"பச்சை நிற முட்களை மறைக்கும் நினைவே இல்லாமல் - அடர்த்தியின்றிக் தனிர்த்திருக்கும் இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா - வெள்ளை ரோஜா. பார்க்கும் முன்பு செடியில் இருந்தது. பார்த்த போது கண்ணில் இருந்தது. இப்போது எனக்குள் இருக்கிறது" என்பது மாதிரி தான் ஒவ்வொரு கவிதையும். எழுதுகின்ற தருணத்தில் கவிஞனிடத்தில். வாசித்த பின்பு எனக்குள். அச்சில் ஏற்றியபின்பு உங்களிடத்தில் ஒட்டிக் கொள்ளும் தத்துப்பிள்ளை இந்தக் கவிதை ரோஜாக்கள். "என் கனவுகளைப் பேச நான் இன்னும் விழிக்கவில்லை" என்றொரு வரி உண்டு. இப்பொழுதுதான் விழித்து அவரது கனவுகளுடன் நம்மைக் கைகுலுக்க வந்திருக்கிறார் Zara. Zabi zabi என்ற Zara முகம் மறைத்து முகநூலில் கவிதைகள் எழுதிவந்தபோது என் நண்பன் அமிர்தம்சூர்யா மூலம் பலருக்கு அடையாளம் காட்டப்பட்டவர். அவ்வாறே எனக்கும் அறிமுகமானார். தற்போது தன் முகம் காட்டி, சமூக அச்சம், மனத்தடை நீங்கி தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிடும், இஸ்ஸாமிய சமூகத்தின் ஒரு புது சுதந்திர குரல் Zara வுடையது என்பதில் மிகை மகிழ்ச்சி. தமிழ்க்கவிதை வெளியில் ஆங்கிலத்தில் பெயர் பொறித்து வெளியிடுவது குறித்துப் புருவங்கள் உயரலாம். எனினும் அது அவரின் விருப்ப தேர்வு. Zaraவின் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் - திகட்டத் திகட்டக் கொஞ்சலோடு காதல் பேசும் பெண்குரல் தன் துக்கங்களைக் கதை வடிவிலான நீள் கவிதைகளில் குமுறும் குரல் தன் தொலைதலை அறிவிக்கும் கையறு நிலை குரல். Zaraவின் முதல் வகை கவிதைகளில் முத்தமிருகம், இரவல்வாழ்க்கை, உன்னை போல் அச்சில் வார்த்த வலி, வெட்க வேலி, மிருக சுகம் என்ற வார்த்தை சொக்கட்டான் ஆட்டத்தில் அசத்துகிறார். அதைப் படிக்கும்போது அமெரிக்கக் கவிஞன் அலென் கின்ஸ் பெர்க் எழுதுவானே. "காதல் ஒரு மழையைப் போல் என் மீது படிகையில் நான் ஏன் கவலைப்படவேண்டும் - அப்படி கவலைப் படாதவராகப் பர்தாவுக்குள் பெளர்ணமியாய் காதலில் பிரகாசிக்கிறார். பின் அவரே அக்காதலைச் சாடவும் செய்கிறார். அதற்கு ஒரு உதாரணம் பின் வருகின்ற நான் சிலாகித்த கவிதை இக்கவிதை - "பூனையைக் கொன்று விடு பயந்துபயந்து பூனைக்குட்டிப்போல் எனக்குள் நுழைகிறது. உன் ஞாபகங்களை முதலில் நக்கிப்பார்க்கும் மடியில் பதுங்கும் போகுமிடமெல்லாம் பின்னாடியே அலையும் பின்பு தான் கீறிப்பார்க்கும்" பூனையைக் கொன்றுவிடு எனும் சொற்றொடரில் சிலி நாட்டை சேர்ந்த நிக்கனார் பாராவின், "குழம்பி போகாதே ஒரே நேரத்தில் இரண்டு நகரங்களில் என்னைக் காண நேர்ந்தால் இரண்டு இடங்களிலும் நான் ஒரே மனிதன் தான்" என்ற வரிகள் நினைவிற்கு வர, இரண்டு மனநிலைகளைக் கவிதையில் காட்டும் Zara-வை உள்வாங்கிக் கொள்கிறேன். ரசிக்கிறேன் வியக்கிறேன். ஆம் என ஒப்புக்கொள்கிறேன். Zaraவின் இரண்டாம் வகை நீள் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ளது. புனைவால் பின்னப்பட்ட கடவுளின் ஆட்டம் கவிதையும், ரத்தமும் சதையுமாய் சமூகத்தை எதிரொலிக்கும் நா ச்சாதி வெறி புடிச்சவள்ளே என்ற கவிதையும் மழையை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாய் எதிர்கொள்ளும் கிராமத்து மழை என்ற கவிதையும் நீ என்னிடத்தில் இல்லை லிஸ்ஸி என்ற ஒரு இளம்பெண்ணின் கருக்கலைப்பு காட்சிப்படல கவிதையும் மனபிறழ்வில் நான் என்ற கவிதையும் வாசிக்க ருசியானவை. அதிர்வில் அச்சப்படவைப்பவை. ஆனால் ஒரு வேகத்தடை கவிதைசாலையில் வந்து விடுகிறது. அதற்கு காரணம். அவற்றின் உரையாடல் மொழிதான். Zara வுக்கு எழுத்தைக் கைப்பற்றத் தெரிந்து இருக்கிறது.அதில் தனது மகிழ்வை துயரை ஏக்கத்தை பதிவு செய்யவும் தெரிந்து இருக்கிறது.அதற்கு மூல காரணமாய் காதலை முன்னிருத்துகிறார். பெண்களின் அக மற்றும் புற உலகின் எல்லா நெருக்கடிகளும் வலிகளையும் நுட்பமாக உணரும் Zara, காதல் கவிதை எழுதும் போது அட என வியக்க வைக்கும் Zara, வலிகளை எழுதும் போது மட்டும் நீள் கவிதையாக கதைசொல்லி போல் உரையாடலுக்குத் தாவி விடுகிறார். அங்கு கவித்துவம் குறைந்து கூக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. "கவிதையில் சொற்சுருக்கம், நுட்பம், அழகியல், தொலைவு, ஒருங்கிணைந்த பார்வை வேண்டும்" அல்லவா? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையை, மெளனங்களை பொத்திவைக்கும் யுக்தியை, பெரும் எரிமலையை வார்த்தைச் சிமிழுக்குள் அடைக்கும் தன்மையை காதல் கவிதையில் புனைந்தது போலவே இதிலும் அவர் மடைமாற்றவேண்டும். "குட்டி மூங்கில் செடி பேன் காற்றில் அசைகிறது அது ஒற்றையாய், துரதிருஷ்டத்தோடு போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நான் ஓரத்தில் நிற்கிறேன் அது, தோற்க நேரிடும் போது கூட நிற்பதற்கு" எனும் கவிதைப்போல எளிமையில் ஆழம் சேர்க்கின்ற நயம் கைகூடி வரவேண்டும். கூடிய விரைவில் வரும். இனி வரும் காலத்தில் காதல் கவிதைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து Zara வின் எழுத்து பயணம் அடர்த்தியான, சமூகத்தில் அதிர்வு எழுப்பும் பெண்ணின் மனமறைவு வலிகளை காட்டும், தன் இனத்துக்கு புது பாய்ச்சல் எழுப்பும் சமூகமாற்றக் குரலாக கட்டமையவேண்டும். அது அவரால் முடியும். அதற்கான தகுதி அவருக்கு உண்டு. அதற்காக இப்போதே என் வாழ்த்துக்கள். மூன்றாம் வகை கவிதைகள்அளவில் நடுத்தரமானவை - கூடவே, அவை எடுத்துக்கொண்ட கருப்பொருள்களும் மிக வித்யாசமானவை. ஒட்டுமொத்த கவிதைகளில் நான் இந்த பிரதியில் உணர்ந்தது என்னவெனில் காதலும் காதலின் பொருட்டான தொலைதல் நிமித்தமும் தான். இதை எளிதாக வரையறுத்து விடலாம். "ஞாபகம் வருவதுண்டு எனக்கு, மணலில் படுத்தும் அமர்ந்தும் நாம் பங்கிட்ட அந்தரங்கமான அந்தமாலை நேரம், எப்படி வீசியெறிந்தாலும் சுழன்று திரும்பும் அந்த அந்தி!" என சொல்லும் ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை போல, Zaraவின் கவிதைகளில் சுழன்று சுழன்று திரும்பும் அந்தி அத் தொலைதல் தான். ப்ளாட் எண் 67/4 என்ற கவிதையில், பரஸ்பர மானுட அக்கறையின் ஸ்பரிசம் தொலைந்து போனதைச் சொல்கிறார். ஒற்றைக்கொலுசு கவிதையில், "முழுதும் தொலைந்ததும் மொத்தம் தொலைத்ததும்" என்று எழுதிச்செல்கிறார். "தொலைந்தது, தொலைத்தது" என்பதில் நுட்பமான வித்யாசம் இருந்தாலும் இறுதி முடிவு என்னவோ இழப்பு தானே. "நிராகரிப்பின் வலியாய் கடற்கரையில் ஒருத்தி முணுமுணுத்தபடி சுற்றிக்கொண்டு இருந்தால் அவளது அம்முணகலைக் காது கொடுத்து கேள். தொலைச்சுட்டேன், தொலைச்சுட்டேன் என்றுஅவள் பிதற்றக்கூடும். அது என் பிரதியாக இருக்கக்கூடும். இல்லை அது நானாகவும் கூட இருக்கக் கூடும்" எனும் Zaraவின் குரல் தன்னிலையின் குரல் மட்டுமல்ல. நிராகரிப்பின் வலியில் துவளும் அனைவருக்குமானது. அதன் எதிரொலியைப் புரிந்து வாசித்து உள்வாங்குதலே உண்மையான பகிர்வனுபவம். அசல்முகம் தொலைப்பது என்பதைக் கடந்து முகமூடிகளும் கூடத் தொலைந்து போவதாக ஒரு கவிதை சொல்கிறது. இது அபாக்கியமா? பெண் வாழ்வின் அபத்தமா? என்ற கேள்வி எழும்புகிறது. "உன்னைத் தேடுதல் என்பது தொலைவதற்காகத் தான்" என்ற வரிகளை வாசிக்கையில், தேடுதல் என்பது தொலைவதற்காக இல்லாமல் கண்டடைவதற்கானதாக இருந்தால் அத் தொலைதலில் ஒரு நியாயப்பிரமாணம் இருக்குமே என்று சொல்லத்தோன்றுகிறது. இது இப்பிரதியின் படைப்பாளிக்கானது மட்டுமல்ல, பெண்கள் அனைவருக்குமானதே. "கையில் ஒரு விளக்கேந்தி என்னைச் சந்திக்க வரவில்லை யாரும். நானே எனக்கு வழிகாட்டிக் கொண்டு அந்த மங்கிய நிலவொளியில் படிகளில் எறிச் சென்றடைய வேண்டியிருந்தது" என்றதும் ஒரு பெண்குரலே. அது புலம்பலற்று, தனிமையின் உரமுடன் தனது தேடலைச் சென்றடைந்த பூர்த்தி எல்லாப் பெண்களுக்குமானதே!. மற்றொரு கவிதையில் "தொலைதல் உனக்குப் பிடிக்கிறது. கடைசியாய் தொலைந்தது கலவியின் போது தான்" என்கிறார் Zara. இந்த தொலைதலில் இரு தரப்பும் தொலைந்து ஒரு தரப்பை கண்டடைதல் எனில் தவறில்லை. ஆனால் தனதான இருப்பே தொலைவது இங்கு தான் எனில், கலவியும் அடக்குமுறையின் அரூபவடிவமாகப் புலப்படுமாயின் அந்த அடக்குமுறையும் கண்டனத்துக்குரியது தானே. தீராத ருசியே ஒரு தண்டனைதான் - கலவி அப்படிப்பட்டதொரு தண்டனையெனில், அதில் தொலைதல் சுகமாவது ஆண், பெண் இருவரும் சுயம் மறந்து, தொலைந்து, கலந்து துய்க்கும் போதுதானே? "நீ மறைத்த பலான புத்தகத்தை எடுத்து இரண்டாம் பக்கம் திருப்பும் போது எதிர்ப்பட்ட உன்னின்பார்வைகளை சந்திக்க முடியாமல் தொலைந்து மடிந்து போயின என் பால்யத்தின் பொழுதுகள்." என்றகவிதை வரிகளில் பால்யத்தை தொலைப்பதற்கும் ஒரு ஆண்மகனே காரணமாயிருக்கிறான். பல தொலைதலுக்கு அவனின் காதலே பிரதானாமாகிறது, ஆக, பிரதி முழுக்கத் தென்படும் எல்லாத் தொலைதல்களுக்கும் அடிப்படை காதலாகவே இருக்கிறது. இப்படியான அந்த காதலுக்குரியவனை Zara அவாச்சியமானவன் என்று அடையாளப்படுத்துகிறார். அச்சொல் எனக்கு புதிது. அவாச்சியமானவன் என்றால் குறிப்பிடத்தகாதவன் என்று பொருளாம். அவாச்சியமானவன் கொடுத்த மகிழ்ச்சியை கவிதையில் பட்டியல் இடும் படைப்பாளி அவன் கொடுத்த துயரங்களை வலிகளையும் மறக்காமல் எழுதி செல்கிறார். அந்த அவாச்சியமானவன் ஒற்றை நபர் அல்ல. அவன் எல்லா ஆண்களுக்குள்ளும் மறைந்து இருக்கும் வேறொரு நபர். அவன் மீதான கொண்டாட்டமும், அவன் மீதான குற்றப்பத்திரிக்கையும், அவன் மீதான வாழ்த்தும், அவன் மீதான சாபமும் தான், Zara என்ற இந்தப் பெண்குரலின் தொகுப்பு. இந்த குற்றச்சாட்டை நீக்கும் வழிமுறைகளைத் தேடி, இந்த சாபத்தை வரமாக மாற்றும் திட்பம் அல்லது சாபத்தை அறுத்தொழிக்கும் நுட்பத்தை இனி வரும் காலங்களில் Zara முன்னெடுக்கலாம். வாழ்வு அப்படித்தானே எல்லாம் கலந்ததொரு அபத்தம் - ஆனாலும் தீராத ருசி அதன் மீது தானே நமக்கு! பெஞ்சமின் பெரேயின் பின்வரும் கவிதையைப் பாருங்கள் - "இரவு முழுவதும் காதல் முடித்து எழுந்திருக்கும் ஒரு பெண்ணைப் போல காற்று எழுகிறது. தன் பைனாகுலர்களைச் சரி செய்து கொண்டு உலகைப் பார்க்கிறது, ஒரு குழந்தையின் கண்களுடன். எப்போதுமே பழுக்காத ஒரு பச்சை ஆப்பிளைப் போல இன்று காலை இருக்கிறது... கசப்பாக... மகிழ்ச்சியாக" எப்போதும் பழுக்காத அந்த பச்சை ஆப்பிளை ஏவாளைப் போல ஏந்துங்கள் Zara. பயணம் தொடரட்டும். * * * * *
No comment