திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டம் – சென்னை ஆயிரம் விளக்கு – 22.04.2010

22.04.2010 அன்று, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 
107வது வட்ட திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற 
தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில்
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை


தந்தை பெரியாரின் தட்ப வெப்பம் தெரிந்தவர், அண்ணாவின் ஈரப்பதத்தில் வளர்ந்தவர் கலைஞர். அதனால், கலைஞர் வாழுமிடமே தமிழக மக்கள் வந்து வானிலை அறிந்துகொள்ளும் இடம். தன்னுடைய 13 வயதிலிருந்து எழுத்து மூலமாகவும், கலையின் மூலமாகவும், போராட்டத்தின் மூலமாகவும் மானுடம் முழுமைக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுமைக்கு மட்டுமல்ல, இந்த உலகம் முழுமைக்குமான நன்மைக்காக, ஓயாது கண் துஞ்சாது இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கிற, நம்முடைய நெஞ்சத்தில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய ஒப்பற்ற ஒரே தலைவர் கலைஞரை என்னுடைய இதயத்திலே இந்தக் கணம் நிறுத்துகின்றேன். 
	இளைஞனே, நீ யாருக்கும் தலை வணங்காதே, கைகளை வீசி நட, உலகைக் காதலி, மத வெறியர்களை, பணக்காரர்களை, எளியோரை வருத்துகின்ற வலியவர்களை தூக்கி எறி, மனசாட்சியே உன்னுடைய தெய்வம், உழைப்பை நேசி, ஊருக்கு உதவு, சிந்தித்து செயலாற்று என்கின்ற வரிகளுக்கேற்ப ஒரு லட்சிய இளைஞராய், இன்றைக்கு இந்தியாவிலே இருக்கின்ற மிகச் சிறந்த இளைய தலைவராய் நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் குடிகொண்டிருக்கிற, குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் கொண்டாட்டத்திற்குரிய தலைவராக வைத்து போற்றப்படுகின்ற நம்முடைய தமிழகத்தின் நாளைய விடியல், நம்பிக்கை நட்சத்திரம், தளபதி அவர்களையும் இந்தக் கணம் மிக நன்றியோடு நான் நினைத்துப் பார்க்கிறேன். 
	தாய்மார்கள், தங்களுடைய பசியை மறந்து, எனக்காக சற்று நேரம் ஒதுக்கி சேலை வாங்குகின்ற அந்த நேரத்தையும் கொஞ்சம் ஒத்திப்போட்டு இங்கே அமர்ந்திருப்பது எதற்காக தெரியுமா?  இந்தப் பகுதியிலே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சாதனை என்று சொல்லப்படுகிற பட்ஜெட்டை விளக்கி உங்களிடம் மிக அருமையானதொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டத்தை ஆயிரம் விளக்கு பகுதியின் 107வது வட்ட திமுக சார்பில், மிக அருமையாக ஏற்பாடு செய்து, தலைமையேற்றிருக்கிற பா.வெங்கி அவர்களே..... இன்றைய தினம் இந்தப் பகுதியிலே மிக எழுச்சியோடு கூடியிருக்கிற இளைஞர் அணியைச் சார்ந்த இயக்கத் தோழர்களே, கழக மகளிரணியைச் சார்ந்த சகோதரிகளே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். 
	கிட்டத்தட்ட இரவு 9 மணி ஆகிறது இப்பொழுது.  பேரறிஞர் அண்ணா ஒரு கூட்டத்திலே உரையாடச் சென்றபொழுது நேரம் 10.30 மணியாகிவிட்டது.  8.30 மணியளவிற்கு அவர் அந்தக் கூட்டத்திற்கச் சென்று உரையாற்றவேண்டும்.  இரண்டு மணி நேரம் தாமதமாக பேரறிஞர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார்.  கூட்டத்தினர் பொறுமையாக எப்படி காத்துக்கொண்டிருப்பார்கள்.  சற்று எரிச்சலோடும், காத்திருக்க முடியாத பொறுமையை இழந்தும், அந்தக் கூட்டம் காணப்பட்டது.  பத்தரை மணி வேறு ஆகிவிட்டது. இதே மாதிரியான ஒரு கோடை காலம்.  எடுத்தவுடன் பேரறிஞர் சொன்னார், மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களில் பாதி பேருக்கு நித்திரை இருந்தாலும் நான் என் பேச்சிலே பதிப்பேன் முத்திரை என்று சொன்னார்.  இங்கேயும் அப்படித்தான், உங்களில் பாதி பேருக்கு சர்க்கரை இருக்கலாம்.  பசி தொந்தரவும் இருக்கலாம்.  இருந்தாலும் மன்னித்து சற்று கூடுதலாக வழக்கமான உங்களுடைய நேரத்தைவிட சற்று 45 நிமிடங்கள் நான் பேசுவதை காது கொடுத்து கேட்டுமாறு உங்களிடையே கருணை கூர்ந்து நான் கேட்கின்றேன்.  தாய்மார்களே, ஏனென்றால் உலகத்தில் எந்த மிகப் பெரிய மாற்றம் வந்தாலும் மிகப் பெரிய புரட்சி வந்தாலும், அதை எவ்வளவு தான் போராடி ஒரு தலைவன் நமக்காக வாங்கிக் கொடுத்தாலும் என்றைக்கு அது மக்களிடம், குறிப்பாக பெண்ணினத்து சகோதரிகளிடம் சென்று, ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ, அன்றைக்கு தான் பொற்காலத்திற்காக முதல் படிக்கட்டு தொடங்கப்படுகிற்து என்பதை நாம் மிக நன்றாக அறிவோம். பிரெஞ்ச் தேசத்திலே மேரி அன்டனாட் என்ற ஒரு ராணி இருந்தார்.  ராணி என்றால் நீங்களோ நானோ நினைப்பது போல ஒரு சாதாரண ராணி கிடையாது.  செல்வச் செழிப்பிலே பற்பல மாளிகைகளிலே நாளுக்கு ஒன்றாக தங்குகின்ற அளவிற்கு செல்வாக்கும் அரசியல் ரீதியாக ஒரு பொருளாதார வளர்ச்சியும் பெற்றிருந்த பிரான்ஸ் தேசத்தின் ராணி அவள்.  அவள் ஒரு நாளைக்கு உண்ணுகின்ற உணவே 18 வகைகள்.  நாமெல்லாம் ஒரு நாளைக்கு காலையிலே இட்லி தோசை, மதியம் சாதம் குழம்பு கூட்டு, இரவிலே என்று மூன்று வகையான பதார்த்தங்களை உண்ணுபவர்கள்.  இந்த ராணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நேரத்திலே 18 வகையான சாப்பாட்டு பலகாரங்கள் வைக்கப்படும்.  ஆனால், அவளுடைய நாட்டு மக்களோ அன்றைய காலகட்டத்திலே ஒரு வேளை ரொட்டிகூட கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  அப்படிப்பட்ட பஞ்சம், வறுமை அந்த நாட்டிலே தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது.  பொருத்துப் பொருத்துப் பார்க்க முடியாத மக்கள் படையெடுத்துச் சென்று, ராணியிடம் முறையிடுவதற்காகச் செல்கிறார்கள்.  கோட்டையின் கதவுகள் இருக மூடப்பட்டிருக்கின்றன.  நம்முடைய தலைவர் அய்யா கோபாலபுரத்துக் கதவுகள் என்றால் என்றென்றும் எந்தக் கணத்திலும் விரியத் திறந்திருக்கும்.  இதுவோ பணக்காரத் தனத்தின் உச்சத்திலே இருக்கிற ஒரு ராணியுடைய கோட்டை. கோட்டைக் கதவை மக்கள் தட்டுகிறார்கள்.  இந்த ராணி தன்னுடைய தோழியிடம் கேட்கிறாள், இந்த மக்கள் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.  அவர்களுக்கு பசிக் கொடுமை, சாப்பிடுவதற்கு ரொட்டிகூட இல்லையாம்.  அதை உங்களிடம் சொல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்று தோழி சொல்கிறாள்.  கேட்டுக்கொண்டிருந்த ராணி சொன்னாளாம், ரொட்டி இல்லையென்றால் என்ன? கேக் சாப்பிடவேண்டியதுதானே என்று. ரொட்டியே கிடைக்காத மக்களுக்கு கேக் எப்படி கிடைக்கும் என்று கூட தெரியாத ராணி கண்ணை மூடிக்கொண்டு தன்னுடைய சுகத்தை மட்டுமே அறிந்துகொண்டிருந்த ஒரு ராணி இருந்ததாக வரலாற்றிலே பதியப்பட்டிருக்கின்ற மிக பெருமை பெற்ற வாசகம்.  ஊரிலே சொல்வார்கள்.  உடைய பெருமாள் கஞ்சிக்கு அலைகிறாராம், அங்கே உற்சவப் பெருமாள் பொங்கல் கேட்கிறாராம்.  அது தான் இந்தக் கதையினடைய சுருக்கம்.  
தலைவரிடம் சென்று ஒரு பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்கின்றார். கிட்டத்திட்ட 50 வருட காலம் பொது வாழ்க்கையிலே உங்கள் வாழ்நாளை கழித்திருப்பீர்கள். இன்றைக்கு உங்களுக்கு வயது 86.  உங்களை நீங்கள் எப்படி வர்ணித்துக்கொள்வீர்கள்? உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை தாருங்கள் என்று.  தலைவர் சொல்கின்றார், நான் எப்பொழுதும் என்னை ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லுவேன் என்று பதிலளிக்கிறார்.  ஒரு தலைவன், தான் நம்புகின்ற விஷயத்தை, தான் நம்புகின்ற சித்தாந்தத்தை, தான் நம்பிக்கை கொண்டிருக்கிற குறிக்கோளை முதலில் தன்னுடைய ரத்தத்திற்குள், தன்னுடைய ஆன்மாவிற்கள், தன்னுடைய உடம்பிற்குள் வாழ்ந்து பழகுவான். பின்புதான் அதனை தன்னுடைய மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை அந்த வழியில் கொண்டு செல்வான்.  மூன்று பேரை அந்த விதத்திலே நான் உங்களுக்கு சுட்டிக்காட்டலாம் என்றிருக்கிறேன்.  ஒரு படித்த இளைஞர், தன்னுடைய கிராமம் அது மிகந்த வறுமையிலே இருக்கின்ற ஒரு கிராமம்.  அந்த கிராமத்திலே இந்த இளைஞன் படித்துவிட்டு கூட்டு வண்டி என்று சொல்வார்களே, அந்த வண்டியிலே, ரயில் நிலையத்திலிருந்து இறங்கி தன்னுடைய கிராமத்திற்குச் செல்கின்றான்.  கூட்டு வண்டிக்காரன் அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்றவுடன், நான் உன்னை இந்தப் பக்கமே பார்க்கவில்லையே, புதிதாக வருகிறாயா, நல்ல உடை அணிந்திருக்கிறாயே யார் வீட்டுப் பையன் என்று கேட்கின்றார்.  அந்தக் காலத்திலே யார் வீட்டுப் பையன் என்று கேட்டால் அதிலே இருக்கின்ற அர்த்தம் என்னவென்றால், நீ என்ன சாதி? என்று கேட்பதற்குத்தான்.  இந்தப் பையன் நான் இன்னார் வீட்டுப் பையன் என்று சொல்கின்றான். உடனடியாக கூட்டு வண்டிக்காரன், வண்டியை குடைசாய்த்துவிட்டு, ஒரு தாழ்ந்த சாதிக்காரப் பையனை என்னுடைய வண்டியிலே எப்படி ஏற்றிச் செல்வேன் என்று வண்டியை குடை சாய்த்து, சேரும் சகதியுமாக அந்த படித்த இளைஞனை தள்ளிவிட்டுப்  போகின்றான்.  அன்றைக்கு அந்த சேற்றிலே புரண்டு, உடலெங்கும் சேறாக அப்பிக்கொண்டு அந்த இளைஞன் நினைத்தானா? என்னுடைய மக்களை இந்த சாதியத்தின் பிடியிலிருந்து நான் காப்பாற்றுவேன்.  என்னுடைய மக்களை முன்னேற்றுவதுதான் என்னுடைய முதல் கனவு என்று. அந்த இளைஞன் யார் தெரியுமா? அண்ணல் அம்பேத்கார்.  ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவருக்கு மூன்று தலைவர்களை போய் சந்திக்கின்ற வாய்ப்பு வருகிறது.  ஒரு தலைவர் தேசப் பிதா என்று நாம் கொண்டாடுகின்ற மகாத்மா காந்தி.  இன்னொரு தலைவர் பாகிஸ்தானை வாங்கிக்கொடுத்த ஜின்னா.  அடுத்த தலைவர் அம்பேத்கார்.  அண்ணல் காந்தியைப் பார்ப்பதற்கு 10 மணிக்கு வாருங்கள் என்று சொல்லப்பட்டது.  ஒரு மணி நேரம் தாமதமாகப் போகின்றார்.  பத்து மணிக்கே தூக்கம் வருகின்ற நாம் 11 மணி வரைக்கும் விழித்திருப்போமா? காய்தியடிகள் தூங்கச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.  அடுத்ததாக, ஜின்னாவை பார்ப்பதற்காகப் போகின்றார்.  அவருக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் 11 மணி.  12 மணிக்கு இவர் சென்றதால் ஜின்னாவும் தூங்கச் சென்றுவிட்டதாக இவருக்கு சொல்லப்படுகிறது.  அம்பேத்காரை இந்த பத்திரிகையாளர் பார்க்கச் சென்றபோது, நள்ளிரவு 1.30 மணி.  அண்ணல் அம்பேத்கார் இவருக்காக விழித்துக் கொண்டிருக்கிறாராம்.  பத்திரிகையாளருக்கு வியப்பு தாங்கவில்லை.  நான் இரண்டு தலைவர்களையும் தாமதமாகச் சென்று பார்த்தேன்.  அவர்கள் உறங்கச் சென்றுவிட்டதாக எனக்கு தகவல் வந்தது.  நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய பின்பும் 1.30 மணி வரை நீங்கள் விழித்துக்கொண்டிருக்கிறீர்களே, இது எப்படி சாத்தியமாயிற்று என்று.  அம்பேத்கார் சொன்னாராம், அவர்களுடைய மக்களெல்லாம் ஏற்கனவே விழித்துக்கொண்டு விட்டார்கள் அதனால் அவர்கள் இருவரும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  என்னுடைய மக்கள் இன்னும் விழிக்கவில்லை.  அவர்களுக்காக நான் நள்ளிரவில் விழிக்கிறேன் என்று சொன்னாராம்.  நினைத்துப் பாருங்கள், அதற்கு சமமான ஒரு தலைவர் இன்று வரை நான்கே நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கிக்கொண்டு தமிழக மக்களுடைய, அதிலும் மிகப் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுடைய நலனையே தன்னுடைய எண்ணத்திலே கொண்டு இயங்குகின்ற ஒரே தலைவர், இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய கலைஞர் மட்டுமே.  இன்னொரு தலைவருடைய வாழ்க்கையிலே நடந்த இன்னொரு சம்பவம்.  சிறு வயது பையன் அவன்.  பள்ளியிலே, இடைவேளையிலே பையனுக்கு தண்ணீர் தாகம் எடுக்கின்றது.  கூட படிக்கின்ற பையனுடைய வீடு பக்கத்திலே இருக்கின்றது.  பள்ளியிலே வைக்கப்பட்டிருந்த பானையிலே தண்ணீர் இல்லையென்பதால் அந்தப் பையன் தன்னுடைய நண்பனுடைய வீட்டிற்கு செல்கிறான்.  இரண்டு பேரும் சென்றபோது, அந்தப் பையனுடைய அம்மா, தன்னுடைய மகனை வீட்டிற்குள் வந்து தண்ணீர் குடி என்று சொல்கின்றாள்.  இந்தப் பையனையும் உள்ளே வரச்சொன்னாள்.  ஆனால் தண்ணீரை நான் ஊற்றுகின்றேன், நீ கையிலே வாங்கிக் குடி என்று சொல்கின்றார். ஏன் நமக்கு மட்டும் அந்த அம்மா நீரை ஊற்றுகிறேன் என்று சொன்னார் என்று அவனுக்கு ஒரு தயக்கம். உடனடியாக தன்னுடைய வீட்டிற்கு வந்து, தந்தையிடம் கேட்கும்பொழுது, இத்தனைக்கும் அந்தப் பையன் நாயக்கர் என்று சொல்லக்கூடிய ஓரளவு உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் தான்.  அந்த வீட்டிலே சொல்கிறார்கள், நம்மைவிட மேலான பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் அவர்கள்.  அதனால் அவர்களுடைய வீட்டுப் பாத்திரத்திலே தண்ணீரை வழங்கமாட்டார்கள் என்று. அன்றைக்கு அந்தப் பையன் நினைக்கின்றான், சாதி, தீண்டாமை இல்லாத சமத்துவ சமுதாயத்தை எடுத்துச் செல்வதுதான் என்னுடைய கனவு என்று.  95 வயது வரைக்கும் நீரிழிவு நோயால் அவதிபட்டுக்கொண்டு, தன்னுடைய சிறுநீற்றுச் சட்டியை இன்னொருவர் தூக்கிவிட தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான் அன்றைக்கு அந்த இளைஞன்.  அவர் இல்லாவிட்டால் இன்றைக்கு எனக்கு இந்த மேடை கிடைத்திருக்காது.  அவன் அன்று கண்ட கனவு இன்றைக்கு, நாம் எல்லோரும், குறிப்பாக பெண்களாகிய நீங்கள் எத்தனை முன்னேற்றமடைந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு அந்த சிறு பையன் அந்த வயதிலே கண்ட கனவுதான்.  நினைத்துப் பாருங்கள் தந்தை பெரியார் அப்படிக் கண்ட எத்தனை கனவுகளை நம்முடைய கலைஞர் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார். 1929 ஆண்டு இன்றைக்கு கிட்டத்தட்ட எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டு.  அப்பொழுது 1929ம் ஆண்டிலே பெண்களாகிய நமக்கு இன்னின்ன விஷயங்கள் வேண்டும் என்று சொல்வதற்காக செங்கல்பட்டிலே ஒரு சுய மரியாதை மாநாட்டை தந்தை பெரியார் கூட்டுகின்றார்.  பெண்கள் எல்லாம் அப்பொழுது வெளியே வருவதற்குக்கூட சுதந்திரம் இல்லாத காலம் அது. விதவைகள் மறுமணத்தைப் பற்றி யோசிக்கவே முடியாது.  ஆண் குழந்தைகளுக்கு மட்டும் தான் சொத்திலே பங்குறிமை என்பது நிலைநாட்டப்பட்டிருந்த காலம் அது.  ஒரு கதையொன்று எனக்கு நினைவிற்கு வருகின்றது.  பாகப் பிரிவினை பிரித்துக்கொள்ளவேண்டும் என்று அண்ணன், தம்பி இருவருக்கிடையில் ஒரு சச்சரவு வருகின்றது.  அதுவரை கூட்டுக்குடும்பமாகத் தான் இருந்தது.  தம்பி சென்று அண்ணனிடம் என்னுடைய பாகத்தை பிரித்துத் தாருங்கள் என்று  கேட்கின்றான்.  அன்னண் நினைக்கிறாராம் தம்பி நல்லவர்தான்.  ஒரு வேளை தன்னுடைய மனைவி கொழுந்தனை சரியாக நடத்தவில்லை போலிருக்கிறது.  அங்கேதான் ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது என்று நினைத்து, தம்பி கொஞ்ச காலம் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, உள்ளே மனைவியிடம் சென்று கொழுந்தனாரை நீ நன்றாக கவனிக்கவேண்டும். சாப்பாடு எல்லாம் சரியாக கொடுத்து முறையாக கவனித்து இருந்தால் இந்த எண்ணம் அவனுக்கு வராது என்று சொன்னாராம்.  முன்தினம் வரை வெறும் தட்டிலேதான் உணவு பரிமாறுவாராம் அண்ணனுடைய மனைவி.  அன்றைக்கு கணவனுடைய சொல்லைக் கேட்டு, வாழை இலையைப் போட்டு எப்பொழுதும் இரண்டு கரண்டி நெய் விடுகின்ற அந்த அம்மா, அன்றைக்கு கூடுதலாக இன்னும் இரண்டு கரண்டி நெய் விட்டு சாப்பாடு பரிமாறினாளாம்.  உண்மையிலே சந்தோஷப்பட்டு, அண்ணனோடு சேர்ந்துதானே இருக்கவேண்டும் இந்தத் தம்பி.  ஆனால் மாறாக தம்பி நினைத்தாராம், எனக்கே நான்கு கரண்டி நெய் விடுகின்ற அண்ணி அண்ணனுக்கு எத்தனை கரண்டி நெய் விட்டு சாப்பாடு பரிமாறுவார்.  அவருக்கு ஆறு கரண்டி, எனக்கு நாலு கரண்டி என்றால், ஒரு குடும்பத்திலே 10 கரண்டி நெய்யை செலவழித்தால் என்னுடைய சொத்து என்னவாகும் என்று கருதினாராம்.  இந்தக் கதையை எதற்கு சொல்கிறேன் என்றால், சொத்துரிமை என்றாலே ஆண்களுடைய பங்கு என்பதுதான் எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது.  அதிலே பெண்களுடைய பங்கு என்பது குறித்து எந்த இடத்திலும் பதியப்பட்டதாக நம்முடைய வரலாற்றிலே இல்லை. ஆனால் தந்தை பெரியார் தீர்மானம் போடுகிறார், பெண்ணுக்கு சொத்துரிமை வேண்டும் என்று 1929, பிப்ரவரி 17, 18லே.  கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கழித்து, 1989ம் ஆண்டு ஒப்பற்ற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிலே பெண்களுக்கும் சொத்திலே சம உரிமை உண்டு என்ற சட்டத்தை கொண்டுவருகிறார்.  அதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் யார் தெரியுமா? நம்முடைய இணையற்ற தளபதிதான்.  இந்த நூற்றாண்டிலே மிகப் பெரிய அரசியல் அறிஞராகக் கருதப்படுகிற ரூசோ ஒரு கருத்தைச் சொல்லுவார், தேசப் பற்றை உள்ளடக்கிய அரசியல் அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? மென்மேலும் அரசியலிலே அதிகாரத்தைக் குவிப்பதாக இருக்கக்கூடாது.  மக்களுடைய நலனை கருத்தில் கொள்வதாக இருந்தால்தான் அதற்குப் பெயர் பற்று என்று சொல்லுகின்றார்.  அந்த இலக்கணத்தின்படி பார்த்தால், மக்கள் மீது பற்று கொண்டு, இளைஞர்கள் மீதும், பெண்கள் மீதும் நம்முடைய கலைஞர் அவர்கள் வைத்திருக்கின்ற மிகப்பெரிய மரியாதையை, கருணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பவர் நம்முடைய தளபதி ஒருவர் மட்டுமே.  அதற்கு உதாரணமாக இங்கே கூடியிருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை பெரியார் அந்த மாநாட்டிலே இன்னொரு தீர்மானத்தையும் போட்டார்.  பெண்கள் தங்களுடைய கால்களிலே நிற்கவேண்டும். தங்களுடைய தேவைகளுக்காக, ஒரு ஆணை சார்ந்திருக்கக்கூடாது என்று.  அதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தருமபுரியிலே மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கினார்.  ஆனால் அதனை மிகப் பெரிய புலிப்பாய்ச்சல் போல் எடுத்துச் சென்று இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற அத்தனை கிராமங்களிலும் இருக்கின்ற பெண்கள் மிகப் பெருமையோடு நாங்கள் தளபதி கையால் நிதியுதவி வாங்கிக்கொண்ட சுய உதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற அளவிற்கு பெண்மைப் புரட்சியை இன்றைக்கு தமிழ்நாட்டிலே நம்முடைய தளபதி அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்.  மூன்றாவதாக கனவு கண்ட இன்னொரு இளைஞனைப் பற்றியும் இங்கே நான் சொல்லுவேன்.  அந்த இளைஞனுக்கு அப்பொழுது வயது 12 அல்லது 13 இருக்கும். இந்தியை எதிர்த்து ஒரு ஊர்வலம் தன்னுடைய ஊரிலே நடந்துகொண்டிருக்கிறது.  இந்தி ஒழிக என்ற கோஷத்தோடு, வாசகங்களோடு, மாணவர்களோடு அந்த சின்னஞ்சிறிய மாணவன் நடந்துசெல்கிறான். எதிரே அவனுடைய இந்தி வாத்தியார் வருகின்றார்.  இந்தி வாத்தியாருக்கே கையிலே போய் இந்தி ஒழிக என்ற வாசகத்தை கொடுக்கின்றான்.  ஒரு அரை விடுகின்றார் வாத்தியார். அந்த அரையை மாணவன் வாங்கிக்கொண்டு சும்மா இருந்தானா அந்த மாணவன். இல்லை.  அடுத்த நாள் வகுப்பறையில் மாணவனுக்கு அறிவுறுத்தவேண்டும் என்ற ஆசிரியர் கரும்பலகையிலே இந்தி வாசகங்களை எழுதிப்போட்டு, படி, என்று அந்த மாணவனைப் பார்த்துச் சொல்கின்றார்.  மாணவன் எழுந்து மௌனமாக நிற்கின்றான்.   மௌனமாக நின்றால் ஆசிரியர்களுக்கு எத்தனை கோபம் வரும்.  இப்பொழுது படிக்கப்போகிறாயா இல்லையா என்று ஆசிரியர் மறுபடியும் கேட்கிறார்.  எனக்கு எதுவும் புரியவில்லை, நான் படிக்க முடியாது என்று தைரியமாக இந்த மாணவன் சொல்கின்றான்.   இன்னுமொரு அரை அந்த கண்ணத்திலே விழுகின்றது.  இரண்டு அரைகளையும் உரமாக எடுத்துக்கொண்டு என்னுடைய தாய்மொழியை நான் மிகுந்த அந்தஸ்து மிக்க செம்மொழியாக உயர்த்திக் காட்டுவேன் என்று அந்த மாணவன் அன்றைக்கு கனவு கண்டான்.  இன்றைக்கு அந்தக் கனவு பலித்திருக்கின்றது.  அந்த கனவுக்குச் சொந்தக்காரர் நம்முடைய ஒப்புயர்வற்ற, யாருக்குமே ஒப்புவமை இல்லாத ஒரே தலைவர் கலைஞர்தான்.  நம்முடைய தாய்மொழி தமிழ் என்று சொல்வதிலே நாம் இன்றைக்கு எத்தனை பேர் பெருமை கொண்டிருக்கிறோம்.  நம்முடைய பிள்ளைகள் ஆங்கிலத்திலே பேசுவதுதான் பெருமை என்பதை நாம் அனைவரும் அந்தஸ்திற்கு, பெருமைக்குரியது என்று நினைக்கின்றோம்.  உங்கள் எல்லோருக்கும் இராமாயணம் தெரியும்.  இராமாயணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள் அல்ல.  இருந்தாலும் உங்களுக்குப் புரியவேண்டும் என்று சொல்லுகின்றேன்.  சீதையைப் பார்ப்பதற்காக ராமனிடமிருந்து அனுமன் தூது செல்கின்றான்.  அப்பொழுது சீதையைவிட, அழகான சீதை பேசுகின்ற மொழியைவிட இனிமையான ஒரு மொழியைப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்ற அனுமன் இறுதியாக தமிழ் மொழியிலே சீதையிடம் பேசினானாம்.  அத்தகைய பெருமை வாய்ந்தது நம்முடைய தமிழ்  மொழி.  பாரதியாரை உங்கள் எல்லோருக்கும் தெரியும்.  பெண் விடுதலையைப் பற்றி, பெண் சுதந்திரத்தைப் பற்றி 20ம் நூற்றாண்டிலே முதன்முதலாக பாடிய பெருங்கவிஞர்.  அவருடைய வீட்டிற்கு வாரா என்கின்ற இன்னொரு கவிஞர் அவரைப் பார்க்க வருகின்றார்.  பாரதியார் சென்று கதவைத் திறக்கின்றார்.  பாரதியாருக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும்.  ஆகையால் ஆங்கிலத்திலே பேசினால் ரொம்பவும் சந்தோஷப்படுவார் என்று நினைத்துக்கொண்டு இந்த வாரா பாரதியாரோடு ஆங்கிலத்திலே பேசுகின்றார்.  பாரதியார் உள்ளே திரும்பி கதவைத் திறக்க வந்த பாலு என்ற பையனைப் பார்த்து, தம்பி, உன்னைப் போலவே இவர் மிக நன்றாக ஆங்கிலம் பேசுகின்றார்.  நீயே அவரோடு பேசி அவரை அனுப்பிவிடு என்று சொல்லி உள்ளே போகின்றார்.  வாரா போய், சாமி உங்களோடு பேசுவதற்காகத்தான் வந்தேன் என்று சொல்கின்றார்.  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்க்கும்பொழுது ஆங்கிலத்திலே பேசப் போகிறீர்கள் என்று பாரதியார் 1910ம் ஆண்டிலேயே ஒரு கேள்வி கேட்கின்றார். இன்றைக்கு 2010.  கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப் பின்னும் நான் அந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்க்கும்பொழுது ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளப் போகிறீர்கள்.  தமிழனுக்கு இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதை உணர்வு இவற்றை ஊட்டவேண்டும் என்பதற்கான தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றவேண்டும் என்று கனவு கண்ட அந்த இளைஞன் இன்றைக்கு எத்தனை வயது முதிர்ந்தாலும், ஒரு இளைஞனுக்குரிய இல இலட்சிய உணர்வுடைய துடிப்போடு செயல்படுகின்றார்.  அவர் தீட்டுகின்ற திட்டங்களை எல்லாம், தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் சுழன்று சென்று, கொஞ்சம்கூட ஓய்வெடுக்காமல் நம்முடைய இளைய தளபதி அவற்றை நிறைவேற்றுகின்றார்.  அதுதான் இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கிற காட்சி.  ஆயிரம் எழுத்தாளர்களுடைய எழுத்தையும் சொல்லையும்விட ஒரு இலட்சிய வீரனின் இரத்தம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறார் நம்முடைய தளபதி.  ஆனால், இத்தகைய பொற்கால சரித்திரத்தை முழுவதுமாக மூடி மறைக்கும் வண்ணம் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.  அதாவது, மின் தட்டுப்பாடு, மின் குறை.  ஆகையால் தமிழ்நாடே இருளில் மூழ்கியிருக்கின்றது என்று.  நான் அதனை எதிர்த்து, கொசுவை ஒழிப்பதற்காக ஒரு போராட்டம் நடத்தியாகிவிட்டு, கரும்பு விவசாயிகளுக்காக ஒரு முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, இப்பொழுது நான் மின்சாரத்திற்காக ஒரு போராட்டம் நடத்தப்போகிறேன் என்று கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு முன்பு நெய்வேலியிலே போய் ஒரு போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறார்.  ஒரு சிறிய கதை இங்கே எனக்கு நினைவிற்கு வருகிறது.  ஒரு மனிதன் இறந்த பின்பு, அவன் சொர்கம் - நரகத்திற்குப் போவான் என்று புராணங்களிலே சொல்வார்கள்.  அப்படி ஒரு மனிதன் இறந்து மேலோகம் செல்லும்பொழுது எமன் கணக்கு வழக்கு பார்க்கின்றாராம்.  சித்திர குப்தன் தான் எமனுக்கு உதவியாளர்.  அப்பொழுது சித்திரகுப்தன் சொல்கிறாராம், இந்த மனிதன் தான் வாழ்கின்ற காலத்திலே எந்தவிதமான புன்னியத்தையும் தேடிக்கொள்ளவில்லை.  அவன் செய்தது முழுவதுமே பாவச் செயல்கள்தான் என்று.  அப்படியானால் இவனை உடனே நரகத்திற்கு அனுப்பு என்று எமன் சொன்னாராம்.  ஆனால், ஒரே ஒரு புண்ணியம் செய்திருக்கிறான், அது ஒரு கிழவி கோவிலுக்கு எப்படி போகவேண்டும் என்று கேட்டபொழுது இந்த வழியாகப் போகவேண்டும் என்று தன்னுடைய சுட்டு விரலைக் காட்டி சொன்னானாம்.  அதுதான் அவன் செய்திருக்கிற ஒரே ஒரு புண்ணியம் என்று சித்திரகுப்தன் சொன்னானாம்.  அப்படியென்றால், அந்த விரலை மட்டும் வெட்டி அதற்கு சந்தனம் பூசி, அதனை சொர்கத்திற்கு அனுப்பு என்று எமன் சொன்னாராம்.  இது கதை.  அம்மையார் தன்னுடைய ஆட்சியிலே எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் செய்ததாக வரலாறே கிடையாது. டெஸ்மா சட்டத்தினால் வேலையை இழந்த அரசு ஊழியர்களும், சாலைப் பணியாளர்களும், முடக்கப்பட்ட எத்தனை குடும்பங்கள் கண்ணீர் வடித்த கதைகளும் உங்களுக்குத் தெரியும்.  அப்படி ஒரு நல்ல காரியத்தையும் செய்யாத அம்மையார், எம்ஜிஆர் என்கின்ற அந்த மாமனிதருடைய சிலையைத் திறந்து வைத்து ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.  அதைத் தவிர தன்னுடைய ஆட்சிக் காலத்திலே எதையும் செய்யாததற்கு, நம்முடைய தலைவர் கலைஞரைப் பார்த்து குற்றச்சாட்டு வைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? மின் தட்டுப்பாடு என்பது வேறு, மின் பற்றாக்குறை என்பது வேறு.  தட்டுப்பாடு என்றால் முழுவதுமே கிடைக்காமல் போவது.  உங்களுடைய கையிலே மாதக் கடைசியிலே பணம் இல்லை என்பதற்காக உங்களிடம் பணமே இல்லை என்று சொல்ல முடியாது.  1ம் தேதியானால் கண்டிப்பாகப் பணம் வரும். பணமே இல்லை என்றால் அது தட்டுப்பாடு.  பணம் மாதக் கடைசியிலே சற்று இல்லாமல் இருந்தால் அதற்குப் பெயர் பற்றாக்குறை. தலைவர் கலைஞர் அவர்கள் மின்சார வசதியோடு இயங்குகின்ற தொலைக்காட்சிப் பெட்டிகளை தந்திருக்கிறார்.  இன்றைக்கு யாராவது அம்மியிலே அரைக்கின்றோமா?  நாம் நம்முடைய வாழ்க்கைத் தரத்திலே முன்னேறி கிரைண்டர்களையும் மிக்சிகளையும் உபயோகிக்கிறோம்.  நலத்திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்தும்போது, அந்த திட்டங்களின் பயன்பாடாக கூடுதல் மின்சாரம் செலவழிகிறது.  அம்மையார் தன்னுடைய ஆட்சியிலே யாருக்கும் எந்த நலத்திட்டங்களையும் கொடுத்ததில்லை.  ஆகவே, அவருக்கு மின்சாரத்தினுடைய தேவையும் அதிகமாக இருந்ததில்லை.  இன்னொன்று, இன்றைக்கு தமிழகம், உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் ஒரு தொழிற் பூங்காவாக மாறியிருக்கின்றது.  மிகப்பெரிய 2 மோட்டார் இன்டர்நேஷனல் கம்பெனிகள் நம்முடைய தமிழ்நாட்டிலே தங்களுடைய உற்பத்தியை தொடங்கியிருக்கின்றன.  ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகிறது என்றால், அதிலே எத்தனை ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அந்த இளைஞர்களுடைய குடும்பம் எத்தகைய வசதிவாய்ப்புகளைப் பெரும்.  ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுவது என்பது ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பதை கருத்தில்கொண்டு தலைவர் தலைமையிலான அரசு மிக மிக உற்சாகத்தோடு, அதிலும் நம்முடைய தளபதி அவர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டோடு மிகப்பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.  தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுவிட்டால் உடனடியாக மின்சாரம் என்பது எப்படி வரும்?  மின்சாரத்தை உருவாக்குவதற்கான கட்டுமானப் பணிகளை செய்வதற்கே 4, 5 வருடங்கள் ஆகும்.  இப்பொழுது நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது என்றால், அந்தப் பணி செய்வதற்கு கிட்டத்தட்ட 6, 7 ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.  அம்மையார் தன்னுடைய ஆட்சியிலே இதற்கான பணிகளை செய்திருந்தால், நம்முடைய ஆட்சியிலே தட்டுப்பாடு இல்லாமல் மினசாரம் கிடைத்திருக்கும்.  இதனை நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  தமிழ்நாட்டில் மின்சாரத்தை சேமிக்கின்ற திட்டங்களை  செயல்படுத்தாமல், போகிற போக்கிலே, தமிழ்நாடே இருளிலே மூழ்கியிருக்கிறது என்று சொன்னால், இலவசமாக இன்றைக்கு விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருக்கிற அரசு இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே.  உங்களுக்கெல்லாம் தெரியும் ஒரு புகழ் பெற்ற தலைவன் சேகுவாரா என்கின்ற புரட்சிகரமான தலைவரைப்பற்றி நீங்கள் சிறிதாவது அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.  அவன் வேறொரு நாட்டிலே பிறந்து இன்னொரு நாட்டிலே போய் அந்த நாட்டின் விடுதலைக்காக போரிட்டவன்.  அவன் பிறந்த நாடு அர்ஜென்டீனா.  ஆனால், பொலிவியா என்ற நாடு விடுதலை பெருவதற்காக அங்கே சென்று சண்டை போடுகின்றான்.  அவனை கட்டிவைத்து, ஏன் இன்னொரு நாட்டிலிருந்து வந்து இந்த நாட்டின் விடுதலைக்காக கொரில்லாப் போரை தொடங்குகின்றாய் என்று அந்த சிப்பாய்கள் கேட்கின்றார்கள்.  அதற்கு சேகுவாரா சொல்லுகின்றார்,  உழவர்களுடைய நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? விலங்குகளிலும் கீழாக அவர்கள் வாழ்கிறார்கள்.  சாப்பிடுவதற்கும், உடை மாற்றுவதற்கும் ஒரே ஒரு அறை தான் இருக்கிறது.  கைவிடப்பட்ட காட்டுவாசிகளைப் போல எந்த ஒரு சுகமும் கிடைக்காமல் உழவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு உழவன் எப்படி பிறக்கிறானோ அப்படியே இறக்கின்றான்.  சமூக ஏணியிலே ஏறுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாமல் என்று சொல்லுகின்றார்.  ஆனால் நம்மூர் விவசாயிகளுக்காக, ஒவ்வொரு முறை தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வரும்பொழுதும் முன்னெடுக்கின்ற திட்டங்கள் எத்தனை, எத்தனை?  இன்றைக்கு ரூபாய் 7000 கோடி விவசாயிகளுடைய பயிர்க்கடன் வட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  அந்தப் பயிர்க்கடனுக்கு வட்டியை முறையாக செலுத்துகின்ற விவசாயிகளுக்கு வட்டியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  அதுமட்டுமல்ல, இவர்களுக்காக நிதி கொடுக்கவேண்டும் என்பதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு சுமார் 250 கோடி கொடுப்பதற்காக இந்த நிதியாண்டிலே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  நீங்கள் நமக்காக உழைத்து, வியர்வை சிந்தி நமக்காக உண்ணுகின்ற நெல்லையும், அரிசியையும், பருப்பையும் தருகின்ற விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மினசாரம் வழங்குவது என்பது எத்தனை சிரமத்திறிகுரிய செயல்.  எத்தனை சிரமத்தோடும், எத்தனை தடங்களோடும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்கின்றார் என்பதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.  குறிப்பாக, ஒன்றை நான் உங்களுக்குச் சுட்டுவேன்.  குறை சொல்பவர்கள் தங்களுடைய காதுகளையும், கண்களையும் எப்பொழுதுமே மூடிக்கொண்டு தான் இருப்பார்கள்.  கொட நாட்டிலே போய் ஒய்வெடுத்துக்கொண்டு, திடீரென்று வந்திறங்கி இந்த அரசைப் பற்றி குற்றம் குறை என்று பட்டியலிடுகின்றாரே, அவருக்கு நான் ஒன்றை சொல்லுவேன்.  நீங்கள் உங்களுடைய காதை சற்று திறந்து என்ன நடக்கிறது என்று கேளுங்கள்.  கண்ணைத் திறந்து தமிழ்நாட்டு மக்கள் எப்படி சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்பதை பாருங்கள்.  காது கேட்கின்ற திறன் குறைந்த ஒருவன் இருந்தானாம்.  அவன் ஒரு நோயாளியைப் பார்ப்பதற்காக செல்லும்பொழுது, அவன் நினைக்கின்றானாம், நோயாளி கேட்கின்ற கேள்விகளுக்கும், பதிலுக்கும் நாம் காது கேட்பதே தெரியாத மாதிரி நடிக்கவேண்டும்.  பொதுவாக இரண்டு பதில்களை நாம் தயாரித்து வைத்துக்கொள்வோம்.  போய் நோயாளியை பார்த்து, நாம் உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டால், நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லுவான்.  நாம் அதற்கு பதிலாக ரொம்பவும் சந்தோஷம் என்று சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.  இரண்டாவதாக, கூடிய சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் அல்லவா என்று கேட்கவேண்டும். ஆமாம், கூடிய சீக்கிரம் குணமடைந்துவிடுவேன் என்றுதான் சொல்லுவான். அதற்கு நாமும் ரொம்ப ரொம்ப சந்தோஷம், அப்படியே நடக்கட்டும் என்றுதான் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு போகின்றான்.  நோயாளியிடம் போய் உடம்பு எப்படி இருக்கிறது? என்று கேட்கிற்hன்.  கொஞ்சம்கூட நான் எழுந்து உட்காருவேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்றானாம் நோயாளி.  உடனே செவிடன், ரொம்ப சந்தோஷம் என்றானாம்.  கூடிய சீக்கிரம் உடல் குணமாகிவிடுமா என்று செவிடன் கேட்கிறானாம்.  உடனே, நோயாளி சொன்னானாம், இப்பொழுது மாத்திரம் என்ன? சுடுகாட்டிற்கு கூட்டிட்டுப் போய்விடுவார்கள் என்று சொன்னானாம்.  அப்படியே நடந்தால் ரொம்ப சந்தோஷம் என்று செவிடன் சொன்னானாம்.  நீங்கள் ஒன்றை சரியாகக் கேட்காமல் ஒன்றை சரியாகப் பார்க்காமல் அனுமானித்துக்கொண்டு விஷயங்களை அணுகினால் இப்படித்தான் இருக்கும்.  தமிழ்நாட்டிலே இருக்கிற இல்லத்தரசிகளின் நிலையை நீங்கள் பாருங்கள்.  ஒரு பெண் பள்ளியிலே சேர்வதென்றால் அவளுக்கு 1லிருந்து 5 வரை இலவசமாக பாடப்புத்தகம், உணவு, உடை வழங்கப்படுவது மட்டுமல்ல, பஸ் பாஸ் கொடுக்கப்படுகின்றது.  இலவசமாக சைக்கிள் கொடுக்கப்படுகின்றது.  கல்வியே இன்றைக்கு, பட்டப்படிப்பு வரை இலவசமாக கல்லூரி வரை கல்வி பயிலலாம்.  இந்த நிதியாண்டிலிருந்து எம்.ஏ, போன்ற யீடிளவ பசயனரயவந வகுப்பு வரை இலவசமாக கல்வி பெறலாம்.  ஒரு குடும்பத்திலே பட்டதாரியே இல்லை என்றால் தொழிற்கல்வி படிப்பதற்கு, அத்தனை செலவையும் இந்த அரசே ஏற்றுக்கொள்கிறது என்கின்ற புரட்சிகரமான திட்டத்தையும் கொண்டுவந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்தான்.  இன்னுமொன்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். தமிழ், தமிழ் என்று சொல்கின்றோமே, தமிழின் நிலைமை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களேயானால், அண்ணா பல்கலைக்கழகத்திலே ஆங்கிலம் பேசுவதற்கு சிரமமாக இருப்பதாக நினைக்கின்ற மாணவர்களுக்கு முழுவதுமாக தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்கலாம் என்ற திட்டத்தையும் தமழக அரசு கொண்டு வந்திருக்கிறது.  சமுதாயத்திலே மிகவும் பின்தங்கியிருக்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காக இன்றைய தினம் இந்தியாவிலேயே சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரே தலைவர் கலைஞர் தான்.  அவருடைய ஆணைகளை காற்றிலும் வேகமாகச் சென்று நிறைவேற்றுபவர் நம்முடைய தளபதி மட்டுமே.  தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய பொதுக்கூட்டம் 1973ம் ஆண்டு தியாகராய நகரிலே நடந்தபொழுது அவர் சொன்னார், என்னுடைய கடைசி போராட்டமாக நான் முன்வைப்பது அனைத்து சாதியனரும் அர்ச்சகராகவேண்டும் என்கின்ற அந்த ஒன்றைத்தான் என்று.  கிட்டத்தட்ட அதனையும் 2006லே, 36 வருடங்களுக்குப் பின்பு சட்டமாகக் கொண்டுவந்தார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.  அதுமட்டுமல்ல, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு, தலித் இன மக்களுக்கு, கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு அந்த பட்டியலிலே இடமில்லாமல் இருந்தது.  அவர்களையும் அந்த பட்டியலிலே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தலைவர் கலைஞர் அவர்கள்.  அருந்ததிய இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு பேராசிரியர் வேலை கிடைக்கவேண்டும் என்று நம்முடைய தளபதிக்கு ஒரு கடிதம் எழுதுகின்றாள்.  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தப் பெண்ணிற்கு பேராசிரியர் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் தளபதியாவார்.  நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சுடலைமணி என்ற மாணவனுக்கு டாக்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை.  ஆனால், அவனால் சரிவர படிக்க முடியவில்லை. டியூஷன் வைத்து படிப்பதற்கும் வசதியில்லை. அவன் நம்முடைய தளபதிக்கு இமெயில் மூலமாக ஒரு கடிதம் எழுதுகின்றான்.  எனக்கு டாக்டர் படிக்க மிக ஆசை.  இன்னின்ன பாடங்களில் எல்லாம் எனக்கு படிப்பதற்கு திரன் குறைவாக இருக்கின்றது.  அவற்றிற்கு டியூஷன் வைத்துப் படித்தால் நன்றாகப் படித்து டாக்டர் ஆவேன்.  அதற்கு தயவு செய்து நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று.  அக்கடிதத்தை கருணைக் கண் கொண்டு பரிசீலித்து, உடனே இளைஞரணி தோழர்களைக் கூப்பிட்டு, அந்த மாணவன் டியூஷன் படிப்பதற்கு அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து, நல்ல மதிப்பெண் வாங்குகின்ற பட்சத்தில் உனக்கு மருத்துவக் கல்லூரியிலே இடம் பெற்றுத்தந்து படிப்பிற்கான அனைத்துச் செலவையும் இளைஞரணி ஏற்கும் என்ற விஷயத்தையும் செய்தவர் நம்முடைய தளபதி அவர்கள்தான்.  சகோதரிகளே, மிகச் சிறப்பாக இன்றைக்கு உங்கள் முன்பு நம்முடைய தமிழக அரசின் சாதனை பட்ஜெட்டை விளக்கிக் கூறுகின்ற இந்த கூட்டத்தை இந்தப் பகுதியினுடைய இளைஞரணி ஏற்பாடு செய்திருக்கின்றது.  உங்கள் முன்பாக நான் இன்றைக்கு விவரமாக எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் பொய்களைக் கண்டு ஏமாறக்கூடாது.  நமக்காக 1996லும் சரி, அதற்கு முன்பாகவும் சரி 5 முறை முதலமைச்சராக ஆன பின்பும் பெண்களுக்காக, ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஒவ்வொரு முறையும் ஒரு உயர்ந்த திட்டத்தைக் கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், நம்முடைய முதலமைச்சர் கலைஞர் தான், நம்முடைய துணை முதலமைச்சர்தான் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.  எப்பொழுதும் அதனை நீங்கள் உங்களின் நெஞ்சத்தலே நிறுத்திக்கொண்டு, இனி வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை நீங்கள் அமர்த்தவேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக்கொண்டு ஒரு கவிதையோடு என்னுடைய உரையை நான் நிறைவு செய்கின்றேன்.  கையைக் குறித்து ஒரு அருமையான ரஷ்யக் கவிதை இப்படிப் போகும்: 
இந்தக் கை ஆப்பிளை எவ்வளவு அருமையாக ஏந்துகின்றது
இந்தக் கை ஒரு நெம்புகோலை அழுத்தும்போது வலிமைகொள்ளும்
ஒரு குழந்தையை அணைக்கும்பொழுது மென்மை கொள்ளும்
இந்தக் கை ஒரு பிச்சைக்காரரை விரட்டும்பொழுது நாணம் கொள்ளும் 
உள்ளங்கையில் நீர் ஊற்றிப் பாருங்கள்
உலகையே நீங்கள் தலை கீழாகப் பார்க்கலாம்
ஆகையால் இந்தக் கையை கரை படியாமல் வைத்திருங்கள் 
-என்று அந்தக் கவிதை சொல்லும்.
கரை படியாத அந்தக் கரத்திற்குச் சொந்தக்காரர் எங்களுடைய ஒப்புயர்வற்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே என்று சொல்லி, இந்த அருமையான வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்,  நன்றி, வணக்கம்.
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *