22.07.2026 அன்று, இந்தியா செமிகண்டக்டர் திட்டங்களில் தமிழ்நாட்டிற்கான வாய்ப்பு குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன்விபரம் –
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM), செயற்கை நுண்ணறிவு (AI), இந்தியா AI மிஷன் மற்றும் பொதுச் சேவை மையங்கள் (CSC) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினேன.
அதாவது, 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட செமிகண்டக்டர் கொள்கையின் கீழ் 50 சதவீதம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படுவதுடன், ஸ்ரீபெரும்புதூரில் வலுவான மின்னணு உற்பத்தி மையம் இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இந்தியா செமிகண்டக்டர் மிஷனின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்தி (Fab) அல்லது டிஸ்ப்ளே திட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டில் அமைக்கப்படாதது குறித்து அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? குஜராத்தில் டாடா–ASML முன்னணி செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் தோலேரா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை?
மேலும், 2026–27 பட்ஜெட்டில் இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்தில் உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைக்கு (IP) முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் ATMP/OSAT மற்றும் வடிவமைப்பு (Design)-அடிப்படையிலான தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினேன்
அதேபோல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ரூ.80,000 கோடி மதிப்பிலான தைவான் முதலீட்டு திட்டம் தொடர்பாக துறைமுக வசதிகள், சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அறிவிப்பு, மின்சார ஒதுக்கீடு உள்ளிட்ட மத்திய அரசின் ஒப்புதல்களின் தற்போதைய நிலை என்ன? என்றும் கேட்டேன்
அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக 2026 ஜூன் 12ஆம் தேதி முன்னேற்ற AI மாதிரிகளுக்கான அணுகல் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் ஜூலை 1ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்ட சூழலில், இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய மொழி மாதிரி (LLM) திறனை உருவாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் AI வன்பொருள் அணுகல் தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினேன்
மேலும், இந்தியா AI மிஷனின் கீழ் GPU/கணினி வள ஒதுக்கீடு மற்றும் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களுக்கான (Centre of Excellence) நிதியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பங்கு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு? தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பொதுச் சேவை மையங்களின் (CSC) பரவல் தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் எந்த நிலையில் உள்ளது?
இதற்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் :-
‘ஆத்மநிர்பர் பாரத்’ நோக்கத்தின் அடிப்படையில், மின்னணு உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் துறையின் முழு மதிப்புச் சங்கிலியையும் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2025-26ஆம் ஆண்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி 7 மடங்காகவும், ஏற்றுமதி 11 மடங்காகவும், மொபைல் போன் உற்பத்தி 33 மடங்காகவும், மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்காகவும் உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் விற்பனையாகும் மொபைல் போன்களில் 99.2 சதவீதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் துறை சுமார் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மின்னணு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மணலூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஆகிய இடங்களில் மின்னணு உற்பத்தி குழுமங்கள் அமைக்க மத்திய அரசு ஆதரவு வழங்கியுள்ளது.
செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சிக்காக 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேசம், அசாம், குஜராத், பஞ்சாப், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் ரூ.1.64 லட்சம் கோடி முதலீட்டில் 12 உற்பத்தித் திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. இதில் 3 ஆலைகள் ஏற்கனவே வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்களே தங்களுக்கான இடத்தைத் தேர்வு செய்வதால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பரவலான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் வடிவமைப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில், Design Linked Incentive (DLI) திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு நிதி மற்றும் மின்னணு வடிவமைப்பு தானியக்க (EDA) கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 61 கல்வி நிறுவனங்களில் செமிகண்டக்டர் திறன் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஆதரவு வழங்கி வருகிறது.
2026 ஜூலை 15ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்த *Semicon 2.0* திட்டம், முந்தைய திட்டத்தின் எந்தப் பிரிவையும் நீக்கவில்லை. மாறாக, முழுமையான செமிகண்டக்டர் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ரூ.80,000 கோடி மதிப்பிலான தைவான் முதலீட்டு திட்டம் தொடர்பாக, கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் எந்த விண்ணப்பமும் இதுவரை அமைச்சகத்திற்கு வரவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா AI மிஷனின் கீழ், 12 பெரிய மொழி மாதிரிகள் (LLM), 8 சிறிய மொழி மாதிரிகள் (SLM) உட்பட மொத்தம் 20 உள்நாட்டு AI மாதிரி முன்மொழிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து 58 செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களை (AI-CoE) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 2 AI சிறப்பு மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியா–அமெரிக்கா ஒத்துழைப்பின் கீழ் AI ஆராய்ச்சி, கணினி வளங்கள் மற்றும் செயலி அணுகலை மேம்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுச் சேவை மையங்கள் (CSC) தொடர்பாக, 2026 மே 31 நிலவரப்படி நாடு முழுவதும் 5,01,731 CSC-களும், அதில் 3,91,160 கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 18,632 CSC-கள் செயல்பட்டு வருவதுடன், அவற்றில் 12,379 கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *