“கரூர் பகுத்தறிவாளர் மன்றம்” சார்பில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா மற்றும் பகுத்தறிவாளர் மன்ற கூட்டம் – 13.02.2010

கரூர் நாரத கான சபாவில் "கரூர் பகுத்தறிவாளர் மன்றம்" சார்பில் நடைபெற்ற
தமிழ் புத்தாண்டு விழா மற்றும் பகுத்தறிவாளர் மன்ற 35வது ஆண்டு விழா கூட்டத்தில்
"பெரியார் வாழ்கிறார் கலைஞராக" எனும் தலைப்பில்
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

பெரியாரின் நீட்சி - முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்
மரபுகளை என்றைக்கும் உடைக்கின்ற பெரியாரின் வழிவந்த பகுத்தறிவாளர் மன்றம் இது என்பதால் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே நான் பேசத் தொடங்கிவிட்டேன். 
"பெரியார் வல்லினம். 		
அண்ணா மெல்லினம். 
கலைஞரோ, 
இறுகினால் வல்லினம், 
இளகினால் மெல்லினம், 
இரண்டுக்கும் இடையிலான இடையினம். 
ஆதலால், அவரைப் போற்ற மறக்காது தமிழினம்". 
என்னுடைய நாடி நரம்புகளிலெல்லாம் என்றைக்கும் குடிகொண்டிருக்கின்ற அந்த ஒப்பற்ற தலைவனுக்கு என்னுடைய முதல் வணக்கம். தமிழ் புத்தாண்டு விழாவையும், கரூர் பகுத்தறிவாளர் மன்றத்தின் 35வது ஆண்டு விழாவையும் கொண்டாடிக் கொண்டிருக்கிற நிகழ்ச்சிக்கு தலைமையேற்று இருக்கிற மூத்த, மரியாதைக்குரிய பரமத்தியார் அவர்களுக்கும், வரவேற்புரையாற்றிய ப.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கிற பெரியவர் KC.பழனிச்சாமி அவர்களுக்கும், எனக்கு முன்பாக நம்மிடத்திலே பகுத்தறிவின் துணையோடு, உணர்வுகளை நெருப்பாய் தட்டியெழுப்பிச் சென்ற, என்றென்றைக்கும் நேசத்திற்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், அதற்கு முன்பாக உரையாற்றிய அமைச்சர் மதிவாணன் அவர்களுக்கும் மற்றும் மேடையில் இருப்பவர்களுக்கும், நெகிழ்ச்சியுடன் என் தந்தை குறித்த உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்ற மாவட்ட பொறுப்பாளர் அவர்களுக்கும், பகுத்தறிவாள தோழர்களுக்கும், எண்ணிக்கையில் மயில்களைப்போல குறைவாக இருந்தாலும் என் முன்னால் அமர்ந்திருக்கின்ற என் இன சகோதரிகளுக்கும் வணக்கம்.
பகுத்தறிவு என்று வந்துவிட்டால் தயாரிக்கப்பட்ட உரையோடு நான் மேடையேறுவதில்லை. ஏனெனில், முன்பே தயாரிக்கப்பட்ட புருட்டஸின் பேச்சைவிட "உங்களுடைய காதுகளைக் கடனாகத் தாருங்கள்" என்று தற்செயலாகப் பேசிய ஆன்டனியின் உணர்ச்சி மிகுந்த பேச்சுதான் சிறப்பானது. அதுதான் பகுத்தறிவு மேடையிலே எடுபடும் என்றாலும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற தலைப்பு, "பெரியாராய் வாழ்கின்றார் கலைஞர்" என்பதால் சற்று தயாரித்தல் தேவையைhனதாகத்தான் இருந்தது. இன்றைய தினம், உலக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். இதே நாளில் 1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி மிக முக்கியமான நிகழ்வு ஒன்று உலக அரங்கில் நிறைவேறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனி நாடு, கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள், அரசியல் காரணங்களுக்காக இருவேறு நாடுகளாக இருக்க நிர்பந்திக்கப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு இடையே நீண்ட நெடிய சுவரொன்று உருவாக்கப்பட்டு அந்த சுவரை தாண்டிக் குதித்து உயிரிழந்தோர் ஏராளம் ஏராளம். தங்களுடைய சொந்த பந்தங்களைக் காணாமல், சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழ்ந்த இரு நாட்டு மக்களும், ஒன்றாக இணைந்து, ஒருங்கிணைந்து, ஜெர்மனியாக வாழ வேண்டும் என்பதற்காக முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்றைய தினம் 1990ம் ஆண்டில். பெர்லின் சுவர் உடைப்பதற்கான முதல் சுத்தியல் எடுக்கப்பட்ட அந்நாளின்போது, நம்முடைய தமிழ்நாட்டிலே மூடப்பழக்க வழக்கம், மடமை என்கின்ற அந்த பெரிய சுவரை தன்னுடைய தடியினாலும் தாடியினாலும் உடைத்தெரிந்த பெரியார் அவர்களுடைய பகுத்தறிவு நாளாக, அந்த நாள் இன்றைக்கு இந்த மன்றத்திலே கொண்டாடப்படுவதிலே மிகப் பெரிய மகிழ்ச்சியை உணர்கிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. ஏனென்றால், ஒரு கூட்டத்திலே தந்தை பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. ‘பெண்ணுக்கு திருமணமான பின்பும் அவள் விரும்பிய ஆணுடன் சென்று வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்களே, இன்றைய ஒரு இரவுக்கு மணியம்மையாரை என்னோடு நீங்கள் அனுப்ப முடியுமா?’ என்று. சற்றும் அசராமல் பெரியார் சொல்கின்றார், "முட்டாளே! மணியம்மையார் அவர்களிடம் சென்று கேட்க வேண்டிய கேள்வி இது" என்று. என்னைப் பொறுத்தவரை, பெண்களின் விடுதலைக்கான குரல் கொடுத்த மிகப்பெரிய பகுத்தறிவாளரான பெரியார் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், இன்றைய தினம், இந்த மேடை எனக்கு வசப்பட்டு இருக்காது. அந்த நன்றி அறிதலோடு என்னுடைய தலைப்பிற்குள் உட்செல்லலாம் என்று நினைக்கின்றேன்.
உலக வரலாற்றிலே ஒரு போராளியாக, இலக்கியவாதியாக, அரசியல்வாதியாக மட்டுமல்ல, அரசுக் கட்டிலிலேயே பொறுப்பும் வகிக்கும் ஒருவராக இருக்கின்ற வாய்ப்பு பற்றி புரட்டிப் பார்ப்பீர்களேயானால், நம்முடைய ஒரே தலைவர் கலைஞருக்கு அன்றி வேறு யாருக்கும் அப்பெருமை கிட்டியிருக்காது. அந்த வாய்ப்பினை அவர் செம்மையுறப் பயன்படுத்தினார். அவர் பயணித்த தடங்களிலெல்லாம் முன்னெடுத்துச் சென்றது தந்தை பெரியாருடைய கொள்கையையும், முற்போக்குச் சிந்தனையையும் என்பதைத்தான் இன்றைக்கு நான் உங்களுக்கு முன்பாக முன்னிருத்திப் பேச விழைகின்றேன். தலைவர் கலைஞர் அவர்கள் ஓரிடத்திலே மிக அருமையாக "மனிதனை மனிதனாக எந்த மதம் மதிக்கின்றதோ, பிறப்பிலே உயர்வு தாழ்வு காட்டாது மனிதனை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறதோ, காசு பணம் கொடுத்துத்தான் வணங்க வேண்டும் என்ற நியதி இல்லாது எந்தக் கடவுள் இருக்கின்றாரோ, அவர்களை நான் மறுக்கவில்லை என்று சொன்ன பெரியாருடைய கொள்கையிலே ஒரு பாதியை இந்த தமிழ்நாடு பின்பற்றியிருந்தால்கூட இங்கே நடைபெற்றிருக்கின்ற பித்தலாட்டங்கள் பாதியளவாவது குறைந்திருக்கும்"", என்று சொல்லி இருப்பார்.  கிணறுவெட்ட பூதம் கிளம்பும் என்கின்ற பழமொழி குறித்து நம்முடைய தலைவர் அவர்கள் பகுத்தறிவு விளக்கம் சொல்கிறார்: 
"கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பாரே, அதன் பொருள் என்னவென்று 											புரிகிறதா?. 
கிணறு வெட்ட மண் குவியும் ஒரு பூதம்! 
பூமிக்குள் அடைந்திருந்த காற்று வெளிக்கிளம்பும் மறு பூதம்!
பொங்கிவரும் புதுநீர் அடுத்த பூதம்!
பொலிவு மிகு வான் தெரியும் நீர் மீது நாலாம் பூதம்!
புவி ஆளும் ஆதவனின் தீக்கதிரால் அந்நீரும் தூய்மையாகும் ஐந்தாம் பூதம்! 
இந்த பஞ்ச பூதங்கள் வருவதைத்தான் பழையவர்கள் அழகாக சொன்னார்கள்; 
அறிவுப் பஞ்சைகளோ அலறுகின்றனர் பூதம் என்று". 
பெரியாருடைய பகுத்தறிவுப் பாசறையிலே, பேரறிஞர் அண்ணாவினுடைய போர்க்களத்திலே பட்டை தீட்டப்பட்ட நம்முடைய தலைவர், தன்னுடைய பெயருக்கு மிக அருமையானதொரு விளக்கமாக ‘உயிர்மெய்’ என்கின்ற கட்டுரையில், ஒரு சம்பவத்தைச் சுட்டிக் குறிப்பிட்டு சொல்லியிருப்பார். """"அது ஒரு அழகான மாலை நேரம், கடற்கரையிலே நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு இருக்கையிலே, ஒரு நண்பர் மிகுந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியோடு சொன்னார், இந்த தமிழுக்குத்தான் எத்தனை பெரிய அருங்கொடை. முதலில் ‘அ’ என்கிற எழுத்திலே ஆரம்பித்த அண்ணாவை நமக்குத் தலைவராகக் கொடுத்திருக்கிறது. அதற்கு பின்பாக ‘க’ என்ற எழுத்திலே ஆரம்பித்த கலைஞரை தந்திருக்கிறது’ என்று. ‘மன்னியுங்கள்’ என்று குறுக்கிட்டு நம்முடைய தலைவர் சொல்லுவார், "என்னுடைய எழுத்துக்கு முன்பாக ‘க்’ என்ற மெய்யெழுத்தோடு ‘அ’ என்ற உயிரெழுத்து சேரும்போதுதான் ‘க’ என்கின்ற கருணாநிதியின் முதல் எழுத்தாக ஆகிறது. மெய்யோடு உயிர் சேர்வதுபோல ‘க்’ கோடு ‘அ’ சேர்ந்ததால்தான் இன்றுவரை கருணாநிதியாக இயங்கிக்கொண்டிருக்கிறேன்" என்று எழுதுகிறார். பெரியாரைத் தன்னுடைய உயிர் மூச்சாகவும், பேரறிஞரைத் தன்னுடைய இதயத்திலும்  வைத்திருக்கின்ற அவர், இரண்டு விதங்களிலே - அரசியலையும், இலக்கியத்தையும் இரண்டு கண்களாகவும், தேரின் இரு சக்கரங்களாகவும் பாவித்து வந்திருக்கின்ற அவர், அரசியல் ரீதியாக தனக்கு அரசு பொறுப்பிலே ஒரு ஆட்சி அதிகாரம் அமைக்கக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் பெரியாருடைய திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமே முன்னெடுத்தார். 
ஒரு படைப்பிலக்கியவாதியாக அவர் எப்படி தன்னுடைய அனைத்து படைப்புகளிலும் சுயமரியாதை கொள்கையையும், சமூக சீர்திருத்த கருத்துக்களையும் முன்வைத்து இயங்கினார் என்பதையும் நான் உங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முற்போக்கு கருத்து குறித்து அவர் எழுதுகிறார், 
"ஏட்டிலே எழுத்தில் இருக்கும் சொர்க்கம்! 
ஆனால் ஏழைக்கு உதவுவது மட்டுமே இங்கே சொர்க்கம்!"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
இதை ஒப்புவதே உண்மை ஆத்திகமாம். ஒருவனையொருவன் ஏமாற்றாமல் இருப்பதே நாத்திகமாம்!" 
படைப்பிலக்கிய வாதியாக பல்வேறு தளங்களில் பெருமையுடன் அறியப்பட்டிருக்கின்ற ஒரு பெருந்தகையாளர் தலைவர் என நாம் அனைவரும் அறிவோம். தொல்காப்பிய ஆற்றுப்படை நல்கிய தகைஞர் அவர். சங்கத் தமிழ் தந்த சான்றோர் அவர். சிலப்பதிகாரம் என்ற நாடகத்தைத் தந்த நாடக ஆசிரியர். திருக்குறளுக்கு மிக அருமையானதொரு உரையை தந்த ‘சொல்லேர் உழவர்’. கவி வசனம் தந்த கவிஞர். சின்ன சின்ன மலர்களைப் போன்ற சிந்தனைகளைத் தந்த சிந்தனையாளர். இவை மட்டுமல்ல அவருடைய ஆளுமை என்பது. இன்னும், இதைத் தாண்டிய பல்வேறு விதமான பரிமாணங்கள் அவருக்கு உள்ளன. தன் வரலாற்று நூல் என்று நாம் இன்று பெருமையோடு பொக்கிஷமாக பாதுகாத்துப் படிக்கின்றோமே, அந்த ‘நெஞ்சுக்கு நீதி’ என்கின்ற நூலை எழுதிய பெருமைமிகு எழுத்தாளர். அதோடு மட்டுமல்ல, பாடல்களாலும், வசனங்களாலும் மிகப்பெரிய சமூக மாற்றத்தையும், புரட்சியையும் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் கொண்டு வந்தவர் கலைஞர். இப்படி அத்தனை பரிமாணங்களிலும் அவர் முன்வைப்பது, வலியுறுத்துவது எதனை தெரியுமா?. தந்தை பெரியாருடைய கொள்கைகளையும், சீர்திருத்த கருத்துக்களையும்தான். அதற்கு முன்பாக, அரசுக் கட்டிலில் அவர் அமர்ந்திருக்கும் போதெல்லாம் தந்தை பெரியாருடைய கனவை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதைப் பார்க்கலாம். 
