உரைகள்

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

பட்டாம்பூச்சிகளின் இரவு -
ஆதிரா முல்லை

கவிதை நூல் வெளியீட்டு விழா (21.11.2014)

முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள்
- தமிழச்சி தங்கபாண்டியன்

"கவிதை ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடும் திறவு கோலாகட்டும் ஒரு இலை வீழ்கிறது. ஏதோ ஒன்று பறந்து போகிறது. கண் பார்த்ததெல்லாம் படைப்பதாகட்டும் ....
கவிஞரே! ரோஜாவை ஏன் பாடுகிறீர்? உம் கவிதையில் ரோஜா மலரட்டும்"

தொடர

அகரமுதல்வனின் "அறம் வெல்லும்
அஞ்சற்க"

புத்தக வெளியீட்டு விழா பேச்சு

போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு ஏற்புரையில், "இழப்புகளுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையிலிருப்பதும் இழக்கப்படாமலிருப்பதும் மொழி ஒன்றுதான்" என்றார்...

தொடர

திரு - விவாக - சதிர் :
அரவிந்த் அப்பாதுரை

புத்தக வெளியீட்டு விழா

மனித ஆன்மாக்களுக்கான திறவுகோல்களைக் கொண்டிருப்பவை இலக்கியம் என்றால், அவற்றின் வகைமைகளில் ‘புதினம்’ எனப்படுகின்ற நாவல் மிக முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், உப்பளப்பணி செய்து வந்தனர் ஏழை நாடோடி இத்தாலியத் தொழிலாளர்கள் பலர். ஆகஸ்ட் 16, 1893 அன்று அந்த...

தொடர

பத்மஜா

புத்தக வெளியீட்டு விழா

"மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக் கொண்டுவிடும்" என்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான Wallace Stevens குறிப்பிட்டார் - "After one has abandoned belief in God, Poetry is the essence which takes its place as life's redemption"...

தொடர

ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம்
(cada cabeza es un mundo)

(மா.அரங்கநாதன் அய்யாவின் காளியூட்டு
புதினத்தை முன்வைத்து ஒரு பகிரல்)
- தமிழச்சி தங்கபாண்டியன்

கலையின் பிறப்புபற்றி மிகச் சிறந்த எழுத்தாளரும், பேராசிரியருமான நபக்கோவ் ஒரு நாட்டார் கதை மூலம் சொல்லியதை சற்றே தழுவி நம்மூர்க் கதைமூலம் முன்வைத்துத் துவங்குகிறேன்...

தொடர

நீல நாயின் கண்கள்

புத்தக வெளியீட்டு விழா

இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளுக்குள்ளாக வேறு எந்த வெளிப்படையான சரடும் இல்லை. ஆனால் உலகின் எழுதப்பட்ட எல்லா கதைகளையும் பிணைத்திருக்கும் அடிப்படையான விஷயமான கதை சொல்லுதலிலும் கதை கேட்டலிலும் உள்ள லயிப்பு இவற்றையும்...

தொடர

விரிசலுக்கு பிறகு -
பத்மநாபபுரம் அரவிந்தன்

புத்தக வெளியீட்டு விழா

"மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி...

தொடர

அண்மை

குறுஞ்செய்திகள்

தொடர்பு கொள்க

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்

எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020

புது தில்லி இல்லம்

சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001

சென்னை இல்லம்

தங்கபாண்டியன் இல்லம்,
எண் 8, முதல் தெரு, ராஜா நகர்,
நீலாங்கரை, சென்னை - 600 115

பின்பற்றுங்கள்

© 2021 தமிழச்சி தங்கபாண்டியன்.

பட்டாம்பூச்சிகளின் இரவு -
ஆதிரா முல்லை

கவிதை நூல் வெளியீட்டு விழா (21.11.2014)

முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள்
- தமிழச்சி தங்கபாண்டியன்

திறவு கோலாகட்டும்
ஒரு இலை வீழ்கிறது.
ஏதோ ஒன்று பறந்து போகிறது.
கண் பார்த்ததெல்லாம் படைப்பதாகட்டும்
....
கவிஞரே! ரோஜாவை ஏன் பாடுகிறீர்?
உம் கவிதையில் ரோஜா மலரட்டும்"
என்ற சிலி நாட்டுக் கவிஞன் வின்சென்டோ ஹியூடோப்ராவின் ரோஜாக்கள் எப்போதாவதுதான் ஒரு கவிதைத் தொகுப்பில் முகரக் கிடைக்கின்றன. ஓரிரண்டு அவ்வாறு தட்டுப்பட்டாலும் மனம் நிறைவுற்று விடுவதன் காரணம் ஒருவேளை கவிதையைப் பொருத்தவரை நான் ஒரு ரசிகை, தேர்ந்த விமர்சிகர் அல்ல என்பதாலோ?
ஆதிரா முல்லையின் பட்டாம்பூச்சிகளின் இரவிலே எனக்குச் சில ரோஜாக்கள் கிடைத்தன என்பது மகிழ்ச்சியே. காதல், தாய்மை, பெண் இருப்பின் வலி, இயலாமை, சமூகம் மீதான பிரமிப்பு, நட்பு, உறவுகள் - என விரிகின்ற ஆதிரையின் கவிஉலகம் மரபார்ந்த சொற்சுவையினால் கட்டப்பட்டது என்றாலும் மரபை அவ்வப்போது திமிர்த்து மீறுகின்ற தன்மையும் கொண்டது.
"விரல்களில் கசிந்த
இரத்தத்தைப்
பார்த்த போது புரிந்தது
கவிதை எழுதுவதைவிட
சமையல் செய்வது
எளிதென்று"
என்றெழுதும் ஆதிராவே அம்மரபார்ந்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தி
"மங்கை
என்ற காரணத்தால்
கல்பாவை
உயிர் தந்து 
கடவுளானான்!
மனைவி
என்ற காரணத்தால்
உயிர்ப்பாவை
மைதிலியைக்
கனலாட்டிக்
கல்லானான்"
என்றொரு கேள்வித் தீயைக் கொளுத்தி இராமனைக் கல்லாக்குகிறார்.
இராமன் பிறன்மனை நோக்காத பேராண்மையாளன் மட்டுமல்ல, சந்தேகப்பிராணியும் கூட. சீதை இராவணனிடமிருந்து வந்தவுடன் சந்தேகித்துத் துளைக்கின்ற சராசரி ஆண்மன, ஆணாதிக்கச் சிந்தனையும் அவனிடத்தே உண்டு. அதைப் பின்வருமாறு கம்பராமாயணத்தில் படம் பிடித்துக் காட்டுவார் கம்பர் - இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, 
"அரக்கர்களின் அரண்மனையில் மாமிசம் உண்டு, கள் குடித்து இருந்தாயே, அதில் எனக்கும் ஏதேனும் மிச்சம் மீதி கொண்டு வந்தாயோ?" என்கிறான்.
மனைவியோடு சண்டை போடும் கணவன் தன் பக்கமிருக்கும் பலவீனம் மறைக்க அவளது பிறந்தகத்தை வம்பிழுப்பது வழக்கம். இராமனும் சொல்கிறான் – 
"நல்ல குலத்திலா பிறந்தாய், வெறும் நிலத்தில் தானே பிறந்தாய், இப்படித்தானிருக்கும் 	புத்தி".
முத்தாய்ப்பாய் இது –
"இந்தக் கடலையே தீர்த்து, படை திரட்டி இங்கு வந்து, இந்த அரக்கர்களை வேரோடு அழித்தேனே - எதற்காக என்று நினைத்தாய்? உன்னை மீட்கவா? இல்லையில்லை - இராமனின் மனைவியை ஒருவன் கொண்டு சென்றுவிட்டானே எனும் பழியைப் போக்க" என்கிறான்.
கேட்டுத் துடித்த சீதை சவுக்கடியாய் ஒன்றைச் சொல்கிறாள் -
"எந்தவம் எந்நலம் என் கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அவம் பிழைத்தாம் அன்றே
உத்தம! நீ மனத்து உணர்த்திலாமையால்!
இந்த நூற்றாண்டிற்கான அதிநவீனப் பெண்ணியச் சிந்தனை இது! 
"தவம், கற்பு என்பதெல்லாம் பித்து என - பைத்தியக்காரச் செயலாய் ஆகிவிட்டதே உத்தம! நீ உணராததால்" என்ற சீதையின் குமுறல் - மனம் சார்ந்த புரிதலே ஆண், பெண் இணைவாழ்வில் அதிமுக்கியம் என்கிற நவீன மனத்தினை முன்வைக்கிறது. அதனையே இத்தொகுப்பின் மொத்தமான பெண்குரலாய் முன்னெடுக்கிறார் ஆதிரா.
நமது சமூகத்தோடும், அதனுடைய சூழல்களோடும் உடனடியாகத் தொடர்பு கொண்ட கவிதைகளே மிக முக்கியமானவை. அவ்வகையில் ஆதிராவின் கொற்றவை நமது தொன்மத்தை மிக அழகாக இன்றைய நடப்புலகில் மீட்டுறுவாக்கம் செய்த கவிதை.
கொற்றவை
அகோரப் பற்களும்
நீண்ட நாக்கும்
சூலமும்
கத்தியும்
ஈட்டியும்
உடுக்கையும்
இல்லாத 
அழகான காளி
அவனுக்கு 
அலுவலகத்தில்
மேலாளர்
இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அவள்!
ஆதிரையின் கவிதைப் போக்கில் எனக்கு மிகப் பிடித்த கூறாக அவரது சங்கஇலக்கியப் பதிவுகளைச் சமகால நடப்போடு இணைத்துக் கவிதை புனைவதைச் சுட்டுவேன். அவரது பெருந்திணை, கவிதை அதற்கு மிகப் பொருத்தமானதொரு சான்று.
பெருந்திணை...
அற்றைத் திங்கள்...
அன்போடு புணர்ந்த
காதல் திணையில்
காதல் தலைவனே
தலைவியின்
காதலன் ஆவான்
தோழியின் துணையுடன்!
இற்றைத் திங்கள்...
வம்போடு புணரும்
இணையத் திணையில்
கணவனே மனைவியின்
காதலன் ஆகிறான்
கணினித் தோழியால்!
எழுத்துக்கள் உரசும்
இணையப் பாதையில்
கருகிப் போனது
அன்பின் ஐந்திணை
கலாச்சாரம் கெடுத்து
காற்றில் படர்ந்தன
பெருந்திணைக் கொடிகள்
மரபை மீறி
கண்கள் பேசும்
காதல் மொழியில் 
வாய்மொழிதான்
வாழ்வு இழக்கிறது!
கணினி வீசும்
காதல் வலையில்
காதலே வாழ்வு
இழக்கிறது!
காட்சி வேட்கை
ஐயம் தெளிதல்
காதல் விதிகள்
எதுவும் இன்றி
கணினி வளர்க்கும்
காம அக்கினியில்
சாம்பல் ஆகிறது
தமிழன் உருக்கிய 
பண்பாட்டு நெய்!
இந்தப் "பண்பாட்டு நெய்" சர்ச்சைக்குரிய சொற்றொடர். எது பண்பாடு - மாறுதலற்றதா, அதன் அளவுகோல் என்ன - இவைபோன்ற நுட்பமான கருத்தியல் சர்ச்சைகளைப் பின்னர் பார்க்கலாம். "தமிழ்ப் பண்பாடு என்பது தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டே போக வேண்டுமென்பதையும்," அதன் தவிர்க்க இயலாத கட்டாயத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. தமிழ் பண்பாடு என்பது கலாச்சாரக் காவலர்கள் தங்களைக் காபந்து செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் பதாகையாகிவிடக்கூடாது.
ஆதிராவின் கவிதைகளில் காதலுணர்வும் மிக லாவகமாக, மென்மையாக, ஆனால் கட்டமைக்கப்பட்ட 'பெண்மை' விதியுடன் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆணை முழுவதும் சார்ந்திருக்கின்ற காதலே அது.
"பாதம் அசையும் போதெல்லாம்
உன்னை உச்சரித்த மெட்டி
என்னை நச்சரிக்கின்றது
தேய்ந்து ஊமையாகுமுன்பு
மீண்டும் ஒருமுறை
உன் பற்களின் ஸ்பரிசம் கிட்டாதா?" 
(மெட்டியின் புலம்பல்)
"உன் மூச்சுச் சூட்டில்
பொறிந்து வெளியேறியது
அதுவரை நான்
அடைகாத்து வைத்திருந்த நாணம்!
இன்று உன் வாசிப்பிற்குள்
கட்டுமானங்களை
உடைத்த மரபுக்கவிதையாக நான்!
(நாணம்)
"உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
என் காதலை
உன் ஒவ்வொரு முறுக்கலிலும்
அது மெய்சிலிர்க்கிறது என்னுள்"
(மீசைக்குப் பின்னே)
எனும் ஆதிராவின் மேற்சொன்ன கவிதைகள் அமெரிக்கப் பெண்கவிஞர் ஹெலன் ஷெப்பீல்டின் The Love Poem Book எனும் சிறு கவிதை தொகுதியினை நினைவுபடுத்துகின்றது. தனது காதலுக்குப் பலமுகங்கள் எனும் கவிதையில் ஹெலன்,
காதல் ஒரு விழா அல்ல
நாட்குறிப்பு அல்ல
...
காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது.
"பாட்டாளிக்கு வேண்டுவது தோட்டம் நிறைய மலர்கள் அல்ல. குளிருக்கு வேண்டிய எரிபொருள்" என்று கலை, இலக்கியம் குறித்து மாவோ கூறியது ஒரு கவிஞனுக்கும் பொருந்துமென்பதை ஆதிராவின் புறம்சார்ந்த பல கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சிவகாசியின் குட்டி தேவதைக்களுக்காகப் பரிந்து பேசுகின்ற இவரது குரல், மேதகு தேசியத் தலைவர், எம்மினத்தின் பெருமிதமான அடையாளம், மானமிகு போராளி பிரபாகரனது மகன் பாலச்சந்திரனது மரணம் குறித்துப் பொங்கி எழுந்து அறம் பாடுகிறது.
அக்கவிதையைப் படித்தபின் உணர்ந்த அனுபவம் ஒரு சந்நதத்தை ஒத்திருந்தது. மரபார்ந்த வடிவத்தில் பாடப்பட்ட ஒரு அறம், "புரட்சிகர அரசியல் உள்ளடக்கம், அதி உயர்ந்த கலையியல் வடிவம்" இவற்றின் தேர்ந்த கலவையாக அக் கவிதை வெளிப்பட்டுள்ளது. ஆதிரைக்கு மிகப் பிடித்த பாரதியார் பற்றிய வ.ராவின் குறிப்பொன்றும் இங்கு நினைவிற்கு வந்தது.
ஒரு சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொணடே இருந்த பாரதி, திடீரெனத் தன் மார்புக்கூட்டை நிமிர்த்தி நின்றபடி,
"தங்கம் உருக்கித் தணல் குறைத்து
தேனாக்கி எங்கும் பரம்பியதோர்
இங்கிதம்"
என்று பாடி மூர்ச்சையாகி விடுகிறார். "இசைப்பாடல் என்பது பாரதியின் சன்னதம்" என்று வ.ரா இந்நிகழ்வைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிடுகிறார்.
ஆதிரையின் ஓய்ந்தது உயிரின் ஓசையும் அப்படி ஒரு சந்நத இசைப் பாடல் தான். அதன் உணர்வெழுச்சி அப்பழுக்கற்ற சத்தியத்தின் தகிப்பைத் தருகின்றது.
இங்கு தமிழ்க்கவிதை உலகின் தற்காலப்போக்கு ஒன்றைச் சுட்ட விரும்புகிறேன். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகளிலெல்லாம் சமூகப் பிரச்சனைகளை எடுத்துப் பேசுகிறார்கள். அவை கவிதையின் இலக்கியத் தகுதிக்கு எவ்விதத்திலும் ஊறு செய்வதில்லை எனவும் நம்புகிறார்கள். ஒரு கவிதை சமூகச் செய்தியைப் பேச நேர்ந்தால் அது அதனுடைய கலை அந்தஸ்திற்கு எவ்வித ஆபத்தையும் விளைவிக்கவில்லை எனும் தெளிவு அவர்களுக்குள்ளது. ஆனால் தற்காலத் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிதைகளில், சமூகப் பிரச்சனையைக் கையாண்டால் அவை வெறும் "பிரச்சாரக் கவிதையெனக்" குறுக்கப்பட்டு "அறிவு ஜீவி விமர்சகர்கள்" எனப்படுபவர்களால் நிராகரிக்கப்படுகிறது. எத்தகைய முரண் இது!
"மனுசங்கடா நாங்க
மனுசங்கடா" என்று அய்யா இன்குலாப் திண்ணியம் குறித்து எழுதிய கவிதைக்கு நிகரான அறம் இங்கு வேறு யாருக்குண்டு? இக்கருத்தை வலியுறுத்தி கலைவிமர்சகர் இந்திரன், "W.H.Auden சொல்வது போல் Public Poetry, Private Poetry என இரண்டு வகைமை உண்டு, அகம், புறம் என்கிற மரபில் வந்தவர்கள் நாம். பிறகு ஏன் அகத்தில் மட்டும் நிற்க வேண்டும்? புறத்திற்கும் செல்வது அவசியமல்லவா?" என்று அழுத்தமாகக் கேட்டுப், புறத்திற்குச் சென்றால் இலக்கியத் தகுதியை இழந்து விடுவார்கள் என்போரின் கூற்றைப் புறந்தள்ளுங்கள் என்கிறார்.
அவ்வகையில், ஆதிரா மிக வலுவாகப் புறம் சார்ந்த விஷயங்களை முன்வைத்தும், அகம் சார்ந்த காதலுணர்வினையும் (சமயங்களில் சமூகத்தின் அதரப் பழமையானவற்றைக் கேள்விக்குப்படுத்தியும்) முன்வைக்கின்றார்.
"கட்டிலறை முத்துக்களுள் 
ஒரு முத்து வரமென்றும்
மறுமுத்து புறமென்றும்
எறிவதுதான் பேதமென்றும் வஞ்சக்கோடு"
(கோடு)
எனப் பெண் சிசுவிற்காக வாதாடுகையிலும்,
"அன்றாடம் 
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண்வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில் 
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?"
(வெடிக்கும் முன்னே)
எனக் காமத்தைக் கட்டுப்பெட்டி என்றாலும் கடந்தாக வேண்டுமே என்று ஆதங்கப் படுகையிலும் அகமும், புறமும் மெல்லிய புள்ளியில் இணைகின்றன. தந்தை மகற்காற்றும் நன்றி எனும் கவிதையும்
"அரிச்சுவடியில் அழகாய்ச் சிரிக்கும்
அம்மா
நேரில் அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்"
எனப் பகடி செய்கின்ற மம்மி கவிதையும்,
"அம்மாவையும் நிலவின்
வெளிச்ச வெளியில்
ருசிக்க ருசிக்க
அவள் உருட்டிக் கொடுத்த சோற்றையும்
வளையல் சலசலக்க
அவளது அழகுக் கை
இழுத்து அரைத்த 
அம்மியையும்
நினைவூட்டுகிறது
என் கையில்
மெஹந்தியாக மாறிப்போன மருதாணி!
எனும் nostalgic தொனி அம்மாவும்... அம்மியும் கவிதையும் நாம் இன்று தொலைத்து விட்ட பல விஷயங்களைக் கண்முன் நிறுத்துகின்றன.
ஆதிரை உலகவிசை முடுக்கு எனப் புதிய ஆத்திசூடி படைத்திருக்கிறார். சுற்றிலும் நர அசுரங்கள் வாமனங்களாக வளர்ந்து கொண்டிருக்க நரகாசூரனை அழித்து விட்டதாக ஏன் தீபாவளி கொண்டாட வேண்டுமெனக் கேள்விகேட்கிறார். "மதமிழந்த வேதம் யாவிலும் மனிதம் வாழலாம்" என வழிகாட்டுகிறார். ஏங்கி நிற்கையில் ஏமாற்றிச் சென்ற மழையை "ஆண் மழையே, நீயும் என் காதலன் போலத்தானே" எனச் சாடுகிறார். "பருவம் கடந்தும் காத்துக் கிடக்கம் ஜெலட்டின் குண்டு... எச்சரிக்கிறேன்" என முதிர்கன்னிக்காகத் துணிந்து குரல் தருகிறார். இவை அனைத்தும் எனக்கு மிக அணுக்கமாக, நெருக்கமாக இருப்பவை. ஆயின், ஒரு சிறு நெருடலுண்டு, இவரது பெருந்திணைக் கவிதையில். அதில் இவர் மேல் எனக்குச் சற்று ஊடலுமுண்டு. முழுவதுமாகக் கணினிக் காதலைச் சாடுதலும், 
"கணினி வளர்க்கும்
காம அக்கினியல்
சாம்பல் ஆகிறது
தமிழன் உருக்கிய
பண்பாட்டு நெய்!
என்பதுவும் "வரலாற்றின் பழங்காலத்திற்குத் திரும்பிச் செல்லுதல், அதனை மட்டுமே உயர்வெனக் கொள்ளும் ஆபத்தை ஊக்குவிப்பதாக ஆகி விடுமோ" எனும் கிலேசத்தையும் தருகின்றது. 
கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற அதனைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்ற காலகட்டமிது. பண்பாட்டின் அத்தனை கவசங்களும் பெண்ணை மட்டுமே குறிவைத்து அவளது 'கற்பைக் காக்கின்ற' கடமையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிற நேரமிது. பண்பாடு என்பது உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலை, இலக்கிய வெளிப்பாடு, சடங்குகள் - இவை என்றால் ஆதியிலே தமிழ்ப் பண்பாட்டின் உச்சமென நாம் கருதும் சங்ககால வாழ் முறைப்படியேவா இன்றளவும் நமது உணவும், உடையும், மரபும் உள்ளன? அவற்றின் இளகிய தன்மை வழி எத்தனையோ வசதிக்கேற்ற மாற்றங்கள் வரவில்லையா? 
இக்கேள்விகளனைத்திற்கும் பதில் கருப்பு வெள்ளையில் இல்லாதவரையிலும் நாம் 'பண்பாட்டு நெய்'யை வரையறுக்கவோ அல்லது உருக்கவோ முடியாதல்லவா? ஆனால் ஒரு படிமமாகத் "தமிழன் உருக்கிய பண்பாட்டு நெய்" யை நான் ரசிக்கவே செய்தேன் - கருத்தியல் ரீதியாக அல்ல. 
ஆதிரை தனது கவிதைக்கான கட்டுமானப் பொருட்கள், கருக்கள் பலவற்றை மரபுக் கிடங்கிற்குள்ளிருந்து எடுத்தாலும் அதனைத் தன் கற்பனை வீச்சினால் சாணை பிடித்து விடுகிறார் என்பது தான் அவரது சிறப்புத்தன்மை. உதாரணமாக அவரது மோனாலிசாவின் மீசை, மீசை நரைக்கும் முன்னே எனும் கவிதைகளைச் சுட்டலாம். இரண்டு கவிதைகளிலும் புதுக் கற்பனையின் வெளிப்பாட்டிற்கு மீசையே உதவியிருக்கிறது. முன்னதில், புருவமற்ற மோனாலிசாவிற்கு பாரதியின் மீசையை அதில் ஒட்டவைக்கிறார்.
"பாரதியார் மீசைக்குக்
கால்கள் முளைத்தன
ஓர் இரவில்
இரவினிடையில் அவை
மெல்ல நடந்து
உறங்கிக் கொண்டிருந்த
மோனாலிசாவின்
விழிகளுக்கு மேல்
பள்ளி கொண்டன
புருவமற்ற ஏக்கத்தில்
புன்னகையைத் தொலைத்த
அந்தப் பேரழகியின்
உதடுகளில் ஒட்டிக் கொண்டது
பேராண்மையும்"
என்று யாருக்குமே தோன்றாத ஒரு கற்பனையைப் புகுத்துகிறார் (நம்மில் பலருக்கு மோனாலிசா ஓவியத்தில் புருவமற்று இருப்பதே தெரியாது).
பின்னதில், பாரதி குறித்துப்பாடி 
"மீசை நரைக்குமுன் மூச்சின்
ஓசையை நிறுத்தி விட்டான்
மீசையிலும் வெள்ளையனுக்கு
ஆசை வரக் கூடாதென்று!"
எழுதிச் செல்கையில், மீசையில் கூட வெள்ளை முடி வந்து, வெள்ளையரின் நிறமென்கின்ற சாயல் தன் மீது படியக் கூடாதென இளமையில் உயிர் நீத்ததாகத் 'தற்குறிப்பேற்றணி'யைக் கையாள்கிறார்.
குமரியில் நிமிர்ந்து நின்றான் என வள்ளுவப் பெருந்தகை குறித்தும், அடிக்கரும்பாய் இனித்தவரே என வள்ளியம்மாள் கல்வி நிறுவனங்களைச் சேவை மையங்களாகத் தோற்றுவித்த தமிழ்ப் புலவர், பெருமகனார் அய்யா அ.மு.ப குறித்தும் எழுதியுள்ளார். முழுவதும் மரபுக் கவிதைப் பாணியில் எழுதப்பட்ட அடிக்கரும்பாய் இனித்தவரே எனும் கவிதையில் "கீழ்க் கணக்கு நீதிநூலின் மறுபதிப்பே" என்ற அற்புதமான உவமையை மிக ரசித்தேன் - அதன் உண்மைத் தன்மைக்காக! அக்கல்லூரியில் Tutor ஆக ஆங்கிலத் துறையில் பல வருடங்கள் முன்பு நான் பணிபுரிந்த போது, நன்கொடை வாங்காமல் பெண்களுக்கென்றே நடத்தப்பட்ட கல்லூரி அது என்பதை மிக நன்கறிவேன். தனது அந்த உறுதிமிக்க கொள்கையினால் கல்வி வெறும் வியாபாரமல்ல என்று உலகிற்கு இன்றுவரை உணர்த்துகின்ற அய்யா அ.மு.ப விற்கு மிகப் பொருத்தமான அஞ்சலிக் கவிதை அது. பாராட்டுக்கள் ஆதிரா அய்யாவை இளைய தலைமுறைக்குக் கவனப் படுத்தியமைக்கு.
ஆனாலும், மேற்சொன்னவற்றை விடக் கூடுதலாகத் திராவிட விருட்சம் எனும் பெரியார் குறித்த கவிதை, இரண்டு விஷயங்களுக்காகத் தனியாகக் கவனம் குவித்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
முதலாவதாகத் தந்தை பெரியாரால் இந்த நிலைக்கு வந்திருக்கின்ற நான் கூட அவர் குறித்து கவியரங்கக் கவிதைகள், நினைவு நாள் கவிதைகள் போன்றவற்றைச் செய்திருக்கிறேனே தவிர, இயல்பாக, ஒரு வாஞ்சையோடு அவர் பற்றி இப்படி ஒரு கவிதை இதுவரை எழுதியதில்லை. பெரும்பாலான பெண் படைப்பாளிகள் தங்களைத் திராவிட இயங்கங்களோடு தொடர்பு படுத்திக் கொண்டாலோ, அல்லது அதன் உரம் பெற்றே பயணிப்பவர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலோ, தங்களை நவீனக் கவிதை உலகம் புறக்கணித்து விடக் கூடும் எனக் கருதுகின்ற சூழலில், மிக இயல்பாக, தன்னிச்சையாகத் தந்தை பெரியார் குறித்து, எளிமையான, உணவுப் பூர்வமானதொரு ஒட்டுதலோடு படைக்கபட்டிருக்கின்ற கவிதை இது!
இரண்டாவதாக, அக்கவிதையின் நடையும், தொனியும். குழந்தைமையின் குதூகலமும், தமிழுணர்வின் செருக்கும், உரிமையோடு ஒரு பாட்டனித்தில் அவர்தம் மூக்குக் கண்ணாடியை ஒளித்து விளையாடும் உற்சாகமும், ஊடாகவே அவர்தம் உரிமைக்கான பங்களிப்பைப் போற்றும் பெருமிதமும், கலந்து சுவைத்துக் கட்டிய மரபுக் கதம்பமாக மணக்கிறது இக் கவிதை. கூடுதல் சுவையாக ஒரு கவிஞருக்கே உரிய கற்பனைத் திறத்தோடு "விளையாட நினைத்தாலும் முடியாமல் மலர்மேனி வெங்காயம் ஆனதையோ" என 'வெங்காயத்தை' மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
W.H.Auden சொன்னது போலக் "கவிதை ஒரு நிகழ்வா?" அல்லது Archibald சொன்னது போல "அர்த்தம் எதுவும் அற்றதே கவிதையா?" என்பதில் எனக்குத் தெளிவில்லை. ஆனால் "கவிஞனின் முதற்கடமை படைப்பது. இரண்டாவது கடமை படைப்பது. மூன்றாவது கடமை படைப்பது" என்று சொன்ன ஹியுடோவ்ரானவின் கூற்று மிகப் பிடிக்கும். அவ்வகையில் தனக்கே உரிய பாணியில், தனது உணர்வுகளைப் பட்டாம்பூச்சிகளின் இரவாகப் படைத்துத் தந்திருக்கின்ற ஆதிராவின் பயணம் தொடர்ந்து படைப்பதிலேயே தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
அவரது புத்தகத்தின் தலைப்பிற்கான பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதை பகல்கள் மட்டுமல்ல இரவுகளும் பெண்களுக்கில்லை (தூக்கத்தை மட்டுமே சுட்டுவதல்ல இரவென்பது - பெண்களுக்கு தற்போது மறுக்கப்படுகின்ற இரவென்னும் வெளியைச் சுட்டுவதே அச் சொல்) என்பதை வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல மூடிய விழிகளிலும், பொறுப்பு, அது தரும் நினைவுச் சுமை, அதன் அலுப்பு இவைகளால் இரவுகள் எமக்கில்லை எனச் சொல்கிறது. கந்தர்வனின் 
"நாளும், கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை"
எனும் கவிதையினை நினைவு படுத்துகிறது ஆதிரையின் இப்பட்டாம்பூச்சி!
டார்ஜிலிங்கில் பிறந்து வளர்ந்த கவிஞர் விஷ்ணுகுமாரியின் புகழ்பெற்ற கவிதை நோயுற்ற காதலியின் கடிதம். அதில் அவர்,
"காதல் இறப்பதில்லை
அதை நீ
கொல்லவே முடியும்" என்பார்.
கவிதையும் அதுபோலவே இறப்பதில்லை. ஆனால் அதனைக் கொல்லவும் முடியாது. அத்தன்மையே அதன் தேவதைக் கொடையும், பிசாசுப் பிடியும். அக்கொடையையும், பிடியையும் இறுகப்பற்றி மென்மேலும் காதலியுங்கள், ஆதிரா - கவிதையை! ஆனால் அதற்கான கருத்தியல் தேர்வில் தெளிவாக இருங்கள். கட்டமைக்கப்பட்ட பெண்மை விதி விலங்குகளில் கவனமாகக் கால் பதியுங்கள்.
"சூரியனின் கீழ் அனைத்தும்
நமக்காக
நமக்காக மாத்திரமே!"
பறந்து வந்து இனியும் பல பட்டாம் பூச்சிகள்
இந்த முல்லைக்குத் தேர் தரட்டும்! கவிதையில் கருத்தியல்
தெளிவும், கூர்மையும் கைகூடித் துலங்கட்டும்!
        உதவிய நூல்கள்:
            1. தமிழ்நாடன் - உலகக் கவிதைகள்.
            2. உரையாடல், கவிதை, அனுபவம் - இந்திரன், வ.ஜ.ச.ஜெயபாலன்
          

அகரமுதல்வனின் "அறம் வெல்லும் அஞ்சற்க"

புத்தக வெளியீட்டு விழா பேச்சு

    போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு ஏற்புரையில், 
"இழப்புகளுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையிலிருப்பதும் இழக்கப்படாமலிருப்பதும் மொழி ஒன்றுதான்" என்றார்.
நம்பிக்கை, துயரமான பெருமூச்சு, உயிர்தழுவும் காதல், துடிதுடிக்கத் தொப்புள் கொடி அறுபட்ட வலி, கையறுநிலை, பதிலற்ற கேள்விகள், உயிர்ப்பின் சிறுவிதை - இப்படி அனைத்தையும் உள்ளடக்கியதாய் - 'பேரழிவு இலக்கியத்தின்' (Holocaust Literature) அங்கமானதொரு கவிதை வெளிப்பாடாய் தம்பி அகரமுதல்வனது 'அறம் வெல்லும் அஞ்சற்க' வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் - என்கின்ற அருமையான வார்தைகள் வெறும் சொற்களாக மட்டுமே ஆகிவிடும் - அவற்றை இங்கு நான் பயன்படுத்தினால் –
ஏனென்றால் - முகத்தில் அறைந்து, மனசாட்சியை உலுக்குகின்ற அகரமுதல்வனது :
தொப்புள்கொடிகள்
இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை 
நிறுத்திவிட்டு அனைவரும் 
படுகொலைகள் குறித்து கலைப்படுவோம் 
கோணஸ்வரி கிருசாந்தினி இசைப்பிரியா
குருதி படிந்து கிடக்கும் வாய்ச் சொற்களில் 
படுகொலைக்கான தடயங்கள் அமர்ந்திருக்கிறது 
ஈழம் குறித்து கலந்துரையாடல் செய்வோம் 
பாலச்சந்திரனுக்கு எழுதும் கவிதைகளில் 
மூளை கலங்கும் அளவிற்கு 
எதுகை மோனை 
கைதட்டல் 
கண்ணீர் சிந்தல் 
விபரீத மவுனத்தில் வீச்சற்ற நடையில் 
தேசம் குருதி ஆக 
பிணங்களாய் மிதக்கும் ஆற்றிலிருந்து 
காயப்பட்ட கால்களையும் 
கவிதைகளையும் 
கொண்டுவர 
அவமானம் நிறைந்த முங்களோடு 
தமிழ்நாடு எங்களை வரவேற்கிறது. 
எனும் கவிதையைக் குற்றவுணர்வின்றிக் கடக்க முடிவது சுலபமல்ல.
இத்தொகுப்பை, முழுவதும் ஒரு ஏதிலியின் துயரமும், மனஉணர்வும், மீண்டெடுதலும், சுய இரக்கமற்ற போர்க் குணமும், 'பதாகைப் புரட்சியளர் களைப்' பலி கேட்கின்ற கள வீரர்களின் பக்கம் நிற்கின்ற நேர்மையும் வியாபித்திருக்க, 
"நாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம்
நாங்கள் மரணத்தோடு இருக்கிறோம்
நாங்கள் தாகத்தோடு இருக்கிறோம்" 
எனும் நம் ஈழத்துச் சகோதரனின் குரலை, ஒரு கவித்துவ ரசானுபவத்துடனோ, விமர்சன அளவுகோல்களுடனோ, எதிர்கொண்டு அதன் கவிதையியல் கூறுகள் குறித்து விதந்தோ, இகழ்ந்தோ அணுக முடியாது.
இவை எந்தக் கைகளினால் எழுதப் பட்டிருக்கின்றன என்பது எனக்கு மிக முக்கியம் – 
"ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க
அகதியெனும் பெயரோடு தொப்புள் கொடி மண்ணில்
போலிஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற 
எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை" 
எனும் வதைமுகாம்களின் பூமியிலிருந்து, பெரும் போரவலத்திற்குப் பின்பு வந்த ஒரு கவிஞனின் விரல்களால் இது எழுதப்பட்டது எனும்போது - அறிவைத் தூக்கி எறிந்துவிட்டு, உணர்ச்சியைக் கட்டியணைத்து மட்டுமே இக்கவிதைகளை நான் உள்வாங்குவேன். அவ்வகையில் நான் ஒரு உணர்ச்சி வசப்படுகின்ற பாமரத்தி தான்! 
உலகிலேயே தான் பேசுகின்ற தாய்மொழிக்காக அழிக்கப்பட்ட ஓரினம், நமது ஈழத் தமிழினம் தான். மிகக் கூர்மையாக இத் துயரை, 
" கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி 
ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன் 
இப்படியாக 
வேறு மொழி பேசுகின்ற அனைவரும் 
மொழியின் பெயரால் அழைக்கப்பட 
நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம்"
என அகரமுதல்வன் சொல்வது உயிர் வலிதருகின்ற கவிதை அல்லவா? 
இங்கு இலக்கியச் சூழலில் பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. கவிதை என்பது ஒரு பொதுக்கருத்தைப் பேசினால், அதன் கலைத் தன்மையை இழந்து, அது பிரச்சாரமாகிவிடுகின்றது என்பதே அது. ஈழ அவலம் குறித்த உணர்வாளர்கள், படைப்பாளிகள் பலரும் சந்திக்க நேர்கின்ற கருத்து மேற்சொன்னது.
பின்காலனிய நாடுகளுக்கு இருக்கின்ற பெரிய சுமையை ஊடறுத்து, Franz Fannan கூறியது போல, தனது சொந்த பண்பாட்டை மீள் கண்டுபிடிப்பிற்கு உள்ளாக வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருந்தது. தமிழ்க்கவிதைக்கும் அதுமிகப் பெரிய கடப்பாடு. ஆனால் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலக் கவிதைகளுக்கு இச்சுமை இல்லாத சுதந்திரத்தினால் பாலியல் சிக்கல்கள், தனிமனித உணர்வுகள், புராணிக மீட்டுறுவாக்கங்கள், இயற்கை, ஆன்மீகம், தொழில் நுட்ப முறைக்கேற்ப பரிசோதனை முயற்சிகள் எனப் பல தளங்களில் அவை பயணிக்கின்றன. 
"மழைகள் பற்றி 
வண்ணத்துப் பூச்சி பற்றி 
பூஞ்சோலைகள் பற்றி 
குற்றவுணர்வற்றுத் திரியும் 
ஜாலச் சொற்கூடுகள் 
மனச்சுமையற்று கவிதைகளாகக்பபடுகிறது" 
என்கின்ற ஒரு ஈழக் கவிஞனுக்கு இச்சுதந்திரம் சாத்தியமில்லை. 
படுகொலைக் களத்தில் பூர்வகுடிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு மரித்த அவலத்தின் குருதியற்று அவனது ஒரு சொல்லும் பிறப்பதில்லை. இங்கிருக்கும் சில விமர்சக அறிவு ஜீவிகள் அவற்றை உணர்வெழுச்சிக் கவிதைகள் - Verse Donnes என்று முத்திரையிடலாம். ஆனால் கவிதை ஒருபோதும் தனது பிரதேசத் தன்மையைக் காவு கொடுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை. 
அதுபோலவே, கவிதையினுடைய இலக்கியத் தகுதிக்குச் சமூகப் பிரச்சனைய எடுத்துப் பேசுவதும் ஊறு விளைவிக்கிறது என்றொரு போலி வாதமும் இங்குண்டு. அவர்கள் ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்கக் கவிதைகளை எல்லாம் கொண்டாடுவார்கள் - அவை முன்வைக்கின்ற சமூகப் பிரச்சனைக்காக. ஆனால் ஈழம் என்று வருகையில் - அவை வெறும் புலம்பல் அல்லது போர் பற்றிய பதிவுகளே என்று ஒதுக்கிவிடும் போக்கும் இங்குண்டுதானே. வேடிக்கையைப் பாருங்கள் - அகம், புறம் என்கிற மரபிலே வந்தவர்கள் நாம். பின்னர் அகத்திலே மட்டுமே நின்றுவிட்டு, புறத்திற்குப் போகாமல், அப்படி முழுவதுமாகத் தன் இனம் குறித்துச் சினமும், துயரும், அவநம்பிக்கையும், அறமும், உறுதி எடுத்தலுமென ஒரு ஈழக் கவிஞன் எழுதினால், அது பிரச்சாரத் தொனி - எனவே இலக்கியத் தகுதியற்றது என்று பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான் - தன்னுடைய ஊரை, இனத்தை, மொழியை, குலக்குழுவை முதன்மைப் படுத்தி, மொழிபெயர்க்கவியலாத அளவிற்குப் பிரதேசத் தன்மையோடு கூடிய ஒரு Tamil Sensibility இல் எழுதப்படுவது எவற்றிற்கும் குறைந்ததன்று.
"உன் கையை ஒரு தலையணையாகப் பயன்படுத்து 
வானம் தன் மேகங்களைப் பயண்படுத்துகிறது
பூமி தன் மண்ணாங்கட்டிகளை.
வீழும் மரம் 
தன் இலைகளை.
அது ஒன்றுதான் வழி. 
தொலைவின்றிப் பாடலைக் கேட்பதற்கு - 
காதில் நுழையாத அந்தப் பாடல் 
காரணம் அது காதிலேயே இருக்கிறது. 
என்றுமே திருப்பிச் சொல்லப்படதா ஒரே பாடல்.
ஒவ்வொருக்கும் தேவைப்படுகிறது 
மொழிபெயர்க்கவியலா ஒரு பாடல்" 
-அகரமுதல்வனின் இந்த அத்தனை கவிதைகளும் அப்படி மொழி பெயர்க்கவியலா பாடல்கள்தான், துயரமும், எழுச்சியும்தான். இன்னும் சொல்லப்போனால், அவை பிரதேசத்தன்மையையும் தாண்டி, ஆஷ்விட்சின் வதை முகாைமையும், 1915இலும், 1922இலும் நடந்த ஆர்மீனியப் படுகொலைகளையும், பாலஸ்தீனத்தையும் நம்முன் நிறுத்துகின்றன. 
கடவுளைக் கேள்வி கேட்கின்ற கவிதைகளும், போர் என்பது காதலையும் கொல்லும், சானு என்றொரு புலியின் குழந்தை என நான் கடக்கவியலாத பல கவிதைகள் இதில் உண்டு என்றாலும், மிக முக்கியமான கவிதையாக நான் குறிப்பிட விரும்புவது தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே எனும் கவிதையைத்தான். தமிழ்க் கவிதைப் பரப்பிலே குறிப்பிட்டுக் கொண்டாடப் படவேண்டிய மிகச்சிறந்த அரசியல் கவிதை இது. 'உயிர்த்தெழுதல்' எனும் நம்பிக்கையை முன்வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வோருக்கான, மிக நியாயமான தோலுரித்தலை இக்கவிதையின் மூலம் திடமாகத், தைரியமாகச் சொல்லியிருக்கிறார் தம்பி. நாம் மதித்துப் போற்றுகின்ற கொண்டாடுகின்ற தியாகங்களைச், அவற்றிற்குச் சொந்தமானவர்களை உரிய இடத்தில் கெளரவப் படுத்துவதோடு, நடப்பு நிதர்சனத்தைத், தம்மினத்தாருக்குச் சுட்டிக் காட்டி, 
உயிர்த்தெழ முடியாதபடிக்கு 
உடல் துறைத்துக் கிழிபட்டு 
சிலுவையொன்றில் அறையப்பட்டான் 
மெக்கான இயேசு. 
வன்முறைக்குட்பட்ட மானிடக் கையின்
பழிவாங்கலை
அல்லது புதிய வீரியத்தை 
கிளர்ச்சியைப் 
புரட்சியை
இல்லாதொழிக்கும் புதிய வியாதி உயிர்தெழல்.
இனியும் வெறும் கைகளோடு பயணிப்போம். 
இதுவரைக்கும் இருந்ததையும் இழந்து. 
என்று சொல்கின்ற தம்பிக்கு ஒரு அன்பான புறங்கை முத்தம். 
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய, 
கருப்பு இயேசுநாதர் எனும் பின்வரும் அரசியல் கவிதைக்கு நிகரானது அகரமுதல்வனது மேற்சொன்ன கவிதை. 
"இயேசுவானவர்
ஒரு கருப்பராகத் திரும்பி வருவாரானால் 
அது நல்லதல்ல. 
அவர் சென்று பிராத்தனை செய்யமுடியாத
தேவாலங்கள் 
இங்கு ஏராளமாக உள்ளன. 
எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும் 
நீக்ரோக்களுக்கு 
அங்கே வாயில்கள் மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரிதே தவிர 
சமயம் அல்ல.
ஆனால் - இதை மட்டும் உறுதியாகச் சொல்லாம்.
இயேசுவே நீர் 
நிச்சயமாக மீண்டும் 
சிலுவையில் அறையப்படுவீர்"
நமக்கான இயேசு திரும்பி வருவாரென்றால் நமது எதிரிகள் அழிக்கப்பட்டு நாம் சுதந்திரத்தின் சுடரை ஏற்றுவோமென்பதே நமது நம்பிக்கை என்றாலும், நிசர்சனத்தைச் சுட்டுகின்ற அகரமுதல்வனது இக்கவிதை இச்சூழலில் அதிமுக்கியமானது. 
பிற ஈழத்துக் கவிஞழ்களிடமிருந்து மாறுபடுகின்ற ஒரு அசலான மொழி, மிக முக்கியமாகக், கண்ணீர் தவிர்த்து, பெரும் வெடிகுண்டு வேண்டும் என்கின்ற உறுதி, தனது கவிதை மொழியின் உள்ளடக்கம் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாத இலக்கியத்தைப் பேச வேண்டுமென்கிற தெளிவு,
"அனைத்துக் கடவுளரும் திருவோட்டோடு நிற்க
ஆயிரம் கடவுளரை - 
விக்கலெடுத்த அதே நாய் வாந்தி எடுத்தது"
எனும் துணிச்சானதொரு, காத்திர நடை - இவை தம்பி அரகமுதல்வனைத் தனித்துக் காண்பிக்கின்றன. 
உருசியாவிலுள்ள காகசிய மலைத்தொடர்களில் ஓர் உச்சியில் அமைந்துள்ள மலைநாடுதான் தாகெசுதான். இம்மலைநாட்டின் பாவலன் இரசூல் கீ மசுதோவு, தனது 12ம் வயதில் கவிதை எழுதியவர். (அகரமுதல்வனது வயது 22) அவரது பாடல்களைப் பற்றி அவரது தந்தை "உனது பாடல்களில் ஒரே ஒரு சுருட்டைப் பற்றவைக்கும் அளவிற்குத்தான் நெருப்பு இருக்கிறது" என்றாராம்.
பின்னாளில், தாகசுதானில் நிலநடுக்கம் கண்ட நாட்களில் கூட இரசூலின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூட்டம் திரண்டதாம். 
அத்தகைய சக்தி இக்கவிதைகளுக்கும் உண்டு - சோர்வுற்று, சுயநல தமிழக அரசியல் மாயைகளில் சிக்கி அழல்வுற்ற, நம்பிக்கையற்றுக், கையறு நிலையில் இருக்கின்ற ஈழத்துச், சகோதர சகோதரர்களுக்கு, பெருந்துயர் முள்ளிவாய்க்காகலுக்குப் பிறகான பிடிமானத்தை, உத்வேகத்தை இவை தரும். வேடிக்கை பார்த்த என் போன்ற தமிழச்சிகளுக்கு குற்றவுணர்ச்சியையும், தீராத அவமானத்தையும், (கூடவே கொஞ்சம் சொரணையும்) தருகின்ற இவற்றிற்கும், எழுதிய தம்பிக்கும் – 
ஒரு வார்த்தை - 
இசைப்பிரியாவை, பாலச்சந்திரனைப் 
பார்த்தபிறகு, 
"எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை"
          

திரு - விவாக - சதிர் :
அரவிந்த் அப்பாதுரை

புத்தக வெளியீட்டு விழா

            மனித ஆன்மாக்களுக்கான திறவுகோல்களைக் கொண்டிருப்பவை இலக்கியம் என்றால், அவற்றின் வகைமைகளில் ‘புதினம்’ எனப்படுகின்ற நாவல் மிக முக்கியமானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், உப்பளப்பணி செய்து வந்தனர் ஏழை நாடோடி இத்தாலியத் தொழிலாளர்கள் பலர். ஆகஸ்ட் 16, 1893 அன்று அந்த உப்பளங்களில் இத்தாலியர்கள் மூன்று பிரெஞ்சுத் தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதாகப் புரளி கிளம்பியது. பெரும்பாலான இத்தாலியக் குடியேறிகள் தாக்கப்பட்டனர். அப்பகுதியின் பெயர் அய்குவே-மாட்டெஸ். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டூர் தெ கான்ஸ்டன்ஸில் (Tour de constana) இத்தாலியருக்குப் புகலிடம் வழங்கப்பட்டது.
1890இல் வெளிவந்த மோரிஸ் பாரே (Maurice Barres) எழுதிய லா ஜார்தான் தெ பெரனிஸ் (Le Jardin de Berenice) என்னும் நாவல் தற்செயலாக அய்குவெஸ் - மார்டெஸைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அது டூர் தெ கான்ஸ்டன்ஸை ஒரு புதிய வகைத் தேசியத்தின் குறியீடாகப் பயன்படுத்தியது. பிரான்சின் குடிமக்களாக உள்ள தனிநபர்களின் (ஆண்களின்) பகுத்தறிவு சார்ந்த நலன்களின் வெளிப்பாடே தேசம் என்னும் தாராளவாத, ஜனநாயகக் கருத்துகளை நிராகரித்த பெர், மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உணர்விலிருந்து எழுவதே தேசம் எனக் கருதினார். இத்தகைய கருத்தை வடிவமைத்தவை மனிதர்களின் கூட்டு நனவலி மனம் (Human Collective Unconscious) என்று அன்று பொதுவாகப் பேசப்பட்டு வந்த உளவியல் கருத்துகளும் இலக்கியக் குறியீட்டியல் இயக்கமும் கருதின. மேலும் மனிதர்களின் நடத்தை முறைகளுக்கு அடிப்படையாக மறைந்து நிற்கும் தொன்மங்களைக் கலையினால் நெருங்கிக் காணவியலும் எனக் கருதின. தேசம் என்பது வரலாறு, மரபு, தேசத்தின் மண்ணுடன் பிரெஞ்சு உழவர் வர்க்கம் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றினால் உருவாக்கப்படுவதாகும் என்று பாரே கருதினார். லெ ஜார்தான் தெ பெரனிஸின் கதாநாயகனால் டூர் தெ கான்ஸ்டஸின் உச்சியிலிருந்து பரந்து விரிந்த பிரெஞ்சு நாட்டுப்புறத்தைப் பார்க்க முடிகின்றது. அவன் பிரெஞ்சு நாட்டின் கடந்துபோன மத்திய காலத்துடன் உறவாடுகிறான். ஒரு தனிநபர் என்னு வகையில் தான் ‘இந்த பரந்த நாட்டில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே’ என்பதை உணர்கின்றான். பாரேயின் நாயகன் மண்ணின் மைந்தனாக பிரெஞ்சுத் தேசத்துடன் ஒன்றிவிடுகிறான். புலம் பெயர்ந்து இங்கு குடியேறியவனால் அப்படி ஒருபோதும் இந்த தேசத்துடன் ஒன்றிவிட முடியாது.
அரவிந்த் அப்பாத்துரையின் நாயகன் மதன், நாயகி சகுந்தலா ஆகியோரும் அப்படித்தான். பிரான்ஸிற்கும், பாண்டிச்சேரிக்குமான பொது மனிதர்கள் அவர்கள். இரண்டிற்கும் ஊடோட்டமான வாழ்வு அவர்களது. "கல்வி என்றால், பள்ளிக்கூடங்களில் புகட்டப்படும் பாடத்தைப் பற்றி நான் இங்கு எதையும் சொல்ல வரவில்லை. வாழ்க்கையை அணுகும் முறை. ஆம், வாழ்வை அணுகும் முறையை கற்பிப்பதுதான் ‘கல்வி’ என்ற சொல்லுக்கு தகுந்த விளக்கம். சகுந்தலாவின் கதையை எடுத்துக் கொள்வோம்" எனத் தனது புதினத்தைத் தொடங்குகிறார் அரவிந்த் அப்பாத்துரை. 
"இத்தனை பரம ஏழைகள். இத்தனை கோடீஸ்வரர்கள். ஒரே வீட்டில் ஒருவனுக்கு ஜயாயிரம் சம்பளம் அதே வீட்டில் மற்றவனுக்கு ஒரு லட்சம் சம்பளம். அதிகரித்துக் கொண்டே போகும் ஏற்றத்தாழ்வுகள். இந்த காலத்தில் வாழும் நம்மை நாட்டுமிராண்டிகள் என்று அழைக்கலாமா- 
காட்டில் வாழ்பவன் காட்டுமிரண்டி இவ்வாறான சமூக அநீதிகளை அடையாளம் காணாமலேயே வாழ்பவன் நாட்டுமிராண்டியா?. காட்டுமிராண்டி, நாட்டுமிராண்டி காட்டுமிராண்டி... நாட்டுமிராண்டி" இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் தனது கதை மாந்தர்களை அறிமுகம் செய்கிறார் அரவிந்த். (கதைச் சுருக்கம் இங்கு)
இரும்புப்படை அணி என்ற யூதர்களுக்கு எதிரான பாசிச படைக்குத் தலைமை தாங்கிய - ருமேனியா, ருமேனியர்களுக்கே சொந்தம் என்று அறைகூவல் விடுத்த கோர்னேலியூ காட்ரொனின் (Cornelian Codreann) தொண்டர்களில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் ஒருமுறை - "வெகுசனத்திற்கு எதிரான மனிதனோ (பழமைவாத சர்வாதிகாரி) அல்லது ஒரு மனிதனுக்கு எதிரான வெகுசனமோ (நம்காலத்திய சீரழந்த ஜனநாயகம்) இல்லாமல், வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதன் என்று படைப்பாக்கத்தன்மை வரலாற்றில் கட்டாயம் இருக்க வேண்டும்" அப்பாத்துரையின் நாயகர்கள் - மதன், சரவணன் - நாயகி சகுந்தலா மூவருமே வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதர்கள்தான். 
"எல்லாம் ஒன்றுதான், காதலன், இஷ்டன், பித்தன் என்று வார்த்தைகள்தான் மாறுகின்றன, உணர்வுகள் ஒன்றுதான்" - எனும் நாயகி சகுந்தலாவும் வெகுசனங்கள் கண்டெடுத்த மனுஷிதான்.  
"உன் பேரு சரவணன்றது போல, என் பேரு பறவை"- எனும் உணவு விடுதிக் கிளியும், வேடன் கண்டெடுத்த வெகுசனப் பிறவிதான். கதையில் ஓரிடத்தில் -"மங்களுர் எல்லையிலிருந்து, கார் ஓடிய வழியெல்லாம், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கற்களிலெல்லாம் யாரோ "ஜானகி" "ஜானகி" என்று எழுதிவைத்திருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒருகல் - இரண்டுகல் - மூன்று நான்கு ஐந்து - பத்து - இருவது... போகும் வழியில் நின்ற தூரம் மைல் கற்களின் மீதெல்லாம் யாரோ இப்படி எழுதியிருக்கின்றனர். 
யாராக இருக்கும்? 
நிச்சயமாக ஏதோ ஒரு காதல் பைத்தியத்தின் கைங்கரியமாகத்தான் அது இருக்க வேண்டும். கர்நாடகாவின் கவர்னர் வீதி வலம் வரும்போது இதை கவனித்தார். என் வார்த்தை கட்டளையாகட்டும். ஜானகி என்று பெயர் அழிக்கப்படட்டும் என்றார். பொது-இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் காவல் படையின் தலைவனுக்கு ஆணையிட்டார். அவனோ வேறு வாதங்களை முன் வைத்தான் – 
ஜயோ பாவம். அவனுடைய துயரம் எவ்வளவு கொடுமையானதாக இருக்கும். ஆண்டவனே, அவன் காப்பாற்ற பட வேண்டும். அவன் காதல் வாழ வேண்டும். அவன் ஆன்மா சாந்தமடைய வேண்டும். சந்தோஷம் அவனுள் பிரவேசித்து அவனுடைய வாழ்க்கையை அது அர்த்தமுள்ளதாகவும், அற்புதமானதாகவும் மாற்ற வேண்டும்"" என்றான். அவனும் வெகுசனம் கண்டெடுத்த மனிதன்தான்.
எழுதுபவனைப் பிரதியாளன் (ஸ்கிரிப்டர்) என்று அழைக்கிறார் பின்நவீனத்துவ முன்னோடி பார்த். இவர் மாபெரும் இலக்கியவாதி - அவரது படைப்புகள்யாவும் விழுமியங்களின் கருவூலம் போன்ற கருத்துகள் இப்போது தகர்ந்துவிட்டன என்கிறார் பார்த். எழுத்தாளன் இப்போது மேடையில் நடுநாயகமாக இல்லை. அவனை எப்படி அழைப்பது? எழுத்தாளன்? அறிவுஜீவி? பிரதியாளன்? இலக்கிய மேதைமை என்பது இப்போது மறைந்து வருகிறது. அப்பாத்துரையையும் எப்படி அழைக்க - நாவலாசிரியர்? பிரதியாளர்? எழுத்தாளர்?
பார்த் தனது சுயசரிதையை ஒரு நூலாக எழுதினார். அதன் தலைப்பு பார்த்தைப் பற்றி பார்த். அது ஒரு வித்தியாசமான முயற்சி. அவரை அவரே விலகி நின்று பார்த்து எழுதும் நூதனத் தன்மை அதில் இருந்தது. வாழ்க்கையை எழுதும்போது, அது ஒரு புனைவாக மாற்றம் கொள்கிறது என்பதை அதில் நிறுவி இருந்தார்.
அப்பாத்துரையின் ‘திரு விவாக சதிரும்’ ஒரு உண்மை வாழ்க்கையை புனைவாக மாற்றுருவாக்கிப் பகிர்ந்து கொள்கிறது. இடையிடையே தன் சரிதத்தையும் அப்பாத்துரை பகிரத் தருகிறார் - விலகி நின்றும், ஒட்டியும் - சமூகத்தின் முகத்தோடு முகம் உரசியும், கிழித்துப் பார்த்து, பகுத்தறிய முயன்று தோற்றும், அவற்றை ஆண், பெண், அவர்தம் பண்பாட்டுத், தேசியக் கற்பிதங்களுடன் புகட்டப்பற்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார். சமயங்களில் ‘no comments’ என மௌனிக்கிறார்.
‘எனக்குச் சுயசரிதை இல்லை; அதை நான் எழுத ஆரம்பித்த போது, என்னையே நான் பார்த்துக்கொள்ள முடியவில்லை’ என்று எழுதும் பார்த், எல்லாமே எழுத்தின் மூலம் நிகழ்கின்றன என்றும் சொல்கிறார். ‘நான் என்பது எனக்கு நிகழும் கதையே’ என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் பார்த். அகநிலை என்பது மொழியின் விளைவே ஆகும் என்பதும் அவரது கூற்றே. அவரது சுயசரிதை நூலானது துண்டாடப்பட்ட விவரணைகளால் தொகுக்கப்பட்டது. பார்த் என்பவர் விமர்சகர் மட்டுமல்ல; அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட என்பதை இந்தச் சுயசரிதை நூல் உலகத்துக்குக் காட்டியது. ‘ஆந்திரே ழீத்தின் நாட்குறிப்புகளில், எழுத்தாளனுக்கு எழுத்தின் மீது இருக்க வேண்டிய பிணைப்பையும், அதன் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்பையும் காண முடியும். அதை எனது எழுத்துக்களில் உயிர்ப்பித்திருக்கிறேன்’ என்கிறார் பார்த் - திரு விவாக சதிர் சுயசரிதை அல்ல. பிறரது சரிதையின் ஊடாக தனது சுயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புதினம். இதில் அரவிந்தின் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்புகளை உணரலாம்.
கீழ்க்காணும் ஒரு சம்பவம் - இப்புதினத்தில் வருகிறது. 	
"கடலில், மீனவர்களின் வலையில் இரண்டு கடல் கன்னிகள் சிக்கயிதாகவும்,அவர்களை சுமந்து கொண்டு ஒரு மீன்-பிடி படகு கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தி அறிவித்தது. தொலைக்காட்சிகளும் இந்த வதந்தியை, செய்தி நேரத்தில், "இப்படியாக ஒரு வதந்தி பரவுகிறது" என்ற கருத்தோட அறிவித்தன. ஊரில் ஒரே பரபரப்பு, ஆர்வம், ஆச்சம்...
கடல்-கன்னிகள் என்பது கட்டுகதை என்றால், ஆகாயமும், பூமியும் கூட கட்டுகதைகள் தான், என்று ஒரு நாவலாசிரியன் சொன்னான். மனித இரத்தமா, இல்லை மீன் இரத்தமா என்பதை முதலில் அறிய வேண்டும், என்றான் மிருகவியல்காரன். 
ஆம், அது - அதி முக்கியம். தலை வந்துவிட்ட அந்த ஜீவன்களுக்குள் மனித இரத்தம் ஓடினால் அவர்களுக்கு மனிதர்களுக்காக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் அவர்களுக்கும் செல்லுபடியாகும். அவர்களை சாடுவதோ, அடிப்பதோ, உதைப்பதோ, கொல்லுவதோ, சட்டபடி குற்றமாகிவிடும். ஆனால் அவர்கள் உடலில் மீன் இரத்தம் ஓடினால், அவர்களை ஏலத்தில் விற்று அவர்களை வாங்குபவன் பொரித்தோ இல்லை குழம்பு வைத்தோ தானும் உண்டு தன் உற்றார் - உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் கொடுத்து சுவைக்க செய்து மகிழலாம், என்றார் பாண்டிச்சேரியின் தலையாய - நீதிபதி". தொடர்ந்து மக்கள் கடல்கன்னிகளிடம் உரையாடுகிறார்கள். 
கடல் கன்னிகளின் கூற்றைப் பாருங்கள் : 
"பொதுவாக சொல்ல போனால் எங்கள் கலாச்சாரம், தனிமனித சுதந்திரத்தை பேணி - போற்றும் இயல்புடையது. அங்கு குடிக்கலாம் - புகைக்கலாம் - சுசிக்கலாம் - சாமி கும்பிடலாம். யாரும் உன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள். இந்த பாழாய்போன இந்திய நகரங்களைப் போல இல்லை. நோ-நோ-நோ, இல்லவே இல்லை".
இது நாவலாசிரியரினின் அக உலகம் பற்றிய பதிவுதான். புறஉலகம் இப்படியாக இருக்க வேண்டுமென்கிற அவரது அக உலகம் - அந்த ஏக்கத்தின் ஊடே அதன் சாத்தியமின்மை, நிறுவனங்களின் சுமைகள் எனப் பிரதிபலிப்புகளில், விவரணனைகளில் வெளிப்படுவது ஆசிரியன்தான் - அரவிந்த் அப்பாத்துரையேதான். 
பிரெஞ்சு எழுத்தாளரான ஜார்ஜ் பதாய்லை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், தத்துவஞானி, மறை பொருள்வாதி, அதில் அவர் யார்? இதற்கான பதிலைச் சொல்வது கடினம். பதாய்ல் பல பிரதிகளை எழுதினார். அல்லது தொடர்ந்து ஒரே பிரதியை எழுதிக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அரவிந்தும் தொடர்ந்து ஒரே பிரதியை வெவ்வேறு கேள்விகளோடு - குறிப்பாக தனது புதினங்களில் எழுதுகிறாரோ எனத் தோன்றுகிறது. 
உதாரணத்திற்கு - விடுதலைப் புலிகள் பற்றிய அவரது பதிவு. 
"நீங்கள் என்ன சாதி அக்கா? என்று கயல் வினவினாள். 
எனக்கு தெரியாது, என்றாள் சகுந்தலா.
நீங்கள் தமிழ்தானே! 
ஆமாம் 
சாதி தெரியாமல் எப்படி வாழ்கின்றீர்கள். 
ஒரு முறை என் அம்மாவிடம் கேட்டேன். அவளுக்கு சரியாக தெரியாது என்று சொல்லிவிட்டாள். நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, பல வருடங்களாக வெளிநாடுகளுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நாங்கள் அவ்வளவாக ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. 
எங்கள் போராட்டம் தோற்றதே இந்த சாதி பிரச்சனையால் தானக்கா. 
அப்படியா?
விடுதலைப் புலி இயக்கத்தில் உள்ள பெருவாரியான தளபதிகளும், கேப்டன்களும் கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள். தமிழ் போராளிகள் எந்த அளவுக்கு கண்ணியமாக போராடினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவங்களுக்கு சேர வேண்டிய சன்மானம் கிடைத்ததே இல்லை. அதைப் போலவே பிராமணர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்த இடமும் இல்லை. அதனால்தான், அந்த இயக்கம் அகோர முடிவுக்கு வந்தது. நானே எதிர்பார்த்ததுதான். இருப்பினும் என் தமிழ் மனம் இன்னும் விம்மி-விம்மி அழுது கொண்டே இருக்கிறது. இனி இப்படியான போராட்டம் நடந்தால் எல்லா சாதியினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும். 
நீ சொல்வது சரியே, என்றாள் சகுந்தலா". 
திரு. பூர்விக. சதிர் - எனும் அவரது நாவலிலும் புலிகள் மீதான விமர்சனம் இருந்தது. இது தொடர்பான எனது மாறுபட்ட கருத்தினை அந்த உரையிலும் நான் பதிவு செய்தேன். இந்த விமர்சனத்தை முன்வைக்கின்ற உரிமை அவருக்கு உள்ள அதே அளவு அதனை மறுக்கின்ற Space எனக்குள்ளது என நான் நம்புகின்றேன். அறிவுஜீவிகளால் பெரும்பான்மையாக முன்வைக்கப்படுகின்ற இவ்விவாதத்திற்குரிய தளம் இதுவல்ல என்றாலும் ஒரு பிரதியையே வெவ்வேறு விதமாக அரவிந்த எழுதிப் பார்க்கிறாரோ எனும் உணர்வை இக்கருத்து எனக்குள் உருவாக்கியது என்பதற்காக இதனை இங்கு சுட்டுகிறேன். 
ஸாலர்ஸ் எழுதிய எண்கள் என்கிற நாவல் வித்தியசாமானது. அதை நாவலற்ற நாவல் என்றோ, எதிர் நாவல் ஆன்ட்டி-நாவல் என்றோ, பிந்தைய நாவல் (போஸ்ட்-நாவல்) என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பார்கள். திரு-விவாக-சதிரையும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். 
"எண்கள் நாவலில் இன்னொரு அம்சம் அது எழுதப்பட்ட தன்மை. பொதுவாக, புனைவுகள் எல்லாமே இறந்த கால விவரணையில்தான் எழுதப்படும். ‘அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது’. என்கிற ரீதியில் இருக்கும். எண்கள் நாவல் அவ்வாறு எழுதப்படவில்லை. அந்த நாவல் முழுக்க நிகழ்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது அந்த நாவலில் ஒரு சிறப்பு அம்சம். இதனால் அந்தப் பிரதி புனைவுக்கு ஒரு நிகழ்காலத் தன்மையை அளிக்கிறது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். ஒரு எழுத்துப் பிரதிக்குக் காலம் சார்ந்த புதிய பரிமாணத்தை இது தருகிறது. அர்த்தம் என்பது நிகழ்காலத்தன்மையுடன் இருக்கிறது" எனப் படித்திருக்கிறேன். 
திரு-விவாக-சதிருக்கும் ஒரு நிகழ்காலத்தன்மை இருக்கிறது. அது மிகச் சமீபத்தில் இருவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாவலாசிரியரே அதற்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறார். தன் முதல் காதலனைக் கணவனது மறைவிற்குப் பின், 43 ஆவது வயதில் சகுந்தலா, தனது வயது வந்த இரு குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்கிறாள். நிறைவான மண வாழ்க்கையின் பின்பு, தனது முதல் காதலைப் பூர்த்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எத்தனை பேரதிர்ஷ்டம்? இதன் நிகழ்காலத்தன்மை, உண்மையில், அண்மையில் பாரீசில் நடந்த இச்சம்பவம், அதன் அழகு, வாழ்வின் மீதான பிடிப்பு - இதுவே இந்தப் புதினத்தின் பலம். மிக நேர்மையாக, மிகைகளற்று இதனைக் கதைக்களமாக்கியிருக்கின்ற அரவிந்திற்கு எனது பாராட்டுக்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும்.
பிரெஞ்சு மொழியில் Signponge என்கிற சொல்லும் sign eponge என்கிற சொல்லும் ஒரே உச்சரிப்பில் ஒலித்த போதும் இரண்டு விதமான பொருள் கொண்டவை. Signponge என்றால் பாஞ்ச் என்பவரின் கையொப்பம் என்று பொருள்படும். Sign eponge என்றால் கரும்பலகையில் எழுதியதை அழிக்கும் ஸ்பாஞ்ச் என்பது பொருள். இதில் ஒரே பெயர்ச்சொல் ஏக காலத்தில் சரியானதாகவும் (பிராப்பர்) அல்லாததாகவும் (இம்பிராப்பர்) தோற்றம் தருகிறது. இதே தன்மையுடன்தான் தத்துவமும் இலக்கியமும் இயங்குகின்றன என்பார்கள்.
அரவிந்த் எழுதுகிறார் - "கஸ்தூரி என்ற பேராசிரியர் சகுந்தலாவுக்கு பாடம் கற்பித்தார். எல்லோரும் அவரை இடது-சாரி அரசியல் கொள்கைகளை கைப்பற்றுபவர் என்று சொல்வர். அவருடைய முதுநிலை ஆராய்ச்சியின் தலைப்பே, இல்லத்தில் பெண்களின் - சுதந்திர போராட்டம், என்பதாக இருந்தது.
இந்தியாவை பொறுத்தவரையில், ஆண்கள் - பெண்கள். குழந்தைகள் - சிறுவர்கள் - சிறுமிகள் - முதியவர்கள் என் யாரை எடுத்தாலும், அனைவருமே ஒருவிதமான சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும். அதில் ஆண்களின் சிறைச்சாலையில், புகைபிடிக்க அனுமதி உண்டு அவர்கள் அடைக்கப்பட்ட அறையின் விஸ்தீரணம் பதினைந்து அடி-ஸ்கொயர் என்றால், பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் வரியின் விஸ்தீரணம் இரண்டு-அடி-ஸ்கொயராகக் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். அதில் கால் நீட்டி படுக்ககூட முடியாது. நிம்மதியாக உட்கார்ந்து பெருமூச்சு விட முடியாது நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். இடுப்பில் பிள்ளையை சுமந்து கொண்டு நிற்க வேண்டும். கனவிலும் பயத்தை சுமந்து கொண்டே நிற்க வேண்டும். வாய்திறந்து, இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன், என்று சொல்வது கூட சில சமயங்களில் மிகக் கடினம். 
பெண்நிலை வாதம், தலித்தியம், சமத்துவ-தத்துவங்கள் என்பவையெல்லாம் தமிழ் சமுதாயத்தில் என்ன தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ளன? என்ற கேள்விக்கு பதில் தேட என்று கஸ்தூரி அம்மையார், சகுந்தலா என்ற மாணவ-திருவாட்டிக்கு கட்டளை இட்டார்". 
இலக்கியம் புதினத்தின் வடிவில் ஒரு பெண், சகுந்தலா எனும் விதவை, தனது பிள்ளைகளின் புரிதலோடு, ஒப்புதலோடு முதல் காதலனைப் பூரண மகிழ்வுடன் மறுமணம் செய்வதை அழகாகப் பகிர்கின்றது. ஆனால் தத்துவமோ நடப்புநிலை பெரும்பான்மையான பெண்களுக்கு அவ்வாறில்லை என்பதை முன்னிறுத்தி விசாரணைக்கு எத்தித் தள்ளுகிறது. ஒரே சமயத்தில் சரியானதாகவும், சரியற்றதாகவும் தோன்றுகின்ற அல்லது தோன்ற வைக்கப்படுகின்ற வாதங்கள், சமூகக் கட்டமைப்புக்கள் குறித்துத் தத்துவம் ஆராய்கின்றதென்றால், இலக்கியம் அவற்றை ஆதுரத்துடன் அணுகுகின்றது - புரிந்து கொள்ளமுயல்கிறது. திரு-விவாக-சதிரில் சகுந்தலாவின் வாழ்க்கை மூலம் அரவிந்த் அதனைத் தான் செய்திருக்கிறார். 
சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி) பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்) என்கிறார் சாக்ரட்டீஸ். நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையல் காணப்படுகிறது என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். 
அந்த உரையாடலில் சாக்ரட்டீஸ் உண்மை (ட்ரூத்) என்பது பற்றியும் பேசுகிறார். சாக்ரட்டீஸ் ‘ட்ரூத்’ என்று சொல்வதை ‘தியூத்’ என்ற கிரேக்க வார்த்தையாகவும் எடுத்துக்கொள்ளலாம். ‘தியூத்’ என்பது எகிப்தியக் கடவுளான ‘தோத்’ என்பதன் கிரேக்க மொழிப் பிரயோகம். எகிப்தியக் கடவுளான ‘தோத்’ தான் எழுத்து, கணிதம், மருந்து போன்ற விஷயங்களுக்கு அதிபதி. அவர் எகிப்திய மன்னரான பாரோவாவைச் சந்தித்து தன்னிடம் எழுத்து, கணிதம் போன்ற கலைகள் இருப்பதாகவும், அதை எகிப்திய மக்களுக்கு வழங்க விரும்புவதாகவும் கூறுகிறார். ‘அது ஒர் அமுதம் போன்றது. அந்த அமுதம் எகிப்தியர்களின் ஞாபகசக்திக்கும் விவேகத்திற்கும் மருந்தாகப் பயன்படும்’ என்கிறார். 
அதற்கு மன்னன், ‘கடவுளே, உங்கள் எழுத்துக்கலை மக்களிடம் வழங்கப்படுமானால், அதன் விளைவாக அவர்கள் நினைவாற்றலை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எழுத்து இல்லாததால்தான் அவர்கள் எதையும் மறந்துவிடாமல் இருப்பதற்காக ஞாபகசக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து வந்துவிட்டால் அவர்கள் ஞபாகசக்தியை இழந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு உண்மை கிடைக்காது. அதன் பொய்த் தோற்றம் மட்டுமே கிடைக்கும்’ என்று சொல்கிறான். ஆனால், எழுத்தின் வலிமையை அறிந்தவர்கள் நாம். பேச்சை உணர்வோம் - எழுத்தை அறிவோம். இரண்டையும் நாம் துய்ப்போம். அரவிந்தின் எழுத்துநடை - குறிப்பாக எள்ளல் அங்கதம் எனும் style என்னை மிகவும் கவர்ந்தது. 
"இனி காதலித்தால் ஒரு குடிகாரப் பெண்ணையே காதலிப்பேன். அப்போது இந்த பிரச்சனை வராது, என்று விம்மி-விம்மி அழுது கொண்டே கேப்ரியேல் தன் அறைக்குள்ளே நுழைந்து கதவை தாழிட்டு கொண்டான்". 
"அன்பால் செய்யும் பணிவிடைகளை, தம் உரிமைகளாக நினைத்துக் கொண்டு நம்மை வேலைக்காரிகளாக்கிவிடும் மனப்பான்மை பரவலாகவே காணப்படுகிறது. உதாரணத்துக்கு என் தந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை வீட்டில் ஒரு வேலையும் செய்ததில்லை. எல்லாம் அம்மாதான்"- சகுந்தலாவின் கூற்று. 
"எதுக்கும் இப்போதிலிருந்தே ஜாக்கிரதையாக இரு. அந்த தலைமுறை ஆளாக இல்லாததுபோல தெரியும். ஆனால் பரம்பரை பரம்பரையாக ஆண்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம் அது. பெண் ஜாதிகளை ஓட - ஆட வேலை செய்யவிட்ட சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பது" - சகுந்தலாவின் மாமியார் தனது மகனைப் பற்றியே இவ்வாறு எச்சரிக்கிறாள். 
"அது கல்யாணம் செய்யும் அதிசயம் தாயே" - சகுந்தலாவின் கணவன். 
"இந்த அதிசயத்தோடு நின்றுவிட்டால் நன்றாக இருக்கும். இப்படியான கன்றாவியான வேறு அதிசயங்கள் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்"-சகுந்தலா. 
"இப்படி சில வருடங்கள் உருண்டோட, மதனும் சகுந்தலாவும், பழக்க-தோசத்தாலும், பாசத்தாலும், காதலாலும், இணைபிரியாத தம்பதிகளாகவிட்டிருந்தனர்"- இந்தப் பழக்க தோசம் சொற்பிரயோகம் அற்புதம் – by habit they became husband & wife!.
வன்முறை... துரோகத்தைவிட பெரிய வன்முறை செயல் உலகத்தில் உண்டோ.
மிலன் குண்டேராவின் ‘த அன்பியரபில் லைட்நஸ் ஆஃப் பீயிங்’ என்னும் நாவலின் தொடக்கப் பகுதி மிகப் பிரபலமானதாகும். அதில், வரும் வரிகள் இவை - 
என்றும் மாறாத் திரும்ப நிகழ்தல் என்ற சிந்தனை, நாம் பொருட்களை நோக்குவதிலிருந்து அவை வேறுவிதமாகத் தோற்றமளிக்கலாம் என்ற பார்வையை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றின் மாறும் இயல்புக்கு ஏற்றாற்போல் தமது துயர்தணிக்கும் சூழல்கள் நாம் ஒரு முடிவுக்கு வருவதைத் தடுக்கின்றன. ஏனென்றால் உடனே தோன்றி மறையக் கூடியதை அல்லது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருப்பதை எப்படி நாம் குற்றம்கூறக்கூடும்? எல்லாமே அழிகின்ற மாலைக்காலத்தில் எல்லாமே பழங்கனவுகளால் ஒளியூட்டப்படகின்றன. கில்லட்டின் படுகொலைகள்கூட (குண்டேரா 1984:4). 
மையமான கருத்தை வெளிப்படத்துகின்ற தொடர் இங்கு முதல்வாக்கியம்தான்.
சகுந்தலாவின் தோழி ஒருத்தி சொல்கிறாள் - """"மகப்பேறு கிடைப்பது பெண் செய்த பாக்கியம்... இப்படியான கதையாடல்கள், ஆண் தன் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இயற்றியவை. பிரசவ வேதனையை நீ அனுபவித்தால் தவிர வேறு எப்படியும் அதை தெரிந்து கொள்ள முடியாது. உன் வயிற்றில் வளர்ந்த குழந்தை உதிரத்தில் பிறந்தவுடன் அதனை பார்க்கும் போது, என் வயிற்றிலா இந்த புழு இவ்வளவு நாள் இருந்தது. அதனை எனக்கு அடையாளம் தெரியவே இல்லையே. இது என் பிள்ளை தானா? என்ற சந்தேகம் எழும். எல்லா பெண்களுக்கும் எழுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு எழுந்தது. அது என் குழந்தையே இல்லை என்ற எண்ணம் கூட தோன்றியது. பிறந்த மறுநாளில் இருந்தே தூக்கம் கலைந்து விட்டது. ஏதோ போர்க்களத்தில் இறக்கிவிட்டது போல, அழுகை, உறக்கமின்மை... இந்த அனுபவத்தை... இந்த அகோர அனுபவத்தை நான் யார் சொல்லியும் கேட்டதே இல்லையே"".
மாற்றத்திற்கு உள்ளாகிவிட்ட ஒரு மிக முக்கியமான - தாய்மை குறித்த சிந்தனை இது. மாற்றத்திற்குக் கணந்தோறும் உள்ளாகிக் கொண்டிருக்கின்ற ஒன்றை நாம் குற்றம் கூற இயலுமா என இந்தப் பத்தியைப் படித்தவுடன் நான் என்னையே கேட்டுக் கொண்டேன். 
"நீர்-பஞ்சம் நிறைந்த நாட்டில் மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டுவதென்பது ஒரு விசித்திரமான செயல்பாடு. இது ஆச்சர்யப் பட வைக்க வேண்டிய விஷயம். பொது-நலன் என்றால் என்ன என்ற வினாவை எழுப்ப வேண்டிய விஷயம். ஆனால் பாரத திருநாட்டில் இப்படியான கேள்விகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை" என்கிறான் சரவணன். இந்தக் கேள்வி எழுப்புகின்ற குற்றவுணர்ச்சி கூட பாரதப் பிரஜையான எனக்கு இந்த வாக்கியத்தைப் படித்து முடிக்கும் வரைதான். ஆனால், அதனை ஒரு வாசகனுக்குச் சற்று கிள்ள முடியும் - தனது கேள்விகளால் என தொடர்ந்து முயற்சிக்கிறார் அரவிந்த். 
யேட்ஸ் தனது ‘சுயத்திற்கும் ஆன்மாவிற்கும் ஓர் உரையாடல்’ என்ற கவிதையில் எழுதுவார்- 
யாவற்றையும் மீண்டும் வாழ்தலில் நான் திருப்தியடைகிறேன், 
இன்னும் ஒருமுறை...
செயலிலோ சிந்தனையிலோ 
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் 
அதன் மூலத்திற்குச் சென்று காண்பதில் திருப்தி அடைகிறேன். 
உள்ளதை அளவிடுங்கள்; எனது தலைவிதியை மறந்துவிடுங்கள். 
கழிவிரக்கத்தை நான் தூக்கி வெளியே எறியும் போது
மார்புக்குள் ஒரு மிகப் பெரிய இனிமை பாய்கிறது.
நாம் யாவரும் சிரிக்கவேண்டும், பாடவேண்டும், 
நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன
நாம் பார்க்கும் யாவுமே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.
அரவிந்தும் ஒரு வகையில் யேட்ஸ் போலத்தான் தென்படுகின்றார். தனது கேள்விகளை, சந்தேகங்களை, விருப்பங்களை, பயங்களை, சுயத்தை, சகமனிதர்களுக்கான பரிவினை, அவநம்பிக்கைகளைத் தொடர்ந்து இலக்கியத்தினூடாக அவர் நம்மோடு பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். வருடந்தோறும் இங்கு வந்து நம்மிடையே தனது இயங்கு தளத்தை, இருப்பைப் பகிர்ந்து கொள்கின்ற அவரது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இந்தப் புதினத்தை நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள் சகுந்தலாவும், மதனும், சரவணனும் நம்மின் வெவ்வேறு பிரதி பிம்பங்களே. தன் மனக்கண்ணாடியின் ரசவாதம் ஊற்றி அரவிந்த் அப்பாத்துரை அவர்களைக் காட்டுகின்ற அனுபவத்திற்குள் மூழ்குங்கள். 
ஒரு புதினமெனும் ‘genre’ற்குள் இந்த நாவல் வகைபடுமா என்கின்ற கேள்விகள் விடுத்து, வாழ்வனுபவத்தின் ஒரு உண்மைக் கூறை தனக்கே உரிய முறையில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார் - மிக சுவாரஸ்யமாக. அதனைப் படித்து ரசிக்க முடிகின்ற ஒர வாசகியாக அவருக்கு என் வாழ்த்துக்கள். நாம் சிரிப்போம், பாடுவோம், நாம் பார்க்கும் யாவுமே ஆசிர்வதிக்கப்படவில்லை என்றாலும், நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன!
          

பத்மஜா

புத்தக வெளியீட்டு விழா

"மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக் கொண்டுவிடும்" என்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான Wallace Stevens குறிப்பிட்டார் - "After one has abandoned belief in God, Poetry is the essence which takes its place as life's redemption". "ஒரே சமயத்தில் பூத்துதிர்ந்த வாகை" எனத் தன் கவிதைகளைத் தந்திருக்கும் பத்மஜாவிற்கு "மலைப்பாதையில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது". கடவுளின் இடத்தை மட்டுமல்ல - கவிதை எல்லாவிதமான பொய்த்துப் போன நம்பிக்கைகளின் இடத்தையும் இட்டு நிரம்பும் எனும் என் நம்பிக்கை ஒவ்வொரு புதிய கவிதைத் தொகுப்பினை வாசிக்கையிலும் மீண்டும் உறுதிப்படுகிறது. "ஒரு சிறுமி தன் தாய்க்குப் பரிசளிக்கின்ற சேலையாய்" இக்கவிதைகளை நமக்கு அவர் பரிசளித்திருக்கிறார். நான் அதிக மகிழ்வும் பெருமையும் கொள்கின்ற விஷயம் ஒன்று - பெரும்பாலான பெண்கள் தமது முதல் கவிதைத்தொகுப்பினை வெளியிடுகையில், அதற்கானதொரு முன்னுரையையோ, அல்லது அதன் வெளியீட்டு விழா உரையையோ, நான் பங்களித்திருக்கிறேன் என்பதே அது. தி.பரமேஸ்வரி, சக்திஜோதி, தாராகணேசன், விஜயலட்சுமி, ஈழவாணி, கீதாஞ்சலி எனும் எனது தோழிகளின் நீண்ட பட்டியலோடு, பத்மஜாவும் சேர்ந்ததினை, நான் இம்மாலை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு பெண் தனது அகவெளியைக் கலையின் மூலமாக வெளிப்படுத்தும்போது, சுதந்திரத்தின் ஒளியால் அவளது அழகும், ஆன்மாவும் மேலும் மெருகேறுகின்றது. அது கவிதையா, ஓவியமா, இசையா, இலக்கியமா - அல்லது அவைஏதுமில்லையா - என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவள் தனக்கான ஒரு வெளியைத் தீர்மானித்துத் தன் மொழியில், சுயாதீனமாக வெளிப்படுத்த வரும்போது, அவளைத் தூக்கி, கட்டி அணைக்கவும், தோள் கொடுக்கவும், கைகுலுக்கவும், நாம் தயாராகக் காத்திருக்க வேண்டும். காலம் காலமாக அடக்கப்பட்ட அவளது நாவு எச்சிலை உமிழ்ந்தால் கூட அது எனக்கு அமுதம்தான். அவ்வகையில் பத்மஜா எனக்கு மிக முக்கியமாணவர். ஒரு வாசகியாக, நல்ல ரசிகையாக எனக்கு அறிமுகமாகிச் சக படைப்பாளியாக என்னோடு இணைந்து கொண்டிருக்கின்ற அவர் இணையத்தில் எழுதியவற்றை இங்கே அச்சு வடிவில் கொணர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள். என் நேசத்திற்கும், மிகுந்த மரியாதைக்குமுரிய கலாப்பிரியா, திரு. ராஜசுந்தரராஜன் ஆகியாரது முன்னுரையுடன் நேர்த்தியாக வடிவமைத்து கொணர்ந்திருக்கின்ற வேடியப்பனுக்குப் பாராட்டுக்கள். எனது ப்ரிய கலாப்பரியாவின் "பழகிப் போகும் பஸ்ஸீக்கு ப் பாதையும் பாதைக்குப் பஸ்ஸீம்" எனும் மறக்காத கவிதையைப் போலவே – பத்மஜாவிடமும் சில உண்டு - "ஒவவொரு புடவையும் நெய்யப்படும் போதே தான் யாருக்கெனத் தீர்மானித்துக்கொள்கிறது சில சேலைகள் கலை(ளை)யும் போதே மிக அழகாய்த் தெரிகின்றன" என பத்மஜா சொல்கையில், objection your honour எனப் பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்திருக்கிறது. கவிதை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் வயது ஒரு தடையல்ல. 'லாவண்யா' என்றொரு கவிஞர் தனது 55ம் வயதில் முதன் முதலாக, தன் "இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்" என்றொரு தொகுப்பை வெளியிட்டவர். அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்துத் தனது 67 வயதில் இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். அவரது மொத்த இலக்கியப் பங்களிப்பு இவ்வளவுதான். ஆனாலும் அவர் நமக்கு முக்கியமானவர் - அறிந்து கொள்ளப்படவேண்டியவர். பத்மஜாவும் அப்படித்தான். லாவண்யாவின் படைப்பு வெளியைப் பற்றி திரு. வெங்கட்சாமிநாதன் பதிந்திருக்கின்ற கருத்தே பத்மஜாவிற்கும் பொருந்தும். "தன் கவித்துவ ஆற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர். இவர் பயமுறுத்துபவர் இல்லை" - என்று லாவண்யா குறித்துப் பதிகிறார் வே.சா. பத்மஜாவின் கவிதைகளும் அப்படித்தான் - காதலை, நேசத்தை, ஒரு பெண்ணின் அனைத்து பருவத்திற்கான மனோ உணர்வை, காதலும், காமமும் ஒன்றாகும் லயத்தை மட்டுமல்ல, அவளது "பாழாய்ப்போன மனசை"யும் நம்முடன் பகிர்கின்றன. கூடவே, தன்னைக் கொன்றாலும் தனது கனவினைக் கொல்ல முடியாது எனும் தீர்க்கமானதொரு பெண் குரலையும் முன்வைக்கின்றன. "கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல?" எனும் சந்தேக அவலத்துடன் இன்றும் பெண் நோக்கப்படுவதையும், "சுமந்து, நடந்து, காத்து, நின்று இற்றுவிட்ட கால்களுடன் அவள் சிலுவை சுமப்பதையும்" சுட்டுகின்றன. இருள், நிலா, மலை, கப்பல், ஒற்றை மீன், நட்சத்திரம், கால்கள், மரத்தாத்தன், முத்தம், நாய்க்குடைகள் - இவை உலவும் அவரது கவிதைகளை மொத்தமாய்ச் சுவைத்து முடித்தபோது ஆத்மாநாமின் இக்கவிதை வரிகளை நினைத்தேன் – "அற்புத மரங்களின் அணைப்பில் நான் ஒரு காற்றாடி. வேப்ப மரக்கிளைகளின் இடையே நான் ஒரு சூரிய ரேகை. பப்பாளிச் செடிகளின் நடுவே நான் ஒரு இனிமை சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில் நான் ஒரு நட்சத்திரம்" எனக்கு மட்டுமல்ல - பத்மஜாவிற்கும் கவிமனசு அப்படித்தான். நாமெல்லாம் - கவிதை என்ற ஒன்றையே ஒளியில் நெய்து கொண்டும், இருளில் போர்த்திக் கொண்டும் கனவுகளில் விழிக்கிறோம் - நனவில் தூங்குகிறோம் - மிக முக்கியமாக 'நனவிலியில்' வாழ்கிறோம். ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். (ஆத்மார்த்தியும் தான்). பத்மஜாவின் முத்தம் குறித்த அருமையான பதிவுகள் அவரது நான்கு கவிதைகளில் உள்ளது. அவை ஆத்மநாமை எனக்கு நினைவூட்டின. "பாடகன்" பாடுகின்றான். அவனது இசையை மனம் ரசிக்கவில்லை இசை புக மறுத்து, உன் கழுத்து மருவை நாவால் வருடி யாராவது முத்தமிட்டு இருப்பார்களா? என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. "நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்" இன்னொன்று "கடைசி முத்தம்", மூன்றாவதாக "; வளரும் முத்தம்" எனும் தலைப்பில் ஒரு மிக அருமையான கவிதை. வளரும் முத்தம் தராமல் போன முத்தமொன்று நம்மிடையே வளர்ந்துகொண்டே போகிறது எந்த ஒரு கட்டுக்கும் அடங்காமல் உடன் என்னிடம் சேர துடிக்கிறது அதில் நேற்று முளைத்த சிறகுகள் என் வயிற்றினுள் படபடத்துக் கொள்கின்றன என் ஒரு சிறுமுத்தம் போதும் அதை மரணிக்க இல்லை ஒரு சொல் மாத்திரம்! இருந்தும் பேருரு எடுக்கும் அதனை புன்னகையோடே வளரவிடுகிறேன் வியாபித்து என்னையது கொல்லும் நாளுக்காக! “ ஒரு புன்னகைக்கு எப்படி மறுபுன்னகை பதிலோ அப்படித்தான் ஒரு முத்தத்திற்கும்” படித்தவுடன் என் நேசிப்பிற்குரிய ஆத்மாநாமின் அந்த அதி அற்புதமான 'முத்தம்' கவிதை நினைவிற்கு வந்தது. 'கவிதைகளை யாரும் நம்மிடமிருந்து பிதுக்கி எடுத்துவிட முடியாது" (இந்திரன்) என்பதை விளக்கும் அற்புதமான ஆத்மாநாமின் இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டிற்கான அவநம்பிக்கைக்கு மாற்றாக 'முத்தத்தை' - அன்பை முன்வைக்கிறது. முத்தம் முத்தம் கொடுங்கள் பரபரத்து நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கையில் உங்கள் நண்பி வந்தால் எந்தத் தயக்கமும் இன்றி இறுகக் கட்டித் தழுவி இதமாக தொடர்ந்து நீண்டதாக முத்தம் கொடுங்கள் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும் விடுதலையின் சின்னம் முத்தம் முத்தம் கொடுத்ததும் மறந்துவிட்டு சங்கமமாகிவிடுவீர்கள் பஸ் நிலையத்தில் ரயிலடியில் நூலகத்தில் நெரிசற்பூங்காக்களில் விற்பனை அங்காடிகளில் வீடு சிறுத்து நகர் பெருத்த சந்தடி மிகுந்த தெருக்களில் முத்தம் ஒன்றுதான் ஒரே வழி கைவிடாதீர்கள் முத்தத்தை உங்கள் அன்பைக் தெரிவிக்க ஸாகஸத்தைத் தெரிவிக்க இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க முத்தத்தை விட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது ஆரம்பித்துவிடுங்கள் முத்த அலுவலை இன்றே இப்பொழுதே இக்கணமே உம் சீக்கிரம் உங்கள் அடுத்த காதலி காத்திருக்கிறாள் முன்னேறுங்கள் கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் வருடங்கள் கழித்து இருபத்தியோறாம் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் ஆபாச உடலசைவுகளை ஒழித்து சுத்தமாக முத்தம் முத்தத்தோடு முத்தம் என்று முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள். கிரேக்க புராணம் - காதலன் நிழல்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகின்றது. எனக்கென்னவோ பத்மஜா அன்பின் பிம்பங்கள் தன் முன் தோன்ற, அதை வரைய முற்படுகையில், கவிதையினைக் கண்டெடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மிக எளிமையான நேர் மொழியில் அவரது "எரி நிழல்" கவிதை அதைச் செய்கிறது. எரி நிழல் உன் தண்முகம் கண்டேனில்லை உன் புன்சிரி கண்டேனில்லை உன் குறுவிழி கண்டேனில்லை உன் திமிர்நடை கண்டேனில்லை உன் உயிர்ப்பார்வை கண்டேனில்லை உன்பருந்தோள் கண்டேனில்லை உன் நெடுமார்பு கண்டேனில்லை உன் கடி மெய்யும் கண்டேனில்லை கண்டதெல்லாம் அது யாதெனின் உன் மனம் என் அகம் பற்றியதும் பற்றியெரியும் என் நிழலைத்தான். "தொலைதூர மலையொன்று உயிரோடு உறுமாறும் உன் கண் முன்னால்" என்றொரு அருமையான வரியை எழுதிய கவிஞர் இந்திரன் மிகச் சிறந்த கலை விமர்சகர். அவர் ஒரு முறை சொன்னார் – "வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கி காட்டுவது ஒவியர்களின் வேலை – கவிஞர்களின் வேலை அல்ல" என்று. உடனே அதற்கு மிகச் சரியானதொரு உதாரணமாக எனக்கு நினைவிற்கு வந்தது பிரமிளின், "நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றிற்கிடையேயுள்ள இருள்" எனும் வரிதான். "இருளின் நிறம்" என்கிற கவிதையில் அடர் இருளில் தன் மீதுபட்ட நகக்கீறல் ஒளியாகக் கிளருகின்ற ஒரு படிமத்தை முன்வைக்கிறார் பத்மஜா. இருளின் நிறம் இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் நாம் அன்று ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த நிலாக்கீற்றைக் கூட அடைத்து சுற்றிச் சுற்றி பார்த்தாய் நீ நம் நான்கு கண்கள் மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன மூக்குத்தி! என்றாய் சிறு ஒளியாம் அதனை கழற்றி ஒளித்துவைத்தேன் இருட்டின் நிறம் அருகிவிட்டது கண்ணுக்குத் தெரியா கருநீலத்தில் மூழ்கிக் கிடக்கும் அவ்வமயம் அறியாது உன் நகம் என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில் இருள் சட்டென போயே போய்விட்டது எப்போதாவது இருளின் நிறம் கண்டுபிடிப்போமா நாம்? "இருட்டின் நிறம் அருகிவிட்டது" என்னை நிறுத்தி வைத்த, வியக்க வைத்த சொற்பிரயோகம் இது. அபியின் சாகாவரம் பெற்ற "தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருள்" எனும் வரி நினைவிலாடியது. "நம்மைச் சுற்றிலும் காலாவதியாகிப் போன உவமைகள் ஏராளம். மிக உன்னதமான உவமைகள் நம்முடன் பழகியதின் காரணமாக அவற்றின் புதுமைப் பண்பை இழந்திருக்கின்றன. (உம்) 'நாற்காலியின் கால்' (இந்திரன்)" Password - கடவுச்சொல் நம்மோடு அன்றாடம் பழகிவருகின்ற சொல். ஆனால் அதனைப் புதுமையாக காதலன் பெயரைக் கடவுச் சொல்லாக வைக்கின்ற உவமையினைக் கையாள்கிறார் பத்மஜா தன் 'கரை ஒதுங்கிய கப்பல்' எனும் கவிதையில்- கரை ஒதுங்கிய ஒரு கப்பல் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய் ஊரெல்லாம் ஒரே புரளி! அதனுள் செல்ல, கடவுச் சொல் அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம்... ஊரையே கூட்டி முயல்கிறது அரசு! என் முறை வருமுன்னே எப்படியாவது அதை மாற்றிவிடு இல்லையெனில் எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான உன் பெயரை உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்? ப்ளீஸ் டா! "இரண்டு சோம்பிய முதலைகளாய் வெளி வெறித்துக கிடந்தோம் வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை. வாலசைக்க மறுக்கும் பல்லியாய் உளவாங்கி உறிஞ்சினோம்" என்பவையும் அன்றாடம் நம்மோடு பழகிய, ஆனால் புதுமை இழக்காத உவமைகள் - பாராட்டுகள் பத்மஜா! தனக்குத் தெரிந்த, தான் அனுபவித்த உலகத்தையே பாசாங்கின்றித் தருகிறார் பத்மஜா - ஜிமிக்கியோடும், தாவணியோடும், அக்கா அண்ணியான கதை, பிண்டங்காக்கை பாட்டி, 'ஐ லவ் யூ' கிறுக்கலை வெள்ளையடித்து அழிக்காதே என இருட்டறையிலிருந்து இறைஞ்சும் ஒரு நடுங்கும் குரல், 'திருடா, ப்ளீஸ்டா' எனும் பிச்சிச் சிணுங்கல்கள், செவி சாய்க்கும் செல்லப் பிள்ளையார், "ஓட்டை குழாயின் நீர்சொட்டும் ஒலியில் நாள்தவறாது உனது பெயர் . எப்படித் தூங்குவேன் நான்" என அங்கலாய்க்கும் மனம், "உன் பழைய பனியனின், மனம் கிளர்த்திய வேட்கைகள்" எனத் தவிக்கும் பெண்ணின் மிக இயல்பான பாலூக்கம், முதலியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றவை தாம் இக்கவிதைகள். இடையிடையே துர்க்கனவாய் "நாயைப் பெண்டாளும் வால் வெட்டப்பட்ட குரங்கும்" உண்டு. அம்மா இன்னும் சில மாதங்கள்தான் என தீர்ப்பு வந்த நேரம்.. ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட தீர்ப்பை மாற்ற விழையவில்லை மருத்துவமனை வராண்டாவில் வீழ்ந்து உருண்டு புரண்டு ஆழவேண்டிய மனநிலையில் மதிய காட்சிக்குப் போனோம் எல்லாம் சரிதான் என்ற பாவனையில். ஆயிற்று ஒவ்வொருவராகக் காண வருகின்றனர் கடைசியல் உன்னுடன் பேசுவதற்கு உன் எதிரில் கண்ணீர்விட அஞ்சி கல்லாய்ப் போனோம் அனைவரும் நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம் முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று விழித்திருந்தோம் நீயும் நானும் தனித்திருந்த சமயம் எனக்கு சாகும் வயசா? ஏன் இப்படி? என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் நான் கூறியிருக்க இயலும்? வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம் அழியாமல் இருப்பதைக்கண்டு அதை முத்தமிட்டு உன்னைக் கூவி அழைப்பதைக் தவிர? அம்மா... "கவிதாவஸ்தை" "யாருக்கும் புரியாக் கவிதை' என்ற கவிதைகளில் கவிதை எனும் ஊடகம் தன் சுயத்திற்கு அதன் தேடலுக்கு முன்பாக எவ்வுரு கொள்கிறது? எனச் சற்று உள்முகமாகப் பார்க்கவும் முயன்றிருக்கிறார். கவிதை எப்போதும் வாசகனின் சொத்துதான் - அவனது அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகின்ற அரியாசனமல்லவா அது - அதனால்தான் என் ப்ரிய ஆத்மநாம் வாசகனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறான் இப்படி – "சாக்கடை நீரில் வளர்ந்த ஒரு எலுமிச்சை செடிபோல் நான் அளிக்கும் கனிகள் பெரிதாகவும் புளிப்புடனும் தானிருக்கும். கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து அருந்தினால் நல்ல பானகம் அல்லவா?" "கவிதையில் 'நான்' எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதை எந்த அளவிற்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவிற்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து "வேறு நபர்களில்" தன்னை நிறைத்துக் கொள்கிறான்” என்பார் பிரம்மராஜன். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கும் படைப்பாளி மனநிலைதான் அத. இதைத்தான் John Keats எனும் பெருங்கவிஞன் "Negative Capability" என்பார். இது இன்னும் நெருக்கமாகப் பத்மஜாவிற்குக் கைகூடி வருகையில், அவர் மென்மேலும் தனது கவிதைப் பாதையில் தீர்க்கமாகத், துலக்கமாகப் புலப்படுவார் என நான் நம்புகிறேன். பத்மஜாவை - அவரது கவிதைகளை எனக்குப் பிடித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் - அவரிடம் பிரகடனங்களோ, கோஷங்களோ, அரூப முழக்கங்களோ, போராளி முஸ்தீபுகளோ இல்லை என்பதுதான். இப்பொழுதெல்லாம் பெண்கள் மிக விரைவில் பிரபலமாக வேண்டும் எனில் - குறுக்கு வழி - ஒரு கவிதைத் தொகுப்பு போடுவதுதான். அதில் மேற்சொன்ன இனனபிற கூறுகள் இருப்பின் - அடுத்த சில மாதங்களில் spot light அவர்கள் மீதுதான். இந்தக் கூடத்தில், கவனிக்கப்படாத எளிமையும், முன்துறுத்திக் கொண்டு நிற்காமல், உரக்கக் கோஷமிடாத, இசங்கள், அரசியலை முன்னிறுத்தி எழுதப்படாத, செம்மையான கவிமனம் கொண்டவர்கள் பத்மஜாவைப் போல ஏராளமானோர் இங்கு உள்ளனர். மிகச் சமீபத்தில் நான் வாசித்த எனக்கு மிகப் பிடித்திருந்த சாம்ராஜின் வரியொன்று, "என்றுதானே சொன்னார்கள்" எனும் தொகுப்பிலிருந்து – நவீன தமிழ்க்கவிதைகளில் ஆசன ஆய்ணடியப்பன்கள்' ஏராளம் காலை முறுக்கித் தோள் மேல் போட்டு - அப்படியே தலை குப்புற நின்று - ..... நமக்கு அவையெல்லலாம் சாத்தியமில்லை .... நமக்கு அவை தேவையுமில்லை பத்மஜா உங்கள் வழியலேயே ஏராளமான முத்தங்களும், அரளிப் பூக்களும், கப்பல்களும் உங்களை வழிநடத்தும் - நாங்களும் கூட வருகின்றோம்! ஊடகங்களே... தயவுசெய்து பத்மஜா போன்றவர்களைக் கவனியுங்கள். அறிமுகப்படுத்துங்கள், பேசப்படுபவர்களாக முன்னிறுத்துங்கள். நான் பல மேடைகளில், கூட்டங்களில் சொன்னது தான் இது – தமிழச்சி தொடங்கி .... மிகச் சிலரின் மீதே குவிக்கப்படுகின்ற கவனத்தைச், சத்தமின்றி, நம்பிக்கையின் ஒளியோடு, எளிமையின் வழியோடு, தம் அனுபவ உண்மை சார்ந்து எழுதுகின்ற ரிஷி, செ. பிருந்தா, கல்பனா, கு.உமாதேவி, சம்யுக்த மாயா, கனகதூரிகா, இப்படியான கவனிக்கத்தக்க பிற பெண் கவிஞர்கள் மீது உங்களது வெளிச்சத்தினைப் பாய்ச்சுங்கள். சாம்ராஜின் எனக்கு பிடித்த இன்னொரு வரி.... இப்போது தங்க நாற்கரச் சாலை கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை பாலத்தின் கீழ் எங்கோ இருக்கிறான் பாஞசாலங்குறிச்சிக்காரன்.... வாசகர்களே, ஊடகங்களே - உங்கள் தங்க நாற்கரச் சாலைகளை எங்கெங்கோ இருக்கின்ற பத்மஜாவைப் போன்ற பிற ஆளுமைகளை நோக்கிச் செலுத்துங்கள் - கவனியுங்கள் - கைதூக்கவிடுங்கள் - பாராட்டுங்கள். அனுபவத்தைக் கால, வெளி, ஊடகங்களூடே வெளிப்படுத்தவதே கவிதை. தேவியர் எவருக்குமே வழங்கப்பட்டதில்லை விசுவரூப வாய்ப்பு என்று ஆதங்கப்படும் அன்பாதவனைப் போல, புரிந்து கொண்டு, புதிதாக எழுத வருகின்ற பெண்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்! "ஒரு கைப்பிடி அறிவு ஒரு கைப்பிடி உணர்வு சேர்த்தே அணுகு ஒரு போதும் பிறழாது நட்பு" என்றார் நண்பன் ஆதமார்த்தி. கவிதை கூட அப்படித்தான் பத்மஜா - ஒருகைப்பிடி அறிவு, ஒரு கைப்பிடி உணர்வு + ஒரு சிட்டிகை அனுபவத்தின் உண்மை - அது உங்களுக்குக் கூடி வந்திருக்கிறது. தொடருங்கள் - நிறைய எழுதுங்கள்! அதன் மூலம் எங்களோடு உங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவதேவன் சொல்வது போல் - உங்கள் தனிமையின் கிண்ணம் நிரம்பி வழியட்டும் கவிதைகளால்!

ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம்
(cada cabeza es un mundo)

கலையின் பிறப்புபற்றி மிகச் சிறந்த எழுத்தாளரும், பேராசிரியருமான நபக்கோவ் ஒரு நாட்டார் கதை மூலம் சொல்லியதை சற்றே தழுவி நம்மூர்க் கதைமூலம் முன்வைத்துத் துவங்குகிறேன்: "'புலி வருது, புலி வருது' என்று அலறும் ஆடு மேய்க்கும் சிறுவனை உண்மையிலேயே புலி வந்து அடித்துக் கொன்று சாப்பிட்ட நாளில் இலக்கியம் பிறக்கவில்லை. ஒரு நீதிதான் கற்பிக்கப்பட்டது. மாறாக, புலியே வந்திராதபோது, 'புலி வருது, புலி வருது' என்று சிறுவன் தன் கற்பனையில் புலியை உருவாக்கி அலறிய நாள்தான் இலக்கியம் பிறந்த நாள். அவன் அடிக்கடி பொய் சொல்லி ஏமாற்றியதால் அவனைப் புலி அடித்துச் சாப்பிட்டதென்பது தற்செயலானது. ஆனால், கலையின் மந்திரமென்பது, அவன் தன் கற்பனையில் திட்டமிட்டு உருவாக்கிய புலியின் நிழலில் தங்கியிருக்கிறது. அது, புலி பற்றிய அவனுடைய கனவிலிருக்கிறது. அவன் ஒரு மந்திரவாதி; ஒரு கண்டுபிடிப்பாளன். எனவே, அவன் ஒரு கலைஞன். அவனிடமிருந்தே கலை பிறக்கிறது". (சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் : 35) இத்தகைய கலைஞர்கள், படைப்பாளிகளை மாதந்தோறும் அறிமுகம் செய்வதன் மூலம் இலக்கியத்தைக் கொண்டாடுகின்ற அற்புதமானதொரு மனோபாவத்தை, வாசகர்களிடம் முக்கியமான படைப்புக்களை அறிமுகம் செய்கின்ற வரவேற்கத்தக்க செயல்பாட்டை மாதந்தோறும் நடத்துகின்ற தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பிற்கு என் வணக்கமும் நன்றியும். கிரேக்கத் தொன்மமான தியத்தில் பிளோட்டோ, "ஒரு ஆசிரியன் மாணவனைத் தேர்ந்தெடுக்கமுடியும். ஆனால் எந்த ஒரு நூலும் வாசகனைத் தேர்ந்தெடுப்பதில்லை" என்கிறார். உண்மைதான் - நாமே தேடிச்சென்று அடையவேண்டிய 'அனுபூதி' அல்லவா அது? அவ்வகையில் அய்யா அரங்கநாதனின் காளியூட்டு எனும் புதினத்தைத் தேடிச் சென்று துய்க்கின்ற அனுபவம் வாய்த்தது எனக்கு மகிழ்வும், மனநிறைவும். ஞானம் சார்ந்த அவைதீகம், அழகியல், தமிழ் தொன்மப் பிடிப்பு, மதம் சாரா தென்நாட்டுத் தத்துவ விசாரம், பூரணம் - எனக் கனிந்து நிற்கும் அரங்கநாதன் எனும் இலக்கிய ஆளுமை இரண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியுடன் நவீனத்துவத்தையும் இணைத்தவர். அனைத்துத் தத்துவ மரபுகளிலும், (கீழைத்தேய, மேலைத்தேய நாடுகள், அரபுத் தேசம், ஐரோப்பிய கண்டம்) தமிழன் திளைத்து எழுந்தாலும், சமூக மாற்றமும், அதற்குக் காரணமான தனிமனிதனும் தனக்கென ஒரு தத்துவத்தைத் தேர்வது காலத்தின் கட்டாயமாகின்றது. அவ்வகையில் அரங்கநாதன் அய்யா, தனக்கெனத் தான் கண்டடைந்த 'இன்மை' என்கின்ற தத்துவத்தை, 'இருக்கலாம் - இல்லாமலிருக்கலாம்' எனும் சூட்சுமத்தை அடிநாதமாகக் கொண்டது அவரது காளியூட்டு. இயற்கையோடு இயைந்து நிற்கின்ற ஆதித் தமிழ் மரபின் வழியே பயணித்து, நாட்டார் தெய்வ மரபான 'பேய்ச்சியை' வழிபடுகின்ற காளியூட்டுத் திருவிழாவினை மையாக வைத்து, இப் புதினத்தில், வலிந்து அல்லாமல், அனுபவத்தின் உண்மையோடும், பொதுத்துவத்தின் கடமையோடும் தனக்கான தத்துவத்தைப், படைப்புத் திறனின் நுணுக்கங்களுடன் முன்னெடுக்கிறார் அவர். "வேதம், வர்ணாஸ்ரம் அமைப்பு, உபநிஷத் இந்த மூன்றை மூர்க்கமாக எதிர்த்த மூன்று தத்துவங்கள் 1) உலகாயுதம், 2) சமணம், 3) புத்தம். ராமாயணத்தில் ஜாபாலி எனும் அமைச்சர் இந்தத் தத்துவத்தைச் சொல்கிறாராம் – "யாருக்கு நிச்சயமாகத் தெரியும்/ யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்? எப்போது இது பிறந்தது? எபபோது இந்த படைப்பு நிகழ்ந்தது? இந்த உலகம் படைக்கப்பட்ட பின்பு கடவுளர்கள் பிறந்தனர்: அப்படியெனில் யார் அறிவார் இது எப்போது எழுந்தது என்று? எப்போது படைப்பு எழுந்தது என்று எவருக்கும் தெரியாது அவன் இதை உற்பத்தி செய்தானா இல்லையா என்றும் தெரியாது சொர்க்த்திலிருந்து இதைக் கண்ட அவனுக்கு மட்டுமே இது தெரியலாம். ஒருவேளை அவனுக்கும் இது தெரியாதிருக்கலாம்". சமணத்தை மிக விரிவாக எடுத்து வைக்கும் சிலம்பும், 'அருகனை' முன்னிருத்தும் அதன் செய்திகளும், கவுந்திஅடிகள் எனும் கதாப்பாத்திரமும் சமயக் கூறுகளைவிடத், தத்துவத்தை முன்னிறுத்துபவையே! காவியப்படைப்பில் தத்துவ விசாரணையை ஒரு அங்கமாக வைத்திருத்தல் தமிழின் இலக்கியப் பாராம்பர்யம் அல்லவா?" (தமிழரின் தத்துவமரபு - அருணன்) அதனை முழுவீச்சில் அதி லாவகமாக, உருத்தாத, இயல்பான சம்பவக் கண்ணிகளுடனும், துருத்தி நிற்காத எளிமையான உரையாடல் கோர்வைகளுடனும், Numero Uno ஆகவும், Binaries ஆகவும் முத்துக்கருப்பன் எனும் கதாபாத்திரத்தை, சிவ.முத்துக்கருப்பன், சுடலை. முத்துக்கருப்பனும் எனும் Binaries ஆகவும் சித்தரித்து, மரபின் அச்சில் புதுமையின் சக்கரத்தினைச் சுழலச் செய்கிறார் அரங்கநாதன் அய்யா. பொதுவாகப் ஒரு புதினத்திற்குள் நுழைபவர்கள், பின்பாக அதனை அனுபவித்து உணர்ந்தபின், விமர்சனம் (அ) திறனாய்வு என்கிற அடுத்த தளத்திற்குச் செல்கையில் அதன் தொடக்கம், பின் கதைச்சுருக்கம், இறுதியாக நிறைவுப் பகுதி என நேர்கோட்டு முறையில் செல்வார்கள். நான் இதிலிருந்து சற்றே விலகி, புதினத்தின் நிறைவுப் பகுதியிலிருந்து (ஒரு வசதிக்காக Epilogue எனலாம்) துவங்கலாமென நினைக்கிறேன். "எனது பெயர் முத்துக்கருப்பன். தகப்பனார் சிவதாணு - பிறந்தது சென்னை. எட்டு வயதில் இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டேன். தகப்பனார் பட்டாளத்தில் இருந்து காலமாகிவிட்டார். கோவிந்தன் நாயர் என்பவர் வீட்டில் - வீடு அல்ல ஓர் அறை - கொலைகாரன் பேட்டை என்ற சென்னைப் பகுதியில் - நான் இருந்தேன். காளியூட்டு நேரம் என்னை அவர் மேலூர் பக்கம் அழைத்து வந்தார். எதற்காக அழைத்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அம்மன் திருவிழாவிற்கு இருக்கும் என்றிருந்தேன். அப்பா ஒரு தங்க நகையை அவரிடம் கொடுத்து ஊர் பேச்சியம்மனுக்குப் போட்டுவிடவேண்டும் என்று சொன்னது சிறிது எனக்கு விளங்கியிருந்தது. ஆனால் என்னை அழைத்து வந்த கோவிந்தன் ஊருக்குள் செல்லாமல் வேறு இரண்டு பேரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு நகையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்கையில் நான் அதைப் பிடுங்கி ஆற்றில் வீசிவிட்டு ஓடப்பார்த்தேன். அவர் விடவில்லை. அந்த இரண்டு பேரிடம் என்னைவிட்டு விட்டு போய்விட்டார். தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. காட்டுப்புதூர் மலைப்பக்கம் இராப்பாடி குடும்பத்தாரிடையே சிறிது காலம் இருந்து பின்னர் மருத்துவாழ் மலை சித்தர் சாமியிடம் நான் சேர்க்கப்பட்டேன். மலையிலே என்னால் நிறைய படிக்க முடிந்தது - இராப்பாடியாகவே நான் படித்தேன். இப்போது இங்கே நடந்த கூத்தால் ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனது இடத்தில் வேறொரு பையனைக் கொண்டு வந்து நிறுத்தப்பார்க்கும் போது நான் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி வந்துவிட்டது. அதுவும் நல்லதுதான். இன்றைக்கு இப்படி தயார் செய்த ஒரு பையனை அழைத்து வந்து ஆற்றைத் தாண்டி வருகையில் தெரிந்துவிட்டது. என் சித்தப்பா பையன் முத்துக்கறுப்பனுக்கு வந்த ஆத்திரத்தைக் கண்ட கோவிந்தன் நாயர் பயந்துபோய் பின்வாங்கிய போது, தலைகுப்புற ஆற்றில் விழுந்துவிட்டார். கல்லில் தலைபட்டு அடி - போய்விட்டார் - ஆனால் யாரும் யாரையும் தாக்கவில்லை. சிவ.முத்துக்கறுப்பன் சொல்லாத, ஒரு வேளை சொல்லத் தெரியாத விஷயங்களும் உண்டு. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 73,74) சிவ.முத்துக்கறுப்பன், அவன் தகப்பனார், ஆகியோர் பிறப்பதற்கு முன்பே, குற்றாலிங்கம், பெத்தாச்சி ஆகியோர் பிறப்பதன் முன்பே, சமஸ்தான மன்னர்களின் முடி சூட்டலுக்குப் பயந்து ஓடிய குடும்பம் காட்டுப்புத்தூர் பிரதேசத்திலிருந்தது. கந்தன் என்பவனின் முன்னோர் கதை அது. அவன் பிள்ளைகள் முத்தையா, மீனாட்சி ஆகியோருக்குக் கருங்குளம் தஞ்சம் கொடுத்தது. பப்புக்குட்டியின் உபயம் அது. அந்தக் குழந்தையின் பெயர் கூட அவர் கொடுத்தவைதாம். அந்த ஊரிலேயே பப்புக்குட்டியின் உறவுக்காரர் என்ற பெயரோடு வளர்ந்து, திருமணம் நடந்து முத்தையா அங்கேயே தங்கிவிட மீனாட்சி மேலூர் வந்தாள். அன்றைய தினம் பேச்சியம்மாள் தான் கண்ட ஆற்றங்கரை காட்சியையும் அங்கே சம்பந்தப்பட்ட ஒருவனால் தான் நிர்மூலமாக்கப்பட்ட விஷயத்தையும் மீனாட்சி அத்தையிடம் மட்டுமே சொல்லிவிட்டு தன்னைப் பொசுக்கிக் கொண்டாள். காளியூட்டன்று பேச்சியம்மாள் நண்பகலில் ஆற்றங்கரையிலிருந்து திரும்பிச் செல்வதைக் கண்ட பப்புக்குட்டி மேற்கொண்டு மீனாட்சி அறிந்த விஷயத்தையும் தெரிந்துகொண்டு யாருமறியாது சிவ.முத்துக்கறுப்பனை மீட்டு கருங்குளத்திற்கு அனுப்ப வகை செய்தார். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 75) பப்புக்குட்டி, குற்றாலிங்கம், மீனாட்சி, முத்தையா ஆகியோர் அறியாத விஷயங்களும் உண்டு. மீனாட்சியும் பேச்சியம்மாளும் அறியாத விஷயங்களும் உண்டு. பேச்சியம்மாள் கத்திரிவயலில் இருந்தவாறு எல்லாரையும் - எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள் என்று கண்டுபிடித்து, அதற்கான வழிமுறைகளை நாயரிடம் சொன்னவர் பெத்தாச்சியா பிள்ளைதான். பெத்தாச்சியா பிள்ளையும் அறிந்திராத சங்கதி உண்டு. ஊரிலே அத்தனை அன்புடன் எல்லாரிடமும் நடந்துகொள்ளும் அவர் - சாந்தமானவர் என்றும் பெயரெடுத்த அவர் ஏன் அப்படி என்று ஆழ்ந்து பார்த்தால் கூட இப்படி ஒரு குரூரம் ஏற்பட காரணம் தெரியவில்லை. யாருக்கும் விளங்காத ஒன்று. பெத்தாச்சிக்கும் தெரிந்திருக்காது - மனித குல பலகீனம். எல்லாவற்றிற்கும் மேலாக அரச மரத்துத் துறையிலிருந்து முத்துக்கறுப்பன் தன்னை போற்றியின் வீட்டில் பார்த்துவிட்டானோ என்ற உறுத்தலும் இருக்கலாம் - சொல்ல முடியாது. சுடலை முத்துக்கறுப்பனுக்குத் தெரியாத விஷயம் முக்கியமானது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 76) இராப்பாடியாக அவனிடம் அட்டிகை பற்றி சொன்னதும் ஆற்றங்கரையில் சந்தித்ததும் பப்புக்குட்டியா பிள்ளையின் அறிவுரையின் பேரிலும் எல்லாவற்றிற்கும் மேலாக மருந்துவாழ் மலை பெரிய சித்தர் சாமிக்கும் தெரிந்தே நடந்த விஷயம். தெரிந்தோ தெரியாமலோ நடந்த நிகழ்ச்சிகள் வாழ்நாளில் மறக்கமுடியாத காட்சிகளாக மாறின. ஊருக்குத் தெரியாத விஷயம் - மார்ஸ்டன் என்பவனிடம் செல்லம், கணபதி ஆகியோரைப் பற்றிச் சொன்னது சங்கரய்யர். உங்களுக்கும் எனக்கும் மற்ற எல்லார்க்கும் தெரியாத விஷயங்கள் பல. அவை யாவும் பதிலை உள்ளடக்கிக் கொண்ட விஷயங்கள். அவை பிரித்துப்பார்க்க முடியாதவை. நல்லவை என்றோ கெட்டவை என்றோ அறியப்பட முடியாதவை. இதுவே வாழ்க்கை என்று சுட்டிக்காட்ட ஒரு போதும் போதுமானவையாக இருக்காது. தெரிந்து கொள்ள முடியாது என்றிருந்தாலும் தேடுதல் இருக்கும். என்றும் இருக்கும் அது. பேய்ச்சி என்ற அந்த மேலூரில் அறியப்பட்ட தெய்வமும் சாந்தம் - குரூரம் - உண்மை - பொய் என்றெல்லாம் அறியவொண்ண மாட்டாத ஒன்றுதான்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 77) புதினத்தின் சாராம்சம் இதுதான் - "எதையும் செய்யவேண்டாம். இதுதான் என்று அதை அறிந்து கொள்வது மட்டுமே உண்மையான வைதிக எதிர்ப்பு ஆகும்" என்று அரங்கநாதன் அய்யா தனது பின்னுரையில் சுட்டுவதும் இதுதான். அன்போடு இறைவனைப் புகழ்ந்தும் சமூக அநீதிகளையும் வழக்கமான மத வழிபாட்டு நெறிமுறைகளையும் விமர்சித்தும் எழுதிய, சித்தர் மரபை ஒத்த மிகப் பெரிய இந்தியக் கவிஞர் கபீர். "உனக்காக நான் வாழ்கிறேன், ஓ அல்லாஹ் இராமா உன்னுடைய அடிமைக்கு இரக்கம், காட்டு, என் தெய்வமே மசூதிகளில் மட்டும் இறைவன் குடியிருந்தால், இடையில் யாருடைய நிலம் உள்ளது?" என்ற கபீரின் குரலின் இன்னொரு நீட்சியே, "அன்பிலார் நெஞ்சில் தமிழைப் பாடி அல்லல் நீக்க மாட்டாயா" எனும் பாரதிதாசனின் வரியில் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த அரங்கநாதன் அய்யாவின் தொனியும். "புனிதர்களே, இந்த உலகம் பைத்தியக்காரத்தானமானது என்று நான் கருதுகிறேன்" என்றும் மற்றொரு கவிதையில் சொல்கிறார் கபீர். இன்றளவும், இந்தக் குரல் ஒரு பின்நவீனத்துவக் கவிஞரோடு ஒத்துப்போகின்ற குரல். கபீரின் அன்புடை சரணாகதி நெஞ்சமும், அதேபோழ்து, மதமெனும் சங்கிலியைக் கட்டறுக்கும், சாதியத் துருவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பரிந்து கோபமுறும் நவீனத்துவமும் பின்னிப் பிணையுமொரு வெளிப்பாடு புதினத்தின் பின்வரும் பகுதிகள். "மேலூரின் வடக்குப் புறமிருந்தது பேச்சியம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு காட்டுப்புதூர் கருங்குளம் குடும்பங்கள் சொந்தம் கொண்டாடின. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் காளியூட்டிற்கு இரண்டு ஊர் மக்களும் இருக்கிற நெல்லை விற்றாவது நன்கொடை தந்தனர். பேச்சி அம்மன் மிகுந்த சக்தியுள்ள கடவுள் என்று பேசப்பட்டது. "சக்தி இல்லாத கடவுள் எது" என்று கேட்டுவிடுவார் குற்றாலிங்கம் பிள்ளை." குற்றாலிங்கத்தின் இக்கேள்வி மேலோட்டமாக வைதீகமாகப் பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அப்பட்டமான அவைதீகக் குரல். இது ஒரு பின்நவீனத்துவக் கேள்வியும் கூட; அதனை அடுத்து வரும் பத்தியைப் பாருங்கள் – "அது பேய்ச்சி - நாமெல்லாம் பேயாகவும் கடவுளை அந்தக் காலத்திலிருந்தே கும்பிட்டு வாரோம். எல்லா நாட்டிலும் அப்படித்தான். நம்ம கனகசபை இதுபத்தி எல்லாம் எழுதியிருக்கான் - தெரியுமில்லா - இது வந்து 'வாக்தேவி'யாக்கும் அப்படின்னு சங்கரய்யரு சொல்வாரு - அது தப்பு - அண்ணாச்சி - தங்கச்சி அப்படின்னு நாம சொல்றது போலத்தான் பேய் பேய்ச்சி ஆனது." "அந்தக் கூட்டத்தில் மேலூர் சார்ந்த சேரிவாழ் மக்களும் இருப்பார்கள். இந்த 'பேய்' வணக்கமே அந்தச் சேரி வாழ்மக்களிடமிருந்துதான் வந்தது என்பதைக் கூட அறியா மாந்தர்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 35) சமகால அவலத்தை," ஐயோ, இதுகள் இப்படியுமா இருக்குமென, மிக அழுத்தமாகப் பதிகின்ற பிராந்தியத் தமிழ்க் குரலிது. (இது என்பது அன்பின்பாற் சொல்லப்படுகின்ற கிராமத்து வழக்கேயன்றி இழிசொல் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க) இதனைத் தமிழவன் மிக நுட்பமாக உணர்ந்து பின் வருமாறு பதிவு செய்கிறார். "மா.அரங்கநாதனின் உள ஆளுமை அவரது பிறப்புப் பின்னணிதான். அவருடைய தமிழ் அவருடைய கிராமம் கொடுத்ததுதான். 1952 வாக்கில் நேசமணி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் போராட்டம் ஆழமான பாதிப்பை மா.அரங்கநாதனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய சமூகத்தினர் தமிழ்ப் போராட்டத்தில் நேசமணிக்கு உற்ற தோழர்களாய் இருந்தனர். மா.அரங்கநாதனைப்பற்றி முழுசாய் அறிய குமரி மாவட்ட வரலாறு தெரிய வேண்டும். மா.அரங்கநாதன் "மலையாளத்தமிழ் எழுத்தாளர்களுக்கு" எதிரான ஆளுமை. அதனாலேயே மா.அரங்கநாதனை அந்த மலையாளத்தமிழ் எழுத்தாளர்கள் பலர் எங்கும் குறிப்பிடுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நேசமணி 1 கோடி சனங்களை பட்டம் தாணுப் பிள்ளையின் பிடியிலிருந்து காப்பாற்றி அவர்கள் மலையாளிகளாகாமல் தமிழர்களாக்கினார். (அக்கால காங்கிரஸ் தலைமை நெய்யாற்றின்கரைத் தமிழர்களை மலையாளிகளாக்கியதை மறக்கக்கூடாது). மா.அரங்கநாதன் தமிழ் இலக்கியத்தை "மலையாளத் தமிழ் எழுத்தளர்களிடமிருந்து" காப்பாற்றினார். நேசமணி சென்னையின் ஆட்சிக்குக் குமரி மாவட்டத்தைக் கொண்டுவந்ததைப்போல் மா.அரங்கநாதன் தமிழ்க் கற்பனையை சென்னையின் தொடர்பால் புதிய தமிழ்ப் படைப்பாய் உருவாக்கினார். இவை எல்லாம் தமிழ் அரசியலைச் சுற்றி நடப்பவையாகும்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 5,6) அரங்கநாதன் அய்யாவின் தத்துவம் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கு மிக முக்கியமான சாளரங்களைத் திறந்துவிடும் தன்மை வாய்ந்தது. "நல்லது - எல்லா பிரதேசங்களிலும் மேலூர், கீழுர் என்றும் தெற்கூர், வடக்கூர் என்றும் இருக்கலாம். ஆனாலும் இந்த மேலூர் மனித குல வரலாற்றின் ஒரு பகுதியை விண்டுவைக்கும் மாண்பைப் பெற்றுக்கொண்டுவிட்டது என்று சொல்ல வேண்டும். எல்லாக் கால கட்டத்திலும் மலையும், கடலும், வயலும் சார்ந்த இடங்கள் நம்மிடையே சிலவற்றைத் தோற்றுவித்து - தோல்விகண்டாலும் - படைப்பு ஒன்றை நம்மிடையே ஏற்படுத்திப் புதிய பொருளைத் தரும் ஒரு வாழ்வை, உலகிற்கு அளித்ததென்றால், இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒன்றின் மூலம் வன்முறை எத்தனை தூரம் மனித இனத்தை பாதாளத்திற்கு அனுப்பி வேடிக்கை பார்த்தது என்று தெரிந்து கொள்ள முடியும். கனவுகளும் விடுதலை உணர்வும் எத்தனை மகோன்னதமான விஷயங்கள் என்று புரிந்துகொள்ள முடியும். அற்புதமோ சிவனருளோ என்று மலைத்து நிற்கும் விஷயங்கள் எங்கும் எப்போதும் நடந்து தான் வந்திருக்கின்றன. என்றாலும் இங்கு நடந்தவை மகோன்னதமானவை என்பதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. கடவுள் என்பது ப்றறி முழுதான அறிந்து மெளனமடைந்தோரும், அது பற்றி மூடத்தனம் மிகுந்தோரும் இந்த மண்ணைவிட்டால் வேறெங்கு கணிசமாக இருந்திருக்கிறார்கள். அருள் என்ற சொல் இங்கே புதிய தொரு பொருளைப் பெற்றுக் கொண்டது என்று சொல்லமுடியும்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 67) என்று அவர் சொல்கையில், "பிராந்தியங்களால் கட்டப்பட்ட இந்தியாதான் சாத்தியம். ஏக இந்தியா அல்ல. இந்தப் புது இந்திய அரசியலைத் - தமிழ்ப் பிராந்தியம் முன்வைத்த 'அன்பு', ஆவுடை, இன்மை, சங்க இலக்கியம், திருமூலர், பாரதிதாசன், அரங்கநாதன் - எல்லாம் எல்லோரும் முழுங்க வேண்டும்" எனும் தமிழவன் கனவு கைகூடும் எனப்படுகிறது. "தமிழ்த் தன்மையே தமிழிலக்கியத்தின் பிரதானமான குணம். தமிழிலக்கியத்தை தமிழின் விளிம்புகளான மலையாளக் கட்டுக்கோப்பை வைத்து எழுதும் குமரி மாவட்டத்திலேயே தமிழின் அசலான எழுத்தாளரும் உதித்திருப்பது முரண்நகைதான்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 8) எனத் தமிழவன் சுட்டுவது எவ்வளவு உண்மை! "இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுச் சமூகக் கோட்பாட்டாளரான எமிலி துர்க்ஹைம் (Emile Durkhiem), அவருடைய உடன்பிறந்தாரின் மகனான மார்சல் மாஸ் (Marcel Mauss) இருவரும் மனிதர்கள் வகைப்படுத்திப் பார்க்கும் திறனானது நம்முடைய சமூகத் தன்மையின் (social nature) நீட்சியாகும் என்றனர். சமூகம் என்பது வகைப்படுத்தும் சிந்தனைக்கான ஒரு மாதிரியாக (model) இல்லை; சமூகத்தில் உள்ள சமூகப்பிரிவுகளின் வகைகளே வகைப்படுத்தும் முறைக்கான அடித்தளம் என்றனர். சமூக வகையினங்களே தர்க்கரீதியான முதல் வகையினமாகும். மனிதர்களுக்குள் ஏற்பட்ட வகைப்பாடுகளே முதல் வகைப்பாடாக அமைந்தது. இதன்பின் மற்ற வகையினங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அரை நூற்றாண்டுக்குப் பின் அமைப்பியல் மானிடவியலைத் தோற்றுவித்த கிளாட் லெவிஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) மனிதர்களிடம் காணப்படும் வகைப்படுத்தும் மரபென்பது உலகளாவியது என்றார். இது உலகளாவிய நிலையில் காணப்படுவதற்குக் காரணம் மனித மனம் தன்னேற்பாடாகக் கொண்டுள்ள எதிரிணைச் (binary opposition) சிந்தனை வழி ஏற்படும் 'ஆழ்நிலை அமைப்புகள்' (Deep strctures) ஆகும். இவை புறநிலையில் வெளிப்படும்போது காண்பவையே நம்முடைய வகைப்பாடுகள் ஆகும் என்பார். மனிதர்களின் அறிவுசார்ந்த செயல்பாடுகள் எல்லாவற்றையும் காணும்போது ஒழுங்குபடுத்துதல் (ordering) எனக்கூடிய ஒரு பொதுத்தன்மை காண்ப்படுகிறது. இப்பிரபஞ்சத்தில் மனித மனம் ஒரு பகுதியாக உள்ளது என்றும் இப்பிரபஞ்சங்கூட குழப்பத்தன்மை ஏதுமில்லாமல் ஓர் ஒழுங்கு நிலையில் பேணுவதும் இத்தகு ஒழுங்கு அமைவதற்குக் காரணமாகிறது." (சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்) இப் புதினத்தில் வருகின்ற முத்துக்கருப்பன் தொடர்ந்து அரங்கநாதன் அய்யாவின் சிறுகதைகள், படைப்புக்கள் அனைத்திலும் இருப்பவன்தான். நம் தமிழ்ச் சமூகத் தன்மையின், குறிப்பாகக் குமரி நாட்டுப், பஃறுளி ஆற்றுச் சமூகத்தின் நீட்சிதான் அரங்கநாதன் அய்யா தன்னை முத்துக்கருப்பனாக வகைப்படுத்திப் பார்க்கும் திறன். இந்த மரபென்பது உலகளாவியது எனும் லெவிஸ்ட்ராஸின் கூற்றை அரங்கநாதன் அய்யா தனது ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும் எனும் சிறுகதையில் - வெவ்வேறு கலாசச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய இருவரையும், இணைந்து பயணிக்கச் செய்து ஒரு கோட்டில் இணைக்கிறார்: "அவர்கள் இருவருமே நட்சத்திரங்களைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள். மலை, ஆறு, குளம்... இப்படி, இதைப் பார்ப்பதினால் பலவிதமான உண்மைகள் அவனுக்குத் தெரிகிறது என்று நான் கருதுகிறேன்" (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்) லெவிஸ்டாஸ் சொன்ன ஒழுங்குபடுத்துதுதல் எனும் பொதுத்தன்மைதான் அந்த இரண்டு பேரையும் ஒரு Universal Man ஆக ஆக்குகிறது. இதைப் போலவே காளியூட்டிலும் ஒரு மலையும், ஆறு பார்க்கும் காட்சி முன்வைக்கப்படுகின்றது. "ஒரு குழந்தை போல ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. மலையிலிருந்து தோன்றிவிடுகின்ற ஆற்றிற்கு ஓர் அழகு. இந்த ஆறும் அப்படித்தான். வடக்கேயுள்ள மலையில் தோன்றி தெற்கே கடலில் சேர்கிறது. கிழக்கே மருந்து வாழ்மலை. அந்த மலையிலிருந்து கொண்டும் இந்த ஆற்றின் கதியைப் பார்க்க முடியும். சிவ.முத்துக்கறுப்பனுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதென்றால் சுடலை முத்துக்கருப்பனுக்கு ஆற்றங்கரையிலிருந்து கொண்டு மலைகளைப் பார்க்கும் வாய்ப்பு" எஸ்.சண்முகம் தனது நேர்காணலில் கேட்கிறார், "எல்லா கதைகளிலும் முத்துக்கருப்பன் வருகிறார் அல்லவா? சில கதைகளில் முத்துக்கருப்பன் இரண்டாக வந்திருக்காரா? இருக்கும், சில கதைகளில் இருக்கும். மகத்தான ஜலதாரைல பேரே சொல்லவில்லை. கருப்பன் சாவடின்னு அந்த ஊர் அழைக்கப்படலாம் என்பதால், அந்த ஊருக்குக் காரணமானவன் முத்துக்கருப்பன்னு ஆகிவிட்டது. இந்த மாதிரி சில கதைகளில் வந்திருக்கிறது. முத்துக்கருப்பன் பிரதியில் இரட்டையா எழுதியிருக்கீங்களா? இரட்டைகளாகவும் இருக்கிறது. அப்ப இரட்டைகளை யூஸ் பண்ணுகிற யுக்தி எப்படி? ஒரு குறிப்பிட்ட கதையில மட்டும் முத்து என்று ஒருவனும், கருப்பன் என்று ஒருவனும் வருவதாக சொல்லியிருக்கிறேன். மற்றபடி, தமிழ்நாட்டிலே முத்துக்கருப்பன் என்ற பெயர் பொதுவாக இருக்கிறதால அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஏன் இந்த முத்துக்கருப்பன் பெயரையே..? அதுதான் சொன்னேனே.. பொதுவாக தமிழ் சொசைடியில் எங்கே எடுத்துக் கொண்டாலும், கன்னியாகுமரியோ, திருநெல்வேலியோ, ராமநாதபுரமோ, மதுரையோ, திருச்சியோ, விழுப்புரம் வரையுமே எங்கே எடுத்துக் கொண்டாலும், முத்துக்கருப்பன் பிள்ளை, முத்துக்கருப்பன் செட்டியார், முத்துக்கருப்பன் நாடார் - என்று இந்தப் பெயரில் எல்லோருமே வந்திருக்கிறார்கள். ஸோ, அதில் ஒரு ஒன்நெஸ் கிடைக்குமோ என்ற நம்பிக்கை எனக்கு இருந்திருக்கலாம்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 43) "சில விஷயங்களை நானாகச் சொல்ல முடியவில்லை அப்ப முத்துக்கருப்பன் எனக்கு ஹெல்ப் பண்ணுகிறான்" என அரங்கநாதன் அய்யாவே ஒத்துக் கொண்டுள்ளார். அதுவே அவரை ஒரு Universal Man ஆக வெளிப்படுத்தப் பயன்படுகிறது. இப்புதினம் ஒரு வாசகியாக எனக்கு ஒரு நிறைவையும், படைப்பனுபவத்தின் விகாசமான பகிரலையும் சற்று அதீதமாகவே தந்தது. ஏனென்று யோசித்தால் - அதற்குரிய பதிலையும் அய்யாவே தருகிறார். "புதுமைப்பித்தன் கதைகளில் வரக் கூடிய ஒன்றுபட்ட தன்மை... ஓ... இது நம்ம ஊராச்சே, இது நம்ம இடமாச்சே... இந்த சாப்பாட்டை நாம் சாப்பிட்டிருக்கிறோமே... இதுபோன்ற ஒன்றுபட்ட தன்மையை மெளனியின் கதைகளில் பார்க்க முடியவில்லை." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்: 30) என்கிறார். எனக்கும் பேச்சி, முத்துக் கறுப்பன், இது எல்லாமே நம்ம ஊர், நம்ம இடம், என்கிற ஒன்றுபட்ட தன்மையைத் தருகிறது. ஆனால் அது மட்டும்தானா, அந்தத் தமிழ்த் தன்மை, தமிழ் sensibility மட்டும் தானா இதன் பலம்? இந்தப் புதினத்தின் கட்டுமான அடித்தளம் அதுதான். ஆனால் அது தொடுகின்ற உயரம் அசாரணமான உலகப் பொதுத்துவம் உடையதல்லவா? அதன் விஸ்தீரணம் வைதீகத்தை அடிவேரறுத்து, the journey is more important than the destination என்பதை 'முன்னால் அந்த மலை இல்லை' என்கிற இன்மைத்துவத்தை, Phallic Symbol க்கு எதிராகத் தென்னாட்டின் ஆதி ஆவுடையை நிறுத்துகின்ற தத்துவத்தை தனது கதாபாத்திரங்கள், அவர்தம் உரையாடல்கள் (குறிப்பாகப் பப்புக்குட்டி, மீனாட்சி) மூலம் "கண்டறியாதன கண்டேன்" எனத் தருவதல்லவா? அரங்கநாதன் அய்யாவின் இலக்கிய கோட்பாடு என்னவென்றால் "உள்ளுணர்வு சார்ந்த ஒரு கலாச்சார அறிவை அல்லது புரிந்து கொள்ளலை" ஒரு படைப்பனுபவமாக தமிழ் அழகியலோடும், நவீனத்துவத்துடனும் முன் வைத்தல். இதுதான் வனப்பேச்சியை, முத்தாலம்மனை, கன்னிமார்களை, சீலைக்காரியை "எஞ்சோட்டுக்காரிகளாக" எண்ணும் என்னை அவரிடம் ஈர்க்கிறது. ஆனால் ஈர்ப்பது மட்டுமே ஒரு படைப்பின் பணியல்ல - கட்டி இழுத்து, கழுத்தைத் திருப்பவிடாமல் அதனுள் அமிழ்த்தி இறுக்கி, அதன் சுகமோ, துக்கமோ - ஒரு உண்மை அனுபவத்தை மாந்தத் தருவது. அது இப்பிரதியில் எனக்கு எங்கு கிடைக்கிறது? "The pleasure of text" என்பதைத் தாண்டி "the desire for the text" என்பது இப்புதினத்தில் எனக்கு எங்கு நிகழ்கிறது? "தொல்லுலகில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் பெண் தெய்வ வழிபாடு மாறி கடவுள் ஆண்மகனாக தெரிய வந்தார் என்று சொன்னார்கள். இந்த சமஸ்தான மண்ணில் அதை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தண்ணீரால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்ட இடந்தவிர மாற்ற எல்லா பிரதேசங்களும் அன்னை வழிபாட்டில் ஒன்றையொன்று மிஞ்சின. தானாகத் தோன்றியதாகையால், அந்த இயற்கை வழிபாட்டிற்கு எந்த எதிர்ப்புமில்லை. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 47) - இது தமிழ்த் தொன்மம் சார் வாழ்வின் ஒருகீற்று என்றால் – "தாடகை மலைப்பக்கம் கணியக்காரர் உலவினர். காட்டுப்புதூர் பக்கம் மாடுகள் மேய்ந்தன. மேலூர் பக்கம் உழுதனர். எல்லாரையும் பாலித்த அருள் அந்த அம்மை. கணியக்காரர் மந்திரத்தில் வல்லுநர். அவர்களில் சிலர் சித்துகளில் இறங்கி நகரங்களுக்குச் சென்று அங்கே அவர்கள் பெயர் பத்திரிகைகளில் வரும் அளவிற்குப் பிரசித்தி பெற்றனர். தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" - இது அதன் வலிமையின் உரத்தோடு அதனை உயரத்தாண்டும் ஞானம். மேற்சொன்ன பத்தியில் உள்ள அந்தக் கடைசி வரி தான் என்னை அமிழ்த்தி, அடித்துப் போடுகின்ற அனுபவம். "தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" இந்த ஒரு புள்ளியில் பெரியாரும், திருமூலரும் ஒரு சேரச் சந்திக்கிறார்கள். தன்னை ஆட்கொள்ளாத உதவாக்கரை மந்திரம் - வெங்காயம் எனலாம் பெரியார். "தெய்வம் அவதாரம் எடுத்து வருவதில்லை. தானாகவே தோன்றும்" - எனலாம் திருமூலர். "வண்டே, நாங்களெல்லாம் உண்மையைத் தேடி வீணாய்ப் போனோம். நீயல்லவா அதைக் கண்டு விட்டாய் நேரடியாக" - எனத் தானாகவே வருகிற ஞானம் - எனலாம் காளிதாசன். இந்த "வாழ்க்கை சார்ந்த இன்மை" தான் ஞானம் என உலகளாவிய உண்மையைச் சொல்வதுதான் - மதம் சார்ந்த இன்மை அல்ல - ஒரு பொதுத்தன்மையை அரங்கநாதன் அய்யாவின் அனைத்துப் படைப்புகளுக்கும் தருகின்றன - குறிப்பாக, அவரது இந்தப் புதினத்திற்கும். இந்த அவைதீக ஞானத்தினாலேயே அவர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகவும் கொண்டாடப்பட வேண்டியவர். இதைத் தானே தனது முன்னுரையில் சா.கந்தசாமியும், "வாழ்க்கையைப் போலவே எளிதாகவும் - புரிவது மாதிரியே புரிபடாமலும் இருப்பது. அறிந்ததையெல்லாம் அர்த்தமிழக்க வைப்பது. புதிதாகப் பொருள் கொள்ள வைப்பது... அகத்தை அறிகிற போது புறம் தான் வசப்படுகிறது", என்கிறார். 'ஆன்மாவைப்' பற்றி ஆதித் தமிழன் சிந்தித்தவனல்ல நடைமுறை வாழ்வியல் தத்துவவே ஆதித் தமிழரின் மரபு. "இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரை" என்று உணர்ந்து வாழ்ந்தவன் அவன். இப்புதினத்தில் "தலையெண்ணி பாகம்" என்றொரு வழக்கம் பற்றிய குறிப்புண்டு. "பெத்தாச்சியா பிள்ளையின் தமக்கையொருத்தி "தலையெண்ணி பாகம்" வேண்டுமென்று தன் பெற்றோர் மீதே வழக்கொன்று தொடர்ந்து குடும்பச் சொத்தில் அதிக பாகத்தைப் பெற்றிருந்தாள். "அந்தப் பிரதேசத்தில் வழக்கிலிருந்த ஒரு முறை விசித்திரமாகவும் அதே சமயம் ஏதோ ஒருவகை நியாயத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. ஒருவரது பிள்ளைகள் கல்யாணமாகிக் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டபின்னர் குடும்பச் சொத்தைப் பங்கிட வேண்டும் என்ற நிலை வருகையில், அந்தப் பாகம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். மூத்தவனுக்கு ஒரு குழந்தையிருந்து அவன் தம்பிக்கோ தங்கைக்கோ நாலு குழந்தையிருந்தால், அதிக குழந்தை உள்ளவர்கள் அதிக பாகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதை தலையெண்ணிப் பாகம் என்றார்கள். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 50) மிக முக்கிய மரபு வழக்கொன்றைக் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார் இப் புதினத்தின் போக்கில் அரங்கநாதன் அய்யா. இந்த இயல்பான வாழ்வியல் அறம் தொலைகின்ற, தடம் புரள்கின்ற கணங்களைச், சம்பவங்கள் வாயிலாகக் கோர்த்து சொல்கையில் நமது தமிழ்ச் சமூக மரபின். வழக்கங்கங்களுக்கும், தனி மனிதச் செயல்களுக்குமடையே உள்ள உறவையும் உட்புகுத்தி, இப்புதினத்தை readable as well as a questioning work of art ஆகச் செய்கிறார். இதன் மூலம் தமிழ்ப் பிரதேச அமைப்பும், உணர்வும், செழுமையும் என்றால் இதன் வலிமையான இலக்கு உலகம் தழுவிய ஞானமும், கனிதலும், பூரணத்தை உணர்கின்ற இன்மையும். இயற்கை, மனிதன், சிந்தனை ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைத் தர்க்க ரீதியான உரையாடல்கள் மூலம் ஆய்வதல்ல இவரது தத்துவங்கள். கதாபாத்திரங்கள் பேசுவதைவிடச் சம்பவங்களில் பங்கேற்பவர்களாகவோ, சாட்சிகளாகவோ, வேடிக்கை பார்ப்பவர்களோ புனையப்பட்டு அதன் வாயிலாகவே கேள்விகளும், தேடலும், ஞானமும் கைவரப் பெறுகின்றன. இப் புதினத்தில் ஒரு மாடு இறந்துவிட, அதனை அப்புறப்படுத்த மறுக்கும் குழுவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அச்சம்பவத்தையொட்டி ஒரு தெளிதலும், புரிதலும், கனிதலும் - பயணம் என்பது அதற்கான தயாரித்தலே எனும் ஞானமும் சொல்லப்படுகிறது. "குளிக்க வந்தவர் ஒருகணம் சமைந்து நின்றார். "இதுக்காகத்தான் ஒன்னை வைச்சிருக்கோம்" என்ற வாக்கு எத்தனையோ விஷயங்களைத் தனக்கு அறிவுறுத்தியதாக பிறகு கூறினார். அது உண்மைதான். நிலமுள்ள விவசாயிகள் செய்த அபத்தமான - அசுரத்தனமான - ஆனால் அவசியம் என்று கருதப்பட்ட அநியாயம். நிலமற்றவன் நமது உறவினனாக இருந்தால் கூட வேறு வேலை செய்யட்டும். பரம்பரை பரம்பரையாக அவர்கள் அந்தந்த வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும் என்ற மனநிலை நிலமற்றவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்று கேட்டுக்கொண்டார். இந்த செத்தமாடு இழுக்கும் குழுவனும், இராப்பாடியும் பனையேறி பிழைப்போரும் நிலமுள்ளவராக இருந்துவிட்டால் - அப்படி இருந்தவர்கள் தாமே என்றும் கேட்டார் - ஏதோ திடீரென மாறிவிட்ட ஒரு பேராசிரியர் போல கேட்டார். நாடு விடுதலையடைந்த பின்னரே பயணம் உண்மையில் ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார் போலும். இந்தப் பயணத்திற்குச் சாலைகள் கிடையாது. மண் போட்டு சாலைகளை உண்டு பண்ணுவதுதான் பயணம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 46) இதில் பெரிதான தர்க்க மனோபாவம் இல்லை. ஒரு திடுக்கிடல், திகைத்தல், தேடுதல், உணர்தல், ஞானம் என்கிற எளிய உத்தி தான் இருக்கிறது. போலவே "எல்லாம் எனது ஊர் - எல்லாரும் என் சொந்தக்காரர் என்று தானாக எல்லாரிடமும் வரும் கடவுள் குணத்தை கொண்டிருக்க வேண்டிய ஒரு கூட்டம் - எப்படி ஆயிற்று - ஏன் ஆயிற்று - கேள்விகளை மட்டும் கேட்டிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். பதில் வேண்டாம். அதற்குக் கூட வக்கற்று விட்ட பாட்டன்மார் செய்தவை எப்படி எப்படி ஆட்கொண்டு விட்டது - அந்நிய ஆட்சி - என்றெல்லாம் சொல்லத்தெரிகிறதல்லவா - இதைப்பற்றி கொஞ்ச நஞ்ச எண்ணமாவது ஏற்பட்டதுண்டா?" (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 57) என்பதிலும் ஒரு ஆற்றாமை, ஆதங்கம், அதே சமயம், "யாதும் ஊரே" என்ற கணியனாரின் பரந்த மானுடப் பார்வையைக் கடவுள் குணமெனச் சுட்டும் தரிசனமும் இருக்கிறது. புதினம் நடக்கின்ற கதைக்களம் சுதந்திரத்திற்கு முன்-பின் என்கின்ற விரிவான பின்புலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேச விடுதலைக்குப் பின் ஊர் திரும்புகின்ற குற்றாலிங்கம் இப்போது பிற விஷயங்களில் கவனம் செலுத்தகிறார். அவற்றில் மலை வாழ் மக்கள் குறித்த அவரது கரிசனம் மேலூர் வாசிகளைப் பின்வருமாறு ஆச்சர்யப்படுத்துகிறது. "நேதாஜியைப் பற்றிப் பேசக் கூடியவர் என்பதுதான் பொதுவாக குற்றாலிங்கம் பிள்ளையைப் பற்றி மேலூர் அறிந்த விஷயம். விடுதலைப் போராட்டம் பற்றிப் பல்வேறு சங்கதிகளைச் சொன்னவர்தாம் அவர். இப்படி இவர் அடிப்படையிலேயே வேறு விஷயம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது போல ஊர்க்காரர் பார்த்துக் கொண்டனர். மலைவாழ் மக்கள்தாம் மாடுகள் மேய்த்தனர் - கடலில் மீன் பிடித்தனர் - உழவைக் கண்டு பிடித்தனர் - சரிதான் - யார் இல்லை என்றார்கள் - ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் மாறி இருந்தாலும் அடிப்படை இதுதான் - மனித குல வளர்ச்சி சமாச்சாரம் அல்லவா இது - உண்மை - அதைப் பற்றி இப்போது என்ன வந்தது? இத்தனை காலமும் வராத ஒன்று. அதுதான் புரியாத ஒன்றாக இருந்தது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 40) குற்றாலிங்கம் காளியூட்டு பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பூசனை காலங்காலமாக நடந்து வந்ததென்றால், அதன் காரணம் இந்த ஊர் மக்கள் விவசாயத்தைப் பற்றியும் குடும்பங்கள் பற்றியும், வரவிருக்கிற மாதங்களின் காலநிலை பற்றியும் பேச ஒரு வாய்ப்பைத் தருவதற்காகத்தான் என்றார். அந்த வாய்ப்பு சரியானபடி நிறைவேற்றப்பட்டால், அது மேலான ஒரு நிலைக்கு நம்மை எடுத்துச்சொல்லும் - அது தவிர மற்றவை நம்மை பாதாளத்திற்கு அனுப்புகிற வெறும் சடங்குகள் தாம் என்றார். கற்ற கல்வி மூலமாக வந்தடைந்தவை என்று அவரது கூற்றை சொல்ல முடியாது. சொல்ல முடியாத விஷயங்கள் பல இப்படித்தான் வெளிவரும் என்று சொல்லிக் கொள்ளலாம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 41) நம் இனக்குழுவின் தொன்மம், இயற்கைத் திணை வாழ்சார் பின்புலம், விவசாயம் செய்கின்ற சமூகத்திலும் பொருளியிலில் ஏற்றத்தாழ்வு, பெளதீக உலகோடு இயைந்திருத்தல் - அதே சமயம் 'இன்மை'க்கான தேடல்- இவற்றின் கலவையாகக் குற்றாலிங்கத்தின் கூற்றைக் காணலாம். மிகத் தீவிரமாக வெறும் சடங்குகளென மாறிவிடும் அபாயமிருப்பதைச் சுட்டுகின்ற அதி நவீன அவைதீக மனமும், கூடவே பகுத்தறிவினால் முற்றுமுணர முடியாத அனுபவ ஞானமும், இப் புதினத்தினைக், கூட்டு மரபின் உன்னதத்தையும், தனி மனித மனதின் தென்னாட்டு சிந்தாந்தமுணர்ந்து கனிதலையும் மிகச் சரியானதொரு கலைப்படைப்பாக மாற்றுகின்றது. "காரணம் எதுவும் இல்லாம - பிடிபடாம - ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம் - எப்பவும் அப்படித்தான் இருக்கப்போறோம்" "கோமரத்தாடிக்காரங்களிலிருந்து இராப்பாடி வரை இந்த சாமி ஒரே மாதிரி பேசுவாரு" "இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்". (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 49) புதினத்தில், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசுவது போலல்லாமல், மேற்சுட்டியது போல பல தெறிப்புக்கள் இருக்கின்றன. இதனை நாவலாசிரியரின் குரலாகவே நான் உணர்கிறேன். "இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்" என்கிற அந்த துலக்கமற்ற, ஆனால் உறுதியான பரப்பு தான் - அந்த hypenated space தான் - அதில் இயங்குவதுதான் அரங்கநாதன் அய்யாவின் பலமும், உத்தியும். "இந்தத் துணைக் கண்டத்தில் தோன்றிய எந்தத் தத்துவத்தையும் தமிழர்கள் அறியாமலில்லை. அவற்றை ஆராயாமல் இல்லலை. மணிமேகலையும். நீலகேசியும் அதற்கான இலக்கியபூர்வமான சரித்திரப் பதிவுகளாக உள்ளன. சமயங்கள் எனப் பேசப்பட்டடாலும் அவரவர் கடவுள் குறத்த பெருமைகளையும். சடங்கு சமபிரதாயங்களையும் அவை வாதித்துக் கொண்டிருக்கவில்லை. நவீன உலகின் தத்துவத் துறை இப்போதும் எந்தெந்தக் கூறுகளைத் தர்க்கித்துக் கொண்டிருக்கிறதோ அவற்றையே அன்றைக்கு விவாதித்திருக்கிறார்கள்" - எனத் தமிழர்கள் குறித்துப் பெருமிதப்படுகிறார், அருணன். (தமிழரின் தத்துவமரபு - அருணன்) அவ்வகையிலேயே, ஆவுடை என்கிற தென்னாட்டுத் தத்துவத்தையும் முன்வைத்து, ஒரு நவீன படைப்பாளிக்குரிய கூர்மையான, விசாலமான, சமகாலச் சிக்கல்களுக்கும் பயணிக்கிறார் அரங்கநாதன் அய்யா. "ஒன்று நிச்சயம். மனிதர்கள் எப்போது மதங்களின் பிடியிலிருந்து விலகி தத்துவத்தைச் சார்ந்து நிற்கிறார்களோ - நம்பிக்கையின் பிடியிலிருந்து தப்பி பகுத்தறிவின் வசம் வந்து சேருகிறார்களோ - அப்போதே நாகரீகம் தொடர் வளர்ச்சியைக் காண்கிறது. ஐரோப்பிய கண்டத்திலும் மதங்கள் இருந்தன. ஆனால், தத்துவஞானிகள் அவற்றை மட்டும் சார்ந்து நிற்கவில்லை. தத்துவத்தை ஒரு தனித்த அறிவுப் பிரிவாக வளர்த்ததார்கள். அதனால்தான் அங்கே தத்துவம் வளர்ந்தது. அதைத் தொடாந்து விஞ்ஞானம் வளர்ந்தது. தொழிற்புரட்சி நடந்தது. ஒரு புதிய சமூகம் பிறந்தது. இந்த மண்ணில் அது நடக்காமல் நிலப்பிரபுத்துவ சமூகமாகவே முடங்கிப் போனதற்கான முக்கியமான காரணம் தத்துவம் தனித்து வளர்கப்படாமல் மதங்களுக்குள் - குறிப்பாக சைவ, வைணவ மதங்களுக்குள் - கரைந்து போனது" - என்று அருணன் மேலை நாடுகளின் போக்கிலிருந்து இந்தியத் தத்துவ மரபைப் பிரித்துக்காட்டுகிறார். ஆனால் அரங்கநாதன் அய்யா இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார். தத்துவம் - குறிப்பாக ஆதித் தமிழர் வாழ்வில் சங்க காலத்திற்கு முன்பாகவே, தொல்காப்பியருக்கு முன்பாகவே, இந்த மண்ணுக்கென்று ஒரு சித்தாந்தம் இருந்திருக்கின்றது. தானாகவே வருகின்ற ஞானம் தானது என்கிறார் அரங்கநாதன் அய்யா. அவரது இந்தப் போக்கு எனக்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் கூற்றை நினைவூட்டியது. டாக்டர். இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரது மாணவரான அவர், பின்னாட்களில் இவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கின்ற மார்க்சியப் விமர்சனப் பார்வையுடையவராகத் தன்னைச் செதுக்கிக் கொண்டவர். மிகக் குறிப்பாக சட்டோபாத்யாயா "கடவுள் என்ற கருத்து தோன்றுவதற்கு முன்னிருந்த நாத்திகவாதம் என்று ஒன்று இருந்தது - அது தாமிர இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன்னிருந்த விவசாயப் பொருளாதாரத்தின் விளைபொருள் ஆகும். இதற்கு லோகாயதா என்று பெயர். இதன் பொருள் உலகத்தை அது உள்ளவாறே புரிந்து கொள்வது என்பதாகும். இது மாய வித்தைகளையும் மந்திரங்களையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. இதனை ஜார்ஜ் தாம்ஸன், ஜோசப் நீடாம் போன்றவர்களின் நூல்களைக் கொண்டு ஆசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகள் ஒரு கருத்தியல் சிந்தனை என்பது எப்படி ஒரு பொருளாதார நடவடிக்கையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கு கின்றது" - என அவரது பங்களிப்பு குறித்து பதியப்பட்டுள்ளது. (தமிழரின் தத்துவமரபு - அருணன்) இந்த 'லோகாயதா' தான் அரங்கநாதன் அய்யாவின் இன்மைக்கு அருகில் வருகின்ற தத்துவ மரபு என நான் கருதுகின்றேன். 'வாழ்க்கை சார்ந்த இன்மை' என்பது 'லோகாயதா' தான். அதனையே முத்துக்கருப்பன் மூலமாகச் சொல்கிறார். இதற்கு அய்யா தருகின்ற விளக்கம் அபாரமானது. "அவனுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்துத்தானே சொல்ல முடியும். ஒரு கிரியேட்டிவ் லிட்டரேச்சரோட கிரியேட்டிவ் இலக்கியப் பண்பே இதுதானே. உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைக் கொண்டு இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறோம். அதை அவன் சொல்கிறான். தேரோட்டம், தேர் போகிறது, விழா எடுப்பதெல்லாம் அந்த ஊர் வழக்கம். ஒரே கலகலப்பாக இருந்தது, இப்போது அந்தக் கலகலப்பு இல்லை. அசைவின்மையை எப்படிச் சொல்ல முடியும்? அசைவின் மூலம்தான் சொல்ல முடியும். ஒண்ணுமே இல்லாத ஒன்றை அணில் ஓடுவதன் மூலமாக இன்னொன்றைச் சொல்வதுதான். இந்தக் கவிதைப் பண்பு மனசை ரொம்பக் கவர்ந்தது. பூங்குன்றனார், அணிலாடு முன்றிலார் இன்னும் ஒன்றிரண்டு பேர் எல்லாருமே ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பேர்கூடத் தெரியாது. இது இன்மையைப் பற்றியுள்ள சமாச்சாரம்தான். இது எனக்கே தெரியாமல் உள்மனதில் இருந்திருக்கலாம். இது ஒரு வெளிப்பாடு." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 24) வெறும் தத்துவ விசாரம் மட்டுமா காளியூட்டு? ஒரு திருவிழாவினை குவிமையப்படுத்திச் சம்பவங்களின் கோர்வையை அதில் கரை தட்டி நிற்கச் செய்வதன் தாத்பர்யம் என்ன? அரங்கநாதன் அய்யாவே அதற்கான விடையையும் தருகின்றார்: "காளியூட்டு என்பது ஒரு கிராமத்துத் திருவிழா. அந்த விழாவைப் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் திருவிழாவைப் பற்றியே ஒரு நாவல் எழுதணும் என நீங்கள் எண்ணியது ஏன்?" எனச் சண்முகம் தனது நேர்காணலில் கேட்க, அதற்கு, "முதல் காரணம், கிராமங்களிலுள்ள ஆட்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு கோயில். அந்த கோயிலில் நடைபெற்று வருகிற திருவிழா. இது நாஞ்சில் நாடு முழுவதும் நடக்கக்கூடிய திருவிழா. திருநெல்வேலியிலும் நடக்கும் காளியூட்டுன்னு பேரு. காளிக்கு நாம உணவு கொடுக்கிறோம். மழை பெய்யாத காலத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை விழா நடத்துவாங்க. மூணு நாள் நடத்துவாங்க. திருவாதிரை நட்சத்திரத்துல ஆரம்பிச்சு பூசம் நட்சத்திரம்வரை நடைபெறும். 'ஆதிரை சிவனுக்கு பூசம் சேயோனுக்கு' பழமொழி சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். காளியூட்டு சமயத்தில் ஒரே சாதி மக்கள்தான் இங்கே கூடுவாங்க. ரொம்ப தயவுபண்ணி ஆதிதிராவிடர் மக்களை வெளியே உக்காரும்படியா சொல்லுவாங்க. பிராமணர்கள் வரமாட்டார்கள். பகல், ராத்திரின்னு மூணு நாட்கள் இந்த விழா நடக்கும். வைதீகச் சாயல் துளியும் இருக்காது. இந்த விழா முடிந்தவுடனேயே, அநேகமாக மழை பெய்யும். ஒரு தடவை மழை பெய்யுறத நான் பார்த்திருக்கிறேன். அதுக்கு காரணம் என்ன்னா அப்ப கத்திரி வெயில் முடியும். அதுக்கப்புறம் மழை பெய்யதானே செய்யும். அதை நியாயப்படுத்தலை. மழை பெய்யத்தான் செய்யும். மழை பெய்யுற காலத்தல விழாவை ஆரம்பிக்கிறாங்க. அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் இருக்கிற சாதிவெறியும், வைதீக மனப்பான்மையும் பிராமணர்களைவிட அதிகம். அதைத்தான் சொல்ல வந்தேன்," எனப் பதிலளிக்கிறார். வைதீகம் என்பது மனப்பான்மை, அது பிராமணர்களிடம் மட்டுமே இருப்பதல்ல என்கின்ற அதி நவீன மனதின் படைப்புச் செறிவே காளியூட்டு. இதுவே புதியதொரு கோணத்தை இப்புதினத்திற்குத் தருகிறது. இப்புதினம் பக்க அளவில் சிறியதுதான். 79 பக்கங்கள் தான். ஆனால் அளவல்ல ஒரு புதினத்தின் வீர்யத்தைக், காத்திரத்தைத் தீர்மானிப்பது. கால அளவில் நீண்டதொரு கதைக் களம், மேலூரின் மாந்தர்கள், அவரது வாழ்வில் நேர்ந்த சம்பவங்கள் இவற்றின் வாயிலாக இப் புதினத்தைச் செதுக்க அரங்கநாதன் அய்யா காலம் சார்ந்த கதைசொல்லல் எனும் உத்தியைப் பயன்படுத்துகின்றார். "கதை சொல்லி சம்பவங்களை அவை நிகழ்ந்த காலத்திலிருந்தோ அல்லது கொஞ்ச காலம் கழித்தோ அல்லது நீண்ட காலத்துக்குப் பிறகோ குவிமையப்படுத்தலாம். சம்பவம் நிகழ்ந்த அந்த நேரத்தில் குவிமையப்படுத்துபவருக்கு என்ன தெரிந்ததோ அல்லது அவர் என்ன நினைத்தாரோ அல்லது காலத்தால் தள்ளி நின்று பார்ப்பதால் கிடைக்கும் அந்தப் பின்னறிவு அனுகூலத்தோடு அவர் (கதை சொல்லி) விஷயங்களைப் பிறகு எப்படிப் பார்த்தாரோ அவற்றின் மீது குவி மையம் பிரயோகிக்கப்படலாம். கதை சொல்வதற்காகக் காலம் சார்ந்த குவிமையப்படுத்தல் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கதையாடலின் விளைவுகளில் மிகப்பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டாகத் துப்பறியும் கதைகளில் குவிமையப்படுத்துபவருக்குப் புலன் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன தெரிந்ததோ அது மட்டுமே விவரிக்கப்படும். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது" என்கிறார் ஜானதன். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144,145) இப்போது நான் உரையின் துவக்கத்தில் ஆரம்பித்த நிறைவுப் பகுதிக்கு வரலாம். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல்கள் இங்கும் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது - ஆனால் அது ஒரு உத்தி என அறியாமலேயே வாசகர்களாகிய நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வேண்டுமோ அது மட்டுமே தரப்பட்டது. காளியூட்டுத் திருவிழாவிலோதான் உச்சகட்டமான திருப்பங்களுக்கான முழுத் திருப்தியுமடைகிறோம் நாம். அடுத்ததாக, பார்வைக் கோணம் - யார் பார்க்கிறார்கள்? "கதையாடல் குறித்த விவாதங்கள் 'கதை சொல்லப்படும் பார்வைக் கோணம் (point of view)' பற்றி அடிக்கடிப் பேசுகின்றன. ஆனால் பார்வைக் கோணம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவது, யார் பேசுகிறார்கள்? மற்றும் யாருடைய பார்வை முன்வைக்கப்படுகிறது? என்ற இரு வெவ்வேறான கேள்விகளைக் குழப்பிக் கொள்கிறது. ஹென்றி ஜேம்ஸின் நாவலான 'மேஸீ தெரிந்துகொண்டது (What Maisie knew)' என்பதன் கதைசொல்லி ஒரு குழந்தை அல்ல; ஆனால் மேஸீ என்ற ஒரு குழந்தையின் பிரக்ஞையின் ஊடாகவே நாவல் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது. மேஸீ கதை சொல்லி அல்ல; 'அவள்' என்று படர்க்கையிலேயே அவள் வர்ணிக்கப்படுகிறாள். ஆனால் நாவல் பல விஷயங்களை அவளுடைய பார்வையிலேயே வழங்குகிறது. எடுத்துக் காட்டாக, அவளைச் சுற்றியுள்ள வயது வந்தோர்களுக்கிடையேயான உறவுகளின் பாலியல் பரிமாணம் அவளுக்கு முழுக்கப் புரிவதில்லை. கதையாடல் குறித்த கோட்பாட்டாளர்களான மீக்கே பல் (Mieke Bal) மற்றும் ழெரர் ழெனெத் (Gerard Genette) போன்றோரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கலைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமானால் இந்த நாவலின் கதை அவள் வழியாகக் குவிமையப்படுத்தப்படுகிறது. இங்கு அவருடைய பிரக்ஞை அல்லது நிலையின் ஊடாகச் சம்பவங்கள் குவிமையப்படுத்தப்படுகின்றன. 'யார் பேசுகிறார்கள்?' என்ற கேள்வி 'யார் பார்க்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து வேறுபட்டது. யார் பார்வைக் கோணத்திலிலிருந்து சம்பவங்கள் குவிமையப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன? குவிமையப்படுத்தப்படுபவர் கதை சொல்லியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பல மாறுபடும் நிலைகள் இங்கே உள்ளன" என்று தொடர்கிறார் ஜானதன் கல்லர். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144) இங்கு, முத்துக்கருப்பனது பார்வைக் கோணத்திலிருந்து புதினம் விவரிக்கப்படுகிறது. இடையிடையே பல கதாபாத்திரங்கள் பேசலாம் - பேசுகிறார்கள். ஆனால் "யார் பார்க்கிறார்கள்?" என்ற கேள்வி தான் இங்கு மிக முக்கியம். அவ்வகையில், முத்துக்கருப்பனே முன்னிலை பெறுகின்றான். அவனது பிரக்ஞையினூடாகவே புதினம் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது. "அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்து கோய்க் கொண்டிருந்தான்" என்று சுடலை முத்துக்கறுப்பனிடமிருந்து துவங்குகிற புதினம், "அவன் தன்னையே பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்" என்று சிவ முத்துக்கறுப்பனோடு முடிகிறது. 79 பக்கங்களில் "தமிழின் உயிர்த்துவம்" அனைத்தையும் பொதிந்து இப் புதினத்தைப் படைத்திருக்கிறார். இது சுருக்கமல்ல - செறிவு. இதனைச் "சுருக்கமாக எழுதி இருக்கிறீர்களே உங்கள் படைப்புக்களை" என எஸ்.சண்முகம் கேட்க, அதற்கான பதிலாக, "நான் சாண்டில்யனோ, வை.மு.கோதைநாயகியோ இல்லை. இன்னும் பத்து பக்கம் வேணுமா? பிரஸ்ல உக்கார்ந்துகிட்டு கொடுங்க பேப்பரன்னு சொல்லி, இன்னொரு பத்து பக்கம் எழுதித் தருவதற்கு நம்மால முடியாது." என்கிறார் அரங்கநாதன் அய்யா. மேலும், "அந்த சுருக்கத்துக்குக் காரணம் இதுதானா? இல்ல, உங்க சிந்தனை முறையிலேயே அந்தச் சுருக்கம் இருக்கிறதா?" எனச் சண்முகம் கேட்க, "ஹெமிங்வே நூறு பக்கத்துல நாவல் எழுதிக் கொடுத்துட்டு பதிப்பாளர்கள் 'ஒரு பேரா சேர்க்கணும்'னு சொன்னபோது, 'ஒரு வரிகூட சேர்க்க முடியாது'ன்னு சொன்ன மாதிரி நம்மால முடியாது. புத்தகத்தை நாம் படிக்கிறோம். புத்தகமும் நம்மைப் படிக்கிறது என்று ஆங்கில அறிஞர் ஒருவர் சொன்னார். அதுமாதிரி ஞானக்கூத்தன் கவிதையைப் படித்தாலோ அல்லது வேறொருவர் கவிதைகளைப் படித்தாலோ அது என்ன பண்ணியது என்பதை நான் சொல்றேன். அதை விமர்சனமாகவும் எடுத்துக்கலாம்" எனப் பதிலளிக்கிறார். (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்மகம் : 59) இந்தப் புத்தகமும் என்னைப் படித்தது - இன்னும் சொல்லப் போனால், என்னைத் தேடி வந்து படித்தது. அது தானாகத் தேடி வருகின்றதொரு வரம் - தனியாகத் திளைத்து எழுகின்றதொரு தியானம். தனது நேர்காணலில் அய்யா ஒரு நிகழ்வினை நினைவு கூர்கின்றார். "முதல் முதலில் ப்ரான்ஸ் காஃப்காவினுடைய நூல் ஆங்கிலத்தில் வந்தபோது அதை புதுமைப்பித்தன் படித்துவிட்டு கநாசுவிடம் கொடுத்தாராம். கநாசு அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்துக்குப் போய் அதை மெளனியிடம் கொடுத்தாராம். நீங்கள் படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்ததாக அவரே எழுதி இருக்கிறார். மெளனி அதைப் படித்துவிட்டு," நீ எல்லாம் இதை ஏன் படிக்கிறாய்? காஃப்காவானவன் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறான்" என்றாராம். நானும் சொல்வேன் - நீங்களெல்லாம் ஏன் இதனைப் படிக்கிறீர்கள்? அரங்கநாதன் அய்யாவானவர் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறார் என்று. ஏனெனில் - நான் ஒரு பிச்சி - வனப் பேய்ச்சியின் பிச்சி. ஆக, பேய்ச்சி தான் என்னைப் படித்தாள் - நான் வெறுமனே அருவாக் கருப்பன்களுக்கான காட்டையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். அட - அருவாக் கருப்பன் கூட முத்துக் கருப்பன் தானே! உதவிய நூல்கள் : இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர், தமிழில் ஆர்.சிவகுமார் தமிழரின் தத்துவமரபு – அருணன் சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்

நீல நாயின் கண்கள்

புத்தக வெளியீட்டு விழா

கதை பிரபஞ்சத்துத் துளிகள்: இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளுக்குள்ளாக வேறு எந்த வெளிப்படையான சரடும் இல்லை. ஆனால் உலகின் எழுதப்பட்ட எல்லா கதைகளையும் பிணைத்திருக்கும் அடிப்படையான விஷயமான கதை சொல்லுதலிலும் கதை கேட்டலிலும் உள்ள லயிப்பு இவற்றையும் பிணைத்திருக்கிறது. அதோடு தேச, இன, கலாச்சாரங்களின் தூலமான எல்லைகளைத் தாண்டி பரவி நிற்கும் வாழ்வெனும் பேரனுபவம் உலகின் எல்லா மொழிகளிலும் ஒன்றுபோலத்தான் கதைகளாக எழுதப்படுகிறது என்ற புரிதலும். எழுத்தாளர்கள் தேச இலக்கியங்களைப் படைக்கிறார்கள் மொழிபெயர்ப்பாளர்களோ பிரபஞ்ச இலக்கியங்களைப் நினைத்துப் பார்க்கலாம். 'அடுத்து நீங்கள் கேட்க விருப்பது' - ஜார்ஜ் சம்னர் ஆஸ்பி: மதகுருமார்கள் யாரும் இதுபற்றி கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. ஆங்லிக்கன் பிஷப் ஒருவர் மட்டும் இவ்வாறு சொன்னார்: "அந்தக் குரல் கடவுளுடைய குரலாக இல்லாமல் போனாலும்கூட நாம் மறந்து போன பலவற்றை அது நமக்கு நினைவூட்டுவதாய் இருக்கிறது." (நீல நாயின் கண்கள் - அசதா: 08) ஈரம் சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறேனே, தெரியவில்லை." கோபமாகக் கத்தினார் கர்னல். "சனியன் இந்தக் கடல் நேராக வந்து என் அறைக்குள்ளாகவா பாயும்" என்று அலுத்துக் கொண்டவர் அறிவிப்பாளரை பார்த்துக் கேட்டார். "உங்களிடம் ஒரு டவல் இருக்குமா?" ஒரு காரேஜ் முதலாளி தன் மெக்கானிக்குகளை அழைத்து பின் வருமாறு சொன்னார். "இனி நம் வாடிக்கையாளர் ஒருவரிடம் டிஸ்ட்ரிபியூட்டர் காயிலுக்காக கட்டணம் வசூலிக்கும்போது உண்மையிலேயே அந்தக காயிலை அவர் வண்டியில் பொருத்துவோம். (நீல நாயின் கண்கள் - அசதா: 13) இந்த பூமி ஒரு பள்ளிக்கூடம். வாழுங்கள், என் இனிய குழந்தைகளே, கற்றுக்கொள்ளுங்கள். இதோ நாம் மறுபடியும் நாம் சந்திக்கும்வரை விடைபெறுகிறேன். குட்பை." ஏழாவது நாளும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கப்புறம் கடவுள் பேசவில்லை. (நீல நாயின் கண்கள் - அசதா: 14) 'எமலிக்காக ஒர ரோஜா' - வில்லியம் ஃபாக்னர் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது. (நீல நாயின் கண்கள் - அசதா: 25) கண் உறுத்தல்களுக்க மத்தியில் அமைந்த கண் உறுத்தல். இப்போது எமிலியும் பெருமைமிக்க அப்பெயர்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்துகொள்ள ஸீடர் மரங்கள் மண்டிக்கிடக்கும் கல்லறைத் தோட்டத்தில் ஜெஃபர்ஸன் சண்டையில் மாண்ட தகுதிபெற்றவர்களும் பெயர் தெரியாதவர்களுமான யூனியன் மற்றும் கான்ஃபெடரேட் படைவீரர்களது கல்லறைகள் நடுவே சென்று அடங்கிவிட்டாள். உயிரோடிருந்தபோது எமிலி ஒரு பாரம்பரியம், ஒரு கடமை, ஒரு கரிசனம். (நீல நாயின் கண்கள் - அசதா: 26) கடைசியில் மிஸ் எமிலி மீது அவர்களால் பரிதாபம் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு. வறிய நிலையில் தனித்து விடப்பட்ட சூழல் அவளை மனிதத்தன்மை மிக்கவளாக மாற்றும். ஒரு ரூபாய் கூடவோ குறையவோ இருப்பதன் சந்தோஷம் அல்லது துக்கத்தை இனி அவளும் உணர்வாள். (நீல நாயின் கண்கள் - அசதா: 31) இவ்வாறாக அவள் மனதுக்கு நெருக்கமானவள், தப்பிக்க இயலாதவள், ஊடுறுவ முடியாதவள், எதனாலும் பாதிக்கப்படாதவள், ஒழுங்குகளை மீறுபவள் என ஒருதுலைமுறையிலிருந்து மற்றதற்கு கடந்து சென்றாள். (நீல நாயின் கண்கள் - அசதா: 38) 'வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை' - ஜேம்ஸ் தர்பர் வால்டர் மிட்டி வேகமாக நடந்து ஒரு கடைக்குள் நுழைந்தார். "சிறிய குட்டி நாய்களுக்கான பிஸ்கெட் வேண்டும்" "எந்த பிராண்ட் சார் ?" உலகிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் நிபுணர் ஒரு வினாடி யோசித்தார். "உறையின் மீது நாய்கள் இந்த பிஸ்கெட் கேட்டு குரைக்கும் என எழுதியிருக்கும்" என்றார். (நீல நாயின் கண்கள் - அசதா: 49) 'ஆசிரியையின் விருந்தாளி' - இஸபெல் ஆலண்டே அக்காலத்தில் கிராமப்புறங்களில் திரிந்து தங்கள் பொருட்களை விற்க வந்த வியாபாரிகளில் ஒருவர் ஹலாபி. திசைக்காட்டி கருவியோ, வரையறுக்கப்பட்ட பயணத் திட்டமோ அற்ற வியாபார யாத்ரீகர். அராபிய வந்தேறி. அந்நகரின் ஒரே பள்ளி ஆசிரியையான ஐனேஸ் குறுகிய காலமே நீடித்த காதலுறவில் பிறந்த பன்னிரண்டு வயது மகனுடன், திடமான இடுப்பும் பீடுடைய தோள்களும் அமைந்த இளம் பெண்ணாகவே இருந்தார். யாரோ ஒருவருடைய தோட்டத்தில் விழுந்து கிடந்த மாம்பழத்தை எடுக்கச் சென்றபோது அவ்விடத்தின் சொந்தக்காரனான யாருக்கும் அறிமுகமில்லாத வெளியாளான அந்த நபர் பையனை அச்சுறுத்த வேண்டி துப்பாக்கியால் சுட அதுவோ அவனது நெற்றியின் நடுவே கருந்துளையை உண்டாக்கி அதன் வழி வேகமாக அவனது உயிரையும் வெளியேற்றியது. (நீல நாயின் கண்கள் - அசதா: 53) அவள் ரொம்பவும் மாறிப் போயிருந்தான் - நாம் கூட வளர்ந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். ஆனால் சட்டென்று அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். இத்தனை வருடங்களும் அவனுக்காக நான் காத்திருந்தேன்; எப்டியும் அவன் வருவான் என எனக்குத் தெரியும். இவன் அந்த மாம்பழங்களுக்குச் சொந்தக்காரன்," "அல்லா நம்மைக் காப்பாராக," மெல்ல முணுமுணுத்தார் (நீல நாயின் கண்கள் - அசதா: 58) நிலவொளியில் வண்டியைச் செலுத்தியபடி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மாம்பழத்தை எடுப்பதற்காக ஆசிரியையின் மகன் நின்ற அந்த இடத்துக்கு வந்தனர், (நீல நாயின் கண்கள் - அசதா: 60) "நன்றி, துருக்கியரே அவள் சொன்னாள்." "ஏன் நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள், ஐனேஸ்?" "ஏனென்றால் இந்த உலகிலேயே நான் அதிகம் நேசிக்கும் நபர் நீங்கள், அதோடு என் மகனுக்குத் தந்தையாக இருந்திருக்க வேண்டியவரும்." நல்ல அண்டை வீட்டுக்காரர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு ரகசியம், அதனை மாறாத வைதாக்கியத்துடன் காத்து நீதியின் புகழ்மிக்கக் கதையாக பல ஆண்டுகளுக்கு வைத்திருந்தோம் - ஆசிரியை ஐனேஸின் மரணம் எங்களை அப்பொறுப்பினின்று விடுவிக்கும் வரை. எனவே இப்போது அந்தக் கதையை நான் சொல்கிறேன்,(நீல நாயின் கண்கள் - அசதா: 62) 'அவர்கள் சுமந்தவை' - டிம் ஓ' பிரையன் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில், லேவண்டர் இறப்பதற்குமுன் மார்த்தாவிடமிருந்து லெப்டினெண்ட் ஜிம்மி க்ராஸூக்கு நல்லதிர்ஷ்ட அன்பளிப்பு ஒன்று வந்தது. அது சாதாரண சுழாங்கள், அதிகம் போனால் ஒரு அவுன்ஸ் இருக்கும். தொடுவதற்கு மென்மையான ஆரஞ்சு மற்றும் வயலட்நிறபுள்ளிகளுடன் கூடிய பால் வெள்ளை நிறத்தலான சிறு முட்டை போல தோன்றிய கூழாங்கல். உடன் இருந்த கடிதத்தில் மார்த்தா அதை ஜெர்சி கடற்கரையில் துல்லியமாக நிலமானது உயர்ந்த அலைகளைத் தொடும் இடத்தில், இரண்டு விஷயங்கள் ஒன்று கலப்பதும் அதே நேரத்தில் இரண்டும் பிரிந்து நிற்பதுமான அந்த இடத்தில் கண்டெடுத்ததாக எழுதியிருந்தாள். பிரிந்திருந்தும் சேர்ந்திருப்பதான இந்த விஷயமே அந்தக் கூழாங்கல்லை எடுத்துக்கொள்ளத் தூண்டியதாகவும் பலநாட்களுக்கு தனது நெஞ்சருகே சட்டைப்பையில் வைத்திருக்கச் செய்ததாகவும் எழுதியிருந்தாள். அங்கே அது எடையற்று இருந்ததாகவும் அதை அவனுக்கான தனது உண்மையான உணர்வுகளின் அடையாளமாக வான்மடல் வழி அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தாள். (நீல நாயின் கண்கள் - அசதா: 71) அவமானத்திற்கு ஆளாவாது குறித்த அச்சமே அது. அவர்கள் கொன்றனர், கொல்லப்பட்டனர் - அவமானத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக. அவர்களை இந்த யுத்தத்திற்குள் அழைத்த முக்கிய விஷயமே அதுதான். அவர்களுக்கான விஷயங்கள் ஏதும் அதில் இல்லை. பெருமை புகழ் குறித்த கனவும் இல்லை. அபகீர்த்தியினால் வரும் அவமானம் உண்டாகக்கூடாது, அவ்வளவு தான். அவமானத்தால் சாகக்கூடாது என்பதற்காகவே அவர்கள் யுத்தத்தில் செத்தனர். (நீல நாயின் கண்கள் - அசதா: 87) இது வேறு உலகம், இங்கு அழகான கவிதைகளோ, இடைதேர்வுகளோ கிடையாது. இது கவனமின்மையாலும், முட்டாள்தனத்தாலும், மனிதர்கள் சாகும் இடம். மனிதர்கள் தமக்குள் சுமக்கும் விஷயங்கள். தாங்கள் செய்யாத அல்லது செய்யவேண்டும் என நினைத்த விஷயங்கள். (நீல நாயின் கண்கள் - அசதா: 91) இக்கதைகள் வியட்நாமில் ஆசிரியரது போர்க்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பகுதி சுயசரிதைத் தன்மையுடைவை. (நீல நாயின் கண்கள் - அசதா: 93) 'நீலநாயின் கண்கள்' - கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் அவள் சொன்னாள், தாழ்வாரம் கடினமான கனவுகளால் நிரம்பியிள்ளது. நான் அவளைக் கேட்டேன்: "உனக்கு எப்படித் தெரியும்?" அவள் என்னிடம் சொன்னாள்: "சற்று முன் நான் அங்கிருந்தேன், என் இதயத்தின் மீது நான் உறங்குவதைக் கண்டுணர்ந்தபோது நான் திரும்பிவிட்டேன்", அவளிடம் சொன்னேன்: "வெளியே தாழ்வாரம் ஏதும் இருப்பதாகக் தெரியவில்லை. எனக்கு நாட்டுப் புற வாசமடிக்கிறது," என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்த அவள் சொன்னாள்: உங்களைவிட எனக்கது நன்றாகவே தெரியும். என்ன நடக்கிறதென்றால், அங்கே ஒரு பெண் நாட்டுப்புறம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறாள். தணலின்மீதாக கைகளை அவள் குறுக்காக வைத்தாள் பேச்சைத் வேண்டுமேன்று விரும்பிய ஆனால் ஒருபோதும் நகரத்தை விட்டு நீங்க முடியாமல் போன ஒரு பெண்." அப் பெண்ணை நான் இதற்குமுன் கண்ட சில கனவுகளில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. (நீல நாயின் கண்கள் - அசதா: 102) 'தாமஸ் வர்காஸின் தங்கம்' - இஸபெல் ஆலண்டே தாமஸ் வர்காஸின் தங்கக் கட்டிகள் பாதுகாப்பான மறைவிடத்தில் புதைக்கப்பட்டிருந்தன. பனாமா தொப்பி அணிந்து விலைமிக்க சிகரெட்டுகளை அவர் புகைக்க அவரது குழந்தைகளோ பசியில் வாடினர், மனைவி கந்தலாடைகள் அணிந்து உலவினாள். பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டக்கூட அவர் மறுத்தார். (நீல நாயின் கண்கள் - அசதா: 105)

விரிசலுக்கு பிறகு -
பத்மநாபபுரம் அரவிந்தன்

புத்தக வெளியீட்டு விழா

"மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி என்றால் ஒரு கவிஞனுக்கு அதற்குள்ளே இன்னுமொரு சுயமொழி கிளைத்து அவனை மேலும் தனிமைப்படுத்தி விடுகிறது. அவனது தனித்துவமான புஷ்பக விமானமும், சிலுவையும் அம்மொழிதான். "மொழி என்பது உலகளாவிய மனித குலத்தின் வலி" என்றதுவும் லக்கானே. அவ்வலியை தனக்கே தனக்கான தன்வய, தன்மையப் பிரதேசமாகச் சுயமாக அறிவித்துக் கொண்டு, அதன் வழிப் பயணப்படுவன் கவிஞன் மட்டுமே. வலியையும், இன்பத்தையும் தனக்கானதொரு புனைவு மொழியில் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகையில் ஃபிராய்டும், லக்கானும் கலந்த கலவைதான் அவன். ஏனென்றால் ஈடிபஸ் சிக்கலுக்கு அடிப்படை புனைவு என்று ஃபிராய்ட் சொல்கையில், லக்கானோ அதற்கு மொழிதான் அடிப்படை என்கிறார். ஏனிந்த உளவியல் அறிஞர்களது அறிமுகம் ஒரு கவிதைப் புத்தகம் குறித்துப் பேசுகையில் எனும் கேள்வி எழலாம். ஏனென்றால் - கவிதைகளுக்குள் பயணப்படுமுன் அக்கவிஞனின் உளப்பாங்கு மிக முக்கியம் எனக்கு. மனித மனம் பிரவேசிக்கின்ற புதிய பகுதிகள், பழைய சுவடுகளின் நினைவினை முற்றிலுமாகத் தொடர்பறுத்துவிடுவதில்லை. இவற்றைப் பிணைக்கின்ற மாய முடிச்சை முன்வைத்து அதன் சூட்சுமத்தில் இயங்குகின்றன அரவிந்தனின் கவிதைகள். அவற்றூனூடான எனது பயணத்திற்கு அவரது உளப்பாங்கை, உளவியலைக் கொஞ்சம் அறிந்து, புரிதலும் அவசியமல்லவா? தனது கவிதைகள், கோட்பாடு அல்லது புனைவு சார்ந்ததா எனத் தெரியாது என்று சொல்கின்ற அரவிந்தன் எந்த எளிமைக்காகவே கவனித்துப், படிக்கப்பட வேண்டியவருமாவார். கவிதையில் மட்டும் அர்த்தம் மொழியால் தீர்மானிக்கப்படுவதில்லை அல்லவா? அதைத் துய்க்க இரண்டு 'அகனிலைகள்' - கவிஞன், வாசகன் - வேண்டுமல்லவா? அதிலும், மனிதனின் அகனிலையானது மொழி - அர்த்தம் ஆகிய இரண்டு விஷயமாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் - அவனது கலை வெளிப்பாடு - குறிப்பாகக் 'கவிதை வெளிப்பாடு' என்பேன் நான். பத்மநாபபுரம் அரவிந்தன் எனத் தனது ஊரைப் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கின்ற அரவிந்தன், சென்னையில், கடலில், கப்பலில் எங்கு இருந்தாலும் தனிமையில், தனது வேரைத், தான் தொலைத்த ஊரைத் தான் சுமந்து கொண்டிருக்கிறார். அவரது யாழ் இழந்த பாணன் அதன் வெளிப்பாடே, அதன் குறியீடே. "கதை, கவிதை, கட்டுரை - ஒரு பொருளின் வடிவத்தை எப்படித் தீர்மானிப்பீர்கள்" என்ற கேள்விக்குக் கல்யாண்ஜி "இந்தக் கதைக்கு இது வடிவம். இந்தக் கவிதைக்கு இன்னும் கொஞ்சம் பாலைச் சுண்டக் காய்ச்ச வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதில்லை. ஆச்சி மசாலா இல்லையே, அம்மாச்சி அரைக்கிற மசாலா. மிஷின் பக்குவம் வேறு. கைப்பக்குவம் வேறு இல்லையா? கண் அளக்காததையா கை அளக்கும்?" என்று சொல்லியிருப்பார். ஆமாம் கண் அளப்பதுதான் முக்கியம் கவிதைக்கும் - அகக்கண் அளப்பது. அவ்வகையில் அரவிந்தன் கவிதைகளில் Craftness செய்நேர்த்தி இல்லை - கண் அளந்ததை எழுத்தில் பகிருகின்ற ஒரு இளைப்பாறல் - வட்டமா, சதுரமா, சரியா, தப்பா இவை பற்றிய அலட்டலோ கவலையோ இல்லாமல் பாண்டி விளையாடுகின்ற ஆர்வமும், அவ்விளையாட்டு தருகின்ற திருப்தியும் போதுமென்கிறார் போலக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவரது கூடுதேடி, வர்ணங்களால் மட்டுமல்ல ஓவியங்கள், அது ஒரு மழை நாள், இழப்பு - இவை பெரிதான அனுபவக் கிளர்வைத் தராத மேம்போக்குக் கவிதைகளாகப் பட்டாலும், அவரது அகக் கண்ணின் அவதானிப்பும், அதன் பதிவும் "புரிந்து கொள்ளேன் என் இந்தச் சிறு பதைபதைப்பை, தேடலை, பரிதவிப்பை" என்று உண்மையின் சுட்டுவிரல் தொட்டு நம் முகவாயிலில் கெஞ்சுகையில், "கவிதை மூடுண்ட அறைகளை மட்டுமே பாடக் கூடாது. சாளரங்களைத் திறந்து வெளியே வர வேண்டும். விசாலமான இந்த வாழ்க்கையைப் பாட வேண்டும். மனித வாழ்க்கைக்கு நெருக்கமானதாகத்தான் கவிதை இருக்க வேண்டும்" என்ற நெரூடாவை நினைத்துக் கொண்டேன். அரவிந்தனின் (அகக்) கண் அளந்ததை அப்படியே உள்வாங்கிப் பயணிக்கிறேன். "லோரன்ஸ் என்பவர் ஒரு விசித்திரமான பரிசோதனை செய்தார். அது லக்கானைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு வாத்து தனது முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் சமயம் பார்த்து, தாய் வாத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதன் இடத்தில் தன் பூட்ஸ்களை வைத்தார் லோரன்ஸ். முட்டையை விட்டு வெளியே வந்த குஞ்சுகளின் கண்களில் முதலில் பட்டது பூட்ஸ்கள்தான். அந்த வாத்துக் குஞ்சுகள் பூட்ஸையே சுற்றிச் சுற்றி வந்தன. லோரன்ஸ் அந்த பூட்ஸ்களை அணிந்து கொண்டு எங்கே போனாலும் அவை பின்தொடர்ந்தன. அந்த பூட்ஸ்களைத் தங்கள் தாயாக அவை நினைத்துவிட்டன. மேலும், முதன்முதலாக அவற்றின் கண்களில் பட்டவை அந்த பூட்ஸ்கள்தான். எனவே, அவை குஞ்சுகளின் மனத்தில் பிம்பமாகப் பதிந்துவிட்டன. அந்த பிம்பத்தை அவை பின்தொடர ஆரம்பித்துவிட்டன. இதை 'அடிமைப்படுதல்' (கேப்டிவேஷன்) என்கிறார் லக்கான்." (லக்கான் - எம்.ஜி.சுரேஷ் : 11) மாற்றங்கள் கொன்ற என் மனக்கதைகள் எனும் கவிதையைப் படித்தபோது. பத்மநாபபுரமே அரவிந்தன் எனும் வாத்துக் குஞ்சிற்குத் தாய்மடி எனப் பிடிபட்டது. லோரன்ஸின் பூட்ஸை அவை தாய்மடியெனத் தொடர்ந்தது போல அவ்வூரைத் தொடர்கிறார் அரவிந்தன். அவ்வூரில் தனது வீட்டின் காரைச் சுவர், புளிய மரம், மாமரம், செண்பகப்பட்சி, கதை கேட்டுத் தூங்கிய கட்டில், முயல்கள் வளர்த்த பெருங்கூடு இவையெல்லாம் பழங் கதையாய் ஆனபின்பும், பத்மநாபபுரத்தை கடற்காற்றின் உப்பு மணமென உள்ளிழுத்தும், தன் உயிர்ச் சூட்டைத் தக்கவைத்துப் பாலூட்டும் உணர்வுத் திசைமானியாயும் சுமந்திருக்கிறார் அவர். இவரது பெரும்பான்மையான கவிதைகளிடையே ஊடுபாவும் சரடு - உலகமயமாக்க, தாரளமயமாக்க, தனியார்மயமாக்கலின் தாக்கமே. 21ம் நூற்றாண்டின் இந்த கோர பசிக்கு முதல் பலி நமது மரபு சார் வேளாண்மை, வளம் சார் நீர்நிலைகள், பசுமை சார் சுற்றுச் சூழல் என்பதே. மிக உணர்வுப் பூர்வமாக இதனைச் சிதைத் தொழித்தல் எனும் கவிதையில் பதிந்துள்ளார். இதைப் படித்தவுடன். "இன்றைய உலகச் சுற்றுச்சூழல் சிதைவிற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் செயல்களே" என்று சொன்ன ஜான் வோக்லர் (John Woglar) எனும் முதலாளித்துவ அறிஞரின் அபத்தமான, மிகச் கண்டிக்கத்தக்க கூற்று நினைவிற்கு வந்தது. இந்தியா இப்போது வளர்ந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைந்து விட்டதாகவும், வல்லரசு குறித்துக் கனவு காண வேண்டுமெனவும் தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உலகத்தைக் குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதும், சுமத்தப் படுவதும் இன்னமும் நமது சிறுபான்மையினர் மீது தான். எதற்காக ஒரு கவிதைப் புத்தகம் குறித்த பகிர்வினிடையே மேற்சொன்ன கூற்று என்று நீங்கள் கேட்கலாம் - வெறும் அகத்தின் வழி ஊடுறுவிய உள்வழிப் பயணமாகக் கவிதை இருப்பின் அது அர்த்தமற்ற சவம். புறத்தின் தாக்கத்தை, தான் வாழும் காலத்தின் சமூக நிகழ்வுகளை, அவலங்களை, பிரச்சாரத்தின் தொனியோடு அப்பட்டமாக இல்லாது, பொதுமையானதொரு அனுபவமாக அதனைக் கடத்துகின்ற ஓர்மையும் ஒரு கவிஞனுக்கிருக்க வேண்டும். பிச்சைக்காரர்கள் வயோதிகக் கூனால் வளைந்த நடையுடன் பஞ்சடைத்த கண்களும் நடுங்கும் உடலுமாய்... கந்தல் உடையுடன் கையேந்தி நின்ற அந்தப் பிச்சைக்காரனுக்கு தேனீர் வாங்கித் தந்து கையில் பத்து ரூபாய் கொடுத்தபோது... நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது... மின் விசிறியின் கீழே சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி மூன்றுமுக இணைப்பிற்காய் ரூபாய் ஐயாயிரம் லஞ்சமாய் வாங்கிய அந்த மின்வாரியப் பிச்சைக்காரனுக்கு... நானிட்ட பிச்சையும் முழுக் குப்பி விஸ்கியும் எத்தனை நினைத்தும் கனக்கிறது மனதுள் அழியாமலேயே... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 125,126) திறம்படப் பேசியவன் ஏற்ற இறக்கங்களுடன் திண்மையான குரலில் அவன் பேசிக் கொண்டிருந்தான் சில இடங்களில் ரகசியம் சொல்வதுபோல் மென்னிறகு கட்டி வழிந்தோடியது வார்த்தைகள்... சில சொற்கள் வாள் வீச்சின் வேகத்தில் வந்திறங்கியது கண்டங்கள் கடந்து வரும் வேற்று தேசப் பறவைகளின் சிறகொலி போல் ஆழ்ந்த உந்தலுடன் வந்தன சில வார்த்தைகளின் இடையே அவன் மெல்லிய நூலிழையை ஊசியில் கோர்த்து தைப்பது போல் தைத்திறக்கினான்... கூட்டம் சுயம் மறந்து லயித்துக் கிடந்தது சில நேரம் சொற்கள் பாறைகள் உடைபடும் ஓசையுடன் தெறித்து விழுந்தன அவனுள் உறைந்த எண்ணத்தின் வெளிப்பாடு மனதுள் இருந்து குரல்வளை நுழைந்து நாக்குச் சுழற்சியில் மழைபோல் பொழிந்தது கூட்டம் நனைந்தபடி நினைத்தது 'பேச்சு நன்றாக இருக்கிறது... செயலிலும் வருமா தடையற்ற இந்நிலை? போட்டுத்தான் பார்ப்போமே' என்று அழுத்தி வைத்தனர் அவனுக்கான சின்னத்தில் தங்களின் விரல்கள்... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 31,32) அகதிக் காலம் நீண்டதோர் கடற் பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருக்க அக்காகம்... சென்னை - ஆஸ்திரேலியா விசாவின்றி வந்தடைந்து கரைகண்ட களிப்பினில் வேகமாய் எம்பி சுய குரலில் கத்திவிட்டு கரை நோக்கிப் பறந்தது, மறுநாள்... உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் கப்பல் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி அமர்ந்திருக்கக் கண்டேன் நான் தலை சாய்ந்து எனை நோக்கிக் கத்தியது இப்படியோ? 'அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் வெளிநாட்டு மோகமது கூடாதென்றும்...' (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 43,44) போன்றவை இத்தொனியுடைய கவிதைகள்தாம். 19 டி.எம்.சாரோனில் தான் பெரிதும் மதித்து வியக்கின்ற பிஷப் கிடியன் தேவநேசனுக்கும் அவரது காரோட்டிக்கும் நடந்த உரையாடல் ஒன்றைப் பின்வருமாறு பதிவு செய்திருப்பார் பவா. "ஒரு மழை இரவில் மலைப்பயணத்தில் காலின் முன்சீட்டில் தூங்கிய கிடியன் தேவநேசன் ஓட்டுநரின் தீடீர் பிரேக்கால் தலைமோதி அடிபட்டு விழிக்கின்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதுமில்லை ஏனெனக் கேட்டதற்குத் தலை திருப்பாமலே நிதானமாகப் பதில் சொல்கிறார் வயதான ஓட்டுநர்: "ரோட்டை ஒரு கீரிப்புள்ள க்ராஸ் பண்ணுச்சுங்க' 'கீரிதான, அடிச்சுட வேண்டியதுதான?' அப்புறம் மரணம் எனக்கு மரத்துப் போயிடும் அய்யா" பவா எனும் கதை சொல்லிக்குள்ளிருக்கும் இறவாக் கவிஞனை நான் தரிசித்த இடம் அது. பொதிகைச் சித்தரது பதிவொன்றில் இந்த நிகழ்ச்சிக் குறிப்பாகச் சுட்டிக்காட்டிவிட்டு, இதுகுறித்து அவர், "இத்தகைய மரணம் பற்றிய அந்தப் பெயர் தெரியாத ஓட்டுநரின் பதிவு கிடியன் தேவநேசனின் மரணம் பற்றிய முக்கிய உரைகளைக் காட்டிலும் உன்னதமானது தானே" எனவும் சிலாகித்துக் சொல்லியிருப்பார். இந்தக் கவிமனம், "கவிதை, தான் கவிதையாவதற்கு வார்த்தைகளைக் காட்டிலும், அர்த்தங்களைக் காட்டிலும் வாழ்க்கையையே நம்பியிருக்கிறது" எனும் ஈரோடு தமிழன்பனின் கூற்றை மெய்ப்பிக்கின்றது. இக்கவிமனம் அரவிந்தனுக்கும் வாய்த்திருக்கிறது – அவரது மறதி கவிதையைப் பாருங்கள் - உயரத் தென்னை மரங்களிடை நின்ற குட்டை மரத்தின் இளநீரில் மட்டும் பால்மணம் கொண்ட புதுச்சுவை இருந்தது காலங்கள் கடந்தபோது அனைவரும் மறந்தனர் இரண்டே வயதில் இறந்துபோன குழந்தையின் உடல் புதைத்த இடத்தில் நட்ட தென்னங்கன்று அதுவே என்பதை (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 71) நாம் தொலைத்துவிட்ட கரகாட்டம், கூத்து, புலிவேசம், ஒயிலாட்டம் - இவையோடு அறவே அருகிவிட்ட நாட்டார் மரபுச் சடங்குகள், அதன் எதிரொலியாய்ப் பிழைப்பின்றப் போன எளிய மனிதர்களின் துயரம் குறித்துப் பேசுகின்ற கோமறத்தாடியின் மறுநாட் கவலை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. இதன் தலைப்பு கோமறத்தாடி என்றே இருந்திருக்கலாம். ஒரு கவிதைக்கான தலைப்பு சற்று கோடிட்டுக் காட்டுதல் அல்லது குறியீட்டுத் தன்மையுடன் இருந்தாலே போதும். அதன் அர்த்தத்தினை விளக்குகின்ற உரைநடைத் தன்மை அவசியமில்லை. மேற்சொன்ன கவிதை கோமறத்தாடியின் உருவில் குறி சொல்லும் மாடனனின் மன உணர்வைத் "தண்ணீர் தெளித்து புதுத்துணி உடுத்தி கறிச் சோறு தின்னும் பொழுதில் நினைப்பார் என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்!" என்று சொல்லி ...நாளைமுதல் கோவில் சாப்பாடு ஒரு வேலை... இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள் நாளை மீண்டும் சொல்வார்கள், 'சும்மா கோவில்ல கெடந்து எளவெடுக்காமே... ஏதாவது சோலி மயிருக்குப் போவும் ஓய்! என்று முடியும். இதனைப் படித்தவுடன் எனது தொலைதல் எனும் பின்வரும் கவிதை முன்வந்தது- கழைக் கூத்தாடிகள் ஜிகினா உடையில் கோவில் திருவிழாக்களுக்கு வந்துவிட்டார்கள். சர்க்கஸ் கோமாளிகள் திருமண வீட்டில் வரவேற்றுக் கை குலுக்குகிறார்கள். கிடாய் வெட்டி ரத்தப் படையலிடும் பூசாரிகள் தெருமுனைக் கோயிலில் இரண்டு நேரம் விளக்குப் போடுகிறார்கள். அடவு வைத்து கூத்து கட்டுபவர்கள் திரைப்படங்களில் தலைகாட்டும் வயதான அப்பாக்களாகிவிட்டார்கள். சேலைகளுக்கு அடியில் மொண்ணைக் கை மரப்பாச்சியைப் பத்திரப்படுத்திவிட்டு 'டம்பப்' பையோடு நானும். "கவிதையானது பாட்டிலில் அனுப்பட்ட செய்தி - எப்பொழுதோ எங்கேயோ அந்தச் செய்திக்குக் கடலிலிருந்து நிலத்தை நோக்கிய பாதை கிடைக்கலாம் - ஒருவேளை" என்றார் பால் ஸெலான். பாட்டிலில் அல்ல ஒரு புத்தக வடிவில், கடலிலிருந்து நிலத்திற்கு, உள்ளதை உள்ளவாறு, அவை கவிதையா என்ற கவலையின்றிக் கடத்தியிருக்கிறார் அரவிந்தன். அவரது கடற்புயல் நாட்கள் மிக மிக வழமையான கவிதைதான் - வெண்ணலைக் குதிரைகள், மின்னல் மரங்கள், சமுத்திர சாமுராய்கள், பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல்' என்று தேய்ந்துபோன உவமைகளைக் கொண்டதுதான் - ஆனால் கவிதையின் முடிவில் சாதாரண மனிதனது (உள்மனம் vs நடப்பு நிலைக்கான மனம்) பயத்தை, பீதியை, அதனை மீறி நிற்பேன் என்கிற ஊசலாட்டமான சமாதானத்தைப் படம் பிடிக்கிறது. அப்பா என்கிற உறவை ஆளுமையை முற்றிலும் வேறு கோணத்தில், எவ்விதப் புனிதப்படுத்துதலும், romanticism உம் அற்றுத் தப்புக்கணக்கு கவிதையில் "நான் கூட்ட நீங்கள் கழிக்க நீங்கள் கூட்ட நான் கழிக்க வகுத்தலும், பெருக்கலும் கணமும், விகிதமும் மொத்தமாய்ப் புரியவில்லை எனக்கென்றும் கணக்கு" என்று எழுதியுள்ளார். பாசாங்கற்ற பார்வையுடன், ஒரு உறவைப் பதியவைப்பதும், அந்த objective disection ஐக் கவிதையாக்குவதும்... சரிதான் - இது ஒரு வகைப் பாணிதானே. மிகப்பிடித்த - வார்த்தை விளையாட்டுப் போலத் தோற்றமளிக்கின்ற ஒரு கவிதை தலைமுறைகள் மருதநாயகம் பிள்ளை சிவன் பிள்ளையைப் பெற்றார் சிவன் பிள்ளை மருதநாயகம் பிள்ளையைப் பெற்றார் மருதநாயகம் பிள்ளை ஷிவக்குமாரைப் பெற்றார் ஷிவக்குமார் யாஷிக் ராகேஷைப் பெற்றார் யாஷிக் ராகேஷ் இம்மானுவேல் மேத்யூவைப் பெற்றார் இம்மானுவேல் மேத்யூ முஜீப் ரஹ்மானைப் பெற்றார் முஜீப் யாரைப் பெறுவானோ? மருதநாயகம்பிள்ளையும் சிவன்பிள்ளையும் எங்கே போனாரோ? (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 116) கவிதை சிக்கல் நிறைந்து இருக்க வேண்டியதில்லை - பகடியோடு நாம் தொலைக்கின்ற வேர்த்தடங்களை மேற்சொன்ன கவிதையை விட வேறெப்படிச் சொல்ல? தூக்கமால் போன துக்கி என்றொரு கவிதை - தன் தாத்தாவின் பிணத்தைச் சுமக்க முடியாத பேரனின் துயரப் பதிவு அது. ஆனால் துக்கி என்ற சொல் புதிது எனக்கு. அது போலவே எதிர் அழகியல் கவிதையான யதார்த்தம் எனும் கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. நட்சத்திரங்கள் பிடித்து நெற்றிப் பொட்டு வைப்பேனென்று சொல்ல மாட்டேன் பக்கத்துக் கடையில் ஒட்டுப் பொட்டு வாங்கித் தருவேன் வானவில் கசக்கி உன் கூந்தலில் சூடேன் ஒரு முழம் மல்லி தினமும் தருவேன் நிலவு வதனம் உனக்கென வர்ணிக்க மாட்டேன்... தினமும் கண்ணாடி நீயே பார்க்கிறாய் மேகத்தைப் போர்வையாக்கி அதனுள் கூடுவோமெனப் புழுகுரைக்க மாட்டேன் கோரைப் பாயில் நானேயுன்னை குளிராமல் போர்த்துகிறேன்... இவையெல்லாம் சம்மதமெனில் தொடர் உன் காதலை என்னுடன்... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 65) 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' என்ற திரைப்பட பாடலை என்னையறியாமல் இதனைப் படித்தவுடன் முணுமுணுத்துக் கொண்டேன். கூடவே கலாப்பரியாவின் பின்வரும் கவிதையும் நினைவிற்கு வந்தது. தோல்வி யாராவது இவளை உடனே மீட்டுதலில் உடையும் வீணைத் தந்தியென - மிக மென்மையாய்க் கொலை செய்யுங்கள். இன்னொரு பிறவியில் நீங்கள் தேவதாஸ் ஆகும் போது உங்கள் கடைசிக் காலத்தில் வண்டியோட்டி - நன்றிக் கடன் செலுத்துகிறேன். உயிரிக்காதலை மிக எதிர்மறையானதொரு உணர்வுடன் juxtoppose செய்து, அழகியலின் சாயலோடு அதனை எதிர்க்கின்ற இக்கவிதை காதலைப் பற்றி எவ்வளவு கனமாக, ஆழமாகச் சொல்கிறது! இதனைச் சற்று மாற்றி யதார்த்தமாக காதலெனும் உணர்வினைச் சொல்வது அரவிந்தனின் கவிதை! மரணம், மழை, போதை, உறவின் நிழலாட்டம், ஒரு பூனையின் இருப்பும், மறைவும், நட்பு, மனைவி, காகம், சிகரெட் புகை, - எல்லாமும் இருக்கின்ற இத் தொகுப்பில் தன்னிலை குறித்த கவிதைகளைத், (தன் விளக்கமாயிருக்கின்றவற்றைத்) தவிர்த்திருக்கலாமே எனத் தோன்றியது. 'இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து புதுத் தெரு புகுந்தவன்' என்கிற விமர்சனத்திற்கு "மூடிவை மாமாங்கம் கழியட்டும் அர்த்தம் காட்டாது அழியாமல் நிற்குமென் இறவாக் கவிதை என் கவிதையைப் புரிய வேறென்ன வேண்டும்?" என்கின்ற தெளிவுத் திமிர் இருக்கின்ற கவிஞன் நீங்கள் அரவிந்தன் - உங்களுக்கு உங்கள் கவிதைகளைப் புரிந்துகொள்ள ஒரு 'என் குழு' கூட வேண்டாமே – "ஊர்ந்து தான் செல்கிறேன் நிஜமானவையைத் தேடி இப்போது... ஆனாலும் நானாக நான் ஊர்வதில் யாராகவோ நான் பறந்ததை விட சுகம்... சுகம்..." என்பவருக்கு யாருமே வேண்டாம் - மனதின் உணர்வினைப் பகிர்ந்து கொண்ட காகிதமும், பேனாவும் போதுமல்லவா? வால்ட் விட்மனின் (Walt Whitman) கவிதைகளை முதலில் அசிங்கமான வரிகளென டால்ஸ்டாய் இகழ்ந்து நிராகரித்தார். பின்னர், "விண்ணில் ஊர்வலம் போகும் நட்சத்திரங்களை விடச் சின்னப் புல்லிதழ்கள் எவ்வகையில் தாழ்ந்தவை?" என்று கேட்ட விட்மன், அமெரிக்க டால்ஸ்டாய் எனப் புகழப்பட்டது வரலாறு. என்னைப் பொருத்தவரையில், ஒரு கவிதையை அணுகும் போது அது எந்தப் பின்னணியில், எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது எனக்கு மிக முக்கியம். கவிதையின் எதிரியான பின்நவீனத்துவ விமர்சகர் (Roland Paarth) ரொலாண் பார்த்திற்கு ஜப்பானிய ஹைக்கூ கவிதை மட்டும் எப்படிப் பிடித்தது? ஜப்பானின் கலாச்சாரப் பின்னணியில் வைத்து மட்டுமே அதனைப் பார்க்காது, ஜப்பானையே ஒரு பிரதியாக்கிப் பார்த் பார்த்ததால் தான் அவருக்கு ஹைக்கூ பிடித்துப் போகின்றது என்கிறார் எம்.ஜி.சுரேஷ். "அர்த்தம் என்ற அரிப்புடன் திரியும் மேற்கத்திய பார்வையாளனுக்கு ஜப்பான் தரும் அர்த்தங்களிலிருந்தான விடுதலையைக் கண்டுகொள்வதே பார்த்தை ஈர்க்கிறது. ஜப்பானில் வெறுமையான மொழியும், வெறுமையான குறிகளும் இயல்பான தன்மையுடன் நிலவுகின்றன. ஜப்பானியர்களின் ஹைக்கூ கவிதை ஆழமற்ற சமப்பரப்பில் இயங்குகிறது. மறைமுகமான அல்லது வரையறுக்கப்பட்ட குறிப்பீடுகள் அதில் இல்லை. மையமற்ற தன்மை மட்டுமே அதில் இருக்கிறது. ஜப்பானையே ஒரு பிரதியாக்கி வாசித்துப் பார்க்கிறார் பார்த். ஜப்பான் என்கிற அந்தப் பிரதி மேற்கத்திய மனத்தின் தெளிவான, நிலையான ஒற்றை அர்த்தத்துக்கு எதிராக இயங்கும் வெளியாகும். ஜப்பானியத் தலைநகரமான டோக்கியோவில் ஜப்பானியப் பேரரசரின் இல்லம் இருக்கிறது. அந்த இல்லம் நகர்த்தின் ஓரத்தில், மையம் தகர்க்கபட்டதாக இருக்கிறது. அதேபோல் டோக்கியோ நகரத் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை. பார்வையாளர்கள் தெருக்களில் குறிக்கப்பட்டுள்ள சித்திர வடிவங்களை வைத்தே அந்தந்தத் தெருக்களை அடையாளம் காணமுடியும். ஜப்பானைப் பொறுத்தவரை, குறிச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. பிற கற்களால் தாங்கி நிறுத்தப் பட்டிருக்கும் மையக்கல் (கீ ஸ்டோன்) எதுவும் இல்லை." (பார்த் - எம்.ஜி.சுரேஷ் : 51) ஆக பின்னணியைப் புறந்தள்ள முடியாது என்கின்ற தெளிவோடு, தன் தொழிற்பாற்பட்டு கடல் வாழ்வைப் பெரும்பகுதி உய்க்கின்ற அதே போழ்தில் தனது வலிய வீட்டையும், பத்மநாபபுரத்தையும், பெருவுடையாரையும் மனதில் சுமக்கின்ற அரவிந்தனின் கவிவெளிப்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே நியாயம். அவரவளவில், அகக்கண் கண்டதை, தத்துவத் தேடலோ, ஞானத்தின் முகிழ்த்தலோ இதோ எனும் தம்பட்டம் அற்றுத் துரோகம், நட்பு, காதல், பிரிவு, பால்யத்தின் மீட்டுருவாக்கம், இவற்றைச் சமகாலப் பார்வையாளனாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார். நீண்ட நாள் கடல் பயணத்தில் எதிர்பாராமல் பயணம் நீளும் சூழலில் சிகரெட்டுகள் தீர்ந்து போகலாம், - அரவிந்தன். ஆனால், ஒரு போதும் உங்கள் கவிதைகள் தீராது. கப்பல் கரையடைந்த பின்பு அவை எங்களைச் சேரும் - காற்றில் உயரும் சிகரெட்டின் புகை போல அல்ல. வெகுநாட்கழித்து வீடு திரும்புகின்ற மகனுக்கு ஆசையும், பரிவுமாய்ப் பரிமாறச் சமைக்கின்ற எம் பாட்டிமார்களின் புகை போக்கியிலிருந்து எழும்புகின்ற நாற்றப் புகைபோல்! காத்திருக்கிறோம் அடுத்த தொகுப்பு இன்னும் காத்திரமாகக் கைவர - வாழ்த்துக்கள்! உதவிய நூல்கள்: லக்கான் - எம்.ஜி.சுரேஷ் பார்த் - எம்.ஜி.சுரேஷ்