அந்நிய நிலத்தின் பெண் – மனுஷிய புத்திரன் புத்தக வெளியீடு பேச்சு – 25.12.2014

நான்கு பேர் பைன் மரத்தைப் பற்றிப் பேசினர். ஒருவன் அதைப் பேரினம், சிற்றினம், வகைப்பாடு ரீதியாக வரையறுத்தான். ஒருவன் மரம் அறுப்புத் தொழிலுக்கு அதன் பாதகச் சூழலை மதிப்பிட்டான். பைன் மரங்கள் பற்றிப் பல மொழிகளிலிருந்து கவிதைகளை மேற்கோள் காட்டினான் ஒருவன். ஒருவன் வேர்விட்டு, கிளைபரப்பி, இலைகள் கலகலத்தான். (சமகால உலகக் கவிதைகள் பிரம்மராஜன் : 378)
	நான் மேற்சொன்னவற்றின் முதல் மூன்று வகையறாவாகக் கவிதை பற்றி வாய்கிழியப் பேசுகிறேன் - ஆனால் மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் படைக்கிறார். அதிலும் திகட்டத் திகட்டக் காதல் கவிதைகளை.

என் வாக்குமூலங்கள்
	என்னை 
	ஏன் பிடிக்கும் 
	என்றாள் 
	கன்னத்தோடு 
	கன்னம் வைத்தபடி 

	உன்னைப் பிடித்திருப்பதால்தான் 
	இந்த உலகின் 
	அத்தனை பெண்களையும் 
	எனக்குப் பிடிக்கிறது என்றேன் 
	காதோடு 
	காதாக 
	(அந்நிய நிலத்தின் பெண் - 274) 
	இந்தக் காதலனின் காதல் கவிதைகள் குறித்து மட்டுமே இங்கு பேசலாமென்றிருக்கிறேன். 
	கவிஞர்கள் ஊறு விளைவிப்பார்கள் என்ற காரணத்தால், அவர்களுக்குப் பிளேட்டோ தன்னுடைய லட்சியக் குடியரசில் தடை விதித்தார். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 62)
	மனுஷ்ய புத்திரனின் காதல் கவிதைகளைப் படிக்க நேர்ந்தால் இன்றைய கலாச்சாரக் காவலர்களோடு சேர்ந்து, தனது தடையை அவர் மேலும் உறுதி செய்வார். மனுஷ்ய புத்திரனின் முந்தைய தொகுப்புக்களை விட இந்த அந்நிய நிலத்தின் பெண் மனம், புறம் சார்ந்த தடைகளை முற்றிலுமாகத் தகர்ந்தெறிந்து விட்டுக் காதலைக் கொண்டாடுகிறது.

மகத்தான காதல் கவிதை - 2014
	உன்னைப் பற்றிய 
	என் மகத்தான
	காதல் கவிதையை 
	இப்போதே படி 
	என்று செய்தி அனுப்பினேன்

	'பாதிப் புணர்ச்சியில் இருக்கிறேன் 
	முடிந்ததும் 
	கட்டாயம் படிக்கிறேன்" 
	என்று ஒரு ஸ்மைலியுடன் 
	பதில் அனுப்பினாள் 
	(அந்நிய நிலத்தின பெண் : 229)
	மேலோட்டமாகப் பகடிக் கவிதை என்றெடுத்துக் கொண்டாலும், wry humour என்பது மனுஷ்ய புத்திரனின் நடை உத்தி என்றாலும், இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டுக் காதலின் ஒட்டு மொத்தக் குறியீடு. காதலற்ற காமம், காதல் தவிர்த்த காமத்தினை இயல்பெனக் கொள்தல், முற்றாக "ஒரு ஸ்மைலியுடன் வரும் பதிலில்" தற்காலத்தில் Virtual Icons ஆகிவிட்ட உணர்வுக் குறியீடுகளென, மேற்சொன்ன கவிதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.
	பின்வரும் எனக்கான காதல் கவிதையும் அப்படித்தான் –
	'எனக்காக
	ஒரு காதல் கவிதை
	எழுது' 
	என்றாள்

	பிறகு
	சிரித்துக்கொண்டே
	அதில் ஒரு சிறிய திருத்தம் செய்தாள்

	'அதில் 
	எனக்கான காதல்தான்
	இருக்க வேண்டும் என்று
	எந்த நிர்பந்தமும் இல்லை'
	(அந்நிய நிலத்தின் பெண் : 448)
	ஆனால் தொகுப்பிலுள்ள பிற காதல் கவிதைகள் அற்புதமானதொரு, ஆழமிக்க, வேட்கை மிகு தீவிரக் காதலைப் பேசகின்றன. எத்தனை பகடி, நகைமுரண், sarcasm, irony, wry humour இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, இக்காதலுணர்விற்கு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்த, தன்னை முற்றாக வெறுத்தொகுக்குகின்ற பெண்ணிடமும் கூடத் தனது காதலுணர்வின் சீழ் வடியும் ரணத்தைக் காட்டிக் கசிந்துருகும் தொழு நோயாளியைப் போலவும், அதே சமயத்தில் போதத்தில், காதலுணர்வின் சகல சுகத்திலமிழ்ந்தபடி தோல்வியில் வெற்றிகாணும் பெருமிதத்திலுமென - இரு வேறு எதிர் நிலைகளில் இயங்குகின்ற காதலை மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெகு நுட்பமாகப் பதிவு செய்கின்றன.
	"மொழி சார்ந்த சங்கேதம் என்பது உலகம் பற்றிய ஒரு கோட்பாடாகவே இருக்கிறது. வெவ்வேறு மொழிகள் உலகத்தை வெவ்வேறு விதமாகப் பிரிக்கின்றன. ஆங்கிலம் பேசுபவர்கள் செல்லப் பிராணிகளாகப் 'பெட்ஸ்' வைத்திருக்கிறார்கள்; ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஏராளமான எண்ணிக்கையில் நாய்களையும் பூனைகளையும் வீடுகளில் வைத்திருந்தாலும் 'பெட்ஸ்' என்ற பிரிவுக்கு ஒப்பான பதம் ஃப்ரெஞ்ச் மொழியில் இல்லை. ஒரு சிசுவைப் பற்றிப் பேசும்போது ('அவன்', 'அவள்', என்று) சரியானப் பிரதி பெயர்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகச் சிசுவின் பாலைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆங்கிலம் நம்மை வற்புறுத்துகிறது (குழந்தையை 'அது' என்று உங்களால் குறிப்பிட முடியாது). இவ்வாறு பால் முக்கியமானது என்று நமது மொழி உணர்த்துகிறது (பேசுபவர்களுக்குச் சரியான விடையைச் சமிக்ஞை செய்யும் இளஞ்சிவப்பு (பெண்) அல்லது நீல நிற (ஆண்) ஆடைகளின் ஜனரஞ்சகத்தின் தோற்றுவாய் இதுதான் என்பதில் சந்தேகமில்லை). ஆனால் பாலை இப்படி மொழி ரீதியாகக் குறியிடல் செய்வது எவ்வழியிலும் தவிர்க்க முடியாததல்ல. எல்லா மொழிகளும் பிறந்த குழந்தைகளின் பாலை ஒரு முக்கிய அம்சமாக ஆக்குவதில்லை. இலக்கண அமைப்புகள் கூட ஒரு மொழியின் மரபுகளேயாகும். அவை இயற்கையானவையோ தவிர்க்க முடியாதவையோ அல்ல. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, ஒரு சிறகடிப்பைக் கண்டால் 'பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன' என்று சொல்வதற்குப் பதிலாக 1 'It's winging' (1 It's raining என்று நாம் சொல்வது போல) என்று சரியாகவே நம்முடைய ஆங்கிலம் நம்மைச் சொல்ல வைக்க முடியும். 'போல் வெர்லேனின் (Paul Verlaine)'2 பிரபலமான ஒரு கவிதை இந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது: 'II pleure dans mon coeur I comme il pleut sur la ville' (1 It cries in my heart, as it rains on the town). 1 'It's raining in the town' என்று நாம் சொல்கிறோம்; 1 'It's crying in my heart' என்று ஏன் சொல்லக்கூடாது?" (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 93,94,95)

போகத்திலிருப்பது
	போகத்திலிருப்பது 
	பூமியிலிருந்து
	மேல் நோக்கிச் செல்வது
	போலத்தான் இருக்கிறது
	ஆனால் நாம் ஒரு பறவையைப் போல
	மேலே செல்வதில்லை
	மாறாக 
	ஒரு தீபாவளி ராக்கெட்டைப் போல
	செல்கிறோம்
	(அந்நிய நிலத்தின் பெண் : 372)
என்று மனுஷ்ய புத்திரன் எழுதுகையில், மொழி ரீதியாக வழமையான குறியிடல் செய்வதை மீறித், தீபாவளி ராக்கெட் வெடியின் விடுதலைக் கிளர்ந்துணர்வை போகத்திலிருப்பதற்கு ஒப்பிடுகிறார்.
	போல் வெர்லென் (Paul Verlaine, 1844-96) மிகப் பரவலான பாதிப்பு செலுத்திய ஃப்ரெஞ்சுக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் இன்னொரு ஒற்றுமையுண்டு. எளிதில் வசப்படாமல் நழுவிச் செல்லும் கணங்களைப் பற்றி எழுதியவர் போல் வெர்லென் குரலை உயர்த்தாமல், அதை மிகைபடச் சொன்னவர் அவர். கவிஞன் என்பவன் தார்மீகத்திற்கு வெளியே சுயேச்சையாகச் செயல்படுபவன் என்றார். தார்மீதத்திற்கு வெளியே தனது காம, காதலுணர்வினை வேஷமின்றிப் பேசுகின்றன மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பின் காதல் கவிதைகள். 
	காதல் அதி தீவிர இன்பம் vs அதிதீவித் துன்பம் எனும் இரண்டு Extreme Ends இலும் இக்கவிதைகளில் வைத்துப் பேசப்படுகிறது. வழமையான ஆண் பெண்ணை மோகித்துப், தேவதை அல்லது சாத்தான் எனப் போற்றித் தூற்றும் கவிதைத் தடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, பெண்ணை முன்னிறுத்தி, அவளது உணர்வினை முக்கியப்படுத்தி, அவளே ஆளுகை செய்கின்ற, அரசியாயிருக்கின்ற Female Alpha Poems இவை. ஒரு ஆண்மகனால் இந்த அளவிற்கு ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியுமா, அப்படியே புரிந்து கொண்டாலும், அவளை எடை போடுதலற்றுக், குறிப்பாக unconditional ஆக, அவளை உடைமையாக்க முனையாமல், அவளுக்கு விடுபடுதலின் சுதந்திரத்தை மட்டுமே காதலின் பரிசாகத் தர முடியுமா? என்னும் பல கேள்விகளுக்கு இயலும், முடியுமென்கின்ற ஒரு ஆண் மனதை முன்வைக்கின்றன இக் கவிதைகள்.
	உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Verner Hersak இன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு எழுத்தாளரது புத்தகத்தில் வாசித்து அயர்ந்து போனேன். ஒரு முறை ம்யூனிக்கிலிருந்து பாரிஸீக்கு நடந்தே சென்றார் ஹெர்சாக். இதைப் பற்றி If walking on Ice எனும் புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது தோழியும் சினிமா விமர்சகருமான Liot Eisner என்பவர் பாரிஸில் மரணப்படுக்கையில் கிடந்த போது அவரைப் பார்ப்பதற்காக ம்யூனிக்கிலிருந்து Hersak நடந்தே சென்றபோது கடும் குளிர்காலம். போய்ச் சேர அவருக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. அப்படி நடந்து போனால் ஐஸ்னர் பிழைத்து விடுவார் என்று Hersak நம்பினார். அவ்வாறே நடந்து ஜஸ்னரும் பிழைத்துக் கொண்டார்.
	மனுஷ்ய புத்திரனும் தனது காதலுக்காக, அதுதரும் இன்ப, துன்பம், ஆட்படல், விடுபடல், வரம், சாபம் - இவைகளுக்காக இப்படி நடந்து போகக் கூடியவர்தான் என்பதை இக்கவிதைகள் நிரூப்பிக்கின்றன. 
	"ஒரு காதலைப் புரிந்து கொள்ள
	இன்னொரு காதல்
	தேவையாக இருந்தது"
எனும் தேடல் ஒரு முடிவுறாத் துயரம் தான். தீயின் நாக்கைத் தீண்டுதல் ருசியா அல்லது புண்படுதலா எனும் புதிரின் மாயவிடையை இதுவரை உலகின் எந்தக் காதலர்களாவது அறிந்திருக்கிறார்கள் என்ன?
பின்வரும் தொகுப்பின் இக் கவிதையைப் பாருங்கள்.

காமுகன்-6
	எப்படியெல்லாமோ
	புதிதாக இருக்கிறாள்
	என்னென்னவோ
	நடனங்களை உருவாக்குகிறாள்
	ஒரு சொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே
	பெருகிறது அர்த்தங்களின் நதி
	ஒரு பார்வைக்கும் மறு பார்வைக்கும் நடுவே
	அவள் வேறொருத்தியாகிறாள்
	மழையில் கண்டதுபோல இல்லை
	வெயிலில் கண்ட பெண்
	படிகளில் இறங்கும்போது ஒரு கோலம்
	படியில் அமர்ந்திருக்கையில் இன்னொரு கோலம்
	இருளிலும் இருக்கிறாள் சிறு வெளிச்சமாக
	பெரும் வெளிச்சத்தில் உருக்கொள்கிறாள்

	சிறு இருட்டாக
	பார்க்கப் பார்க்கப்
	பார்த்துத் தீர்வதில்லை
	பார்க்கக் கிடைத்த ஒருத்தியை

	இருந்தும் 
	எப்போதும்
	இரு முலைகளுக்கும்
	ஒரு யோனிக்கும் அப்பால்
	எதுவும் காணக் கிடைக்காமல்
	தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான்
	காமுகன்
	(அந்நிய நிலத்தின் பெண் : 131)
	காதலால் இன்புறுவதற்கும், காமத்தால் இன்புறுவதற்குமான அதிநுட்பமான வேறுபாட்டை இக்கவிதை அவ்வளவு அச்சொட்டாக முன்வைக்கின்றது. இங்கு சிந்தனையாளர் காண்ட்டின் மிக நுட்பமான, ஆனால் அதி முக்கியமான எச்சரிக்கையொன்று நினைவிற்கு வருகின்றது. காமம் தொட்டுத் தழுவினாலும், காதல் தியானித்துப் பிரிக்கின்ற இவ் உணர்வின் உன்னத அனுபவத்தைக் காண்ட்டின் கைவிளக்கு நமக்குச் சுட்டலாம்.
	அழகால் இன்புறுவது, வேறுவிதமான இன்பங்களிலிருந்து தனித்தன்மையுடையது என்று காண்ட் எச்சரித்தார். "என் தோட்டத்திலிருக்கும் பழுத்த ஸ்ட்ராபெரி (Strawberry) களிப்பூட்டும் சிவந்த நிறம், மிருதுத்தன்மை, மணம் ஆகியவற்றோடு இருப்பதால் அதை என் வாயில் போட்டுக்கொண்டேனென்றால் என் அழகு இரசனை மாசுபட்டதாகும். நம் எதிர்வினை (response) அசிரத்தையானதாக இருக்க வேண்டும் என்று காண்ட் நினைக்கின்றார். அதன் குறிக்கோள் (purpose) அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்தியங்குவதாக (independent) இருக்க வேண்டும். இத்தாலிய ஓவியர் போட்டிசெல்லியின் வீனசை ஒரு கவர்ச்சிப் பாவையாக நினைத்து ஒரு பார்வையாளர் காம இச்சையோட எதிர்வினை செய்தால், அவர் அவளை, அவள் அழகுக்காக இரசிக்கவில்லை. பிரஞ்ச் ஓவியர் காகினின் (Gauguin) டாஹிட்டி (Tahiti) ஓவியங்களைப் பார்த்து, அங்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லலாம் என்று ஒருவர் கற்பனை செய்யும்போது அவற்றின் அழகோடுள்ள அழகியல் முறையான உறவு அவருக்கு அறுந்துவிட்டது என்று பொருள்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 13)
	காதல் எனும் உணர்வை மேற்சுட்டும் அழகு எனும் கருத்தியலோடு ஒப்பு நோக்கித் துய்க்கச் சொல்வது
	"பார்த்துத் தீர்வதில்லை
	பார்க்கக் கிடைத்த ஒருத்தியை"
என்றாலும்,
அதன் குறிக்கோள் அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்து இயங்குவதாக இல்லை என்பதை
	"இருந்தும் எப்போதும்
	இரு முலைகளுக்கும்
	ஒரு யோனிக்கும் அப்பால்
	எதுவும் காணக் கிடைக்காமல்
	தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறேன்"
	காமுகன்"
எனும் கவிதை அப்பட்டமாகச் சொல்கிறது. அவ்வகையில் தொகுப்பின் காமுகன் கவிதைகளிலிருக்கின்ற இந்த இரட்டை நிலை காமுகி கவிதைகளுக்கு இல்லை. தொகுப்பின் காதல் தொனியே (the love of Love in this Collection) காமத்தை புலன்களால் துய்த்துவிட்டு, அறிவால் அதனை unemotional ஆகக் கடந்து போகின்ற, ஆணின் புணர்ச்சி சங்கேதம் மட்டுமே காதல் எனப் பகடி செய்கின்ற பெண் குரல்தான். விதிவிலக்காக அனுசூயாக்களும், (அனுசூயாவிற்கு எழுதிய கடிதம்), பதிலாக ஒரு காதல் கடிதம் கூட வரப்பெறாத மீனாக்களும் இருக்கிறார்கள் தாம்!
	ஆனால் அவர்களையெல்லாம் கதம் செய்துவிட்ட, அதகளக் காமுகியின் தொனியே தொகுப்பின் பிரதானம். காண்ட்டின் சித்தாந்திற்கு முற்றிலும் எதிர் நிலையில் காமுகன் நிற்கிறான். ஆனால் முழு ஒத்திசைவில் நிற்கிறாள் காமுகி:
	"வார்த்தைகளுக்கு
	எப்படி உயிரூட்டியிருக்கிறேன் பார்
	என்று காமுகியிடம்
	என் கவிதைகளை நீட்டினேன்
	ஒரே ஒரு கெட்ட வார்த்தைக்கு
	உயிர் கொடுக்க முடியுமா
	உன்னால்
	என்கிறாள் காமுகி
	கண்களைச் சிமிட்டிக் கொண்டே
எனும் கவிதையே அதற்குச் சான்று.
	"காண்ட் ஒரு ஆழ்ந்த பற்றுள்ள கிறித்தவர். ஆனால், கலை மற்றும் அழகுக் கோட்பாடுகளை விளக்குவதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. புலனால் அறியப்படும் ஒருபொருள் நம் உணர்ச்சிகளையோ, அறிவையோ, கற்பனையையோ தூண்டி விடும்போது அழகியல் அனுபவம் ஏற்படுகிறது என்பது காண்டின் கருத்து. இந்தத் திறன்கள் கட்டுப்பாடற்ற முறையில் தூண்டப் படுகின்றன; ஒருமைப்படுத்தப்பட்ட, முனைப்பான முறையில் அல்ல. ஒரு அழகான பொருள் நம் புலன்களைக் கவர்கிறது; ஆனால், ஈடுபாடற்ற, பற்றற்ற முறையில் ஒரு அழகிய பொருளின் வடிவமும் வடிவமைப்பும்தான் எல்லாவற்றிலும் முக்கியத் தன்மையான 'குறிக்கோள் இல்லாக் குறிக்கோளின்' அடிப்படை. ஒரு பொருளின் பயன்பாட்டை நாம் மதிப்பீடு செய்யாமலேயே, நம் கற்பனையையும் அறிவையும் திருப்திப்படுத்தும், அப்பொருளின் சரியான வடிவமைப்பிற்கு நாம் எதிர்வினை செய்கிறோம்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 13,14)
	அப்படிப் பார்த்தால், காதல், காமம் எனப்படுகின்ற அடிப்படை உணர்வினைக் கருப்பொருளாகக் கையாள்கின்ற ஒரு கவிஞனுக்கு அவ்வுணர்வுகளின் வடிவமைப்பிற்குக் காண்ட்டின் கூற்றுப்படி மிகச் சரியான எதிர்வினை செய்பவள் காமுகியான பெண்தான்.
	தலைப்புக் கவிதையான பின்வருகின்ற அந்நிய நிலத்தின் பெண் மிக முக்கியமான கவிதை :
	காமத்தின் கதவுகளை
	ஒரு அந்நிய நிலத்தின் பெண்
	தட்டுவதுபோல வேறு யாரும் தட்டுவதில்லை
	கனவின் ஊற்றுகளை
	ஒரு அந்நிய நிலத்தின் பெண் திறப்பதுபோல
	வேறு யாரும் திறப்பதில்லை.

	ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணின் உடலில்
	அப்படி என்ன இருக்கிறது
	என்பதற்கு வரலாற்றில் இதுவரை
	பதில்கள் இல்லை
	ராவணன் சீதையை ஏன் கவர்ந்து சென்றான்
	என்பதற்கான பதிலில்
	இன்னும் அறியப்படாத ஒன்று இருக்கிறது

	ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணைக் கைவிட்டு
	அல்லது அவளிடம் தோல்வியடைந்து
	திரும்பிச் செல்பவர்கள் யாரும்
	ஒருபோதும் 
	தங்கள் சொந்த நிலங்களுக்குத்
	திரும்புவதே இல்லை
	(அந்நிய நிலத்தின் பெண் : 309)
	இதை எழுதிய மனுசிய புத்திரனனின் ஆளுமையில் இசை மேதை ரிச்சர்ட் வாக்னரின் (1813 - 1883) பார்சிபல் இசைநாடகத்தின் தாக்கமிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. .
	"வாக்னர் புனைவியல் மேதை என்ற பட்டத்திற்கு மிகப் பொருத்தமாக விளங்கினார் என்று கூறக் காரணம், அவரது கொந்தளிப்பான காதல் வாழ்க்கை, வெறித்தனமாக ஆர்வலர்கள், அவறூறுகளிலிருந்தும் கடனிலிருந்தும் தப்பி ஓடியமை, பின்னர் பன்னாடுகிளல் புகழ்பெற்றமை போன்ற நிகழ்வுகளே. நற்பேற்றால் அவர் பவேரிய அரசன் இரண்டாம் லுட்விக்கின் ஆதரவைப் பெற்றார். இவ்வரசன் அவருக்குப் பேய்ருத்தில் (Bayreauth) கட்டிக் கொடுத்த வீடும் அரங்கமும் வாக்னர் இரசிகர்கள் புனிதப் பயணம் செல்லும் இடமாக இன்றும் விளங்குகிறது (அனுமதிச் சீட்டுக்காகக் காத்திருப்போர் பட்டியல் - ஏழுவருடங்கள்).
	வாக்னரின் பார்சிபல் இசைநாடகத்தின் கதையில் துன்பம் போற்றப்படுகிறது. இதில் ஒரு முழு முட்டாளாக இருந்து இன்னல்களால் அறிவாளியான ஒரு இளவீரனின் வாழ்க்கைப் பாதையைத் தொடர்கிறோம். விமரிசகர்கள் ஒன்று அதை விரும்புகிறார்கள் அல்லது அதை வெறுக்கின்றார்கள்; சிலர் அதை விழுமியது (Sublime) என்றும் சிலர் அதை நசிவுத்தன்மை (decadent) உடையதென்றும் கூறுகிறார்கள்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 46,47)
	மனுஷ்ய புத்திரனின் மொத்தக் கவிதைகளையும் சிலர் விழுமியது (Sublime) எனவும் பலர் நசிவுத்தன்மை (decadant) உடையதென்றும் விமர்சிப்பார்கள்.
	இரண்டுதன்மையும் உடையவையே அவரது கவிதைகள் என்பேன் நான். அதற்கான உதாரணமாக அந்நிய நிலத்தின் பெண் மேற்சொன்ன கவிதையையே சுட்ட முடியும். 
	ஒரு சேர விழுமியம், நசிவுத்தன்மை இரண்டையும் பேசுகிறது இது:

	"அந்நிய நிலத்தின் பெண்ணிடம்
	நிபந்தனையற்று ஒரு ஆண் மண்டியிடுகிறான்
	அந்நிய நிலத்தின் பெண்ணை
	அச்சமற்று வெல்ல விரும்பினான் 
	ஒரு நிலத்தில் வாழும் ஆண்கள்
	இன்னொரு நிலத்தின் பெண்களை 
	எப்போதுமே கனவு காண்கிறார்கள்
	அவர்கள் யுத்தங்களில்
	அரசனுக்காகவோ
	தேசத்திற்காகவோ
	ரத்தம் சிந்துவதில்லை
	அந்நிய நிலத்தின்
	பெண்களை வேண்டியே
	தங்களின் ரத்தத்தைச் சிந்துகிறார்கள்"
	....
	....
	"ஒரு அந்நிய நிலத்தின் பெண் ஆணின் கண்களை
	அவன் எந்த நிலத்திலிருந்து வந்தானோ
	அந்த நிலத்தைக் கைவிடச் செய்கிறாள்
	அந்த நிலத்திற்குத் துரோகம் செய்கிறாள்
	(அந்நிய நிலத்தின் பெண்)
என்பதில் நசிவுத்தன்மையும்,
	ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணின் உடலில்
	அப்படி என்ன இருக்கிறது
	என்பதற்கு வரலாற்றில் இதுவரை
	பதில்கள் இல்லை
	ராவணன் சீதையை ஏன் கவர்ந்து சென்றான்
	என்பதற்கான பதிலில்
	இன்னும் அறியப்படாத ஒன்று இருக்கிறது

	ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணைக் கைவிட்டு
	அல்லது அவளிடம் தோல்வியடைந்து
	திரும்பிச் செல்பவர்கள் யாரும்
	ஒருபோதும் 
	தங்கள் சொந்த நிலங்களுக்குத்
	திரும்புவதே இல்லை
	(அந்நிய நிலத்தின் பெண் : 309)
என்பதில் விழுமியமும் கலந்தே இருக்கின்றன.
	இன்னுமொரு பொருத்தப்பாடும் வாக்னருக்கும், மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொனி, (tone) அடுக்குகள் (textures) வெளிப்பாடு (expression) இவற்றிற்கும் உண்டு. இவ்வளவு நுட்பமாக, sublime ஆக அடிப்படை மனித உணர்வுகளை, அன்றாடத்தின் கணங்களை, நகரும் காலத்தின் நிழல்களை, ஒரு கவிதையில் பிடிக்க முடியுமா எனும் வியப்பை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மறுக்கவில்லை - ஆனால் ஒரே மாதிரியான மொழி நடை (style) சலிப்பை ஊட்டுகின்றது என்றும் விமர்சிப்பர். இப்போக்கு, எனக்கு வாக்னரின் பார்சிபல் நாடகத்தின் மிகக் கடுமையான திறனாய்வாளர்களில் ஒருவரான தத்துவஞானி நீட்சேவின் விமர்சனத்தை நினைவுபடுத்துகிறது. 
	"1876இல் வாக்னரின் குற்றவியல் நீதிபற்றிய 'ரிங்' நாடகத்தின் முதல்காட்சியில் பார்வையாளர்களோடு இருந்து (இசை அமைப்பாளர் லிஸ்ட் சைக்காவ்ஸ்கி, அரசர்கள், அரச குலத்தவர்கள் கும்பலோடு) பார்த்த, அவரின் முன்னாளைய ஆர்வலரான நீட்க்ஷே அவரை 1868இல் சந்தித்ததற்குப்பின் இருவரும் நண்பர்களாயினர். நீட்சேயின் நூல் அவல் நாடகத்தின் பிறப்பு (1872), வாக்னருக்கு அர்ப்பணஞ்செய்யப்பட்டது. அதில் வாக்னரை மனதல் வைத்தே அவல நாடகத்தின் மறுபிறப்பபைப்பற்றி மிகச்சிறப்பாகக் கூறப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மொழியறிஞரும் இளம் பேராசிரியருமான நீட்ஷே, கிரேக்கத் தெய்வமான டயனீசியஸின் வழிபாட்டிலிருந்து துன்பியல் நாடகம் பிறந்ததை விளக்கினார். வாழ்வின் பெருந்தத்துவமே, 'அர்த்தமோ நீதியோஅற்ற வன்முறையும் துன்பமும்' என்பதை அவரது அவல நோக்குக் காட்டியது. துன்பியல் நாடகங்களின் 'அப்பல்லோனியன்' (கட்டமைப்பிற்குள் இருப்பது) கவிதையின் அழகு, இசை மற்றும் ஒத்திசைவு மூலமாகச் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கும் அச்சத்தையூட்டுமெனினும், கவர்ந்திழுக்கும் டயனீசியன் நோக்கைச் (கட்டுப்பாடற்றது) சகித்துக்கொள்வதற்கான ஒரு முகத்திரையை வழங்குகிறது. வாக்னரின் இசை நாடகங்களில் கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் போலத் துன்பம் வெளிப்படுத்தப்படுவதோடு போற்றப்படுகின்றது. அத்தோடு வாக்னரின் வியக்கத் தக்க, ஆனால் முரண் ஒலியமைந்த இசை டயனீசியன் உயிர்ச் சக்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றது. வெளிநாட்டுக் கூறுகளால் ஜெர்மனியின் தூய, சக்திவாய்ந்த மையம் (core) வலுவிழந்ததாகப் புலம்பிய நீட்க்ஷே, கெமிட்டியப் புராணங்களை விடுத்து ஆரியப் புராணங்களைப் பயன்படுத்திப் பண்டைய வேர்களை நினைவுக்குக் கொண்டுவந்து ஜெர்மானிய, ஐரோப்பியப் பண்பாட்டை மீண்டும் வீரியமூட்டியதற்காக வாக்னரைக் கொண்டாடினார்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 48)
	ஆனால், "1888இல் இசையமைப்பாளர் வாக்னரையும் அவரது பார்சிபல்லையும் வசைபொழிந்து 'தி கேஸ் ஆப் வாக்னர்' என்ற நூலை நீட்ஷே வெளியிட்டார். பார்சிபல்லின் இசையை வியக்கத்த தக்கதாகக் கண்டார் நீட்ஷே. அவர் அதன் தெளிவு, மனோத்த்துவ அறிவுடைமை (Psycological Knowingness) மற்றும் துல்லியத்தைப் பாராட்டி அதை 'விழுமியது' (sublime) என்றுகூடக் கூறினார். ஆனால், தியாகியான மீட்பர், பாமன்னிப்பு போன்ற கருத்துருக்கள் கொண்ட, பார்சிபல்லின்மிக அதிகமாகக் கிறஸ்தவத்தைச் சார்ந்த செய்தியை, நீட்சே நிராகரிதார் ; "நலிவுற்று, சோர்வுற்று, நம்பிக்கையிழந்து, உதவிசெய்வாரின்றி உடைந்துபோய் கிறிஸ்தவச் சிலுவைக்குமுன் வாக்னர் வீழ்ந்தார்" என்கிறார். (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 50)
	மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மீதும், குறிப்பாகக் காதல் கவிதைகள் மீதும் இப்படியானதொரு விமர்சனத்தை முன்வைக்கலாம். டயோனிசியன் உயிர்ச்சக்தியும், அப்பல்லோனியன் கவிதைத் தன்மையோடு துன்பியல் நாடகத் தன்மையுமிணைந்த வெளிப்பாடு என மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைக் கொண்டாடலாம். அதே சமயம், தேய்ந்து போன மொழி நடை உத்தியின் மூலம், உரைநடையில் இசை மற்றும் ஒத்திசைவு ஒலி குறைந்த கவிதை நடையை மட்டுமே முன்னெடுக்கிறார் எனக் குறை கூறலாம்.
	நான் முதலாம் வகையைச் சார்ந்தவள் - இக்காதல் கவிதைகளை, அவை முன்னிறுத்துகின்ற ஒரு தளையற்ற, கட்டுப்பாடற்ற, கலாச்சாரப் பண்பாட்டின் சுமையற்ற, பெண் மனதின் வெளிப்பாட்டிற்காகக் கொண்டாடுபவள். மனுஷ்ய புத்திரன் தனது முந்தைய தொகுப்புக்களை விட, இத் தொகுப்பில் மனத்தடைகளிற்று, without inhibitions, பெண், ஆண், மனம், உடல் சார்ந்த ஆதி உணர்வுகளைத், தயக்கங்களை, துய்த்தலை, வெளிப்படுத்துதலை, விடுபடுதலை, காதல், காமம் சார் கிறக்கமோடும், தெளிவோடும், முயங்குதலின் மயக்கமுடனும், விடுபடுதலின் தெளிவுடனும், குறிப்பாக ஆண், பெண் பால் பேதமெனும் கலாச்சாரப் பொதியற்று வெளிப்படுத்தி இருக்கிறார். இதயமும், அறிவும் உணர்வும், சிந்தனையும் - ஒருசேர அபாரமான பகடியுடனும், விக்கியழுகின்ற குழந்தையின் சரணாகதியுடனும், தன்னை ஒப்புக் கொடுக்குமொரு அடிமையின் துயரத்துடனும், இந்த பின்நவீனத்துவ காலத்தின் வாழ் சிக்கல், நகைமுரண் இவற்றைப் பேசுகின்ற இவற்றை நான் வரவேற்கவே செய்வேன். 
	நிறைவாக ஒன்று ;
	After the Second World War, ஐந்தாறு ஆண்டுகளுக்கு, ஆங்கில மொழிப்படங்கள் காட்டப்படும் நாடுகள் அனைத்திலும், "எந்த நடிகை உங்களைச் செயல் இழக்கச் செய்யும்படி மயக்குகிறார்?" என்ற கேள்விக்கான பதில் Reeta Hayworth என்பதே. Reeta, Guilda, Loves of Karman என்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். உலகத் திரைப்படத்தின் மகா கலைஞன் எனப்படும் Arson Wells ஐ மணந்தவர். பின்னாளில் Wells ஐ விவாகரத்து செய்துவிட்டு உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிகானை அவர் திருமணம் செய்து கெண்டார். தனது முதல் கணவரான Arson wells பற்றி Reeta சொன்னார் - "ஒரு மேதையை யாரும் மணந்து கொள்ளக் கூடாது" என்று.
	ஒரு கவிஞனும் அப்படித்தானோ?
	ஒரு கவிஞனைக் காதலிக்கலாம் மணந்து கொள்ள முடியாதோ?
எனும் ஐயத்தை மனுஷ்ய புத்திரன், உங்கள் கவிதைகள் உங்களது தோழிகளுக்குத் தந்துவிடலாம். அதற்கெல்லாம் சளைக்காமல் ஏற்கனவே ஒரு பதிலை ஐயம் தீர்க்கின்ற கவிதையாகப் பின்வருமாறு எழுதிவைத்துவிட்டார் மனுசிய புத்திரன் 
ஆண்களின் நரகத்தில்

நரகத்திற்குச் செல்லும் பாதை
	நீண்ட வரிசை இருந்தது
	முதல் கேட்டில்
	நல்ல தகப்பன்களாக இல்லாதவர்கள்
	நின்றுகொண்டிருந்தார்கள்

	இரண்டாம் கேட்டில் 
	நல்ல மகன்களாக இல்லாதவர்கள்
	நின்றுகொண்டிருந்தார்கள்

	மூன்றாம் கேட்டில்
	நல்ல கணவர்களாக இல்லாதவர்கள்
	நின்றுகொண்டிருந்தார்கள்

	நான்காம் கேட்டில்
	நல்ல காதலர்களாக இல்லாதவர்கள்
	நின்றுகொண்டிருந்தார்கள்

	நான் தயங்கித் தயங்கி
	ஒரு சக்கர நாற்காலியில்
	அங்கே போயிருந்தேன்
	'உங்களுக்கு
	சிறப்பு அனுமதி
	எந்த கேட்டின் வழியாகவும் 
	நீங்கள் செல்லலாம்' 
	என்றான் நரகக் காவலாளி
	(அந்நிய நிலத்தின் பெண் : 191)

உதவிய நூல்கள் :
	கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட்
	இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர்
	சமகால உலகக் கவிதைகள் பிரம்மராஜன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *