வேலை, ஓட்டல்களில் வேலை செய்கின்றனர்,” என்றார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டனர்.