"மக்கள் சிறந்த ஓவியங்களைக் காண்பதற்கு யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள். ஆனால், ஒரு கவிதையைப் படிப்பதற்குக் கல் தொலைவுகள் (miles) யாரும் பயணம் செய்வதில்லை" - லியானார்டோ டாவின்சி அந்தி சாயத் தொடங்கிய ஒரு மாலைப்பொழுதில் தான் நான் மருது அண்ணனை முதன் முதலாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து எனது வண்ணங்கள் அவரது கருப்பு வெள்ளைக் கோடுகளாலும், எனது கருமை அவரது வண்ணக் கலவையாலும் இடமாற்றப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. "ஓர் அழகியல் நிகழ்வாகத்தான் வாழ்க்கையை நியாயப்படுத்த முடியும்" என்றொரு வரியை அவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்ளத் தூண்டும் அவரது அந்த அன்பான அணைப்பும், "என்னம்மா" என்கிற அந்தக் குரலின் நெகிழ்வும் - இந்திய ஓவிய வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்திருக்கின்ற அந்தக் கைகளின் குலுக்கலும் - ஒரு கானகவெளியில் நான் எப்போதும் அருந்துகின்ற சுனைநீர்! எழுபதுகளின் பிற்பகுதியில் துவங்கி, ஓவியப் பரப்பின் பல எல்லைகளிலும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்ற இந்தக் கலைஞனுடைய முன் அட்டை ஓவியம் இல்லாமல் இன்றுவரை எனது படைப்புகள் வெளிவந்ததில்லை. அது எனக்குப் பெருமை என்றால் - அவரது வேலைப்பளுவினிடையே சுணங்காமல் அதனை எனக்குத் தருகின்ற கூடுதலான பெருந்தன்மை அண்ணனுடையது! "கலைஞன் தன் கலையின் உணர்வை எப்பொழுதும் அறிந்திருந்தான். வேளை வாய்த்தபோது அதற்கேற்றபடி நடந்து தன் தகுதியை நிலைநாட்டிக் கொண்டான்" எனும் கூற்றை மெய்பிப்பது அவருடைய வாழ்க்கைப் பயணம் எனில், "எவ்வாறு ஓர் ஓவியன் உள்ளானோ அவ்வாறே ஓவியத்தின் உருவமும், கோடுகளும்" - (காவிய மீமாச்சை) எனப்படுவது போலவே அவருடைய கோட்டோவியங்களும், வண்ணப் படைப்புகளும்! அவரைப் போலவே தீர்க்கமுடன், தெளிவுடன், வாழ்வின் மீது தீராக் காதலுடனும், நம்பிக்கையின் ஒளியுடனும் வெளிப்படுத்தபடுபவை அவை! அவரது ஓவியங்களின் பிரதானமான அடர் சிவப்பும், ஓளிர் மஞ்சளும், என் ரசனைக்கு மிகப் பிடித்தமானவை என்றால், அண்ணனும், அண்ணியும் என் அகத்திற்கு அதைவிட நெருக்கமானவர்கள். என் வீட்டு முற்றத்தை அவரது பறக்கும் தேவதைகளும், வண்ணப் புள்ளிக் கோலங்களும் அலங்கரிக்கின்றன. எனது கைபேசியில் கனல் தெறிக்கும் கண்களுடன் அவரது பாரதியார் ஓவியம் உடனிருக்கின்றது. என் கவிதைகளை அவரது கோட்டோவியங்கள் கூடுதலாக மிளிரச் செய்கின்றன. தனித்திறனும், கற்பனைச் செறிவும் நிறைந்த அவரது கோட்டுச் சித்திரங்களுக்கு எனது மூத்த மகள் விதந்தோதும் விசிறி என்றால், குழந்தைகளுக்கான அசைவூட்டச் சித்திரங்கள் (Animation) இளையமகளது பெரு விருப்பம். "காண்போரின் சிந்தையை ஆக்கிரமித்து மேம்படுத்துவதால் மனிதகுலத்திற்கு ஒரு பெருமை மிக்க கருவூலம் ஓவியம்" என்று "சித்ர சூத்ரா" சொல்கிறது - இந்திய ஓவிய மரபிற்கு ஒரு மிக முக்கியமான கருவூலம் அண்ணனது தமிழர்களது பண்பாட்டு முத்திரை தாங்கிய கோட்டோவியங்கள். அவை வெறும் பழம்பெருமை பேசுபவை மட்டுமே அல்ல - உரிய வண்ணங்களைத் தெரிதல், உணர்வுகளுக்கேற்றவாறு உடல் வலுவினை வடிவமைத்தல், தனித்துவமானதொரு மனோபாவம், இழந்துவிட்டதொரு மகோன்னதம் - அதனைக் கலையின் வழி மீட்டெடுக்கின்ற அற்புதம் - இவற்றின் சரிநிகர் கலவை! காஷ்மீரத்து ஓவியங்கள் காந்தாரக் கலைவழி, ஆசியக்கலை வழி இரண்டையும் இணைத்துப் புதியதொரு பாணியில் உடை, அணிகலன்களை வடிவமைத்ததாக நான் படித்ததுண்டு. அண்ணனது ஓவியங்கள் தமிழரின் வாழ்வியல், அவர்தம் நிலம், பயிர், அறுவடை, கனவு, சடங்கு, பறவைகள், பொழுது, போர், இசை, விளையாட்டுக்கருவிகள், பெண்டிர், ஆண்மக்கள், சிறார், கொண்டாட்டம் - இவற்றை ஊடுறுவிச் செல்பவை என்றாலும், கலையில் லியானார்டோவின் புரட்சிமனப்பான்மையையும் அவை பிரதிபலிப்பவை. ஓவியத்தைக் காட்சிக் கலைகள் (visual arts), இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களுக்கு இசைவாகக் கடத்தியவர் இவர். ஓளியும், நிழலுமாக அவரது ஓவியங்கள் இருக்கலாம். ஆனால் அவரது குழந்தை மனம் வண்ணங்களால் மட்டுமே ஆனது. ஐம்புலனறிவும் உய்ப்பதற்காக ஓவியங்கள் வரையலாம் அவர். ஆனால் உணர்வும், அன்பும், எளிமையும் கொண்ட உலகம் மட்டுமே அவருக்கும், எனக்குமானது. அவரது கோட்டோவியங்களின் முப்பரிமாண நிலையைப் போலவே இந்தச் சரடில் எங்களோடு கூடவே அண்ணியும் உண்டு. க்யுபிசம் படைப்புத்தியைப் புகுத்திய Pablo Picasso, George Braque இருவருமே பாரிஸில் ஒரே பகுதியில் வாழ்ந்து, ஒன்றாக, ஒரே கூரையின் கீழ் ஓவியங்களைப் படைத்தவர்கள். ஒருவரையொருவர் பாதித்துத் துணையாகப் பயணித்தவர்கள். ப்ராக் பின்நாட்களில் பிக்காஸோவுடனான தனது அனுபவத்தை, "ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்ட இரண்டு மலையேறிகள்" என்று நினைவு கூர்ந்ததாக அறிந்தேன். அண்ணியும், அவரோடு அப்படியாகப் பிணைக்கப்பட்ட மலையேறிதான். புன்னகை, கனவு, வெள்ளந்தி அன்பு இவற்றைச் சுமந்த அண்ணியோடு, அண்ணனை எப்போதும் ஒரு சேரக் காண்பது எனக்கு ஹாலந்தின் புகழ்பெற்ற ஓவியர் ரெம்ப்ரெண்டையும் அவரது காதல் மனைவி சாஸ்கியாவையும் நினைவு படுத்தும். "சித்திரங்களில் காணும் தொனிப்பொருள் (Suggesstion) அவற்றின் அழகை அதிகப்படுத்தி அவற்றை தீட்டக்கூடிய ஓவியனின் உயர் திறமையை நிலைநாட்டுகிறது" என்பார் பேராசிரியர், ஓவியக் கலைஞர், திரு. சி. சிவராமமூர்த்தி. அண்ணனுடைய தனிப்பட்ட வாழ்வின் அழகை, செழுமையை மேம்படுத்துகின்ற தொனி அண்ணிதான். அவர்களிருவரோடு அன்பினால் இணைந்ததொரு கண்ணியாகப் பயணிப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஒரு நவீனக் கலைஞனுக்குரிய சமகாலச் சிந்தனை, போக்கு, (Contemporaneity) சுய வெளிப்பாடு, புதிய முயற்சிகள், நிறுவப்பட்ட மதிப்பீடுகளை எதிர்த்தல், மாற்று உரையாடல்களைக் கலையின் வழி உட்புகுத்துதல், தேர்ந்த குறியீட்டு உத்திகள், தொன்மங்களை மீட்டுயிர்த்தல், நவீன அழகியல், தன் வேர் சார்ந்த உணர்வெழுச்சி - இவற்றின் அருஞ்சுவைக் கலவையான இந்தக் கலைஞனுக்கு, அவரது தூரிகைக்கு, அந்த மாயாஜாலக் கோடுகளுக்கு, மயக்கமுறக் கிளர்த்தும் அந்த வண்ணங்களுக்கு - வயதாவதுண்டா என்ன? "ஒவ்வொருவருக்கும் ஒரு 15 நிமிடப் புகழ் உண்டு" எனப்படுவதுண்டு. ஆனால், ஒரு கலைஞனின் புகழை எண்களா தீர்மானிக்க முடியும்? கலைஞன் என்பவன் அந்த ஒவ்வொருவரில் வருகின்ற ஒருவர் அல்ல. எண்களால் பெருக்கவோ வருடங்களால் வகுக்கவோ படமுடியாதவன் அவன்! இந்தியாவின் (அஜந்தாவிற்கு முற்பட்ட) சங்க, சாதவாகன, கலிங்க, குஷாணக் கலை ஒவியங்களை வரைந்த கரங்களுக்கு வயதாவதுண்டா என்ன? மாமண்டூரின் குடவரைக் கோயில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவக் கட்டிடக் கோயில்களிலும், பாண்டிய நாட்டின் திருமலைபுரம் குகைக் கோயில்களிலும், சேரநாட்டின் திருநந்திக்கரை குகைக்கோயிலிலும், சோழநாட்டின் நார்த்தாமலை விஜயாலயச் சோழீச்சுரக் கோயிலின் அர்த்த மண்டபச் சுவர்களிலும், விஜயநகரப் பேரரசின் தலைநகரமாயிருந்த விரூபாஷீர் கோயிலின் முன் மண்டபத்துக் கூரைகளிலும், நாயக்கர் காலச் சுவரோவியங்களிலும் - எண்ணற்ற ஓவியங்களைத் தீட்டிய கைகளுக்கு என்றாவது வயதாவதுண்டா? அதன் ஒரு துளி ஏந்தி வந்த தூரிகையை இந்தக் கலைஞன் லியானார்டோவின் வெள்ளி முனையோடு (Silver Point) ஏந்தியிருக்கிறான் - அந்தத் தூரிகைக்கு, அதன் புகழுக்கு எண்களால் அடைப்புக் குறி இட முடியுமா என்ன? ஒரு ஓவியராக, மிகச் சிறந்த கலைஞராக அண்ணன் அறியப்பட்டாலும், ஒரு தனிப்பட்ட மனிதராக பெரிதும் மதிக்கப்பட வேண்டியவர். எனக்கு மிகப் பிரியமானவர் - என் போற்றுதலுக்கு உரியவர் - அவர் சார்ந்துள்ள நம்பிக்கைக்களுக்காக, அவர் இயங்குகின்ற சமூகத் தளத்திற்காக, அவர் நிற்கின்ற அறம் சார்ந்த கலைக்காக! 'மனிதன் மற்றும் மனித மனதின் இயக்கம்' - இவை இரண்டு மட்டுமே ஒரு ஓவியனுக்கு மிக முக்கியமான செய்திகள் என்று சொன்ன லியானார்டோவைப் போல இந்தக் கலைஞனுக்கும் மேற்சொன்ன இரண்டு மட்டுமே முக்கியம். மனிதன் - அவரது கண்கள் என்றால் மனித இயக்கம் - அவரது வண்ணம். "நன்றாகக் கழிந்த நாள் மகிழ்வான உறக்கத்தைத் தருவதைப் போலவே நன்றாகப் பயன்பட்ட வாழ்க்கை மகிழ்வான இறப்பைத் தருகிறது" என்று சொன்னதும் லியானார்டோதான். கலைக்கு மரணமில்லை. அண்ணனுடைய தூரிகைக்கும், மனதிற்கும் என்றும் முதுமையில்லை. அவருடைய ஏதாவது ஒரு ஓவியம் எங்காவது ஒரு மூலையில் இருக்கின்ற பெயர் தெரியாத ஏதோவொரு ரசிகனுக்கு நன்றாகக் கழிந்த ஒரு நாளையும், மகிழ்வான உறக்கத்தையும் தந்து கொண்டே இருக்கும். ஏனெனில் தூரிகை தான் அவருக்கு வாழ்க்கை - கலையின் ஒளிர்விற்காய் நன்றாகப் பயன்படுகின்ற அந்தத் தூரிகைதான் அவருக்கு வாழ்க்கை! அது கொட்டித் தீர்க்கின்ற வண்ணங்களின் ஒரு தீசலாய் அவரது வாழ்வில் நானுமிருப்பது எனக்குப் பெருமையும் சுகமும்! புத்தமத போதனைகள் தொடக்க காலத்தில் பிக்குகளால் பனை ஓலைகளில் எழுதப்பட்டன. பின்னர் அவற்றில் ஓவியங்களும் தீட்டப்பட்டன என அறிந்திருக்கிறேன். அருகனும், வனப்பேச்சியும் இணைந்திருக்கும் பனையோலை ஓவியம் போல அண்ணன் மருதுவும், அவரது வண்ணங்களும் எனக்குக் காத்தும், கருப்பும்! கண்களை விற்றும் சித்திரம் வாங்கலாம் - இந்த கலைஞனுக்காக!
No comment