27.07.2026 அன்று, தமிழ்நாட்டில் மின்னணுவியல், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் நிலவும் மனிதவளத் திறன் பற்றாக்குறை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன் பயிற்சித் திட்டங்களை மாற்றியமைத்தல், தொழில்துறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் கிராமப்புற, நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துவது குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்.
அதன் விபரம்:-
கேள்வி-
தமிழ்நாட்டில் மின்னணுவியல், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் தற்போது நிலவும் மனிதவளத் திறன் பற்றாக்குறையை மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளதா? மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்ட மாற்றம், தொழிற்பயிற்சியுடன் இணைந்த பயிற்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றன? கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் EV, ரோபாட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் , செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு போன்ற தொழில்துறை சார்ந்த படிப்புகளுடன் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ITI-கள், பாலிடெக்னிக், பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை என்ன? மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுவோருக்கும் திறன் பயிற்சி கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில் :-
பல்வேறு துறைகளின் திறன் மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் திறன் தரநிலைகளை கண்டறிவதற்காக தொழில்துறை வல்லுநர்கள் தலைமையில் 36 துறைசார் திறன் கவுன்சில்கள் (Sector Skill Councils – SSCs) அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்சில்கள் அவ்வப்போது திறன் பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி, செமிகண்டக்டர், மின்னணுவியல் மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் திறன் மற்றும் மனிதவளத் தேவை தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு உள்ள துறைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான திறன்களைக் கண்டறிந்து, கிடைக்கக்கூடிய பயிற்சி வசதிகளை வரைபடமாக்குவதற்காக மாவட்ட திறன் குழுக்கள், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை தயாரிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து மாநில திறன் மேம்பாட்டு திட்டத்தை மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் தயாரிக்க வேண்டும்.
ஆனால், மின்னணுவியல், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மனிதவளப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கான மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (SSDP) தமிழ்நாடு இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் பயிற்சிகளை தொழில்துறையின் தேவைகளுடன் ஒருங்கிணைக்க தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCVET) மூலம் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10,209 தகுதிகளுக்கு NCVET ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 2,975 தகுதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன; 7,234 தகுதிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் நேரடியாக தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்காக Flexi MoU மற்றும் Dual System of Training திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், IBM, Microsoft, Autodesk, AWS, Shell உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. PMKVY திட்டத்தின் கீழ் AI/ML, ரோபாட்டிக்ஸ், மெகாட்ரானிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட Industry 4.0 சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 5G Network Technician, AI Programming Assistant, Cyber Security Assistant, Drone Technician உள்ளிட்ட புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2026 ஜூன் 30 நிலவரப்படி, தமிழ்நாட்டில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் PMKVY 4.0-ன் 530 பயிற்சி மையங்கள், 9 ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் (JSS) மையங்கள், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் (NAPS) கீழ் 3,446 நிறுவனங்கள், 92 அரசு ITI-கள் மற்றும் 323 தனியார் ITI-கள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மாநில அரசின் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மைகள் மூலம் நூற்றுக்கணக்கான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் Industry 4.0 தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்தப்பட்டு, EV, ரோபாட்டிக்ஸ், IoT, AI மற்றும் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் திறன் பயிற்சிகளை எளிதில் அணுகும் வகையில் Skill India Digital Hub (SIDH) மூலம் திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பழகுநர் வாய்ப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும், PM SETU திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அரசு ITI-களை – 200 Hub ITI-கள் மற்றும் 800 Spoke ITI-கள் – நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் (NSTI) திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற இளைஞர்களுக்காக தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் (DDU-GKY) மற்றும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) மூலம் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comment