07.08.2026 அன்று, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் (FMGE) தேர்வின் வெளிப்படைத்தன்மை, குறைந்த தேர்ச்சி விகிதம் மற்றும் தேர்வு நடைமுறை குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன் விபரம்:-
கேள்விகள்-
(அ) சமீபத்தில் நடைபெற்ற FMGE தேர்வில் சிரம நிலை அதிகரித்திருப்பது மற்றும் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளனவா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்கள் என்ன?
(ஆ) தற்போதைய தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு ஆகியவை உண்மையான வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை பாதிக்கும் வகையில் உள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்துள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்கள் என்ன?
(இ) FMGE தேர்வில் வெளிப்படைத்தன்மை, முன்கணிக்கக்கூடிய தன்மை மற்றும் நியாயத்தை மேம்படுத்துவதற்காக, தரநிலைகளைப் பேணியபடி அரசு எடுத்துள்ள அல்லது எடுக்கத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
(ஈ) தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசித்து FMGE தேர்வு முறையை மறுஆய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதா?
(உ) அவ்வாறு இருந்தால் அதன் விவரங்கள் என்ன?
இதற்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளதாவது:
*வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவப் பதிவு பெற விரும்பும் மாணவர்களுக்கான FMGE தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS), நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி நடத்தி வருகிறது.
* FMGE தேர்ச்சி விகிதம் என்பது மருத்துவக் கல்வியின் தரம், மாணவரின் அறிவுத் திறன் மற்றும் தேர்வில் அவர் வெளிப்படுத்தும் செயல்திறன் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
* FMGE பாடத்திட்டம், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ள Competency Based Undergraduate Curriculum அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
* தேர்வுக்கான வினாக்கள், நிபுணர்களால் தயாரிக்கப்படும் Question Bank, Item Writing Workshops மற்றும் Validation Workshops ஆகிய பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே தேர்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வினாவும் பாடத்திட்டத்துடன் பொருந்துகிறதா, உள்ளடக்கத் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.
* இந்திய சுகாதார அமைப்பில் பாதுகாப்பாக மருத்துவப் பணியாற்ற தேவையான அறிவு மற்றும் திறனை மதிப்பிடும் வகையிலேயே FMGE தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
* FMGE தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளின்படி நடத்தப்படுகிறது. தகுதி, பாடத்திட்டம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பில் மாற்றங்கள் தேவைப்பட்டால், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சட்ட விதிகள் மற்றும் பங்குதாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது பரிசீலித்து முடிவு செய்யும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
No comment