29.07.2026 அன்று, இந்திய பாரம்பரிய அறிவு மின்னணு நூலகம் (Traditional Knowledge Digital Library – TKDL) தொடர்பாக, உலக நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், அதில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆஸ்திரேலிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன் விபரம்:-
கேள்விகள்-
இந்திய பாரம்பரிய அறிவு மின்னணு நூலகத்தை பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளுடன் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனவா? அவற்றின் விவரங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள் என்ன?
இந்த மின்னணு நூலகத்தில் 5.2 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் மருந்து தயாரிப்பு விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா?
மேலும், IP Australia-வுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம், ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தரவுத்தள அணுகல் வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில் :-
இந்திய பாரம்பரிய அறிவு மின்னணு நூலகத்தின் தரவுத்தளத்தை, CSIR-உடன் ரகசிய அணுகல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள உலகின் 18 காப்புரிமை அலுவலகங்கள் காப்புரிமை பரிசீலனை நடைமுறைகளுக்காக பயன்படுத்தி வருகின்றன. இதில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா, சிலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, ரஷ்யா, பெரு, ஸ்பெயின், டென்மார்க், பிரான்ஸ், யூரேசிய காப்புரிமை அமைப்பு, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மற்றும் அமைப்புகளின் காப்புரிமை அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, காப்புரிமை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள், ஏற்கனவே உள்ள பாரம்பரிய அறிவு தொடர்பான ஆதாரங்களை கண்டறிந்து, தவறான காப்புரிமைகள் வழங்கப்படுவதைத் தடுக்க முடிகிறது. மேலும், இந்திய பாரம்பரிய அறிவு தொடர்பான காப்புரிமை விண்ணப்பங்கள் மீது CSIR-TKDL சார்பில் மூன்றாம் தரப்பு ஆட்சேபனைகள் மற்றும் காப்புரிமை வழங்குவதற்கு முன்பான எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு முதல் TKDL ஆதாரங்களின் அடிப்படையில் 375 காப்புரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன அல்லது திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன.
தற்போது TKDL-ல் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் யோகா ஆகிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான 5,19,978 மருந்துக் குறிப்புகள், சிகிச்சை முறைகள், நோய் கண்டறிதல் முறைகள், அறுவைச் சிகிச்சை கருவிகள், உணவுமுறை பரிந்துரைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சித்த மருத்துவம் தொடர்பாக மட்டும் 301 தமிழ் நூல்களில் இருந்து 89,403 தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜூலை மாதத்தில் IP Australia-வுடன் கையெழுத்தான ரகசிய அணுகல் ஒப்பந்தத்தின் மூலம், அந்நாட்டு காப்புரிமை ஆய்வாளர்கள் TKDL தரவுத்தளத்தை பயன்படுத்தி, காப்புரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தேவையான முன்ஆதாரங்களை கண்டறிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Previous29.07.2026 அன்று, பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘லோக் சம்வர்தன் பர்வ்’ (Lok Samvardhan Parv) நிகழ்ச்சியின் நோக்கம், சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய உணவுக் கலைஞர்களுக்கு சந்தை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
-
NextNext Post
No comment