துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 12.03.2010

12.03.2010 அன்று, திருநெல்வேலியில் திமுக இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

	செவ்வானம், முத்தமிழ் அறிஞர் கலைஞர். அந்த சமுதாயத்தின் வைகரை தளபதி. அந்த சமுதாயத்தின் இளைஞர் எழுச்சி சூரியன். அன்னாருடைய பிறந்த நாள் விழாவினை இளைஞரணி எழுச்சி நாளாக இன்றைக்கு மிகுந்த சிறப்போடும், இந்த சுதந்திர தாகம் வீர வேட்கையின் களம் ஒளிகளாக, இப்போதும் கூடிக் கொண்டிருக்கிற நெல்லை சீமையிலே, நெல்லை மாவட்ட திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி சார்பில் மிக அருமையாகவும், அதிக அளவில் மகளிரைக் கூட்டி இங்கே பெருமையாகவும், தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிற துணை மேயர், நெல்லை மகனார் ரிஷி, மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் முத்துராமலிங்கம் அவர்களே, என்னை இங்கே பாசத்தோடு, என் தந்தை குறித்த நினைவுகளோடு அறிமுகப்படுத்தி, நான் எப்போதும் அவரை அன்போடு சித்தப்பா என்று அழைப்பதை சுட்டிக்காட்டி, அவர் தம் குடும்பத்தை குல விளக்கு என்று பெருமிதத்தோடு உங்கள் முன்னால் எடுத்துரைத்த மாவீரன் புலித்தேவனை எப்போதும் எனக்கு நினைவுபடுத்துகின்ற வீரத் திருமகள், இந்த மாவட்டத்தின் செயலாளர் மரியாதைக்குரிய சித்தப்பா கருப்பசாமி பாண்டியன் அவர்களே, இங்கே எனக்கு முன்பாக என்னுடைய தந்தையோடு 1967-ம் ஆண்டு, தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பகிர்ந்துகொண்ட நினைவுகளை நினைவுபடுத்திப் பேசிய, மூத்த, வணக்கத்திற்குரிய மேயர் திரு. ஏ.எல்.எஸ். அவர்களே, எப்போதும் என்னுடைய உரையைக் கேட்டு எனக்கு உற்சாகத்தைத் தருகின்ற, என்னுடைய குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்டிருக்கிற சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு அவர்களே, என்னுடைய தந்தை மீதும், சகோதரர் மீதும் அன்பும், பாசமும் வைத்திருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய திரு.மாலைராஜா அவர்களே, முன்னிலை வகிக்கின்ற அ.க.மணி அவர்களே.... எனக்கு முன்பாக 33 சதவீதம் போதாது, 50 சதவீதம் எங்களுக்கு வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வண்ணம் பெருந்திரளாக இங்கே கூடியிருக்கின்ற சகோதரிகளே, தாய்மார்களே, தாயினும் மேலாக என் முன்பாக அமர்ந்திருக்கின்ற மூதாட்டிகளே, நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தினால், வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருக்கின்றோம். இருந்தாலும், எப்போதும் அனைவரும் உடன்பிறப்புகள் தான் என்று பேரறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளே, தீப்பந்தங்களைப் போல தமிழகமெங்கும் ஒரு எழுச்சியைத் தளபதியினுடைய பிறந்த நாளில் ஏற்றிக் கொண்டிருக்கின்ற இளைஞர் அணியின் முன்னணி தொண்டர்களே மற்றும் மேடையில் இருக்கின்ற, நான் பெயர் சொல்லாமல் விட்டுவிட்ட யாரேனும் பெருந்தகைகள் இருந்தால் மன்னிக்கவும். உங்கள் அனைவருக்கும், நெல்லைச் சீமையின் பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர் அன்பர்களுக்கும் இந்தப் பின்னிரவு நேரத்தின் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 
	மேடையிலே அமர்ந்திருக்கின்ற கழகத்தின் மூத்த முன்னோடிகள் எல்லாம் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞரின் படையிலே நீண்ட நெடுங்காலமாக அணிவகுத்து கழகத்தின் இன்ப துன்பங்களிலே பங்கெடுத்து, சிறைக்குச் சென்றும், சமயங்களிலே பதவி வகித்தும், இப்படி எல்லா நிலைகளிலும் தோளோடு தோள் நின்ற ஜாம்பவான்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் எல்லோரும் நீச்சல் அடித்துக்கொண்டே அரசியலில் முத்துக் குளிக்கின்ற தியாகசீலர்கள். நானோ என்னுடைய அனுபவமின்மை காரணமாக இப்போதுதான் இந்தத் துறையிலே அடியெடுத்து வைத்திருக்கின்ற ஒரு இளம் பிறை. என்னுடைய அனுபவமின்மையின் காரணமாக, எனக்கு வில்லேற்றவோ, குறிபார்க்கவோ, நாணேற்றவோ தெரியாவிட்டாலும், என்னுடைய அம்பறாத்தூணி என்பது காலியாகவே இருப்பது என்றாலும், என் மேல் கொண்ட பேரன்பின் காரணமாகவும், என்னுடைய தந்தை மேல் கொண்ட அன்பின் காரணமாகவும், இந்த இயக்கத்தின் மீது எங்கள் குடும்பம் வைத்திருக்கின்ற பற்றுக்காகவும் என்னை இங்கே அழைத்து பெருமைப்படுத்தியிருக்கின்றார்கள். ஒருவேளை, கவலைப்படாதே இளம்பிறையே, உன்னுள்ளே தான் பூரண சந்திரன் ஒளிந்திருக்கிறான் என்று என்னை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதற்காக இருக்கலாம். மெத்த மகிழ்ச்சி. நெல்லைச் சீமைக்கு இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நிமித்தமாக நான் வரும்போது எந்த மனோநிலையில் இருந்தேன் என்றால், முதன்முலதாக நிலாவிலே காலடி வைத்திட்ட ஆம்ஸ்ட்ராங் இருந்த மனோநிலையிலேதான் இருந்தேன். ஏனென்றால், ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலே இருந்த விருதுநகர் என்கின்ற அந்த சிறு நகரத்தின் அருகில் இருக்கின்ற மல்லாங்கிணற்றில் பிறந்த பெண் நான். அந்த வழியில் பார்க்கப் போனால், இது எனக்கு ஒரு தாய் வீடு. எனக்கு ஒரு வரலாற்று திருப்புமுனையாக இருந்த ஒரு மிகப்பெரிய அரசியல் மாநாட்டை, அதே நெல்லை சீமைதான் இன்றைக்கு பொதுக்கூட்டத்திற்கு ஒரு முதல் வரவேற்பு கம்பளத்தை அணிவித்து என்னை உங்களிடையே உரையாற்ற நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது. அதற்கு, மேடையிலே இருக்கின்ற மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியின் முன்னணி அமைப்பினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். 
	பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை சென்னையிலே ஒரு பொதுக்கூட்டத்திலே பேசும்போது சொன்னார், "திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அழகான வீணையை போன்றது. அந்த வீணையின் நரம்புகள் அறுந்து விடுமென்று சொல்பவர்கள், உண்மையிலேயே அந்த நரம்பின் வலிமையையும், இசையையும் பற்றி நுகர முடியாதவர்கள்தான், புரிய முடியாதவர்கள்தான்" என்று சொல்லிவிட்டு அவர் மேலும் தொடர்கின்றார், "அந்த அழகான வீணையின் நாதம் கேட்பதற்காக இங்கே கூடியிருக்கின்ற உடன்பிறப்புக்களே, மாற்றுக் கட்சிகளைச் சார்ந்தவர்களே, உங்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். என்னிடத்திலே இருக்கின்ற கனிவின் மொத்த உருவம்தான் தம்பி கருணாநிதி. நான் சோர்வுற்று இருக்கின்ற நேரங்களில் அந்த வீணையிலே தம்பி அழகான மோகன ராகத்தை வாசிப்பான். நான் உற்சாகம் கொண்டு எழுவேன். அந்த மோகன ராகத்தை முகாரி என்று சொல்பவர்கள், நினைப்பவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்" என்று அன்றைக்கு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டிய அந்த ஒப்பற்ற பெருந்தலைவர், நீண்ட நெடுங்காலமாக தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு தியானம் போல வேரூன்றி நிற்பவர், ஒரு யுகத்திற்கான வரலாற்று துன்பங்களைக் குறித்து ஆதாய்ச்சியாளர்கள் ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், நீண்ட நெடிய திராவிட மரபின் ஒரு வரலாற்றுப் படிவமாக, யுகங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கின்ற ஒரே தலைவர், திராவிட இயக்கத்தின் இனமான போராளியாக இன்றளவும் கண்துஞ்சாமல், சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தியாகப் பெருஞ்சுடர், என்னுடைய தலைவருக்கு என்னுடைய முதல் வணக்கத்தை என்னுடைய நெஞ்சிலே நிறுத்துகின்றேன். இந்த நெல்லைச் சீமை என்பது, மிகக் குறிப்பாக நான் இங்கே பேச வருவதற்கு முன்னால் இந்த நெல்லைச் சீமையிலே பேசுகின்ற இந்தப் பொதுக்கூட்டம் என்பது எனக்கு எப்படி எத்தனை விதங்களில் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது என்று எண்ணிப் பார்த்தேன். மூன்று விதங்களில் மிக மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்ணாக இது இருந்திருக்கின்றது. அந்த இளைஞனுக்கு வயது 25. 25 முடிந்து 26ல் காலடி எடுத்து வைக்கும்போது, 1950-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திலே ஒரு பகுதியாக இருக்கின்ற கோவில்பட்டியிலே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுகின்றது. அந்த மாநாட்டை தலைமையேற்கின்ற வாய்ப்பு 25 முடிந்து 26லே அடியெடுத்து வைக்கின்ற அந்த இளைஞனுக்குத் தரப்பட்டிருக்கின்றது. அந்த இளைஞன் வேறு யாருமல்ல. நம்முடைய நாடி நரம்புகளிலும், நெஞ்சத்திலும் நிறைந்திருக்கின்ற நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்தக் கோவில்பட்டி மாநாட்டிலே தான் பங்குபெற்று தலைமையுரை ஆற்றுவது குறித்து அவர் சொல்லுகின்றார். அவருடைய வரியிலேயே உங்களுக்கு நான் சொல்லுகின்றேன். இந்த நெல்லை மாவட்டத்திலே நடைபெறுகின்ற முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலே தலைமையேற்று நான் உரையாற்றுவது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்ற, அதே சமயத்தல் அதிலே இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. அது என்னவென்றால், நம்முடைய கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்கு முன்பாக, அதாவது 1949ஆம் ஆண்டிலே, அந்தத் துவக்க விழாவின்போது, இதே கோவில்பட்டியிலேயே உரையாற்றிய அந்தப் பெருமையையும் நான் அனுபவித்தவன்தான்" என்று சொல்லிவிட்டு, கூடுதலாக இன்றைக்கு தலைமை உரையாற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்கின்றேன் என்று சொன்ன அந்தப் பெருந்தகை, மாநாட்டிலே மிகப்பெரிய எழுச்சியுரையாற்றினார். இன்றைக்கு இந்த இடம் அல்லது இந்த நிகழ்வு நடைபெறுவதற்கான தடங்கல்கள் சில இருந்ததை மேடையில் பேசிய முன்னோடிகள் சிலர் சுட்டிக்காட்டினார்கள். சற்று மேலே விண்ணிலே பாருங்கள், இரவு நேரத்தில் தென்பட வேண்டிய நட்சத்திரங்கள் எதுவுமே தென்படவில்லை. இருக்க வேண்டிய நேரம் இது. ஏன் இல்லையென்றால், எங்கு பார்த்தாலும், உதய சூரியன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பதால். ஆக உதய சூரியன்கள் என்றென்றைக்கும் ஒளிர்ந்து கொண்டிருக்கையில், கண் கிமிட்டுகின்ற நட்சத்திரங்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்படி எத்தனையோ தடங்கல்களைச் சந்தித்திருக்கின்ற இயக்கம்தான் இது. இது இன்றைக்கு சொன்ன வார்த்தை இல்லை. அன்றைய தினம் கோவில்பட்டி மாநாட்டிலே தலைமை உரையாற்ற நேரும்போது, நம்முடைய ஒப்பற்ற தலைவர் அவர்கள் அப்படி சொல்கின்றார். என்ன சொல்கின்றார் தெரியுமா? நம்முடைய இயக்கம் கல்லடியும், சொல்லடியும் பட்ட காலத்திலே கலையாதிருந்த, கரையாதிருந்த இயக்கம். பணக்காரர்கள் என்னும் செல்வாக்கு என்கிற ஈட்டி பாயப்பட்ட நேரத்திலே இறந்து போகாதிருந்த இயக்கம். மகண்டுகள், மடாதிபதிகளின் எதிர்ப்பு, ஜீயர்களின் கொதிப்பு இவற்றில் எல்லாம் மாண்டு போகாதிருந்த இயக்கம். சுயநலமும், தன்னலமும் பெரிது என்கின்றவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்த இயக்கம். பதவி மட்டுமே தேவை என்று சொல்பவர்களுடைய பாசக் கயிற்றிலே இருந்து மீண்டு வந்த இயக்கம். கொள்கைக்காக நீண்ட நெடுங்காலமாக கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த நாகை மணியை, ஆரூர் ராமனை, திருவாரூர் நடராஜனை கொண்டிருந்த இயக்கம். அழகிரியை அணைத்திருந்த இயக்கம். மொழிக்காக உயிர்விட்ட தாளமுத்து நடராஜன் மேற்கொண்டிருந்த இயக்கம். கொள்கைக்காக மரத்திலே உஞ்சலாட்டப்பட்ட உடையார் பாளையம் வேலாயுதங்களைக் கொண்டிருந்த இயக்கம். மதுரை மாநாட்டுப் பந்தல் தீயைக் கண்டு மனம் பதறாத இயக்கம். குடந்தைத் தெருவினிலே குருதி வெள்ளம் பாயும்போது, அதனைக் கண்டு குலை பதறாத இயக்கம். எப்படிப்பட்ட இயக்கம் இது தெரியுமா? ஆரியத்தின் மாயை குறித்து தெளிவாக மக்களுக்கு விளக்கி திராவிட இனம்தான் உயர்ந்தது என்று சொற்போரிலே பாரதியார்களை, சேதுப்பிள்ளைகளை வெற்றி கண்ட இயக்கம். ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் ஆனது ஆகட்டுமே என்று முழங்கி வருகின்ற ஆயிரமாயிரம் பட்டாளத் தம்பிகளைப் பெற்றிருக்கிற இயக்கம். அந்தப் பட்டாளத்துத் தம்பிகளின் உறுதிமிக்க நெஞ்சினை, உறுதியானது தானா எனத் தட்டிப் பார்த்து, அறப் போருக்கு உரிய காலம் வரும் வரைக்கும் காத்திருந்த உலகப் பேரறிஞர்களுள் ஒருவரான பேரறிஞர் அண்ணாவைப் பெற்றிருந்த இயக்கம். குள்ள நரிக் கூட்டங்களின் குடல் கிழிக்கின்ற கூட்டம். புதுமைக் கவிஞர் பாரதிதாசனைப் பெற்றிருக்கிற இயக்கம். ஆரியம் ஒரு மாயை, அது ஆயிரமாயிரம் வடிவிலே நடமாடும் என்பதைக் கண்டுகொண்டு, இலக்கியத் துறையிலே, கலைத் துறையிலே, நாடகத் துறையிலே, திரைத்துறையிலே, ஆரியத்தின் மாயையை அழிப்பதற்காக ஆயிரமாயிரம் அணுகுண்டுகளை உலவ விட்டிருக்கின்ற இயக்கம் என்று முழங்கினார். நினைத்துப் பாருங்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அவர் அப்படிச் சொல்கின்ற அந்த ஒருமையும், அந்த நேர்மையும், அந்தப் பெருமையும் கொண்டிருந்த இயக்கம் நம்முடைய இயக்கம் என்பதை. அந்த இயக்கத்திற்கு, ஆலமரம் போன்ற அந்த ஆலுக்கு விழுது போலவும், இன்றைக்கு மிகப்பெரும் எழுச்சியோடு விளங்குகின்ற ஒரு ஆக்கம் தரும் படை போலவும் இருக்கின்ற நம்முடைய எழுச்சி நாயகன், இளஞ்சூரியன் தளபதிக்கு இன்றைக்குப் பிறந்தநாள். பிறந்த நாளின் நிமித்தமாக ஒரு வாரகாலமாக நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, மிகப்பெரிய ஒரு கொண்டாட்டமும், மனநிறைவோடும் விழாக்களை நடத்துவதாகவும், நெல்லை மாவட்ட இளைஞர் அணியினர் எனக்குத் தெரிவித்தார்கள்.  முதல் சிறப்பை உங்களிடம் சொன்னேன். இரண்டாவது சிறப்பு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் அணியின் அந்த மாநாடு 2007-லே டிசம்பரிலே இங்கே நடைபெற்றபோது, அந்த மாநாட்டிலே என்னுடைய தந்தையின் பற்றுக்கும், என்னுடைய குடும்பத்தின் பெருமைக்கும் மிகமிக அனுபவத்திலே இளையவளாகிய என்னை அழைத்து கொடியேற்றச் செய்து எனக்கு மிகப்பெரிய கௌரவத்தைத் தந்த, தந்தை கலைஞருடைய அறிவுரையின் பேரில், எனக்கு அன்றிலிருந்து இன்று வரை அரசியலிலே எனக்கு ஒரு தடத்தைப் போட்டுத் தந்திருக்கிற தளபதியின் பிறந்த நாளிலே நான் உரையாறுவது என்பது எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி. மூன்றாவது ஒன்றைச் சுட்ட வேண்டும். அது 1982லே, திருச்சியிலே நடைபெற்ற நம்முடைய இயக்கத்தின் பொதுக்குழு. அந்த பொதுக்குழுவிலே மறைந்த என்னுடைய தந்தை தங்கபாண்டியன் ஒரு கருத்தை முன்மொழிகின்றார். அவர் முன்மொழிந்த அந்தக் கருத்து என்னவென்றால், இளைஞரணியின் மாநில அமைப்புச் செயலாளராக நம்முடைய தளபதி அவர்கள் நியமனம் செய்யப்படவேண்டும் என்ற அந்தக் கருத்தை முன்மொழிந்த அந்த தடத்துக்கு சொந்தக்காரர் என்னுடைய தந்தை என்பதால், அவருடைய வார்த்தையிலேயே அவர் பேசியதை இன்று நான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். முன்மொழிந்த என்னுடைய தந்தை சொல்கின்றார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1967க்குப் பிறகு ஏதோ இளைஞர்களுக்கும், கழகத்துக்கும் இடைவெளி ஏற்பட்டதுபோல ஒரு தொய்வான நிலை உண்டாகியிருக்கலாம். அந்தத் தொய்வினை நீக்குவதற்கு இளைஞரணி என்கின்ற அமைப்பு மிக மிக அவசியம். அந்த அமைப்பு மிகத் திறம்பட செயல்பட வேண்டும் என்றாலும், தாய் கழகத்திற்கு மிகுந்த ஒரு முதுகெலும்பைப் போன்று பலமாக அது செயல்படவேண்டும் என்றாலும், அந்த அமைப்புக்கு தலைவராக தம்பி தளபதி அவர்கள்தான் இருக்கவேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்ல, இன்னொன்றையும் அவர் சொல்கின்றார். அவர் அவ்வாறு சுட்டிக்காட்டுகின்ற கருத்து என்ன தெரியுமா? நேருவிற்குப் பிறகு இந்திராகாந்தி, இந்திராகாந்திக்குப் பிறகு அவருடைய மகன் என்கின்ற குற்றச்சாட்டை தளபதியினுடைய விஷயத்திலே வைக்கமுடியாது. அவர், மிசா கால முடிவு வந்தபோது அரைக்கைச்சட்டை அணிந்ததே கிடையாது. முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். அந்தச் சட்டையை கொஞ்சம் இறக்கிவிட்டுப் பார்த்தால், அவர் பெற்றிருக்கின்ற தழும்புகள் தெரியும். அந்தத் தழும்புகளை எண்ணிப்பார்த்து நீங்கள் அவரை இதற்காக நியமனம் செய்யவேண்டும் என்று பேசினார். அந்த தந்தையின் மகளாக, தளபதியின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி விழாவாக நடத்தப்படுகின்ற இந்த விழாவினில் பங்குபெறுவது என்பது எனக்கு இன்னுமொரு மகிழ்ச்சி. ஆக, இத்தனை பெருமிதத்தோடு இன்றைக்கு உங்கள் முன்னால் நிற்கின்ற நான் ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன். 
தளபதி என்கின்ற சொல் இன்றைக்கு தமிழகத்திலே இருக்கின்ற ஆயிரமாயிரம் இளைஞர்களின் உதட்டிலே, நெஞ்சிலே புகுந்து அவர்களுடைய உணர்வைத் தட்டி எழுப்புகின்ற மந்திரச் சொல்லாக இருக்கின்றது. தளபதி என்பவர் யார்? நான்கு வகைப் படைகளையும் கண்காணிப்பவராக, அதோடு மட்டுமல்லாது, அன்னியர்களுடைய ஊடுருவலையும், கலகம் செய்பவர்களையும் காலாக்கிரகத்திற்கு அனுப்புபவராக, அரசுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற பிரச்னைகளை முறியடிப்பவராக, நாட்டிலே குழப்பம் ஏற்படுத்துபவர்களிடையே சமரசம் பேசி குழப்பத்தை நீக்குபவர்களாக, பகைவர்கள் படையெடுத்து வரும்போது தன்னுடைய அணி, தன்னுடைய படையை ஒரே இலக்கை நோககிச் செலுத்துமாறு திரட்டி, தலைவருடைய அறிவுரைப்படி, ஆணைப்படி, வியூகம் அமைத்து, களத்திற்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டி, தான் வகிக்கின்ற அந்த பதவிக்கு யார் பெருமை சேர்க்கிறாரோ அவர்தான் தளபதி, என்று இலக்கணம் சொல்கின்றது. இதற்கு சற்றும் விலகாமல் முற்றிலுமாகப் பொருந்துகின்ற ஒரே பெருமையுடையவர் நம்முடைய தளபதிதான். பேரறிஞர் அன்னா குறித்து திராவிட நாடு பத்திரிகையிலே தந்தை பெரியார் சொல்வதாக பேராசிரியர் சுட்டிக்காட்டுவார். பேரறிஞர் அண்ணா தளபதி என்று அழைக்கப்பட்டார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் குறித்து அன்று திராவிட நாடு பத்திரிகையிலே சொன்னதை திருவாரூர் பத்திரிகையிலே பேராசிரியர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். புன்முறுவல் பூத்த முகம், எளிமையான உடை, விரைவான நடை, இந்த வர்ணனைக்கு சொந்தக்காரர், இன்றைக்கு தமிழகத்திலுள்ள அனைவர் மனதிலும் புகுந்து குடிகொண்டுவிட்டார். மாற்றுக் கட்சியினருக்கு அவர் தோழர். தன்னுடைய கட்சி நண்பர்களுக்கு அவர் தளபதி என்று சொன்னார். அன்றைக்கு பேரறிஞர் அண்ணாவிற்குச் சொல்லப்பட்ட அத்தனை இலக்கணமும் அணு பிசகாமல் பொருந்துகின்ற ஒரே இளைய தலைவர் நம்முடைய எழுச்சிக்குக் காரணமாக இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற தளபதி அவர்கள்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேடோ என்ற அந்த வரிசையிலே நாம் எப்பொழுதும் வைத்துப் பார்ப்பது பெரியார், பேரறிஞர், நம்முடைய ஒப்பற்ற ஒரே தலைவர் கலைஞர் அவர்களைத்தான். இந்த முன்னுரைகளின் நீட்சியாக, மிகக் குறிப்பாக, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் நீட்சியாக, தளபதி எப்படி பணியாற்றுகின்றார்? உங்களிடம் சில எடுத்துக்காட்டுகளோடு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தந்தை பெரியாருடைய அத்தனை கனவுகளையும், பேரறிஞர் அண்ணாவுடைய அத்தனை எண்ணங்களையும் தன்னுடைய இலக்கியத் துறையில், பேனா முனையிலும் தன்னுடைய அரசுத் துறையின் உத்தரவுகள் வாயிலாகவும் நிறைவேற்றியவர், நிறைவேற்றிக்கொண்டிருப்பவர், இனியும் நிறைவேற்றுபவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் மட்டுமே. ஆனால், கலைஞருடைய நீட்சியாக அவர் முன்னெடுத்த பணிகளை இவர் எப்படி கொண்டு செல்கிறார் என்பதையும் சற்று பார்ப்போம். தந்தை பெரியாருடைய மிகப்பெரிய இலட்சியமாக அவர் அறிவித்தது, 1929ம் ஆண்டிலே செங்கல்பட்டிலே நடைபெற்ற பெண்களுக்கான முதல் மாநாட்டிலே ஏகப்பட்ட தீர்மானங்களை தன்னுடைய கனவுகளாக அவர் முன்மொழிந்தார். அதிலே பெரும்பாலானவை பெண்கள் குறித்ததுதான். இன்றைக்கு பெரும்பாலான எண்ணிக்கையிலே நீங்கள் குழுமியிருக்கிறீர்கள். நீங்கள் சற்று கவனமாகக் கேட்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் உங்களுடைய இல்லங்களைவிட்டு, உங்களுடைய குடும்பப் பொறுப்பினைவிட்டு, கைக்குழந்தையோடு சற்றே பசியோடு இங்கே இருப்பது உங்களுக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும் என்றாலும், உங்களுக்காக ஒரு மூத்த தலைவரும், உங்களுக்காக ஒரு இளைய தலைவரும் எப்படிப் பாடுபடுகிறார்கள், எப்படி சுற்றிச் சுழன்று திரிந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். நாளை உங்களுடைய சந்ததியினருக்கு நீங்கள் அதைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதனை சுட்டிக்காட்டுகின்றேன். தந்தை பெரியார் சொல்வார், ஆரம்ப காலக் கல்வி என்று சொல்லப்படுகின்ற ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு புத்தகம், உடை, உணவு வழங்கப்படவேண்டும் என்று. அதோடு மட்டுமல்ல, ஆரம்ப காலக் கல்வியைக் கற்றுத் தருபவர்கள் பெண் ஆசிரியர்களாகவே இருக்கவேண்டும் என்கின்ற கனவை அவர் வைத்திருந்தார். அதை நிறைவேற்றியவர் யார்? நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள்தான். பெண்களுக்கு அதுமட்டுமல்ல, இன்றைக்கு பட்டப்படிப்பு வரை இலவசக்கல்வி, பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காக சைக்கிள் என்று சொல்லப்படுகின்ற இரு சக்கர வண்டி, பெண் பிள்ளைகள் திருமணமாகி கருவுற்று ஒருவேளை கணவனோடு சேர்ந்து வாழ முடியாத நிர்ப்பந்தத்தில் உதவித்தொகை பெற்று, அல்லது அவர்கள் தன்னந்தனியராக இருக்க நேர்ந்தால், அதற்கும் உதவித்தொகை பெற்று, வயதான காலத்தில்கூட அவர்கள் வாழ்வதற்கு அத்தனை திட்டங்களையும் தீட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் என்றால், தளபதி அதனுடைய நீட்சியாக, ஒரு புலிப் பாய்ச்சலைப் போல, மகளிர் சுய உதவிக் குழுக்களை இன்றைக்கு தமிழகம் எங்கும் தன்னுடைய கைகளிலே எடுத்துச் சென்றிருக்கின்றார்.
முதன்முதலாக தர்மபுரியிலே துவக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இன்றைக்கு பெண்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்குவதற்கு ஒரு சக்கரமாக இருக்கின்ற நிகழ்ச்சிகளை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சுற்றிச் சுழன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக அவர் கொடுத்திருக்கின்ற நிதி மட்டும் எவ்வளவு தெரியுமா? மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஒரே இடத்திலே உட்கார்ந்து இருப்பது நமக்கு பிரச்சினையாக இருக்கும்போது, கடந்த 9.12.2009 வரை, 68 மணி நேரம் நம்முடைய தளபதி அவர்கள் நின்றுகொண்டே 1,44,215 மகளிருக்கு 748 கோடியே 24 லட்ச ரூபாய் சுழல் நிதியை உதவியாக வழங்கியிருக்கின்றார். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும்? தான் செய்கின்ற பணிகள், தன்னைச் சுற்றி இருக்கின்றவர்கள் செய்கின்ற பணிகளைக் காட்டிலும் கூடுதல் சிறப்புடனும் அதீத கவனத்துடனும் செய்கின்றவர்களே அதீத வெற்றியாளர்கள் என்று கருதப்படுகின்ற அந்த வெற்றி இடத்தை அடைகின்றார்கள். அப்படிப்பட்ட தலைமைப் பண்புக்கு சொந்தக்காரரான நம்முடைய தலைவர் பெற்றெடுத்த அந்த அருந்தவப் புதல்வர் தலைமைப் பண்புக்கு மட்டுமே உரிய இருப்பிடமும் இலக்கணமும் அல்ல. மனித நேயத்துக்கும் அவர் சொந்தக்காரர். மிகப்பெரிய பேச்சாளராக நீங்கள் இருக்கலாம். வின்ஸ்டன் சர்ச்சிலை நாம் அனைவரும் அறிவோம். உலகமே அவரை தலைசிறந்த பேச்சாளர் என்று கொண்டாடுகிறது. அதே வின்ஸ்டன் சர்ச்சில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஈராக்கிலே முன்னொருமுறை போர் நடக்கின்றபோது ஒரு வாசகத்தைச் சொன்னார். அதாவது, ஆதி குடிகள் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் மீது குண்டு போடுவது தப்பே கிடையாது. எப்படிப்பட்ட குண்டுகளை நீங்கள் போடவேண்டும்? இறக்கும்படி செய்கின்ற குண்டுகளை நீங்கள் போடக்கூடாது, மூச்சுத்திணறல் வரும்படி செய்கின்ற குண்டுகளை நீங்கள் போடுவதில் தவறே கிடையாது. எவ்வளவு பெரிய பேச்சாளராக நீங்கள் இருந்தாலும் என்ன? மனித நேயம் என்கின்ற ஒன்று இல்லையென்றால், அந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்? ஒரு லட்சிய வீரனின் ரத்தம் என்பது ஆயிரம் எழுத்தாளர்களின் பேனாவைவிட மிக வலிமையானது என்பதை மிக நன்றாக உணர்ந்தவர்தான் நம்முடைய தளபதி. ஆக, இத்தனை மணி நேரம் மேடையிலே நின்று சுழல் நிதியைக் கொடுத்துவிட்டு கீழே இறங்குகின்றார், தேசிய சீதமும் பாடியாகிவிட்டது. நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. கீழே இறங்கிய பிறகு பார்க்கின்றார், இன்னும் 75 மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல் நிதியை வாங்குவதற்காகக் காத்திருக்கிறார்கள். தளபதி அவர்களிடம் புன்னகையோடு, மிகவும் கரிசனத்தோடு, என்ன விஷயம் என்று கேட்கும்போது, உங்களுடைய பொற்கரங்களால் மட்டுமே நாங்கள் இந்த நிதியை பெறுவோம் என்கிறார்கள். அரசு அதிகாரிகள் தயங்குகிறார்கள். விழா நிறைவு பெற்றுவிட்டதே, தேசிய கீதமும் பாடியாகிவிட்டதே என்று. மரபுகளைப் பார்க்கவில்லை. மனித நேயத்தை மட்டுமே அந்த இளைய தலைவர் பார்க்கின்றார். மறுபடியும் மேடைக்கு ஏறிச்சென்று, கீழே இருந்த அத்தனை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் தன்னுடைய கையாலே நிதியை வழங்கிச் செல்கின்றார். ஆக, பெரியார், பேரறிஞர், கலைஞர் என்பதன் நீட்சியாக இங்கே பெண்களுக்கான விஷயத்தை முன்னெடுப்பதிலே முதல் இடத்திலே இருப்பவர் நம்முடைய தளபதியார். இன்னும் சொல்லப்போனால், தந்தை பெரியாருடைய ஒரு முள்ளாக இறதி வரை அவரை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம், அனைத்து சாதியனிரும் அர்ச்சகராகலாம் என்ற அந்த விஷயம்தான். பெரியார் கடைசியாகப் பேசிய தி.நகர் பிட்டி.தியாகராயர் கூட்டத்திலேகூட சொல்லியிருப்பார்.  என்னுடைய நெஞ்சிலே மிகவும் உறுத்திக்கொண்டிருக்கின்ற முள்ளாக இருப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்கின்ற அந்த விஷயம்தான் என்று. அந்த முள்ளை எடுத்து, நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை நமக்குத் தந்தார். நாடே கொண்டாடியது. நாம் அனைவரும் பெருமிதம் கொண்டோம். அதனுடைய நிட்சியாக, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்கின்ற மிக முக்கியமான ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தார். அந்த அருந்ததிய இனத்துப் பெண் ஒருவர் நம்முடைய தளபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். இந்த உள் ஒதுக்கீட்டிலே பேராசிரியராகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று. எத்தனையோ கடிதங்கள் தலைமையிடத்திலே இருப்பவர்களுக்கு நாள்தோறும் அனுப்பப்படுகின்றன. எத்தனையோ நிர்வாக அலுவல்களுக்கு இடையே தொலைந்து போகின்ற வாய்ப்பும் அப்படிப்பட்ட கடிதங்களுக்கு உண்டு. ஆனால், ஒரு அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கான உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு எழுதிய கடிதத்திற்கு உடனடியாக அவளுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பினை பெற்றுத் தருகின்றார். இப்பொழுது சொல்லுங்கள், பெரியார், பேரறிஞர், கலைஞர் என்பதன் நீட்சியாக அங்கே நிற்பவர் நம்முடைய தளபதி இல்லையா? அதுமட்டுமல்ல. ஒரு தலைவன் என்பவன் பிறரால் விரும்பப்படுபவன் என்பதற்காக மட்டுமே தலைவனாக இருப்பதில்லை. பிறரால் விரும்பப்படுதல் என்பதைப் பற்றியது அல்ல தலைமை என்பது. சரியாக செயல்படுவது என்பதைப் பற்றித்தான் தலைமை என்பது. பிறரால் விரும்பப்படுவது முக்கியமில்லை என்றாலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுவது மட்டுமல்லாது, தனக்கு சரியானது எது? மக்களுக்கு சரியானது எது? என்பதையும் தேர்வு செய்கின்ற ஒரு இளைய தலைவராக அவர் இருக்கின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரை ஒன்றை மதிப்பிற்குரிய, நான் பெரிதும் நேசிக்கின்ற பிடல் காஸ்ட்ரோ - "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்கின்ற அந்தப் புகழுரையிலே சொல்லியிருப்பார். அந்தப் புகழுரையை அவர் ஆற்றியபோது, அத்தனை பக்கங்களிலும் அவர் உச்சரித்திருந்த ஒரே சொல் மக்கள், மக்கள், மக்கள் என்பதுதான். மக்கள் ஒன்றைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத அந்த மாபெரும் தலைவனைப் போல, மக்கள் என்றால், இளைஞர்கள், முதியவர்கள், மிகக் குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற, ஊரகப்புறத்தைச் சார்ந்த அந்த இளம் மாணவ, மாணவிகள் என்பதை கருத்திலேகொண்டு பணியாற்றுகிறவர் தளபதி என்பதால்தான் அவருடைய பிறந்தநாளை நாம் இளைஞர் எழுச்சி நாளாக இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். பூமியிலே பிறந்த அனைவருக்கும் பிறந்த நாட்கள் வருவதுண்டு ஆண்டின் ஏதாவதொரு நல்ல தினத்தில். ஆனால், அவையெல்லாம் அர்த்தமுள்ள பிறந்த நாட்கள் ஆகின்றனவா? குழந்தைப் பருவம், பகுத்தறிவின் உறக்க நிலை என்கின்றான் வால்டேர் என்கின்ற சிந்தனையாளர். அந்த உரக்க நிலைப் பருவம் கடந்து, வளந்து, பலதுறை கல்வியைக் கற்று, சிறந்து விளங்குவதோடு மட்டுமல்ல, தனக்குள்ளே உற்று நோக்கி, தான் சார்ந்த சமூகத்திற்கும், தனக்கும் உரியது எது, சரியானது எது என்று தெளிவாகத் தீர்மானித்து, பகுத்து அறிந்து, சமூகத்திற்குப் பயன்படுகின்ற விஷயங்களை முன்னெடுத்துச் செல்கின்றவரின் பிறந்த நாளே அனைவரும் கொண்டாடுகின்ற பிறந்த நாளாக இருக்கமுடியும். அப்படிப் பார்க்கும்போது, இளைஞர்களுக்கு, அதிலும் குறிப்பாக, மாணவ மாணவியர்களுக்கு ஒரு எழுச்சியை ஊட்டுகின்ற விதமாக தன்னுடைய பிறந்த தினம் அமையவேண்டும் என்பதிலே இரண்டு விதமான கருத்துக்கு தளபதியிடம் இடமில்லை. ஒரு மாணவி, அவளுடைய பெயர் கீதா. ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர். தன்னுடைய கல்லூரியிலேயே இரண்டாவது ஆண்டு படிக்கும்போது முதலாவதாகத் தேறுகின்றார். மூன்றாவது ஆண்டு கல்லூரி இறுதிக் கட்டணம் ரூபாய் 22000 செலுத்துவதற்கு மாணவியிடம் பணம் இல்லை. அந்தப் பணத்தை செலுத்துவதற்கு அவளுடைய சின்னம்மாவினுடைய தாலி அடகு வைக்கப்படுகின்றது. அவள் கடிதம் எழுதுகின்றாள், தன்னுடைய நிலைமை குறித்து தளபதி அவர்களுக்கு. அவருடைய கருணைக் கண்களுக்கு அந்தக் கடிதம் பட்டு, அவர் அந்தப் பணத்தை இளைஞர் அணியின் மூலமாக செலுத்துவதோடு மட்டுமல்ல, சின்னம்மாவின் அடகு வைக்கப்பட்ட அந்தத் தாலியையும் மீட்டுக் கொடுக்கின்றார். இப்பொழுது சொல்லுங்கள், பெரியார், பேரறிஞர், நம்முடைய ஒப்பற்ற ஒரே தலைவர் கலைஞர், இவருடைய நீட்சியாக வேறு யார் இருக்கமுடியும் என்று சொல்லுங்கள். நாமக்கல் பகுதியைச் சார்ந்த சுடலைமணி என்கின்ற ஒரு சிறுவன். அவனுக்கு டாக்டருக்கு படிக்கவேண்டும் என்பதுதான் லட்சியக் கனவு. தன்னுடைய கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுகின்றான். அந்தக் கடிதத்திலே சொல்கின்றான், எனக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், அந்தத் தேர்விற்கான சிறப்புப் பயிற்சி பெறுகின்ற அளவிற்கு எனக்கு வசதியில்லை. நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டு ஒரு கடிதம் எழுதுகின்றான். உடனடியாக, அந்த மாணவனுடைய பள்ளிச் செலவை ஏற்றுக்கொள்வதோடு, அவன் அனைத்து பாடங்களிலும் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக உதவி அளிக்கப்படுகின்றது. இப்பொழுது சொல்லுங்கள், தந்தை பெரியார், பேரறிஞர், தலைவர் கலைஞர் என்பதன் நீட்சியாக என்றைக்கும் ஒரு எரிமலையைப் போன்று உள்ள உறுதியும், அதே சமயத்தில் புன்னகையுடன் தமிழகத்து மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் உலா வருகின்ற நம்முடைய தளபதி நீட்சியாக இருக்கின்றாரா? இல்லையா? என்று இப்பொழுது சொல்லுங்கள். அவருடைய அந்த வாழ்க்கைச் சரித்திரம் குறித்து எழுதப்பட்ட புத்தகம் குறித்து இங்கே பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். அந்த புத்தகத்திலோ, ஓரிடத்திலே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டி சொல்லியிருக்கின்ற கருத்து ஒன்று உண்டு. அவர் சொல்வார், நான் தளபதியை அரசியலுக்கு அழைத்து வரவில்லை. தளபதியை அரசியலுக்கு அழைத்து வந்தது இந்திராகாந்தி அம்மையார்தான். மிசா என்கின்ற ஒன்றுதான் தளபதியை அரசியலுக்கு அழைத்து வந்தது என்று சுட்டிக்காட்டியதைச் சொல்லிவிட்டு, புத்தக ஆசிரியர் சோலை ஒரு கருத்தைச் சொல்லுவார், மிசாவிலே கைது செய்யப்பட்டபோது அவர் ஒரு அடிப்படைத் தொண்டன். கைலாசம் கமிஷன் விசாரணையின் சட்ட நகலை கொளுத்தியபோது அவர் ஒரு பொதுக்குழு உறுப்பினர். பின்னர் குடிநீர்ப் பிரச்சினைக்காக மறியல் செய்து வேலூர் சிறையிலே அடைக்கப்பட்டபோது அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்லிவிட்டு, எதுவும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து நம்முடைய தளபதிக்கு கொடுக்கப்படவில்லை. அடிப்படையில் இருந்து அவர் ஒரு தொண்டராக, அடிமட்ட நிலையிலிருந்து நேராக சட்டமன்ற உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக அதற்குப் பின்பு துணை பொதுச் செயலாளராக, பொருளாளராக படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஐனேயைn நுஒயீசநளள ஏட்டிற்கு கொடுத்த ஒரு செய்தியையும் அந்தப் புத்தகத்திலே சொல்லியிருப்பார். நம்முடைய தலைவர் சொல்கின்றார், ஒரு தந்தை என்கின்ற முறையில் நான் ஸ்டாலினுக்கு எந்தவிதமான கடமையையும் ஆற்றவில்லை. ஆனால், ஒரு மகன் என்ற முறையில் அவன் செய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் சரிவர செய்திருக்கின்றார். இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன், என்று அந்த நாளிதழிலே நம்முடைய தலைவர் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார். முன்னொரு நாளில், இளங்கோவடிகளுக்கு விழா எடுத்தபோது, அந்த விழா குறித்து, நம்முடைய ஒப்பற்ற தலைவர் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். எதற்காக இத்தகைய விழாக்கள் எடுக்கப்படுகின்றன? தமிழன் உயர்கின்றான், தமிழனுடைய பண்பாடு உயர்கின்றது, தமிழனுடைய தன்மானம் உயர்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் ஆண்டவர்களைக் குறித்து, ஆள்பவர்களாகிய நாங்கள் எடுக்கின்றோம். முன்னொரு காலத்தில் நாட்டை ஆண்டவர்களைக் குறித்து மக்கள் மனதில் இன்றைக்கு ஆள்பவர்களாகிய நாங்கள் விhh எடுக்கிறோம் என்று சொல்வார். அதைப் போலத்தான், மக்கள் மனதிலே ஆழ்ந்தவரான, அவருடைய பிறந்த நாளான இன்றைய தினத்தை நாம் மிக அருமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னொன்றையும் நாம் இங்கே சொல்லவேண்டும். ஒரு அருமையான கிரேக்க வாசகம் உண்டு. அதாவது, கிரேக்கத்தின் மீது படையெடுத்து, பாரசீக ஏகாதிபத்யம் ஒரு ஆதிக்க மனப்பான்மையோடு போர் தொடுக்கின்றது. அந்தப் போரிலே கிரேக்க வீரர்கள் இறந்து வீழ்கின்றார்கள். அவர்கள் இறந்த அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படுகின்றது. அந்த நினைவுச் சின்னத்திலே பொறிக்கப்பட்ட வாசகங்கள் என்ன தெரியுமா? இவ்வழி செல்லும் மக்காள், நீவிர் ஸ்வாத்தாஸ் சென்று பகர்வீர், நாங்கள் பணி முடித்து படுத்தோம், என்று. புகழ் பெற்ற வாசகமாக இந்த வாசகத்தை இளைஞரணின் துவக்கத்தின் பொழுது, தனக்கு எப்பொதும் இந்த வாசகங்கள் உத்வேகமாக இருந்தன என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமல்ல, நான் கொடியை ஏற்றிவைத்த பொழுது என்னுடைய உரையை தயார் செய்தபோது, தளபதியினுடைய சேலம் மாநாட்டில், 2004ம் ஆண்டு அவர் கொடியேற்றி ஆற்றிய உரையை படிக்க நேர்ந்தது. எனக்குத் தெரிந்து, முதன்முதலாக ஒரு கருத்தை அவர் அந்த உரையிலே சுட்டிக்காட்டி இருப்பார். என்ன தெரியுமா அது? இன்றைய இயக்கத் தோழர்கள் அனைவரும் கண்டிப்பாக பொக்கிஷமாக இரு வர்ணக் கொடியை அவரவர் இல்லத்திலே ஏற்றி வைக்கவேண்டும் என்று நான் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்ல, இன்றைய இயக்கத் தோழர்கள் அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களில், கார், சைக்கிள் எதுவாக இருந்தாலும் அவர்கள் அந்த இரு வர்ணக் கொடியை பறக்கவிட வேண்டும் என்ற வேண்டுகோளை அன்றைக்கு முன்வைத்தவர் நம்முடைய தளபதி அவர்கள்தான். அடிப்படை உறுப்பினராக இருந்து, தொண்டுள்ளத்தோடு படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு ஒரு லட்சிய வீரராக, இளைய தலைவராக உயர்ந்திருக்கிற இவரிடத்திலே இந்த இளைய சமுதாயம், மிகக் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கின்ற, இது குறித்து, நம்முடைய கலைஞர் அவர்களே அவருடைய வார்த்தையிலே பதிவு செய்திருப்பார். ஒரு முறை சிறு குழந்தையாக இருந்தபொழுது ஒரு ஊக்கை நம்முடைய தளபதி அவர்கள் விழுங்கிவிட்டாராம். சீரணம்வாயல் என்ற இடத்திலே நாங்கள் குடியிருந்தபொழுது அந்த நிகழ்வு நடந்தது. அப்பொழுது மேம்பாலங்கள் இல்லாததால் மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்வதற்கு சற்று நேரம் ஆகிவிட்டது. நாங்கள் அனைவரும் பதைபதைத்துப் போனோம். அப்பொழுது மேம்பாலங்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெகு சீக்கிரம் நாங்கள் அந்தக் குழந்தையை கொண்டு சென்றிருப்போம் என்று சொல்லிவிட்டு தலைவர் கலைஞர் சொல்கின்றார், எனக்கு இப்பொழுதுதான் தெரிகின்றது, அவன் ஊக்கை விழுங்கவில்லை, ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான் என்று சொல்லிவிட்டு, அவருடைய பொறுமைக்கம், நிதானத்திற்கும் அந்தப் பொறுமையும், நிதானமும் அவரை சென்னைக்கு மேயராக்கி, உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி, இன்னும் என்னென்னவோ ஆக்கப்போகின்றது என்று அவர் வாயாலேயே அந்த நிகழ்ச்சியிலே பதிவு செய்திருப்பார். அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரரான நம்முடைய தளபதி குறித்து இன்னும் இரண்டு விஷயங்களை உங்கள் முன்னால் வைக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 1996லேதான், நம்முடைய கழகம் ஆட்சிக்கு வந்தபோது முறையாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பின்பாக, 2001லே நடந்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மேயர், 44 வயதிலே 44வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நம்முடைய தளபதி அவர்கள்தான். ஆக, ஒரு மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, இத்தனை தளத்திலும் தன்னுடைய அனுபவத்தின், பணியின் அத்தனை வலிமையும் உள்வாங்கிக் கொண்டுதான் இன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து, மாண்புமிகு துணை முதலமைச்சர் என்கின்ற அந்த பெருமைமிகு பீடத்தை எட்டியிருக்கின்றார். வால்ட் பிட்மனுடைய ஆங்கிலக் கவிதை ஒன்று சொல்லும், இளைஞர்களே, நீங்கள் யாருக்கும் தலை வணங்காதீர்கள், நிமிர்ந்து நடங்கள், கைவீசி நடங்கள், உலகைக் காதலியுங்கள், உள்ளத்தை நம்புங்கள். நீங்கள் மதவெறியர்களை, வரியவர்களை வெறுத்து ஒதுக்குகின்ற செல்வந்தர்களை கிள்ளி எரியுங்கள். மனசாட்சி ஒன்றையே தெய்வமாக மதியுங்கள். உலகம் உங்களை நேசிக்கும். நீங்கள் எவருக்கும் பயப்படாமல் உங்களுடைய மனசாட்சியின் குரல் கொண்டு சிந்தித்துச் செயல்படுங்கள், செயலாற்றுங்கள் என்று. இந்த வாசகத்தை தன்னுடைய அனைத்து செயல்களிலும், அனைத்து சிந்தனைகளிலும் ஒருங்கே இணைத்துக்கொண்டு, இன்றைக்கு இளைஞர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும், அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் ஒரு பாலமாக, தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய தளபதி. ஓய்விற்காக கொடநாடு செல்பவர்களைப்பற்றி நம்முடைய மாவட்டச் செயலாளர் அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். தளபதி ஓய்வெடுக்கின்ற இடங்கள் எதுவெல்லாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேம்பாலங்களும், மாநகராட்சிப் பூங்காக்களும்தான் அவர் ஓய்வெடுக்கின்ற இடங்கள். காலை நேரங்களிலே, அதையும் ஒரு பணி நிமித்தமாக தன்னுடைய அதிகாலை நடைப்பயிற்சியோடு இணைத்துக்கொண்டு அந்தச் சந்தர்ப்பத்தை மட்டுமே ஓய்வு என்கின்ற ஒன்றிற்காக, பணியோடு இணைத்துக்கொண்டு செயலாற்றுவதுதான் அவருடைய செயல்பாடு. சென்றமுறை சிங்கப்பூருக்கு சென்று வந்தபோது டீசூலுஓ என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனத்தின் கட்டமைப்போடு சென்னை மாநகரத்தையே தூய்மைப்படுத்துகின்ற ஒரு பணியை தொடங்கிவைத்தார். இந்த முறை சென்று வந்தபோது, கூவம் என்று சொல்லப்படுகின்ற, சென்னை மாநகரத்தின் அடையாளம் என்று சொல்லப்படுகின்ற அந்த கூவத்தைச் சுத்தப்படுத்துகின்ற அந்தத் திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றார். இத்தனைக்கும் ஒரு ஆதார ஸ்ருதியாக, ஒரு உத்வேகமாக, நல்லதொரு தகப்பனாக மட்டுமல்ல, நம்முடைய அனைவருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவராக விளங்கிக்கொண்டிருக்கிற நம்முடைய தலைவர் அவர்கள் 13ம் தேதி அன்று திறக்கப்படும் அந்தக் கட்டிடம் குறித்து நேற்றைய தினம் செய்தித்தாள்களிலே சொல்லியிருக்கின்றார். திராவிட கட்டிடக் கலையின் பாரம்பரியத்தின் சின்னமாக இன்றைக்கு சென்னையிலே இந்த அரசுச் செயலகம் அமைக்கப்படுகின்றது, எழுப்பப்படுகின்றது. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்காக பூம்புகாரிலே ஒரு கலைக்கூடம் எடுத்தவர்தான் அவர். நம்முடைய பொக்கிஷமான வள்ளுவப் பெருந்தகைக்காக கன்னியாகுமரியிலே இன்றைக்கும் வானளாவ உயர்ந்திருக்கின்ற சிலையை நாம் அனைவரும் அறிவோம். உலகம் முழுமைக்கும் நம்முடைய தமிழர் பண்பாடு, வரலாற்றை பறைசாற்றுகின்ற விதமாக பல வரலாற்று நினைவுச் சின்னங்களை எழுப்புகின்ற தலைவருடைய செம்மொழி மாநாட்டுப் பணி குறித்து, இன்றைக்கு நடக்கின்ற அத்தனை கூட்டங்களிலும் அது குறித்து தன்னுடைய கருத்துக்களைச் சொல்லி உழைத்துக் கொண்டிருக்கிறார். தளபதி அவர்களுடைய பேட்டி குறித்த இரண்டு விஷயங்களோடு என்னுடைய உரையை நான் நிறைவு செய்யலாம் என்று நினைக்கின்றேன். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. நீங்கள் பயப்படும் விஷயம் என்ன? என்று. நான் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் பயப்பட வேண்டியது மக்களுக்குத்தான். இதற்கு அச்சம் என்று அர்த்தமல்ல. பொறுப்புணர்ச்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றார். இன்னொன்று, நீங்கள் பொக்கிஷமாகக் கருதி பாதுகாக்கும் விஷயம் எது என்று கேட்கப்படுகின்றது. மிசா கால சிறைவாசத்தின்போது, எனக்கு நம்பிக்கை டானிக்காக அமைந்த கடிதங்கள்தான். இன்றைக்கு வரைக்கும் வைத்திருக்கின்றேன். அந்தக் காகிதங்களின் நிறம் மாறியிருக்கலாம். அது விதைத்த போர்க்குணம் மாறவில்லை என்று சொல்கின்றார். உங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது என்ற கேள்விக்கு, பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, தலைவர் கலைஞரின் வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற அந்தப் பொன்மொழியைச் சொல்கின்றார். உங்களுக்கு கோபம் அதிகமானால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறத. மனித உறவுகளில் மிகவும் நம்பிக்கை கொண்டவர் நம்முடைய தளபதி அவர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, சுனாமி நிதியாக இருந்தாலும் சரி, அல்லது இப்போது திறக்கப்படவுள்ள அந்த அமைச்சகக் கட்டிடத்தின் அழைப்பிதழாக இருந்தாலும் சரி, தானே நேரில் கொண்டு சேர்க்கின்ற அந்த மனோதிடமும், சித்தமும் உடையவர். கோபம் அதிகமானால் வெளிப்படுத்திவிடுவதுதான் மனித இயல்பு. என்னிடமிருந்தும் வெளிப்படும். நமக்கு விருப்பமில்லாத செயலை ஒருவர் திரும்ப செய்கிறபோதுதான் கோபம் அதிகமாகிறது. என்னைப் பொறத்தவரை, தனிப்பட்ட நபர் மீதான கோபத்தைவிட சமூக நீதிக்காக கோபம் அதிகமாக வேண்டும். அதுதான் நல்ல பலனைத் தரும் என்கின்றார். சமூக நீதியும், இனமான போராளி என்கின்ற அந்த அடையாளமும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு இளைஞனுக்கும் மிக மிக முக்கியமான விஷயம் என்றாலும், ஒரு தலைமைப் பண்பிலே தலைசிறந்தவராக விளங்குகின்ற ஒரு இளைய தலைவர் இன்றைக்கும், அதனையே தன்னுடைய சிறந்த குணமாகவும், அதனையே தனது மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு பண்பாகவும் கருதுவது என்பது அவருடைய எளிமையையும், வெகுஜன மக்களிடத்திலே அவர் வைத்திருக்கின்ற நம்பிக்கையும், பாசத்தையும் வெளிப்படுத்துகின்றது. நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில், உங்களுக்கான நலத் திட்ட உதவிகளை வாங்குவதற்கு வரிசையிலே நிற்கின்றீர்கள். ஒரு காலத்திலும் நம்முடைய தளபதி அவர்கள் இப்படி அவசரப்படுவதே கிடையாது. வரவேற்பறையிலே எத்தனை பேர் அவரைப் பார்ப்பதற்காக காத்திருந்தாலும், பொறுமையோடு இருந்து அத்தனை பேரையும் பேசி வழியனுப்பி விட்டுத்தான், தான் உணவு அருந்தவோ, தன்னுடைய அலுவலகக் கடமையை செய்வதற்கோ செல்வார். இது எப்படி என்றால், இந்தப் பண்பு எதனை ஒத்திருக்கிறது என்றால், மாவீரன் லெனினை ஒருமுறை ஒருவர் பார்க்கச் சென்றாராம். லெனின் சொன்னாராம், சற்று பொறுங்கள், நான் மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று. பார்க்கச் சென்றவர் யார் தெரியுமா? மேக்ஸிம் கார்கி, மிக பெரிய வரலாற்றுப் புகழ் வாய்ந்த எழுத்தாளர். அவரைக் காக்க வைத்துவிட்டு லெனின் எழுதிய கடிதம் என்ன தெரியுமா? தன்னுடைய கட்சியிலே மனம் சோர்ந்திருந்த ஒரு தொண்டருக்கு ஆறுதலும், உற்சாகமும் ஊட்டி அவர் எழுதியிருந்த கடிதம் தான். அப்படிப்பட்ட எண்ணற்ற கடிதங்களை எழுதுகின்ற நம்முடைய தலைவர் அவர்களுடைய தவப்புதல்வரும் அப்படித்தான். ஒரு தொண்டனுக்கான ஒரு நிமிடத்தை அவர் என்றைக்குமே கொடுக்கத் தவறியதேயில்லை. அவருடைய பிறந்த நாளை இந்த மாவட்டம் மிக சீரும் சிறப்பாடும், இளைஞர் எழுச்சி நாளாக ஒரு வாரத்திற்குக் கொண்டாடி, அதனுடைய மிகச் சிறபப்பான தினமாக இன்றைய தினம் என்னை இங்கே அழைத்துப் பேசச் செய்திருப்பது என்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. நீரில் தெரியும் நெற்கதிர்கள், சொர்கத்தின் விளைச்சல்கள், நீங்கள் அவற்றை நேரடியாகப் பார்க்க மடியாது என்பார்கள். பகுத்தறிவுவாதிகளான நமக்கு சொர்கத்தின்மீது நம்பிக்கை கிடையாது. ஆனாலும், அந்த விளைச்சல்களை நாம் நேரடியாகப் பார்க்கின்றோம். இதோ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளாக நம் கண் முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இளைஞர் எழுச்சி நாள் விழாவிலே இன்றைக்கு உரையாற்றிய இந்த சந்தர்ப்பத்திற்காக நன்றி கூறி உங்களிடமிருந்தும், என்னுடைய தாய் வீடான நெல்லை மண்ணிடமிருந்தும், தற்காலிகமாக நான் விடைபெறுகின்றேன்.

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *