களவு காமம் காதல் – சாம் நாதனின் புத்தகத்திற்கு எழுதிய மதிப்புரை

இலக்கியம் மில்ட்டனின் 'இழந்த வானக'த்தில் (Paradaise Lost) நிகழும் கடவுளுக்கு எதிரான சாத்தானின் கலகத்திலிருந்து, தாஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்பதன் பிரதான பாத்திரமான ராஸ்கல்நிகோவ் செய்யும் ஒரு கிழவியின் கொலை வரையிலான எல்லா வகைப்பட்ட குற்றங்களையும் கவர்ச்சிகரமாக ஆக்குகிறது. அது முதலாளித்துவ மதிப்பீடுகளையும், சம்பாதிப்பதும் செலவு செய்வதுமான நடைமுறை விஷயங்களையும் எதிர்க்க ஊக்குவிக்கிறது. இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும்கூட இருக்கிறது. அது கலாச்சாரத் தலைநகரமாகவும் அதேசமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும்கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்சினைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்து முறையாகவே உள்ளது. 
-	ஜானதன் கல்லர் 
	அன்புள்ள சாம் நாதன், களவு காமம் காதல் குறுநாவல் (Novella) வாசித்தேன். தமிழில் சொல்லத் தயங்குகின்ற ஒரு களத்தை மையமாகக்கொண்டு, உரையாடலைக் கதையாடலாக மாற்றுகின்ற சொற்களால், நேர்த்தியான ஒரு நாவலைப் படைத்தமைக்குப் பாராட்டுக்கள். இலக்கியத் தரமான நாவல்கள் எனக் கருதப்படுபவற்றை மட்டுமே அதிகம் பிரசுரிக்கும் தமிழ்ச் சூழலில், ஒரு சமகாலப் பதிவு இவ்வளவு தைரியமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 
	உங்களது இந்த நாவலைப் படித்து முடித்தபின்பு ஸேட்டின் நாவல்களை நினைத்துப் பார்ப்பது தவிர்க்கவியலாத ஒன்று. "கட்டுப்பாடற்ற வேட்கை எனக் கருதப்பட்ட ஒரு இயல்பைப் பின்பற்றிப் போகும் செயல் நிகழும் ஒரு உலகில் என்ன நடக்கலாம் என்பதற்கு மார்க்கீ த ஸேட்டின் (Marquis de Sade) நாவல்கள் விடைகாண முயன்றன" எனக் குறிப்பிடுகின்ற ஜானதன் கல்லர், "எந்த ஆசார மரபு, எந்த நம்பிக்கை, எந்த மதிப்பீடு, என எதுவாக இருந்தாலும் இலக்கியம் அதை நையாண்டி செய்யும், நையாண்டிப் போலி (Parody) செய்து ஏளனம் செய்யும்" (ஜானதன் கல்லர் - இலக்கியக் கோட்பாடு, 63) எனவும் சுட்டுகிறார். 
	அவ்வகையில் உங்களின் இந்தக் குறுநாவல் (Novella) ஏற்கனவே பொதுப்புத்தியில் பால் வேட்கை சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றவற்றைக், (குறிப்பாகப், பெண்களது பாலியல் தேவை, விருப்பம், தெரிவு) தகர்க்கின்றது. மிக நுட்பமான இசைவோடும், சரியான புரிதலோடும் ஒரு ஆண், சக உயிரியான ஒரு பெண்ணின் உடலியற் கூறுகள், அவளது தேவைகளைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டு, நிபந்தனைகளற்ற பயணம் ஒன்றை மேற்கொள்வது என்பது தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிய களம். நீங்கள் உங்களது குறுநாவலில் அதனைச் சாதித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சாம் நாதன். 
	"இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம்" என்பதை அறிவோம். இலக்கியம் என்றால் இவைதான் என ஏற்கனவே இருக்கின்ற வரைமுறை, சூத்திரங்களை அடியொற்றிப், (அதாவது, நாவல், சிறுகதை, பெருங்கதையாடல் - போன்றவற்றை அவற்றிற்குரிய மரபுகளைப் பின்பற்றிப்) படைப்பது மட்டுமல்ல, அந்த மரபுகளைக் கொட்டிக் கவிழ்ப்பதும் இலக்கிய செல்பாடுதான். முழுக்க மரபு ¡£தியான, "தீரமிக்க வீரத்திருமகன்களையும்" "கற்புடை கன்னிப் பெண்களையும்" பற்றி மட்டுமே மையமாகக் கொண்டு நாவல்கள் இயங்க வேண்டியதில்லை. அது வாழ்வின் ஒரு அங்கமான எவ்வகை மாந்தர்களைப் பற்றியும் பொருட்படுத்திப் புனையப்படலாம் என்கிற தெளிவிற்கு வந்திருக்கின்ற இப் பின்நவீனத்துவக் கட்டத்தில், வாசகனது பங்கேற்பைப், புரிதலைக் கோருகின்ற இரத்தமும், சதையுமான சாதாரண இரு மனிதர்கள் குறித்து உங்கள் குறுநாவல் பேசுவது கவனிக்கப்பட வேண்டியது.
	"சிலகாலத்திற்குமுன், கடவுளைப் போலவே நாவல் வடிவம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை", நினைவு கூறும் கூகி வா தியாங்கோ ஆப்பிரிக்க நாவல் குறித்துப் "பொருள் பொதிந்த விவாதத்திற்கு" வழி வகுத்தவர். ஐரோப்பிய நாவல் மரபுகளிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாவல் வடிவம் (உருவம், உள்ளடக்கம்) ஒன்றை அவர் முன்னிறுத்தியது என்போன்ற பின்காலனிய பிரஜைகளுக்கு, வாசகர்களுக்கு மிகப் பெரிய கதவொன்றைத் திறந்தது. ஒரு ஆங்கில இலக்கிய மாணவியாக பதினேழு வயது துவங்கி ஐரோப்பிய, ஆங்கிலேய புனைகதைகளின் பிடியில் மயங்கிக் கிடந்த எனக்கு, Banyan, James Joyce, Joseph Conrad, Joyce Carry, Allen Paten படைப்புகள் பரந்த புனைகதை உலகத்தைக் காட்டியது. Charles Dickens, Daniel Defoe, George, Eliot, D.H. Lawrence, Faulkner இவர்களுடன் Balzac, Emily Zola, Tolstoy, Dostoevsky ஆகியோர் ஆக்கிரமித்த எனது இருபதுகள் வரை, புனைகதை என்றாலே அவை (Classics) செவ்வியல் தன்மை கொண்ட, அதி அற்புதமான genre என்று மட்டுமே நினைத்திருந்தேன். The Empire Writes Back என்று காலனிய ஆதிக்கத்தை, அதன் Canon Literature இன் மையத்தைத் (ஆங்கில இலக்கியத்தை) தகர்க்கின்ற குரல்கள் பின்காலனிய இலக்கியமாக முகிழ்க்கத் தொடங்கியபோது, Common Wealth Literature என்றழைக்கப்பட்டது Post-Colonial Studies என உருமாற்றம் அடைந்தபோது, சினுவா அச்சிபி, வோலோ சோயிங்கா, கூகி வா தியாங்கோ முதலியோர் எனக்கு மிக நெருக்கமானார்கள். ஒரு மரபார்ந்த நாவல் வாசிப்பு மரபினைக் கொண்டிருந்த, நவீன ஐரோப்பிய மொழி நாவல் மரபுப் பரிச்சயத்தை மட்டுமே அறிந்திருந்த எனக்கு, கூகியின் "கிப்ளிங்கின் 'if' கவிதையில் வரும் கனவானுக்கு ஆப்பரிக்க உடை வழங்கப்பட்டது" எனும் வாசகம் நெத்தியடியாக அமைந்தது. "காலனியம் மிகச் சரியானது என நம்பும் கனவான்", காலனிய காலத்தில் உருவான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற மையவாத இலக்கியம், அதன் கல்வி அமைப்புக்கள் பற்றிய பிம்பங்கள் உடைந்தன. 
	உலக இலக்கியத்தின் மதிப்பைப் புரிந்து கொள்கிற பக்குவத்தோடு, பிரிட்டிஷ் காலனிய குறுகிய மனநிலைக்கு மாற்றாக, ஆப்பரிக்கத் தேசீயத்தைக் குறுகிய நோக்கோடு முன்வைக்காத கூகி வா தியாங்கோவின் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியம் - புனைகதை வாசிப்புகளில் குறிப்பாக புதினம் எனப்படுகின்ற நாவல் வடிவத்தில் எனக்குப் புதியதொரு தெளிவையும், கண்ணோட்டத்தையும் தந்தது. பின் நவீனத்துவத்தின் மீதான ஆர்வமும், ஈடுபாடும் மேலும் பல கட்டுடைத்தல்களையும் புகுத்த, இலக்கிய வகைமைகளில் பா£ட்ச்சார்த்த முயற்சிகளுக்கான தேவை, (குறிப்பாக புதினங்களில்) அவை, அவற்றளவில் எத்தனை கோணல்களுடன் இருந்தாலும், ஒரு புதிய முயற்சியாக வரவேற்கப்பட வேண்டுமென்கிற தெளிவு பிறந்தது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வடிவங்களிலிருந்தும், தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கின்ற புதிய புதின முயற்சிகளுக்கும், வெளிப்பாடுகளுக்கும் முன்முடிவுகளற்ற திறந்த வாசிப்பு மனதுடன் நான் காத்திருக்கத் துவங்கியதும் அப்போதிருந்துதான். அவ்வகையில் சமீபத்தில் என் கவனம் கோருகின்ற ஒரு குறுநாவலாக சாம் நாதனின் களவு காமம் காதல் வெளிவந்துள்ளது.  
	இக்குறுநாவலில் ஆண் - பெண் உறவைச் சித்தரிக்கும் இடங்களிலெல்லாம் நுட்பமான, புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இது முக்கியமாக பேசப்படவேண்டிய ஒன்று. இன்னும் கூடச் சொல்லவேண்டுமெனில், மேற்க்கத்தியக் கலாச்சாரத்தில் கூட புரிதல் அடிப்படையில் மட்டுமே ஆண் - பெண் உறவு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமே. ரகுவர்தன் - காயத்ரி ஒருவருக்கொருவர் புரிதல் அடிப்படையில் நேசம் பாராட்டுவதிலும், பகிர்ந்து கொள்தலிலும் உச்சத்தைத் தொடுகிறார்கள். நாவலின் மையம் இப்புரிதல் தானே தவிர அவர்கள் அதீத வேட்கையோடு பகிர்கின்ற காமம் அல்ல.
	நமது தமிழ்ச் சமூகத்தில் காதல் என்பதை உரத்துச் சொல்லி தன் இணையுடன் ஒரு பெண் சுகிப்பது என்பதைக் கலாச்சாரப் புனிதம் கெடுக்கும் செயல் எனவும், அது தகாதது எனவும், கற்பிதம் செய்யப்பட்டு வந்திருப்பதைத் தகர்க்கின்றது ரகுவர்த்தன், காயத்ரியின் உறவுப் பகிர்தலும், சுகித்தலும். "புத்தகங்களில் காதலைப் பற்றிப் படித்திராத யாரொருவரும் காதல் வயப்படுவதைப் பற்றி எப்போதும் யோசித்திருக்கமாட்டார்கள்" என்று லாரோச் புக்கோ (La Roche Foucauld) சொன்னதை நினைவூட்டிக் கொண்டால், களவு, காமம், காதல் எனத் தலைப்பில், சாம் நாதன், நீங்கள் உணர்வுகளை வரிசைப்படுத்தியிருப்பதன் தாத்பர்யம் புரியும். இக்குறுநாவலில் ஒரு கதை, கதை அல்லாத மாதிரியில் சொல்லப்பட்டிருக்கின்ற விதத்தை நான் மிக ரசித்தேன். 
	கதைகள் அல்லாத கதைகளைச் சொல்லும் உத்தியைக் கைக்கொள்கிற உங்களின் உத்தி மூலம், இக்கதை என்ன செய்கிறது எனக்கேட்டால், வெகு சுலபமாக, இது இன்பம் அளிக்கின்றது (Pleasure of the text) எனச் சொல்லிவிடலாம். உறவு முறைகளற்ற ஒரு பிணைப்பைப், புரிதலுடலான காமத்தின் மூலம் துயக்கின்ற ஒரு வெளியை, இன்ப விளைவுடன் (desire), பரிச்சயமான சூழலுக்கு (familiar situation) ஒரு புதிய திருப்பத்தை (sudden decisions) தருகின்ற செயற்பாட்டை நீங்கள் முன்னிறுத்துவதன் மூலம் வாசகனை மிக நெருக்கமானவனாகத் தனக்குள் இழுக்கின்ற சாத்தியத்தை இக்குறுநாவல் கொண்டிருக்கிறது. மதிப்பீடுகள், முன் பதிவுகள் அற்று அணுகினால் அதனைத் துய்க்கலாம்.   
 	அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வருகின்ற ரகுவர்தன் பற்றிய குறிப்புக்கள் நாவலுக்கான நல்ல படலமாகவும் (foil) நாவல் இலக்கியத்திற்கான ஆதாரத் தடமாகவும் இருக்கிறது. எனக்குப் பிடித்ததும் அந்தக் குறிப்புக்கள்தான். ரகுவர்தன் போன்ற பக்குவமுள்ள மனிதர்களால்தான் ஒரு பெண்ணிடம் இத்தனை உரிமைகளுடனும், புரிதல்களுடனும் பழகிக்கொண்டிருக்க முடியும். இந்த வெளியும், புரிதலும், மிகையற்று சொல்லப்பட்டிருப்பது புதிதானதொரு முயற்சி.
	காயத்ரியும் ஒரு வகை மாதிரிதான் - ஆனால் பேசப்பட வேண்டிய, புரிந்து கொள்ளப்பட வேண்டியவள் என்பதை ரகுவர்த்தனின் கண்கள் வழி நான் பார்க்கிறேன். தி.ஜானகிராமனின், மோகமுள், அமிர்தம், மரப்பசு, நளபாகம் - புனைகதைகளில் வரும் மாந்தர்கள், உரையாடல்கள், அவை வெளிவந்தபோது தமிழ் மரபு கண்டறியாதவையே. "இதற்குத்தானே பாலு ஆசைப்பட்டாய்" என்கிற மோகமுள் யமுனா, "அம்மா அப்பாவைக் கலியாணம் பன்னிண்டு என்ன சுகத்தக் கண்டா? இதுவரையில் கலியாணம் பண்ணின்டு தூணோடு திருடனைக் கட்டி வச்சாப்பல புருஷத் தூணோடு பொம்மானாட்டியும் பொம்மனாட்டித் துணோடு புருஷனும் கட்டிப் போட்டுண்டு என்னத்தக் கண்டு விட்டா?... எனக்குத் திருட இஷ்டமில்லை. நான் இஷ்டப்படி இருக்கப்போறேன்" என்ற மரப்பசுவில் அம்மணி - (புனைவுகளும் உண்மைகளும் - க.பஞ்சாங்கம், 229) இவர்களின் இன்னொரு பரிமாணம், பிறிதொரு விடுபட்ட புனைவுப் பாத்திரம் காயத்ரி.  
	நாவலில் இழையோடும் Sexual texture கதைக்கு மிகப் பொருத்தமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது. சிறிது பிசகியிருந்தாலும் விரசமாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது. இங்கு தற்கொலைகளைக் கொண்டாடுவோம் எனும் புத்தகத்தில் ராமானுஜம் பகிர்ந்து கொண்ட ஓஷிமா எனும் ஜப்பானிய இயக்குநரின் In the Real Senses எனும் திரைப்படம் குறித்த பதிவு நினைவிற்கு வருகிறது. ராமானுஜம் சொல்கிறார் : 
	"இந்தப் படம் இதுவரை நாம் படித்த எந்தவொரு புத்தகத்திலும் பார்த்த திரைப்படத்திலும் பார்க்கக் கிடைக்காத, முழுமையாக அதிகாரத்தை உதாசீனப்படுத்தி இயற்கையோடு ஒட்டி நிற்கும் ஒரு பெண் உடலை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தன் ஆண் உடலை ஒரு பெண்ணுக்கு முழுமையாய்க் கொடுக்கத் துடிக்கும் ஒரு ஆண் உடலின் புன்னகையை அது அறிமுகப் படுத்துகிறது. நவீனத்துவத்திற்கு முந்திய ஜப்பானியச் சமூகத்தின் உடல் கொண்டாட்டத்தின் பிரதிநிதியான அவன் (திரைப்படத்தின் நாயகன்), ஒரு பெண் உடலை இந்நாள் வரை அபகரித்துக்கொண்டிருந்த அவன், ஒரு பெண் உடலுக்குத் தன்னை முழுமையாய்த் கொடுக்க முன்வருகிறான். ஒரு சின்ன இசைவற்ற புரிதல் கூடப் படத்தை மிகக் கீழ்த்தரமான படமாக மாற்றியிருக்கும் அபாயத்தைச் சுமந்துள்ளது". (தற்கொலைகளைக் கொண்டாடுவோம், 75,76 79) 
	ரகுவர்த்தன், காயத்திரியின் உறவும் இந்த அபாயத்தைச் சுமந்திருந்தாலும், தமிழ் இலக்கியப் புனைவுப் பரப்பில் குற்ற உணர்வற்ற, உடல் பற்றிய அதீத பிரக்ஞை மட்டுமே வியாபித்திருக்கின்ற இரண்டு தடைகளையும் தாண்டி நேர்த்தியோடு பதிவாகி இருக்கிறது. பாராட்டுக்கள்!  	
 	ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட குறுநாவல் இது, என்பது ஒன்று தான் இதன் குறை. ஆனால் அதில் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இல்லை. காயத்ரி, தன் பார்வையில் ரகுவர்தனைப் பற்றி பேசும், அல்லது நாவல் பயணிக்கும் கதைக் களத்தைப் பற்றிப் பேசும் சில அத்தியாயங்கள் இருந்திருந்தால் மேலும் நிறைவாக இருந்திருக்கும்.பொதுப்புத்தியுள்ளவர்களும், வாசிப்பு அறவே இல்லாதவர்களும் இந்தக் குறுநாவலைக் கடந்து செல்வது கடினம். மற்றபடி எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொண்டு சுயவிமர்சனம் செய்து கொள்ளக்கூடிய லாவகமான எழுத்து நடைதான். நாவலின் துவக்கம் அதிர்ச்சி தந்தாலும் சமகாலத்தில் நடக்காத ஒன்றை இந்த நாவல் போலியாக நிரூபிக்க முயலவில்லை என்பதால் அதனைக் கடந்து செல்ல முடிந்தது.
	 ராமானுஜம் சுட்டுகின்ற திரைப்படத்தின் கதாநாயகி ஸதா ஒரு உண்மைக் கதாபாத்திரம். அவளது பார்வையில், கோணத்தில் ஓஷிமாவின் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது போலக் காயத்திரியின் கோணத்திலும் இவ்வுறவு, இக்கதை சொல்லப்பட்டிருந்தால் கூடுதல் அடர்த்தி கிட்டியிருக்கும். ஆனாலும் இந்த ரகுவர்த்தன் ஒரு பொதுப்புத்தி கட்டமைத்த ஆண் அல்ல என்பது ஆறுதல். 
	ஓஷிமாவின் கதாநாயகி - முன்னாள் பாலியல் தொழிலாளியான ஸதாவை ஜப்பானிய சமுதாயம் எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்பதை ராமானுஜம் பின்வருமாறு விளக்கியிருப்பார்: 
	"இந்த ஸதா பாத்திரம் ஜப்பானிய வீதிகளில் வெட்டியெடுத்த ஒரு ஆண்குறியோடு உண்மையில் நடமாடியவள்தான். போலீசாரால் கைது செய்யப்பட்டு குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டவள்தான். பாலியல் தொழிலாளியாக இருந்த அவள், எவ்விதத்திலும் பாலியல் தேவைகளில் திருப்தி அடையாத அவள், வழக்கில் அவளுடைய நிலையை எடுத்துரைத்தாள். அதிர்ச்சியில் உறைந்துபோன ஜப்பானிய பத்திரிகைகளும் நடுத்தர வர்க்கமும் அவள்மீது இரக்கம் காட்டத் தொடங்குகின்றன. பிறகு அவள் விடுதலை செய்யப்படுகிறாள். விடுதலையான அவள் தன் பெயரை மாற்றிக்கொண்டு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறாள். அந்தக் கணவனுக்கு இவள் உண்மையில் யார் என்று தெரியவந்தவுடன் விவாகரத்து செய்து விடுகிறான். இதனால் மீண்டும் பாலியல் தொழிலுக்குள் நுழைகிறாள். 70 வயதுவரை பாலியல் தொழிலில் ஈடுபட்டு மாண்டுபோன அவளுக்கு ஜப்பானிய சமூகப் மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அவள் மரணம் கொள்ளும் வரை ஒவ்வொரு இரவும் பாருக்குள் அவள் நுழையும் போது பாரில் உள்ள அத்தனை ஆண்களும் மரியாதையோடு எழுந்து நின்று இரண்டு கைகளாலும் அவரவர்களுடைய ஆண்குறியை மறைத்து நின்றார்கள். இந்த மரியாதை தினம் தினம் அவளுக்காகச் செய்யப்பட்டது". (தற்கொலைகளைக் கொண்டாடுவோம், 78, 79). இத்தகைய புரிதலுள்ள ஒரு ஆணாக ரகுவர்த்தன் வடிவவமைக்கப்பட்டிருப்பதே ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
	நாவல்கள் குறித்து E.M. Forster, "நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வைக்குப் புலப்படும் அல்லது புலப்படக்கூடிய அந்தரங்க வாழ்க்கைகளை உடைய மக்களாக இருக்க, நாம் பார்வைக்குப் புலப்படாத அந்தரங்க வாழ்க்கைகளை உடைய மக்களாக இருக்கிறோம். அதனால்தான் நாவல்கள், அவை தீயவர்களைப் பற்றியவையாக இருந்தபோதிலும் கூட நம்மை ஆறுதல்படுத்த முடியும். மேலும் கூடுதலாகப் புரிந்துகொள்ளத்தக்கதான ஒரு மனித இனத்தை, அதனால் மேலும் கூடுதலாகக் கையாளத்தக்கதான ஒரு மனித இனத்தை நாவல்கள் நமக்கு வழங்குகின்றன" என்கிறார். ஆனால், சாம் நாதன் இப்படிப்பட்ட இலக்கு, அல்லது குறிக்கோள் எதனையும் வைத்துக் கொண்டு இதனை எழுதவில்லை. வாழ்க்கை முழுவதும் அவளுடைய பாலியல் உணர்வுகளுக்கு அடிமையாக இருந்த ஓஷிமாவின் ஸதாவை, (காயத்ரி வடிவில்) புரிந்துகொண்டு உடனிருக்கின்ற ஒரு ஆணை (ரகுவர்த்தனாக), அதன் உணர்வு வெளிப்பாடு, சிக்கல்கள், முறிவோடு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவ்வளவே! இது ஆண் - பெண் உறவு பற்றிய புரிதலற்ற, மரபு வழி ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு ஆபாசமாகக், கலாச்சாரக் கேடாகத் தோன்றலாம். துணிச்சலாக அதைத் தொட்டு, விவாதித்திருக்கிறார் சாம் நாதன்.  பாரட்டப்பட வேண்டிய முயற்சி. களவு காமம் காதல் மிகத் தைரியமாக, ஆரோக்கியமான புரிதல் உள்ள வளமான ஒரு சமூகத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது. இனி தொடர்சிகள் நிகழும் என்ற நம்புகின்றேன்.
	தமிழப் புனைகதையில் கு.ப.ரா இதனைக் கலாபூர்வமாக் கையாண்டிருக்கிறார். புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற சாரு நிவேதிதா கூடத் தன் 'சாப்பாடு, குடி கொண்டாடு' கட்டுரையில் கு.ப.ராபற்றிய தி.ஜானகிராமனின் கருத்தைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார் -  "செக்ஸ் கதைகளை எழுதி அவர் தீட்டுப்பட்டு விட்டதுபோலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்துவிட்டதாகவும் சிலர் விமர்சகர்கள் அந்தக் காலத்தில் எழுதிக்கொண்டிருந்தார்கள். கற்பிழந்து 'அந்தத்' தெருவுக்குக் குடிபோய்விட்ட பெண்பிள்ளையைப் பற்றிப் பேசுவது போல் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை". (வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா, 97) ஆகவே, எது குறித்தும் கவலையற்று வந்திருக்கின்ற களவு காமம் காதல் என்ற நல்ல முயற்சிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சாம் நாதன். 
	திருநெல்வேலி மண் என் மனதிற்கு நெருக்கமான ஆதர்ச படைப்பாளிகள் பலரைத் தந்திருக்கின்றது. புதுமையும், மரபினை மீறுதலும், தொடுவான விளிம்பை விரித்தலும் அம் மண்ணின் கலை மாந்தர்களுக்குத் தாமிரபரணி தந்த வரம் என்றே நான் எப்போதும் வியப்பேன். புதிய வரவாக இதோ, நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள் சாம் நாதன்.  
	"இயற்கைக்கு எதிராகப் போராடுவதில் வீரம் ஏதும் இல்லை" என்ற மண்ட்டோவையும், "இயற்கையான உடலை மீட்டெடுப்பதில்தான் சுயமரியாதைக்கான சாத்தியங்கள் உள்ளன" என்ற ஓஷிமாவையும், என்னைப் போலவே நீங்களும் கூடுதலாக வாசிப்பீர்கள் தானே சாம் நாதன்? 
	உங்கள் ரகுவர்த்தனிடத்தில் நேசம் எனும் சொல் பக்குவத்தின் கதகதப்பான புரிதலோடு பதப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாவலின் Protagonist ஆன அவன் இந்த நாவலில் சொல்லுகின்ற செய்தி இதுவாகத்தானிருக்கும்: "'நேயம்' அல்லது 'காதல்' என்ற ஒன்று இருக்கும் இடத்தில், பாலியல்சார் அதீதம் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. பாலியல் சார் வக்கிரம் என்று எதுவும் பகுக்கப்படாது. பாலியல் சார் வக்கிரங்களுக்கு இடமிருக்காது. ஏனெனில், நம்பிக்கை மற்றும் புணர்வுச்ச நிலைக்கு இட்டுச் செல்லும் எதுவும் வக்கிரமாக இருக்க வழியில்லை". (மனநோயின் மொழி - டேவிட் கூப்பர், 119)
	வாழ்த்துக்கள் - தொடர்ந்து பயணப்படுங்கள்! 


உதவிய நூல்கள்: 
1)	இலக்கியக் கோட்பாடு : மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர், (தமிழில், ஆர்.சிவகுமார்)
2)	மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் (தமிழில், லதா ராமகிருஷ்ணன்) 
3)	அடையாள மீட்பு : காலனிய ஓர்மை அகற்றல் - கூகி வா தியாங்கோ (தமிழில், அ.மங்கை)
4)	வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *