‘ஜி’ என நான் அன்பான உரிமையுடன் விளிக்கின்ற இராஜி பார்த்தசாரதியின் ‘மார்கழித் திங்கள்’ தொகுப்பை இன்னுமொரு மார்கழிப் பனி சூழ் அதிகாலையில் படிக்கையில், ஆழ் குளிரின் அண்மித்த தழுவலைப் போலவே பல கவிதைகள் இதமாக என்னருகில் ஒட்டிக் கொண்டன. ராஜி ஒரு நல்ல ரசிகை, சூழலியல் ஆர்வலர், சமூகப் பொறுப்புள்ள பேராசிரியை என்றெல்லாம் அறிந்த எனக்கு அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட என்றறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. ராஜிக்கும் எனக்குமான நட்பு சோழன், பிசிராந்தையாரின் அபூர்வமான நட்பைப் போல ஆழங்கால்பட்டது. சம்பிரதாயமான சந்திப்புக்கள், உரையாடல்கள், பகிரல்கள் இவற்றைத் தாண்டியதொரு உறவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டது. அடிக்கடி பேசிக் கொள்வதில்லை - தொடர்ந்து சந்திப்பதில்லை - ஆனாலும் எனது அனைத்து முன்னேற்றங்களையும் மகிழ்வோடு கவனித்தபடி உடனிருப்பார். என் படைப்புக்கள் எங்கு வெளிவந்தாலும் உடனுக்குடன் பகிர்ந்து என் மகிழ்வை இரட்டிப்பாக்குவார். அவரது ‘அம்மாச்சியின் வீட்டைப்’ போல எப்போதும் எனக்கான அன்பின் கதகதப்புடன் காத்திருப்பார். அவரது இந்தத் தொகுப்பு முழுவதும் பூக்களும், மரங்களும், பசுமையும், வண்ணங்களும் தான் - அவரது எண்ணங்களைப் போலவே. “சற்றே வெயில் சிந்தி / அணில்களின் விளையாட்டில் / அசையும் வேப்ப மர இலைகள்”, “மிளிரும் பூசணிப் பூக்கள்”, “தென்னை மரப் பூங்காற்று / மாடு நிறை தொழுவங்கள்”, “விளக்கேற்றும் மாடம்”, “நெருஞ்சிச் செடியின் மஞ்சள் மலர்”, “மஞ்சள் இயல்வாகை”, “பொன் சிதப்தம்”, “வெள்ளிப் பேச்சுக்கள்” - என மணக்க மணக்க வாழ்வை ரசித்து ருசிக்கும் தன் அகத்தை, புறம் குறித்துப் பெருங்கவலை கொண்டு ஆதங்கப்படுகின்ற அதன் வலியை - பாசாங்கற்ற இயல்பான உரைநடை மொழியில் பதிவு செய்திருக்கிறார். எனக்குப் பிடித்த சில கவிச் சிதறல்களும் உண்டு - ஒரு சோறு பதமெனக் கீழ் வருவது: “மழை பெய்வது கூட நல்லார் ஒருவருக்காய்தான். வெயிலோ வெள்ளந்தியானது” ............. “எங்கே யார் கதை சொல்லக் கேட்டாலும் காதில் ஒலிக்கும் அத்தையின் குரல்” ராஜிக்கு விவரணைகளோடு கூடிய ஒரு நடை வசப்பட்டிருக்கிறது - அதில் விட்டுச் சென்ற கூழாங்கற்களைத் தேடித் திரும்புகின்ற சிறுமியெனச் சிலக் கவித்துவக் கணங்களை மீட்டெடுக்கிறார். இந்த பிரபஞ்சக் காதலியின் மௌன மொழியில் நட்சத்திரங்கள் கண்ணடித்துக் கதை கேட்பதை அவரது சஹிருதையாகச் சற்றே அவர் தோள் சாய்ந்து ரசிக்கின்றேன் நான். ராஜி ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராக உருக்கொள்வதற்கான கட்டியங்களென மூன்று மொழியாக்கங்கள் முத்துக்களாக இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பாரசீகக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் கவிதைகளை மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அக் கவிதைகளுக்கான அவரது பின்புலக் குறிப்புக்களைப் படிக்கையில் ஆல்ஃபிரட் டென்னிசனை, உபநிடதக் கோட்பாடுகளை, மணிவாசகரின் சிவபுராணத்தை அவர் ஆழக் கற்றிருக்கிறார் என அறிந்து வியந்து போனேன். கணினித் துறை சார்ந்த காரிகை மட்டுமல்ல இவர் - இலக்கியத் துறையிலும் விரைவில் விஞ்சக் கூடியவர் என்பதற்கான சான்றுகள் அவை. மென்மையும், கூர்ந்த விழிப்புணர்வும், தேர்ந்த ரசனையும், அறம் சார் வாழ்வும், சமூகம் சார் நேர்மையான பொறுப்புணர்வும் நிறைந்த இந்த பேராசிரியையின் சஹிருதையான தோழி நான் என்பதில் பெருமை எனக்கு! அவரது கவித்துவ மனதின் பகிரல்களான இத் தொகுப்பின் வரிகளூடாக அவர் விரல் பிடித்துச் செல்கையில் ‘சுமதி’ என விளித்து “நாட்களாகி விட்டனவே... விஷயமொன்றுமில்லை... உங்கள் குரல் கேட்க மட்டுமே அழைத்தேன்” எனத் தொலைபேசும் அந்தக் குரலை, அதன் தூய்மையான நட்பை, வாஞ்சையை உணர்ந்தபடி பயணித்தேன். வாழ்த்துகள் என் அன்பு ராஜி... வெயிற்சுவை போல நிலாச் சோறு போல மார்கழிப் பனி போல வேப்ப மரக் கிளிகள் போல நமக்குப் பிடித்த இயல் வாகையின் மஞ்சள் நிறப் பூக்களின் மணம் நுகர்ந்தபடி நாமிருவரும், இப் பிரபஞ்சத்தை ரசித்து, ருசித்தபடி கைகோர்த்துப் பயணிப்போம் - பகிர்தலின் சுகமோடு! * * * * *
No comment