பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்பட வெளியீட்டு விழாவில ஆற்றிய உரை நான் அதிகம் மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார், டிம் ஓ பிரியென் (Tim O'Brien) எனப்படும் அமெரிக்க நாவலாசிரியர். ஒரு ராணுவ வீரராகச் சில காலங்கள் வியட்நாமில் கழித்தார். அவருடைய எழுத்து, 'போர் பற்றிய உண்மைக் கதையை' சொல்வதன் சாத்தியங்கள், சாத்தியமின்மைகள் மற்றும் உண்மைக்கதையென்பது என்னவாக இருக்கலாம் என்பவற்றுடன் போராடுகிறது. 'கதைகளால் நம்மைக் காப்பாற்ற முடியும்' யார் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து கிரேக்கர்கள் படைப்புகளை மூன்று பெரிய வகைகளில் பிரித்தார்கள். கதைசொல்லி தன்னிலையில் பேசினால் கவிதை அல்லது தன்னுணர்ச்சிப்பாடல் என்றும் கதைசொல்லி தன்னுடைய குரலிலேயும் பேசி அதே சமயம் கதாபாத்திரங்களை அவர்களுடைய குரலிலும்பேச அனுமதித்தால் அது காவியம் அல்லது கதையாடல் என்றும் கதாபாத்திரங்கள் மட்டுமே பேசினால் அது நாடகம் என்றும் ஆகிறது. (இலக்கியக் கோட்பாடு, 117) அடுத்தது - எங்களது தெக்கத்திக் கதைசொல்லி கி.ரா. அவரது நாட்டுப்புறக் கதைகள். நாட்டுப்புறக் கதைகளையும் புராணங்களையும் எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கே நமக்குத் தனிப்பயிற்சி தேவை. பவாவின் மனஉலகமும் அப்படித்தான். திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கின்ற ஒவ்வொரு அடி மண்ணும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. எப்படிப்பட்ட கருக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எப்படி வாசகனுக்குச் சொல்லவேண்டும், எங்கு அதனை நிறுத்த வேண்டும். புதுமைப்பித்தன் என்ற சிறுகதைச் சிகரம் 'பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணிவைக்கும் இன்ஷீயரன்ஸ் ஏற்பாடும் அல்ல. இவையாவும் கலை உதாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள் என்று தனக்கே உரிய கேலியும் கிண்டலுமாக 'காஞ்சனை' தொகுப்பு முன்னுரையில் 1943இல் எழுதுகிறார் புதுமைப்பித்தன். (உலக இலக்கிய வாசக சாலை, 14) 'கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கை வந்திருப்பது போல் தமிழில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை' என்று க. நா. சு. தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழில் அத்தனை விதமான சிறுகதை முயற்சிகளையும் எழுதிபார்த்த ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான். 'நீச்சல் குளத்திற்கு ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக் கொண்டிருப்பது போல்' என்று சுந்தரராமசாமி உதாரணம் காட்டுவார். (உலக இலக்கிய வாசக சாலை, 13) பஷீரின் பால்ய கால ஸகி இந்திய உரைநடை இலக்கியத்தின் மேதைகள் என்று மூன்று பேரை மதிப்பிட வேண்டுமானால் அவர்களில் ஒருவராக மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் இருப்பார். தன் வாழ்நாளில் கணிசமான பகுதியை மன நோயாளியாக மனநோய் மருத்துவமனையில் கழித்த பஷீர் இலக்கியம் படைப்பதன் மூலம் வாழ்வின் உண்மைகளைத் தேடினார் என்றுதான் சொல்ல வேண்டும். (உலக இலக்கிய வாசக சாலை, 1) மஜீதினுடைய இளம்பருவத்துத் தோழி சுஹ்ரா. சிறுவயதில் இவர்கள் நட்பு மாமரத்திலிருந்து விழும் மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்ற சண்டையில் ஆரம்பமாகிறது. அப்போதெல்லாம் தன் கையில் இருக்கும் கூர்மையான நகங்களால் சுஹ்ரா பிறாண்டி விடுவாள். மஜீதின் கனவுகளில் அவன் ராஜ குமாரனாக இருக்கும்போது சுஹ்ராதான் அரசகுமாரி. பிறகு அரசகுமாரி பிறாண்டக் கூடாது என்ற விதி முறையினால் மஜீத் தப்பிக்கிறான். "ஒன்றும் ஒன்றும் எத்தனைடா?" என்று கணக்கு ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மஜீத் சொல்லும் பதில் நாவலில் பல இடங்களில் சுஹ்ராவால் கிண்டல் செய்யப்படுகிறது. 'இரண்டு சிறு நதிகள் ஒன்றாகச் சேரும்போது சற்றே பருமனான பெரிய நதியாக உருவெடுக்கிறது' என்பது மஜீதின் நினைவுக்கு வரவே அவன் பதில் சொல்கிறான்... "கொஞ்சம் பெரிய ஒன்று". (உலக இலக்கிய வாசக சாலை, 2) இந்த உலக வாழ்க்கை ஒரு பெரிய தமாஷ். ஒருமுறை வி.கே.என் மரணத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டார். நான் சொன்னேன்.... He Puts off till the last moment. இதோ வைக்கம் முகம்மது பஷீர் இறப்பதற்குமுன் எழுதி வைத்துவிட்டு இறந்தது நம் நினைவில் இப்போதும் நிற்கிறது. (உலக இலக்கிய வாசக சாலை, 4) போர்ஹே என்ற அற்புதக் கதை சொல்லி 1899-1986 ஆகிய கால கட்டத்தில் வாழ்ந்த லத்தீன் அமெரிக்க நவீன இலக்கியத்தின் முன்னோடியான ஜோர்ஜ் லூயி போர்ஹே உலக இலக்கியத்தில் அல்லது இலக்கிய உலகத்தில் நிலையான புகழைப்பெற்ற அற்புதக் கதைசொல்லி ஆவார். "வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்கமுடியம்" என்று பிரம்மராஜன் சொல்லுவார். 'வாளின் வடிவம்' என்பது அவருடைய நேராக சொல்லப்பட்ட சோகம் மிகுந்த சிறுகதை. 'ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது' என்று அசாதாரணமாக ஆரம்பமாகிறது கதை. 1922 இல் அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் நடந்த 'பெரும் அவமானமான, இழிவான' சம்பவத்தை போர்ஹேவிடம் அவன் விளக்குகிறான். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனுடன் ஜான் வின்சென்ட் மூன் என்பவனும் சேர்ந்து கொள்கிறான். மூன் முதுகெலும்பில்லாத பிராணியை போல அசெளகரிகமான மனப்பதிவினை ஏற்படுத்துகிறான். துப்பாக்கி சத்தத்திற்கே நடுங்கும் அவன், "நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்" என்று கோழைத்தனமாக விவாதிக்கிறான். மூன் அவனுடன் 'காய்ச்சல்' என்ற காரணம் பொய்யாகக் காட்டி போக மறுக்கிறான். திரும்பி வந்த அவன் மூன் தொலைபேசியில் தன்னைக் காட்டிக் கொடுப்பதைக் கேட்கிறான். அவன் மூனுடைய முகத்தில் ரத்தத்தினால் ஆகிய அரைச் சந்திரனை செதுக்குகிறான். பிறகு மூன் காட்டிக்கொடுத்து பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு பிரேசிலுக்கு ஓடி விடுகிறான். இதைச் சொல்லி முடிக்கும்போது, "நான்தான் வின்சென்ட் மூன்" என்று குறிப்பிடுவது கலாபூர்வமான அதிர்ச்சியை நம்மிடம் நிகழ்த்துகிறது. (உலக இலக்கிய வாசக சாலை, 8,9,10) கைடி மாப்பசானின் படைப்புலகம் உலக இலக்கியத்தில் சிறந்த நாவல் ஆசியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்று பார்த்தால் பத்துப் பேருக்குமேல் இல்லை என்பதுதான் உண்மை. 'சிறுகதை' அவ்வளவு கடினமான, ஆழமான வடிவம். அந்த சிறந்த பத்து எழுத்தாளர்களும் பிரமித்து வியந்து பாராட்டக்கூடிய எழுத்தாளர்களின் எழுத்தாளர் கைடி மாப்பசான். பிறமொழி எழுத்தாளர்களை அதிகம் பாராட்டாத ரஷ்ய மேதைகள் அனைவரும் பல இடங்களில் மாப்பசானின் கதைகளை பொறாமையோடு சிலாகித்திருக்கிறார்கள். அன்புடன் செக்கால், "எதை எழுதினாலும் மாப்பசான் எழுதிய ஏதாவது ஒரு கதையின் சாயல் வந்து விடுகிறது" என்று ஒருமுறை எழுதியது பெரிய செய்தி. (உலக இலக்கிய வாசக சாலை, 17) காலையில் கரப்பான் பூச்சியாய் மாறிய மனிதன் "எழுத ஆரம்பித்தது எப்படி?" என்று நொபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸிடம் கேட்கப்பட்டது. அவர், "காப்காவின் The Metamorphosis கதையைப் படித்தேன், முதல்வரி படுக்கையிலிருந்து தூக்கி எறிந்தது. 'தொல்லை மிகுந்த கனவுகளிலிருந்து க்ரகோர் ஸாம்ஸா காலை விரித்தபோது படுக்கையில் ராட்சஸப்பூச்சியாக தான் மாறியிருப்பதைக் கண்டு' என்ற வரியை வாசித்த உடன் வியப்படைந்து, 'போல' எழுத யாருக்கும் அனுமதியுண்டு என்றறிந்த எழுதத் தொடங்கினேன்" என்று அதற்கு பதில் சொன்னார். (உலக இலக்கிய வாசக சாலை, 36) சிறுகதை மன்னன் சதக் ஹஸன் மாண்ட்டோ 'கடவுள் மீது ஆணையாக' என்ற சிறுகதை மாண்ட்டோவின் அற்புதமான ஒரு சிறுகதை. மிகவும் உருக்கமான சிறு காவியம். இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட காலத்தில் ஒரு கிழவி பைத்தியம் பிடித்தவள் போல அழகான தன் மகளைத் தேடி அலைகிறாள். முதலில் ஒரு அதிகாரி அவளிடம், "உன் மகள் கொல்லப்பட்டிருக்கலாம்" என்கிறார். தாய் நம்பவில்லை. சில மாதங்கள் கழித்து அதே அதிகாரி மீண்டும் அந்தத்தாயை சந்திக்கிறார். இன்னும் மோசமான நிலையில் தாய் "உன் மகள் செத்துப்போய்விட்டாள்" என்று சொல்கிறார் அவர். தாய் நம்பவில்லை. மூன்றாவது தடவையாக அந்தத்தாயை அந்த அதிகாரி சந்திக்கும்போது அவள் தன் மகளைப் பார்த்து விடுகிறாள். ஆனால் மகளோ தன் தாயைப்பார்த்தும், "வா.... இந்த இடத்தை விட்டுப் போயிடலாம்" என்று உடனிருந்த சீக்கிய இளைஞனோடு போய்விடுகிறாள். அந்த அதிகாரி அந்தத் தாயிடம், "கடவுள் மீது ஆணையாகச் சொல்றேன். உங்க பொண்ணு செத்துட்டா..." என்று சொல்கிறார். அதைக்கேட்டு அந்தக்கிழவி ஒரு குவியலாக வீதியில் விழுந்தாள் - என்று கதை முடிகிறது. இந்தக்கதை ஏற்படுத்தும் உணர்வை எப்படி விளக்க முடியும்? வாசகன் உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். (உலக இலக்கிய வாசக சாலை, 142, 143)
No comment