பிரசன்னா ராமசாமியின் “சக்திக் கூத்து” அரங்க நிகழ்வை முன்வைத்து ஒரு பகிரல்…

'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன? 

    "திரெளபதியின் துகில் போல நீண்டு
    கிடக்கின்றது இந்தப் பாதை..." நிகழ்வு முடிந்தபின் அது நடந்த இரவும் கூட!
	"பாலுறவின் வேட்கையும், அது முடிந்தபின் மரணத்தின் பீதியுமே மனிதனை இயக்கும் மனவிசை" எனும் ஃபிராய்டின் கூற்றை முற்றும் நம்புபவளாகவே இருந்தேன் பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை மிகச் சமீபத்தில் அனுபவிக்கும் வரை. அந் நிகழ்வின் ஊடறுத்தலுக்குப் பின் கலையே மனிதனை இயக்கும் மனவிசை என உணர்ந்து உறுதியுடையவளாயிருக்கிறேன். எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்வது கலையில் தான் என்பதைத் தனது 'சக்திக் கூத்தினால்' எனக்குப் பொட்டில் அடித்தாற்போலும், முலைப் பாலமுதம் போலும் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமசாமி. 
	கண்களும், காதுகளும் மட்டும் உள்வாங்குவதல்ல ஒரு அரங்க நிகழ்வென்பது - புலன்களின் வழி ஊடுறுவி அது ஆன்மாவைக் கத்தி முனையில் ருசிப்பது எனப் புரிய வைத்தார் பிரசன்னா அந்த 90 நிமிடங்களில். "கலை ஒரு உலக மொழி" என்பதை மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள், இருந்தன - நடிகர்களும், உத்திகளும், ஒலி அமைப்பும், பறை இசையும்.
	இந் நாடகம் பேசும் ஒரே மொழி - காலந்தோறும், திசைகள்தோறும், நிலமெங்கினும் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, அடையாளமழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் மொழி. நிலத்தின் வலி - குறிப்பாக நமது ஈழத்தின் மறக்கமுடியா இன அழிப்பும், தொடர் வன்முறையும், புலம்பெயர் அலைந்துழல்வு அவலத்தின் துயர்மிகு வதைகளும் ஒலிக்கும் குரல்! பிரசன்னாவின் அரங்க நாடகங்கள் எப்பொழுதுமே பல்வேறு அடுக்குகள் கொண்டவை. நயமான பின்னல்களின் நகாசுகளில் செவ்விசை, கூத்து, நாட்டார் மரபுப் பாடல்கள், தொல்லிசை, நவீனக் கவிதைகள், சமகால உரையாடல்கள், மெளனங்கள் - அனைத்தையும் இழைத்து நெய்யப்படும் அற்புதமான மாயக்காரியின் சீலை முந்தானை அவை. ஒரு போதும் உரத்துக் கோஷமிடுபவை அல்ல. சொல்லப்போனால், வெறும் பிரகடனங்களில் அவை தம்மைக் கிஞ்சித்தும் விகாரமாக்கிக் கொள்வதில்லை.
	மெதுவாய் வெளிச்சமாகும் வரைப் பிறிபிறியாய் இருட்டை விளக்கும் உத்திகள் பிரசன்னாவினுடையவை. அரங்கத்தின் props ஆக வைக்கப்பட்டிருந்த Masks, திரெளபதியின் நீண்ட துகிலுக்கான தேடலில் கிடைத்த குருதி படிந்த பெண்களது ஆடைகள், அவள் அணிய விரும்பாத நீண்ட பொய்ச் சவுரி முடி, பாத்திரங்களின் மூன்றாவது கையாய்க், காலாய்ச் சுற்றிக் கொண்ட நீண்ட திரைச்சீல வடிவ துணிகள் - இவை அனைத்துமே சன்னஞ் சன்னமாய்க் கனம் கூட்டியவை.
	மெதுவாய்த் தெளியும் வரை அலை அலையாய்க் கலங்கலை வடிகட்டும் வசனங்கள், பாடல்கள், கவிதைகள் - பிரசன்னாவின் கூராயுதங்கள். அவை ஒருபோதும் பளபளப்பின் அறுவறுப்பைத் தராதவை - ஆனால் வலியின் உச்சத்தில் மரணத்தைச் சம்பவிக்கச் செய்யும் வலிமை வாய்ந்தவை. "யாராவது பேசினார்களா? ஒருவராவது ஒரு கேள்வி கேட்டார்களா?" எனப் பீமன் ஒருவனது துடிப்பில், திரெளபதிக்குப் பீஷ்மரது சாதுர்யமான பதிலுக்கான எள்ளலில், ரசாயனக் குண்டுகளால் எரியுண்டு மலடான ஈழ நிலத்தின் குரலாய், எளியவர்களின் மனசாட்சியைப் பிரசன்னா முன்வைக்கையில் கணமேனும் மரணிக்காதவர் யார்?
	மெதுவாய் அசையும் வரை பார்வையாளர்களின் மனத் தேக்கத்தை நொடி, நொடியாய் முடுக்கி விடுபவை பிரசன்னாவின் ஆக்கத்தில் சுழன்றாடும் பாத்திரங்களும், அவர்தம் உடல் மொழியும். 'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன? அது ஊழித் தாண்டவம் என்பதை இரண்டு பெண்ணுருக்களின் கட்டற்ற, ஆனால் வெகு நேர்த்தியான கலை வெளிப்பாட்டின் மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றார். நிகழ்வின் ஒட்டு மொத்த த்வனி 'உக்கிரம்' தான். பாசுரம், கணியங் கூத்து, பறை இசை, பனுவல், கவிதை வரிகள், இடையிடை இயல்பான வசனங்கள் - அனைத்திலும் ஆர்ப்பரிப்பது 'உக்கிரமெனும்' பேருணர்வு தான்.

	"வதை முகாம்களில் பாடல்களுக்கு 
	இடமில்லை" எனும் துயர் மிகு நிலையில்
	"எனது கலைக்கப்பட்ட துகில் போல
	நீண்டு கிடக்கிறதந்தப் பாதை" எனும் கையறு நிலையில்
	"கேள்வி பலவுடையோர் கேடிலா நல்லிசையோர்
	கேள்வித் தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்"
	கூடிய சபையில்
	"என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்
	நின்னையெவரும் நிறுத்தடா என்பதிலர்"
	எனக் சினமுற்றுக் கொதிக்கையில்...
	எங்கும், எதிலும் 'உக்கிரம்' தான்.
	இவ்வுக்கிரமே, ரோகிணியின் ஒவ்வொரு கண் இமைப்பிலும், உதட்டுச் சுழிப்பிலும், புஜங்களின் விரிப்பிலும், பாதங்களின் துடிப்பிலும் சுற்றிச் சுழன்றாடுகின்றது. திரேதாயுக, கலியுகப் பெண்ணாகச், சமகாலத்தில் யுத்தங்களிலும், வன்புணர்வுகளிலும், மேற்சாதி மேட்டிமை அடக்குமுறைகளிலும், கந்தல் துணியாக்கப்பட்ட பெண்ணின் நிலையைச் சுட்டுவதே இக் கூத்து என்றாலும், அது ஒரு போதும் கையறு நிலையில், இரக்கம் கோரும் உணர்வை முன்வைக்கவில்லை. காரணம், மேற்சொன்ன 'உக்கிரத்' த்வனிதான். அதற்கு மிகச் சரியான ஈடு நெல்லை மணிகண்டனின் பறை இசைப் படைப்பு. 
	பிரசன்னா ஒருபோதும் காளியை அவளது சூலத்தினால் மட்டுமே அடையாளப் படுத்துவதில்லை. அவளது வெளித் தொங்கும் நாக்கு அவளை அதிபயங்கரியாக்கினாலும், 'அழகியல்' எனும் இரத்த பூசையை அவள் விரும்பிச் சுவைப்பவள் என்று நம்மை நம்ப வைப்பவர் பிரசன்னா. கலை ஒரு போதும் அழகியலை அதன் யதார்தத்திற்காக விட்டு விலக வேண்டியதில்லை - மாறாக உண்மையின் குரூரத்தைக் கூட ஒரு கர்நாடக ராகத்தின் நெகிழ் வடிவில், ஒரு இளகிய முகபாவனையின் கண்ணோர அசைவில், ஒரு பரத நாட்டிய முத்திரைக்கான உடல் மொழியில், மிக நேர்த்தியாக, அதே சமயத்தில் வலிமையாகச் சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு பிரசன்னாவின் இந்த "சக்திக் கூத்து". பிற நாடக நெறியாளர்களிடமிருந்து கம்பீரமாகவும், தனித்துவத்துத்துடனும், அவர் வேறுபடுவது கலையும், அழகியலும் வெறும் பிரச்சார நெடியின்றிச் சங்கமிக்கும் இந்த அர்த்தநரிப் புள்ளியில்தான். Art without aesthetics and truth is like copulating a corpse - and Prasanna's sucess as an artist is her undying faith in this magical combination of aesthetics & truth in Theatre without mere Vociforous Proclamations or Declarations. 
	பிரசன்னாவின் இலக்கிய நுண்ணுணர்வு, தேர்ந்த ரசனை, கூர்த்த ருசி - இவையனைத்துமே அழகான ஊடுவாவுடன் வெளிப்படுகின்ற இந்த அரங்க நிகழ்விற்குச் செறிவு சேர்த்தவை ரோகிணியின் தன்னை முழுதுமாய் ஒப்புக்கொடுத்த நடிப்பும், ரேவதிகுமாரின் பாடல்களும், நடனமும், மணிகண்டனின் கைபற்றித் தொடரும் பறையிசையும். பாஞ்சாலியாய்ப் புரள்கின்ற ஆவேசம், சங்க மகளாய்க் காதலில் துவளும் நளினம், நவீனப் பெண்ணாய்க் கேள்விகளின் நிசர்சனத்தில் சமூகம் சாடும் திமிரல் - என ரோகிணி அனுபவித்து வாழ்ந்திருக்கிறாள். Jealousy is the word to appreciate her Histrionics. அரங்கத்தை முழுவதும் ஆக்கிரமித்து, ஆற்றல் மிக்கத் தீவிரமான தொடரியியக்கமாகப் பெண்ணை முன்னிறுத்தி ரோகிணி சுற்றிச் சுழன்றாடியும், விவாதித்தும், மெளனித்தும், உரையாடியும் 'சக்தியின்' மொத்த உருவாகத் திகழ்ந்தாள். "காற்றே ப்ராண ரசத்தைக் கொடு" என்றவள் ரேவதியின் கரம் பற்றி வான் நோக்கியபோது "ஒளியே என்னை ஆட்கொள்" என நான் கரைந்து போனேன். கட்டி முத்தங்கள் அவளுக்கு! 
	எல்லா நாடகங்களும் ஒப்பனை, முகமூடி இவைகளின் மூலம் பூச்சற்ற, முகமூடிகள் கிழிந்த வாழ்க்கையைத்தான் பேசுகின்றன. ஆனால் அறத்தின் சிரசின் மேலமர்ந்து, அதிகாரம் எனும் நபும்சகனை சம்காரித்து, மனசாட்சியின் நாடி பிடித்து உலுக்குகின்ற காத்திரமான நிகழ்வினை, அழகியல் அற்புதத்தோடு புலன்களுக்குத் தருபவை வெகு சிலவே.


	பிரசன்னா ராமசாமியின் 'சக்திக் கூத்து' அப்படி ஒரு அபூர்வமான கலை அனுபவம்.
	"கூட்டிலிருந்து விழித்தெழுந்து
	பயத்தோடு,
	பறக்கக் கற்றுக்கொள்ளும்
	குஞ்சுப் பறவைக்காக
	குனிந்து கொடுக்கிறது
	வானம்"
எனும் க.மோகனரங்கனின் எனக்குப் பிடித்த கவிதை வரிபோல,
	கலை எப்போதும் கருணையோடு எனக்காகக் குனிந்து எவ்வளவோ கொடுத்திருக்கிறது - இந்த முறை பிரசன்னாவின் "சக்திக் கூத்தின்" மூலம் - எத்தனை இழப்புக்கள் வந்தாலும் எழுந்து நிற்கவும், தட்டுத் தடுமாறி நடந்து செல்லவும் - 
	எல்லாவற்றிற்கும் மேலாக,
	"நிறுத்தடா"
என்று ஒரு பெண்ணாகத் திமிர்த்து, நிமிர்ந்து, வாழ்ந்து காட்டுவதற்கும்!
                                      * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *