உயிர்மை பதிப்பகம்
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலி யாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசை போல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளில் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன. – கவிஞர் வைதீஸ்வரன் ஆயர்களின் கவிதை என்று உலகக் கவிதை வரலாற்றில் குறிப்பிடப்படும் தொன்மையான ஒரு கவிமரபை தமிழச்சி தனது அவளுக்கு வெயில் என்று பெயர் எனும் தொகுதியின் மூலமாக தற்காலக் கவிதைப் பரப்புக்குள் நீட்சித்துக் கொண்டுவருகிறார். இது சங்க காலத்தின் தொன்மையான தமிழ் அழகியல் மரபு மட்டுமல்ல, கிரேக்கக் கவி தியோகிளிட்டசும், ரோமானிய கவி விர்ஜிலும், ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியரும், ஸ்பென்சரும், பிரெஞ்சுக் கவி மேரொட்டும் தொடரோட்டமாக ஓடிவந்தபோது கொண்டுவந்த தீப்பந்தத்தைத்தான் இன்று தமிழச்சி தனது கரத்தில் ஏந்தி நடக்கிறார். – கலை விமர்சகர் இந்திரன் மண்ணைவிட்டு மிதக்கின்ற இருண்மை சார்ந்த கவிதை வரிகளைச் சிலாகிக்கின்ற தமிழிலக்கியச் சூழலில் மண்ணையும் நிலவெளியையும் முதன்மைப்படுத்துவதில் தமிழச்சியின் கவிதைகள் தனித்து விளங்குகின்றன. இயற்கையான சூழலியல் சார்ந்து தனது இருப்பினைக் கண்டறிந்துள்ள தமிழச்சியின் மனம், கோட்பாடுகளுக்கப்பால், அசலானவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது. விருப்பு வெறுப்பு சார்ந்த நிலையில், அவர் முக்கியமானதாகக் கருதுகின்றவற்றைக் கவிதையாக்கியுள்ளார். உலகமயமாக்கல் சூழலில் பண்டைத் தமிழரின் தொன்மையான நவீனப் படைப்புகளில் மீண்டும் மீண்டும் பதிய வைப்பது இன்றைய தேவையாக உள்ளது. இந்த இடத்தில் தமிழச்சி தனது கவிதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துடன் தொடங்கியுள்ள பேச்சுகளில் பொதிந்துள்ள நுண்ணரசியல் கவனத்திற்குரியது, அவசியமானதும்கூட. – விமர்சகர் ந.முருகேசபாண்டியன்
No comment