28.07.2026 அன்று, பசுமை எஃகு உற்பத்தி, கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன் விபரம்:-
கேள்விகள்-
எஃகுத் துறையில் உற்பத்தியை அதிகரிப்பதோடு கார்பன் மற்றும் மாசு உமிழ்வைக் குறைப்பதில் உள்ள சவால்களை அரசு ஆய்வு செய்துள்ளதா?
எரிசக்தி திறன், பசுமை எஃகு, ஹைட்ரஜன் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான உற்பத்தி முறைகள் மூலம் எஃகுத் துறையின் வளர்ச்சியை கார்பன் குறைப்பு நடவடிக்கைகளுடன் எவ்வாறு ஒருங்கிணைத்து வருகிறது?
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் நடைமுறைக்கு (CBAM) ஏற்ப உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை தயார்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
மேலும், கார்பன் தொடர்பான எல்லை வர்த்தக நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மற்ற அமைச்சகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது?
என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு மத்திய எஃகுத் துறை இணை அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில்:-
எஃகுத் துறையின் பசுமை மாற்றம், பசுமை எஃகுக்கான செயல்திட்டம் மற்றும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான சாலைவரைபடத்தை உள்ளடக்கிய Greening the Steel Sector in India: Roadmap and Action Plan என்ற அறிக்கையை, அமைச்சகம் அமைத்த 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய எஃகுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பசுமை மாற்றத்திற்கான சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
பசுமை எஃகு மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட எஃகை வரையறுத்து வகைப்படுத்த Green Steel Taxonomy வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுமை எஃகு உற்பத்தி, அதற்கான சந்தை உருவாக்கம் மற்றும் நிதி ஆதரவு பெறுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில், 90 எஃகு ஆலைகளுக்கு பசுமை எஃகு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், அவை மொத்தம் 12.4 மில்லியன் டன் பசுமை எஃகை உற்பத்தி செய்துள்ளன.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், எஃகுத் துறையில் ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் 4 முன்னோடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய சூரிய சக்தி இயக்கம் மூலம் சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் எஃகுத் துறையின் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய கார்பன் சந்தையை ஒழுங்குபடுத்தும் வகையில், 2023 ஜூன் 28 அன்று கார்பன் கிரெடிட் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme – CCTS) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எஃகு ஆலைகளுக்கும் பொருந்தும். மேலும், கார்பன் தொடர்பான எல்லை வர்த்தக நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் மத்திய எஃகுத் துறை தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *