புதினம் எனப்படுகின்ற நாவல் ஒரு கந்தர்வக்கன்னி. அவளோடு தனியறையில் சுகிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுதலை ஒரு தவம் போல மேற்கொள்ள வேண்டும். ஒரு கலைப்படைப்பென நாவலை உருவாக்க ஆன்மாவின் அத்தனை அடுக்குகளையும் மொத்தமாக அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். “முன்னொரு காலத்தில் இலக்கியம் என்பது வேறெதையும்விட அதிகம் கவிதையையே குறித்தது. நாவல் திடீரென்று தோன்றிய ஒரு நவீன வரவாகும். அது வாழ்க்கை வரலாறு அல்லது வரலாற்றுப் பதிவுக்கு மிக நெருங்கியதாக இருந்ததால் அதற்கு மெய்யான இலக்கியத் தன்மை இருக்கவில்லை. அது தன்னுணர்ச்சிக் கவிதைக்கும் காவியக் கவிதைக்கும் இருந்த உயர் குணங்களை அடைய இயலாத ஜனரஞ்சக வடிவமாகும். எழுத்தாளர்கள் என்ன எழுதுகிறார்கள் என்ற முறையிலும் வாசகர்கள் என்ன வாசிக்கிறார்கள் என்ற முறையிலும் நாவல், கவிதையை மறைத்து மங்க வைத்துவிட்டது. 1960களுக்குப் பிறகு கதையாடல் இலக்கியக் கல்வியின்மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டது. வாசகர்கள் இப்போதும்கூட கவிதை வாசிக்கிறார்கள் (பல சமயங்களில் அது வலிந்து கோரப்படுகிறது). ஆனால் நாவல்களும் சிறுகதைகளும் பாடத்திட்டத்தின் மையமாகிவிட்டன. உலக விஷயங்களைப் புரிந்துகொள்ள நமக்குள்ள பிரதான வழி கதைகள்தான் என்ற ஒரு வாதம் உள்ளது. ஆனால் காரண காரியம் தொடர்பான விஞ்ஞான தர்க்கத்தை வாழ்க்கை பின்பற்றுவதில்லை. அது கதையின் தர்க்கத்தைப் பின்பற்றுகிறது” என்கிறார் ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு: 133,134). இந்தக் 'கதையாடல்' மற்றும் 'கதை கூறல்' ஒரு புதினத்தின் முக்கியக் கூறுகளாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது. ஆனால் இந்தக் கூறுகளை உள்ளடக்காத, வெறும் சம்பவக் கோர்வைகளைச், சமூக, வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்துச் சொல்லாத, எத்தனையோ புதினங்கள், மேற்சொன்ன வரையறைகளை உடைத்துவிட்டுப் புதிதானதொரு தேடலோடும், தனித்துவமானதொரு மொழியோடும், குறிப்பாக ஒரு ஆன்ம தரிசனத்துடனும் எழுதப்பட்டுப், பெருவாரியான வாசக மனங்களைச் சென்றடைந்திருக்கின்றது. மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’; அவ்வாறான ஒரு படைப்புதான். இதைப்போன்றதொரு நாவல் கல்லூரிகளில் நவீனத் தமிழ்ப் புனைக்கதைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமாயின் அது எவ்வளவு நம்பிக்கைக்கும், உற்சாகத்திற்குமுரிய விஷயமாயிருக்கும் என்கிற கனவோடு நான் இதனைப் படித்து முடித்தேன். “இருத்தலின் சாத்தியங்களை இந்த நாவல் தன் ஞானப் பாதையின் வழி கண்டடைகிறது” என்று மோகன் தன்னுரையில் சொல்கிறார். உண்மையில் இந்த நாவல் ஒரு மகா கலைஞனைப் பற்றிய புனைவினூடே கலை பற்றிய ஒரு தரிசனத்தை, கலையின் ஜ்வாலைக்குத் தன்னை முழுமையான திருப்தியுடன் தின்னக் கொடுத்த ஒரு கலைஞனின் வாழ்வு பற்றிய சித்திரத்தின் மூலம் முன்வைக்கிறது. கலை தர்க்கங்களை மீறக் கூடியது. ஆனால் வாழ்வியல் யதார்த்தமோ தர்க்கத்தின் மீது கட்டுமானம் செய்யப்பட்டது. அந்த யதார்த்திற்குள்ளிருந்தும், கலையின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான சாத்தியமின்மையின் தோல்வியிலிருந்தும், விடுதலை பெற மரணத்தை ஒரு அழகான சாத்தியமாக நாவலின் protagonist, இராமன் என்கிற அற்புதமான ஓவியக் கலைஞர் தேர்ந்தெடுப்பதை, அதற்குரிய நியாயத்தோடு சொல்கிறது. மோகன் தனது ஆன்மபலத்தை இதனைப் படைப்பதன் மூலம் மீண்டும் புத்தாக்கம் செய்திருக்கிறார் என்பதை அதன் ஒவ்வொரு அத்தியாயமும் உறுதிப் படுத்துகின்றது. அற்புதமானதொரு மனக்கிளர்வையும், ஆன்ம பலத்தையும், சிந்தனையும் உணர்வும் ஒருங்கிணையும் ஒரு கூடலின் ஒத்திசைவையும் தரவல்லது கலை மட்டுமே என்பதையே அவரது மொழிநடையும், ஓவியர் ராமன் குறித்த மனப்பதிவுகளும் புனைவின் மூலம் விளக்குகின்றன. இராமனுடைய விந்தையான கற்பனை உலகமும், படைப்பு மொழியும் மிகப் பெரிய அற்புதம் என்றாலும், இராமனே அற்புதமான ஒருவராக இந்நாவலின் வழி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். மோகன் இராமன் வழியாக, டக்ளஸ் மூலமாக, பணிக்கர் மூலமாகத், தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர்களோடு இணைந்த தன் கலைவேட்கைப் பயணத் துளிகளை அவர் பகிரும் போது, நான் உணர்ந்ததெல்லாம் மோகன் என்கிற கலைஞனின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களே. கவிதைகள், சிறுகதை, மொழிபெயர்ப்பு என நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகின்ற மோகனின் கலை நம்பிக்கையை, உள்ளுணர்வு சார்ந்த ஒரு கலை ஆராதனையை அல்லது அதனைக் கொண்டாடுதலை, இந்த ஓவியக் கலைஞனின் புனைவுச் சித்திரம் என் முன்னிறுத்துகிறது! கதையோ, சம்பவங்களின் கோர்வையோ நகர்த்திச் செல்லாத, ஒரு கலைஞனின் வாழ்வையும், நம்பிக்கையையும் மட்டுமே சொல்கின்ற ஒரு புதினத்தை, ஒரு சில உரையாடல்கள், நினைவுகள், திரும்பிப் பார்த்தல் - இவற்றின் மூலமாகப் பேசுவது, அவ்வகைத் தொனியிலேயே ஒரு அர்த்தத்தினையும், இசைவினையும் ஏற்படுத்தி வாசகனை நாவலோடு ஒன்றைச் செய்வது - மிகப் புதிதான உத்திதான். மோகன் இதனை Samuel Richardson இன் கடித வடிவ நாவலான Pamela வைப் போல வலிந்து செய்யவில்லை. (ஆங்கில நாவல் வரலாற்றை இரண்டாம் கட்டத்திற்குக் கொண்டு சென்ற Samuel Richardson பிறர் கேட்டுக் கொண்டபடி, பல வகைச் சூழலுக்குத் தக்கமாதிரி கடிதங்களை எழுதும்போது, கடிதங்களின் வாயிலாகக் கதைசொல்லும் எண்ணம் வர, அவ்வாறு அவர் எழுதிய முதல் நாவல் தான் பாமிலா) நாவலில் இடையீடு / சந்திப்பு என்கிற டக்ளஸீடனான நினைவுப் பகிரலில் நேரடியாக நாவலாசிரியரும் இதன் ஒரு பாத்திரமாகப் பொதிந்து கொள்கிறார். தவறியும்கூட கதை சொல்லும் யத்தனம் இல்லை - மாறாகப் பலகுரல் தன்மையுடைய ஒரு உரையாடல் வழியே இப்புனைவை நகர்த்துகின்றார். இது வாசகனை மேலான ஒரு ஆன்ம அனுபவத்திற்குத், தானே ஒரு கலைஞனின் மனவெழுச்சியைத் தன்னந்தனியாகத் தரிசிக்கின்ற அற்புதமானதொரு அனுபவத்திற்கு அழைத்துப் போகின்றது. மிகைல் பக்தின் சொன்னது போல - நாவல் என்பதே Polyphonous, Mutivoiced கொண்டது தானே - நாவலில் இராமனுடைய இணைபிரியா Companion தேவி என்கிற நாய், பொய்யாக ஒரு பெண் ரசிகையின் காதல் கடிதம்மூலம் இராமனைப் பரிசுசிக்கின்ற சரவணன், அதனைக் கண்டிக்கின்ற மூத்த சிற்பி சீத்தாராமன், இராமனுடைய பெண்தேடும் விளம்பரத்தைப் பார்த்து நேரிலே வந்து திட்டிவிட்டுச் செல்கின்ற பெரியவர், ஏன், அந்தக் கடலோசை கூட - இப்படி எல்லாக் குரல்களின் வழியே நான் கண்டடைவது ஒரு மாபெரும் கலைஞனின் சிருஷ்டி உலகத்தையும், அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு அவனால் செல்ல முடியாத துயரத்தையும், அதை உணர்ந்தபின் அவன் தேர்ந்தெடுக்கின்ற 'அழகிய சாத்தியமான' அந்தத் தற்கொலையையும்தான்! ஓவியர் டக்ளசுடனான நட்பு குறித்துப், “பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது கூட இல்லை; சில மணிநேரம் கூட இருந்து கொண்டிருந்தால் போதும். வாழ்வு அர்தத்தோடும் கலை நம்பிக்கையோடும் சலனம் கொள்ள ஆரம்பித்துவிடும்” என்று எழுத ஒரு ஆழ்நிலைத் தியானமெனக் கலையின் சன்னமான மூச்சை உள்வாங்கியவராலேயே முடியும். உளவியலை நாவல் மாதிரி எழுதிய அமெரிக்கத் தத்துவஞானி William James இன் சகோதரரான Henry James நாவலை உளவியல் போல எழுதிச் சென்றார் எனப் படித்தது நினைவிற்கு வருகிறது. தேவியுடன் இராமனுக்கிருந்த உறவு, கையில் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன் நல்ல ஜிப்பா, அழகான தொப்பி, பாலியல் இச்சையைத் தூண்டுகின்ற ஒரு புத்தகம் இவற்றைப் பற்றிய நாவலாசிரியரின் பதிவுகள் உளவியல் அவதானிப்பின் உச்சம். இந்த நாவலின் நடையினைத் தன்மைக் கதை சொல்லல் (அ) படர்க்கைக் கதை சொல்லல் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட உத்திகள் மீதெல்லாம் பெரிதாகக் கவனம் குவிக்காத எழுத்து மோகனுடையது. இருத்தல், வாழ்தல் எனும் Binaries இன் இடையில் கனவுலகில் வானத்தில் வாழ்ந்த ஒரு மகோன்னதமான கலைஞன், அவனுடைய கலையின் உன்னதத்தைப் போலவே, தற்கொலையை ஒரு கௌரவமான, மாறுபட்ட சாத்தியமாகத் தேர்ந்தெடுக்கின்றான், அப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டு, நம்பிக்கைகளை உறுதிப் படுத்திக்கொண்டு, ஆன்ம பலத்தை மேலும் திடப்படுத்திக் கொள்கின்ற ஒரு சாதனமாக மட்டுமே மோகன் இதனைக் கையாண்டிருக்கிறார். இதில் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கின்ற ஒரு நாவலுக்குரிய எந்தவிதமான செயல்பாடும் (functionality) உம் கிடையாது - ஒரு மகத்தான ஓவிய ஆளுமையின் விந்தையான கனவுலகையும், அதில் அவருக்கிருந்த அபாரமான ஆளுமையையும், கனவின் அடுத்த நிலைக்குச் செல்ல இயலாமையின் தோல்வியினை அவன் தற்கொலையின் மூலம் தாண்டிச் செல்வதையும் - ஒரு அசையும் மனச்சித்திரம் போலப் பதிவு செய்வதைத் தவிர! நான் நினைத்துக் கொண்டேன் - ஒரு கலைப்பித்தன் இன்னொரு கலை உன்மத்தனைப் பின் தொடர்வதில் என்ன வியப்பு என! இளவயதில் சற்றுப் பிசகிய இராமனுடைய மனநிலை, திக்குவாய் - இவற்றூனாடாக அவரது அம்மாவிடம் மட்டுமே இருந்த மன நெருக்கம் (சொல்லப்போனால் அம்மாவோடு அவன் சேர்ந்து பார்த்த புராணப்பட, மாயாஜாலப் படங்களின் மாடமாளிகைகள், பிரம்மாண்டமான அரண்மனை அடுக்குகள் - இவைதான் பிந்தைய அவரது ஓவியப் படைப்புக்களுக்கான அடிப்படை), அவனைப் புரிந்து, ஓவியத் திறமையை ஊக்குவித்த கோயிலின் மூத்தபட்டர் கிருஷ்ணமாச்சாரி, எக்மோர் ஓவியப்பள்ளியின் ஓவியமாஸ்டர், இராமனுக்குப் பிடித்த தொப்பியணிந்த கிருஷ்ணாராவ் மாஸ்டர், இராமனது கருடன் குழலூதும் சித்திரத்தில் மனதைப் பறிகொடுத்து “நிலவில் நீ ரொம்ப அழகா இருக்கே” என்று அவரை ஆதர்த்த ஓவியப் பள்ளி முதல்வர் பணிக்கர், 'Madras Movement' என்கிற அமைப்பின் கலை இயக்கச் செயல்பாடுகளில் தீவிரம் கொண்டு பணிக்கர் இயங்கிய அக் காலகட்டம், ஓவியப்பள்ளியில் அவரை விட்டுச் செல்ல வருகின்ற இராமனது அப்பா, இராமனை ஒரு பிரத்யட்சமான பெண் துணை வேண்டிக் கொல்லும் காமம், ஓநாயெனத் தொடர்ந்து காத்திருக்கும் மரணம், இராமனுக்கு பிடித்த பனங்காட்டின் ஊளை, சாராயக் கடை, பிராந்திபாட்டில், புரோட்டா பார்சல், இறுதியாக அந்தப் பூச்சி மருந்து - இப்படி மோகனால் புனையப்பட்ட கனவுலகில் ஒவ்வொன்றும் ஒரு இசைமையுடன், இப்புதினத்தின் ஓட்டத்திற்குள் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. ஃப்ரெஞ்ச் மொழியில் வெளிவந்து, உலகமுழுவதும் கவனம் ஈர்த்து, பல லட்சம் பிரதிகள் விற்ற நாவல் பாப்பிலான். Henry Shariyar எழுதியது. திரைப்படமாகவும் வந்து வெற்றிபெற்ற இதன் மையக்கருத்து - உயிர் வாழும் வேட்கையே. அதன் கதாநாயகன் பாப்பிலான் 'உயிருடன் இரு - அது ஒன்றுதான் தன் மதம்' எனக் கருதுபவன். தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவர்கள் அந்த முயற்சிக்கு முன் பாப்பிலான் நாவலை அவசியம் படிக்க வேண்டும் - படித்தால் தமது முடிவை மாற்றிக் கொள்வார்கள் எனப்படுவதுண்டு. மோகனின் இந்த நாவல் பாப்பிலானை அதற்கு நேரெதிர்த் திசையில், வாழ்வின் முழுமையைக் கனவின் மரணமே தீர்மானிக்கின்றது எனும் உண்மையோடு எதிர்கொள்கிறது. அதற்கான நியாயங்களை, கலைஞன் தனது கனவின் பரிசான படைப்பாற்றலை ஒரு பூரணமான முற்றாக உணர்ந்தபின், மேலும் அவ்வுலகில் ராஜாவாக, Cow Boy ஆக வசீகரத்தின் வனப்பில் இருந்தவன், ஒரு சவலைப்பிள்ளையாக, கனவின் சோகை மடியில் தவழ விரும்பாமல் விடைபெற்றுக் கொள்ளுதலைப், புகார்களற்று அங்கீகரிக்கின்றது. புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறது. தற்கொலை மட்டுமே மரணத்திற்கு நிதானத்தின் ருசியை வழங்கமுடியும் என்பதையும், உலகெங்கிலும் கலைஞர்கள், படைப்பாளிகள் இந்த நிதானத்தின் ருசிக்கு அடிமைப்பட்டே இருந்திருக்கிறார்கள் - இறந்திருக்கிறார்கள் என்பதையே இராமனது தேர்வின் மூலம்; மோகன் மெய்ப்பிக்கின்றார். முடிப்பு - என மோகன் சொல்கிறார்: “பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு. விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இளம் மேதைகள் விஷயத்தில் இதுதான் நிச்சயம் அழகான முடிவாக இருக்கமுடியும். இளம் மேதைகள் இளம் பிராயத்திலேயே தங்கள் கனவுகளின் உச்சத்தை எட்டிவிடுவதோடு அவ்வுலகில் பரிபூரணமாக வாழ்ந்தும் விடுகிறார்கள். தங்கள் துறை சார்ந்த மேதைமையின் சிகரத்தை எட்டிவிட்ட பிறகு. முதலில் மரணம் நேர்வது அவர்களுடைய கனவுகளுக்குத்தான். கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழ நேர்வது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; அவலமும்கூட. அப்படி நேராமல் தடுத்தாட்கொள்ளும் அழகிய சாதனம்தான் மரணம்”. இராமனுடைய மரணத்தை இதனைவிடத் தாய்மையோடு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கலைஞன் ஒருபோதும் idealistic ஆக இருக்க முடியாது. ஒருவேளை Mystic ஆக வேண்டுமானால் அவன் இருக்கக்கூடும் என்பதை அழுத்தமாக மெய்ப்பிக்கிறது இப்புதினம். நாவலில் இரண்டு மிகமுக்கியமான இடங்கள் - ராமனைப் பற்றிய பணிக்கருடைய வர்ணனை: டக்ளஸ் சொல்வதாக நாவலாசிரியர் எழுதுகின்ற அந்த இடம். “அவருடைய தன்மை மற்றும் அவருடைய கலை மேதமை காரணமாக, பணிக்கர் அவ்வப்போது, குறிப்பாக வெளிநாட்டவர்களிடம், சாமர்செட் மாமுடைய 'த மூன் அண்டு த சிக்ஸ் பென்ஸ்' நாவலின் பிரதான பாத்திரமான சார்லஸோடு அவரை ஒப்பிடுவார். எங்களுடைய சார்லஸ் ஸ்டிரிக்லாண்ட் இராமன் என்பார். ஒருமுறை பணிக்கர் அப்படி ஒப்பிடும்போது இப்படி சொன்னார்: 'நாலு காசுக்காக ராமனுடைய கால்கள் இந்த மண்ணில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது.' உண்மையில் அப்போதுதான் அந்த நாவல் தலைப்பின் அர்த்தமும் நாவலின் சாரமும் எனக்குப் புரிந்தது”. இது இராமனுக்கான வாசகம் மட்டுமல்ல - நெகிழ்வான, செறிவான முன்னுரை தந்திருக்கின்ற, அற்புதமான கவிஞர் யூமா வாசுகிக்கான, ஓவியர் டக்ளஸிற்கான, மோகனுக்கான வாசகம் - இன்னும் சொல்லப்போனால் - “கலை ஆன்மாவின் கருணை” பெற்றபின் லௌகீக வாழ்வின் இருத்தலையும், சமரசத்தினையும், நாலு காசுக்காக ஒப்புக்கொடுக்காத உன்னதமான கலையைத் தரிசிக்கின்ற அத்தனை படைப்பாளிகளுக்குமான வாசகம்! இன்னொரு அற்புதமான இடம், மோகன், டக்ஸஸ் மூலம் இராமனின் மரணம் குறித்துப் பேசுகின்ற முத்தாய்ப்பு வாசகங்கள் - “அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை… அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை… புரிகிறதா… வந்த வேலை முடிந்துவிட்டது… விடை பெற்றுக்கொண்டுவிட்டார்… அவ்வளவுதான்… உங்களுக்குத் தெரியுமா… தற்கொலை என்பது ஒரு அழகிய சாத்தியம்… அதைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார்… என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார்”. சிற்பி ரோடினிடம் செயலாளாராகப் பணிபுரிந்த ஜெர்மன் கவிஞா; ரில்கே (ரெய்னா; மேரியா ரில்கே) பிராகுவில் பிறந்தவர், பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன். சிற்பி ரோடினிடமிருந்து பெற்ற உள்ளொளியைக் கவிதைப்பாணியில் அவர் கடைப்பிடித்ததாக ஒரு கருத்துண்டு. இந்த நாவலுக்கான உள்ளொளியை டக்ளஸிடமிருந்தும், ஒரு ஓவியக் கண்காட்சியில் தான் பார்க்க நேர்ந்த இராமனுடைய இரண்டு ஓவியங்களிடமிருந்து - மோகன் பெற்றிருக்கிறார் என நான் நினைக்கின்றேன். “ரிலக்கேயின் இக் கவிதைப் பாணிக்குக் கருப்பொருள் கிடையாது எனவும், கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை (Poem of Things) என்று ரில்கே குறிப்பிடுகிறார்” என்று சொல்கிறார் முருகு சுந்தரம். மோகனின் இந்தப் புதினமும், ஆன்மாவை எடுத்து வெட்ட வெளியில் நிறுத்துகின்ற அற்புதக் கலை தான். மோகனின் இந்த நாவலில் அனுபவம் இருக்கிறதா, உண்மை இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்வதோ, அவரே அவருடைய படைப்பாக இருக்கிறாரா என்று கவனிப்பதோ தேவயற்றது. அவசியமற்றது; அதில் 'ஆன்மா' இருக்கிறது. அது எனக்குப் போதும்! இந்தக் கலைஞனைக் கொண்டாடுவேன்! உதவிய நூல்கள்: 1. இலக்கியக் கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர் (தமிழில் ஆர்.சிவகுமார்) 2. புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்
No comment