நிலவும் அவளும் – செந்தில் புத்தக வெளியீட்டு விழா பேச்சு

1853இல் நீராவி ரயில் நம் நாட்டில் ஓடத் தொடங்கியபோது அது மக்களை அவர்களது ஜாதி, மதம், இனம், பிரதேசம் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி இணைத்தது. அதன் பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல் பிரிந்து கிடந்த மக்களை எந்தவித வேறுபாடும் இன்றி ஓரிடத்தில் கூடச் செய்தது சினிமாவும், புதுக்கவிதையும் தான்.
      உருசியாவிலுள்ள காகசிய மலைத் தொடர்களில் ஓர் உச்சியில் அமைந்துள்ள மலைநாடுதான் தாகெசுதான். இம்மலைநாட்டின் பாவலன்தான் இரசூல் க்மசுதோவு. தனது 12-ஆம் அகவையிலேயே பாட்டு எழுதத் தொடங்கிய இரசூலின் பாடலகளைப்பற்றி, மக்கள் பாவலரான அவனின் தந்தை ஒருமுறை கூறினார்; "உனது பாடல்களில் ஒரேஒரு சுருட்டைப் பற்றவைக்கும் அளவுக்குத்தான் நெருப்பு இருக்கிறது" என்று.
தாகசுதானில் நில நடுக்கம் கண்ட நாள்களில் கூட இரசூலின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூட்டம் திரண்டதாம். அவனது பாடல்கள் 27 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஏறத்தாழ அறுபது இலக்கம் (60,00,000) படிகள் விற்பனையாகி உளளன.
      அறிவுமதி அண்ணனின் வாழ்த்துடன், நிலவில் கால்பதித்து இருக்கிறார் - தம்பி செந்தில்.
Quote - Armstrong's Says.
      முனைவர் அரங்கபாரி அவர்களும், முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும் வாழ்த்துரைக்க, மிக நேர்த்தியான வடிவமைப்பில் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
"மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக்கொண்டுவிடும்" என்று புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், விமர்சகர் Mathew Arnold 19ம் நூற்றாண்டில் அவதானித்தார். தம்பி செந்திலின் கவிதைகளிலிலோ, ஒட்டுமொத்தமாகக் கவிதையின் பாடுபொருளைக் காதல் எடுத்துக்கொண்டுவிட்டது. காதல், காதல், திகட்டத் திகட்டத் காதல் எனும் தளம் இவருடையது.
அகத்தெழும் உணர்வுகள் அனைத்தும் உலகிடை
முகிழ்த்திடும் காதலில் முதிர்ந்தே தோன்றிடும்;
பருவத்து மலர்ச்சியும் பாவையின் வனப்பும்
செறிவுற்று இலங்கும் சேயிழை நல்லாள்
மறத்தின் மாண்பும் மலர்தமிழ்ப் பண்பும்
திறத்தில் உருவாய்த் திகழுவோர் காளையைக்
கண்டதும் அவனிற் கலந்திடத் துடிப்பாள்;
நாணமும் மடமும் நற்குலப் பண்பும்
தாமே அகன்றிடத் தளர்வாள் காதலால்;
ஆண்மையும் சிறப்பும் அந்நிலை அகன்றிடப்
பெண்மையை நாடிப் பித்தெனும் நிலையில்
அவனும் தளர்வான் அங்கவர் கலப்பார்;
இங்கிவர் தம்முட் களவிற் கண்டிடும்
இன்பமே குறிஞ்சியாம்; இருந்தவள் இரங்கிடல்
முல்லையாம்; முதல்வன் ஒழுக்கம் இழுக்கிட
மனையாள் தன்னுள் மருள்வதும் சினப்பதும்
மருதமரம்; மற்றவன் பரிந்திட்ட காலையில்
தனித்திருந் தேங்குக் தலைவியின் துயர
நினைவே பாலையாம்; அவன்துணை வேண்டியாள்
அதுதனைப் பெறுதே எண்ணி இரங்குதல்
நெய்தலாம்; எனவிவர் ஒழுக்கம் நிகழும்.
இங்கிந் நிலைகளில் இவர்மனத் தெழுந்தே
பொங்கும்; உணர்வெலாம் பொருந்திய நிகழ்வதும்
இவர்தம் வாழ்வை இனித்திடச் செய்தலைக்
கருதிக் கழறிடும் பல்லோர் உரைகளும்
தமிழினச் சால்பைத் தாம்நிலை பெறுத்தும்
தகவுடை யனவவை தமிழ்அக நூல்களாம்
அவற்றுட் சிறந்தது அகநா னூறெனும்
செழுந்தமிழ்த் தேறல் நம் சிந்தை பிணிப்பது.
அகநானூற்றைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழான் மகனான உருத்திரசன்மர்; தொகுப்பித்து உதவியவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளோடு மட்டுமே அமையாமல் அவர்தம் பெருமை, மறம், ஒழுக்கம், பண்பு, மற்றும் பற்பல வாழ்வியல் நெறிச் செப்பங்களைத் தருவது அகநானூறு. செந்திலின் கவிதைகள் முழுக்க அகவொழுக்க நினைவுகள் தான். அதில் குறிஞ்சித்திணையின் இன்பமும், முல்லையின் இரங்கிடலும், மருதத்தின் ஊடலும், பாலையின் பிரிவுத் துயரும், நெய்தலின் இரங்குதலும் விரவிக் கிடக்கிறது சொற்சித்திரங்களாய் - ஆனால் அவை அவரது அக உணர்வினை மட்டுமே ஒட்டுமொத்தமாகச் சுட்டுகின்ற வட்டத்திற்குள் வளையவருகின்றன.
			"ஒவ்வொருவரும் மிக நேசத்துடனே
			சந்தோஷமாக அசைகிறார்கள்
			உடம்பெல்லாம் ஒளியாக" 
என்றொரு கவிதை வரி உண்டு. ஒவ்வொரு கவிதையிலும் உடல், உள்ளமெல்லாம் காதலாக ஒளி உமிழ்ந்து, அமிழ்கிறார் செந்தில் எனக்கு மிகப் பிடித்தது-
			காலம் என்னைப் போல் ஓடிக்கொண்டிருக்கிறது
			காதல் என்னைப் போல் தேடிக்கொண்டிருக்கிறது
படித்தவுடன் இந்தக் காதல் இவரை இப்பாடு படுத்துகிறதே எனத் தோன்றுகிறது -
எப்படி தெரியுமா - ஆத்மாநாமின் இக்கவிதைபோல்,
			"அரிசி மூட்டையிலிருந்து சிதறிய 
			அரிசி மணிகள் போல்
			தப்பித்தவறி திசை தடுமாறி ஓடிவந்த
			சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
			மொஸைக் தரையில் தவறிப்போன 
			ஒற்றைக் குண்டூசி போல" 
இதில் மொசைக் தரையில் தவறிய குண்டூசி தான் இவரது காதலா - தேடுகிறார் - சிக்கவில்லையா? அல்லது கிடைத்தைத் தவறவிட்டுவிட்டாரா
			"என் காதலை நீயும் மறப்பதாய் இல்லை
			உன் காதலை நானும் மறப்பதாய் இல்லை
			நம் காதலை நானும் மறைப்பதாய் இல்லை -
தலைப்பில் இருக்கின்ற 'நிலா' இவரது கவிதைகளில் காதலியின் படிமம் தான். சமீபத்தில் தபூசங்கரது -
			"நீ நிலவைப் பார்க்கும்போதெல்லாம்
			எனக்குப் பயமாக இருக்கிறது 
			அதைப் பறித்துத் தரும்படி நீ 
			கேட்டுவிடுவாயோ என்றல்ல -
			நிலவில் இருந்து யாரேனும் 
			உன்னைப் பறித்து வரும்படி 
			ஆள் அனுப்பி விடுவார்களோ" எனும் 
கவிதை நினைவிற்கு வருகிறது. 
	கிரேக்க புராணம் - காதலன் நிழற்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகிறது. தம்பி செந்திலுக்கோ, காதலி கண்முன்னால் எப்போதும் தெரிய, அதை வரைய ஒரு ஓவியமாக இவர் மாற, அங்கே கவிதை போலச் சில பிறக்கின்றன. 
			"என்னவளை யார் எனக் கேட்டார்கள் 
			சொல்கிறேன்...
			குயிலோசை
			மயிலிறகு
			வானவில் நிறம்
			கிளிப்பேச்சு
			ஓவியம்
			சிலையின் நளினம்
			பழமுதிர்ச் சோலை 
			இவற்றின் நடமாடும் பிம்பம் 
			என் காதலி"
என்பது இவர் வரைகின்ற சித்திரம் தானே!
	ஒரு புறச்செய்தியை ஒரு கவிஞன் எவ்விதமாகப் புரிந்து கொள்கிறான் என்பதுதான் அவனது ஆளுமையைக் காட்டுவதாகும். செந்திலின் அகச் செய்தி மட்டுமே இங்கு நமக்குக் காணக் கிடைக்கிறது. புறத்தின் தாக்கத்திலும் அவர் காதலையே காண்கிறார் - உணர்கிறார் - அதனை நான் புரிந்து கொள்கிறேன். ஆகையால் ஏன் இவர் 'காதல்' தவிர்த்து பிற விஷயங்களைத் தொடவில்லை என்கிற கேள்வியைக் கேட்கவில்லை. அதனை செந்திலுடைய பயணமும், காலமும் தீர்மானிக்கட்டும்.
			"தாஜ்மஹல்
			மும்தாஜ்
			ஷாஜகான்
			வரலாற்றுப் பதிவாம்
			ஊர் சொல்ல.....
			நீ
			நான்
			நாம்
			வடுக்களின் அடையாளமாக
			நிகழ்காலத்து நிஜமாக ஊர் சொல்லும்"
இங்கே 'வடு' எனும் சொல் என்னைக் கவர்கிறது. நிறைவேறாக் காதல் மட்டுமல்ல - என்னைப் பொறுத்தவரை தாஜ்மஹலும் 'வடு'தான். 
			"நட்பில் பிரிவு தழும்பைத் தருகிறது.
			காதலில் பிரிவோ வடுவாய்த் தங்குகிறது"
என்றொரு வரி உண்டு. 
		'தாஜ்மஹல்' குறித்துக் 'கறுப்பு மலர்' என்றொரு கவிதை நான் எழுதினேன். எனக்கு அது காதலின் சின்னமாக என்றுமே தோன்றியதில்லை - ஏன் தெரியுமா 
Quote from கறுப்பு தாஜ்மஹால் 'கவியரங்கக் கவிதை' 
சமீபத்திய ஒரு குறுஞ்செய்தி இது -
1) Mumtaz was Shajahan's 4th Wife out of his 7 wives (great).
2) Shajahan Killed Mumtaz's husband to marry her (excellent).
3) Mumtaz died during her 14th delivery (wow).
4) After her death Shajahan married Mumtaz's sister (Amazing). 
where the hell was love in this? 
	இதிலே எனக்கொன்றும் பிரச்சனையில்லை - 7 மனைவிகளில் மிக அதீதமாக அவர் 4வது மனைவியான மும்தாஜைக் காதலித்திருக்கலாம் - அதிலென்ன குற்றம்?. 'காதலிலும், போரிலும் எதிலும் குற்றமில்லை' எனும் போது everything is fair in love & war - அவளது கணவனைக் கொன்றது கூட குற்றமில்லை என வாதிடலாம். அவள் 14வது பிரசவத்தில் இறந்தாள் என்பதைக் கூட மிக அதிகமான காதலின் கூடல் என்று நியாயப்படுத்தலாம். அவளது மரணத்திற்குப் பிறகு அவளது சகோதரியை மணந்தார் என்பதையும், "ஏன் அவர் தனிமையில் எஞ்சிய காலத்தினைக் கழிக்க வேண்டுமா என்ன?" என்கிறவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வகையான வாழ்க்கை, சுதந்திரம் பெண்ணுக்கிருக்கிறதா? ஷாஜகான் செய்த அனைத்தையும் ஒரு பெண் செய்தால் இச் சமூகம் என்ன சொல்லும்? அப்படியெனில் - காதல் சுதந்திரம் ஆணுக்கும், பெண்ணிற்கும் இங்கு வேறு வேறு தானே! 
	ஆனால் இந்தக் கேள்விகளை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு, ஒரு காதலனின் ரசனை வெளிப்பாடாக மட்டுமே நான் இவற்றைப் படித்தேன். 
	எனக்கு மிகப் பிடித்த தெரிப்புக்கள் இவை -
			"கற்பை விடப் புனிதமானது 
			காதல் 
			புனிதமாக்குவதில்
			முதலிடத்தில் இருப்பேன் 
			என் காதலோடு".
பெரியாரின் வழியில் கற்பு, புனிதம் போன்ற கருத்தாக்கங்களை மறுப்பவள் நான். என்றாலும் - "ஆணுக்கும், பெண்ணிற்கும் அதனைப் பொதுவில் வைப்போம்" என்கிற பாரதியைப் போல - செந்தில் முதலிடத்தில் இருப்பதாக வாக்குக் கொடுப்பதால் - இது கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. 
	எனக்கு மிகமிகப் பிடித்த கவிஞன் ஆத்மாநாம். 80களில் தமிழ்க் கவிதை உலகை நவீனத்தின் பாற் புரட்டிப் போட்டவன். 'ழ' எனும் கவிதை ஏட்டின் ஆசிரியர். 
'வாழ்க்கை கிணறு' எனும் அவரது கவிதை இது -
		வாழ்க்கைக் கிணற்றின் 
		மோக நீரில்
		மோதுகின்ற 
		"பக்கெட்டு" நான் 
		பாசக்கயிற்றால் சுருக்கிட்டு
		இழுக்கின்ற தூதன் யார்?
இதுபோன்றதொரு சாயலில் - செந்திலின் 
		"உயிர் அடங்கும் ஒரு நொடி
		அவள் நினைவலைகள் வந்துபோகும்
		பல கோடி
		என் உடல் மூடும்
		மறுநொடி
		நான் மண்ணிற்குள்ளும்
		என் காதல் விண்ணிற்குள்ளும்
		பிரிவு கிடையாது
		பிறப்பு உண்டு". 
இதில் அந்தக் கடைசி இரண்டு வரிகள் தான் கவிதை அவை மட்டுமே கவிதை. மிக அற்புதமான வரிகள்.
	சமகாலத்தின் கிண்டலும் உண்டு இவரிடத்தில் -
		"தடையில்லா மின்சாரம் என்பது 
		இடைவெளி இல்லா உன் புன்னகையோ!"
பாருங்கள் - இருட்டில் நாமெல்லாரும் எரிச்சலாக இருக்க, இந்தக் காதலால் இவர் மட்டும் இன்பமாக இருக்கிறார்! 
	மிக வித்யாசமான சிந்தனை இது -
		"இருதயப் பரிசோதனையில் 
		தெரிந்தது அவள் முகம்
		மருத்துவருக்கோ அதிர்ச்சி
		எனக்கோ மகிழ்ச்சி".

		"பைரசி பண்ண முடியாத
		ஒரே மென்பொருள் நீதான்"
எனத் தன் காதலியைச் சொல்கிறார் தபூசங்கர். இவரோ, scan இல் தெரிவதும் அவளது முகமென்கிறார். இந்தக் காதல் அனைவரையும் இப்படித்தான் பித்தர்களாக்கும் போல! 
	வழக்கம்போல மழை, இவரது காதலிலும். மழையில் நனைந்த காதலி இவரை உருமாற்றுகிறாள் - உலகின் "தீராக் காதலனாக". 
	"நான் என் உடம்பின் மகத்துவத்தை அறிந்தேன் 
	அது உன் உடம்போடு இருக்கிறபோது" 
என்று அமெரிக்கக் கவிஞன் ஈ.ஈ. கம்மிங்ஸ் (E.E. Cummings) சொன்னான். 
	"இரு உடல் 
	ஒரு உயிர்
	நாம் தான்
	நீயும் சொன்னால்" 
இதில் - கடைசிச் சொற்களான 'நீயும் சொன்னால்' மிக முக்கியமானது. அவளோ அவனோ சொன்னால் தான் - உணர்ந்தால்தான் - சம்மதித்தால்தான் அது இணைதல். அப்பொழுதுதான் உள்ளங்களின் உயிர்ப்போடு உடம்பின் மகத்துவம் பிடிபடும்! 
	காதலுக்குத் தோல்வி கிடையாது - காதலனோ அல்லது காதலனோ தோற்றுப் போகலாம். என்றாலும், எனக்கு மிகப் பிடித்த கவிதை வரி - காதல் தோல்வி குறித்து கவிஞர் இந்திரன் எழுதியது - 
	"தோல்வியடைந்த முதல் காதல் 
	மெதுவாக நகரும் ஆற்று நீரில் 
	மிதக்கும் பிணம் போலிருக்கிறது".

	"தொடர்ந்து கொண்டே நீ 
	தொலைந்து கொண்டே நான் 
	மறைந்த பின்னும் காதல்"
எனும் செந்திலின் வரிகள் மேற்சொன்ன கவிதையை நினைவுபடுத்தியது. 
	மிகப் பிடித்த அவரது இன்னொரு தெரிப்பு - 
		"எட்டிப் பிடிக்காதே 
		தொட்டு மட்டும் பார் -
		வலிக்கப்போகிறது என் இதயம்!

		"சிந்தியதும் சிதறியதும் 
		பூக்களல்ல - உன் புன்னகை'

		"துளியாவது புரியவைக்க
		துளிர்த்துக் கொண்டே இருப்பேன் 
		மீண்டும் மீண்டும்....

		"உன்னைக் காணும்
		ஒவ்வொரு நாளும் 
		புத்தாண்டாய்ப் பிறக்கிறது காதல்". 
என் அன்பிற்குரிய கவிஞன் இளையபாரதி சொல்வான் -
		"கொட்டும் மரணக் குருவியின் 
		அலகிலிருந்து தப்பிய தானியம் நான்" என்று. 
	தம்பி செந்திலுக்கு காதலெனும் மரணக் குருவியடமிருந்து தப்பிக்க மனசில்லை. அறிவுமதி அண்ணன் சொல்வது போல -
		"அணுஅணுவாக சாவது என்று முடிவெடுத்துவிட்டீர்களா- 
		காதலியுங்கள்" என்று!
	அப்படி காதல் கொண்ட, பித்தின் வசப்பட்ட ஒரு மனதின் வெளிப்பாடாக மட்டுமே நான் இவற்றைப் பார்க்கிறேன். இவைகள் தேர்ந்த கவிதைகள்அல்ல என்றாலும் கவிதைக்கான சிறு பொறி, Spark, அதற்கான மனோபாவம் நிச்சயமாகத் தம்பிக்கு வாய்த்திருக்கிறது. அதனைப் பெரு நெருப்பாக்க, அவர் தனது அனுபத்தின் தளங்களையும், பார்வையையும் விரிவாக்க வேண்டும். 
	நேற்றுத்தான் - காதலின் பெயரால் 'வினோதினி' மரித்துப் போனாள். 'வன்மம்' என்ற சொல்லிற்குக் காதலின் அகராதியில் இடமிருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அச்மபவம் அது. இந்நிலையில் சவமாய்க் கையில் கனக்கிறது மொழி. மரத்துப்போன அழுகல் உடம்பாய் வார்த்தைகள் - ஆனால் சுடச்சுட பரிமாறப்படுகிறது வாழ்க்கை ஒவ்வொரு கணமும் என் உள்ளங்க¨யில். ஒரு கவி மனசின் சிதறல்களைப் பற்றிப் பேச நான் இங்கு வந்திருப்பதும் அவ்வாழ்வின் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் தான்!
	இங்கு நல்ல காதலர்களுக்கு மிகப் பெரிய தேவை இருக்கிறது செந்தில். ஒரு பெண்ணைப் புரிதலோடு காதலித்தல் மிக நுட்பமானதொரு கலை. இளையராஜாவின் ரசிகரான உங்களுக்கு அது கைகூடி இருக்கிறது. நீங்கள் ஒரு கவிஞர் என்பதற்காக நான் வரவில்லை - மிகச் சிறந்த காதலர் என்பதற்காகத் தான் வந்திருக்கிறேன். 
	அதுபோல உங்களது வார்த்தை வெளிப்பாடுகளை 'ஆஹா' 'ஓஹோ' எனப் போற்றவில்லை நான். ஆனாலும் உங்களது இந்த மனோபாவத்தை, அன்பைப் பரிமாறும் வரிகளை, அதனை உலகிற்குப் பெருமையுடன் அறிவிக்கின்ற ஒரு ஆண்மகனை நான் மிக மதிக்கின்றேன். வாழ்த்துக்கின்றேன்! 
	ஒரு கவிதை என நான் உணர்கின்ற ஒன்றிற்கான தேர்ந்த சொற்கள், படிமம், பொதுமைப் பண்பு, பரந்துபட்ட அனுபவவீச்சு - இவைகள் எதுவமற்றவை தான் உங்களது இந்த வெளிப்பாடு. ஆனாலும் கவிஞர் இன்குலாப் சொல்வது போல, "அதில் மனிதம் இருப்பதொன்றே எனக்குப் போமானது. அந்நியமாகிப் போகும் வாழ்க்கையை எனக்கு நெருக்கத்தில் அது கொண்டு வந்து நிறுத்தினால் போதும்" ஆகவே அவற்றை நான் ரசிக்கின்றேன். 
	உங்கள் வரிகளில் மனிதம் - அதன் ஆன்மாவான காதல் இருக்கிறது. பயமுறுத்துகின்ற, அவநம்பிக்கை தருகின்ற இக்காலத்திய காதல்களிலிருந்து அந்நியமாகப் போகின்ற என்னை, உண்மையின் நெருக்கத்தில் கொண்டு வந்து அவை நிறுத்துகின்றன. அதற்காக வாழ்த்துகிறேன். உங்களது முதல் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது - தொடருங்கள் - எதிர்காலத்தில் இன்னும் சிறந்த கவிதைகளை எழுதுங்கள்!
                                          * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *