சி.மோகனின் ஓநாய் குலச்சின்னம் மொழிபெயர்ப்புப் புதினத்தை முன்வைத்து ஒரு உரையாடல்

உறைந்த மூலப் பிரதியை உயிர்ப்பிக்கும் மாயக்கண்ணாடி :   
        "மொழி தன் எஜமானனிடமே இடக்கு செய்கிறது" எனும் பின் அமைப்பியல் கூற்றை முதலில் நினைவு கூர்கின்றேன். Translation (மொழிபெயர்ப்பு) என்பதனைக் கடந்து Transcreation (மொழியாக்கம்) எனும் பதத்திற்கு வந்து வெகுகாலமாகி விட்டபோதும் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்கான அளவுகோலோ கருத்தியலோ இன்று வரை அறுதியாக இல்லை. எனது ஆதர்ச விமர்சகரான Mathew Arnold "மூலமொழியில் படைப்பினை வாசிக்கும் போது எந்த வகையான பாதிப்பினை வாசகர் அடைகின்றாரோ, அதுபோன்ற விளைவினைப் பெறுமொழியில் வாசிக்கும் போது ஏற்பட வேண்டும்" என்கிறார். அவருக்கு நேரெதிராக, F.W. Newman "மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புத் தான். அது ஒரு போதும் மூலப் படைப்பின் விளைவினைப் பிரதிபலிக்க இயலாது" என்கிறார்.
விவாதங்களைத் தாண்டி, ஒரு மொழிபெயர்ப்பு என்பது மிக மிக முக்கியமான பங்களிப்பு. அது வெறும் இலக்கியம் சார்ந்ததொரு நிகழ்வு அல்ல. "Translators are international knwoledge co-ordinators" என்கிறார் Puskin. மொழிபெயர்ப்பு என்பது "நிரந்தரமாக நாடு கடத்தப்பட்ட நிலையிலுள்ள ஒரு பிரதியின் அலைந்து திரியும் இருப்பேயாகும்" எனும் J. Hillis Millerஇன் கூற்றும் இங்கு மிக முக்கியமானது. 
Andre Lefever மற்றும் Susan Bassnett ஆகிய இருவரும் 'மொழிபெயர்ப்பியல் கல்வியல் வார்த்தையும் அல்ல, பிரதியும் அல்ல, மாறாக கலாச்சாரமே மொழிபெயர்ப்பின் செயலாக்கம் கூடிய அலகாக மாறுகிறது" என்ற கண்ணோட்டத்தை முன் வைத்தார்கள். இந்தக் கண்ணோட்டம் மொழிபெயர்ப்பியல் ஆய்வுக் கல்வித்துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக, கலாச்சாரவியல் கல்வித்துறைக்கும் மொழிபெயர்ப்பியல் கல்வித்துறைக்குமிடையேயான ஒத்திசைவும், இணைவும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவ்வகையில் கலாச்சாரம் சார்ந்த பிரதிகள் முக்கியத்துவம் பெறுகின்ற காலகட்டமிது. இந்த ஓநாய்க் குலச்சின்னம் அவ்வாறான ஒருபிரதி. 
ஒரு மொழிபெயர்ப்பாளரின் பொறுப்புடைமை என்பது மண் - சாராத பார்வையாளர்களை மண்சார்ந்த பார்வையாளர்களாக்குவதில் தான் அடங்கியிருக்கிறது. இந்திய மொழி ஒன்றி எழுதப்பட்ட கவிதையொன்றை ஆங்கிலம் போன்ற அந்நிய மொழியொன்றில் மொழிபெயர்க்கும்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் சம்பந்தப்பட்டவர்களை இலக்குமொழிசார் மண் சார்ந்தவர்களாக மாற்ற வேண்டுமென்று விரும்புவது தவிர்க்க முடியாததாகிறது. இந்த ஓநாய்க் குலச்சின்னம் ஒரு மேய்ச்சல் பிரதிதான்.
மொழிபெயர்ப்பு என்பது உலக மொழிகளுக்கிடையில் தற்செயலாகவோ அல்லது இயல்பாகவோ நடைபெறும் நிகழ்வு அல்ல. சமூக அக்கறையுள்ள மனிதர்களின் முன் முயற்சியினாலும், கடின உழைபினாலும் மட்டுமே காலந்தோறும் மொழிபெயர்ப்பு சாத்தியப்படுகிறது. அவ்வகையில் இரண்டு மனிதர்களுடைய சமூக அக்கறையினால், அதில் ஒருவருடைய மிகக் கடினமான உழைப்பினால் இந்த 'ஓநாய்க் குலச் சின்னம்' எனும் மொழிபெயர்ப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. 'அதிர்வு' எனும் பதிப்பகத்தை இப்புத்தகத்திற்காக துவங்கிய திரு. வெற்றிமாறன், மிக அசாத்தியமான உழைப்பு, உத்வேகத்துடன் ஒரு 'அடாவடி' மொழிபெயர்ப்பாளராக, கொஞ்சமும் பணிய மறுத்து, தமிழ் மொழியில் தனக்கிருக்கின்ற ஆளுமையுடன் மிக நுட்பமான இந்த செவ்வியல் மொழிபெயர்ப்பைச் சாத்தியப்படுத்தி இருக்கின்ற திரு. மோகன், இருவருமே பாராட்டப்பட வேண்டிய ஆளுமைகள். மொழிபெயர்ப்பாளர்கள் பல ஆக்கபூர்வமான மாற்றங்களுக்குக் காரணமாகின்றார்கள் என்பதற்கு அவர்களது இப்புத்தகம் ஒரு ஸ்தூல சாட்சி. 
இந்த நூலின் மூலம் மோகன் பல clich -  தேய்ந்து போன சொல்லாடல்களைத் தவிடு பொடியாக்கியுள்ளார் - "மொழிபெயர்ப்பாளர்கள் படைப்பாக்கம் என்ற துறையில் தோல்வியுற்றவர்கள்" என்பது அதிலே முதலாவது. தமிழின் நவீனக் கவிதைகளுக்கான பங்களிப்பில் மோகனுக்கு முக்கியப் பங்குண்டு. நற்றிணையில் வெளிவந்த அவரது கட்டுரைகள் மிகப் பெரிய பாய்ச்சலை உருவாக்கியவை. அதற்கான சான்றுகளை இப்புத்தகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். அடுத்ததாக மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள் - எனும் கருத்து. அதாவது they can never do full justice to the source Language என்கிற கருத்தாடல். 
மூலப் பிரதியின் மொழியைப் பேசுபவர்களுக்கு அதன் மொழிபெயர்ப்பு திருப்தி தராதுதான். நானுமே, ஒரு கவிதையை மொழி பெயர்க்க இயலாது என்றே கருதுகின்றேன். கவிதையில் 'சர்வதேசபாணி' என்ற ஒன்று கிடையாது. 
"கவிதையைப் படைக்கும் மூலப் பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாகப் பிரதேசத் தன்மைகொண்டது கவிதையாகத் தானிருக்க முடியும்" என நான் நம்புகிறேன். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவிற்குப் பிரதேசத் தன்மை கொண்டவை எனது கவிதைகள். 
"கவிதையை மொழிபெயர்க்க இயலாது" என்பதே Tagore இன் கருத்தும். "சாம்பல் என்பது நெருப்பின் மொழிபெயர்ப்பாகுமா? என்று கேள்வி கேட்கிறார் - George Steiner. ஆனால் ஒரு புதினத்தைக், கட்டுரையை, சிறுகதையை எறக்குறைய, மிகச் செறிவாக, ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளன் மொழியாக்கம் செய்ய முடியும் என்பதை இப்புதின மொழியாக்கத்தின் மூலம் நிரூபித்து இருக்கின்றார் மோகன். 
நோபல் பரிசு பெற்ற தாகூரின் படைப்பிற்கு இணையாக எழுதியவர் பாரதியார். ஆனால், தாகூர்க்கு ஒரு W.B. Yeats ஆங்கில மொழிபெயர்ப்பாளராக வாய்த்தது போல பாரதியாருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருக்கிறார் மோகன் - வெற்றிமாறனுக்கு. மனித உள்ளங்களை இணைப்பதன் மூலம் நாடுகளை இணைத்திருக்கிறார். ஒரு ஹேன் வம்சாவளி சீனனுக்கு, மங்கோலியனை, இவர்கள் இருவரையும் ஒரு ஆங்கிலேயனுக்கு, அந்த ஆங்கிலேயனின் தாய்மொழி மூலமாக, கீழைத் தேய ஆசியாவின் ஒரு பின்காலனிய பிரஜையான எனக்கு - மிகப் பெரிய பாலமாயிருக்கின்றார் மோகன்.
 	ஒவ்வொரு தமிழ் வாசகனும் பெருமைப் படவேண்டிய, தவறவிடக்கூடாத பொக்கிசம் ஒன்றை அச்சு வடிவில் அளித்திருக்கிறார். Oriental Countries என்றவகையில் கிழக்காசியாவின் நிலவரைவியல் படியே நாம் சீனாவிற்குப் பக்கத்து வீட்டுக்காரர் (இப்போது பங்காளியும் கூட)! விவசாய இனமான சீனர்களுக்கும், மேய்ச்சலும், வேட்டையும் கண்ணெனக் கொண்ட மங்கோலியர்களுக்கும், தமிழர்களுக்குமான வாழ்முறை, சடங்கு, நம்பிக்கை, குலக்குறிகள், ஞானம் - எப்படி ஒரு பொதுவான நதியாக நம்மை இணைத்திருக்கிறது என்று புரிய வைத்திருக்கின்றார். புத்தகம் முழுவதும் - வெவ்வேறு அடிகள் என்றாலும் ஒரே நதி தான் - மூன்று சமவெளிகளிலும்! 
"இன்றைய மூன்றாம் உலகைச் சேர்ந்த ஒரு பின்காலனியப் படைப்பாளிக்கு முன் ஒரு வரலாற்றுக் கடமை எழுந்து நிற்கிறது. வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நசுங்கி, தங்களது பண்பாட்டு முகம் சிதைக்கப்பட்டு, வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டுவிட்ட இந்த நாடுகள், இன்று தங்கள் அடையாளம் என்ன என்று தெரியாமல் நிற்கின்றன" எனும் இந்திரனின் கூற்றை இங்கு நினைவுபடுத்துகிறேன். இத்தகைய நிலையில் இருக்கும் வளரும், பின்காலனிய நாடுகளின் படைப்பாளிகளின் கடமை, எவற்றை இழந்தோம் என்பதைக் கவனிப்பதும், அந்த அடையாளங்களைக் காண்டெடுப்பதும் - நம்மைச் சுற்றி இருக்கின்ற இந்த 21ம் நூற்றாண்டின் வாழ்க்கை பற்றிய நேர்மையான புரிதலுடன், அதன் சிக்கல்களைப் பதிய வைப்பதுமாகும்!. ஒரு படைப்பாளியாய் அதனை இதுவரை நேர்பட செய்திருக்கின்ற மோகன், தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் அப்பணியைச் சரிவரச் செய்திருக்கிறார். 
வரலாற்று அடிப்படையில் அணுகினால், கி.மு. 240 இல் இலீவியஸ் அந்திரோனிக்ஸ் எனம் இலத்தீன் இலக்கியப் படைப்பாளி கிரேக்க மொழியில் ஹோமர் எழுதிய ஓடிசி என்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே, காலத்தினாற் தொன்மையானது. 
தமிழுக்கும், மொழிபெயர்ப்பிற்குமான உறவென்பதும் மிகத் தொன்மையானது தான், தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நூல்களை 1) முதல் நூல், 2) வழி நூல் என வகைப்படுத்தும் தொல்காப்பியர், வழி நூலினை,
"தொகுத்தல விரித்த தொகைவிரி 
மொழிபெயர்த்து அர்த்தப் பட 
யாத்தலோடு அனை மரபினவே" என நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்.
அவ்வகையில் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பு நூல் என்பது தமிழ் இலக்கியப் பரப்பிற்கு எச்சமயத்திலும் ஒரு காத்திரமான பங்களிப்பே.
இக்கணம் - "மொழி பெயர்ப்பே ஒரு கடினமான இலக்கிய வேலை. சீமை ஓட்டைப் பிரித்து விட்டுக் கீற்று வைக்கும் வேலை போன்றது" என்ற கு.ப.ராவை நினைத்துக் கொள்கிறேன். சீனர்களின் ஒட்டைப் பிரித்துவிட்டு தமிழர்களின் ஓலைக் கீற்றை மிக அழகாக வைத்திருக்கிறார் மோகன். சீனர்களின் ஓட்டை (ஜியாங் ரோங் எனும் சீனர் எதியதை) முதலில் பிரித்து, அதனடியில் இருந்த சீமை ஓட்டை ஊடுறுவிப் பார்த்து (ஹோவர்டு கோல்டுபிளாட் எனும் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்பு) நிறைவாகத் தமிழில் திருப்திகரமான கீற்றாக இந்த 'ஓநாய் குலச்சின்னம்' வெளிவந்திருக்கின்றது.
குலக்குறியும், சின்னங்களும் மிகத் தொன்மையான, தமிழரது பண்பாட்டில் ஒரு வாழ்முறைதான். ஒவ்வொரு தமிழினக் குழுவின் தலைவனுக்கும் (பேரரசர்களைச் சுட்டவில்லை இங்கு) ஒரு விலங்கு, மலர், ஆயுதம் அவன் தம் குலக்குறியின் சின்னங்களாக இருந்தவற்றிற்கான தடயங்களை நாமறிவோம். அவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு, அனுபவத்தின் ஞானம் செறிந்த நமது கடந்தகால குழுவாழ்வின் கள் மணம் சுமந்து, புலாலின் வெதுவெதுப்பான சுவையோடு - ஓலோன் புலாக், எனும் புல்வெளியும், அதன் பிரதான வேட்டைக்காரராக இருந்த பில்ஜியும், ஒரு ஓநாயோடு சண்டையிடும் உடல் வலு மிக்க கஸ்மாய் எனும் மங்கோலியப் பெண்ணும், இந்த மங்கோலிய மக்களோடும், மேய்ச்சல் நிலத்தோடும், அதன் முனனோடி செங்கிஸ்கானோடும், அவனது ஆசான்களான மேய்ச்சல் நில ஒநாய்களோடும், இவர்களையெல்லாம் வழிநடத்தும் டெஞ்ஞர் எனும் தேவதை அல்லது தேவன் அல்லது துணை (வனப்பேச்சியைப் போல) இவற்றோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்ற சீனன் - ஜென் சென்னோடும், அவனோடு புரட்சிப் படையினரால் அங்கு அனுப்பட்ட மேலும் முன்று சீனர்களான அவனது தோழர்கள் யோங்கீ, காவோ, சாங்ஜியான் ஆகியோரோடும் - ஒரு கனவுச் சொர்க்கம் விரிகின்றது என் கண் முன்பு!
ஒரு நல்ல மொழிபெயர்ப்புப் பிரதி மிகச் சரியான வாசகனைச் சேரும் என்பதைப் போல நான் இந்தப் புத்தகத்தோடு மூன்று மாதங்கள் வாழ்ந்தேன். ஒரு கணம் கூட ஒரு மொழி ஆக்கப் பிரதி இது என்ற எண்ணம் சற்றும் வரவில்லை இதனோடு நான் வாழ்ந்த அந்தக் காலத்தில். அதுவே இதன் வெற்றி. அக்காலக்கட்டத்தில் மொழிபெயர்ப்பு விஞ்ஞானமல்ல - அது ஒரு கலை என்பதை இப்புத்தகம் எனக்கு உணர்த்தியது. 
"மொழிபெயர்ப்பு ஒரு மிக முக்கியச் செயல்பாடு. பிரபஞ்ச வெளியிலேயே மிக மிகச் சிக்கலான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று" என்ற I.A. Richards இன் வாசகத்தையும் இது எனக்கு மெய்ப்பித்தது. "ஒரு பின் காலனிய மொழிபெயர்ப்பில் அதன் சமூக, கலாச்சார, பொருளாதார, மற்றும் அரசியல் சார்ந்த சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். அதனை இப்புத்தகம் பூர்த்தியாக்கி இருக்கின்றது. மாவோவின் புரட்சிக்குப் பின்னான வளர்ச்சி என்பது வீக்கமே என அறிவுறுத்துகிறது. 
தொழில்முறை மொழி பெயர்ப்பாளர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் தன்னார்வ மொழி பெயர்ப்பாளர்கள் மீது எனக்குப் பெரும் அன்பும், அடிபணிதலும் உண்டு. I Love professional translators - but I worship non-professional translators - coz - they do translation just for the passion if it - as a Dragon of Fire! மதிப்பிற்குரிய சி. மணியைப் போல, மோகன் அவ்வாறான ஒரு தன்னார்வ மொழிபெயர்ப்பாளரே. My Salutes to him!
"புரிந்து கொள்ளல், கட்டமைத்தல் முதலிய உள்ளடக்கம், உருவாக்கம் என்கிற சட்டங்களை விட, வாழ்க்கை குறித்த உள்ளொளி, விழிப்புணர்வு, அனுபவ ஞானம், பரஸ்பர இசைமை" ஆகியவற்றைச் சமகமனிதர்களோடு பகிர்ந்து கொள்வதையே சிறந்த படைப்பாளி ஒரு மொழிபெயர்ப்பின் மூலம் முன் வைக்கின்றார். அவ்வகையில் - Releigh Shakespeare ஐப் பற்றிச் சொன்னாரே - He is a Wholesome Man என்று - அது போல இது ஒரு முழுமையான மொழியாக்க நூல் - This is a Wholesome Transcreation. 
இந்தப் பகிரலுக்கான எனது தயாரிப்பின்போது நான் வாசித்த ராபர்ட் ஜே.சி. யங்கின் - பின்காலனியம் (தமிழில் அ.மங்கை) எனும் புத்தகம் இங்கு மிக முக்கியமானது. 'மொழிபெயர்ப்பு' எனும் சொல் வெறும் பிரதிகளை மொழிபெயர்த்தல் மட்டுமன்று. காலனி ஆதிகத்திலிருந்து விடுபட்டு, அதன் எச்சங்கோளோடும், பொதிகளளோடும், பயணிக்கின்ற பின்காலனிய பிரஜைக்கு, அது ஒரு அரசியல் சொல்லாடல். கருத்து ரீதியாக அச்சொல் சுட்டும் தளங்களைப் புரிந்துகொள்ள, அதன் கருத்துருவினை, ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்குள் பொருத்திப்பார்க்க மேற்சொன்ன நூல் எனக்குப் பெரிதும் துணைபுரிந்தது. மொழிபெயர்ப்பு எனும் சொல்லின் அரசியற்புரிதலோடும் மோகனது ஓநாய் குலச்சின்னத்தை அணுகுதல் முக்கியம் எனப்படுகின்றது எனக்கு. அதன் சில பத்திகளை சுட்டி, நான் தொடர்கிறேன்: 
"பின்காலனியத்துவத்தின் மையச் செயல்பாட்டிற்கும் அரசியல் ஊடாட்டத்திற்கும் நெருக்கமாக மொழிபெயர்ப்பு இருப்பது போல வேறெந்தத் துறையும் இல்லை. நடுநிலைமை கொண்ட, தொழில்நுட்பத் துறையாக மொழிபெயர்ப்பு தோன்றலாம். ஒரு பனுவலை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டுவரும் களம், பின்காலனியத்துவ உலகின் அரசியல் களம் சார்ந்த வெளியில் இருந்து வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப அளவில்கூட இந்த அரசியல் தொடர்புகள் முக்கியமாகின்றன.
ஒரு காலனி மொழிபெயர்ப்பாகத்தான் தொடங்குகிறது. வரைபடத்தில் எங்கோ உள்ள மூலத்தின் நகலை உருவாக்குவதில் இருந்து தொடங்குகிறது - புதிய இங்கிலாந்து. புதிய ஸ்பெயின். புதிய அம்ஸ்டர்டாம். புதிய யார்க். இவை காலனிய நகலாக்கமாக உயிரணு சோதனைச்சாலை நகலாக்கமாக உருவாக்கப்படுகின்றன. தொலைதூர இன உற்பத்தியான இக்கூறு தவிர்க்க இயலாமல் வேறாக மாறும் நகலாகிறது" (ராபர்ட் ஜே.சி. யங் - பின்காலனியம் : 172 & 173).
 	இப்பின்புலத்தில், மொழிபெயர்ப்பு என்பது வெறும் பிரதிகளின் மறு ஆக்கம் மட்டுமல்ல எனம் புரிதலோடும், அதன் அரசியல் தெளிவோடும் பின்வரும் பத்தியைப் படிக்கின்றேன்: 
ஓநாய் குட்டியின் தலையை வருடியபடியே ஜென் தொடர்ந்து பேசினான். "மாறும் மானோபாவம், ஒரு மனிதனின் தலைவிதியைத் தீர்மானிப்பது மட்டுமல்ல, ஒரு இனத்தின் தலைவிதியையும் திர்மானிக்கிறது. விவசாய மக்கள் பண்பட்டவர்கள்; அவர்களின் பலமற்ற மனமே அவர்களின் தலைவிதியை நிர்ணயித்தது. உலகின் மகத்தான நாகரிகமாக விளைநிலம் சார்ந்த நான்கு நாடுகளே அமைந்திருந்தன. அவற்றில் மூன்று மடிந்துவிட்டன. நான்காவதான சீனா, அதன் பிராந்தியத்துக்குள் ஓடிய இரண்டு மாபெரும் நதிகளான மஞ்சள் மற்றும் யாங்செயினால் அந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்தது. மேலும், அது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமை கொண்டிருப்பதால் அதைப் பிற நாட்டவரால் அவ்வளவு சுலபமாக அபகரிக்க முடியவில்லை. இவை தவிர, மேய்ச்சல்நில நாடோடி மக்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். (ஓநாய் குலச்சின்னம் : 235).
விவசாய இனமான ஹேன் சீனர்கள் மேய்ச்சல் மங்கோலியர்களை வளர்ச்சி எனும் பெயரால் காலனியப் படுத்துவதுதான் மூலப் பிரதியின் அடியோட்டம். பிறநாட்டவர் ஆதிக்கம் செய்யாவிட்டாலும், ஒரு இனம் இன்னொன்றை உள்நாட்டிலேயே ஆதிக்கம் செய்வதிலிருந்து புதினம் துவங்குகிறது. 
"'பேபலி'ன் (Babel) சாபம் இருந்திருக்காமல் போனால், உலகம் ஒரே மொழியை மட்டுமே பேசிக்கொண்டிருந்திரும்" என்பார்கள். அப்போது மொழிபெயர்ப்புகளுக்கும் வேலை இருந்திருக்காது. 
ஒரு எழுத்தாளர் தன் வேலையைத் தொடங்கும்போது அவர் முன் ஒரு வெற்றுத்தாள் மட்டுமே இருக்கிறது; ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் வேலையைத் தொடங்கும்போது அவர் முன் ஒரு படைப்பே உள்ளது" என்கிறார் சுக்ரிதா பால்குமார். ஆக, மிகக் கடுமையான சவாலை முன்னெடுத்திருக்கிறார் மோகன் என்பது தெளிவு.
பயன்படுத்தப்பட்ட மொழியைவிட அதன் ஆன்மாவையே அதிகமாகக் காண வேண்டும் எனும் மொழிபெயர்ப்பு விதியை மிகக் கச்சிதமாப் பின்வரும் பத்திகளில் நாம் உணரலாம்: 
இந்த ஓநாய்கள் ஜப்பானிய சாமுராயின் ஆன்மாவை உத்வேகமாகக் கொண்டிருக்கின்றன. தற்கொலைத் தாக்குதலுக்கு அவை கொஞ்சமும் அஞ்சுவதில்லை. அதனால்தான் எவற்றை விடவும் மங்கோலிய ஓநாய்கள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அவற்றின் கடைசி ஓநாயைக் கொல்லும் வரை நான் ஓயப் போவதில்லை. (ஓநாய் குலச்சின்னம் : 139)
"ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும். ஓநாய்களின் தற்கொலையெனும் ஆன்ம பலத்தை முன்மாதிரியாக மேற்கொள்ளும் எவரும் ஆளுமைமிக்க நாயகனாகலாம்; பாடல்களாலும் கண்ணீராலும் அவன் புகழ் பாடப்படும். தவறான பாடத்தைக் கற்றுக்கொள்வது, சாமுராய் அடக்குமுறைக்கே வழி வகுக்கும். சரணடைவதற்கு முன்பாக மரணம் என்ற ஆன்ம பலத்தை இழந்துவிட்டிருக்கும் எவரும் சாமுராய் அடக்குமுறைக்குப் பணியவே நேரிடும்" என்றான் ஜென். (ஓநாய் குலச்சின்னம் குலச்சின்னம்: 139 & 140) 
மொழிபெயர்ப்பு எனும் சொல் உரையாடல் ஆகின்றது - பின் காலனியச் சூழலில் என்பதனையும் இங்கு நான் அடிக்கோடிடுகின்றேன். "காலனியத்தின் தொடக்ககாலச் செயல்பாடுகள், முக்கியமான பூர்வீக மொழிகளிலிருந்து எழுதப்பட்ட, வாய்மொழிப் பனுவல்களை காலனிய மொழியில் பெயர்ப்பதாக இருந்தது. அதன் மூலம் வாய்மொழிப் பண்பாடுகளை மொழிபெயர்ப்பு எழுத்து முறையின் வலைப் பின்னல்களுக்குள்ளும், கண்ணிகளுக்குள்ளும் சிக்கவைத்தது". இலத்தீன் அமெரிக்க விமர்சகர் ஏஞ்சல் ரமா இதனை 'எழுத்து நகரம்' என்பார். இந்தக் கருத்தாக்கத்தை மிக வலுவாக நிறுவுகிறது பின்வரும் வரிகள்: 
'சொர்க்கம் மிக உயரத்திலும் மகாராஜா வெகுதொலைவிலும்' இருக்கிற இந்த ஒதுக்குப்புறமான பகுதியில், நான்கு பழமைகளை - பழைய கருத்துகள், கலாசாரம், சடங்குகள், பழக்கவழக்கங்கள் - அழித்தொழிக்கும் முனைப்போடிருக்கும் சிவப்புக் காவலர்களின் கவனம் இதுவரை பில்ஜியின் திரைச்சீலைகள் மீதோ தரை விரிப்பு மீதோ விழுந்திருக்கவில்லை. (ஓநாய் குலச்சின்னம் : 38). 
ஒரு பழங்குடியினன் தனது அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள சிறிதளவே அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்பது எவ்வளவு வலியும், அபத்தமுமிகுந்தது!
"காலனியத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான உறவு பகிர்தலில் தொடங்குவதில்லை. வன்முறையிலும், தன்னகப்படுத்துவதிலும், தொடங்கி நாட்டு எல்லைகளை இழத்தலில் முடிகிறது" எனும் கூற்றிலும் மொழிபெயர்ப்பு ஒரு ஆதிக்க மனிதனின் செயல்பாடு எனும் அரசியல் பொதிந்து உள்ளது. 
ஜென், தன்னுடைய சிந்தனையைத் தொடர்ந்து வெளிப்படுத்தினான். "உலக வரலாற்றில், ஐரோப்பியர்களுக்கு எதிரான சண்டையை மேற்கொண்ட கீழைமக்கள், நாடோடிகள் மட்டுமே. மேற்கின் அஸ்திவாரங்களை, ஹன் மக்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் என்ற மூன்று இனத்தவர்களே உண்மையில் ஆட்டம் காணச் செய்தவர்கள். பழைய ரோமாபுரியைக் கட்டியமைத்தவர்கள். ஓநாயால் வளர்க்கப்பட்ட இரு சகோதரர்களே. இன்றும்கூட, அந்நகரத்தின் சின்னத்தில் ஓநாய் மற்றும் அதனுடைய இரண்டு ஓநாய்க் குழந்தைகளின் படிமங்கள் அமைந்திருக்கின்றன. ஓநாய்கள் மட்டும் இருந்திருக்காவிட்டால், உலக வரலாறு வேறு மாதிரியாக எழுதப்பட்டிருக்கும். ஓநாய்களைப் பற்றி ஏதும் தெரிந்திருக்காவிட்டால், நாடோடிகளின் ஆன்மாவையும் குணாம்சங்களையும் புரிந்துகொள்ள முடியாது; நாடோடிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை நம்மால் பாராட்ட முடியாது". (ஓநாய் குலச்சின்னம் : 291 & 292) ஆக, மேற்சொன்ன வரிகளில், வன்முறையையும் தன்னகப்படுத்தலையும், இழத்தலையும் உணர்த்துகின்ற அரசியலை நாம் அறியலாம்.
 	ஐரிஷ் நாடகாசிரியர் பிரயான் பிரெய்ல் தனது 'மொழிபெயர்ப்புகள்' (ட்ரான்ஸ்லேசன்ஸ் 1981) நாடகத்தில் காட்டுவதுபோல் "ஒரு நிலப்பகுதிக்குப் புதுப் பெயரிடுதல், மறுபெயர் அளித்தல் ஆகியவை அதிகாரத் திணிப்பு மற்றும் தன்னகப்படுத்தும் செயல்பாடுகளாகும். அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏகாதிபத்தியச் செயல்பாட்டின் உடன் நிகழ்வாக வரைபடம் உருவாக்குதல் இருந்தது. எனவே அங்கு ஏற்கனவே புனிதமாக நிலவியவற்றை அவமதிப்பதுவரை நடந்தேறியது".
புனிதங்களைக் குலைக்கின்ற ஒரு மொழிபெயர்ப்பு அரசியலை கீழ்வரும் பத்தி சுட்டுவதாகவே கருதுகிறேன்:
 	"கடந்த காலங்களில் சீனர்கள் ஒருபோதும் ஓலோன்புலாக்குக்கு வந்ததில்லை. நூற்றி முப்பது அல்லது நூற்றி நாற்பது குடில்களிலும் ஏழு நூறு அல்லது எண்ணூறு மங்கோலியர்களே குடியிருந்தனர். கலாசாரப் புரட்சியை அடுத்து மாணவர்களாகிய நீங்கள் நூறு பேர் பீஜிங்கிலிருந்து வந்தீர்கள். உங்களைத் தொடர்ந்து ராணுவ வீரர்களும் ராணுவ வண்டிகளும் அவற்றின் ஓட்டுனர்களும் வந்தனர். இப்போது அவர்கள் பெரிய கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் ஓநாய்களை வெறுக்கிறார்கள். அவற்றின் தோல்கள் மட்டுமே அவர்களுக்குப் பிடித்திருக்கின்றன. கூடிய சீக்கிரம் தங்கள் துப்பாக்கிகளால் அவற்றைத் தீர்த்துக் கட்டி விடுவார்கள். அனத் பிறகு, அவற்றுக்கான இரையாக உன் உடலைக் கொடுக்க நீ விரும்பினாலும் அது நடக்காது". (ஓநாய் குலச்சின்னம் : 171)
தலைவர் மாவோ சொல்லியிருக்கிறார்: 'பகைவனைத் தோற்கடிப்பதற்கு நாம் முதலில் பகைவனைப் பற்றிப் பயில வேண்டும்'. ஓநாய்கள் பற்றி நானும் கூடுதலாகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எப்படி நடந்துகொள்கிறது என்பதைக் கவனிப்பதற்காக, நானும் தவறாமல் இங்கு வரப் போகிறேன். நீ ஓநாய் வகை வேட்டை நாய்களை உருவாக்க போவதாக அவர்கள் சொன்னார்கள் (ஓநாய் குலச்சின்னம் : 364). பகைவனைப் பற்றிப் பயிலுதல் அவனது இருப்பை, அடையாளத்தை அழிப்பதன் முதல் படி. பீஜிங்கின் வண்டி ஒரு நிலத்தின் முகத்தை எப்படி சீர்குலைத்தது என்பதைப் பார்க்கையில் 'மொழிபெயர்ப்பு'ப் செயல்பாட்டின் அரசியலை நாம் அச்சொட்டாகப் புரிந்துகொள்ளலாம். 
இப்புத்தகம் பழங்குடிகள் இலக்கியம் (Aboriginal Literature) எனும் வகைமை சார்ந்தது. ஒவ்வொரு மொழி பேசுவோரும் "இடம், காலம், எண்ணிக்கை ஆகியவற்றை வெவ்வேறு முறைகளில் சொல்லக்கூடிய மொழித் தரவுகளைக் கொண்டவர்கள் என்றும், மொழியைக் கற்பதன் வாயிலாக இவற்றையும் இவ்வுலகத்தையும் கற்கின்றனர்" என்பதை அறிவோம். 
"இரத்தம் தண்ணீரைவிடக் கெட்டியானது போன்றே அது சமூகத்திலும் மக்களை ஓட்டிக் கெட்டிப்படுத்துகிறது. இத்தகு ஓட்டுறவால் மனிதர்கள் குடும்பங்களாகவும் குலங்களாகவும் கட்டுண்டு தத்தம் வலிமையினை வெளிப்படுத்துகின்றனர். எளிய சமூகங்கள் (simple societies) பலவும் குழுக்களின் தொகுதியாகவே உள்ளன.
விலங்குகள், தாவரங்கள், இயற்கை நிகழ்வுகள் (இடி, மின்னல், இதுவரை புரியாத புதிராக உள்ள ஆஸ்திரேலிய முதுகுடிகளின் நாய்வாந்தி போன்றவை) ஆகியவற்றால் அமையும் குலக்குறிக் குழுக்கள் (totemic groups) உலகின் பல இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. எவ்விதப் பாகுபாடுமில்லாமல் ஒருபடித்தான நிலையிலிருக்கும் குடியினர் இவ்வாறு பல குலக்குறிக் குழுக்களாக அடையாளப்படுவது என்பது, ஒருவிலங்கு இன்னொரு விலங்கினத்திலிருந்து மாறுபடுவதுபோல, 'எனது குழு மற்ற குழுக்களிலிருந்து மாறுப்பட்டது' என்று கூறுவதற்கு வழிகோலுகிறது" (சமூக பண்பாட்டு மானிடவியல்: 132) எனும் கூற்று அடையாள அரசியலோடு தொடர்புடையது.
 	இக்குழுவாழ்வின், குலக்குறிகள் மிக முக்கயமானவை. மொழிபெயர்ப்பாளர் அதன் ஜீவன் குறையாமல், சாரம் குறையாமல் இந்தக் கூற்றை மிகச் சரியாக பின்வரும் பத்தியில் படம் பிடிக்கிறார்: 
பாவோ - "ஓநாய்கள் அறிந்திருப்பவற்றைப் பாருங்கள் :வானிலை, நிலவியல், சந்தர்ப்பம், அவற்றினுடைய மற்றும் எதிரியினுடைய பலங்கள், இராணுவத் திட்டங்கள் மற்றும் தந்திரங்கள், நெருக்கமான தாக்குதல், இரவுத் தாக்குதல், கொரில்லா தாக்குதல், நகரும் தாக்குதல், நீண்ட தூரத் தாக்குதல், பதுங்கியிருந்து தாக்குதல், மின்னல் தாக்குதல், மேலும் எதிரியைக் கொல்ல தம் பலத்தில் முழு கவனம் கொண்டிருத்தல். நடந்திருப்பது ஒரு பாடப் புத்தக யுத்த திட்டம்". (ஓநாய் குலச்சின்னம் : 141).
"உலக வரலாற்றில் மிகப் பெரிய பேரரசை மங்கோலியர்கள் நிர்மாணித்தார்கள். ஒரு நாடோடிக் கூட்டம், நாகரிகமற்றது, எழுத்து முறையற்ற பின்தங்கிய இனம், எலும்பு முனை கொண்ட அம்புகளைப் பயன்படுத்துபவர்கள் (இரும்பு கிடையாது) எப்படி இவ்வளவு மேலான இராணுவ உபாயங்கைளுயம் ஞானத்தையும் பெற்றிருந்தார்கள்? வரலாற்றில் பதிலளிக்கப்படாத மகத்தான கேள்விகளில் இதுவும் ஒன்று". (ஓநாய் குலச்சின்னம் : 143) 
"கடந்த இரண்டான்டு காலமாக ஜென்னுக்கு மேய்ச்சல் நிலத்தில் ஓநாய் களுடன் ஏற்பட்ட அனுபவங்களும், அவன் சேகரித்த எண்ணற்ற பழங்கதைகளும், மான் கூட்டத்தை அவை வெகு நேர்ததியாக கொன்றதை அவன் நேரில் பார்த்ததும், குதிரை மந்தைக்கு எதிராக அவை நடத்திய யுத்த முறையின் சிறந்த உதாரணமும் ஜெங்கிஸ்கானின் இராணுவ ஆற்றலுக்கு ஓநாய்களே காரணமாக இருந்திருக்கின்றன என்ற பதிலில் அவனுக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தின. (ஓநாய் குலச்சின்னம் : 143)
ஒரு மொழி பெயர்ப்பாளர் மூன்று முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பார்கள்:
எதை மொழிபெயர்க்க வேண்டும்?
ஏன் மொழிபெயர்க்க வேண்டும்?
எப்படி மொழிபெயர்க்க வேண்டும்?
எதை மொழிபெயர்க்க வேண்டும் - கீழைத்தேய மரபின் உயிர் நாடியாக விவசாயத்தை முன் நிறுத்துவது விளைநிலக் கலாசார அடிப்படையில் அமைந்த உலகப் பார்வை - எனவே மேய்ச்சல் நில மரபு பேசப்பட வேண்டியது - நாடோடி மரபு அதற்குரிய அறமும், அரசியலும் உடையது என்பதை முன்வைக்கின்ற ஒரு புதினத்தை மொழிபெயர்க்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கின்ற, மொழிபெயர்ப்பாளரின் தேர்வு மிக முக்கியமிங்கு!
 	ஏன் மொழிபெயர்க்க வேண்டும் - என்கிற கேள்வியும் - ஒரு மூன்றாமுலகப் பின் காலனியப் பிரஜையாக, படைப்பாளியாக, மிக அடிப்படையான ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறது. 
"ஒரு கவிதையையோ, கதையையோ மொழிபெயர்ப்புக்கென தேர்ந்தெடுக்கிறபோது அந்த மொழிபெயர்ப்பு தமிழ்ச்சூழலில் என்ன மாதிரியான ஒரு பங்களிப்பைச் செய்யப்போகிறது என்பதை மொழி பெயர்ப்பாளன் தீவிரமாக சிந்திக்க வேண்டும். தனக்கு அந்த மொழி தெரியும். எனவே அதனைத் தமிழில் கொண்டு வருகிறேன் என்பது தேவையற்றது. இன்றைய உலகில் அசுர வேகத்துடன், இந்தத் தமிழ்ச் சாதியை முன்னேற்றக் கூடிய மொழிபெயர்ப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இந்த தேர்ந்தெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது" என்று இந்திரன் சொல்வதற்கிணங்க, மிகச் சரியான பங்களிப்பை, அதற்கான அரசியல் தெளிவுடன் முன்னெடுத்து இருக்கிறார் மோகன்.
 	எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்றால் - அது அப்பட்டமான வரிக்கு வரியான மொழிபெயர்ப்பாக இல்லாமல் - ஒரு Transcreation ஆக மூலத்தின் கருவும், ஆன்மாவும் சிதையாமல் வெளிவரும் படைப்பாக இருத்தல் வேண்டும் - Transcreation and not as a Transliteration. 
ஒரு படைப்புக் கலைஞரால் மட்டுமே ஒரு வெற்றிகரமான மொழிபெயர்ப்பைச் செய்ய முடியும், என்பார்கள். அதனைச் சரியாக மெய்ப்பித்திருக்கிறார் மோகன். ஒருசோறுபதமாக. கீழ்வரும் இரண்டு கவிதை வரிகள்: 
"வானம் பாடிகள் ஜோடியாகப் பறந்து சென்றன. ஒரு சிறகில் இரண்டு கோப்பைகள்" என்றான் (ஓநாய் குலச்சின்னம் : 85) 
மொழி பெயர்ப்பு வெறும் சமமான சொற்களைத் தேடி அலையும் கருவி அல்ல - மூலத்தின் உணர்ச்சி, அனுபவம், சாரம் - இவற்றைக் கடத்துவது அது என்பார்கள்.
புல்லைத் தின்று உயிர் வாழும் ஆடுகளின் தைரியம்தான் சீனர்களாகிய உங்களுக்கு இருக்கும். நாங்கள் மங்கோலியர்கள், கறி தின்னும் ஓநாய்கள். ஓநாய்த் துணிச்சலை நீ கொஞ்சம் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஓநாய் குலச்சின்னம் : 40)
"ஒரு ஓநாய்த் தோல் தரும் வெப்பத்தை,இரண்டு ஆட்டுத் தோல்கள் சேர்ந்தாலும் தர முடியாது. ஆனாலும் நாங்கள் அவற்றைப் படுக்ைக்கு பயன்படுத்துவதில்லை. நாங்கள் ஓநாய்களைப் பெரிதும் மதிக்கிறோம். அப்படி இல்லாத ஒருவன் உண்மையான மங்கோலியன் இல்லை. ஒரு ஓநாய்த் தோலில்படுப்பதை விடவும் மங்கோலியன் உறைந்து சாவதையே மேலாக நினைப்பான். அப்படிச் செய்வது மஙகோலியக் கடவுள்களைப் புண்படுத்தும். அவர்களுடைய ஆத்மா ஒருபோதும் டெஞ்ஞர் போய் சேராது. டெஞ்ஞர் ஏன் ஓநாய்களிடம் பெரும் கருணை கொண்டிருப்பதாக நீ கருதுகிறாய்?" (ஓநாய் குலச்சின்னம் : 41) மேற்சொன்னவை மேய்ச்சல் நில மக்களின் ஆன்மாவை மிகச் சரியாகக் கொணர்ந்திருப்பதாகப் படுகின்றது எனக்கு! 
மொழி பெயர்ப்பாளர் இரண்டு மொழிகளின் நுணுக்கங்களையும், பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களையும் அறிந்தவராக இருக்க வேண்டும். இங்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே அறிந்தவராக இருக்கின்ற தமிழ்மொழி பெயர்ப்பாளருக்கு அதன் வழி மங்கோலிய, சீனப் பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களை அறிந்து கடத்துவதில் சிக்கலேதுமிருப்பதாகத் தெரியவில்லை - தமிழும், சீனமும், ஆங்கிலமும் அறிந்த ஒருவரது சான்றிதழ் இதற்கு அவசியமில்லை. மேய்ச்சலின் விதியை, அதன் அத்தியாவசியமானதொரு அலகைப் பின்வரும் பத்தி எவ்வளவு நேர்த்தியாகச் சொல்கிறது: 
"இன்று ஓநாய்களுடைய நல்ல பண்புகளை நீ நேரடியாகப் பார்த்தாய். அவை மேய்ச்சல் நிலத்தைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் மட்டும் செய்யவில்லை; அவை நமக்குப் புத்தாண்டுப் பரிசுகளும் தந்திருக்கின்றன. இது ஒரு நல்ல வருடமாக அமையப் போகிறது. அதற்காக அவற்றுக்கு நன்றி சொல்வோம். வேட்டையின்போது மிஞ்சியவை, அதை யார் முதலில் பார்த்தார்களோ அவர்களுக்கே சொந்தமென்பது மேய்ச்சல்நில விதி. ஆக, நீயும் நானும்தான் நேரடி சாட்சிகள் என்பதால் உன்னுடைய குடிலுக்குக் கொஞ்சம் அதிகப்படியாகக் கிடைக்கும்படி நாங்கள் பார்த்துக்கொள்வோம். மங்கோலியர்களாகிய நாங்கள் நன்றிக்கடனைத் தீர்ப்பதற்குப் பெரிதும் முக்கியத்தும் கொடுப்போம்". (ஓநாய் குலச்சின்னம் : 52 &53)
மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு "ஆறாவது அறிவு" Sixth Sense மிக அவசியம் அல்லவா! அந்த ஆறாவது அறிவின் நுட்பமே மேய்ச்சல் நிலத்தின் ஓநாயை மூலத்திலிருந்து பிசகாமல் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றது – 
மங்கோலியக் குதிரையில் திறமையாக சவாரி செய்பவனை விடவும், அவருடைய ஆத்மாவில் ஓநாய் குலச்சின்னமே அசைக்க முடியாத இடம் பெற்றிருந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், மேய்ச்சல் நிலக்காரர்கள் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கிற குலச்சின்னத்தைக் குறை சொல்வதில்லை. எழுபது அல்லது எண்பது குதிரைகளைக் கொன்ற பிறகும்கூட அவர்களின் ஒரே புனித உருவாக அதுவே இருந்து கொண்டிருக்கிறது. ஜென்னுக்கும் சில பழமொழிகள் நினைவுக்கு வந்தன: 'மஞ்சள் நதி நூறு பேரழிவுகளை விளைவித்தாலும், அது தொட்டுச் செல்லும் எல்லாவற்றையும் வளப்படுத்துகிறது;' 'மஞ்சள் நதி தன் கரைகளை உடைத்துப் பாயும்போது, மக்கள் மீன்களாகவும் கடல் ஆமைகளாகவும் ஆகிவிடுகிறார்கள்'; 'மஞ்சள் நதி - நம் அன்னை நதி'; 'மஞ்சள் நதி - சீன இனத்தின் தொட்டில்'. மஞ்சள் நதியானது சீன இனத்தின் தொட்டில் என்பதை சீனர் எவரும் மறுப்பதில்லை. அவர்களுடைய இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்கு வகிக்கிறது. அது சமயங்களில் பொங்கிப் பிரவாகமெடுத்துக் கரைகளை உடைத்துப் பல ஏக்கர் பயிர் நிலங்களையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் விழுங்கிவிட்டாலும் அதன் பெறுமதி குறைவதில்லை. மேய்ச்சல் நிலத்தவரின் ஓநாய் குலச்சின்னமானது அதுபோன்றே போற்றப்படத் தகுதியானது. (ஓநாய் குலச்சின்னம் : 133) 
வெளியீட்டாருக்கோ “ஒரு ஏழாவது உணர்வும்” தேவைப்படுகிறது. இப்பத்தியைப் பாருங்கள் –
 	டேங் பிரதேசத்தின் தெய்சாங், சீனாவின் மகத்தான பேரரசராகத் திகழ்ந்தவர். அவருக்கு வேட்டை மீது தீராக் காதலிருந்தது. அவருடைய மகன், அவருடைய வாரிசு, தன்னுடைய துருக்கியப் பாதுகாவலர்களோடு மேய்ச்சல் நிலத்துக்கு குதிரைகளில் வருவதையும், வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தான். அவன் அரண்மனை முற்றத்தில் மேச்சல்நில பாணியில் கூடாரம் ஒன்றையும் அமைத்திருந்தான். அங்கு அவன் உங்களைப்போலவே, ஆட்டை வெட்டித தன்னுடைய கத்தியாலேயே துண்டங்களாக்கி சாப்பிடுவான். ஒரு பேரரசனாக இருப்பதை விடவும் மேய்ச்சல்நில வாழ்க்கை மேம்பட்டதாக அவனுக்கு இருந்தது. தன் துருக்கியப் பாதுகாவலர்களோடு, அவனுடைய துருக்கிய ஓநாய் கொடியுடன் வேட்டையாடுவதையே அவன் விரும்பினான். மேய்ச்சல் நிலத்தில் ஒரு துருக்கியனைப் போல வாழவே அவன் ஆசைப்பட்டான். அதன் விளைவாக, அவன் சிம்மாசனத்துக்கான உரிமையை இழந்தான். அவனுடைய அப்பா அவனுடைய சகோதரனை வாரிசாக தேர்வு செய்தார். இங்குள்ள வாழ்க்கை ஒரு பேரரசனையும் வெல்லக் கூடியது" (ஓநாய் குலச்சின்னம் : 85,86).
இந்த வெளியீட்டாளர் இப்படித்தான் மகத்தான பேரரசு சிம்மாசனங்களை, காசு குவிகின்ற வியாபார ரீதியிலான புத்தகங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு பேரரசனையும் வெல்லக்கூடிய, ஒரு தரமான புத்தகம் போடுவதற்காகப் பதிப்பகம் தொடங்குபவர்! 
"நடைமுறையில் மொழிபெயர்ப்பு பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்பாடலாகத் தொடங்குகிறது. ஆனால் அதில் எப்போதும் அதிகார வரைவுகளும், ஆதிக்க வடிவங்களும் பொதிந்துள்ளன. எனவே அதனால் அரசியல் சிக்கல்களைத் தவிர்க்க இயலாது. தற்போதைய அதிகார வடிவங்களோடு மொழி பெயர்ப்புக்குள்ள தொடர்புகளைக் குறித்த கேள்விகளையும் புறந்தள்ள இயலாது. எந்த மொழிபெயர்ப்புச் செயல்பாடும் முழுமையான நடுநிலைமைக் களத்தில், அப்பழுக்கற்ற சமத்துவத்தோடு நடைபெறுவதில்லை. யாரோ, யாருக்காகவோ, எதையோ மொழிபெயர்க்கிறார்கள். யாரோ அல்லது எதுவோ மொழிபெயர்க்கப்படுகிறது. தன்னிலை இருப்பிலிருந்து, பிறநிலை இருப்பதாக மாற்றம் பெறுகிறது. வட அமெரிக்காவிற்குச் செல்லும் ஸ்பானிஷ் பெண் முதல் உலகத் தனிமனிதர் என்ற நிலையிலிருந்து, மூன்றாம் உலக 'லாடினோ' இனப் பெண்ணாக பெயர்க்கப்படுகிறாள். கானா நாட்டு இளவரசி அமெரிக்கா செல்லும்போது தான் இரண்டாம் பட்ச பிரஜையாக நடத்தப்படுவதை உணர்கிறாள். அவள் அங்கு இன்னுமொரு ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் அவ்வளவே. காலனியப்படுத்தப் பட்ட மனிதரும் மொழி பெயர்க்கப்பட்ட ஆண் / பெண்களின் நிலையில்தான் உள்ளனர்" என்கிறார் ராபர்ட் ஜே.சி.யங் (பின்காலனியம்: 174).
இந்த மிக ஆபத்தான, அதி நுட்பமான அரசியலை, மக்கள் திரளைக் கட்டமைக்க வேண்டியதின் கட்டாயத்தை, ஒன்றை மற்றொன்றாகக் கட்டமைத்து மாற்றுகின்ற மொழிபெயர்ப்புச் செயல்பாட்டைப் பின்வருகின்ற பத்தியில் நாம் முழுமையாக உணரலாம்:
சிவப்புப் பாதுகாவலர் அமைப்பின் பீஜீங் டாங்ஜியோ பிரிவைச் சார்ந்த மாணவனுமான லீ ஹாங்வெய் உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேசினான். "ஓநாய்கள் உண்மையான வர்க்க எதிரிகள். உலகமெங்கும் பரவியிருக்கிற பிற்போக்குவாதிகள் அனைவருமே பேராசை கொண்ட ஓநாய்கள்தாம். ஓநாய்கள் குரூரமானவை. மக்களின் உடமைகளை - அதாவது, நம்முடைய குதிரைகள், ஆடு மாடுகளை - அவை கொன்று குவிப்பது ஒரு புறமிருக்கட்டும்; அவை தம் சொந்தத்தைக் கூடக் கொல்கின்றன. அவற்றை வேட்டையாடி அழிக்க நாம் மக்கள் திரளைக் கட்டமைக்க வேண்டியது அவசியம். எல்லா ஓநாய்களுக்கும் எதிராக நாம் உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும். பூமியில் அவற்றை இல்லாமல் அழித்தொழிக்க நாம் உறுதியெடுக்க வேண்டும். அதேபோல, பழமையான எல்லாக் கருத்துகளையும், சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் - ஓநாய்கள் மீது இரக்கம், ஓநாய்களுக்குப் பணிந்து போவது, இறந்தவர்களின் உடல்களை ஓநாய்களுக்கு உணவாக அளிப்பது போன்றவை - நாம் தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தியாக வேண்டும்". (ஓநாய் குலச்சின்னம் : 149). 
ஜான் மோனகன் என்றும் சமூக இயலாளர், "ஒரே நேரத்தில் பிறக்கும் மனிதனும் விலங்கும் இவ்வுலக அனுபவங்களை ஒன்றாகவே பகிர்ந்து கொள்கின்றன: ஒரே ஆன்மாவைக் கொண்டுள்ளன: ஒத்த ஓர்மையைக் கொண்டுள்ளன. இந்த ஓர்மையானது பெரும்பாலும் கனவில் தோன்றுகிறது. அதாவது நம்முடன் வாழ்ந்து பயனளிக்கும் விலங்கின் கண்கள் மூலம் நாம் காணும் உலகமிது (விலங்குகளும் அவற்றுடன் சேர்ந்து வாழும் மனிதர்களும் ஒன்றையொன்று சார்ந்தவர்கள்)" என்று விளக்கங்கொடுப்பார். 
எந்த ஒரு பொருளானது உடலோடு ஒட்டாமல் தூரத்தில் இருக்கிறதோ அது மிக அன்யோன்யமாக அமைந்துவிடும் என்ற மரபினை இந்த இனவரைவியல் எழுத்துக்கள் மூலம் அறிந்திருக்கின்றோம்" (சமூக பண்பாட்டு மானிடவியல் : 189) என்றும் சுட்டுவார் அவர்.
அக்கூற்றை அச்சொட்டாக மெய்ப்பிக்கிறது புத்தகத்தின் பின்வருகின்ற இப்பத்தி: 
"ஒரு மனிதனால் தான் வளர்க்கப்படுவதான உணர்வு அதனிடமிருந்து வெளிப்பட்டதில்லை. அதனுடைய எஜமானன் அதற்கான உணவுடன் வருகிறான் என்பத்றகாக ஒரு அடிமை போல அதனால் நடந்துகொள்ள முடியாது. ஜென்னுக்கும் ஓநாய்க்குட்டிக்குமான உறவில் 'வளர்ப்பு' என்ற வார்த்தை இல்லவே இல்லை. இப்போதைக்கு அவனால் அது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதானே தவிர, அவனுடைய பராமரிப்புக்குட்பட்டதல்ல அது. அதனிடம் ஒரு தனித்துவ இயல்பாகப் பிடிவாதம் அமைந்திருப்பதை அறிந்த ஜென்னுக்கு முதுகுத்தண்டு ஜில்லிட்டது. 
கடைசியாக,அது சாப்பிடும்போது அதை செல்லம் கொஞ்சும் ஆசையை அவன் கைவிட்டான். அதனுடைய புனிதமான,இயல்பான உள்ளுணர்வுகளை மதித்தான். 
இங்கு ஓநாய் குணங்களுடன் ஒரு மனிதனும், ஒநாய் இயல்பு கொண்ட நாயும், ஒரு அசல் ஓநாயும் மேய்ச்சல் நிலத்தில் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஓநாய்ச் சிறுவர்களின் கதைகளை விடவும் மிகவும் விசித்திரமானதாக அவனுடைய வாழ்க்கை திடீரென அமைந்துவிட்டிருக்கிறது (ஓநாய் குலச்சின்னம்). 
ஒவ்வொரு கதையும், மொழிபெயர்ப்பாளர் அதன் உள்ளே வர கதவுகளாகவும், ஜன்னல்களாகவும் பயன்படும் சில சொற்களை, சொற்றொடர்களைக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்த பிறகு அவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாய் அந்தக் கதையின் ஆன்ம ஒளியை சேகரித்து அதை வெளிக் கொணர்ந்து. அதை மற்றொரு மொழியில், கலாச்சாரத்தில் மீண்டும் உருவாக்குகிறார் என்கிறார் சுக்ரிதா பால்குமார்.
சொர்க்கமும் பூமியும் எவ்வளவு வேறுபட்டவையோ அவ்வளவு வேறுபட்டவை ஒநாய்களும் நாய்களும். ஆனால் நீ இரண்டையும் சேர்த்து வளர்க்கத் திட்டமிடுகிறாய். அது மட்டும் போதாதென்று, அதை நாய்களோடு இணை சேர்க்கும் நம்பிக்கை வேறு வைத்திருக்கிறாய். மங்கோலியர்களாகிய நாங்கள், உங்களுடைய 'டிராகன் அரச'னோடு ஒரு பெண் பன்றியை இணை வைக்க விரும்பினால், அது பற்றி சீனர்களாகிய நீங்கள் என்ற நினைப்பீர்கள்? அது தெய்வ நிந்தனை என்று சொல்வீர்கள். நல்லது, இப்போது நீ செய்துகொண்டிருப்பது எங்கள் மூதாதையர்களை அவாமதிப்பது. டெஞ்ஞரையும் கூட. இதற்கெல்லாம் நீ ஒருநாள் அனுபவிப்பாய்.. (ஓநாய் குலச்சின்னம் : 354). 
ஒரு போர்வீரனைக் கொல்லலாம்; அவனை அவமதிக்கக்கூடாது. ஒரு ஓநாயைக் கொல்லலாம்; அதை வளர்க்கக்கூடாது. இப்போது இங்கே, மங்கோலியர்களின் மூதாதையர் நிலமான மேய்ச்சல் நிலத்தின் இதய ஆழத்தில், ஒரு இளம் சீன மாணவன், ஒரு நாயை வளர்ப்பது போல ஒரு ஓநாயை வளர்க்கிறான். இந்நிலத்து வாசிகள் டெஞ்ஞரை வணங்குகிறார்க்ள. இந்தப் புனிதமான இடத்தில் அவர்களுடைய மூதாதை வடிவமாக ஓநாயை வழிபடுகிறார்கள். ஓநாய்: அவர்களுடைய ஞானகுரு; போர்க்கடவுள்; மேய்ச்சல் நிலக் காவலன்; அவர்களுடைய குலச்சின்னம். இங்கு அவன் இதைச் செய்வது, உண்மையிலேயே ஒரு கொடுங்செயல். (ஓநாய் குலச்சின்னம் : 355)
மேற்சொன்ன பத்தியில் மூலத்தின் ஆன்ம ஒளிக்கீற்று அவ்வாறாக வேகப்படுத்தப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். சீனத் தொன்மமும், மங்கோலியத் தொன்மமும் முன்வைக்கின்ற கதை, கேள்வி - அதன் வழிபெறுகின்ற ஒளி, மிகச் சரியாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. 
'ULFA' என்ற அஸ்ஸாமிய புரட்சிக்குழுவின் மக்கட் தொடர்புத் துறைத் தலைவராக இருந்த மேகன் கச்சாரி தமது வாழ்வில் சூறாவளி வீசிய காலங்களில் எழுதிய கல கவிதைகளை இந்திரா கோசுவாமி வெளிக் கொணர்ந்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் மொழிபெயர்ப்பின் சவால்கள் - Dr.G. ஜெயராமன், லதா ராமகிருஷ்ணன் எனும் நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.
தமது இரண்டு அழகிய பசுமைப் புறாக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் மோகன் கச்சாரி பூடானின் காடுகளில் பிடிபட்டார் என்பதும், தம்மைப் பிடிக்க வீரர்கள் அச்சுறுத்தும் அளவில் நெருங்கிவந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும், தம்மைக் காப்பாற்றிக்கொள்வதை விட அந்த புறாக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என்ற அவரது எண்ணமும், அவரது வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆளுமை அவரது கவிதைப் புத்தகத்திலும் வெளிவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் கச்சாரி குறித்து மன்ஜித் பரூவா. இது போன்றதொரு ஆளுமையினை மொழிபெயர்பாளரும் கொண்டிருப்பார் என்பதை உருவாக்குகின்றது பின்வரும் மோகனது ஓநாய் குறித்த மூலத்தின் மொழிபெயர்ப்புப் பத்திகள்:
ஜென் அமைதியாகப் பேசினான். "அப்பா, இந்த ஓநாய்க் குட்டியை நான் ஒரு அடிமை போல் நடத்தவில்லை. அப்படிச் சொல்லப்போனால், நான்தான் அதன் அடிமையாக இருக்கிறேன். ஒரு மங்கோலிய அரசன் அல்லது இளவரசனுக்காகக் காத்திருப்பதை போல நான் அதற்காகக் காத்திருக்கிறேன். அதற்குக் கொடுப்பதற்காக நான ஒரு பசுவிலிருந்து பால் கறக்கிறேன். அதற்காக இறைச்சிக் கூழ் தயாரிக்கிறேன். அது குளிரில் அல்லது நோயில் வாடிவிடுமோ என்று கவலைப்படுகிறேன். அதை நாய்கள் கடித்து விடுமோ அல்லது அதன் தாயோ அதைச் தூக்கிச் சென்றுவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் சரியாகத் தூங்குவதில்லை. ஓநாயின் அடிமை என்று காவோ என்னைக் கூப்பிடத் தொடங்கியிருக்கிறான். எந்தவொரு சீனனையும் விட அதிகமாக ஓநாய்களை நான் போற்றுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். டெஞ்ஞர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது; டெஞ்ஞர் நியாயமானது; எதற்காகவும் டெஞ்ஞர் உங்களைக் குற்றம் சாட்டாது". (ஓநாய் குலச்சின்னம் : 357)
"மூலமொழி குறித்த போதுமான அறிவு இல்லாமல், இணைப்பு மொழியொன்றைப் பயன்படுத்தி மொழி பெயர்ப்பு செய்தல், என்னளவில் நிறைவளிக்காத அனுபவமே" என்கிறார் அம்பிகா ஆனந்த். அவரும், எனது பேராசிரியர், ஆசான் T.V. Subba Rao அவர்களும் இணைந்து சில கவிதை மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், ஆங்கில இணைப்பு மொழியின் மூலமாக மோகன் செய்திருக்கின்ற இம் முயற்சி எனக்கு மிக நிறைவளிக்கிறது. மூலத்தைப் படித்திராத குறை பற்றிய சிறு நெருடல் கூட அற்று இதில் ஒன்ற முடிகிறது!
"குஜராத்தின் தேஜ்கர் பகுதியில் அமைந்துள்ள பழங்குடி ஆய்வு அகாதெமியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், சைனாவிலிருந்து வெளிப்படும் மொழி பெயர்ப்புக் கோட்பாடு குறித்து Red Chan, 'சீனர்கள் மொழிபெயர்ப்பை இனவரை வியலாகப்பார்க்கிறார்கள்' என்று குறிப்பிட்டார்" என்கிறார் உதய நாராயண சிங். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த ஓநாய் குலச்சின்னம்.
கீழ்காணும் வரிகளை ஒரு சோறுபதமாக சொல்லலாம் அதற்கு: 
நம்முடைய கன்பூசிய வழிகாட்டுதல் கொள்கையானது, பேரரசரிடமிருந்து அமைச்சருக்கு, தந்தையிடமிருந்து மகனுக்கு என்று மேல்-கீழ் தத்துவத்தையே வலியுறுத்துகிறது. சீனாவின் சிறு அளவிலான குடியானவப் பொருளாதாரமும் கன்பூசியக் கலாசாரமும் மக்களின் சுபாவத்தை பலஹீனமாக்கி விட்டன. (ஓநாய் குலச்சின்னம் : 398,399&400)
"எல்லாவற்றையும் ஒருபடித்தான தன்மை வாய்ந்தாகச் சித்தரிப்பதைத் தொடர்ந்த ரீதியில் மறுதலித்து வருவதன் மூலம் ஒரு மொழிபெயர்ப்பாளர் 'பணியமறுப்பதன்' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமொன்றில் பங்கேற்பவராகிறார். 
ஸேய்த் Parochial domination and fussy defensiveness என்று வர்ணித்த விஷயத்தை ஒரு மொழிபெயர்ப்பாளர் கைக்கொள்வதில்லை. காரணம், மனிதர்களிடையே நிலவும் வேறுபாடுகளின் காரணமாகவே அனைத்துவகையான கலைவடிவங்களும் சாத்தியமாகின்றன என்பதே முழுநிறைவான உண்மை" எனப் படித்திருக்கிறேன்.
பன்மைத்தன்மையின் பல வீச்சுகளை, இருவேறு கலாச்சாரங்களின் நியாயங்களை, நியதிகளைச் சொல்கின்ற மூலப் பிரதியினைத் தேர்வுசெய்து (ஒரு வகையில் மங்கோலியர்களும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்றாலும்) - இப்போக்கு Fascism என்கின்ற ஒரு சித்தாந்தைத் தூக்கிப் பிடிக்கின்ற அபாயமுடையது எனும் புரிதலுடன், தான் மூலத்தின் ஆன்மாவை மட்டுமே கடத்துகின்ற மொழிபெயர்ப்பாளன் எனும் தெளிவுடன், பயணித்திருக்கின்றார் மோகன். இதில் எங்கே பணிய மறுக்கிறார் என்றால், மங்கோலிய மேச்சல் நில நாடோடிகள் குரூரமான ஒடுக்கு முறைவாதிகள் - செங்கிஸ்கான் ஒரு கொடுங்கோல் ஆக்கிரமிப்பு முறைக்கு வழிகோலியவன் எனும் ஒருபடித்தான - ஒற்றைப் பரிமாணத்தைவிடுத்து - அந்த மக்களின் நியாயங்கள், அறம் சார்ந்த எளிய வாழ்முறை, (பெரிய உயிர்கள், சிறிய உயிர்களை விட மதிப்பு வாய்ந்தவை) விவசாய மக்களது வளர்ச்சி எனும் கோட்பாட்டில் சிதைந்த நாடோடிகளின் பூர்வகுடி விழுமியங்கள் - இவற்றை முன்னிறுத்துகின்ற ஒரு படைப்பினை மொழிபெயர்த்திருக்கிறாரே - அங்குதான்! இதுவே, மூலப் புத்தகத்தை வெறும் பாசிஸத்தின் வெளிப்பாடகப் பார்க்கின்ற தட்டையான பார்வைக்கு மிகச் சரியான பதிலாக இருக்க முடியும். 
ஒரு சந்தேகம் மோகன் - பின்வரும் வரியில் நீங்கள் கையாண்டுள்ள, 'பொக்காகவே' ஆங்கிலத்தில் எந்த வார்த்தைக்கான சரிநிகர்ச் சொல் - equivalent?
ஓநாய்கள் பற்றிய தன்னுடைய புரிதல், இன்னமும் கூட மிகவும் பொக்காகவே இருப்பதாக ஜென் நினைத்தான். 
ராமராவ் எனும் மொழிபெயர்ப்பாளர் தனக்கான ஒரு பாராட்டுரையாக, "இவர் ஒரு அடாவடியான மொழிபெயர்ப்பாளர்" எனத் தான் அழைக்கப்பட்டதைச் சுட்டுகிறார். மோகனும் ஒரு அடாவடியான மொழிபெயர்ப்பாளர் தான். பணிய மறுக்கின்ற, மொழியின் சவால்களோடு, மூலத்தின் சத்யத்திற்குத் துரோகம் செய்யாத 'அடாவடியானதொரு' மொழிபெயர்ப்பாளர்.
இலக்கிய மொழியாக்கம் என்பது அன்பினால் மேற்கொள்ளப்படும் உழைப்பாகச் செய்யப்படுவது. அது அதனளவிலேயே ஒரு பரிசு. அன்பளிப்பு. விருது அல்லது பரிசு என்பது அதிர்ஷ்டவசமாகக் கிடைப்பது என்றும் ராமாராவ் சுட்டுகிறார். 
அதனளவில் கிடைக்கின்ற திருப்திக்காக, அன்பினால், ஒரு பரிசாக இம்மொழிபெயர்ப்பை மோகன் செய்திருக்கின்றார். மனமார்ந்த வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள். 


உதவிய நூல்கள்:
1) பின்காலனியம் : மிகச் சுருக்கமான அறிமுகம் - ராபர்ட் ஜே.சி. யங், தமிழில்       
     அ.மங்கை
2) பின்நவீனத்துவம் : மிகச் சுருக்கமான அறிமுகம் - கிறிஸ்தோஃபர் பட்லர், தமிழில் 
     பிரேம்
3) சமூக - பண்பாட்டு மானிடவியல் : மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜான் மோனகன் – 
     பீட்டர் ஜஸ்ட், தமிழில் பக்தவச்சல பாரதி 
4) மொழிபெயர்ப்பின் சவால்கள் - Dr. G. ஜெயராம், லதா ராமகிருஷ்ணன்
5) கவிதை ஓவியம் சிற்பம் சினிமா - இந்திரன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *