21.07.2026 அன்று, புதுடெல்லி – மக்களவையில், விதி எண் 377-ன் கீழ் ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 சரணங்களையும் கட்டாயமாக பாடும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதன் விபரம் :-
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாக பாட அல்லது இசைக்க வேண்டும் என்ற முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தென் சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் விதி 377-ன் கீழ் வலியுறுத்தினார்.
உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையின்படி, அரசு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மேலும், மாநிலத்திற்கு தனி மாநிலப் பாடல் இருந்தால், முதலில் மாநிலப் பாடல், அதன்பின் வந்தே மாதரம், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு நிர்ணய சபை, வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களுக்கு மட்டுமே தேசியப் பாடலுக்குச் சமமான அந்தஸ்தை வழங்கியிருந்தது என்றும், ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மதச்சார்பின்மை, மொழிச் சுதந்திரம் மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் என்றும்,
முழு சரணங்களையும் கட்டாயமாகப் பாடுவது, குறிப்பாக ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினரின் மத நம்பிக்கைகளுடன் முரண்பாட்டை ஏற்படுத்துவதோடு, மதச் சுதந்திரம் மற்றும் மொழிச் சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமை என்பது மதச்சார்பின்மை, மதப் பன்முகத்தன்மை மற்றும் மொழி மரபுகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பலவீனப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களையும் கட்டாயமாக பாட அல்லது இசைக்க வேண்டும் என்ற முடிவு, மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முழு ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட அல்லது இசைக்க வேண்டும் என்ற முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், மாநிலங்களின் உரிமைகள், மொழிச் சுதந்திரம் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்

-
Previous21.07.2026 அன்று, தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு (FDI) வருகை குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும் :- மக்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Global Investors Meet) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU), அந்நிய நேரடி முதலீடு (FDI), செயல்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் மாநில வாரியான FDI பங்கு குறித்து கேள்வி எழுப்பினேன்.
-
Next21.07.2026 அன்று, புதுடெல்லி – மக்களவையில், விதி எண் 377-ன் கீழ் ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 சரணங்களையும் கட்டாயமாக பாடும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினேன்
No comment