04.08.2026 அன்று, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளின் எச்சங்கள் காரணமாக இந்திய இறால் ஏற்றுமதி சரக்குகள் வெளிநாடுகளால் நிராகரிக்கப்படுவது, அதனால் ஏற்பட்ட நிதி இழப்பு, சட்டவிரோத ஆன்டிபயாடிக் பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் சிறு அளவிலான இறால் வளர்ப்போருக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
கேள்விகள்-
2025 மார்ச் மாதம் முதல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் தடை செய்யப்பட்ட நைட்ரோஃப்யூரான்கள், குளோராம்பெனிகால் போன்ற ஆன்டிபயாடிக் எச்சங்கள் காரணமாக எத்தனை இந்திய இறால் ஏற்றுமதி சரக்குகளை நிராகரித்துள்ளன?
அதனால் ஏற்பட்ட நிதி இழப்பு எவ்வளவு?
தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதால் அவை இறால் வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
மாநில மற்றும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் சிறு அளவிலான இறால் வளர்ப்போருக்கு தரமான ஆன்டிபயாடிக் இல்லாத தீவனம், தரமான குஞ்சுகள் மற்றும் SHAPHARI சான்றிதழ் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவி என்ன?
என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்) எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில் :-
2025 மார்ச் முதல் இதுவரை, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் எச்சங்கள் கண்டறியப்பட்டதால் மொத்தம் 35 இந்திய இறால் ஏற்றுமதி சரக்குகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா 22 சரக்குகள் (336.79 மெட்ரிக் டன்; ரூ.26.01 கோடி), ஐரோப்பிய ஒன்றியம் 9 சரக்குகள் (145.21 மெட்ரிக் டன்; ரூ.9.49 கோடி), ஜப்பான் 3 சரக்குகள் (45.54 மெட்ரிக் டன்; ரூ.3.06 கோடி), ரஷ்யா 1 சரக்கு (20 மெட்ரிக் டன்; ரூ.1.341 கோடி) ஆகியவை அடங்கும். மொத்தமாக *547.54 மெட்ரிக் டன் மதிப்பிலான ரூ.39.901 கோடி ஏற்றுமதி சரக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளின் சட்டவிரோத விற்பனை மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Coastal Aquaculture Authority (CAA), 2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், கடலோர மீன்வள வளர்ப்பில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்தியல் செயற்பாட்டு பொருட்களின் பட்டியலை 75 ஆக விரிவுபடுத்தியுள்ளது. மேலும், குளோராம்பெனிகால், நைட்ரோஃப்யூரான் உள்ளிட்ட மருந்துகளின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட 37 வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை இறால் மற்றும் மீன்வள வளர்ப்பில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆன்டிபயாடிக் பயன்பாட்டைக் கண்காணிக்க அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும்
Antibiotic Task Force அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கடலோர மாநிலங்களும் இந்தப் பணிக்குழுக்களை அமைத்துள்ளன. இருப்பினும், மாநில அல்லது மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்த மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் மத்திய அரசிடம் இல்லை என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதி ஆய்வுக் கவுன்சில் (EIC), ஆன்டிபயாடிக் தொடர்பான ஒவ்வொரு விதிமீறல் சம்பவத்தையும் விசாரித்து, காரணங்களை கண்டறிந்து சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்குகளும் 100 சதவீத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மீண்டும் மீண்டும் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள், திருத்த நடவடிக்கைகள் நிறைவேறும் வரை தற்காலிகமாக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறு அளவிலான இறால் வளர்ப்போருக்கு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் 37 நர்சரி/விதை வளர்ப்பு குளங்கள் (ரூ.2.59 கோடி), ஒரு நோய் கண்டறிதல் மற்றும் தரப் பரிசோதனை ஆய்வகம் (ரூ.40 லட்சம்), 7 மீன் தீவன ஆலைகள் (ரூ.5.20 கோடி) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆன்டிபயாடிக் இல்லாத தரமான உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் CAA இதுவரை 10,109 மீன்வள உற்பத்திப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. SHAPHARI திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 16 இறால் குஞ்சு உற்பத்தி நிலையங்களும், 392 ஹெக்டேர் இறால் பண்ணைகளும் சான்றளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் ஒரு இறால் குஞ்சு உற்பத்தி நிலையமும், 83.47 ஹெக்டேர் பரப்பளவிலான இறால் பண்ணைகளும் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comment