தேதி: 04 Apr 2017
'புதுமைப்பித்தனுடைய சமூகப்பார்வை நடை, கிண்டல் ஆழமானது. அகவியல் உலகும் அலட்டிக் கொள்ளாத நடையும் கு.ப.ரா. வுடையது. அகத்துள் திளைப்பவர் மெளனி, இறுகிய சோதனைகள் அவருடையது. தம்மன எழுச்சிகளைப் புறஉலகிற்குக் காட்டிச் சிந்தனைக் களத்தில் ஆராயும் பிச்சமூர்த்தியின் நடை அனுபவ வளம், எளிய உவமைகள் நிரம்பியது. உவமையின்றி தத்துவக் கருத்துக்கள் எழுச்சி நிலைகளை சாமான்ய நிகழ்ச்சிகளில் கண்டவர் ந.சிதம்பர சுப்பிரமணியன். மனிதனைக் குடும்ப உறவு அடிப்படையில் அறிவு பூர்வமாகச் சிந்தனைக்குப் பிரதானம் தந்து எழுதுவார் க.நா.சு. உணர்ச்சி பின்னிய குடும்ப உலகும் அகத்துறை அனுபவமும் அபரிமித சப்த தந்திரமும் புதிய நடையும் லா.ச.ரா. வுடையது. 'இவ்வளவு அகண்ட வித்தியாசங்கள் மணிக்கொடி குழுவுக்கு ஒவ்வொருவரின் எழுத்து பலமே அக் கோஷ்டியின் பலம். ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். ஒவ்வொருவருமே மூலப் புருஷர்களாகத் திகழ்ந்தனர். கோஷ்டி என்பது இங்கு ஓர் இலக்கிய இயக்கமாக மட்டுமே. ஒரேவித பார்வையின் ஒற்றைக் குரலாக அல்ல. தனித்தன்மை கலைஞனின் இயல்பு. மணிக்கொடி இயக்கத்திற்கு ஆதாரம் தனித் தன்மை. எழுத்தாளர்களின் பார்வை வித்தியாசங்களும் நம்பிக்கைகளின் துருவ வேறுபாடுகளுமாகும். மனித அனுபவத்தைக் கலையாக உருவாக்கும் பொறுப்பில் ஏற்பட்ட இயக்கமான அது தம் கோஷ்டிக்கு எந்த சித்தாந்தத்தையும் நடுச்சுழலாகக் கொள்ளவில்லை' என மணிக்கொடிக் கலைஞர் தனித்தன்மைகளை விதந்தோதிச் செல்வார் பிரேமிள் (தமிழின் நவீனத்துவம்). அசோக மித்திரன் அய்யா, அத்தகையத் தனித்தன்மை கொண்டவர். தன்னளவில் ஒரு மூலப் புருஷர். 1953 துவங்கி 2017 வரை - சுமார் 65 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வந்த எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அசோமித்திரன் அவர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், கட்டுரைகள் என விரியும் அவரது தளத்தில் அவர் நுழைந்து பார்க்காத இண்டு, இடுக்கு எதுவுமில்லை. R.K.Laxman இன் The Comman Man எப்படி வார்த்தைகளில் பொது மனசாட்சியைத் தட்டி உலுக்கினாரோ, அதுபோலத்தான், இன்னும் சொல்லப்போனால், கூடுதல் எள்ளலுடன், அது கலையாக மாறுகின்ற ரசவாதப் பூச்சுடன் நம்மை உலுக்கி, ஆட்கொண்டவர். பெரிதான தத்துவ விசாரணைகளே, முன்முடிவுகளோ, ஆணித்தரமான தீர்ப்புகளோ, கறாரான எடைபோடுதலோ இல்லாமல் இந்த மனுசப் பிறவியை அதன் அனைத்துக் கசடுகள், பயங்கள், சமரசங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், இவற்றோடு சித்தரித்தவர். தன் பாட்டுக்குப் போற வழியில் சடக்கென்று நெருஞ்சி முள் தைத்தாற்போல அந்த மனுசன், மனுசி பேசும் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் 'சுருக்' கென்று தைத்துப் பின் மண்டை வரை ஏறும். எனக்கு அசோகமித்திரன் அய்யா இப்படிச் சிறு சிறு உருத்தான, கனமான வாக்கியங்களில் தான் மிகுந்த அணுக்கமானார். விரிவாகப் புதினம், சிறுகதைகள் என வாசித்தாலும், அவரது இது போன்ற வாக்கியங்களைக் கடக்க முடியாமல், அங்கேயே, நின்று, சமயங்களில் அப்புதினம் முடிந்த பின்பும், அவ்வுணர்வெழுச்சி அடங்காமல், குறிப்பிட்ட சில தரிசனங்களுக்காக நான் அவற்றிற்கு, மறுபடி, மறுபடி, பயணம் செல்கிறேன். அவரது 18வது அட்சக்கோடு தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்தின் மூத்த பையன், சந்திரசேகரின் அனுபவங்களைப் பேசுவது. நிஜாம் சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுக்கும் பொழுது ஹைதரபாத், சிக்கந்த்ராபாத் வாழ் முஸ்லிம், இந்துக்களின் வாழ்முறையில் ஏற்பட்ட பெரும் விரிசலைப் பற்றிய சித்திரங்கள் நிறைந்தது. அது ஹைதராபாத் சிகந்தராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகளில் ஒன்று, ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு. மூன்று நான்கு ஆண்கள், மூன்று நான்கு பெண்மணிகள். மூன்று நான்கு குழந்தைகள். தவிர்க்க முடியாத கிழவி ஒருத்தி. அந்த மூன்று ஆண்கள் சேர்ந்துகொண்டு சந்திரசேகரனைக் கொன்று கூடப் போட்டு விடலாம். ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கைகளாக இருந்தார்கள். அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. (18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன்: 263) சந்திரசேகரன் நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள் ஒன்று நடந்தது. அவர்கள் அப்படி ஒரு திட்டத்தை முன் கூட்டியே பேசி வைத்திருக்க வேண்டும் அந்தப் பெண் மணிகளில் பதினைந்து பதினாறு வயது மதிக்கக்கூடிய ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள். 'நாங்கள் பிச்சை சேட்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்,' என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கமீஸைக் கழட்டினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவளுடைய விலா எலும்புகளை தனித் தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள். சந்திரசேகரனின் கண் கூசிற்று. "ஐயோ!" என்றான். அந்தப் பெண் அதை என்ன அர்த்தம் செய்து கொண்டாளோ இன்னும் ஓரடி முன்வந்தாள். சந்திரசேகரன் மீண்டும் "ஐயோ! ஐயோ!" என்றான். அவனுக்குத் தலை சுற்றி வாந்தி வந்தது. வாயில் கொப்புளித்து வந்த கசப்புத் திறளை அப்படியே அடக்கிக்கொண்டு முன்பு உள்ளே வந்தபடியே சுவர் ஏறித் தெருவில் குதித்து வெறி பிடித்தவன் போல் ஓடினான். அவனுக்கு ரெஃப்யூஜிகள் பூண்டோடு அழித்து விரட்டப்பட்டதுகூட இவ்வளவு குமட்டலை உண்டு பண்ணவில்லை. அவன் வாழ்க்கையில் அவன் முதன் முதலாக நிர்வாணமாகப் பார்த்த பெண் அவனைச் சிதற அடித்து விட்டாள். அவனைப் புழுவாக்கி விட்டாள். அவள் வீட்டாரைக் காப்பாற்ற அவள் எவ்வளவு இழிவுபடுத்தி கொண்டு விட்டாள்! அவள் இன்னும் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது? அதற்கு அவனும் காரணமாகி விட்டான். இந்த கறையை என்று எப்படி அழித்துக்கொள்ள முடியும்? இதை அழித்துக்கொள்ளத்தான் முடியுமா? ஓடிக்கொண்டேயிருந்த சந்திரசேகரன் பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான். (18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன்: 264) அத்தனை விவரனைகளையும் மீறி, அந்த ஒரு வாக்கியம், "இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தை கூட எவ்வளவு இழிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது" - காலத்தை வென்று வலியின் விசத்தை, உலகெங்கும் இந்தக் கணமும் நடக்கின்ற இத்தகைய விபா£தக் கொடூரங்களை, உள் நாவிற்குக் கடத்தும் வரி இது. ப்ராது என்று எங்களூர்ப்பக்கங்களில் புகார் கொடுப்பதற்குச் சொல்வார்கள். வாழ்க்கை குறித்துப் பெரிதான ப்ராதுகள் இல்லாத அல்லது அதனை உரக்கச் சொல்ல முடியாத, அல்லது அப்படிச் சொல்ல நேர்ந்தாலும் பயனேதுமிராத சராசரி, மத்தியதர வர்க்கத்தின் மன ஓட்டத்தைப், பாடுகளை, வாழ்வோட்டத்தில் வெறுமனே மூச்சுவிட்டு, உண்டு, செரித்து, உறங்கி, மரணமடைவதை தன் விதியாகக் கொண்டுள்ளவர்களைப் பற்றிய அவர் தரப்புப் பார்வையை, ஒரு ஹீனக் குரலாக அவர் தொடர்ந்து முன்வைத்தார். ஆனால் அது நம்மை மிகத் தொந்திரவு செய்யும் குரல். கதவிடுக்கில் சிக்கிக் கிறீச்சிடுகின்ற செல்லப் பிராணியின் வதைக்குரலாய் நம்மைப் பின் தொடரும் குரல். அவரது படைப்புக்களில், இருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதே என் வகையில் சரியான அஞ்சலி. அவரது இன்று குறு நாவல் எனக்கு மிகப் பிடித்த படைப்பு. வேறு வேறு தளங்களில் வெவ்வேறு மனிதர்களைப் பற்றிப் பேசுவது போலப் பின்னப்பட்டிருக்கும் - ஆனால் ஒரு நுட்பமான சரடு அவற்றை இணைத்திருக்கும். அதில் வரும் இரண்டு இடங்கள்... இந்த ஆட்டோரிக்ஷாக்களுக்கு மட்டும் எப்படி இந்த இடம் சந்தேகமில்லாமல் தெரிகிறது? அவ்வளவிற்கும் பெயரையே தவறாகச் சொல்லியிருக்கிறான். இவனுக்கு அந்த முகவரியைத் தந்தவர்களே அந்தச் சாலையின் பெயரைத் தவறாக எழுதித் தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழகான சாலையில் நரைத்த தாடியும். சிகையும் உள்ள அந்த ஆட்டோரிக்ஷாக்காரனுக்கு அந்தத் தவறான முகவரியும் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் இந்த விதத்தில் குரூரமான மொழி. தொழிலைக் கொண்டு ஒருவனைக் குறிக்கும் போது விகுதி பாரபட்சம் காண்பிக்கிறது. இல்லாது போனால் இவனை ஆட்டோரிக்ஷாக்காரனாகக் குறிக்க முடியாது. (இன்று - அசோகமித்ரன்: 27) ஜோடுகளிலும் கம்பளி பாண்ட்டுகளிலும் கூடப் பணம் பணமின்மை தெரிந்து விடுகிறது. (இன்று - அசோகமித்ரன்: 29) அதில் வருகின்ற இன்னொரு இடம் - "எழுத்தாளர் அரிதாசன் இருக்காரா?" "நான்தான் ஹரிதாசன்." "உங்களைப் பாத்து ஒரு பேட்டி எழுதிண்டு போக ஆசிரியர் அனுப்பிச்சார்." "என்னையா?" இநத போட்டியின் தலைப்பே 'இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்." "இந்தத் தலைப்புலே ஜெயகாந்தன் கட்டுரைங்க எழுதியிருக்கார் இல்லே?" "இது பேட்டி, உள்மனிதன் பேட்டி." (இன்று - அசோகமித்ரன்: 38) "நீங்க எவ்வளவு நாளா எழுதறீங்க?" "முப்பது முப்பத்தஞ்சு வருஷமா இருக்கும்." "குறிப்பாச் சொல்ல முடியுமா?" "குறிப்பாவா? முப்பத்தி மூணு வருஷம் ஏழு மாசம்." "அப்போ முப்பத்தி நாலுன்னு போட்டுக்கறேன்." "போட்டுக்குங்க. இதுக்கு ரேஷன்லே அரை கிலோ ஒரு கிலோ சக்கரை கூடக் கொடுத்தா நன்னாயிருக்கும்." (இன்று - அசோகமித்ரன்: 39) "என் கதை எதாவது நீங்க படிச்சிருக்கீங்களா?" "ஓ, நிறையவே படிச்சிருக்கேன்." "எதுலே?" "ஆனந்த விகடன், கல்வி... ஏங்க? நான் நிறையப் படிச்சிருக்கேன்." "போனாப்போறது, உங்களுக்கு எந்தக் கதை ரொம்பப் பிடிச்சுது?" "ரொம்பப் பிடிச்சுதா? ரொம்பப் பிடிச்ச கதை - முன்னே நீங்க ஒருத்தன் பாங்க்லே கொள்ளையடிக்கிறான், பாங்க் இரும்புப் பொட்டியிலேயே ஒரு பாம்பு இருக்க், அதையும் இவன் சேத்துப் போட்டுக் தூக்கிட்டுப் போறான்..." "இந்தக் கதையை நான் எழுதலே." "நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை." "என்ன செய்யறது? நான் எழுதலை" "நாம நிறையப் படிச்சுண்டே இருக்கோமா. எது யார் எழுதினாங்கன்னு நினைவுலே இருக்கிறதில்லே." ஆமாம், கஷ்டந்தான்" (இன்று - அசோகமித்ரன்: 40) "சார், உங்க பத்திரிகையிலே இந்தப் பேட்டி போடப் போறதில்லை. உங்க நேம், என் நேரம் எல்லாம் வீண்?" "இல்லே, சார். ஆசிரியர்தான் அனுப்பிச்சார். உங்க கதைங்கன்னா ரொம்பப் படிச்சிருப்பார்." "அவரும் அந்த பாங்க் இரும்புப் பொட்டிக் கதையைப் படிச்சிருப்பார்." (இன்று - அசோகமித்ரன்: 41) சார்த்தரின் சமூக அக்கறைகளைப் பகிர்ந்து கொண்டாலும் மிஷல் ஃபூக்கோ, சார்த்தரின் 'இயங்கியல் அறிவு பற்றி விமர்சனம்' (Critique of Dialictical Reason) என்னும் நூல் "இருபதாம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் 19ம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது" என்று கூறினார். மார்க்ஸைப் பற்றியும் கூட இதே தொனியில் பூக்கோ எழுதினார், "எப்படி மீன் தண்ணீரில் வாழும் ஜீவராசியோ அப்படி மார்க்ஸ் 19ம் நூற்றாண்டு ஜீவராசி (அதாவது 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பொருத்தப்பாடு மறைந்து விட்டது) எனும் அர்த்தத்தில். ஆனால் அசோக மித்திரன் 21ம் நூற்றாண்டிற்கும் பொருத்தமான எழுத்தாளர். ஆனால் தண்ணீரின் சாயா, ஜமுனா, பாஸ்கரராவை நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 18ம் அட்சக்கோட்டின், அந்த நாக்பூர் ரெஃயூஜிகள், தின்பண்டங்கள் பண்ணிவிற்ற, அவர்களைப் போல எண்ணற்ற பேர்கள் இன்றைக்கு அகதிகளாக உலகமுழுதும் அலைகிறார்கள். அசோக மித்திரன் எழுதுகிறார்... 1977... இல், "அவர்கள் செய்வதை எவ்வளவோ ஓட்டல்கள் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றன. இந்து ஓட்டல்... முஸ்லிம் ஓட்டல் என்று இதில் வித்யாசம் இல்லை. எல்லாருக்கும் சாப்பிட வேண்டியதெல்லாம் ஒன்றாகத் தானிருக்கிறது." புனர்ஜன்மம்: அசோக மித்திரன் எழுதுகிறார்... 1984... இல், அதன் திருஷ்டியே கோணப்பட்டுவிட்டது போல ஒரு பஸ் ஒரு புறமாகச் சாய்ந்தபடி அங்கு வந்து நின்றது. பஸ் கால்படியில் தொத்திக் கொண்டிருந்த நான்கைந்து பேர் ஒரு சிறு இடைவெளிக்காக இறங்கிக் கீழே நின்றார்கள். அவர்கள் நடுவில் நுழைந்து சீதா பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அவளுடைய உடலின் மேற்பரப்பைப் பகிர்ந்து கொண்டார்கள். (இன்று - அசோகமித்ரன்: 59) இன்றைக்கும் ஏற்புடைய சாஸ்வதமான எழுத்து. அவருடைய எள்ளல், அங்கதம், நகைச்சுவை சக்சிதமாக அளவெடுத்துத் தைத்த சட்டை போல. எள்ளல் passage to be read out here... அவரது விவரணைகளோ ஒரு செங்கலைக் கூட இடையில் எடுத்துச், சொருக முடியாத கட்டமைப்பு. என்ன சார் இது இவ்வளவு அருமையாக எழுதுறீங்க! அற்புதமான காவியங்களை எல்லாம் தமிழுக்குப் படைத்திருக்கீங்க. தமிழர்கள் உங்களைப் போதுமான அளவில் பாராட்டிக் கெளரவிக்கலியே' பிச்சமூர்த்தியிடம் தஞ்சை ப்ரகாஷ், தஞ்சை ப்ரகாஷ்க்கு பிச்சமூர்த்தியின் பதில்: (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும் - வே.மு.பொதியவெற்பன் : 88) 'பிரகாஷு தான்ளெ ஏமி உந்தி? லோகமந்தா இதுமாதிரிதானே கதா? உலகம் முழுவதும் வேறு காரியங்களைப் பார்க்கிறது தானே சகஜ உண்மை. குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, எருமை கத்துகிறது எருக்கும் பூக்கிறது. யார் என்ன செய்ய, லோகம் இப்லனே ஜரிகிதுந்தீ லபம் வத்சர யுகயுகாந்தர இதே கதி - இதுக்காக நாம் கோவிச்சுக்கக் கூடாது அபத்தம்.' (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும் - வே.மு.பொதியவெற்பன் : 89) ஒரே ஒரு தாளாத வருத்தம் அசோகமித்திரனுக்கு, ஞானபீட விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விவரணை: காரியாலயத்திற்கு விடுமுறை என்றால் முகஷவரம் செய்து கொள்ளத் தோன்றாத மனிதன். முகத்தைக் கோரப்படுத்த அப்போதே நரைக்கத் தொடங்கிய தாடி மீசை போல எதாலும் முடியாது. ஆனால் அந்த ஆள் மனதிலுள்ள மீசை நரைக்கத் தொடங்கி வெகு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். மீசை முளைக்க ஆரம்பித்தபோதே நரை மயிராக இருக்க வேண்டும். (இன்று - அசோகமித்ரன்: 71) ஆனால் இதை நடத்துபவர்கள் நீண்ட கால அரசாங்க உத்தியோகம் ஏற்படுத்திய முகமாற்றத்தையும் நடை உடை பாவனைகளையும் உதறித் தள்ளி விட முடியவில்லை. அமைப்பாளர், அமைப்பாளரின் உதவியாளர், உதவியாளரின் உதவியாளரான ராமபத்திரன் எல்லாருக்கும் முகத்தில் அதிகாரமும் அச்சமும் உறுதியும் சந்தேகமும் கலந்த ஒரு சிலேடை முகபாவம். நினைத்தமாத்திரத்தில் பணிவு ஏற்படுத்திக் கொள்ளும் தோள்கள். (இன்று - அசோகமித்ரன்: 79) எள்ளல்: ஜெமினி ராஜாங்கத்தில் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேலையைச் செய்து கொண்டிருந்தேன். நான் விஷயம் தெரிந்தவன் என்று நம்பினார்கள். ஆனால் இதெல்லாம் ஒளவையார் படத் தயாரிப்பில் என்னைப் பங்கு கொள்ளவிடவில்லை. அந்த முதிய ஒளவையாரைப் பற்றி படமாக்கப்பட்டதை எல்லாம் நான் பார்த்தேன். ஒளவையாரின் பிறப்பு இரண்டு மணி நேரம் ஓடும் படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. ஒளவையாரின் இளமைப்பருவம் இரண்டு மணி நேரம் ஓடியது. ஒளவையார் உலக வாழ்வைத் துறப்பது இரண்டு மணி நேரம். ஒளவையார் பேயைச் சந்திப்பது இரண்டு மணி நேரம் - மன்னிக்கவும் நான்கு மணி நேரம். தாராள மனப்பான்மை கொண்ட நாட்டாண்மைக்காரர் வீட்டில் ஒளவையார் தங்கியிருந்தது பற்றி இரண்டு மணி நேரம். இது போல் பல இரண்டு மணி நேரங்கள். வாசன், தனது கதை இலாகாவைச் சேர்ந்தவர்கள் மதியம் தூங்கி வழிவதைப் பார்த்ததால், அவர்களிடம் 'ஒளவையாருக்காக ஏன் ஒரு சீன் எழுதக்கூடாது' என்று கேட்டுக் கொண்டதின் விளைவுதான் அது. (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 93) இந்தக் காலத்தில் நீங்கள் முதல்வர்களையே படத்தில் நடிக்க வைக்க முடியும். ஆனால் 1953-ல் ராஜாஜி போன்ற ஒரு நபரை வெளிவரவிருக்கும் ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு அழைப்பது என்பது ஸ்ரீகாந்த் வர்மா (ஒரு தீவிர காங்கிரஸ்காரர்) அவர்களை ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கலந்து கொள்ள வைப்பதைப் போன்றது அல்லது மொரார்ஜி தேசாயை, சிகரெட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை வகிக்க வைப்பதைப் போன்றதாகும். (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 95) சொற்களை எளிதில் செலவிட்டு விடாத ராஜாஜி, முழுப்படத்தையும் மவுனமாகப் பார்த்தார். படம் முடிந்த பிறகு வாசனும் அவரது முக்கிய உதவியாளர்களும் அவரது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ராஜாஜி காரை நோக்கி நடந்தார். மவுனமாக ஏறிச் சென்றுவிட்டார். ஆனால் உலகம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே விஷயம், ராஜாஜி, 'ஒளவையார்' படம் முழுவதும் பார்த்தார் என்பது. (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 97) ஒளவையார்: ஒருநாள் டாக்டர்களாகப் படம் பார்ப்பார்கள். அடுத்த நாள் இன்ஜினீயர்கள், அடுத்த நாள் நீதிபதிகள், இன்னொரு நாள் கல்லூரி முதல்வர்கள். ஒவ்வொரு நாளும் பார்த்தார்கள். மாலை 5மணி முதல், ஸ்டுடியோ கேட்டில் நின்றுகொண்டு எனது பெரிய தொள தொளத்த சட்டையையும், விரிந்த புன்னகையையும் அணிந்துகொண்டு கார்களில் வந்து குவியும் பிரமுகர்களையும் பெண்களையும் நான் வரவேற்பேன். (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 98)
No comment