“தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – வடபழனி 17.11.2008

17.11.2008 அன்று, சென்னை, வடபழனியில், “தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்” சார்பில்
“ஈழத் தமிழர்களைக் காப்போம் - தமிழினத்தால் ஒன்றுபடுவோம்” 
என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கம் - கருத்தரங்கம்

                      “எம் தலைவர் வழியில் ஈழத்தின் அழகிய காலம் எழுதுவோம்”

“யாரும் அறியா வைகறை இருளில் முதல் ஒளியாய் ஒருவர் எழுதுகோலை எடுத்துக்கொண்டு, ஒரு இனத்தின் விழிப்பிற்காகவும், விடுதலைக்காகவும் எழுதிக்கொண்டு இருக்கிறாரே, அவர்தான் விடியலை உலகமெங்கும் பரப்பிக் கொண்டு இருக்கிறார்” என்னும் பெருமைக்குரிய என்னுடைய ஒப்பற்ற ஒரே தலைவர், தமிழினத் தலைவர், கலைஞரை நெஞ்சில் நிறுத்துகின்றேன். 96000 கிளைக் கழகங்களையும், அதிலே ஒரு கோடி உறுப்பினர்களையும் உடைய பெருமைமிகுந்த தனித்த இயக்கமான, என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருக்கின்ற பெருமைக்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம். புலியையும், வீணையையும் முத்திரையாக வைத்துக் கொண்டு இயங்குகின்ற தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் இனத்தின் ஒட்டுமொத்தக் குரலாக எழுச்சியோடு குரலெழுப்பி, “ஈழத் தமிழர்களைக் காப்போம்” என்று முனைப்பு கொண்டு ஒரு கவியரங்கத்தையும், கருத்தரங்கத்தையும் இன்றைக்கு இங்கே நடத்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மரியாதைக்குரிய அய்யா பூவை செங்குட்டுவன் அவர்களையும், வரவேற்புரை நல்கிய தலைவர் திரு.எஸ்.ஏ. வேனிற்செல்வன் அவர்களையும், முன்னிலை வகித்த கவிக்கோ பகீரதன் அவர்களையும், எனக்கு முன்பாக உரையாற்றிச் சென்ற, செம்மொழி அவை பேரவைத் தலைவர், என்னை என்றென்றைக்கும் ஊக்குவிக்கின்ற சகோதரர் மாம்பலம் சந்திரசேகர் அவர்களையும், மற்றும் இங்கே எழுச்சியோடும், உணர்வோடும் கவிதை படித்துச் சென்ற மூத்த - இளைய கவிஞர்களையும், இரவு மணி ஒன்பது ஆன பின்பும் இன உணர்வோடும், மான உணர்வோடும், எழுச்சியோடும், சபையை முழுவதுமாக நிறைத்திருக்கின்ற உங்கள் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன்.
	நேற்றைக்கு, கோவையிலே நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவிலே, எங்களுடைய ஒப்பற்ற ஒரே தலைவர், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது உணர்வுகளின் சங்கமம், அது ஒரு ரத்தக் கலப்புமிக்க இயக்கம். சாதாரண கலப்பு அல்ல, சுத்த சுயம்பான தமிழ் ரத்தக் கலப்புமிக்க இயக்கம். அதிலும், தனித்தமிழ் கலப்புமிகுந்த இரத்தம் எங்களுடைய அனைவரின் உடல்களிலும் ஓடுகிறது” என்று முழங்கியிருக்கின்றார். அந்த உணர்வினை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்த சகோதரத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் முகமாகவும், இன்றைக்கு தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே தொடங்கி, நடத்திக் கொண்டிருக்கின்றது. போருக்கு முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளிலே மிகச் சிறந்த கவிதையாக இன்றளவும் சொல்லப்படுவது, தன்னுடைய கவிதைகளையெல்லாம் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, தற்கொலை செய்துகொண்ட இலங்கைப் பெண் கவிஞரான சிவரமணியின் கவிதை ஒன்று; அவள் என்ன எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டாள்? “இந்த சமூகத்தின் தொப்புள்கொடிக்கு முன்பாக துப்பாக்கி நீட்டப்படும்போது, பூவின் நுனிமேல் அமர்கின்ற ஒரு வண்ணத்துப் பூச்சியின் அந்தக் கனவு என்பது, எனக்கு சம்பந்தமற்ற வெறும் சம்பவிப்பு மட்டுமே. எனக்கு பகலால் அமைக்கப்பட்ட அழகிய இரவு என்பது வெறும் கனவாகவே இருக்கின்றது. நான் பூக்களை மரத்தினிடமே விட்டுவிடவே விரும்புகின்றேன். கவிதைகளை எரித்துவிட்டு மறைகின்றேன்” என்று சொன்னாள். இன்னொரு கவிஞன் சொன்னான், ஒரு ஸ்பானிஷ் மொழிக் கவிஞன், “என்னுடைய ஒரு கவிதையாவது ஒரு இனப்படுகொலையிலே பலியாகின்ற ஒரு மனிதனைக் காப்பாற்றாவிட்டால் அந்தக் கவிதையால் என்ன பயன்? அதனை தீக்கிரையாக்கிவிட்டு கவிதைகள் எழுதுவதை நிறுத்துவேன்” என்று. எழுதினேன் நானும் ஒரு கவிதை, “செஞ்சோலை” என்று பெயரிட்டு. செஞ்சோலையிலே, அந்த அநாதைக் குழந்தைகள் அன்றைக்கு கொல்லப்பட்ட தினத்திலே எழுதிய “செஞ்சோலை” எனும் அந்தக் கவிதையோடு என்னுடைய உரையைத் தொடர்கிறேன். 
எல்லாவிதமான சாத்யங்களுடனும் இருந்தது 
அந்தப் பாதை.
	முத்தங்களுக்கான உத்திரவாதங்களுடன்தான் 
விடிந்தது அந்தக் காலை.
	புன்னகைக்கான நிச்சயமுடன் 
அந்தப் பறவை அன்றும் அந்த மரக்கிளையில்.
	நிமிடங்களை நொடிகளாகக் கடத்தக் 
காத்துக் கிடந்தன அப்படிக்கட்டுகளும்,
	பிரார்த்தனைக்கான மௌனமுடன் 
அந்தக் கொடிக்கம்பத்து வெளியும்.
	சோம்பலின் கடைசி முறிப்பொன்றைப்
பதுக்கி இருந்தன அந்தப் படுக்கை விரிப்புகளும்.
அசாதாரணமாய்,
அந்தக் கால்பந்தின் மேல்
தனித்துச் சிதறிய குழந்தையின் 
கையொன்று மட்டும் 
காலை உணவு மீதமுடன்!
	எல்லாவிதமான கனவுகளுடனும்தான் இருந்தது 
அந்தப் பாதை
ஒரே ஒரு குண்டு பல குண்டுகளாக விரிந்து அங்கே விழுவதற்கு முன்பாக.
போருக்கு பிறகான ஜெர்மானிய கவிஞர்களில் தலைசிறந்த, பால் செலான் என்ற அந்தக் கவிஞன், ட்ரெமன் நகரிலே தனக்கு வழங்கப்பட்ட ஒரு பரிசுக்கான ஏற்புரையில் சொல்லுகின்றார், ‘‘இழப்புக்களுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையில் உள்ளதும், இழக்கப்படாமல் இருப்பதும் மொழி ஒன்றுதான். சகல சாத்திய பாதக அம்சங்களையும் மிஞ்சியும் மொழி காப்பாற்றப்பட்டுவிட்டது. ஆனால், அது தனக்கே சொந்தமான ஒரு பதிலின்மையைக் கடந்து செல்லவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றது. அதாவது, அதன் பயமுறுத்தும் மௌனத்தில், கொடிய பேச்சின் ஓராயிரம் இருள்களில், என்ன நடந்துபோய்விட்டது என்பதற்கான சொற்களைத் தரவில்லை அது. ஆனால் அது எப்பேற்பட்ட விஷயங்களைக் கடந்து வந்து, தடைகளினால் உரம் ஊட்டப்பட்டு, மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது’’ என்று. உயிரினத்தின் ஆதாரமாக இருக்கின்ற அந்த மொழிதான், அந்தத் தமிழ் மொழிதான் நம்மிடையே தொப்புள் கொடி உறவு கொண்டிருக்கின்ற ஈழத் தமிழனின் தாய்மொழியும். ஒரு வவுனியா தமிழன் சமீபத்திலே சொன்னதைக் கேளுங்கள் - அவன் சொல்லுகின்றான், ‘‘எங்களுடைய தலைகளை குறிவைத்து மட்டுமே ஏன் குண்டுகள் வீசப்படுகின்றன? ஏன் உணவு, மருந்துப் பொருள்களற்று நாங்கள் மட்டும் மடிந்து சாகவேண்டும்? நான் அல்லது நாங்கள் செய்த குற்றம்தான் என்ன, தமிழனாய் பிறந்ததைத் தவிர’’. பிறப்பால் தமிழன் அவன், பேசுகின்ற மொழியோ நம்முடைய தமிழ் மொழி, பேணுகின்ற கலாச்சாரமோ நம்முடைய தமிழ் கலாச்சாரம். நம்முடைய கலையும், நம்முடைய இலக்கியமும், நம்முடைய பண்பாடும் அவனோடு ஒன்றாக இணைந்தது. “இந்த பூமியில் எங்கெல்லாம் அநீதியும், ஒரு துக்ககரமான சம்பவமும், படுகொலையும் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று மானுடத்தின் மனசாட்சியை என்னுடைய நாவல் தட்டவேண்டும்” - என்று சொன்னான் விக்டர் ஹியுகோ என்கின்ற நாவலாசிரியன். அந்தக் கூற்றுப்படி, இன்றைக்கு எழுத்தாளர்களாகிய நாம் ஏன் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்? நம்முடைய கலையையும், நம்முடைய இலக்கியத்தையும் சேர்ந்து எழுதியவர்கள் ஈழத் தமிழர்கள். நம்முடைய பழந்தமிழ் நூல்கள் பலவற்றிற்கும் உரைகளை எழுதினார்கள் ஈழத் தமிழர்கள். பல நிகண்டுகளை படைத்தவர்கள் அவர்கள். விவிலியத்தை முதன்முதலாகத் தமிழிலே மொழிபெயர்த்த தமிழர் ‘ஆறுமுக நாவலர்’ ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழர். தமிழ் இலக்கணத்திலே “ந”விற்கும் “ன”விற்கும் இருக்கின்ற வித்தியாசம் குறித்து மிகப்பெரிய முக்கியமான ஒரு இலக்கண நூல் ஒன்றை எழுதியிருக்கின்றார். தமிழிலே எழுதப்பட்ட இரண்டாவது நாவலான “அசன்பே சத்திரம்” யாரால் எழுதப்பட்டது? “சித்திலெவ்வை மரக்காயர்” என்கிற ஈழத்தமிழரால். உலகத்தின் தலைசிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்படுகின்றது. அந்தத் தொகுப்பிலே இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் சிறுகதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? “அழகு சுப்ரமணியம்” என்கின்ற ஒரு ஈழத்துத் தமிழர். ‘ஆனந்த குமாரசாமி’ என்கின்ற ஒரு அறிஞரை உலகமே அறியும். "The Dance of Shiva" என்ற உலகப் பிரசித்தி பெற்ற புத்தகத்தை எழுதிய "The Rasa Theory" என்கின்ற அந்த விமர்சனத்தை ஒரு மிகப்பெரிய கண்ணோட்டமாகவே முன்வைத்த அந்த ஆனந்த குமாரசாமியின் பூர்வீகம் ஈழம்தான். இவர்களெல்லாம் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்களாக புகழ்பெற்றிருக்கிற கைலாசபதி, சிவதம்பி, எஸ்.பொன்னுத்துரை போன்ற பலரும் ஈழத் தமிழர்கள்தான். இன்றைக்கும் நவீன கவிதைகளின் பிதாமகராக போற்றப்படுகின்ற தர்மு சிவராம் (எ) பிரமிள் ஒரு ஈழத் தமிழன்தான். அவர் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கின்ற, ஆங்கில இலக்கியத்திலே வெற்றிக்கொடியை நாட்டியிருக்கின்ற கனடாவில் வசிக்கின்ற ஷாம் செல்வதுரை, “சினமன் கார்டன்ஸ்” என்ற தன்னுடைய தாயகத்தைப் பற்றி எழுதிய நாவல் உலகளாவிய பிரசித்தி பெற்றது. தமிழர்களுடைய உணர்வுகளை ஆங்கிலத்திலே படைத்த எர்னஸ்டு மேக்ன்டயர் ஆகட்டும், ஜீன் அரசநாயகம் ஆகட்டும், இப்படி நம்முடைய தமிழ் இலக்கியத்திற்கு, நம்முடைய தமிழர்கள் செய்திருக்கிற பங்களிப்பிற்கு சற்றும் குறைவான பங்களிப்பில்லை ஈழத்தமிழர்களின் பங்களிப்பு. 
அந்த ஈழத்தில், நமக்காக ஒரு நெருக்கமான உறவும், பங்களிப்பும் வைத்திருக்கின்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து, ஒருமுகமாக நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்கின்ற உத்வேகத்துடன் இன்றைக்கு இங்கே குழுமியிருக்கின்றோம். என்ன நடந்துகொண்டிருக்கின்றது அங்கே? அதிகாரத்தின் குரூரமான போர், என்றென்றைக்கும் அதுதான். பெருவாரியான மக்கள் சிறுபான்மையின மக்களிடத்திலே நடத்துகின்ற அதிகாரத்தின் குரூரமான போர். அழிவும், அதன் பின்னான நிலையையும் நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்பாக 1918ம் ஆண்டு, 11வது மாதம், 11வது தேதி, சரியாக 11 மணிக்கு உலகையே உலுக்கிய முதலாம் உலகப்போர் நிறைவுபெற்றது. நினைத்துப்பாருங்கள் நண்பர்களே, அந்த 11ஆம் தேதியைக் கடந்து இன்றைக்கு ஒரு வாரம்தான் ஆகின்றது. உலகையே உலுக்கிய அந்த முதலாம் உலகப்போரில்கூட எந்த ஒரு தனித்த மொழி பேசுகின்ற ஒரு தனிப்பட்ட இனத்தின்மீதும் இத்தகைய கொடூரமான தாக்குதல் நடந்ததில்லை. அப்படிப்பட்ட தாக்குதல் இன்றைக்கு அங்கே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எப்படி வாழ்கிறார்கள் அவர்கள்? எப்படிப்பட்ட நிலையிலே இருக்கின்றார்கள் அவர்கள்? ஒரு தீப்பெட்டியின் விலை 30 ரூபாய், ஒரு கிலோ அரிசி 250 ரூபாய், ஒரு லிட்டர் கெரசின் 150 ரூபாய். ஆண்டுக்கணக்காக மின்சாரத்தைப் பார்த்திராமல் வீதியிழந்து, வீடிழந்து, நகரம் இழந்து, கிராமம் இழந்து, புழுக்களைப் போல பாம்புக்கடிக்கு ஆள்பட்டு, காடுகளிலே பதுங்கி வாழுகின்றார்கள். அப்படி வாழ்கின்ற மக்கள் யார்? நம்முடைய உணர்வோடும், உயிரோடும், தொப்புள் கொடி உறவோடும், நம்மிலே சரிபாதியாக நம்முடைய சரிபங்காக, அங்கமாக இருக்கின்ற ஈழத்துத் தமிழர்களும், தமிழச்சிகளும்!. நினைத்துப் பாருங்கள், அவர்களுடைய அவல நிலையை. யுத்தம், மனிதகுல இழப்புக்கள், சிக்கல், வேதனையும், அவலமும், வெளியே சொல்ல முடியாத அளவிற்கு வீணாகிய வாழ்வு நிலையும். இத்தனைக்கும் மேலாகக் குடிகளப் பெருக்கம், பஞ்சம் இவற்றோடு மூன்றாம் தரப் பிரஜைகளாக, பிற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து போகின்ற ஒரு அவல நிலைமை. அந்த நிலைமை எந்த இனத்திற்கு வந்திருக்கின்றது? இந்த நூற்றாண்டிலே வாழ்கின்ற உலகின் மூத்த பெரும் பழங்குடி மக்கள் நாங்கள் என்ற பெருமையோடு பேசித்திரிந்த ஒரு தேசிய இனத்திற்கு. அந்த இனம் இன்றைக்கு அங்கே திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. “சிலுவை யுத்தமும், யூதப் படுகொலைகளும் மறைந்துபோக, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தோன்றினோம்” என்று சொல்லுகின்ற அந்தத் தமிழர்கள், இருந்த இடம் தெரியாமல், வாழ்ந்த தடம் தெரியாமல் அழிக்கப்படுகின்றார்கள். 
எழுதுகின்றார் இலங்கையைச் சேர்ந்த என்னுடைய சகோதரி, கவிஞர் அவ்வை ஒரு கவிதையை இப்படி - “பிறந்த மண்ணைவிட்டு என்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக எல்லையைக் கடக்கின்றேன். எல்லையைக் கடந்த பின்பு, காலிலே செம்மண் ஒட்டியிருப்பதைப் பார்க்கின்றேன். ஒட்டியிருந்த செம்மண்ணையும் தட்டியாயிற்று. செம்மண்ணும் போயிற்று, என் மண்ணும் போயிற்று போ”. இன்னொரு பெண் எழுதியிருக்கிறாள், “என்னுடைய தோழிக்கு திருமணம், திருமணத்திற்கு எதை நான் பரிசாகக் கொடுப்பேன்? போர், பஞ்சம், எங்கும் வன்முறை, வன் புணர்வு, எங்கும் உதவி கிடையாது, மருத்துவமனை கிடையாது, எதை நான் பரிசாகக் கொடுப்பேன்? உடை, புத்தகம், பாவனைப் பொருட்கள் இதிலே எவற்றை தோழிக்குப் பரிசாகக் கொடுப்பேன்?, கர்ப்பத்தடை மாத்திரைகளைத் தவிர” என்று. அங்கே அப்படித்தான் இருக்கின்றது அவர்களுடைய நிலைமை. அந்த அவலம், அந்தத் துயரம் எல்லாம் என்றென்றைக்கும் நம்மீது ஒரு களங்கமாகப் பதிந்துவிடக் கூடாது என்கின்ற அக்கறையிலேதான் இன்றைக்கு தமிழகமெங்கும் ஒருமித்த குரல்கள் எங்களுடைய ஒப்பற்ற தலைவரின் அடியொற்றி ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே நடந்துகொண்டிருக்கிற போர் என்ன, வரலாற்றிலே அறியப்படாததா? இந்தப் போரானது இலங்கைக்கான பிரத்யேகமான போரா என்ன? திரும்பிப் பாருங்கள் நண்பர்களே, வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். “ஒரு வரலாற்று ஆசிரியன் என்பவன் யார்? அவன் எப்படி இருக்கவேண்டும்? அவன் தேவதைக் கதைகளிலே வருகின்ற பூதம் போல இருக்கவேண்டும். எங்கே இரத்த வாடை அடிக்கின்றதோ, எங்கே மனித வாடை அடிக்கின்றதோ, அங்கேதான் அவனுக்கு இரை அல்லது வேட்டை" என்று சொல்லுகின்றான் மார்க் பிளாக் என்கின்ற ஃபிரன்ச் வரலாற்று ஆசிரியர். வரலாறு என்பது கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்குமான உரையாடல் என்றால், அதிலே எதிர்காலத்திலே எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பதியப்படும்? நிகழ்காலத்திலே தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே எதிர்காலத்திலே பதியப்படும். அப்படியென்றால், எதிர்காலத்திலே நம்முடைய இனத்து தமிழர்களுடைய நிலை அங்கே எப்படி பதியப்படப் போகின்றது? என்ன மாதிரியான விதத்திலே தமிழர்களுடைய வரலாறு எழுதப்படப் போகிறது என்ற மிகப் பெரிய பொறுப்பு அவர்களுடைய தொப்புள் கொடி உறவான நமக்கு இருக்கிறது. இந்த வரலாறு, உலகிலே வேறு எங்கும் நடக்கவில்லையா? நினைத்துப் பாருங்கள். கிழக்கு தைமூர் என்பது பதினைந்தாயிரம் தீவுகளின் நடுவிலே இருக்கின்ற ஒரு சின்னஞ்சிறு தீவு. 1975ம் ஆண்டு, போர்ச்சுகல் காலனியாக இருந்த அதை இந்தோனேசியா அதிரடியாகக் கைப்பற்றியது. சும்மா இருந்தார்களா அந்த கிழக்கு தைமூர் மக்கள்? இறுதி வரை போராடினார்கள். ஐ.நா. சபையின் ஒப்புதலோடு பொது வாக்கெடுப்பு நடத்தி, தமக்கென அரசாங்கத்தை அவர்கள் நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு தைமூர் மட்டுமா? யுகோஸ்லேவியா அதைத்தான் செய்தது. அல்பேனியா அதைத்தான் செய்தது. 
“ஒரு தேசத்தின் உயிர்மூச்சு அரசியல் விடுதலை” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட, ஒரு அரசியல் போராளியாக இன்றைக்கும் ஓர்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களை தலைவராகப் பெற்ற இயக்கத்திலிருந்து வந்தவள் நான். வரலாறு பற்றி தெரியாதவர்கள் இன்றைக்கு பல்வேறு விதமான அவதூறுகளைச் சொல்லலாம். நண்பர்கள் இங்கே சொன்னார்கள், “கிரிமினல்” என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று. “கிரிமினல்” என்ற வார்த்தையை பிரித்துப் பாருங்கள், “க்ரைம்-இன்-ஆல்”. தான் செய்கின்ற எல்லாவிதமான செய்கைகளிலும், க்ரைம் (குற்றம்) ஒன்றையே செய்து கொண்டு இருக்கிறவர்களெல்லாம் - சட்டத்திற்குப் புறம்பாக திருமண மண்டபங்களைக் கட்டுபவர்கள், சட்டசபைக்கு வந்து படப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லி கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போகிறவர்கள், கண்ணைக் கட்டிக் கொண்டு தராசையும் கைகளிலே வைத்துக்கொண்டு, கண்கட்டி வித்தை காட்டுபவர்கள், இப்படிச் செய்கின்ற இன்-ஆல்-ஆக்டிவிடீஸில் கிரைம் என்பதையே உட்பதித்து வைத்துக்கொண்டு இருப்பவர்களா, எங்களுடைய தலைவரைப் பார்த்து அந்த வார்த்தையை சொல்ல முடியும்? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இப்பிரச்சினைக்குக் குரல் கொடுத்து இருக்கின்ற வரலாற்றின் பக்கங்களை அவர்கள் கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும். 
வங்க மொழி பேசுகின்ற அந்த இனத்தவர்கள் மீது கிழக்குப் பாகிஸ்தானிலே அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகின்றது. கூட்டம் கூட்டமாக அகதிகள் இங்கே வந்து சேர்கிறார்கள் என்று கேள்விப்பட்ட அடுத்த கணம், இந்தியா படை எடுத்துச்சென்று, “வங்க தேசம்” என்பதை அன்று உருவாக்கவில்லையா? உகாண்டா அதிபர், அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிச் சென்றுவிட வேண்டுமென்று சொன்னபோது அன்றைய இந்தியப் பிரதமர் ஒரு தனி விமானத்தை அனுப்பி அங்கே இருந்த இந்தியர்களை அங்கே இருந்து அழைத்து வரவில்லையா? அந்த நிலை நம்முடைய தொப்புள் கொடி உறவினர்களான சகோதர சகோதரிகளுக்கு ஏன் வரவில்லை? அவர்களுக்கான கதவுகள் ஏன் திறக்கப்படாமல் இருக்கின்றது. அவர்களைத் தூக்கிச் செல்கின்ற தோள்கள் இங்கு இல்லையா? அவர்களுக்காக தார்மீக ரீதியில் பொறுப்பு ஏற்கின்ற கடமை நமக்கு இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாம் ஒருக்காலும் மறக்கக்கூடாது. அதிலும் மிகக் குறிப்பாக, இந்தப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டின், இந்திய நாட்டின் அரசியல் பிரச்சினை மட்டுமே என்று கருதுகிறவர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கோ, ஒரு நாட்டிற்கோவான ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல, இது உலக அளவிலான மனிதாபிமான பிரச்சினை என்பதை, நாங்கள் முதலில் இந்தியர்கள், பிறகுதான் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழர்களாகிய ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். உணர்வுள்ள தமிழர் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பிரச்சினை இது என்பதைத்தான் எங்களுடைய தலைவர் கலைஞர் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் எழுத்தாலும், பேச்சாலும், போராட்டங்களினாலும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். சுதந்திரம் அடைந்த இலங்கை அங்கே இருக்கின்ற நம்முடைய தமிழர்கனை எப்படி நடத்தி வந்தது ஆதி காலத்திலிருந்து? 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இலங்கை சுதந்திரம் அடைந்தது. முதலிலே வந்த பிரதமர் டான் ஸ்டீபன் செனநாயகா இரண்டு சட்டங்களைக் கொண்டு வருகின்றார். அச்சட்டங்களின் மூலமாக, இங்கிருந்து மலையகத்திலே குடியமர்த்தப்பட்ட தமிழர்கள், சிங்களவர்கள் பருகிய அந்த இனிப்பு மிகுந்த தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் தங்களது வியர்வை சிந்தி உழைத்து, அவர்களுக்கு பருகுகின்ற அந்த தேநீர் இலைகளை தயாரித்துக் கொடுத்த நம்முடைய மலைவாழ் தமிழர்கள் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர், நாடற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். சிங்கள பேரினவாதத்திற்கு முதலில் பலியானவர்கள் அவர்கள்தான். அந்த சட்டங்களின்போது நடைபெற்ற விவாதங்களிலே, சிங்கள கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் `பெரைரோ’ பேசுகிறார், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே, இது சிங்கள கட்சியைச் சேர்ந்த `பெரைரோ’, அந்த சட்டம் வந்தபோது நாடாளுமன்றத்தில் பேசியது - ஒரு தமிழன் சொல்லவில்லை, சிங்கள கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சொல்லுகின்றார், ‘‘இம்மாதிரியான இனவாதம் ஹிட்லரோடு முடிந்துபோனதாகவே நாம் நினைத்து இருந்தோம். சிங்களவர்களாகிய நாம் மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், நாம் மட்டுமே இந்தத் தீவிலே வசிக்க தகுதியுடையவர்கள் என்றும் நினைப்போமானால், நாம் ஒரு காலமும் முன்னேற முடியாது” என்று. அந்த வார்த்தை இன்றைக்கு எப்படி தொலைந்துபோனது? தந்தை செல்வா அகிம்சை வழிப் போராளி. இலங்கையின் காந்தி என்று சொல்லப்பட்ட தந்தை செல்வா அதே விவாதத்தில் கலந்துகொண்டு சொல்கின்றார், “இலங்கை அரசாங்கம், தான் விரும்பாத மக்களை பேசவிடாமல் மௌனிகளாக ஆக்க, இந்தச் சட்டத்தின் மூலம் முயற்சி செய்கிறது. என்றாவது ஒரு நாள் இந்தச் சட்டம் இத்தீவின் மக்கள் அனைவரையும் பாதிக்கும்” என்று சொன்னார். அவர் சொன்னபடியே நடந்தது. யுத்தம் வந்தது. இலட்சக்கணக்கிலே மக்கள் இறந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தார்கள். நாடிழந்து, மொழி இழந்து, தங்களுக்கான அடையாளம் இழந்து, புழுக்களினும் கேவலமாக பனிப் பிரதேசத்தில் அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றார்கள். அத்தோடு முடிந்ததா? அதற்குப் பின்னாலும் வந்த சிங்களப் பிரதமர்கள் தமிழர்களை அடக்குகின்ற, `தரப்படுத்துதல்’, `சிங்களர் மட்டுமே’ என்ற இரண்டு கொடிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இந்த சட்டங்களின் மூலம், தமிழர்கள் தங்களது கல்வி மற்றும் சமூக நீதிக்கான உரிமை மறுக்கப்பட்டு, தேசிய நீரோட்டத்திலிருந்தும் சிவில் வாழ்க்கை முறையிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். பொங்கி எழுந்த அவர்கள் இத்தகைய அவலங்களுக்கு எதிராக நடத்திய, அகிம்சா வழியில் நடத்திய உண்ணாவிரத, ஒத்துழையாமை, தொடர் முழக்கப் போராட்டங்கள் அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது அன்றைய சிங்கள அரசு. ஒரு பக்கம் அகிம்சா வழி தோல்வியுற்ற நிலைமை, இன்னொரு பக்கம் இதன் எதிரொலியாக இளைஞர்கள் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்ற நிலை - மனம் வெதும்பிய தந்தை செல்வா, முடிவாக வட்டுக்கோட்டையிலே நடைபெற்ற மாநாட்டிலே ``தனித் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு’’ என்பதை முன்மொழிந்துவிட்டு, ``இனிமேல் 
ஈழத் தமிழர்களை கடவுள் மட்டுமே காப்பாற்ற வேண்டும்’’ என்று சொல்லியவாறே இறந்துபோனார். அன்றோடு முடிந்ததா அந்த துயரமும் பாதகமும்? 1977ம் ஆண்டு, ஜெயவர்த்தனா வருகின்றார். என்ன செய்கிறார்? வந்தவுடன் முதல் வேலையாக அங்கே இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுடைய பெயர்கள், தொழில்கள், கடைகள் அவர்களது முகவரிகள், அத்தனையும் பட்டியலிடப்பட்டு ஒரு அட்டவணை தயாரித்து வைத்துக்கொள்கின்றார். 1981ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே, அத்தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறியீடாக இருக்கின்ற யாழ் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. மிகக் குறிப்பாக, அந்தச் சம்பவம் குறித்து இங்கே எழுத்தாளர்களாகிய நாம் சற்று பின் நோக்கிப் பார்க்க வேண்டுமென்பதால் சொல்கின்றேன், அந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது எம்.ஏ. நுஃமான் எனும் கவிஞர் எழுதுகிறார் - 
“நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டு இறந்தார். 
சிவில் உடை அணிந்த அரசு காவலர் அவரைக் கொன்றனர். 
யாழ் நூலகத்தின் படிக்கட்டு அருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. 
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர். 
“எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை. 
பின் ஏன் கொன்றீர்?” என்று சினந்தனர்
“இல்லை ஐயா தவறுகள் எதுவும் நிகழவில்லை. 
இவரைச் சுடாமல் ஒரு ஈயினைச் சுட முடியாது போயிற்று எம்மால். 
ஆகையினால்தான்.......’’ 
என்றனர் அவர்கள். 
“சரி, உடனே மறையுங்கள்’’ என்று கூறி, 
அமைச்சர்கள் மறைந்தனர். 
சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். 
90 ஆயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர். 
அவோகவாத சூத்திரத்தினைக் கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது. 
தம்மபதமும் தான்’’.

கிட்டத்தட்ட 97,000 புத்தகங்கள் தீயிடப்பட்டு அங்கே கொளுத்தப்பட்டன. ஆயிரமாண்டு பழமையான ஓலைச் சுவடிகளும், வரலாற்று ஆவணங்களும் கட்டுக்கட்டாக சாம்பலாயின. அந்த அதிர்ச்சியை கேள்விப்பட்டு, அந்த நூலகத்தில் பொறுப்பாளராக இருந்த தமிழ் அறிஞரான தாவீது அடிகளார் மாரடைப்பிலே காலமானார். 1933-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்திலே ஹிட்லரின் நாசிப் படைகள், உலகின் அனைத்துப் பிரசித்தி பெற்ற புத்தகங்களையும் தீயிட்டுக் கொளுத்தி பெர்லின் நகர வீதிகளையே சாம்பலாக்கின. இதே 1933ம் ஆண்டுதான் கே.எம்.செல்லப்பா என்கின்ற ஒரு மனிதரால் யாழ்ப்பாணத்திலே பொது சன நூலகம் தொடங்கப்பட்டது. அந்த நூலகத்திற்கு கட்டிடப் பொறுப்பேற்று, அங்கே சென்று பணியாற்றியவர் யார் தெரியுமா? இந்தியர்களிலேயே `நூலக விற்பன்னர்’ என்று சொல்லப்படுகின்ற எஸ்.ஆர்.ரங்கநாதன் என்கின்ற இந்தியர்தான். அந்த புதிய நூலகத்திற்கான வரைபடத்தை தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான நரசிம்மன் என்பவர்தான் வடிவம் அமைத்துக் கொடுத்து இருக்கின்றார். எப்படியெப்படி உறவுகளை நாம் அவர்களோடு வைத்து இருக்கின்றோம் என்று பாருங்கள். 1981ம் ஆண்டு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான முரண்பாட்டினை களைவதற்காக ஒரு மாவட்ட சபை முறையை கொண்டு வருகிறது சிங்கள அரசு. அப்பொழுது ஏற்பட்ட வன்முறைக் கலவரத்திலே, முதலிலே தீக்கிரையானது ஈழ நாடு பத்திரிக்கை அலுவலகமும், ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரது இல்லமும், யாழ்ப்பாண நூலகமும்தான். அந்த ஒரு முறை மட்டும் அது எரிக்கப்படவில்லை, மறுபடியும் 1985ம் ஆண்டு அது எரிக்கப்படுகின்றது. இன்றளவும் ஒரு மாறாத வடுவாக, சிங்கள இனவெறியின் `களப்பலியாக’ இன்றைக்கும் அங்கே மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றது, புதுப்பிக்கப்பட்ட அந்த யாழ் நூலகம். அது மட்டுமா? வந்தது `1983, கருப்பு ஜூலை மாதம்’, யாழ்ப்பாணத்து திருநெல்வேலியிலே தபால் நிலையம் அருகே, ஒரு இராணுவ வண்டி தகர்க்கப்படுகிறது, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், இதனை, சார்லஸ் ஆன்டனியின் கொலைக்குப் பழிவாங்குதலாகப் பாவித்து, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது சிங்கள இராணுவம்; வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுவிட்டு எல்லா இடங்களிலும் தமிழர்கள் கண்டவுடனே சுடப்படுகிறார்கள்; மூன்றாயிரம் தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள்; அந்த வன்முறை `வெளிக்கடை’ சிறைக்கு உள்ளும் எடுத்துச் செல்லப்பட்டு 
93 தமிழ் இளைஞர்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள்; தமிழச்சிகள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்; கோணேஸ்வரி என்கின்ற ஒரு தமிழ்ப் பெண் மிகக் கொடூரமான முறையில் குண்டு வைத்து கொல்லப்படுகின்றாள்; இத்தனை வன்முறைகளையும், சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் நிகழ்த்தியபோது விழித்துக்கொண்ட இந்திய அரசு சொன்னது - ``அந்த படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு, அங்கே கொல்லைப்புறத்திலே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இந்திய அரசாங்கம் சும்மா இருக்காது’’ என்று. மனிதாபிமானமிக்க இந்திராகாந்தி அம்மையார் சொன்னார், ``இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல, அது ஒரு இனப்போராட்டம்’’ என்று. சொன்னதோடு அவர் நிற்கவில்லை. வரிசையாக இந்திய அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார். நரசிம்மராவிற்குப் பின் சென்ற ஜி.பார்த்தசாரதி `இணைப்பு-1’ என்ற திட்டத்தை முன்மொழிந்து வந்தார். அவர் முன்மொழிந்தது என்ன? - ``தமிழர் பகுதிகளைத் தன்னாட்சி கொண்ட அமைப்பாக மாற்றினால்தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்’’ என்பதுதான். சிங்கள ஆட்சியாளர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்பாக, அங்கு சென்ற ஏ.பி.வெங்கடேஸ்வரன் சொன்னார் - ``இந்த இலங்கைப் பிரச்சினை பஞ்சாபிகளுக்கும், வங்காளிகளுக்குமான பிரச்சினையாக இருந்திருந்தால், இந்த கணத்தில் இந்தியா ஒரு வங்க தேசப் போரை அங்கே உருவாக்கி இருக்கும்’’ என்று. இத்தனை கருத்துக்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 
ஆனால் இன்றைக்கு அங்கே இராணுவ தளபதியாக இருக்கின்ற சரத்பொன்சேகா என்பவர் பேட்டி கொடுக்கிறார், கனடா நாட்டிலிருந்து வருகிற ஒரு இதழுக்கு இப்படி - ``இலங்கை என்பது சிங்களர்களின் தேசம், இதில் மற்றவர்கள் உரிமை கேட்க ஒன்றுமே இல்லை’’ என்று. அப்படி அதனை விட முடியுமா? கொல்லைப்புறத்தோடு மட்டுமே இந்தியா தன்னுடைய நேசக்கரங்களை இதுவரையும் சுருக்கிக்கொண்டிருந்ததா? நினைத்துப் பாருங்கள். தென் ஆப்பிரிக்காவிலே இன வெறி அரசுக்கு எதிராக முதல் குரலை கொடுத்து பதிவு செய்தது நம்முடைய இந்தியாதான். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தார்மீகமான ஒரு நிலையை எடுத்து அவர்களுக்கு நேசக் கரம் நீட்டியது நம்முடைய இந்தியாதான். காங்கோ உள்நாட்டுப் போர் வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையின் படையோடு சேர்த்து தன்னுடைய படையையும் இந்தியா அனுப்பி வைக்கவில்லையா? கனடா நாட்டிலே `க்யூபக்’ மொழி பேசுகின்ற மக்களுக்கு என்று தனி அந்தஸ்து கொடுத்து ஒரு சட்ட அமைப்பு இருப்பதுபோல, நாம் இருக்க வேண்டுமென்கின்ற நிலையை ஏன் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க தவறி விட்டோம்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏன் அங்கு இருக்கிற தமிழர்களுக்கு சிறுபான்மையினர் என்ற முத்திரை குத்தப்பட்டு, உரிமைகள் அடக்கி வைக்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன என்றால், இலங்கை இருக்கின்ற Strategic position என்று சொல்லப்படுகின்ற அந்த இந்து மகா சமுத்திரத்திலே, மன்னார் வளைகுடாவிலே இருக்கின்ற, இராணுவ ரீதியாக, பூகோள ரீதியாக மிக முக்கியமான இடம் வகிக்கின்ற அந்த இடம்தான் காரணம். உலக வல்லரசுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகள் கூட தமிழருடைய கொடி அங்கே பறப்பதை விரும்பவில்லை என்பதனை, நாம் விரும்பாவிட்டாலும் கசக்கின்ற அந்த உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 
இந்த பிரச்சினை குறித்து இடையறாது கவலை கொண்டுள்ள எங்களுடைய தலைவர் கலைஞர், கோவையிலே பேரறிஞர் நூற்றாண்டு விழாவிலே, ‘‘என்னுடைய சிந்தனையும், என்னுடைய கவனமும் கிளிநொச்சியையும், பிரதானமாக போர் நடக்கின்ற முனையாகிய பூநகரியையுமே சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. என்னுடைய கண்ணீரும், இரத்தமும் கலந்து, அவற்றைக் கொண்டே நான் என்னுடைய கடிதங்களையும், எழுத்துக்களையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன்" என்று பேசி இருக்கின்றார். இந்த பிரச்சினைக்காக, ஆரம்பம் முதலே நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன விஷயங்களை செய்தது என்பதை பட்டியலிடாமல் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறாது, நிறைவடையாது என்று நான் திடமாக நம்புகின்றேன். இன்றைக்கு வந்து நாளைக்கு நாற்காலியிலே அமருகின்ற கனவோடு இங்கு வந்தவர்கள் தெரிந்து கொள்ளட்டும் எங்கள் கழகத்தின் வரலாற்றினை. 
1956ம் ஆண்டு சிதம்பரத்தில் திமுக பொதுக்குழுவை கூட்டி, இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிகின்றார். சுயமரியாதை இயக்கப் போராளி பொன்னம்பலனார் வழிமொழிகிறார். 1956ம் ஆண்டிற்கு முன்பே 1939ம் ஆண்டு இந்த வரலாறு தொடங்குகிறது. 10.08.1939 அன்று, அன்றைய தென் இந்திய நல உரிமைச் சங்க நிர்வாகிகள், பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் பல முன்னணித் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இலங்கையிலுள்ள அரசு கொடுமையாக நடத்துவதற்கு எதிராக, ``நாம் நம்முடைய கண்டனத்தை இங்கே பதிவு செய்யவேண்டும். அதை இந்தக் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்று பதிவு செய்திருக்கிறார்கள். 1981ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்திலே பங்கேற்று எங்களுடைய தலைவர் சிறைக்குச் சென்றிருக்கிறார். 
1983ம் ஆண்டு, இந்தக் கருப்பு ஜூலைக்கு பின்பு, முகவை மாவட்டத் திமுக மாநாடு இலங்கைத் தமிழர்களுக்கான பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு, அங்கே அதற்கான பிரச்சினை விவாதிக்கப்பட்ட பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 
04.08.1983 அன்று, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு, திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றது. 05.08.1983 அன்று, ரயில் மறியல் போராட்டம் பண்ணியிருக்கின்றது. 07.08.1983 அன்று, திமுக செயற்குழு கூடி தீர்மானத்தின் மூலம் ஒரு கோடி கையெழுத்து பெற்று ஐநா சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. ஜூலை 25, 1983 அன்று குட்டிமணி கொல்லப்படுகின்றார். அடுத்த நாள் 26ஆம் தேதி, சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்ற தமிழர் பாதுகாப்புப் பேரணியில் தலைவர் கலந்துகொண்டிருக்கிறார். 10.08.1983 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக இந்தப் பிரச்சினைக்காக அவர்களுடைய சட்டமன்றப் பதவிகளை தூக்கி எறிந்தவர்கள், எங்களுடைய இனமானத் தலைவரும், இனமான பேராசிரியரும். 04.05.1986 அன்று மதுரையிலே நடந்த தமிழர் ஆதரவு மாநாட்டில் (Tamil Ezham Supporters Organisation), திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாட்டிலே, வி.பி.சிங், என்.டி.இராமராவ் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு அங்கு கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இப்படி ஆதிகாலம் தொட்டே, சரித்திரத்திலே என்றைக்கெல்லாம் அவர்கள் துன்பப்படுகிறார்களோ அன்றைக்கெல்லாம் எங்களுடைய கண்டனத்தை மிக அழுத்தமாக பதிவுசெய்ததோடு மட்டுமல்ல களத்திலே இறங்கி பதவியை தூக்கி எறிந்தவர்கள்தான் எங்களுடைய தலைவரும், எங்களுடைய திமுக முன்னணியினரும். 2002ம் ஆண்டு நார்வே பிரதிநிதிகளால் செய்யப்பட்ட அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை, 2008ம் ஆண்டு, பிப்ரவரியிலே எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி வாபஸ் வாங்கிக் கொள்கிறது இலங்கை அரசு. அன்றிலிருந்து இன்றுவரை என்னென்ன வன்கொடுமைகள் அங்கே நிறைவேறி இருக்கிறது. அதற்காகவும் மிக மிக காட்டமான குரல் கொடுத்தது எங்களுடைய கட்சி ஒன்றுதான். அனைத்துக் கட்சி கூட்டங்களைக் கூட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்கின்ற அந்தத் தீர்மானத்தை போட்டதாகட்டும் அல்லது கொட்டும் மழையிலே எந்தவிதமான எதிர்ப்புகள் தடைகள் வந்தாலும் மனிதச் சங்கிலி மூலமாக உங்களுடைய மன உணர்வுகளைக் கொண்டு சென்று சேர்க்கின்ற அந்தத் தீர்மானமாகட்டும், அல்லது 20 கோடி ரூபாய்க்கு மேலாக அங்கே உயிரிழக்கின்ற எங்களுடைய தமிழீழ மக்களுக்காக இன்றைக்கு திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிற அந்த நிதியாகட்டும், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அந்த நிதி கண்டிப்பாக போய்ச் சேரும் என்ற உத்தரவாதத்துடன் இன்று திரட்டிக்கொண்டிருக்கிற அந்த நிதி ஆகட்டும்- எதிலே இல்லை எங்கள் தலைவருடைய பங்களிப்பும் கண்ணியமும்? இவை, வரும் தேர்தலுக்காகவும், வெறும் வரட்டு ஜம்பத்துக்காகவும் விடப்படுகின்ற அறிக்கைகளோ அல்லது நடவடிக்கைகளோ இல்லை. 
சில தினங்களுக்கு முன்பாக, சட்டப்பேரவையிலே போரை நிறுத்தவேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான சமரசமற்ற முன்மாதிரியான கோரிக்கை, அதனை முறையாக இந்த சட்டமன்றத்திலே நாங்கள் தாக்கல் செய்கின்றோம் என்கின்ற அந்தப் பதிவையும் செய்திருப்பது தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். இன்றைக்கு மட்டுமல்ல, அவருடைய கண்ணீரும், அவருடைய வேதனையும், அவருடைய துன்பமும். காலங்காலமாக - என்றைக்கெல்லாம் அவர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினார்களோ, அன்றைக்கெல்லாம் பொங்கியெழுந்து, இன்றைக்கு ஒரு மிகப்பெரிய momentum என்று சொல்லப்படுகின்ற எழுச்சியை, தமிழகத்திலே, எங்களுடைய இயக்கமும், கலைஞருடைய தலைமையும் மட்டுமே திரட்டிக் காட்டியிருக்கிறது என்பதை இந்த மன்றத்திலே பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருக்கின்றேன். 
இன்று இலங்கை அரசு செய்து கொண்டிருப்பது என்ன? தன்னுடைய இராணுவச் செலவை, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகமாக்கியிருக்கின்றது. அங்கே மனித உரிமை குழுக்களுக்கு, ஆர்வலருக்கு அனுமதி கிடையாது. இந்திய மருத்துவர்கள் வரக்கூடாது என்று சொல்லுகின்றார் ராஜ பக்ஷே. சுமார் 59 ஆயிரம் கோடி வங்கிக்கடனை ரெக்கிம் வங்கி மூலமாக இந்திய அரசு மூலமாக இலங்கை பெற்றிருக்கின்றது. மன்னார் வளைகுடா மூலமாக பாகிஸ்தானிலிருந்தும், இஸ்ரேலிலிருந்தும், சைனாவிலிருந்தும் இராணுவத் தளவாடத்தையும், நிதி உதவியையும் பெற்றுக்கொண்டு தமிழர்களை ஒடுக்குகின்ற, நசுக்குகின்ற அந்த நிலைமையை அவர்கள் ஏற்படுத்தும்பொழுது, எங்களுடைய இயக்கத்தின் தலைவர் என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்கிறார்? நினைத்துப் பாருங்கள், எந்த வரலாற்றிலாவது மீனவர்கள் கடல் எல்லையைக் கடப்பதற்காக சுடப்பட்டிருக்கிறார்களா? உலகத்தில் எந்த சரித்திரத்திலாவது தம்முடைய மக்களையே, தன்னுடைய நாட்டிலே இன்னொரு மொழியைப் பேசுகின்ற குற்றத்திற்காக எதாவது ஒரு அரசு குண்டு போட்டு அழித்திருக்கின்றதா? இத்தகைய கொடுமைகளை செய்த அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் தலையிட்டு, கீழுள்ளவற்றைச் செய்யவேண்டும் - 
•	எங்களுடைய மீனவர்கள் சுடப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும், 
•	பேச்சுவார்த்தைக்கு இருவரும் உடன்பட்டு வரவேண்டும், 
•	போர்நிறுத்தம் ஏற்படவேண்டும்
என்பவையே அவரது நிலைப்பாடு. 
போர்நிறுத்தம் வேண்டும் என்றவுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் சொல்கிறார், ``நாங்கள் போரை மீண்டும் ஆரம்பிக்கவில்லை, அதனை ஆரம்பித்தது இலங்கை அரசு. நாங்கள் நடத்துவது தற்காப்புப் போர், இன்றே போர் நிறுத்தத்திற்கு தயார்’’ என்று. பதிலுக்கு இலங்கை அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான கெகேலியா ராம்புக்வெல்லர் என்ன சொல்கிறார் - ``அவர்கள் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும், நாங்கள் எந்த நிலையிலும் அவர்களை நம்பத் தயாரில்லை’’ என்று.
2002ம் ஆண்டு நார்வே பிரதிநிதிகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி, 2008ம் ஆண்டு அதனை மீறி போர்நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டு, போரை மீண்டும் ஆரம்பித்த இலங்கையின் இராணுவ அதிகாரி என்ன சொல்லுகின்றார்? ``நீங்கள் ஆயுதத்தைக் கீழே போடுங்கள், உங்களை நாங்கள் நம்பமுடியாது’’ என்று சொல்லுகின்றார். இன்றைய போராளிகள் எல்லாம் நாளைக்கு வரலாற்றிலே பதியப்படப் போகின்றவர்கள்தான். பாராளுமன்றத்தையே குண்டு வைத்து தகர்த்த பகத்சிங்கிற்கு இன்றைக்கு அங்கே சிலை வைக்கப்படவில்லையா? யார் ஒருகாலத்திலே போராளிகளாக இருந்தார்களோ, அவர்களே பின்னர் வரலாற்றுத் தடத்திலே பதியப்படப்போகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்றளவும் இருதரப்பும் ஒத்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும், போர்நிறுத்தம் அங்கே அமலுக்கு வரவேண்டும், அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும், அதோடுகூட மீனவர்களுக்காக ஒரு கடல் எல்லை அங்கே வகுக்கப்படவேண்டும் என்பதை நாம் மிக தீர்க்கமாக முன்வைத்து தமிழக மக்களிடத்திலே உணர்வுபூர்வமான ஒரு எழுச்சியினை கொண்டு வருகின்ற அதே நேரத்திலே, வேகமான, ஆயின் நிதானமான அணுகுமுறையைக் கடைபிடிக்க எங்களையெல்லாம் எம் தலைவர் வழிநடத்திச் செல்லுகின்றார். அவருடைய வழிகாட்டுதலோடு, அம்புலி என்கின்ற ஒரு பெண் கவிஞர் சொன்ன அந்தக் கவிதையிலே வருகின்ற அந்த வரிகளை இங்கே நினைவு கூர்கின்றேன் - 
	தலைவியாய் மாறியிருந்தாள் 
முன்பு எங்களிடை உலா வந்த குறும்புச் சிறுமி.
இப்பொழுது அவள் அழகாயிருக்கவுமில்லை
ஆரோக்கியமாகக் கூட உலவவில்லை.
வெட்கமுற்று ஒதுங்கிச் சிரிக்காமல்
ஆளுமை நிறைந்து நடக்கும் அவளே
எழுதுவாள் எம் அழகிய காலம்.
ஆம் - வெட்கமுற்றுப், போராடத் தயங்கும் தமிழச்சிகள் அல்ல நாங்கள். எங்களது தலைவருடைய வழியிலே எழுதுவோம் ஈழத்தின் அழகிய காலம்! ஒதுங்கிப் போகாமல், ஆணவம் இல்லாமல், ஆளுமை நிறைந்து எழுதுவோம் எங்களுடைய அழகிய காலத்தை அங்கே. அதிலும் ஒப்பற்ற எங்கள் தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலோடு, அவருடைய தடத்தைப் பின்பற்றி எழுதுவோம் மீண்டும் ஒரு அழகிய காலத்தை என்று சொல்லி, நன்றி கூறி விடை பெறுகின்றேன். 
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *