27.07.2026 அன்று, மக்களவையில், மேகதாது அணை கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என விதி 377-ன் கீழ் வலியுறுத்தினேன்.
அதன் விபரம் :-
தென் சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன், விதி 377-ன் கீழ் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தை உடனடியாக நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்காக தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றும் மக்களவையில் வலியுறுத்தினார்.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையேயான நீண்டகால மாநிலங்களுக்கு இடையேயான நீர்விவகாரமாக மேகதாது அணைத் திட்டம் இருந்து வருகிறது. காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் ரூ.9,000 கோடி மதிப்பில் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்து வருவது மிகவும் வருத்தமளிப்பதுடன், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானதாகும்.
காவிரியின் கீழ்படுகை மாநிலமான தமிழ்நாடு, இந்தத் திட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், கீழ்நோக்கி செல்லும் நீரின் அளவு கடுமையாகக் குறைவதுடன், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
மேகதாது அணைத் திட்டம், 2007ஆம் ஆண்டு தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவையும், 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதாகும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய கட்டமைப்புகளை உருவாக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.
மேலும், திமுக சார்பில் மேகதாது விவகாரத்தைத் தீர்க்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத் தீர்மானமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான திமுக தொடர்ந்து இந்தத் திட்டத்தை எதிர்த்து வருவதாக தெரிவித்தார்.
எனவே, கர்நாடகாவின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை உரிய அளவில் உறுதி செய்யவும், மேகதாது அணை தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு உடனடியாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *