நிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்

நிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்: நாடகக் கலைஞன் மக்கின்ரயரின் உருவச் சித்திரம்

 

தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு சாத்தியங்களில், தன்னைப் புதிது புதிதாய் வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரு ஆளுமை. கவிதை, நாடகம், நாட்டியம், பாடல், விமர்சனம், கட்டுரை, ஆய்வு, மொழிபெயர்ப்பு, அரசியல்-சமூகச் செயல்பாடு, மேடைப் பேச்சு, ஒப்பனைக் கலை, ஆடை அலங்காரக் கலை (கடைசி சந்திப்பில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்) என ஏதோ ஒன்று அத்தருணத்திற்கேற்ப அவரின் கலை வெளிப்பாடாக அமைகிறது.

ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றபோது, அங்கு அவருக்குப் பயிற்றுவித்தவர், வெகு அபூர்வமான, பெறுமதிமிக்க பேராசிரியரான சுப்பாராவ். இந்தப் பின்புலம் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது. ‘நிழல் வெளி’ ஓர் ஆய்வு நூல். முனைவர் பட்டத்துக்காக ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் தமிழாக்கம். மிகவும் பெறுமதியான ஒரு புத்தகம். தமிழச்சியின் சிறந்த படைப்பு. மக்கின்ரயரின் சுமார் இருபது நாடகப் பிரதிகளுடன் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் தமிழச்சி மேற்கொண்ட பயணத்திலிருந்து உருவாகியிருக்கும் படைப்பு.

அகதிகளின் துயரம்

இந்த ஆய்வு நூல், நாம் இதுவரை அறிந்திராத, ஏனெஸ்ட் மக்கின்ரயர் என்ற ஒரு மகத்தான நாடகாசிரியரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இலங்கைக் கல்விப் புலச் சூழலில் ஓர் இளம் நாடக இயக்குநராகத் தோன்றி, புலம் பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் படைப்பாற்றல்மிக்க நாடகப் படைப்பாளியாகவும் கலைஞனாகவும் தன் கலை ஆளுமையை மக்கின்ரயர் நிறுவியிருக்கிறார். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்களின் மன உளைச்சல்களே இவருடைய படைப்புலகம். பிறந்த தீவில் அனுபவித்த இன்னல்களும், புகுந்த தீவில் அனுபவிக்கும் அவலங்களும் எனத் தாய் மண்ணின் ஏக்கங்களோடு வேறொரு மண்ணில் அலைந்து உழலும் மக்களின் மனோபாவங்களைக் கலை ரீதியாக வெளிப்படுத்தும் நாடகங்கள் இவருடையவை.

மக்கின்ரயரின் நாடகப் பிரதிகளோடு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தமிழச்சி கொண்ட உறவின் வழியாக உருவாகியிருக்கும் ஒரு புதிய படைப்புப் பிரதிதான் ‘நிழல் வெளி.’ மக்கின்ரயரின் பல்வேறு நாடகப் பனுவல்களில் வெளிப்படும் பொதுத் தன்மைகளை ஒருங்கிணைப்பதன் வழியாகவும், அவற்றின் இழைகளை ஊடுபாவாக நெய்வதன் மூலமாகவும், தமிழச்சியின் இந்தப் புத்தாக்கம் நிகழ்ந்திருக்கிறது. தமிழச்சியின் வார்த்தைகளில் சொல்வதனால், “துருவ நிலைப்பட்ட அரசியல் வெளிப்பாடுகளின் எல்லைக்கு வெளியே, கலைகளின் மூலமாக ‘மற்றவரின்’ நோக்குநிலையிலிருந்து ‘இன்னொரு’ பாதைக்கான தேடலின் விளைவே இந்நூல்.” ஒரு நம்பிக்கையூட்டும் பாதையாக ‘நிழல் வெளி’ அமைந்திருக்கிறது.மக்கின்ரயர் பற்றியும், அவருடைய நாடகப் பிரதிகள் பற்றியும், அவருடைய படைப்புலக அம்சங்கள் பற்றியும், அவற்றின் நுட்பங்கள் பற்றியுமான ஆய்வுத் தகவல்களால் மட்டும் இப்புத்தகம் நிரப்பப்படவில்லை. அவசியம் கருதி அவையும் இருக்கின்றன. ஆனால் அவற்றினூடாக, இரு படைப்பு மனங்களின் ஆதங்கக் குரல் அடிநாதமாக இடையறாது சலனித்துக்கொண்டிருக்கிறது.

 

ஆய்வினூடாக ஒரு படைப்பு

தமிழச்சி உருவாக்கியிருக்கும் மக்கின்ரயரின் உருவச் சித்திரம், ஆதிமூலம் உருவாக்கும் அற்புதமான கோட்டுருவச் சித்திர பாணி தன்மையிலானது. துண்டுபட்ட சின்னஞ் சிறு கோடுகளும், அவற்றுக்கிடையிலான வெளியுமாக மிகுந்த அடர்த்தியுடன் உருவாக்கப்படும் சித்திரத் தன்மை. கோடுகள் துண்டுபட்டிருக்குமே தவிர படைப்பின் தொடரியக்கம் அறுபடுவதில்லை கோடுகளுக்கிடையிலான வெளிகளில் முழுமையின் தொடர்ச்சியான சலனம் இருந்துகொண்டிருக்கும். இத்தன்மையில்தான் மக்கின்ரயரின் உருவச் சித்திரத்தை தமிழச்சி உருவாக்கியிருக்கிறார். தாய் நாட்டிலிருந்து புலம்பெயர வேண்டிய நெருக்கடிகளும், அகதிகளாகத் தஞ்சமடைந்த நாட்டின் அரசியல்-சமூக-கலாசாரப் பின்புலத்தில் இனம், மொழி, வர்க்கம் என்றாக அமைந்திருக்கும் அடிப்படை வேறுபாடுகளுக்கிடையே வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தங்களும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், ஏக்கங்களும், எதிர்வினைகளும், வினையாற்ற இயலாத சமாளிப்புகளும் துண்டு துண்டுக் கோடுகளாக சலனித்து இச்சித்திரம் அடர்த்தியாக உருவாகியிருக்கிறது.

ஆறு அத்தியாயங்களும், பின்னிணைப்பாக மக்கின்ரயரின் நேர்காணல்களும் கொண்டது இந்த ஆய்வு நூல். முதல் அத்தியாயம், இவருடைய ஆய்வு அணுகுமுறைக்கு அடிப்படையாக அமையும் பின்காலனிய மற்றும் புலம்பெயர் கோட்பாடுகளையும் அவை சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கிறது. இரண்டாவது அத்தியாயம், இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த மக்களின் வரலாற்றை, ஓர் இடப்பெயர்ச்சியின் கதையாக விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம், இலங்கையின் கல்விப்புலச் சூழலில் மக்கின்ரயர் ஒரு நாடகக் கலைஞனாக உருவெடுத்த பின்புலத்தை விஸ்தரிக்கிறது. அடுத்த மூன்று அத்தியாயங்கள், புலம்பெயர் தேசத்தையும் தாயகத்தையும் ஒரு விமர்சகராகத் தம் நாடக ஆக்கங்கள் வழி நோக்குபவராகவும், ஒரு அந்நியராகவும் அதேசமயம் உள்ளிருப்பவராகவும் இருந்து தாயகத்தைப் புனைபவராகவும், ‘உலகக் குடிமக’னின் விழிகளினூடாக இழந்த உலகை அவதானிப்பவராகவும் மக்கின்ரயரின் நாடகப் புனைவுகள் எப்படியெல்லாம் அமைந்திருக்கின்றன என்பதைப் பல்வேறு நுட்பமான கோணங்களிலிருந்து விரிவாக அலசுகின்றன.

இந்த ஆய்வு நூலின் மிகவும் ஈர்ப்பான பகுதி, பின்னிணைப்பாக அமைந்திருக்கும் மக்கின்ரயருடன் தமிழச்சி நிகழ்த்தியிருக்கும் நேர்காணல். ஈடுபாடுகளிலும் அக்கறைகளிலும் இசைமை கொண்ட இரு உள்ளங்கள் இசைந்து இசைந்து மேலெழும் தன்மையுடன் இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது. இருவரின் அலாதியான சேர்ந்திசை. இந்த நேர்காணலை வாசித்துவிட்டு பிரதான பனுவலுக்குள் செல்வது ஒரு வாசகருக்கான அழகிய வாசலாக இருக்கும்.கடைசியாக, ஒரு விண்ணப்பம்: மக்கின்ரயரின் ஒரு நாடகமாவது இங்கு நிகழ்த்தப்பட்டு, இப்புத்தகம் பற்றிய ஒரு கருத்தரங்கமும் அந்த நாளில் அமைய வகை செய்வது, நிச்சயம் நாம் கண்டடைய வேண்டிய அந்த இன்னொரு பாதைக்கு நம்மை இட்டுச் செல்ல வெகுவாகத் துணை புரியும். மக்கின்ரயர் தன்னுடைய ஆக்கங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கருதும், தமிழச்சி இந்நூலில் வெகுவாக சிலாகிக்கும் ‘ஹி ஸ்டில் கம்ஸ் ஃப்ரம் ஜாஃப்னா’ என்ற நாடகமாக அது இருக்கலாம்.

 

ORIGINAL ARTICLE