29.07.2026 அன்று, பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘லோக் சம்வர்தன் பர்வ்’ (Lok Samvardhan Parv) நிகழ்ச்சியின் நோக்கம், சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய உணவுக் கலைஞர்களுக்கு சந்தை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
கேள்வி :-
PM VIKAS திட்டத்தின் கீழ் நடத்தப்படும் லோக் சம்வர்தன் பர்வ் நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் என்ன? சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய உணவுக் கலைஞர்களுக்கு சந்தை அணுகல், தொழில் மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதா? 6-வது லோக் சம்வர்தன் பர்வ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கைவினைஞர்கள், கைத்தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரின் எண்ணிக்கை என்ன? அவர்களுக்கு சந்தைப்படுத்துதல், தொழில் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்காக வழங்கப்படும் நிறுவன ரீதியான ஆதரவுகள் என்ன? குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையின கைவினைஞர்களுக்கு சந்தை மற்றும் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுபோன்ற நிகழ்ச்சிகளை பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில் :-
PM VIKAS திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையின கைவினைஞர்களை ஒரே தளத்தில் கொண்டுவந்து, அவர்களின் தொழில் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்த உதவும் வகையில் *‘லோக் சம்வர்தன் பர்வ்’* நிகழ்ச்சிகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கைவினைஞர்கள் தங்களது பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் கலாசார பாரம்பரியத்தை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்குகிறது. சிறுபான்மையின சமூகங்களின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதுடன், கைவினைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
இதுவரை நாடு முழுவதும் 6 லோக் சம்வர்தன் பர்வ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2024 ஜூலையில் புதுடெல்லி தில்லி ஹாட்டிலும், 2025 ஜனவரியில் புதுடெல்லி பாபா கரக் சிங் மார்க்கிலும், 2025 ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும், 2025 ஜூனில் புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷனிலும், 2025 ஆகஸ்ட்-செப்டம்பரில் கேரள மாநிலம் கொச்சியிலும், 2026 ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனிலும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
6-வது லோக் சம்வர்தன் பர்வ் நிகழ்ச்சி 2026 ஜூலை 11 முதல் 17 வரை டேராடூன் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து கைவினைஞர்கள், கைத்தொழில் வல்லுநர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய உணவுக் கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்காக 150 கைவினை மற்றும் உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், கைவினைஞர்களின் வருமானம் மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி, ஆன்லைன் வர்த்தகம், வடிவமைப்பு, வரிவிதிப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகளில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஆதரவுடன் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக் சம்வர்தன் பர்வ் திட்டத்தின் பலன்கள் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தகுதியான கைவினைஞர்கள் மற்றும் பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் என்றும், இதன்மூலம் அவர்களுக்கு சந்தை அணுகல் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும்,தமிழ்நாட்டிற்கென தனியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது வழங்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் பதிலில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக் சம்வர்தன் பர்வ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கட்டமைப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தகுதியான அமைப்புகளிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்படுவது, நிதி இருப்பு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பூர்த்தி செய்யப்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் பிற இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *