வண்ணங்களால் குழலூதுபவரைக் கொண்டாடுவோம் – கலைஞர், படைப்பாளி பாரதிமணி அய்யாவை முன்வைத்து ஒரு பகிரல்

பெருங்கடலை ஒரு துளி உப்பின் மூலம் அளக்கவோ, அதன் விந்தைகளை அரியதொரு உயிரினத்தின் அறிமுகத்தால் விவரிக்கவோ, அல்லது ஒரு நல் முத்தின் விளைச்சலின் மூலம் உணர்த்தவோ முடியுமா - அதுபோலவே என் அன்பிற்கும் மரியாதைக்குரிய அய்யா பாரதிமணி எனும் ஆளுமையும்! அவரது கம்பீர உருவமும், ஆழங்கால்பட்ட அறிவுத் தேர்ச்சியும், அரங்கம் எனப்படுகின்ற நிகழ்த்துகலைத் துறையில் அவர் பதித்திருக்கின்ற முத்திரையும், பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைத்திறனும் அவரை எனக்கு Boswell இன் Dr.Johnson ஆகவே உணரச் செய்யும்.  மேற்சொன்ன அத்தனையையும் மீறி அவரது எளிமையும், மனிதர்களை எடைத்தராசின்றி அவரவர் இயல்புகளோடு ஏற்று நேசிக்கின்ற குழந்தைமையும், அபாரமான நகைச்சுவைத் திறனுமே என்னை அவரிடம் கூடுதலாக நெருங்கச் செய்தவை.  A man who hobnobs as a globetrotter can love a nondescript wholeheartedly என்பதை இவரே எனக்குப் புரியச் செய்தவர்.  
	எளிமைதான் இவரது பலம்.  எளிய மனிதர்களுடனான இவரது பிணைப்பும், மிகப் பெரிய அந்தஸ்த்துக்காரர்களைத் தாமரை இலைத் தண்ணீரெனக் கடத்தலுமே இவரது அறம்.  வாழ்வையே கலையாகச் சுவைத்தலே இவரது ஆன்ம ரஸம்.  தாம் வாழ்ந்த அனுபவத்தின் நிறைகடலைத் தளும்பாமல் ஒரு சொட்டு உள்ளன்போடு மனிதர்களின் உள்ளங்கையில் தருபவர்.  செழுமையடைந்த ஒரு மனித மனத்தின் கனிவையும், நிறைவையும், கலையின் வழி வாழ்வைத் துய்த்த பூரணத்தையும் ஒரு சேர ஒரு மனிதரிடத்திலே நான் கண்டு வியக்கிறேனென்றால் - அது இவரிடத்தேதான் - 'A Wholesome Man!'.
	 அவரோடு அதிகம் பழகச் சந்தர்பங்களில்லை எனக்கு - ஆனால், ஆர்வமும், அன்பும், அக்கறையும் துலங்க என்னை அணைக்கின்ற அந்த ஒரு அணைப்பில் உண்மையான வாஞ்சையும் ஆதுரமும் புலப்படும்.  அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் திரி தூண்டிவிடும் அற்புத நிமிடங்கள்.
	தொடர்ச்சியாக இல்லை என்றாலும், அவ்வப்பொழுது இவரது நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே கட்டுரைகளைப் படித்ததுண்டு.  ஸ்காட்லாந்தில் பிறந்து தனது பதினெட்டு வயதில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த மருத்துவர், நாடக ஆசிரியர் Tobais George Smollet (1721 - 71).  அவரது The Adventurer of Roderick Random எனும் அற்புதமான படைப்பினைப் படிக்கும் பொழுதெல்லாம் தோன்றியதில்லை அதற்குச் சமமான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்றொரு கட்டுரை வகைமை எழுத்தினை 21ம் நூற்றாண்டில் நான் வாசித்து மலைப்பேனென!
	Picareque Novel எனும் புனைகதை வகைமையின் "rascaldom, travel and adventure" ஆகிய கூறுகளுடன் எழுதப்பட்ட பாரதிமணி அய்யாவின்  கட்டுரைகளைக் காழ்ப்பு, உவப்பற்ற, துலாக்கோலின் பாரம் சுமக்காத முழு மன விகாசிப்பு என்பேன் நான்.  சக மனிதர்களது பலம், பலவீனம், கடந்த - நிகழ் நாட்களின் நகர்வில் தெரிக்கின்ற சூட்சுமங்கள், புதிர்கள் எனத் தன் அகக்கண் வழி உய்ந்தவற்றை, ஒரு கனவானைப் போலவோ, நீதிபதியைப் போலவோ அன்றி, நம் தோள் தொட்டுப் பகிரும் நண்பனைப் போல நமக்குக் கடத்தியவை அவை. நாகர்கோவிலில் பிறந்து, பெரும்பான்மை நாட்களைப் (50 வருடங்களைப்) புது தில்லியில் கழித்த பாரதிமணி அய்யாவின் ஆளுமையை ஒரு கழுகுப்பார்வை பார்த்தால் - உம்பர்க்கும் இம்பர்க்கும் அன்பர் இவர் என உரத்துச் சொல்லத் தோன்றுகிறது.
	மனித மனதின் விசித்திரங்களை, ஆசைகளை, சுயநலத்தை, எதிர்பார்ப்புக்களை நேர்மையோடு, சுய பரிசோதனையின் தம்பட்டமற்ற தொனியில் பகிர்ந்து கொள்கின்ற genial humourist ஆன அய்யாவை ஆங்கிலத்தில் சுட்டும் ஒரே ஒரு சொற்றொடர் - A phenomenal avant garde! yes - he is one such!
	Dr.Johnson The Lives of the Poets எனும் புகழ்பெற்ற நூலைத் தனது அறுபத்தி ஏழு¡வது வயதில் தான் எழுதினார்.  பாரதிமணி அய்யாவும், தனது 'இளமை துள்ளுகின்ற' எள்ளல் எழுத்துப் பயணத்தைச் சற்று தாமதமாகவே துவக்கியிருக்கிறார்.  மனித வாழ்க்கையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர் ஜான்சன் என்பதால் மேற்சொன்ன புத்தகத்தில் அவர் பதிந்த கவிஞர்கள் எவரும் வெறும் நூலாசிரியர்களல்ல என்பார்கள்.  பாரதிமணி அய்யாவும் அப்படியே - வாழ்வை விரும்பி, ரசித்து, ருசித்து நேசிக்கும் அவருக்கு யாருமே வெறும் கதாபாத்திரங்களோ, அதிகாரிகளோ அல்லது கலைஞர்கள் மட்டுமோ அல்ல.  அனைவரும் அவரது புரிதலுக்கும் அன்பிற்குட்பட்ட சக மனிதர்கள், மனுஷிகள் தான். 
	அபாரமான இசை ஆர்வம், ஞானத் தேர்ச்சி, கனிந்த நேசம், நேர்த்தியான ரசனை, மனிதர்களின் நாடி பிடித்து ஒரு புன்னகையுடனோ, புரிதலுடனோ (எடைபோடும் தீர்ப்புக்களற்று) ஆட்கொள்ளும் நுட்பம், சுயதம்பட்டமின்றி மிக நேர்மையாகத் தன் விவரணனைகளை மானுடமும், மனிதமும் கைகோர்க்கின்ற எளிய அறத்தோடு பதிவு செய்தல் - என்று வாழும்  பாரதிமணி அய்யாவின் அறிமுகமும், தோழமையும் எனக்குக் கிடைத்ததொரு பொக்கிஷ உறவு.
	ரஷ்யன் பாலே நடன மேதையும் கோரியோக்ராபருமான (Coreographer) வாட்ச்லாவ் நிஷேன்ஷ்கி (Vaslav Nijinsky) உலகம் பார்த்த நடன மேதைகளில் முதல்வராக இருந்தவர்.  அவருடைய வாழ்க்கையைப் பற்றி அவருடைய மனைவி ரொமோலா எழுதியிருக்கின்ற சுயசரிதைக்கு உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு கவி பால் க்லாடேல் (Paul Claudel) முன்னுரை எழுதியிருக்கின்றார்.  
	"மின்னல் சரத்தைப் போல அவர் மேடையைக் கடக்கிறார்.  திரும்பிப் போகவில்லை, அதற்கு முன் இடியைப் போல நம் முன் நிற்கிறார்.  நமது அநாகரிக நடனத்தை தடுக்கும் ஈஸ்வரனைப் போல மகத்துவமான மனிதனின் கற்பனை உலகம் அது.  நித்தியத்தின் ஸ்தூல வெளியில் நம் அதீத உணர்வுகளை சித்தரித்துச் செல்கிறார்.  அவர் நம்முடைய ஒவ்வொரு ஆதிகால கலனங்களையும் எடுத்து பிரக்ஞையின், ஆற்றலின், உச்சபட்ச பிரபஞ்சத்துக்குள் எறிகிறார்; வெர்ஜில் நம் வார்த்தைகளையும் கற்பனைகளையும் பரிவர்த்தனம் செய்வதைப் போல!" என்று நிஷேன்ஷ்கி குறித்துப் பால் கீலாடல் சொன்னது அச்சொட்டாகப் பாரதிமணி அய்யாவிற்கும் பொருந்தும்.
	'அய்யா' எனும் இவ் விளித்தல் அவர் மேல் எனக்கு எப்போதும் இருக்கும் பெரும் மரியாதையின்பாற்பட்டது எனினும், வாழ்வின் ஒவ்வொரு நொடியையையும் ரசித்து, ருசித்துக் காதலுடன், நிதானமாகத் துய்க்கும் அவரை நான் Lovable Rascal என்றுதான் கொண்டாடுவேன்.  அதற்கான உரிமையை, என்னை எங்கு பார்த்தாலும் அணைத்துத் தன் அன்பைச் சொல்லும் இக் குழந்தமை மனிதர் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பது எனது பெரும் நிறைவும், திருப்தியும்.
	Shakespeare இன் பின்வரும் புகழ்பெற்ற இவ்வரிகளை மாற்றி இவருக்காக நான் கையாள்கின்ற poetic licence உம் இம் மாமனிதருக்காக மட்டுமே.
	"Age cannot wither him, nor custom stale
	his infinite variety.  Other men cloy
	The appetites they feed, but he makes hungry
	Where most he satisfies".
	தன்னை யார் மிக அதிகம் நேசிக்கிறார்கள் எனும் பரிசோதனையினைத் தனது மூன்று புதல்விகளுக்கும் லியர் அரசன் (king Lear) வைக்கும் பொழுது, அவரது புதல்வி கார்டிலியா (cordelia) சொல்வது போல, 
	"I love you Aiya
	According to my bond, 
	no more nor less".
                                                                                            * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *