21.07.2026 அன்று, தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு (FDI) வருகை குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும் :-
மக்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Global Investors Meet) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU), அந்நிய நேரடி முதலீடு (FDI), செயல்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் மாநில வாரியான FDI பங்கு குறித்து கேள்வி எழுப்பினேன்.
அதாவது, கடந்த 2020-21ஆம் நிதியாண்டு முதல் தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு? அவற்றுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் உண்மையில் கிடைத்த அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு?
செயல்படுத்தப்படாமல் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை? அவை எந்தத் துறைகளைச் சேர்ந்தவை? முதலீட்டாளர்கள் தெரிவித்த காரணங்கள் என்ன?
மாநில அளவிலான காரணங்களைத் தவிர, மத்திய அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்புகள் ஏதேனும் மத்திய அரசின் கொள்கை அல்லது நிர்வாகத் தடைகளை கண்டறிந்துள்ளனவா?
2020-21ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியல் மற்றும் ஆண்டுவாரியான FDI விவரங்கள் என்ன?
இந்தியாவுக்கு வந்த மொத்த FDI-யில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு? அது குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளது?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில வாரியாகவும், தொழில் துறை வாரியாகவும் கிடைத்த FDI விவரங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்துறை வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்க ஒன்றிய அரசு ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’, ‘பிரதமர் கதி சக்தி’, தேசிய தொழில் வழித்தடத் திட்டம், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம், தொழில் செய்வதற்கான எளிமை (Ease of Doing Business), தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு (NSWS), இந்திய தொழில் நில வங்கி, திட்டக் கண்காணிப்பு குழு (PMG), FDI கொள்கை தளர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2020 முதல் 2026 வரை தமிழ்நாட்டில் மொத்தம் 1,322 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு
ரூ.13,60,014 கோடி ஆகும். இதில், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 663 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.7,12,171 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பதிவான அந்நிய நேரடி முதலீடு (FDI) 2020-21ஆம் ஆண்டில் 2,323 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 4,724 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
2020 முதல் 2025 வரை மொத்தம் 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு காரணங்களால் செயல்படுத்தும் நிலைக்கு வரவில்லை. அவை ஆட்டோமொபைல், இரசாயனங்கள், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், காலணி, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, ஜவுளி, உயிரியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்த மொத்த FDI-யில் தமிழ்நாட்டின் பங்கு 2020-21ஆம் ஆண்டில் 3.90 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 8.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் குஜராத்தின் பங்கு 9.71 சதவீதமாகவும், கர்நாடகாவின் பங்கு 21.99 சதவீதமாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாகவும், தொழில் துறை வாரியாகவும் FDI விவரங்கள் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளன. கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், சேவைத் துறை, வர்த்தகம், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகள் அதிகளவில் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளதாக பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *