களம் முடிந்திருக்கிறது. பயணம் தொடர்கின்றது!

களைப்பையும், சோர்வையும் மீறிய அன்பின் கதகதப்பு என் கைகளில்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆசியுடன், இந்த மாபெரும் வாய்ப்பினை எனக்களித்த கழகத் தலைவர் தளபதிக்கு மனமார்ந்த நன்றி!

இந்தக் களத்தில் வெற்றியுடன் ‘உதய சூரியன்’ உதிக்க, தலைவர் தளபதி வெல்ல, என்னோடு உறுதுணையாக இருந்து, கடுமையாக உழைத்த நம் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதிச்செயலாளர்கள், ஒன்றிய மற்றும் ஊராட்சி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கழகத்தின் அனைத்து அணியினர், கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழகத்தொண்டர்கள், பிரச்சாரக் குழுவினர், கலைக் குழுவினர், தப்பாட்டக் கலைஞர்கள், கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், ‘மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ யில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணியினர் – தொண்டர்கள், அன்புத் தம்பி உதயநிதி ரசிகர் மன்றத்தினர், செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்த தொலைக்காட்சி, பத்திரிக்கை – ஊடக நண்பர்கள், தோழிகள், புகைப்படக்கலைஞர்கள், இணையத்திலும், சமூக வளைத்தளங்களிலும் பேராதரவு வழங்கிய நண்பர்களுக்கும் – கழக உடன்பிறப்புகளுக்கும், கட்சிகளைக் கடந்து இணையத்தில் அன்பும், ஆதரவும் பாராட்டிய அனைவருக்கும்,

 

குறிப்பாக – வழிநெடுகிலும் புன்னகை, பூத் தூவல், வரவேற்புக் கோலங்கள், கையசைப்பு, கைகுலுக்கள், பூ மாலைகள், ஆலம் எடுத்தல், அன்பின் நிமித்தமான அணைப்புகள், பூங்கொத்து, மல்லிகைச் சரம், கண்ணாடி வளையல்கள், மஞ்சள் குங்குமத் திலகமிடல், திருநீறு பூசிய ஆசிகள், பிரார்த்தனை வாழ்த்துகள், புத்தகங்கள், ஒற்றை ரோஜாக்கள், கைவினைக் கலைஞர்களது ஓவியங்கள், குளிர் பானங்களும் இளநீரும் தந்த உபசரிப்புகள் என என்னைத் திக்கு முக்காடச் செய்த பொது மக்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும்,
மிகக் குறிப்பாக – எனக்கு வாக்களித்த தென்சென்னைத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும்,
நிறைவாக – தவறாமல் வாக்களித்துத் தங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றிய, தென்சென்னையின் அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும்,

மனமார்ந்த நன்றி!

இந்தத் தேர்தல் களம் எனக்குத் தந்திருக்கின்ற முதல் பரிசு – பொதுமக்களின் நிபந்தனையற்ற அன்பு!
அந்த பேரன்பின் பெருவெளியில் களைப்பை மீறிய நம்பிக்கைக் கனவுகளுடன் என்றும் மக்களோடு தொடர்கின்ற பயணத்தில்,
நிறை நன்றியுடன்,
வளர் அன்புடன்,
சாத்தியப்படுகின்ற கனவுகளுடன்,

உங்கள் வீட்டுப் பெண்,
தமிழச்சி தங்கபாண்டியன்.

பின் குறிப்பு – பொதுமக்கள், அடுக்குமனைநிர்வாகிகள், பகுதி மக்கள் கொடுத்த கோரிக்கைகள், சகோதரிகள் தனிப்பட்ட முறையில் என் கைகளில்கொடுத்த கடிதங்கள் – இவை அனைத்திற்கும் தனிப்பட்ட நன்றி!
என் மேல் தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான அந்த அத்தாட்சிகளை வெகு கவனமாகப் பத்திரப் படுத்தியுள்ளேன்.

__