நமக்கு அனைவருக்கும் தெரியும், மிகக் குறிப்பாக, இந்த அரங்கிலே அமர்ந்திருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் தெரியும், நாம் என்றென்றைக்கும் நினைத்து மகிழ வேண்டிய, படிக்க வேண்டிய ‘Magnacarta’ என்பது 1929லே செங்கல்பட்டிலே பிப்ரவரி 17, 18 நாட்களிலே நடைபெற்ற முதல் சுயமரியாதை இயக்க மாநாடுதான். அது பெண்களுக்காக நடந்த ஒன்று என்பதையும் அறிவோம். அந்த மாநாட்டில்தான், தந்தை பெரியார் தமிழக மக்களுக்காக, மிகக் குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிக அளவிலே நிறைய தீர்மானங்களைக் கொண்டுவந்தார். 1929லே நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்கள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு காலகட்டத்திலே இன்றைக்கு நிறைவேற்றியிருப்பவர் நம்முடைய தலைவர் கலைஞர் மட்டுமே. ஆரம்பக் கல்வி இலாக்காவிலிருந்து, பெண்கள் மட்டுமே அதிக அளவில் ஆசிரியைகளாக நியமிக்கப்பட வேண்டும் என்கின்ற அந்த செங்கல்பட்டு தீர்மானத்தைத்தான் இன்றைக்கு ஆட்சியிலே இருக்கின்ற திமுக அரசு, முதலமைச்சராக இருக்கிற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் அதிக அளவில் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டுமென நிறைவேற்றி உள்ளார். அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட, ‘விதவைகளுக்கு மறுமணம் புரிந்துகொள்ளுவதற்கு தடையேதும் இருக்கக்கூடாது’ என்கின்ற அந்த தீர்மானத்திற்காகத்தான் இன்றைக்கு பெண்கள் தங்களுடைய விருப்பப்படி, சுய தேர்வுப்படி, திருமணம் செய்துகொள்வதற்கு டாக்டர்.தர்மாம்பாள் அவர்களுடைய திருமண நிதி உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டு ரூ.20,000/- அவர்களுக்கு கொடுப்பதற்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சாதனைக்கும் சொந்தக்காரர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். சிறுவர், சிறுமியர்களுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயமாக ஆக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களிலே மேல் குடியினருக்கு இணையாக புத்தகங்கள், உணவு, உடை முதலியன இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட மாநாட்டு தீர்மானத்தில் மிக முக்கியமான ஒன்று. அதை நிறைவேற்றியது மட்டுமல்ல, பெண்களுக்கு கல்லூரி வரை இலவசமாக பட்டப்படிப்பு, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்கு இலவச சைக்கிள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இலவச பேருந்து பயணம், குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கின்ற இளைஞனுக்கு தொழில் கல்வி கற்பதற்கு நிதியுதவி, சத்துணவோடு மூன்று முட்டைகள் - இப்படி ஏகப்பட்ட திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் நிறைவேற்றித் தந்திருப்பவர் நம்முடைய தலைவர் கலைஞர் மட்டுமே.  சொத்திலே பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதை அந்த மாநாடு மிக முக்கியமான தீர்மானமாக முன்மொழிந்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின்பு, 1989ம் ஆண்டு அதனை ஒரு தீர்மானமாக சட்டமன்றத்திலே நிறைவேற்றி சட்டமாகக் கொண்டு வந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.  ஆணுக்கு சரிசமமாக எல்லா தொழில்களையும் பெண்கள் செய்கின்ற அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அந்த மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மாதிரியாக வைத்துத்தான் இன்றைக்கு தமிழகத்தில் சுய உதவிக் குழுக்கள் மகளிருக்காக ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு வங்கிகளே தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறையிலே 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு வெண்மைப் புரட்சிக்கு நிகராக ‘ஒரு பெண்மைப் புரட்சி’யை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். மேலும், தமிழ்நாடு தான், நமது தலைவரது ஆட்சியிலே, வங்கிக் கடனைப் பெண்கள் திருப்பிச் செலுத்திய முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த சாதனைக்கும் சொந்தக்காரர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். 
1917ம் ஆண்டு, ஈரோடு நகராட்சித் தலைவராக தந்தை பெரியார் பொறுப்பேற்றிருந்தபோது நகராட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை தன்னுடைய கைப்பட எழுதி கையொப்பமிட்டு நிறைவேற்றுகிறார். அன்று அவரால் நிறைவேற்றப்பட்ட அந்தக் கனவுதான் பிற்காலத்தில், 2008ல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதை நம் கழக ஆட்சியின் சரித்திரத்தின் பக்கத்தில் கண்டோம். அதுமட்டுமல்ல, அவர் கண்ட அத்தனை கனவுகளையும் நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். மிகக்குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், தந்தை பெரியாருடைய கடைசி போராட்டமாக அமைந்தது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்பதற்கான போராட்டம்தான். 1973ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பிட்டி தியாகராயர் கூட்டத்திலே, இதையே பெரியார் பெரிதும் வலியுறுத்திச் சொன்னார். அவர் நெஞ்சிலே முள்ளாக இருந்த அதனை நீக்கி, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என சட்டபூர்வமாக நமக்கு நிறைவேற்றித் தந்தார். அந்த முள்ளை எடுத்த பெருமையோடு மட்டுமல்ல, சமத்துவம் என்ற ஒன்றை இன்றளவும் எல்லாத் திட்டங்களிலும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். 
1996ம் ஆண்டில், நான்காவது முறையாக நம்முடைய தலைவர் ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ திட்டங்களைத் தீட்டினார், சட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் தீட்டியதுதான், ‘தந்தை பெரியார் சமத்துவபுரத் திட்டம்’. "மத வேறுபாடு, வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒருமித்த உள்ளத்தோடும், ஒற்றுமை கருத்தோடும் ஓரிடத்தில் வசிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் சமத்துவபுரங்களை உருவாக்குகின்றேன், இவைகளை நான் கோயில்களுக்குச் சமானம் என்பேன்"" என்கிறார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஒரு சமத்துவபுரத்தைத் திறந்து வைக்கும்போது, "நான் இதுவரை 26 கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். இது 27வது கோயில். ஏனென்றால், சமத்துவபுரங்களை நான் கோயில்களாகவே கருதுகின்றேன்", என்று சொல்கின்றார். "தொழுநோய் மறுவாழ்வு இல்லங்களை நான் கோயில் என்றேன் முன்பு. இப்பொழுது சமத்துவபுரங்களைச் சொல்கின்றேன். மனிதர்களுள் ஏற்றத்தாழ்வு, பேதங்கள் பார்க்காத மனிதர்கள், இங்கு மனித தெய்வங்களாக வசிக்கின்ற காரணத்தினால்"" என்று சமத்துவத்தைத் தன் தமனியின் குருதியாய்க் கண்டவர் அவர். இன்றைய தேவைக்குரிய அந்த ஒரு கருத்தாக்கத்திற்காக அந்த சொற்றொடரை அவர் பயன்படுத்தினார் என்றே நான் கருதுகின்றேன். 
அது மட்டுமல்ல, தந்தை பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தலைவர் விரும்புகின்றார். அன்றைக்கு அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள், அய்யா அவர்கள் அரசு பொறுப்பிலே இல்லையே, அவர் ஒரு சமுதாய தலைவராக மட்டுமே இருந்தார் என்பதை சுட்டிக்காட்டி, இது குறித்து சற்று தயக்கம் காட்டுகிறார்கள். ‘தந்தை பெரியாருக்கு நான் அரசு மரியாதை செலுத்தினேன் என்பதற்காக இந்த அரசு போனாலும் எனக்கு அது பற்றி கவலை கிடையாது. ஏனென்றால் இது அவரால் உருவான அரசு, அவருக்காக உருவாக்கப்பட்ட அரசு’ என்று சொல்லிய தலைவர் அவர்களைவிட, தந்தை பெரியாருடைய கொள்கைகளை தன்னுடைய உயிர் மூச்சாக, தன்னுடைய ஜீவனாக நாடி நரம்புகளில் ஏற்றுக்கொண்டிருக்கிற தலைவராக வேறு யாரை நாம் சுட்டிக்காட்ட முடியும்?. கொள்கை அளவிலே இத்தனை திட்டங்களை சட்டபூர்வமாக அவர் நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்றால் ஒரு படைப்பாளியாக, இலக்கியவாதியாக அவர் எப்படி பகுத்தறிவுக் கருத்துக்களை முன்னெடுக்கிறார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குறளுக்கு எழுதிய அற்புதமான உரையை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்தில் 55வது குறள் - 
‘தெய்வம் தொழாள் தொழுநள் தொழுதெழுவாள் 
 	பெய்யெனப் பெய்யும் மழை’. 
இந்த குறளுக்கு எல்லா உரையாசிரியர்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியே விளக்கம் எழுதினர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மட்டுமே அறிவுபூர்வமாக இதற்கு ஒரு உரையைத் தந்தவர். அவருக்கு நிகராக, தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவான ஒரு விளக்கம் தந்திருக்கிறார். மற்ற அனைவரும் இந்த குறளுக்கு கணவனை தெய்வமாகத் தொழுபவள் ‘பெய்’ என்று சொன்னால் பெய்துவிடும் மழை என்று ஒரு பிற்போக்கான கருத்தாக்கத்தை உருவாக்கி முன்வைத்தார்கள். கலைஞர் அவர்கள் மட்டும் எழுதுகின்றார், "பெய்யெனப் பெய்யும் மழை என்றால், பெய் என்று சொன்னவுடன் பெய்து விடுகின்ற மழையைப் போன்றவள், தன்னுடைய கணவன் மீது அன்பும் ஆசையும் வைத்திருப்பவள். யாருக்கு மழையைப் போன்றவள்? தன்னுடைய கணவனுக்கு மழையைப் போன்றவள். எப்படிப்பட்ட மழையைப் போன்றவள்? பெய்யென்று ஒரு உழவன் சொன்னவுடன் கழநியில் பெய்து உழவரை மகிழ்விக்கும் மழை போன்றவள். அம்மழை பெய்தால், அந்த குடும்பங்கள் எல்லாம் எப்படி மகிழுமோ, அப்படிப்பட்ட மகிழ்ச்சியை உருவாக்குகிற பெண்ணாக இருப்பவள். அந்த மழையை எப்படியெல்லாம் போற்றுவார்களோ அத்தனை போற்றுதலுக்கும் உரியவளாக இருப்பவள், தன்னுடைய கணவனை தெய்வமாகப் போற்றுகின்றவள்" என்று எழுதுகிறார். அது மட்டுமல்ல, கல்வி அதிகாரத்தில் ஒரு குறள் - 
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமைக்கும் ஏமாப் புடைத்து.
தலைவர் உரை உன்ன தெரியுமா? "ஒரு பிறவியிலே பெற்ற கல்வியானது ஏழு பிறவிக்கும் பயனுடையது என்று சொல்லும்பொழுது, கல்வியினுடைய முக்கியத்துவத்தையும், இன்றியமையாத தன்மையையும் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டியதன் காரணமாகவே, ஏழு பிறவிகளும் இங்கே சொல்லப்படுகிறதேயொழிய, ஏழு பிறவிகளிலும் நமக்கு நம்பிக்கையுண்டு, ஒத்துப்போகிறோம், என்ற கருத்து கிடையாது.  கல்வியறிவு முக்கியம் என்பதை அழுத்திச் சொல்வதற்காகவே, ஏழு பிறவியிலும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது" என்று சொல்கின்றார். 
காமத்துப் பாலிலும் அவர் தன்னுடைய பகுத்தறிவுச் சிந்தனையை விட்டுவிடவில்லை. தலைவி, கணவனுக்கு பதார்த்தங்கள் செய்து பறிமாறுகிறாள். அனைத்து காய்கறிகளுடன் பாகற்காயையும் சேர்த்து வைக்கிறாள். தலைவி சொல்வதாக தலைவர் சொல்கிறார் - "பாகற்காய் போல் கசப்பது என்றாலும், என்றென்றும் பகுத்தறிவு நல் பயனை தரும் என்று சொல்வீர்களே அத்தான், அதனால்தான் மற்ற காய்கறிகளோடு சேர்த்து இன்றைக்கு பாகற்காயையும் நான் சமைத்தேன்" என்பாளாம். இது குறித்து அறிஞர் வா. சுப. மாணிக்கனார், "பிற்காலத்தில் குறளோவியத்தில் எத்தனை பக்கங்கள் தொலைந்து போனாலும் கவலையில்லை, இந்த ஒரு பக்கம் கிடைத்தால் போதும், தலைவர் கலைஞர் அவர்களை முழுமையாக உணர்ந்து புரிந்துகொள்வதற்கு அந்த ஒரு பக்கமே சான்று" என்று பெருமையுடன் குறிப்பிடுகின்றார். 
நாம் அனைவரும் அறிவோம், சிலப்பதிகாரத்திலே, பகுத்தறிவுக் கருத்துக்கு ஒவ்வாத எந்த கருத்தையும் முன்வைக்காமல் முற்றிலும் முற்போக்குக் கருத்துக்களை, அடிப்படை மாற்றங்களைக்கூட பகுத்தறிவுக் கண் கொண்டு, மிக தைரியமாக செய்திருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்க்கலாம்: 
கண்ணகி - கோவலன் திருமண வாழ்த்துப்பாடலோடு சிலப்பதிகாரம் தொடங்கி, இளங்கோவடிகளுடைய துறவிலே முடியும். ஆனால் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலப்பதிகார நாடகம், இளங்கோவடிகளுடைய துறவிலே தொடங்கி கண்ணகியினுடைய மங்கல வாழ்த்துப் பாடலோடு முடியும். இளங்கோவடிகளை ஒரு காப்பிய நாயகனாக உயர்த்திய பெருமை நம்முடைய தலைவர் கலைஞருக்குத்தான் சாரும். இளங்கோதான் அரசாள வேண்டும், மூத்தவனுக்கு அரசாளுகின்ற பாக்கியம் கிடையாது என்று நிமித்தகன் சொல்வானாம். மூலமான சிலம்பதிகாரத்தில் அந்த நிமித்தகன் சொல்வதுபோல் கலைஞரின் நாடகத்தில் ஒரு வசனம் வரும், இளங்கோவும் அந்த நிமித்தகனும் உரையாடும்போது நிமித்தகன் சொல்வான், ‘ராமர் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லவேண்டும், பரதன் நாடாள வேண்டும் என்ற விதியை யாராவது மாற்ற முடிந்ததா?’ என்று. கலைஞர் அவர்கள் இளங்கோ சொல்வதாக பதில் எழுதினார், "ராமனா நாடாண்டான்? பரதனா நாடாண்டான்? 14 வருடங்கள் பாதரட்சை அல்லவா நாடாண்டது. ஆகையினால், விதியிலே எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று. அந்த பகுத்தறிவு கருத்தோடுதான் நாடகத்தைத் துவக்குவார். மாதவியைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு கிரேக்க நாட்டு வயோதிகனை அங்கு கொண்டு வந்து, அந்த வயோதிகன் மாதவியின் ஆடலிலே அவர் மனத்தை பறிகொடுத்தார். அவளுக்கு அரசனிடமிருந்து வழங்கப்பட்ட ஆரத்தை ஆயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் கொடுத்துத் தான் வாங்கி அவளை அடிமைப்படுத்த முனைந்தார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவளை காப்பாற்றுவதற்காகவே கோவலன் அவளிடம் சென்றான், அதுவும் கண்ணகியின் வேண்டுகோளுக்கிணங்க, என்று சொல்வார். மேலும், ஒரு முக்கியமான மாற்றத்தையும் செய்திருப்பார். இளங்கோவடிகளுடைய காப்பியத்தில் அரண்மனை பொற்கொல்லர்தான் பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடியதாகச் சொல்லப்பட்டிருக்கும். பொற்கொல்லர் சமுதாயத்திற்கே தீராத பழியை இது உருவாக்கிவிட்டது என்பதால், சமூக நீதிக்காகப் போராடுகின்ற நாம் அவர்களிடையே ஒற்றுமைக்காகவே, அவர்களது தீராத வடுவினை போக்கும் விதமாகவே இதனை மாற்றியமைத்தல் வேண்டும் என்ற கருத்தை தலைவர் முன்வைப்பார். அந்த தலைமை பொற்கொல்லர், இன்னொரு பொற்கொல்லருடைய வேலையை திருத்துவதற்காக சென்றிருந்தபோது, அரண்மனை அதிகாரி ஒருவன் அந்தச் சிலம்பை களவு எடுத்துவிட்டான் என்று மாற்றம் செய்திருப்பார். இந்த மாற்றம் குறித்து பேரறிஞர் அண்ணா அந்த நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில், "சமூக நீதிக்காக நடந்த மாற்றம் இது. இத்தகைய மாற்றங்கள் பண்டைய, பழைய இலக்கியங்களில் செய்யப்படுவது என்பது மிகமிக தேவையானது, அத்தியாவசியமானது" என்று புகழ்ந்திருப்பார். ஆழங்காற்பட்ட பகுத்தறிவு என்ற ஒன்றையே தன்னுடைய மனதிலே பரவி உரையோடியிருக்கின்ற உணர்வாகக் கொண்ட அவர், மதுரை எரிந்த சம்பவத்திலும் மாற்றம் தருகின்றார். மதுரை எரிந்ததைச் சொல்லும்பொழுது இளங்கோவடிகள், ‘நெருப்புக் கடவுள் எழுந்து மதுரையை எரித்தார்’ என்று சொல்வார். தலைவர் கலைஞர் அவர்களோ அது குறித்து சொல்லும்போது, "கோவலன் கொலைப்பழி ஏற்று கொலையுண்டான் என்று கேட்டவுடன் கண்ணகி அலறி ஓடுகிறாள். அப்படி ஓடும்பொழுது ஒரு குத்துவிளக்கு தரையில் பட்டு அந்த நெருப்பு குடிசையில் பற்றுகிறது. குடிசையில் பற்றுகின்ற தீ நகரெங்கும் பரவுகிறது. அந்த நேரத்தில் அதைக் கவனிக்க யாருக்கு நேரமிருக்கிறது? அனைவரும், "கண்ணகி" என்றலறி அவள்பின் ஓடுகின்றனர். அந்தத் தீ பரவிட, கண்ணகி ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருக்கிறாள்" என்று சொல்வார். அங்கேயும் அவர் தன்னுடைய பகுத்தறிவுக் கருத்துகளை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியிலே இளங்கோவடிகள் சொல்வார், ஒரு புஷ்பக விமானம் வந்து கோவலனோடு கண்ணகியை மேல் உலகத்துக்கு அழைத்துச் சென்றது என்று. தந்தை பெரியார் வழி வந்த தலைவர் கலைஞர் அவர்களோ அதனை மாற்றி, மலைவாழ் மக்கள் சொல்வதாக அந்த நிகழ்ச்சியை சொல்லியிருப்பார். "இதோ இந்த வேங்கை மரத்தின் அடியில்தான், கண்ணகி என்று சொல்லப்படுகின்ற அந்தப் பெண், தன் கணவன் குறித்து புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தாள். கடைசியில் அவள் எங்கே போனாள் என்று தெரியாது. இறந்தவன் வந்து அவனுடன் சென்றாளோ, அல்லது இவளே அந்த இடத்திற்குச் சென்றாளோ நாம் அறியமாட்டோம், ஆனால் அவளைப் போல ஒரு பெண்ணை நாங்கள் இன்றுவரை கண்டதில்லை" என்று சொல்வதாக எழுதுவார். கண்ணகிக்குக் கோவில் கட்டி, அவளை உயர்ந்த தெய்வ ஸ்தானத்திற்கு இளங்கோவடிகள் உயர்த்திய அளவிற்கு செய்த காரித்தையும் கலைஞர் அவர்கள் செய்யவில்லை. அவளை ஒரு தெய்வமாக இருத்தவில்லை. மதுராபதித் தெய்வத்தையோ, மணிமேகலைத் தெய்வத்தையோ, கண்ணகியை பூஜித்த தேவந்தியையோ இளங்கோவடிகள் சுட்டியதுபோல் காட்சிப்படுத்தவில்லை. அவர் அந்த காப்பியத்தை முடிக்கும்போது, கண்ணகிக்கு சிலையெடுக்க "கனகவிசயரின் தோள்மீது கல்லை சுமந்து வரச்செய்த செங்குட்டுவனை வீரர்கள் மங்கலம் பாடி வாழ்த்துவதோடு அந்த காவியம் முடிவடைகிறது" என்பார். இப்படி அனைத்துத் தளங்களிலும் - தன்னுடைய கனவுக் கொள்கைகளை சட்டபூர்வமாக ஆக்குகிற தளமாகட்டும், அல்லது படைப்பிலக்கிய தளமாகட்டும் பகுத்தறிவு என்ற ஒன்றை, அதிலும் மிகக் குறிப்பாக, தந்தை பெரியாருடைய கொள்கைகளை அன்று முதல் நிறைவேற்ற முயற்சித்து வெற்றி கண்டவர்; இன்றைக்கும் முயற்சிப்பவர்; என்றென்றும் முயற்சி செய்துகொண்டிருப்பவர் என்று பார்க்கும்பொழுது, ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அவர் சொல்வார், 
"தந்தை பெரியாரின் தட்பவெப்பம் புரிந்தவர் கலைஞர்.
அண்ணாவின் ஈரப்பதத்தில் வளர்ந்தவர் அவர்!
அதனால்,
கலைஞர் வாழுமிடமே தமிழர்க்கு
வானிலை அறிக்கை வருகின்ற இடம்"".
என்று IIT என்று சொல்லப்படுகின்ற அங்கே, நமக்கான இடஒதுக்கீட்டைப் பெறுகின்றோமோ, அன்றைக்குத்தான் ஒரு முழுமையான வெற்றி கிட்டும் என்பதை கருத்தில்கொண்டு, என்றென்றைக்கும் ஒரு போர்முனையை தன்னுடைய பகுத்தறிவுச் சிந்தனையாலே, தொய்வடையாத பேனாவினாலே அதற்கான கோப்புகளில் கையெழுத்து போடுகின்றவராக, உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவரக வாழ்கின்றவர் கலைஞர் மட்டுமே. 
தமிழைப்பற்றி சொல்லும்போது அவர், "தமிழே உன்னை ஒரு ஒப்பிட முடியாத ஓவியம் என்பதா அல்லது உணர்வு ததும்பும் காவியம் என்பதா, நீ நறுமண மலரா? அல்லது ஒளிர்விடும் குளிர் நிலவா, அமுதே, அன்பே, ஆரமுதே, அழகே, இப்படி எத்தனையோ சொல்லி உன்னை அழைத்தாலும், தமிழே, உன்னை ‘தமிழே’ என்று சொல்வதிலே கிடைக்கின்ற இன்பம் எனக்கு வேறெதிலும் கிடைக்கவில்லை"" என்பார். எங்களுடைய இந்த ஒப்பற்ற தலைவன் குறித்து எத்தனையோ அடைமொழிகள், நூற்றுக்கணக்கான சிறப்புப் பெயர்கள், பட்டங்கள் அனைத்தையும் கொண்டு நான் அழைத்தாலும், "தலைவா" என்று அழைக்கின்ற போது இருக்கின்ற உணர்வு, நெருக்கம், வேறு எந்த சொல்லிலும் எனக்குக் கிடைப்பதில்லை. ஆகவே, என் உயிரினும் மேலான ஒப்பற்ற ஒரே தலைவா! இந்த உலகம் நீங்கள் உயர்த்திக் கட்டிய முண்டாசு, உங்களுடைய ஒரு சின்னக் காலடி எழுமானால் இமயமே உங்களுக்கு கால் தூசு"" என்று சொல்லி, இந்த அருமையான நிகழ்ச்சியின் வாயிலாக என்னுடைய சக தோழர்களான பகுத்தறிவாளர்களையும், மேடையில் அமர்ந்திருக்கின்ற கழக முன்னோடிகளையும் சந்திக்கின்ற வாய்ப்புக்கும், கரூர் மாநகரத்துக்கும் நன்றி சொல்லி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *