கஜல் பிறைகள் – ஈரோடு தமிழன்பன் புத்தக வெளியீடு பேச்சு

கஜல் ஒரு மிக அழகான ஆழமான கவிதை வடிவம். அன்பின் வலிமையை, பிரிவை, நிறைவேறாமையை அதன் வலியோடு அழகு குன்றாமல் சொல்கின்ற ரசவாதம். அன்பென்றால் காதலும் தானே - காதலன் / காதலி ; கடவுள் / பக்தன்; தோழன்/தோழி - இப்படி எவருக்குள்ளும் ஊற்றெடுக்கும் அன்பின் வெளிப்பாட்டைச் சுருக்கமான சொற்கட்டோடு, சந்த நயத்துடன், இசை சேர்த்துத் தரும் அற்புதம் கஜல். 
     இசையும், சந்தமும் கஸலின் இரு கண்கள்; காதல் அதன் பார்வை; ஞானம் அதன் ஆன்மா! 
தமிழுக்குத் ‘திருக்குறள்’, ஜப்பானிய மொழிக்குக் ‘ஹைக்கூ’, உருது மொழிக்குக் ‘கஜல்’ மூன்றும் தனிச்சிறப்புபெற்ற வடிவங்களாகும். 
     இந்த அரபுக் கவிதையின் தோற்றுவாய் 6ம் நூற்றாண்டு. இந்தோ - பெர்சிய - அரபு நாகரிகங்கள் கீழைத்தேய முகமதிய உலகிற்கு அளித்த மிகப் பெரிய கொடை கஜலாகும். 
12ம் நூற்றாண்டில் தெற்காசியாவிற்குக் கஜலை அறிமுகப்படுத்தியவர்கள் சூஃபி ஞானிகள் - குறிப்பாக பாரசீக ஞானிகளும், கவிகளுமே. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரூமி, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹாஃபிஷ், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிர்சா காலிப், முகம்மது இக்பால் - பாரசீக மொழியிலும், உருதுவிலும் எழுதியுள்ள கஜல்கள் உலகப் புகழ்பெற்றவை. வாலி டெக்கனி (Wali Deccany) - (1667-1707) உருதுக் கவிதையின் சாஸர் (Chancer) எனப் போற்றப்படுவர். அவரே பாரசீக மொழியை விட உருது மொழியில் கஸல்களை எழுதிப் பிரபலப்படுத்தியவர். 
      ‘கஜலில்’ காதல் எனும் உணர்வு - Divine Love - தெய்வீகக் காதல், Earthy Love - மனிதர்களுக்கிடையேயான காதல், என இருவகைகளில் சொல்லப்படுகின்றது. பெரும்பாலும் unrequited love - நிறைவேறாத காதலே இதன் தொனி. கடவுளை அடைய முயன்று தோற்கும் மனிதனின் கவி அழுகை எனவும் கூறலாம். 
     இந்தியாவில் உருது, ஹிந்தி மொழிக் கஜல்களுக்குப் பிறகு குஜராத்தி மொழியில் அதனைப் பிரபலப்படுத்தியவர் பாலசங்கர் கந்தாரியா; பர்கத் விரானி, அம்ருத் காயல் போன்ற குஜராத்தி கவிஞர்கள் பிரசித்தி பெற்றவர்கள். தெலுங்கில் டாக்டர். கஜல் ஸ்ரீனிவாஸ் கஜலை முன்னிலைப்படுத்தியதோடு, கன்னட இலக்கிய உலகிற்கும் அதனை அறிமுகப் படுத்தி இருக்கிறார். 
      பெங்காலியிலும் பிராடிஷ் தாஸ்குப்தாவினால் கஜல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் கவிக்கோ அப்துல் ரஃமான் அய்யாவின் ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ (2004ல் - மித்ரா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட) ஒரு மிக அருமையான கஜல் தொகுதி. அதில், 
     "கஜல் என்றாலே ‘காதலியுடன் பேசுதல் என்று பொருள்’. கஜல் அரபியில் அரும்பிப், பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்" என்று கஸலுக்கு மிக அருமையான விளக்கம் அளித்திருக்கிறார் அய்யா அப்துல் ரஃமான். 
      கஸலின் சுதந்திரம், மென்மை, நளினம், நவீனத்துவம் அவரை அடிமையாக்கியதனைப் போலவே தமிழன்பன் அய்யாவையும் ஆகர்ஷித்திருக்கிறது. கஸலின் வடிவத்தைத் தான் அப்படியே பின்பற்றவில்லையென்றும், பேச்சுச் சந்தத்தில் வரிகளை அமைப்பதற்காகக் கஸலின் இரண்டடிக் கண்ணியைச் சிறுபத்தியாக்கிப் கொள்வதாகவும் கவிக்கோ குறிப்பிட்டுள்ளார். கண்ணிகளை இணைக்கும் இயைபுத் தொடையாப்புச் சந்தம் இவற்றையும் அவர் தவிர்த்துவிடுகிறார். 
      ஆனால் கவிஞர் தமிழன்பன் அய்யாவோ இந்தக் கஜல் பிறைகள் தொகுப்பில் கஜலின் புறக்கட்டமைப்பைக் கைவிட்டுவிடாமல் பெருமளவிற்கு உள்வாங்கி இடம் பெறச் செய்திருக்கிறார். கஜலின் இறுதியான ஷேரை மாஃக்தா என்பார்களாம். அதன் முதல்கண்ணி மத்லா - வானம் அல்லது முகப்பு எனப்படும். இதன் இறுதி ஷேர் விலகல் அல்லது முடிவற்ற பொருள் எனப்படுமாம். இந்தக் கண்ணியில் கவிஞன் தனது புனைபெயரைக் (takhallus) கொண்டு வரலாம். 
	"பகல்மார்பில் இருள்துடிப்புப் பிறப்ப தில்லை!
	பனிவிரல்கள் வெயில்கதவு திறப்ப தில்லை!
	நகல்மனிதர் இருப்பார்கள் வாழ்வ தில்லை!
	அசல்கவிஞன் தமிழன்பன் இறப்ப தில்லை!"" 
மிக முக்கியமாக, பாடத்தக்கவையாக இவற்றை ஆக்கியிருப்பது தனிச் சிறப்பு! விழாவின் தொடக்க நிகழ்வான பாடல் விருந்து அதனை மெய்ப்பித்தது தானே! 
கவிஞருடைய அகப்பரிமாணம் நம் தமிழின் அகம், புறம் சார்ந்தது. ஆதலால் கஜலின் அகப் பரிபாணத்தை அவர் அப்படியே சுவீகரித்துக் கொண்டதிலே ஆச்சர்யமில்லை. 
ஆங்கிலத்திலும் அழகான கஸல்கள் உண்டு. மிமி கல்வதியின் (Mimi Kahlvati)யின் இந்த கஸலைப் பாருங்கள்-
	if I rise in the east as you 
		die in the west, 
	die for my sake, my love, 
	every night – renew me.
If I am the grass and you 
	the breeze, blow through me. 
If I am the rose and you 
		the bird, then woo me. 
மலரோடு பழகியதில் பச்சைக்காயம் 
மனமெல்லாம் வலிக்கிறதே என்ன நியாயம்? எனும் தமிழன்பன் அய்யாவின் கஜல் மேற்சொன்னதை விட அழகு அல்லவா? 
 	கஜலின் அகத்தன்மைக்கு ஒரு சோறு பதமாகத் தனது முன்னுரையில் உருது அகதாமியின் துணைத்தலைவர், மரியாதைக்குரிய ஏ.எஸ். சஜ்ஜாத் புகாரி அவர்கள் இக் கஜலைச் சொல்லியிருக்கிறார்: 
	"சிரமத்திற்கு மன்னிக்கவும் 
	உன் காலடியில் என் இதயம்!"
	"காதலனின் பொறுமை, சகிப்புத்தன்மை, தவிப்பை வெளிப்படுத்தும் பண்பு, தன்னுணர்வின் கண்ணியமான வெளிப்பாடு, காதலியின் பால் அல்லது பெயர் குறிக்கப்படாததால் ஏற்படும் மேன்மை	ஆகியன கஜல் கவிதையின் தனித்தன்மை"" எனவும் சுட்டுகிறார் அவர். அந்தத் தனித்தன்மை சொட்டும் தமிழன்பன் அய்யாவின் கஜல் இது : 
	காத்திருந்த நேரம்நான் இறந்திருந்த நேரம்! 
	கண்டவுடன் வந்தது நான் பிறந்துவந்த நேரம். 
	ஒரு பாடல், ஒரு பாடல் ஒரே ஒரு பாடல் தானே நானுன்னைக் கேட்டேன். 
	நீ பாட மாட்டாயெனத் தெரிந்திருந்தால் நானுன்னைக் கேட்டிருக்க மாட்டேன். 
ரூமியின் புகழ்பெற்ற கஸல் - 
தாகம் கொண்டவர் நதியைத் தேடுகிறார். 
நதியும் தாகம் கொண்டவரைத் தேடுகிறது 
தமிழன்பனின் தாகம் உணர்ந்த கஸலென்னும் பெரும் நதி அவரைத் தாவி அணைத்துக் கொள்கிறது. 
பொங்கி வருகிறது காதலின் மென்சோகம் அவரிடத்தில் இப்படி : 
மறதி வழி நடந்துவந்தா என்னிடத்தில் சேர்ந்தாய்? 
நினைவு வழி வெறியேறி எங்கே போய்த் தீர்ந்தாய்! 
கஜலின் மையமே - அடையமுடியாத அல்லது கைக்கெட்டாத காதலின் துயரத்தை உய்த்து, உணர்ந்து பாடுவதுதானே! 
Pandit Ravi Shankar-உம் Begum Akhtar-உம் 60 களில் கஜலைப் பிரபலப்படுத்த எடுத்த முயற்சிகளைப் போல தமிழின் தேர்ந்த ரசிகர்களது உலகிற்கு கஜலை இசையாக்கி இன்றைய தினம் அரங்கேற்றியதன் மூலம் வழிகோலி இருக்கிறார் அய்யா. தமிழில் இது புது முயற்சி. இசை நிரம்பிய இதயங்களால் அவருக்கு நன்றி சொல்வோம். 
உருதுக்கவிதையின் கடவுள் Khuda – e – Shkhan (God of Poetry) எனப்படுபவர் Mir Tagi Mir - மீர் டாகி மீர். அவருடைய சமகாலத்தவரே (Mirza Ghalib) மிர்ஜா காலிப். உருதுக் கவிதையின் காதலர்கள் மிர்ஜா காலிப்பைவிட மீர் டாகி மீர் தான் உயர்ந்தவர் என்று வாதிடுவார்கள். அது உண்மை என்று மிர்ஜா காலிபே தனது கவிதை ஒன்றில் ஒப்புக் கொள்கிறார். 
you are not the 
only master of 
Urudhu, Ghalib 
they say there 
used to be a Mir in the past.
அவரது கஸல் ஒன்று 
It’s the beginning
of love, why do you wail
just wait and 
watch how things 
unveil?
இது காதலின் ஆரம்பம் மட்டுமே -
அதற்குள் புரியுமா என்ன ?
காத்திரு, கவனி எப்படி 
நிகழ்ச்சிகள் விரியுமென -
இதே போல் கஸலைக் கவிஞர் எழுதுகிறார் - 
கண்ணீரும் புன்னகையும் இல்லாத கதை 
இருக்குமெனில் யாரெழுதி இருப்பார்கள் அதை? 
நிலாவிற்கும் கடை தாண்டி விலைபேசிப் புதை
 	இருள்வாங்கி வந்தவனோர் அமாவாசை விதை 
- இந்த அமாவாசை விதை என்ன ஒரு அற்புதமான உவமை! 
அதுபோல இன்னுமொரு புதுமையான சொல்லாடல் - 
	வழிப்போக்கன் நாமறிவோம் மனப்போக்கன் தெரியுமா? சொல்கிறார் கவிஞர் -
எனக்கில்லை சொந்தமழை ! எனக்கில்லை சொந்த வெயில் !
	நானொரு வழிப்போக்கன் !
	எனக்கில்லை சொந்த நிலா ! எனக்கில்லை சொந்தக்கனா! 
	நானொரு மனப்போக்கன்!
அதுபோல வீட்டுக் கதவு தெரியும் - வீட்டுக் கண்கள் தெரியுமா? 
	"கனவு விற்கவந்தேன் அய்யா, உங்கள் வீட்டுக் 
	கண்களைத் திறங்கள் 
அந்தக் கண்ணி (Sher) முழுக்க மிக அருமை. 
	கனவு விற்க வந்தேன் அய்யா, உங்கள் வீட்டுக் 
	கண்களைத் திறங்கள்!
	நூறு வகையில்! நூறு வடிவில்! நீங்கள் விரும்பும் 
	கவர்ச்சியாய் நிறங்கள்!
	அவர வர்கள் வசதிக் கேற்ப வாங்கித் தூங்கி 
	ஆசையாய் வளர்க்கலாம்
	அவரவர்கள் விழிப்புப் பொடிகள் தூவி விட்டால் 
	அவைநல்ல உரங்கள்! 
	கலைந்த தென்று கனவை எவரும் திருப்பித் தந்தால் 
	ஏற்பதற் கில்லை! 
	வண்ணம் வடிவம் சீர்மை கெட்டுச் சிதைந்த தென்றால் 
	பொறுப்பெமக்கு இல்லை!
	பழைய கிழிசல் தூக்கம் இருந்தால் எடுத்துப் போடலாம் 
	மறுப்பெமக் கில்லை! 
	பழுது பார்த்த பழைய கனவைப் பதிலாய்ப் பெறலாம் 
	தடையெமக் கில்லை.
அடடா - பழைய கிழிசல் தூக்கம் - என்ன அருமையான சொல்லாடல்! 
ஒரு மொழிபெயர்ப்பைக் கலப்புத் திருமணம் எனலாம். ஆனால் பிறமொழியில் உள்ள ஒரு கவிதை வடிவத்தை, அதன் உணர்வு, கவிநயம், தொனி, நடை மாறாமல் உள்வாங்கி, அதில் தமிழ்க் கவிதையின் அணி இலக்கணச் சிறப்பையும் இணைத்துத், தமிழ் வாசகர்களுக்குக் கஸலைத் தருவதை நான் காதல் திருமணம் என்பேன். தமிழன்பன் அய்யா உருதுவின் பெரும் பொக்கிஷத்தை மாந்தி மாந்தி காதலித்திருக்கிறார். அது கஸல் திருமணமாகக் கஜல் பிறைகளில் கனிந்திருக்கிறது. 
காதல் கனிந்த ஞானமாகவும் வெளிப்படுகின்றது - பல கஸல்களில்!
	நான்விரி வானம்! எனையேன் கிழிக்கப் பார்க்கிறாய்?
	நான்மழை பொழிநீர்! எனையேன் உடைக்கப் பார்க்கிறாய்?
	நான்நிழல் படலம்! எனையேன் துடைக்கப் பார்க்கிறாய் !
	நான் தழல் மூலம்! எனையா தீண்டி ஆர்க்கிறாய்?
	நான்கவி அருவி! மலைமேல் திரும்ப முடியாது!
	நான்கடல் ஆழம்! கரைமேல் வாழ முடியாது!
	நான்அநா திகாலம்! வயதால் அளக்க முடியாது!
	நானின்றி உலகம் ஒருநாள்கூட விடியாது! 
தமிழ் மொழி குறித்தும் ஒரு கஜல் - 
	அழகிலிருந்து தமிழ்ச்சொற்கள் பிறந்துவந்த தில்லையா? 
	அதைப்பார்த்துக் கொடியிலரும்பு திறந்துவந்த தில்லையா?
	தமிழிலிருந்து இலக்கியங்கள் மலர்ந்துவந்த தில்லையா?
	அவைமயக்க உலகமிங்குப் பறந்துவந்த தில்லையா?
	குறள்மடியில் சிந்தனைகள் சுரந்துவந்த தில்லையா?
	முப்பாலும் வாழ்வியலைக் கறந்துவந்த தில்லையா?
	உலகினிலே தமிழ்மொழிதான் சிறந்துவந்த தில்லையா?
	இதைத்தமிழர் மதிக்காமல் மறந்துவந்த தில்லையா?
மாவோ, மயாகோவ்ஸ்கி எனும் ரஷ்யக்கவிஞர், ரஷ்ய புரட்சி இவை குறித்தெல்லாம் தமிழன்பன் அய்யா கவிதைகள் எழுதி உள்ளார். அவரது "நாட்டை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்" மிகச்சிறந்த படைப்பு. 
மயாகோவ்ஸ்கி கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்று எழுதி வெளியிட்ட ஒரு சிறிய வெளியீட்டில் சொல்கின்றார் - "ஒரு படைப்பாளிக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு சமூக ஆணை என்பது மிக மிக முக்கியம். சமூக ஆணை என்றால் என்ன? சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை". ‘சமூக ஆணை’யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. அவரது அடிச்சுவட்டில் தமிழன்பன் அய்யாவின் கஸல் இது - 
வெளிச்சம் இழந்த ஆயிரம் நிலாக்கள் 
இங்கே இருண்டு கிடக்கையிலே 
விண்ணின் நிலவே உன்னைப் பாட 
என்மனம் சற்றும் துடிக்கலையே!

மலர்ச்சி இழந்த மானுட அரும்புகள் 
துயரக் கண்ணீர் வடிக்கையிலே 
செக்கச் சிவந்த ரோஜா மலரே 
உன்னைப் பாடப் பிடிக்கலையே!

பட்டினி கிடக்கும் பாடல் கோடி 
பஞ்ச நெருப்பில் வெடிக்கையிலே 
குழலை மீறிய குயிலே உன்னைக் 
கூப்பிட முடிவு எடுக்கலையே!

அதிசய உலகம் ஆனந்த உலகம் 
பூமியில் ஒன்றும் நடக்கலையே!
தாழ்வுகள் போக மேன்மைகள் ஆக
யாரும் வேர்வை வடிக்கலையே!

வார்த்தைகள் கடத்தும் பாதையில் போன 
கவிதை எதையும் கடக்கலையே!
சரித்திரம் போட்ட கடிதம் இன்னும் 
கவிதை கைக்குக் கிடைக்கலையே!
"ஒவ்வொரு பூவும் ஒரு காதல் கடிதம்"
எனும் கவிக்கோ மிக அழகாகப் 
	"பாவத்திற்குக் கிடைத்த 
	மன்னிப்பைப் போல் 
	நீ எனக்குக் கிடைத்தாய்"
எனச் சொல்லிவிட்டு 
	"மனிதனின் ஆதிப் பாவம் 
	காதல் தான்"
என முடித்திருப்பார்.
	"நட்சத்திரக் கடிதத்தைப் பகலினிலே 
	யார் எடுத்துப் படிப்பார்?"
எனக் கேட்கும் தமிழன்பன் ஐயாவோ 
	"கரையிரண்டும் சொன்ன பொய்யை 
			அலைகள் கேட்டன அந்தப் 
	பொய்களையே அவைகளந்தக் கரையில் 
போட்டன!"" 
எனக் காதலுக்குப் புது விளக்கம் தருகிறார். 
	"அமிலத்தாலும், கை உழைப்பாலும் அரிக்கப்பட்டது போல, வியர்வை மற்றும் புகையால் கருப்பொலிவுற்றது போல, லில்லி மலர்கள், மற்றும் சிறுநீர் வாடையுடன் கவிதை இருக்க வேண்டுமென"" சிலியின் Pablo Nerooda விரும்பினார். அவரது கவிதைகளின் காதலரனான தமிழன்பன் அய்யா அப்படி ஒரு கவிதைகளின் தொகுப்பைத் தர முயன்றிருக்கிறார் தனது கஜல் பிறைகளில். 
	இங்கே Professor Dr. R. Chellappan அவர்கள் எழுதிய “Universal Vision and Dialogue with tradition in Tamilanban’s Poetry” அருமையான விமர்சன நூலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 
	"மரபின் அச்சிலே தான் புதுமையின் சக்கரம் சுழல்கிறது" எனும் T.S.Eliot இன் கூற்றை நினைவு கூர்வது போல - கலியன் பூங்குன்றனார், திருவள்ளுவரில் துவங்கி, பாரதியார் பாரதிதாசனில் ஆழங்கால் பட்டு, வானம்பாடி இயக்கத்தில் கிளைவிரித்து எழுந்த தமிழன்பனின் கவிதைத் தடத்தை மிகக் கூர்மையாகக் கணித்துப் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர் செல்லப்பன் அவர்கள். 
	சங்கக் கவிதையின் வேரோடு, லத்தீன் அமெரிக்கக் கவிதையின் புரட்சிக் கூறு கலந்திருக்கும் விதம், விட்மனையும், பாப்லோ நெரூடாவையும் உள்வாங்கியதொரு உலகளாவிய தன்மை, ஹைகூ, சென்ரியு, லிமரிக்குகள் என பிற நாட்டு இலக்கிய வகைமைக்குள் தன்னைச் செலுத்திப் பரீட்சித்துப் பார்த்துள்ள பாங்கு, - இப்படி தமிழன்பன் அய்யாவின் முழு பரிமாணத்தையும் வாசகனுக்கு, ஒரு விமர்சகரது தேர்ந்த நோக்கில் தருகிறார் பேராசிரியர் செல்லப்பன் அவர்கள். 
	T.S.Eliot-இன் மிக முக்கியமான கேள்வி - இந்த 21ம் நூற்றாண்டிற்கு மிக அவசியமான கேள்வி - 
	“Where is the life we have 
			lost in living?
	Where is the wisdom we 
			have lost in knowledge!
அதனை "வணக்கம் வள்ளுவா" - எனும் தமிழன்பன் அய்யாவின் புத்தகத்தை முன்வைத்து மிக ஆழமாகத் திறனாய்கிறார் - னுச. செல்லப்பன். தமிழன்பன் அய்யா எவ்வாறு திருக்குறளைச் சமகாலத்திய மறு கண்டுபிடிப்பாகக் கட்டமைக்கிறார் எனும் கட்டுரை மிக முக்கியமானது.
	Professor Chellapan finds “that Tamilanban returns to Thiruvalluvar and the sangam tradition but using a satirical mode”. Dr.Chellapan declares that – He is more like Eliot under the influence of Dante than Wordsworth under the influence of Milton as depicated by Bloom.
	கவிஞரது "கவின்குறு நூறு" எனக்கு மிகப் பிடித்த தொகுதி. அதில் ஒரு கவிதையினை அழகான ஆங்கிலத்தில் - “The crescent poems of Rabindranath Tagore come & beg the eyes of Kavin for full moons” என அழகாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது . அதன் மூலம் --- 
	எப்படி நெரூடாவும், தமிழன்பனும் தாகூரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, “A poetic comradeship with Pablo Nerooda” எனும் Chapter-இல் நயம்பட விவரிக்கிறார். 
	மண்டேலாவிற்குத் தமிழன்பன் ஐயா எழுதிய கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஷபானா ஆஸ்மி மண்டேலாவிற்குத் தந்த முத்தத்திற்கு எதிர்ப்பு வந்தபோது அதனை மறுத்து அவர் எழுதிய கவிதை அது. தமிழன்பன் அய்யா சொல்கிறார் - “This is the gift of time which itself became a mother to the black son who was behind the bars for the quarter of a century”- இதை மேற்கோள் காட்டி - he has a radical vision & revolutionary spirit என்கிறார் Dr. Chellppan.  
* * * * *
கவிதை எல்லாம் விற்றான் 
கைக்கு வந்த காணகக் கொண்டு 
தேமா புளிமா கற்றான்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *