பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி – மனோ மோகனின் கவிதைகளை முன்வைத்து ஒரு உரையாடல்

உலகமகா மக்கள் கவிஞன் பாப்லோ நெருடா அவரது நோபல் பரிசு ஏற்புரையில், 
'ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேறுபாடு நான் என் சித்தப்பிரமையை அறிந்தே இருக்கிறேன் அது கொடுமையை இன்னும் அதிகமாகத்தான் வைத்திருக்கிறது. நான் தரிசித்ததனை ஒருபோதும் அப்படியே சொல்ல முடியாது, சும்மா இருக்கவே முடியாது, வெளிப்பட்டே தீர்கிறது வெறி' என்கிறார். 
	"கவிதை எளிமையாகவும் அதே வேளையில் ஆழமாகவும் தனக்கே உரிய அழகியல் கூறுகளுடன் இருக்க முடியாதா என்னும் கேள்விகளுடன்" (இன்குலாப்) எழுதும் நான் கவிதை என்று உண்மையைப் பேசுவது என்றும் நம்புபவள் என்பதால் மனோவின் இத்தொகுப்பு எனக்கு மனசிற்கு மிக நெருக்கமாகவும், தமிழின் நவீனத்திற்கு பின்பான கவிதைப் பரப்பில் முக்கியமான ஒன்றாகவும் படுகின்றது. 
	"உர்-பாசிசம் (நித்திய பாசிசம் என்றும் பொருள்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது; சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது 'ஆஸ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச்சட்டைகள் பேரணி நடத்த வேண்டும்' என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர்-பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை", என்கிறார் உம்பர்தோ ஈக்கோ, (உர் -பாசிசம்' (Ur-Fascism), நியுயார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ், 22.6.1995).
	இப்பாசிசத்திற்கு எதிராகக் கவிதை இயக்கம் குறித்த ரமேஷின் முன்னுரையோடு இந்நூல் வெளிவந்திருக்கின்றது. கொலையும், தற்கொலையும் செய்யத் தூண்டுகின்ற சூழலில், சிதையாமல் இருக்க முயல்வதற்கும், சிதைவதற்குமான ஊடோட்டமே இக்கவிதைகள். 
	"மோலியரின் லெ பூர்ஷ்வா ஜென்டில்ஹோம் என்ற நாடகத்தில் யோர்தான் என்ற மனிதர் 'நான் வாழ்க்கையில் இதுவரை உரைநடையா பேசிக்கொண்டிருந்தேன்' என்று ஆச்சர்யமடைகிறார். அதுபோல ஒருவகையான கவிதை மொழியிலேதான் நாமும் வாழ்நாள் முழுவதும் பேசுகிறோம் என்பதை அறிந்தால் நாமும் ஆச்சர்யம் அடைவோம். பலத்த மழை - நனைந்து வருகின்ற நண்பரைப் பார்த்து வீட்டிலிருக்கின்ற நண்பர்" அடடா, கொஞ்சம் நனைந்து விட்டாய் போலிருக்கே" என்கிறார் - முழுக்க நனைந்தவரைப் பார்த்து கொஞ்சம் நனைந்து விட்டாய் என்பது குறைநவிற்சி (under statement). பதிலுக்கு அந்த நனைந்த நண்பர் - "கொஞ்சமா? வானம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டுகிறது" என்று சொல்வது இல்பொருள். அதோடு, "நான் ஊறுகாய் போல் ஆகிவிட்டேன்" என்பது உவமையணி - இப்படித்தான் வாழ்க்கையில் அணிசார்ந்த மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் க. பூரணச்சந்திரன். கவிதை அல்லது கலைகளின் பிற வடிவங்களில் இந்த அணிசார்ந்த, நேர் அர்த்தத்திலிருந்து விலகுதல் நமக்கு இன்னும் சற்று கூர்மையாகச் சாத்யப்படலாம் என அங்கு நுழைந்தால், இந்தச் "சொல்லணி அல்லது விலகல் எதிலிருந்து விலகிப் போகின்றதோ அந்தச் சாதாரண, நேர் அர்த்தம் என்ற கருத்தையே அது கேள்விக்குள்ளாக்குகிறது" என்கின்ற அவர், சான்றாக, டெரிடா "உருவகம் குறித்த கோட்பாடு விளக்கங்கள் யாவும் தவிர்க்கவியலாத வகையில் உருவகங்களையே சார்ந்திருப்பதைச்" சுட்டிக்காட்டுகிறார். அடிப்படையிலேயே மொழி என்பது ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உய்த்துணர வைக்கும் குறியீட்டு இயல்பு கொண்டதுதானே? இந்தப் பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி என்பது எனக்கு ஒரு குறியீட்டு படிம உருவகம் தான் -அது வெறும் உவமையல்ல. தலைப்பே மிக நீண்ட உரையாடல்களை எனக்குள் நிகழ்த்துகின்றது. 
	"இலக்கியம் என்பது உள்ளுணர்வால் உருவாவதன்று. அது செயற்கையாக செய்யப்படுவது" என்ற நோக்கை ரஷ்ய உருபுவாதம் முன்வைத்ததை நாம் அறிவோம். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும், இலக்கியத்தைச் 'செய்வதற்கு' மிக முக்கியமான தேவையாக "பரிச்சய நீக்கம்" 'defamiliarization' என்ற ரஷ்ய உருபுவாதிகளின் கருத்து எனக்குக் கொஞ்சம் உடன்பாடானது.
	"முதன்முதலில் இக்கருத்தைக் கூறியவர் விக்டர் ஷ்க்ளாவ்ஸ்கிதான். தமது உத்திநோக்கில் கலை (ஆர்ட் ஆஸ் டெக்னிக்) என்ற நூலில் அவர், 'பழக்கவயப்படுதல் பொருட்களை, உடைகளை, மரச்சாமான்களை, ஒருவரது மனைவியை, போரின் பயத்தை - யாவற்றையும் விழுங்கி விடுகிறது. பல்வகை மனிதர்களின் சிக்கல்மய வாழ்க்கைகளும் நனவற்றநிலையில் செல்வதாக இருப்பின், அவை இருந்தும் இல்லாததுபோல்தான். வாழ்க்கையின் உணர்வை மீண்டும் பெற உதவுவதற்காகத்தான் கலை இருக்கிறது. பொருட்களை நாம் உணரவும், கல்லைக் கல் தன்மையுடையதாக ஆக்கவும் அது இருக்கிறது. கலையின் இறுதிப்பணி, பொருட்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்துகளை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணரவைப்பது. இதற்குக் கலை கையாளும் உத்தி, பொருட்களைப் பரிச்சயமற்றதாகச் செய்வது - அவற்றின் வடிவங்களைச் சற்றே இருண்மைப்படுத்தி, நாம் அவற்றை உணர்தலாகிய செயலைக் கடினமாக்குவதும், நீண்டநேரம் கொள்ளச்செய்வதுமாகும். கலையில் அது உருவாக்கப்படும் நிகழ்முறைகள் முக்கியமே ஓழிய இறுதிப்படைப்பு அல்ல. ஒரு பொருளின் கலைத்தன்மையை அனுபவப்படுத்தும் வழி தான் கலை. அப்பொருள் முக்கியமன்று' என்று சொல்கிறார். அதாவது ஒரு பொருளை நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதாகத் தோன்றச் செய்வதுதான் பரிச்சயநீக்கம் என்னும் உத்தி. இந்த உத்திக்கு இன்னொரு பெயர்தான் கலை, பரிச்சயநீக்கம் என்பது என்றும் மாறாத ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு செயல்முறை அல்ல. எந்தெந்த நேரங்களில், எந்த எந்த முறைகளில் பரிச்சய நீக்கம் செய்ய முடியுமோ அவற்றைக் கலை கையாளவேண்டும். இதனை மென்மேலும் செப்பமாக்கியவர் பக்தின். அவரது பார்வையில் மொழியின் குறிகள் மிக முக்கியம். சொற்கள் என்பன நிலையான அர்த்தம் பெற்றவை அல்ல பக்தினுக்கு. அவை சமூகத்தின் பல்வேறு தளங்களில் காணப்படும் பல்வேறு தன்மைகளும், போராட்டங்களும் நிரம்பியவை. It's a polyphony என்று மொழியை அதனாலாயே அவர் சுட்டினார்" (க. பூரணச்சந்திரன்). சொற்கள் போரிடும் கருத்தியல்களின் செயல் தளங்கள் என்ற பக்தினின் கூற்றுப்படி பார்த்தால் பைத்தியக்காரியும், பட்டாம்பூச்சியும் அப்படித்தான். அவற்றை defamiliarize செய்து, பழக்கவயப்படுதலின் தளை நீக்கி, அவற்றைப் பற்றிய நம் கருத்துக்களை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணர வைப்பதுதான் மனோவின் இந்தத் தலைப்புத் தேர்வு. 
	நினைவுபடுத்துகிறேன் - கலையில் "அது உருவாக்கப்படும் நிகழ் முறைதான் முக்கியமே ஓழிய இறுதிப்படைப்பு அல்ல" எனும் போது - நாமறிந்த பயித்தியக்காரியை, வண்ணத்துப் பூச்சியை - அவை குறித்த நாம் பரிச்சயப்படுத்தியிருக்கின்ற தன்மைகளை நீக்கி, புத்தம் புதிதாக - நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதான ஒரு வண்ணத்துப் பூச்சியை பயித்திக்காரியை நமக்குத் தருவதுதான் மனோவின் கவிதைத் தலைப்பும் - உத்தியும். இந்தத் தலைப்புத் தேர்விற்காக, எனக்கு அவரிடம் தர அன்பு நிறைந்த புறங்கை முத்தம் ஒன்று உண்டு. பயித்தியக்காரியின் பட்டாம் பூச்சி தான் அவருடையது என்பதற்குத் தான் அம் முத்தம். இது பயித்தியக்காரனின் பட்டாம்பூச்சி அல்ல என்பதற்கும் சேர்த்துத்தான். 
	பயித்தியக்காரியின் பெண் மொழியும், சமிக்ஞைகளும், உடல் மொழியும், இச்சைகளும், வலியும், துயரமும், கருணையும், தாய்மையையும் சொல்வதே நம் தமிழின் நாட்டார், செவ்வியல் மரபு. 
	"சுயபோகம்
	முப்போகம் - 
	விளைச்சலைப் போகமெனச் 
	சொல்லும் மொழி
	பெண்ணாகியிருப்பதன்றி 
	வேறு நிலையில்லை” 
என்று ரமேஷ் சக்கரவாகக் கோட்டத்தில் சொல்வதைப் போல், இது எனக்கான, இல்லையில்லை, எமக்கான, எங்களின் பைத்தியக்காரியான ஆதித்தாயின் வியர்வை நெடிக்கின்ற கரங்களுக்கான பட்டாம் பூச்சி. 
	போதலேரின் 'கடற்பறவை'யில் Albatros - "The Prince of the clouds" எனும் பறவையைப் பற்றிய குறிப்பு ஒன்று வரும். நீண்டநாட்கள் கடல்மேல் நீரறருந்தாமல் பறக்கும் வல்லமை வாய்ந்த அவற்றின் நீண்ட இறக்கைகளே, பனிப் பிரதேசங்களில் அவை ஓய்வு எடுக்கும்போது உறைபனியில் சிக்கி மீளமுடியாமல் அவற்றிற்கு எமனாகிவிடும். பயித்திக்காரிகளான ஆதிப் பெண்களின் மரணமும் - பெண் இருத்தலின் மறுப்பும் - அப்படித்தான் காட்சிப்படுத்தப்படுகிறது மனோவின் தூண்டில்காரன் கதையில் வரும் இவ்வரிகள் அற்புதமான படிமக் குறியீடு.
	"பட்டாம்பூச்சியான பெண் மீன்
	நதியின் எல்லை கடந்து பறப்பது
	தக்கை ஆடும் தருணத்தை 
	எதிர்நோக்கும் தூண்டில்காரனுக்கு
	ஆற்று நீரில் மிச்சமிருப்பது
	நீர்வெளியில் துள்ளும் பெண் மீன்
	பட்டாம் பூச்சியாவது பற்றிய 
	கதைகள் மட்டுமே"
	"ஒரு படிமம் என்பது தான் உணர்த்தும் காட்சி அனுபவம் மட்டுமே. குறியீடோ தன்னை உணர்த்துவதன்றி, அதற்கு மேலும் பலவித அர்த்தங்களைக் கொள்ளக் கூடியது" (க. பூரணச்சந்திரன்). அபாரமான இக்குறியீடு நா. பிச்சமூர்த்தியின் முக்குளிச்சான் பறவையை எனக்கு நினைவூட்டியது. அப்பறவை பற்றி தஞ்சை பிரகாசிடமும், எம்.வி. வெங்கட்ராமிடமும் அவர் பகிர்ந்தாக வே.மு. பொதியவெற்பன் சொல்லும் செய்தி - "இது ஒரு அபூர்வமான பறவை. இது தண்ணீருக்குள் மீன் மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்தில் மழை பெய்யிற நேரத்துல ஆகாய வானத்தில் பறக்கும். அற்புதமான சிருஷ்டி. தண்ணீர் மழையில் கலங்கினா இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்துல இருந்து நீந்தி வந்து மரத்து மேல போய் உட்காந்துக்கும். வானத்திலும் பறக்கும் இதற்கு. "முக்குளிச்சான்" என்று பெயர் வைச்ச கிராமவாசியை அவனல்லவா கவிஞன்" என்று வியந்தாராம் நா.பிச்சமூர்த்தி. அச்சொட்டாக பெண்ணிற்குப் பொருந்துகிற பறவை. அதை அப்படியே படிம வடிவில் நிறுத்துகிறது மனோவின் மேற் சுட்டிய கவிதை வரிகள்.
	"எந்தவொரு சொல்லும் தனக்கான எல்லைக்குள் நின்று 
	ஒரு பொருளை உணர்த்துவதில்லை 
	எனக்கான சொல் அசைவுகளில் உருவகங்களைச் செய்கிறேன்... 
	சொல்லற என்பதே எனது அறம்" 
எனும் ரமேசின் அகஉலகத்தைப், பிரதிமையாகப் சில இடங்களில் மனோவிடம் பார்க்கிறேன்.
	"ரமேஷ் பிரேமின் திகம்பரக் கவித்துவத்துவமும், கலாப்ரியாவின் "படிம / உருவக / குறியீட்டு இடையீடில்லாத சாத்யம் கிட்டுமா என ஏங்கும் நிர்வாணக் கவித்துவத்துவமும், பிரம்மராஜன் முன்னிறுத்தும் பரக்டின் "மொழிச்சலவை கோட்பாடும்", பால் வெலரியின் "சொற்களைச் சந்தேகிக்கும் தன்மையும்" முன்னிறுத்துபவையே, சொல்லைக் கடந்த கவிந்த வெளியைப் பேசிச் செல்வனவே" என்று வே.மு. பொதியவெற்பன் ஓரிடத்தில் சுட்டியிருப்பார் (கவிதையில் சொல், மொழியில் வாழ்தலும், மொழிச் சலவையும்) அதன் தொடர்ச்சியாக இங்கு இணைந்து கொண்டிருக்கிறார் மனோமோகன்.
	நகுலனுக்கு மஞ்சள் பூனை, வான்கோவிற்கு சுடரும் மஞ்சள் மலர் ஓவியம், நா.பிச்சமூர்த்திக்குக் பஞ்சமகாகவிஞன் (கரிச்சான், வானம்பாடி, குயில், மணிப்புறா, மைனா), யவனிகாவிற்கு கருப்பு பியர், ரமேஷிற்குப் பன்றிக்குட்டி போல மனோவிற்கு பட்டாம்பூச்சி. 
	பறவைகள், சிறு விலங்குகள் அற்றுப்போன புதைவெளியைச் சொல்வதற்கு மனோவிற்கு ஒரு பட்டாம்பூச்சி வேண்டுமே? 
	"கருடன் பார்த்து வெகு காலமாகிறது
	எப்போதேனும் வலசை போகின்றன நாரைகள்
	முயலும் காட்டுப் பூனையும் பிடித்து
	விற்றுப்போன பழைய குறவன் 
	பிச்சை எடுக்க வேணும் வந்து போகிறான்
	...... அவனது ஞாபகத்திலும் 
	எமது திணை நிலத்தின் 
	பச்சய வாசனை" (புதைவெளி)
என்கிற ஆதங்கத்துடன், அவரிடம், இந்த பைத்தியக்கார எனக்கு, உங்களுக்கு, தனக்குதானே அன்றியும், இந்த உலகத்திற்கு கொடுப்பதற்கு ஏதுமில்லை –
	"சற்றுமுன் பிடித்த
	வண்ணத்துப் பூச்சியைத் தவிர" 
	அவ்வண்ணத்துப் பூச்சி நிகழ் நிமிடம் தானோ? வண்ணத்துப் பூச்சிக்குப் புதிதான இறக்கைகளும், மீன் தொட்டிக்குள் நீந்துகின்ற பழக்கமும், மரணத்தில் உயிர்த்தெழும் சிறகசைப்பும் தருகின்ற இக்கவிஞன் அவை விலை பேச இயலாதவை எனவும் உறுதியளிக்கின்றான்.
	கவிதைக்கான சொல்தேர்வு எங்கிருந்து தொடங்குகிறது எனக் கேட்கின்ற பொதியவெற்பன், 
	"பறவைக்குப் பெயரிடுவதில் இருந்துதான் 
	ஒரு மொழியில் கவிதைக்கான சொல் தேர்வு
	பயின்று வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 
	இந்தப் பறவைக்குப் பெயரிடுவதன் மூலம் 
	எனது மொழிக்கு ஒரு கிவதையைக் கொண்டு வருகிறேன்"
என்பதைச் சுட்டி விட்டு, உதாரணத்திற்கு, ரமேஷின்,
	'போதையின் நிறம் காவி
	கவிதையின் மணம் பழம்
	காவி நிறப் பழம் -
	இது புத்தனுக்கு என் மகள் இட்ட பெயர்' 
என்பதைச் சொல்கிறார்.
	சட்டைப் பையில் மாத்திரை - இது 
	மனோ உறக்கத்திற்கு இட்ட பெயர்.
	கூழாங்கல் - இது மனோவிற்கு சிமென்ட் ஓடுகளில் 
	பெய்யும் மழை. 
	நிலா ஊறுகாய் - மனோவிற்கு side dish
பட்டாம் பூச்சிக்கு, விண்ணேகுகின்ற சிலுவையைத் தந்து அதனை ஒரு பறவையாக்குகிறார் மனோ-
	"ஓவ்வொரு வண்ணத்துப்பூச்சியைக் கையளிக்கும் போதும் 
	ஒவ்வொரு முறை நிகழ்கிறது அவனது மரணம் 
	பட்டாம் பூச்சியின் 
	மூன்றாம் சிறகசைப்பில் உயிர்தெழும்போது
	சிலுவை சிறகு விரித்த பட்டாம் பூச்சியென 
	விண்ணேகுகிறது" (பட்டாம் பூச்சி மேய்ப்பவன்)
	மனோவின் இந்த மூன்றாம் நாள் உயிர்தெழுதல், சிலுவை, புனித வெள்ளி எனும் அவரது இன்னொரு கவிதைக்கு என்னை இழுத்துப் போகிறது. சமகாலத்திய ஈழத்தின் இனப்படுகொலைக்கான மெளன, துயர சாட்சிகளென நான், நீங்கள், கொல்பவனாகவும், கொல்லப்படுவனாகவும் நாமிருக்கின்ற நகை முரணை இக்கவிதை மிக அற்புதமாகக் காட்சிப் படுத்துகிறது. 
	"வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவுகளைக் கையாள வேண்டியவன் ஆகின்றான். ஒரு கலைஞனோ நிகழ்வின் உண்மைகளைக் கையாள வேண்டியவன் ஆகிறான்" எனும் Leo Tolstoy இன் கூற்றை மெய்ப்பித்த எனக்கு மிகப் பிடித்த கவிதை இது!"

புனித வெள்ளி
	நம்பமுடியாதபோதும்கூட
	அது அப்படித்தான் நடந்தது
	அப்பழுக்கற்ற உனது வெள்ளை அங்கியின் மீது
	குருதியின் ஈரம் பரவிக்கொண்டிருந்தது
	சற்றுமுன் சுடப்பட்ட தோட்டா
	உனது இடதுபுற மார்பில் சற்று மேலேயோ
	சரியாக மார்புக் காம்பிலோ பட்டிருக்க வேண்டும்
	முப்பதாவது வினாடியே உயிர் பிரிந்தது
	சுட்டவனுக்கு அசலாக எனது முகம்
	ஆனாலும் அது நானில்லை
	என்பதை எப்படி உன்னிடம் சொல்வது
	அதுவும் இறந்துவிட்ட உன்னிடம்
	இனி அந்த சிலுவைக்கு
	நீ உபயோகப்பட மாட்டாய்
	அந்த ஆணிகளுக்கும் கூடத்தான்
	கொண்டுவந்த சிலுவையையும் ஆணியையும்
	திரும்ப எடுத்துப் போவதில் 
	சரத் பொன்சேகாவுக்கு உடன்பாடில்லை
	கிடத்தப்பட்ட சிலுவையில் 
	உனக்குப் பதிலாக என்னைக் கிடத்தினான்
	ஆணியடித்துக் நிமிர்த்தப்பட்ட எனக்கு
	அசலாக உனது முகம். 
	"நகுலனது மஞ்சள் பூனை - சுயம் நசித்தலும் இல்லாதிருத்தலும்" கட்டுரையில் பொதியவெற்பன் நகுலன் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்து இது – 
	"டேவிட் கூப்பரின் பைத்தியம் (அ) சித்தப்பிரமை என்பதும் அறிதலுக்கான வழி. இந்த எதிர் உளவியல் ரீதியில் நகுலன் எழுத்தில் நதி மூலம் காண்பார் சா. தேவதாஸ்.
	"வான்காவையும் காப்காவையும் இப்படித்தான் (மனச்சிதைவு) சமூகம் கருதிற்று. ஆன் செக்ஸ்டனின் கவிதைகள் இப்பிக்ஞை நிலையின் தீவிரத்தையே முன்வைக்கின்றன. நகுலனின் எழுத்துக்கள் இங்கிருந்தே தொடக்கம் கொள்கின்றன" அறிதலுக்கான வழியே மனோவிற்கு இக்கவிதைகள். அவற்றின் அடிப்படை சிதைவு மனநிலையின் தீவிரமே. அவற்றைக் கடத்துவதே இவரது கவிதைகள். 
	மனோவின் சிறு நீர் கழித்தல், மது, சிறுநீர், கொலை, கலவி, ஆகிய குறியீடுகளுடன் சிதைவை, நகுலனது தன்னிலிருந்து தான் தப்பித்தலை, பிரம்மராஜன் சுட்டுகின்ற T.S. Elliotன் சுயமற்ற நிலையை (impersonality) ஐச் சுட்டுகின்ற ஒரு கவிதை. 

சிறுநீர் கழித்தல் 
	துயரமென்பது வேறொன்றுமில்லை 
	அதுவொரு பீர்பாட்டில் அவ்வளவுதான் 
	நாவில் கசப்பேற அதைப் பருக நேரும்போது
	இரண்டுமுறை சிறுநீர் கழிப்பது நல்லதென
	கிளிப்பாணி ஜோதிடன் சொல்லியிருந்தான்
	சிறுநீர் கழித்ததற்காக
	பதிமூன்று லட்சத்து முப்பத்து ஓராயிரத்து
	தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாவது முறையாக
	நீ என்னைக் கடிந்து கொண்டபோது
	உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றேன் 
	என் ஆகச்சிறந்த துயரம் நீதான் தெரியுமா
	அதனால் தான் உன்னை 
	முத்தமிட்டு இதழ் பருகும் 
	ஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழிக்கிறேன் 
	துயருறும்போது வாடிக்கையாகிவிடுகிறது 
	நீ கவிதை எழுதும் நான் சிறுநீர் கழிப்பதும் 
	இரண்டிற்கும் பெரிதாய் வேறுபாடில்லை. 
இங்கு அ. ராமசாமியின் பின் நவீனத்துவ விமர்சனமுறை எனும் கட்டுரையின் தொடக்க வரிகளை நினைவுகூர்கிறேன் – 
	"மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்-நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத்தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் அடிப்படைகள் திறனாய்வுக்குள் மட்டும் அடங்கி விடுவன அல்ல. அது ஒரு வாழ்தல் முறை. அந்த வாழ்தல் முறை சரியான வாழ்தல் முறையா? தவறான வாழ்தல் முறையா? எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் பதிலாகச் சொல்ல முடியும். நான் மட்டும் அல்ல ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அதற்கான பதில்". 
நகுலனும், மனோவும், ரமேசும், நானும் வாழ்கின்ற இவ்வாழ்வில் யவனிகாவும் இருக்கிறார் தன் திருடர்களின் சந்தையோடு. 
	"நிறையவே குடித்தேன் 
	நிதானம் வேண்டித்தான்"
எனும் நகுலனைப் போலவே குடித்தலும், (துயருறும், சிசைவுறும் வேளைகளில்), சிறுநீர் கழித்தலும், முத்தமிட்டு இதழ் பருகுதலும், ஒரு குறுக்கு மறுக்கு தோற்றத்தில் மனோவிற்கு வாய்க்கிறது. 
	யவனிகாவின் கடவுளின் நிறுவனத்தை முன்வைத்து குலசேகரன் சொன்னதாகப் பொதியவெற்பன் பதிகிறார் - "குடியும் கூட விடுபடுதலின் அம்சமாகிறது - மது பற்றிய குறிப்புக்கள் பிரக்கைஞ நிலையென்றால், குடித்தல் மறத்தலையும் சிதைத்தலையும் கொண்டாடுவதாகிறது. இந்தக் கவிதைகளில் போதைக்குணமும் மனச்சிதைவும் அருகருகே வைக்கப்படுகின்றா. குடியும் பயித்தியமும் ஒன்றாகிறது" 
	மனோவின் கவி உலகும் யவனிகாவைப் போல மறத்தலையும், சிதைத்தலையும், போதைக் குணத்தோடு மனச்சிதைவின் அருகாமையினை முகர்பவை. 
	"துயரமென்பது வேறொன்றுமில்லை
	அதுவொரு பீர் பாட்டில் அவ்வளவுதான்"
	"வழிவதும் பொங்குவதுமான 
	அருவியைப் போலவே சலசலக்கிற 
	மது விடுதி" 
	"மதுகாலியாகும கணத்தில் 
	கதைகளால் நிறைந்து விடுகிறது கோப்பை"
எனும் மனோவின் வரிகளில் போதை மிக வலுவான குறியீடு. அவ்வகையில் பின் நவீனத்துவக் கூறு கொண்டவைகளாகவும் இவரது கவிதைகள் இருக்கின்றன. 
	Totalising (ஒட்டுமொத்தப்படுத்துபவை) Hegemonising மேலாதிக்கப் பண்பு கொண்டவை ஆகிய கருத்தியல்களுக்கு முற்றிலும் எதிரானது பின்னை நவீனத்துவம். 
	அகாலம் எனும் மனோவின் கவிதை சொல்கிறது - எனக்கு மிகப் பிடித்த ஒன்று. 
	"பசி மிகும் போது 
	தானின்ற குட்டிகளையே புசிக்கும் 
	நாகமொரு அரசியல் விலங்கு

	ரோஜாவின் பெயர் கொண்ட 
	உம்பர்டோ ஈகோவின் நாவலை 
	வாசித்து முடித்த இரவில் 
	ஒரு பின் நவீனக் கவிஞன் சொன்னான் 
	வரலாறென்பது நஞ்சு தடவப்பட்ட காகிதம்" 
இதன் கடைசி வரிகள் அ. ராமசாமியின் கட்டுரைக்கு என்னை மறுபடியும் போகவைக்கிறது.
	"நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்துவிட முயல்கின்றனர். ஆனால் பின் - நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணப் பட வேண்டும் எனக் கருதுகிறது" எனும் அ.ராமசாமியின் வரிகளுக்கு உதாரணமாக மனோவின், மேற்சொன்னவை மட்டுமல்ல, அவரது தந்தம் முளைத்த கதை யும் தொல் பொருள் ஆய்வாளனின் கடமைகள் எனும் கவிதைகளையும் சுட்டலாம். 
	"சிதைவுண்ட தன்மைக்கு நவீனத்துவம் வருத்தம் கொள்கிறது. பின்நவீனத்துவமோ கொண்டாட்டம் கொள்கிறது" என்பது அ. ராமசாமியின் மிக முக்கியமான அவதானிப்பு. 
	"ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள் 
	என்று கேட்டாள் 
	ஏன் இப்படி வாழ்கிறீர்கள் 
	என்று நான் கேட்கவில்லை 
	உங்கள் வாழ்விற்கும் 
	என் சாவுக்கும் இடையில் 
	வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது" - இது கொண்டாட்டமன்றி வேறென்ன?
நகுலனின் இக்கொண்டாட்ட மனநிலையை மனோவிடத்திலும் பார்க்கலாம். 
	"அனுபவத்திற்கெட்டாத பெருங்கனவு இது 
	கலவியைப் போலவே அலாதியானது கனவு" 
எனும் இவரது கனவுவெளி கவிதையில் புலப்படுவது இச்சிதைவின் பின் நவீனத்திய கொண்டாட்டம் தான். 
	"அவன் என் எதிரி என்றார்கள்
	அவனைச் சுட்டுவிட்டேன்
	ஆனால் பாவம்
	அவனை நான் சாதாரணமாகச் சந்திருந்தால் 
	ஒரு கப் பியர் வாங்கி அவனுக்களித்து
	இருவருமே சந்தோஷமாகக் குடித்திருப்போம்
	ஆனால் பாவம் 
	அவன் என் நண்பன்போலவே இருந்தான்". 
	D.H. Lawrence இன் கவிதை மேற்சொன்னது. மனோவின் பீர்பாட்டில் கவிதை லாரன்ஸின் கவிதையை மீள் உருவாக்கம் செய்கிறது - இப்படி. 

பீர்பாட்டில் 
	உனது ஆளுமைக்குட்பட்ட
	அகதி முகாமொன்றில்
	குடியமர்த்தப்பட்ட நான்
	இதுவரை
	திறக்கப்படாத பீர்பாட்டிலென
	அமைதியாயிருந்தேன்

	நானுமொரு பாணன் தான் 
	இப்பொழுது என் முறை
	எனது மூதாதை பாடலின் 
	முதல் வரியைத் தொடங்குகிறன்

	கவனமாகத் திறக்கப்படும்
	பீர்பாட்டிலென எனது கபாலம் பிளந்து
	மரணத்தை ஒரு கண்ணாடி டம்பளரில் 
	ஊற்றிக் குடிக்கிறாய்

	இதற்குமேல் நான் செய்ய
	என்ன இருக்கிறது
	எனது மரணம் உனது போதை 
	மொழியின் துல்லியம் கொண்ட மனோவின் சில உவமைகள் புதுவிதக் கருத்தமைவு கொண்டுள்ளன. என்னை அவை மிகவும் கவர்ந்தன. 
	"நீ பிடிக்கும் சிகரெட்டின் புகையைப் போல
	என் மார்புக் கூட்டுக்குள் நுழைகிறது 
	உனது துரோகம்" 
	ருத்ர தேசம் கவிதையின் முடிவில் உமைக்கும், சிவனுக்குமான வழக்கொன்றை முடிக்கின்ற மனோவின் உவமை – 
	"இடைவேளையில் வெளியேறிய ஆதிபராசக்தி
	நீதிமன்றத்தை நிமிாந்து பார்க்கிறாள். 
	மேகம் வழியும் ஆண்குறியென மகாலிங்கம் தெரிகிறது" 
	கி. ராஜநாரயணன் அய்யா பகிர்ந்து கொண்ட செய்தி இதுவெனப் படித்தேன் - ஒருமுறை சம்போகத்தில் பரவசம் யாருக்கு மேலதிகம்? ஆணுக்கா, பெண்ணுக்கா எனக் கேள்வி கேட்கப்பட்டது புதுமை பித்தனிடம். அவரது பதில், "கோழி இறக்கையால காதைக் கொடைஞ்சிருக்கீரா வே?" 
	மனோவின் வால் தின்னும் பல்லி கவிதையில், 
	"யாரிடமும் சொல்லிவிடாதே 
	ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின் 
	நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்" 
என்ற வரிகள் புதுமைப்பித்தனின் பதிலை நினைவூட்டின. 
	"ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதே எத்தனையோ தன்மைகளை மனதிற் கொண்டு அதைப்பிற புத்தகங்களோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்ப்பதாகிறது. இதுவே நவீன விமர்சகர்களால் பல்பிரதித்துவம் (Inter Textuality) எனப்படுகிறது" என்பார் க. பூரணச்சந்திரன். மனோவின் இப் பிரதியும் அப்படிப் பலவற்றைக் கிளறுகின்றது. 
	ஷாராஜின் "பட்டாம் பூச்சியைக் கொல்லும் கலை" எனும் கவிதையை நான் வாசித்ததில்லை. ஆனால் ரமேசின், 
	"எப்படிக் கொல்வது என்பது பற்றி
	முழு அறிவு எனக்குண்டு
	கொலையின் கவிதையியல் குறித்து
	எந்தப் பல்கலைக் கழகத்திலும் வகுப்பெடுப்பேன் 
	எனக்குப் பல வழிகள் தெரியம் 
	இருந்தாலும் எனக்குப் பிடித்த வழி 
	உன் முன்னே என்னைப் பிணமாகக் கிடத்துவது" 
எனும் இக்கவிதையினைப் பலமுறை உள்வாங்கிக் கடத்தியிருக்கிறேன். 'தாயின் இனம் புரியாத கனவுகளால் இழுத்துவரப்ட்ட' யவனிகாவின் ஆயுதங்களுக்கான சோதனை எனும் கவிதையை இன்றைய ஒரு நாளின் பல கணங்களில் மறுமறுபடி தேடியிருக்கிறேன். அதுபோலவே, 
	"சிறுநீர் கழித்ததற்காக
	பதிமூன்று லட்சம் முப்பத்து ஓராயிரத்து
	தொள்ளாயிரத்து என்பத்திரண்டாவது முறையாக
	நீ என்னை கடிந்து கொண்டபோது
	உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றுந்தேன்
	என் ஆகச் சிறந்த துயரம் நீதான் தெரியுமா?
எனும் மனோவின் வரிகளில் ஒரு வரியை - என் ஆகச் சிறந்த துயரம் நீதான் தெரியுமா? கடப்பது எவ்வாறு எனத் திகைக்கின்றேன். 
	இப்படி நகுலனும், ந. பிச்சமூர்த்தியும், யவனிகாவும், ரமேஷீம், D.H. Lawrenceஉம், கொண்ட பல்பிரதித்துவம் பொதிந்த இக்கவிதைத் தொகுப்பு நவீனக் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான வரவு. 
	இருந்தாலும் 
	"இதைப் போல
	எதுவுமில்லை 
	எதைப் போலும்"
எனும் நகுலனோடு, மனோவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன். 
	"மரபு என்றால் இலக்கணம் அல்ல. மரபு அனுபவத்தோடு சார்ந்து நிற்கிறது. பழமையோடு பூண்ட உறவில் தன் அடையாளங்களைப் பிறப்பிப்பது தான் படைப்பு. பாதையில் பார்த்து நடந்து வந்து, அதன் குருட்டு முனையில் வெட்டி விட்டதே மரபு" எனும் பொதியவெற்பனின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அவ்வகையில் தோழர் கரிகாலன் எனக்கு மிகமுக்கியமான கவிஞர். கூடவே, "குலப் பெருமை பேசும் பெற்றோர்களுக்கு எதிரான நடவடிக்கையே எனது கவிதைச் செயல்பாடு" எனும் யவனிகாவையும், ரமேஷையும், தமிழின் மிக முக்கியமான கவிஞர்கள் எனக் கொண்டாடுபவள் நான். இந்திய மொழிகளில் தமிழுக்கான நெடுங்கவிதை பரப்பு குறித்து பெருமிதப்படாத கவிஞர் நம்மில் யாருமுள்ளார்களா என்ன? அதில் இவர்கள் குறித்து எனக்கு பெருமை உண்டு. நகுலனுக்கு எது சுகம் பாருங்கள் – 
	"ஒரு கட்டு வெற்றிலை 
	பாக்கு சுண்ணாம்பு புகையிலை
	வாய் கழுவ நீர்
	ப்ளாஸ்க் நிறைய ஐஸ்
	ஒரு புட்டிப் பிராந்தி
	வத்திப் பெட்டி சிகரெட்
	சாம்பல் தட்டு
	பேசுவதற்கு நீ 
	நண்பா
	இந்தச் சாவிலும் 
	ஒரு சுகம் உண்டு" 
மனோவிற்கு, 
	"மின் விளக்கிலிருந்து வழியும் 
	ஒளியின் கடைசிச் சொட்டு வரை 
	மதுக்கோப்பையில் ஊற்றியபடியே 
	உனக்கென்ன வேண்டுமென்கின்றேன் -
	ஒரு டம்பளர் இரவும் 
	தொட்டுக் கொள்ள நிலவுமென்கிறாய் 
	என்னிடமிருந்த
	ஒளி நிறைந்த கோப்பையை 
	கவிழ்த்து வைத்துவிட்டு
	இரவையும் நிலவையும் சுவைக்கிறோம்
	சுரந்து கொண்டேயிருக்கிறது
	இந்த இரவு" 
பொதிய வெற்பனுக்கோ, 
	"மனவெளி மண்டிலத்தில் 
	நினைவோடைத் தாரை
	மடைமாறிப் புனல் பாய 
	மஞ்சள் பூனை தாவ
	இன்றெனக்கு வாய்த்தது
	குவார்டர் ஓயிட் ரம்மும்
	கூடக் கொஞ்சம் நகுலனும் 
	ஜ மீன் non - being"
எனக்கும் தான் – 
	மனோவின் பயித்தியக்காரியின் பட்டாம்பூச்சியில் விழித்திருந்த சில நீண்ட இரவுகள் வாய்த்தன. 
	"ஒரு புன்னகை கைகுலுக்குமொரு 
	பட்டாம் பூச்சி 
	தன்னைப் பிரதிபலிக்காத
	கண்ணாடி
	கூடக் கொஞ்சம் கொலைவெறி.
	இந்தப் பயித்தியத்திலும்
	சுகமுண்டு நண்பா -
	வாதையின் குறுவாளுடன்!" 
நீட்ஷே ஏறத்தாழ மிகக் கடைசியாக எழுதிய வார்த்தைகள் இவை: 
	"எனது பழக்க வழக்கங்களும், அதைவிட இன்னும் எனது இயல்புணர்ச்சிகளின் பெருமையுமே அடியாழத்தில் எதிர்ததுக் கலகம் செய்யும் ஒரு கடமை எனக்கிருக்கிறது. நான் சொலவதைக் கேளுங்கள்! ஏனென்றால், நான் இப்படி இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதுவாக இல்லையோ அதுவாக என்னை ஆக்கிக் குழப்பாதீர்கள்! இதை எழுதியபின் ஒரு நூற்றாண்டுக் காலத்தில், அவருடைய வாசகர்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறரும் இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை" (க. பூர்ணச்சந்திரன்). எனவே மனோவை அவர் எதுவாக இருக்கிறார் என இக்கவிதைகள் வழி அறியத்தான் முயற்சித்துள்ளேன். அதில், அவர் எதுவாக இல்லையோ அதுவாக அவரை ஆக்கிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வே பிரதானம். 

உதவிய நூல்கள்: 
	1) நீட்சே மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர் : தமிழில் க.பூரணச்சந்திரன்.
	2) பாசிசம் மிகச் சுருக்கமான அறிமுகம் - கெவின் பாஸ்மோர் : தமிழில் அ. மங்கை.
	3) சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும் - வே.மு. பொதியவெற்பன்.
	4) கவிதையியல் - க. பூரணச்சந்திரன்.
	5) பின் நவீனத்துவ விமர்சன முறை - ஒர் அறிமுகம் - அ. ராமசாமி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *